சனி, 2 செப்டம்பர், 2017

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்.

'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடலை நினைவு படுத்தியது இந்த பதிவு.  படித்துப் பாருங்களேன்.

படிப்பு மட்டும் தான் அது கிடைக்கவில்லை என்றால் தற்கொலை வரை போகும் குழந்தைகளின் முடிவு கவலை அளிக்கிறது.
கல்வி முறையில் மாற்றம் வேண்டும்.

விளையாட்டு விபரீதம் ஆகாமல் இருக்க  கைவினை கற்றுக் கொண்டால்  ப்ளூவேல் தூரமாகும் . குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள், இந்தப் புத்தகத்தைப் பரிசளியுங்கள். என்று சொல்கிறார்கள் இவர்கள்.

காலத்துக்கு ஏற்ற பதிவு.

இன்று சனிக்கிழமை  'எங்கள் ப்ளாக் 'பாஸிடிவ் செய்தியிலும்
 இது போனற செய்தி இருக்கிறது.


குழந்தைகளை விளையாட விடுங்கள் கைவினை கற்றுக் கொடுங்கள்//கைவினை வேலைகளை செய்வது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு செயல்பாடு.  நம் பாட்டி-தாத்தாக்கள் கூடை முடைந்தும் பாய் பின்னியும் சும்மா இருந்த மனதை ஒருமுகப்படுத்தினார்கள்; தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொருளை தாங்களே தயாரித்தார்கள். நாம் இப்போது தொழிற்நுட்பங்களின் துணையோடு வாழ்கிறோம். நாம் எதையும் உருவாக்க தேவையில்லை என நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் தொழிற்நுட்பங்களோடு தனித்த உலகத்தில் வாழ ஆரம்பித்திருக்கிறோம். எதையாவது கற்றுக்கொள்ளவோ, முயற்சித்து பார்க்கும் குழந்தைகள் மனம், தொழிற்நுட்ப படுகுழிகளில் விழுந்துவிடுகிறது.  படி, படி என சதா அவர்களை நச்சரிக்கிறோம். விளையாடவோ, அவர்களுடைய பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கவோ சொல்லித் தந்திருக்கிறோமா? ஒரு பொருளை உருவாக்கிப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறோமா?
தொலைக்காட்சிகளின் முன் மணிக்கணக்காக அமர்ந்து தாங்களாகவே தேவையில்லாத மனசிக்கலை உருவாக்கிக்கொள்ளும் பெரியவர்களுக்காகவும் குழந்தைகளின் கற்பனைத் திறனை படைப்பாற்றலை தூண்டவும் நாங்கள் எடுத்திருக்கும் சிறு முயற்சி ‘செய்து பாருங்கள்’ இதழ்! கைவினைப் பொருட்கள் செய்முறைக்கெனவும் நல்லதொரு வாழ்வியலை அறிமுகப்படுத்தவும் தமிழில் வெளிவரும் முதல் இதழ் இது. இதோ ‘செய்து பாருங்கள்’ இரண்டாம் இதழாக ஜுலை-செப்டம்பர் இதழ் வெளியாகியிருக்கிறது. பளபள தாளின் முழுவண்ணத்தில் தயாராகியிருக்கிறது.//
கீழே வருவது என்னுரை:-

முன்பு நம் கண் எதிரே குழந்தைகள் விளையாடினார்கள். இப்போது விஞ்ஞான வசதிகள் அதிகமாக , அதிகமாக நம்மை விட்டுத் தூரப்படுத்தப்பட்டு விட்டார்கள்.

நாள்தோறும்வரும் செய்திகள் கவலை அளிக்கிறது. விளையாட்டைப் பற்றி விரிவாகக்  கலந்துரையாடுகிறார்கள்.  எல்லா துறையைச்
சேர்ந்தவர்களும்.

தெரியாத குழந்தைகளும் அதில் அப்படி என்ன இருக்கு என்று விளையாட ஆவலை தூண்டுவது போல். தீங்கு விளைவிக்கும் என்றால் முற்றிலும் தடை செய்ய வேண்டியது தானே!

சின்ன குழந்தைகள் இந்த வீடியோ பார்த்தால் தான் சாப்பிடுவான் என்று குழந்தை கையில் செல்லை கொடுத்து விட்டு உணவு  ஊட்டுகிறார்கள்.
அந்த குழந்தை அம்மாவின் அன்பையும்  உணவூட்டும் அழகையும் ரசிக்கவில்லை, உணவின் ருசியையும் அறியவில்லை.

சில குழந்தைகள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளின் செல்லை எடுத்து பார்க்கிறது டச் ஸ்கிரீன் இல்லையா? கேம் இல்லையா?  தான் பார்க்கும் கார்ட்டூன் படம் இல்லையா ? என்று கேட்டு தூக்கிப் போட்டு விடுகிறது.

உறவினர் வீட்டுக் குழந்தை உடைத்த செல்கள் எத்தனை? அவர்கள் அதைப் பெருமையாகப் பேசுகிறார்கள் அவன் பார்க்கும் வீடியோ வரவில்லை கோபத்தில் விட்டு ஏறிந்து விட்டான், உடைந்து விட்டது ரிப்பேர் செய்யக் கொடுத்து இருக்கிறோம் என்கிறார்கள்., அந்தப் பொருளின் விலையைப் பற்றிக் கவலைபடாமல்.

குழந்தை எப்படி முக்கியமோ அது போல் நாம் உழைத்துக் கஷ்டப்பட்டு வாங்கிய பொருட்களும் முக்கியம்.  அழும் குழந்தையின் வாயை அடைக்க என்று தற்காலியத்திற்கு கொடுக்கிறோம் என்கிறார்கள்.

ஆசிரியர், பள்ளிகளில் முன்பு பாடங்களைச் சொல்லிக் கொடுத்து  வீட்டுப் பாடங்களைக் கொடுத்தார்கள், அதைத் திருத்தும்   பணி ஆசிரியர்களுக்கும் உண்டு, இப்போது  ஆசிரியர்கள் கணினியில் வேலை கொடுக்கிறார்கள் அதைத் தேடிப்  பாடக்குறிப்புகளைத்  தயார் செய்து மாணவன்  ஜெராக்ஸ் எடுத்துப் போக வேண்டும். பிரிண்ட் செய்து கொண்டு போக வேண்டும்.

 அதனால் மாணவன் வீட்டில் பெற்றோர்களிடம்,
 "படி! படி!  என்று சொல்கிறீர்கள், வேண்டிய வசதி செய்து தாருங்கள்" என்கிறார்கள். கணினி, பிரிண்டர், எல்லாம் வாங்கித் தரச் சொல்லிக் குழந்தைகள் பெற்றோரை நச்சரித்து வாங்குகிறார்கள்.. பெற்றோர்களும் கஷ்டப்பட்டு வாங்கித் தருகிறார்கள், சிலர் கஷ்டப்படாமல் கேட்டதும் வாங்கித் தந்து விடுவார்கள். பெருமையாக எல்லோரிடமும் பாடங்களைக் கணினியில் செய்கிறான் என்று பெருமையாகச் சொல்லி மகிழ்வார்கள்.

பள்ளியில் விழா என்றால் முன்பு ஆசிரியர்தான் நடனம் சொல்லித் தருவார்.
இப்போது ஏதாவது சினிமாப் பாடலைச் சொல்லி நீங்களே வீடியோ போட்டுப் பார்த்து அதே போல ஆடப் பழகி வாருங்கள் என்கிறார்கள்.

முன்பு கல்விஅதிகாரி வரும் போது , சுதந்திரதினம், குடியரசு தினம் , 11வது மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா , ஆண்டு விழா என்று  எவ்வளவு நிகழச்சிகள்!  அத்தனைக்கும் ஆசிரியர் மேற்பார்வையுடன் தான் ஆடல் பாடல்கள் நடந்தன. பள்ளியில் ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர்கள் என்று பாதுகாவலர்கள் போற்றுபவர்கள் இருந்தார்கள்.

'அப்பாவுக்காக"     என்ற சினிமாவில்    சமுத்திரகனி  அவர்கள் அழகாய்ச்  சொல்லி இருப்பார்.

பள்ளியில் தாஜ்மஹால் செய்து கொண்டு வரும் வேலை குழந்தைக்குக் கொடுத்தால் எல்லோரும் கடையில் செய்து விற்பதை வாங்கிக் கொடுப்பார்கள் ஆசிரியர் குழுவும் கடையில் வாங்கி வந்து  கொடுத்ததில்  எது அழகோ அதற்குப் பரிசு அளிப்பார்கள். அதைக் கண்டித்து ஆசிரிய நிர்வாக குழுவிடம் கேள்வி கேட்பார் அதனால் உங்கள் குழந்தைக்கு இங்கு  இடம் இல்லை என்பார்கள்  வேண்டாம் உங்கள் பள்ளி என்று அழைத்து வந்து விடுவார் குழந்தையை .  அதன் பின் மனைவி,  அக்கம் பக்கத்தில் மற்றும்
உறவில்   அவர் சந்திக்கும் பிரச்சனைகள்  பின் அவருக்கு குழந்தையை வளர்ப்பில் கிடைக்கும் வெற்றியைச் சொல்லும் கதை.

குழந்தைக்குக் கொடுத்த வேலையை, குழந்தை, பெற்றோர், தாத்தா, பாட்டி, சகோதரர்கள் உதவியுடன் அவனே செய்து கொண்டு போனால் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் பெருமிதமும்  மகிழ்ச்சியும் கிடைக்கும், அவனே செய்து இருப்பதை ஆசிரியர் பாராட்டும் போது  மாணவனின் மகிழ்ச்சிக்கு  ஈடு இணை இல்லை.

விஞ்ஞானத்தால் நன்மையும், தீமையும் உண்டு. நன்மையை எடுத்துக் கொள்வோம், தீமையை விலக்குவோம்.

                                                          வாழ்க வளமுடன்.

37 கருத்துகள்:

 1. அனிதா தற்கொலை, இன்னொரு மாணவன் பூமிநாதன் தற்கொலை, மதுரை மாணவன் தற்கொலை.. படிக்கவும், கேட்கவும் கஷ்டமாக இருக்கிறது. அரசியல் பேசுவதையும், அரசியல்வாதிகளை குறை சொல்லிக்கொண்டிருப்பதையும் விடுத்து அவசரமாக நம் இளையதலைமுறையை கவனத்தில் எடுக்க வேண்டியது முக்கியம். ஏதாவது செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  உங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன். அதையும் என் பதிவில் கொடுத்து இருக்கிறேன்.
  இளையதலைமுறையை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பது நல்ல கருத்து.
  உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்பது மிக முக்கியம் மனது பொறுக்காமல்தான் காலை எழுந்தவுடன் பதிவு போட்டேன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ///சின்ன குழந்தைகள் இந்த வீடியோ பார்த்தால் தான் சாப்பிடுவான் என்று குழந்தை கையில் செல்லை கொடுத்து விட்டு உணவு ஊட்டுகிறார்கள்.
  அந்த குழந்தை அம்மாவின் அன்பையும் உணவூட்டும் அழகையும் ரசிக்கவில்லை, உணவின் ருசியையும் அறியவில்லை.///

  மிகச்சரியான விடயத்தை அருமையாக சொன்னீர்கள்

  நிறைய விடயங்களை அழகாக விவரித்தீர்கள் இன்று குழந்தைகளிடம் அன்பு இல்லை காரணம் முதலில் பெற்றோர் அன்பை ஊட்டவில்லையே....

  மாற்றம் வேண்டும் கல்வி முறையில் மட்டுமல்ல பெற்றோரின் வளர்ப்பு முறைகளிலும்.
  த.ம.2

  பதிலளிநீக்கு
 4. //உங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன். அதையும் என் பதிவில் கொடுத்து இருக்கிறேன்.//

  நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 5. >>> இன்று குழந்தைகளிடம் அன்பு இல்லை.. காரணம் பெற்றோர் அன்பை ஊட்டவில்லையே... <<<

  கில்லர் ஜி அவர்களுக்கு நன்றி..

  அத்துடன் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கூட ஊட்டவில்லை...

  தாய்க்கும் தந்தைக்கும் அவை இருந்தால் அல்லவா -
  பிள்ளைகளுக்கு அவை வழிந்தோடிச் சேரும்!?..

  இன்றைய நாட்களில் எல்லாமே இயந்திர கதி..

  படித்தால் புத்தி வளரும் என்றார்கள்.. மூளை மழுங்கியது தான் மிச்சம்!..

  இனி வரும் நாட்கள் எப்படியிருக்கப் போகின்றனவோ?...

  பதிலளிநீக்கு
 6. கல்வி முறையில் மட்டுமல்ல
  பெற்றோர்களின் அணுகுமுறையிலும் மாற்றம் வேண்டும்

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.

  //இன்று குழந்தைகளிடம் அன்பு இல்லை காரணம் முதலில் பெற்றோர் அன்பை ஊட்டவில்லையே...//

  நம் அன்பும் இப்போது உள்ளவர்களின் அன்பும் வேறுபடுகிறது ஜி, குழந்தைகளிடம் அதிகமான அன்பால் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். முன்பு பத்து குழந்தைகளுக்கு கொடுத்த அன்பை அவர்கள் ஒரு குழந்தைக்கு கொடுக்கிறார்கள்.

  கேட்டதை உடனே கொடுக்காமல் அந்த பொருளுக்கு தான் படும் கஷ்டம் அதை முறையாக பயன்படுத்து முறை இவற்றை சொல்லி வளர்த்தால் நலமாக இருக்கும்.

  என் பெற்றோர் நான் எது கேட்டாலும் வாங்கி தருவார், எவ்வளவு ரூபாயாக இருந்தாலும் என்று அன்புக்கு புது அர்த்தம் க்ற்பித்துக் கொள்கிறார்கள் குழந்தைகள்.

  கேட்டதை வாங்கி தர வேண்டும் கேட்டவுடன் வரவேண்டும். தங்கள் விஷ்யத்தில் தலையீட கூடாது பெற்றோர் என்ற போக்கு சில வீடுகளில் இருக்கிறது.


  //மாற்றம் வேண்டும் கல்வி முறையில் மட்டுமல்ல பெற்றோரின் வளர்ப்பு முறைகளிலும்.//

  ஆம், அப்படித்தான் நினைக்கிறேன் நானும்.

  உங்கள் கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. மொத்தமாக எல்லோருமே மனம் மாற வேண்டும். முன்னைப் போல் ஆசிரியர்கள் இப்போது மாணாக்கர்களைக் கண்டிக்க முடியுமா? சரியாகப் படிக்கவில்லை எனில் புகார் செய்ய முடியுமா? பள்ளி வகுப்பறையைப் பெருக்கிக் கூட்டிச் சுத்தம் செய்வதும் நம் காலத்தில் மாணவ, மாணவிகளில் வேலையாக இருந்தது. ஆசிரியர் சொல்லும் வரை காத்திருக்காமல் பொறுப்பேற்றுச் செயல்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது அப்படி மாணவ, மாணவிகளைச் செய்யச் சொன்னால் அது பெரிய செய்தியாகக் கொட்டை எழுத்தில் எல்லாத் தினசரிகளிலும் வந்து விடுகிறது!

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் துரைசெல்வராஜூசார், வாழ்க வளமுடன்.


  //அத்துடன் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கூட ஊட்டவில்லை...

  தாய்க்கும் தந்தைக்கும் அவை இருந்தால் அல்லவா -
  பிள்ளைகளுக்கு அவை வழிந்தோடிச் சேரும்!?..

  இன்றைய நாட்களில் எல்லாமே இயந்திர கதி..

  படித்தால் புத்தி வளரும் என்றார்கள்.. மூளை மழுங்கியது தான் மிச்சம்!..

  இனி வரும் நாட்கள் எப்படியிருக்கப் போகின்றனவோ?..//

  நாம் வளர்ந்த காலம் போல் இல்லை இப்போது. மார்க் அடிப்படையாகி விட்டது, குழந்தை படிக்கவில்லையென்றால் நாளை வாழ்வில் பின் தங்கி விடுவான் என்ற ஆதங்கம்.
  ஒவ்வொரு கணமும் பெற்றோர்களுக்கு. குழந்தைகளும் பதட்டமான சுழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் இந்த பள்ளியில் படித்தால் தான், இந்த கல்லூரியில் படித்தால் தான், எதிர்காலம் என்று நிகழ்கால வாழ்வை கோட்டைவிடுகிறார்கள்.
  பந்தைய குதிரை ஆகி விட்டார்கள் இருதரப்பும். பெற்றோர்களுக்கு அவர்கள் பணி, பிள்ளைகளுக்கு அவர்கள் படிப்பு.
  வாழ்வின் பிடிப்பு நழுவி எங்கோ சென்று கொண்டு இருக்கிறார்கள்.
  ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியா நிலைக்கு தள்ளபடுகிறார்கள்.

  காலம் மாறவேண்டும் . மாறும் காத்து இருப்போம்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

  //கல்வி முறையில் மட்டுமல்ல
  பெற்றோர்களின் அணுகுமுறையிலும் மாற்றம் வேண்டும்//

  நல் ஆசிரியர் நீங்கள், நீங்கள் சொல்வது சரிதான்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. >>> நம் காலத்தில் மாணவ, மாணவிகளில் வேலையாக இருந்தது. ஆசிரியர் சொல்லும் வரை காத்திருக்காமல் பொறுப்பேற்றுச் செயல்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது அப்படி மாணவ, மாணவிகளைச் செய்யச் சொன்னால் அது பெரிய செய்தியாகக் கொட்டை எழுத்தில் எல்லாத் தினசரிகளிலும் வந்து விடுகிறது!<<<

  உண்மை.. வகுப்பறையைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ததை யாரும் தவறாக எண்ணியதே இல்லை.. இதிலே எனக்கு உனக்கு என்று போட்டி வேறு..

  வீட்டின் தென்னை மரங்களில் இருந்து குருத்தோலை வெட்டி ஈர்க்குகளை சீவி விளக்குமாறாகக் கொண்டு வந்து பள்ளிக்குக் கொடுத்த நாட்கள் கண்களைக் கசியச் செய்கின்றன..

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் மறு வருகைக்கு நன்றி.
  நீங்கள் சொல்வது உண்மை.

  //உண்மை.. வகுப்பறையைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ததை யாரும் தவறாக எண்ணியதே இல்லை.. இதிலே எனக்கு உனக்கு என்று போட்டி வேறு..

  வீட்டின் தென்னை மரங்களில் இருந்து குருத்தோலை வெட்டி ஈர்க்குகளை சீவி விளக்குமாறாகக் கொண்டு வந்து பள்ளிக்குக் கொடுத்த நாட்கள் கண்களைக் கசியச் செய்கின்றன..//

  அம்மா பள்ளிகூடம் சீக்கிரம் போக வேண்டும் என்று சொன்னால் கூட்டி துடைக்க போகிறாயா? என்று கேட்பார்கள் , உண்மைதான் அம்மா இன்று எங்கள் குழு செய்ய வேண்டும் என்பேன்.
  பெற்றோர்களும் அதை தவறாக நினைக்கவில்லை, மாணவர்களும் தவறாக் என்ணியது இல்லை.

  காலம் மாறி விட்டது.

  பதிலளிநீக்கு
 13. கோமதி அக்கா..மிகச் சரியான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.. உண்மைதான், கைவேலையில் ஆர்வம் காட்டும் சில குழந்தைகளைக்கூட, அதைச் செய்யவிடாமல் அடிச்சு இழுத்து வந்து புத்தகம் படிக்க வைக்கின்றனர் சிலர். அவர்களின் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி விடக்கூடாது.

  ஆனா என்னைப் பொறுத்து பெண் குழந்தைகளுக்கே இப்படியான விசயங்களில் பொறுமையும் ஆர்வமும் அதிகம்.

  பதிலளிநீக்கு
 14. உங்கள் கருத்தும் ஆதங்கமும் அத்தனைய்உம் நிஜமானது வரவேற்கத்தக்கதுதான் கோமதி அக்கா.. இருப்பினும் விஞ்ஞாஅனத்தின் வளர்ச்சி இப்போ எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது... அதீத வளர்ச்சியால்.. ஸ்கூலில் கூட கை வேலைகள் செய்வரும் காலம் மாறி.. இப்போ கொம்பியூட்டரில் பவர்பொயிண்ட்டில் செய்து வாருங்கள் என 4ம் 5ம் வகுப்புப் பிள்ளைகளுக்கே சொல்லப்படுகிறது.... இப்படி இருக்கும்போது... பழைய வாழ்க்கைக்கு எப்படி இவர்களை மாற்ற முடியும்..

  அனைவரும் புதியனவற்றைத்தானே விரும்புகின்றனர்... பழைசை நினைச்சு மகிழ மட்டும்தான் முடிகிறது.

  ஏன் நமக்குகூட கிராமப்புறங்களை அந்த கொட்டில் வீடு திண்ணையில் இருப்பது கிணற்றில் தண்ணி அள்ளுவது இப்படியானவற்றை ஒரு தடவை சுற்றுலாச் சென்று பார்த்துவரத்தம் ஆசையாக இருக்கிறதே தவிர.. அங்கு போய் இருங்கள் என காஅணி யை எழுதித்தந்தால்கூட போய் இருந்திடுவோமா? இல்லை.. நம்மால் இனி அப்படி வாழ்க்கைக்கு திரும்புவதென்பது சாத்தியமில்லை...

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

  //உண்மைதான், கைவேலையில் ஆர்வம் காட்டும் சில குழந்தைகளைக்கூட, அதைச் செய்யவிடாமல் அடிச்சு இழுத்து வந்து புத்தகம் படிக்க வைக்கின்றனர் சிலர். அவர்களின் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி விடக்கூடாது.

  ஆனா என்னைப் பொறுத்து பெண் குழந்தைகளுக்கே இப்படியான விசயங்களில் பொறுமையும் ஆர்வமும் அதிகம்.//

  நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஆண் குழந்தைகளுக்கு அவர்களுக்கு ஏற்ற மாதிரி கைவேலை , விளையாட்டுக்களை ஊக்கப்படுத்தலாம் அல்லவா?

  ஒவ்வொரு பண்டிகையிலும் ஆண் குழந்தைகளை அவர்கள் கற்பனைக்கு ஏற்ற மாதிரி உதவி செய்யவிடலாம். வீட்டுவேலையிலும் , கைவேலைகளிலும் பழக்கப்படுத்தினால் நல்லது.ஆண் இந்த வேலை செய்ய வேண்டும், பெண் இந்த வேலை செய்ய வேண்டும் என்று பிரிக்காமலிருந்தாலே போதும். ஆண்களுக்கும் மென்மையான பெண் தனமை உண்டு, பெண்களுக்கும் ஆண்களை போல் திடமான பலமும் உண்டு.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


  பதிலளிநீக்கு
 16. வணக்கம் அதிரா , வாழ்க வளமுடன்.

  //உங்கள் கருத்தும் ஆதங்கமும் அத்தனைய்உம் நிஜமானது வரவேற்கத்தக்கதுதான் கோமதி அக்கா.. இருப்பினும் விஞ்ஞாஅனத்தின் வளர்ச்சி இப்போ எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது... அதீத வளர்ச்சியால்.. ஸ்கூலில் கூட கை வேலைகள் செய்வரும் காலம் மாறி.. இப்போ கொம்பியூட்டரில் பவர்பொயிண்ட்டில் செய்து வாருங்கள் என 4ம் 5ம் வகுப்புப் பிள்ளைகளுக்கே சொல்லப்படுகிறது.... இப்படி இருக்கும்போது... பழைய வாழ்க்கைக்கு எப்படி இவர்களை மாற்ற முடியும்..//

  பழைய வாழ்கைக்கு மாற சொல்லவில்லை அதிரா. விஞ்ஞான வளர்ச்சியில் நல்லவைகளை எடுத்து கொள்ள சொல்கிறேன்.
  பழைய நல்லவைகளை பள்ளியிலிருந்து எடுக்க வேண்டாமே என்கிறேன்.
  பாட்டு, ஓவியம், கைவேலை , தோட்டவேலை எல்லாம் குழந்தைகளை மென்மையாக்கும்
  நீதிபோதனை வகுப்பு பிறருக்கு உதவிசெய்வதையும் நல்ல பழக்க வழக்கத்தை மேம்படுத்தும் தானே! அந்த பழமைதான் வேண்டும் என்கிறேன்.

  //ஏன் நமக்குகூட கிராமப்புறங்களை அந்த கொட்டில் வீடு திண்ணையில் இருப்பது கிணற்றில் தண்ணி அள்ளுவது இப்படியானவற்றை ஒரு தடவை சுற்றுலாச் சென்று பார்த்துவரத்தம் ஆசையாக இருக்கிறதே தவிர.. அங்கு போய் இருங்கள் என காஅணி யை எழுதித்தந்தால்கூட போய் இருந்திடுவோமா? இல்லை.. நம்மால் இனி அப்படி வாழ்க்கைக்கு திரும்புவதென்பது சாத்தியமில்லை...//

  நீங்கள் சொல்வது போல் கிராமப்புறவீடுகளை அமைத்து மக்கள் பழமையை விரும்புவர்கள் அங்கு தங்கி பழைய வாழ்க்கையை இப்போது உள்ளவர்கள் தெரிந்து கொள்ள அமைத்து இருக்கிறார்கள்.

  நாங்களும் இரண்டு நாள் குடும்பத்தினருடன் தங்கி மகிழ்ந்து வந்தோம்.

  மீண்டும் வந்து அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

  //மொத்தமாக எல்லோருமே மனம் மாற வேண்டும். முன்னைப் போல் ஆசிரியர்கள் இப்போது மாணாக்கர்களைக் கண்டிக்க முடியுமா? சரியாகப் படிக்கவில்லை எனில் புகார் செய்ய முடியுமா? பள்ளி வகுப்பறையைப் பெருக்கிக் கூட்டிச் சுத்தம் செய்வதும் நம் காலத்தில் மாணவ, மாணவிகளில் வேலையாக இருந்தது. ஆசிரியர் சொல்லும் வரை காத்திருக்காமல் பொறுப்பேற்றுச் செயல்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது அப்படி மாணவ, மாணவிகளைச் செய்யச் சொன்னால் அது பெரிய செய்தியாகக் கொட்டை எழுத்தில் எல்லாத் தினசரிகளிலும் வந்து விடுகிறது!//

  நீங்கள் சொல்வது சரிதான். முன்னை போல் இப்போது மாணவர்களை கண்டிக்க முடியாது தான். வகுப்பறை சுத்தம் செய்து விட்டு ஆசிரியரிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று நினைப்பதும், அவர்கள் பாராட்டி விட்டால் மகிழ்வதும் அது ஒரு காலம்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. பள்ளிகளில் விளையாட்டு பீரியட் என ஒன்று இருந்தது
  இன்று இல்லை,தெருவில் கூடி விளையாட இன்று
  விளையாட்டை மறந்து போனார்கள்,
  பிள்ளைகளின் மனதில் குழைந்தமை
  அறுபட்டுப்போய் ரொம்பவும் நாளாகிப்போனது.
  கூடிக்களியாட்டம் போடுகிற மனம் குழந்தைகளிடம் இல்லை,
  அதன் விளைவு புளூ வேல் போன்ற விளையாட்டுகள்
  தோன்ற காரணமாகின்றன/பிஞ்சுகளிடம் நஞ்சை வளர்கின்றன,
  அவர்களை உயிர் இழக்க செய்துவிகின்றன.
  அதற்கு பரிகாரம் ஒன்று பட்ட மனதை வளப்பதும் ஒருமைப்படுத்துவதும்தான்/

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
  விளையாட்டு இருக்கிறது, அந்த வகுப்பை பாடம் நடத்த வாங்கி கொள்கிறார்கள்.
  நீதிபோதனை வகுப்பு, குடிமைபயிற்சி, ஆகிய வகுப்பு இல்லை.

  நீங்கள் சொல்வது போல் தெருவில் விளையாடவிடுவதில்லை பெற்றோர்.

  அடுக்குமாடி குடியிருப்பில் பிள்ளைகள் சேர்ந்நு விளையாடுகிறார்கள்.வெளியில் குழந்தைகளை

  பெற்றோர் விளையாட அனுமதித்தால் போதும்

  தனிமையை விரும்பும் குழந்தைகள் நடவடிக்கைகளை கவனித்தால் போதும் , அவர்களை பாதுகாத்து விடலாம்.

  குழந்தைகளிடம் உள்ள குழந்தைதன்மையை வளர்ப்போம், தொலைக்காட்சியிலும் குழந்தைகளை பெரியவர்கள் போல் பாட்டு, நடனம், நாடகம் என்று வயதுக்கு மீறிய செயல்களை செய்ய வைத்து மக்களை ரசிக்க வைக்கிறார்கள். மழலை மாறா குழந்தைகளை பார்க்கும் போது வருத்தமாய் இருக்கிறது இவர்கள் சுதந்திரமாய் விளையாடி களிக்க முடியாதே என்று.

  நீங்கள் சொல்வது போல் குழந்தைதன்மையை ஒருமை படுத்துவோம், அவர்கள் வாழ்க்கை வளமாக இருக்க வாழ்த்துவோம்.

  உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.
  பதிலளிநீக்கு
 20. இப்போதைய காலகட்டத்தில் குழந்தைகளை வளர்க்கும் முறையிலும் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

  பதிலளிநீக்கு
 21. சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கையில், படிக்கையில் ஆதங்கம் மட்டுமே மிஞ்சுகிறது. நிறைய மாற்றங்கள் தேவை - ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரிடத்திலும்.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது சரியே இப்போது குழந்தைகளை வளர்க்க
  அதிக கவனம் செலுத்தவேண்டியய காலம் தான்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்லும் மூவர் குழுவும் சேர்ந்து முடிவுஎடுத்து கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டிய காலம் தான்.
  கால மாற்றங்கள் அவசியம் என்றாலும் நாளும் ஏதாவது புது பிரச்சனைகளில் குழந்தைகள் சிக்கிகொள்கிறார்கள். அவர்களை எப்படியாவது பாதுகாக்க வேண்டும்.
  இறைவன் அருள்புரிய வேண்டும்.
  உங்க்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. அனைத்து கருத்துகளும் அருமை சகோதரி! அப்படியே வழி மொழிகிறோம்! டெக்னாலஜி வளர்ந்தாலும் அதையும் நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள குழந்தைகளைப் பழக்க வேண்டும். ஏனென்றால் உலகை நாம் தடுக்க முடியாது. நொடிக்கு நொடி ஏதேனும் புதிதாக உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது. மனதை அடக்க நாம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து நல்ல வழியில் திசை திருப்பி நீங்கள் சொல்லியிருப்பது போல் செய்தாலே இப்போதைய தலைமுறை நன்றாக வளரும். பெற்றோர் அன்புடன் நல்ல முறையில் பேசிவந்தால் குழந்தைக்கு எப்படித் தற்கொலை எண்ணம் வரும்?! நல்ல பதிவு!! எல்லோரும் மாற வேண்டும்...

  கீதா:


  //முன்பு கல்விஅதிகாரி வரும் போது , சுதந்திரதினம், குடியரசு தினம் , 11வது மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா , ஆண்டு விழா என்று எவ்வளவு நிகழச்சிகள்! அத்தனைக்கும் ஆசிரியர் மேற்பார்வையுடன் தான் ஆடல் பாடல்கள் நடந்தன. பள்ளியில் ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர்கள் என்று பாதுகாவலர்கள் போற்றுபவர்கள் இருந்தார்கள்.// உண்மை உண்மை!!

  கைவேலை என்பது மிக மிக அருமையான ஒன்று. நான் இரு 3 வருடங்கள் முன்பு வரை நிறைய கை வேலை செய்து வந்தேன். இப்போது இல்லை. செய்ய ஆசைதான் சூழல் இல்லை வீட்டில் பராமரிக்கவும் முடியவில்லை. முன்பு செய்தவை எல்லாம் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். சமுத்ரகனியின் அந்த தாஜ்மகால் எத்தனை உண்மை இல்லையா அக்கா. அக்கா எஞ்சினியரிங்கில் கூட பிள்ளைகள் ப்ராஜக்ட் வேலை செய்ய 6000 7000 கட்டினால் போதும் அதுவும் ப்ரொஃபசர் சொல்லும் கம்பெனியில் கட்டினால் போதும் பிள்ளைகள் அதைச் செய்யாமலேயே ப்ராஜக்ட் கையில் வந்துவிடும். இப்படி இருக்க என்ன சொல்ல?

  நம் கல்வி முறை மாற வேண்டும் உண்மைதான். ஆனால் அதைவிட பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் திசை மாறுதலிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். பெற்றோர் நல்ல கவுன்சலிங்க் செய்ய வேண்டும்.மனம் வீக்காக இருப்பதால்தான் இப்படியான முடிவுகள். மனதை வலுப்பெற வைத்தால் இப்படி எல்லாம் நடக்குமா? இதற்கு அரசியல்வாதிகளைக் குறை சொல்லுதலை விட நம் குழந்தைகளை மீட்டடெடுக்க வேண்டும்...

  மொபைல் பற்றி நீங்கள் சொல்லியவை அனைத்தும் டிட்டோ பண்ணுகிறேன்...அருமையான பதிவு அக்கா!!!வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் சகோ துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.
  நாட்டு நடப்பு மனதை சங்கடப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

  //டெக்னாலஜி வளர்ந்தாலும் அதையும் நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள குழந்தைகளைப் பழக்க வேண்டும். ஏனென்றால் உலகை நாம் தடுக்க முடியாது. நொடிக்கு நொடி ஏதேனும் புதிதாக உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது. மனதை அடக்க நாம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து நல்ல வழியில் திசை திருப்பி நீங்கள் சொல்லியிருப்பது போல் செய்தாலே இப்போதைய தலைமுறை நன்றாக வளரும். பெற்றோர் அன்புடன் நல்ல முறையில் பேசிவந்தால் குழந்தைக்கு எப்படித் தற்கொலை எண்ணம் வரும்?! நல்ல பதிவு!! எல்லோரும் மாற வேண்டும்...//

  நீங்கள் சொல்வது சரிதான். குழந்தைகளுக்கு எதையும் தாங்கும் மனம், மனம்விட்டு குடும்பத்தினருடன் பேசும் நிலை எல்லாம் இருந்தால் நலம். உங்கள் நல்ல கருத்துக்கு நன்றி துளசிதரன்.

  //கைவேலை என்பது மிக மிக அருமையான ஒன்று. நான் இரு 3 வருடங்கள் முன்பு வரை நிறைய கை வேலை செய்து வந்தேன். இப்போது இல்லை. செய்ய ஆசைதான் சூழல் இல்லை வீட்டில் பராமரிக்கவும் முடியவில்லை. முன்பு செய்தவை எல்லாம் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். சமுத்ரகனியின் அந்த தாஜ்மகால் எத்தனை உண்மை இல்லையா அக்கா. அக்கா எஞ்சினியரிங்கில் கூட பிள்ளைகள் ப்ராஜக்ட் வேலை செய்ய 6000 7000 கட்டினால் போதும் அதுவும் ப்ரொஃபசர் சொல்லும் கம்பெனியில் கட்டினால் போதும் பிள்ளைகள் அதைச் செய்யாமலேயே ப்ராஜக்ட் கையில் வந்துவிடும். இப்படி இருக்க என்ன சொல்ல?

  நம் கல்வி முறை மாற வேண்டும் உண்மைதான். ஆனால் அதைவிட பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் திசை மாறுதலிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். பெற்றோர் நல்ல கவுன்சலிங்க் செய்ய வேண்டும்.மனம் வீக்காக இருப்பதால்தான் இப்படியான முடிவுகள். மனதை வலுப்பெற வைத்தால் இப்படி எல்லாம் நடக்குமா? இதற்கு அரசியல்வாதிகளைக் குறை சொல்லுதலை விட நம் குழந்தைகளை மீட்டடெடுக்க வேண்டும்...

  மொபைல் பற்றி நீங்கள் சொல்லியவை அனைத்தும் டிட்டோ பண்ணுகிறேன்...அருமையான பதிவு அக்கா!!!வாழ்த்துகள்!!//

  நானும் நிறைய பின்னல் வேலைகள் செய்வேன் இப்போது இல்லை. எஞ்சினியரிங்க் ப்ராஜக்ட் வேலை செய்ய பணம் கட்டினால் போதும் என்றால் என்ன செய்வது?
  பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் கவுன்சலிங்க் செய்ய வேண்டும்.
  மனம் இருதரப்புக்கும் வலுப்பெற வேண்டும். சிறு துன்பத்திற்கும் மனதை துவளவிட்டு விடுகிறார்கள். போராடி ஜெயிக்க வேண்டும் அதில்தான் இருக்கிறது வெற்றி. உச்சநீதிமன்றம் வரை போராடிய அனிதா இன்னும் கொஞ்சம் பொறுத்து இருக்கலாம்.
  தாய் இல்லாத பெண் அவளை நினைத்தால் மனம் மிகவும் வேதனைப்படுகிறது அவளின் பேட்டியை அட்டிக்கடி காட்டுகிறார்கள் அவள் கனவு சிதைந்து போனது கஷ்டம் தான் ஆனால் அவள் தற்கொலையை மனம் ஏற்க மறுக்கிறது.

  ப்ளூவேல் அதை விட கொடுமையாக இருக்கிறது. முன்பு தனி அறை கிடையாது இப்போது தனி அறை சகல வசதியும் செய்து கொடுத்தது நள்ளிரவு விளையாட்டு , மொட்டைமாடி செல்லுதல், பேய் படம் பார்த்தல் கடைசியில் தற்கொலை தூண்டுதல் விபரீத
  விளையாட்டு முறைகளை கேட்கவே பயமாய் இருக்கிறது.

  விரைவில் அந்த குழந்தைகளை மீட்டு எடுக்க வேண்டும்.

  இறைவன் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று நாளும் பிரார்த்தனை.
  நாளைய சமுதாயத்தில் தன்னம்பிக்கை, மனபலத்தோடு குழந்தைகள் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும்.

  உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 27. எத்தனை உண்மை!
  சிறு வயதில் வீட்டு மின்சார வயரிங், ஆட்டோ மெக்கானிக் என்று எதையாவது கற்றுக் கொள்ள ஆசை இருந்தது.. முனைப்பும் துடிப்பும் இல்லை.. எங்கள் வீட்டுக்கு அருகிலேயே எலக்ட்ரிகல் கடை, மோட்டார் மெக்கானிக் இருந்தார்கள்.. நெருங்கிய நண்பர்கள்.. லீவ் நாளிலும் மாலைகளிலும் இலவசமாக வேலை கற்றுக் கொண்டிருக்கலாம்.. எத்தனையோ வற்புறுத்தினார்கள்.. பின்னாளில் வருத்தப் பட்டிருக்கிறேன்.. படுகிறேன்.. :-)

  இந்த பின்னூட்டம் பதிவாகாது.. என்ன பந்தயம்?

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் அப்பாத்துரை சார், வாழ்க வளமுடன்.
  நல்ல வாய்ப்பை விட்டு விட்டீர்களா?
  படிக்கும் போது தோணாது. அது ஒரு காலம்.
  இந்த பதிவுக்கு மட்டும் கருத்து போட்டு விட்டு பந்தயம் வேறா?
  நல்ல கதையாக இருக்கே!
  ்உங்கள் வரவுக்கும். கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. கல்வி கற்பிக்கும் கோவில்களாய் இல்லாமல் காசு பார்க்கும் தொழிற்சாலைகளாய் மாறின கல்விக்கூடங்கள்.

  நல்லொழுக்கம் மறந்து எதைப் படித்தால் அதிகப் பொருளீட்டலாம் என்று மாறின பெற்றோர் எண்ணங்கள். யாரைச் சொல்லி என்ன பயன்?

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் வான்மதி மதிவாணன், வாழ்க வளமுடன்.
  கல்வி சாலை எல்லாம் நீங்கள் சொல்வது போல் வியாபார தொழிற்சாலை மாறி விட்டது உண்மை.

  நாளைய மகன் மகள் வாழ்க்கை எதை படித்தால் நன்றாக இருக்கும் பெற்றோர்கள் இன்று நீங்கள் சொன்னது மாறிபோனது உண்மையே.

  மாற்றம் வேண்டும் அனைத்து தரப்பினரிடமும்.
  உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 31. மிகவும் அருமையான பதிவு அக்கா இங்கே ஐரோப்பிய நாடுகளில் இப்படித்தான் அதிலும் ஜெர்மனி இங்கிலாந்தில் தொழில் கல்வி போல அனைவருக்கும் எல்லாம் தெரிந்திருக்கணும் .இங்கே கம்பியூட்டர் எஞ்சினீர் கூட மரவேலையும் செய்ய பிளம்பிங் செய்ய தெரிந்து வைத்திருப்பார் .வாழ்க்கைக்கு எல்லாமே அவசியம் இங்கே படிக்காத பிள்ளையை தாழ்வாக பார்ப்பதில்லை அவர்களுக்கு விருப்பமான செய்யக்கூடிய பாடத்தை எடுத்துக்கொள்ளலாம் அதற்கென்று கல்லூரிகள் இங்கே இருக்கு .
  கிராப்ட் ஆர்ட் எல்லாருக்கும் தெரிந்திருப்பது நல்லது எங்க மகளும் அறிவியல் பாடத்தை தான் இப்போ முக்கியப்பாடமா எடுத்தாலும் அவளுக்கு அக்கவுன்டிங்கும் தனியே தெரிந்து வைத்திருக்கா ,எல்லாவற்றையும் கற்றுக்கொள்வது மிகவும் நல்லது .
  நான் இங்கே இது நாள்வரை மகளுக்கு க்ராப்ட்ல்லாம் ஸ்கூல் வேலைக்கு நானும் மகளும் சேர்ந்தே செய்திருக்கோம் அதற்க்கே நிறைய மதிப்பெண்ணும் கிடைச்சிருக்கு ..இங்கே அழகைவிட நமது உழைப்பிற்கே முக்கியத்துவம் அதிகம் .
  தன சொந்த காலில் நிற்க தெரிந்த பிள்ளை தவறான முடிவெடுக்காது

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
  உங்கள் விரிவான பின்னூட்டம் மூலம் ஐரோப்பிய நாடுகளில் கல்வி முறையை அறிந்து கொண்டேன்.
  படிப்பு வரவில்லை என்றால் அவர்களுக்கு எந்த வேலையில் ஆர்வம் இருக்கோ அதை செய்து பயனடையலாம் தான்.
  உங்கள் மகளின் திறமைகளை கண்டு மகிழ்கிறேன்.
  இனி வருங்காலத்தில் சொந்தகாலில் நிற்க தெரிந்து இருப்பது அவசியம் ஆகிறது.
  எல்லா குழந்தைகளும் தன்னம்பிக்கையுடன் , உடல், மன ஆரோக்கியத்துடன் எல்லா நலங்களும் பெற வேண்டும்.

  உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்.

  பதிலளிநீக்கு
 33. நல்ல பதிவு! நேரமிருந்தால் இதனையும் பாருங்கள். நன்றி!

  பதிலளிநீக்கு