திங்கள், 13 பிப்ரவரி, 2017

அந்த நாளும் வந்ததே

பிப்ர்வரி 13  உலக வானொலி நாள்


தமிழகத்தில் மின்சாரம்த் தட்டுப்பாடு ஏற்பட்ட போது வானொலிப் பற்றி கட்டுரை எழுதி இருந்தேன் , அதை இன்று உலக வானொலி தினத்தில் மீள் பதிவாய் பதிவிடுகிறேன்.


  படம் - கூகிள்

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின் வெட்டால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லை. இணையதளத்தில் இணைய முடியவில்லை. இன்வெர்ட்டருக்கோ, சார்ஜ் ஆகும் அளவு மின்சாரம் இல்லை. இப்படி இருக்கும் போது நமக்கு கை கொடுப்பது பாட்டரி போடும்வசதி உள்ள   டிரான்ஸ்சிஸ்டர்தான்..

நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தும் இடையூறுகளால் , முன்பு நாம் தெளிவாக கேட்டுக்கொண்டு இருந்த மத்திய அலை வரிசை, சிற்றலை வரிசையில் வானொலி நிகழ்ச்சிகளை சரிவர கேட்க முடியாமல் இருந்தது. பண்பலையில் மட்டுமே கேட்க முடிந்தது. இப்போது மின்சாரத் தடையால் மற்ற மின்சாதனங்கள் இயங்காததால் மத்திய அலை வரிசையை நன்கு கேட்க முடிகிறது. மின் பற்றாக்குறையால் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் இது !

முன்பெல்லாம் ,வானொலியில் காலை ‘வந்தே மாதரம்’, ‘மங்கள இசை’, ‘பக்தி பாடல்’, ‘நேயர் விருப்பம்’, சினிமா பாடல், நாடகம், ‘இசை விருந்து’ என்று, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த நாளும் இப்போது மீண்டும் வந்து விட்டது மின்சாரப் பற்றாக்குறையால.

வெகு நாட்களுக்குப் பிறகு டிரான்ஸிஸ்டருக்கு சென்ற வெள்ளிக்கிழமை யன்று பேட்டரி போட்டு காலை நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தேன்.

படம் -கூகிள்

குறள் அமுதம், சான்றோர் சிந்தனை, மங்கள இசை ஆங்கிலத்தில் செய்திகள் முடிந்து பக்தி இசை தொடங்கியது. எனக்கு பிடித்த பாடல்கள் ‘முருகனுக்கு ஒருநாள் திருநாள் ‘ என்ற சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடல், எல்.ஆர். ஈஸ்வரியின் ‘இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே ! அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே! எல்லாம் கிடைக்குமே!’ என்ற பாடலும் ,பி. லீலாவின் ‘வரவேண்டும் எனது அரசே! அருணோதய ஒளி பிரகாசா!’ என்றபாடலும், ‘யா அல்லா!ஈடில்லா ஏகாந்தம் நீயே அல்லா! யார் இங்கே வேறே கதியே! மாமறையே போற்றும் நீதியே! நாடியே வேண்டினேன்’ என்று உருகி பாடினார் நாகூர் ஹனிபா. தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு கொஞ்சம் நில்லு எங்கள் திருநபியிடம் போய் சொல்லு சலாம் சொல்லு , என்ற பாடலும் நாகூர் ஹனீபா பாடினார். இந்த பாடலும் மிக நன்றாக இருக்கும். எனக்கு தெரியாத இன்னொரு பாடகர் ‘இறை தூதர் நபியே! மறை தூதர் நபியே! ‘என்று பாடினார். 

எல்லா மதத்திற்கும் உள்ள பாடலை வானொலிதான் இன்றும் இணைத்துத் தந்துகொண்டு இருக்கிறது.

வானொலி நிலயம்.டில்லி படம் - கூகிள்

பாடல் முடிந்து ‘விவசாய நிகழ்ச்சி’, ‘நலம் நேரம்’ என்று டாக்டரின் ‘ஆலோசனை நேரம்’, மாநிலச் செய்திகள்:
அடுத்து ‘பாடும் பண்பலை’,அடுத்து ‘தகவல் நேரம்’,என நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

மீடியம் அலை வரிசையும் நன்கு கேட்பதால் அதில் 
வெள்ளிக்கிழமை வைக்கும் ‘காந்திய சிந்தனை’யை கேட்க முடிகிறது. ‘வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ! ‘பாடலை இசை அரசி எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்களின் தேன்குரல் இழைய இழைய பாடிய பாடலைக் கேட்டு ரசித்தேன். சத்திய சோதனையிலிருந்து சிலபகுதிகளைப் படித்தார்கள். அன்று காந்தி மூன்றாம் வகுப்பு ரயில் பயணம் செய்யும் அனுபவத்தை பெற அதில் பயணித்து காசி சென்றதை காசி பயணம் என்ற தலைப்பில் எழுதியதைப் படித்தார்கள்.

வெள்ளிக்கிழமை அன்று மகளிர் சங்கத்தின் பல்சுவை நிகழ்ச்சி, வைத்தார்கள். கஸ்தூரிபாய் மகளிர்சங்கம் தொகுத்துஅளித்த பல்சுவை நிகழ்ச்சி. பாரதியார் பாட்டு, ஹோலி பண்டிகை பற்றிய செய்தி, நாடகம் முதலியவை இருந்தன. நாடகத்தில் கொடுக்கப் பட்ட சிறிது நேரத்தில் படிப்பினை ஊட்டும் கதை ஒன்றைச் சொல்லி விட்டார்கள், நாடகத்தைக் காட்சி காட்சியாய் விவரித்த போது மிக நன்றாய் இருந்த்து.

மீரா பஜன், சமையல் குறிப்பு, குழந்தைப் பாதுகாப்பு என்று பல நிகழ்ச்சிகள் இருந்தன. வெயிலில் குழந்தைகளுக்கு வேர்க்குரு வாராமல் பாதுகாப்பது, பரீட்சை நேரத்தில் குழந்தைகளை நன்கு சாப்பிட வைத்துச் சரியான நேரத்தில் தூங்கவைப்பது, சரியான நேரத்தில் படிக்கவைப்பது என்று நிறைய டிப்ஸ்கள் வழங்கி அசத்தி விட்டாட்கள்.

மகளிர் தின வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒன்று. . அதில் கணினி சாதனையாளர் கே. புவனேஸ்வரி அவர்கள் பேசினார்கள். கணினியின் சேவை குறித்து பேசினார். 
“கண் தெரியாதவர்களும் கணினியை இயக்கி திருக்குறளை படிக்கலாம் ; தமிழில் எழுதுபவர்கள் நிறைய நல்ல கட்டுரைகள எழுதுகிறார்கள், அதைப் படிக்கலாம் ; குழந்தைகள் கணினியில் யாரோடு பேசுகிறார்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை கவனமாய் பார்த்து அவர்களை வழி நடத்த வேண்டும். பெண்கள் ஐ.டி துறையில் முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் வேலையை மனபூர்வாமாக் செய்யவேண்டும்.அழுகை, கோபம் இரண்டையும் பெண்கள் விட வேண்டும், மென்மை தனமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்” என்று பெண்கள் முன்னேறுவதற்கான சில வழிகளைக் கூறினார்கள். 

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி அரசின் தலமைச் செயலர் சத்தியவதி அவர்கள் ‘பெண்மையைப் போற்றுதும்’ என்ற தலைப்பில் பேசினார்கள். 

“பெண் சிசு கொலையைத் தடுக்க வேண்டும், வறுமை காரணமாய் சிசுக்கொலையை செய்கிறவர்களை விட செல்வந்தர்கள் தான் இந்த செயலை அதிகமாய் செய்கிறார்கள். கீழ் மட்டத்து மக்களை விட உயர் மட்டத்து மக்கள், படித்த பணக்காரர்கள் தான் பெண்சிசுக் கொலையைச் செய்கிறார்கள். இதற்கு உதராணம் பஞ்சாப் என்றார்கள். அங்கு அதிகமாய் பெண் சிசுக் கொலை நடை பெறுகிறது ” என்றார்கள்..

பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாய் செயல் பட முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் கணவர், சுற்றம் சொல்படி நடக்க வேண்டி உள்ளது. அவர்கள் சுத்ந்திரமாய் செயல்பட வேண்டும் “என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

“பெண்கள் ஆண்களுக்கு சமமாய், ஐ.டி துறையில் வேலை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனால் வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் செய்யும் போது மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
அதற்கு ஆண்கள் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கவேண்டும் ” என்றார்கள் 

“ஆண்கள் வீட்டு வேலை செய்ய கூடாது என்ற மனநிலையை மாற்ற வேண்டும். இருபாலரும் மனமாற்றம் பெற வேண்டும். பெண்மை வாழ்க! என போற்றுவோம்” என்றார்கள்.

எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை இச்சமயத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன் 



வானொலி நிகழ்ச்சிகள் பற்றி மேலும் பார்ப்போம்:

முன்பு எல்லாம் வியாழக்கிழமைகளில் நாடகம், ஞாயிறுகளில் சினிமா ஒலிச்சித்திரம் என்று வானொலியில் நிகழ்ச்சிகள் தருவார்கள். 

‘மெரினா’வின் நாடகங்கள் நன்றாக இருக்கும், ‘தனி குடித்தனம்’ என்ற நாடகம் நன்றாக இருக்கும்.

படம் -கூகிள்

நல்ல இசை கச்சேரிகள், ‘விரும்பிக் கேட்டவை’ என்ற சினிமா பாடல்கள் தொகுப்பு, ‘ரேடியோ மாமா’, ‘வானொலி அண்ணா’ வழங்கும் குழந்தைகள் நிகழ்ச்சி, சேர்ந்திசை, நிலைய வித்வான் களின் வாத்திய இசை, எல்லாமே மறக்க முடியாதவை.
படம் - கூகிள்

வானொலியில் தர இருக்கும் நிகழ்ச்சிகளை ‘வானொலி’ என்ற பத்திரிகை மூலம் முன்னதாக அறிந்துகொள்ளலாம். அதை என் கணவர் வாங்குவார். நல்ல நிகழ்ச்சிகளை அடிக்கோட்டிட்டு வைத்து இருப்பார்கள் மறக்காமல் கேட்க.

இசைச்சாரலில்’ வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு கர்நாடக இசை கேட்கலாம். டிரான்ஸ்சிஸ்ட்டரில் பாட்டு கேட்கும் போது என் இளமைக்காலம் நினைவுக்கு வந்தது விட்டது. 1970-ஆம் ஆண்டு. நானும் என் அண்ணனும் ‘விவிதபாரதி’யில் போட்டி போட்டுக் கொண்டு இந்திப் பாடல், ‘தேன் கிண்ணம்’ கேட்டு மகிழ்ந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது.கிரிக்கெட் நடக்கும் காலங்களில் கிரிக்கெட் நேர்முக வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

வானொலி என்றால் இலங்கை வானொலியைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. வர்த்தக ஒலிப்பரப்பை எல்லோரும் விரும்பிக் கேட்பார்கள். தமிழ்நாட்டில் ஒலிக்காத இடம் இருக்காது. 
இலங்கை வானொலி என்றால் திரு. மயில்வாகனன் அவர்களை மறக்கமுடியாது என்று என் கணவர் கூறுவார்கள்.
படம் - கூகிள்

இலங்கை வானொலியில் தேசிய ஒலிபரப்பில் சிவன் ராத்திரி சமயம், கோயில் நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்வார்கள். கந்த சஷ்டி சமயம் சஷ்டி கவசம், ஒலிபரப்புவார்கள்.

அது ஒரு பொற்காலம் !

முன்பு மழைக்காலத்தில் டிரான்சிஸ்டருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும் , வெயில் வரும் போது டிரான்சிஸ்டரை காயவைத்து எடுப்போம். விடாத மழையால் மின்சாரம் தடைபடும் போது வானொலி கேட்க முடியாது. டிரான்சிஸ்டர்மட்டுமே கதி. அதனால் அப்போது வரும் பாட்டரி விளம்பரங்கள் வாரப்பத்திரிக்கையில்.






இந்த இரண்டு படங்களும் அம்மாவின் கதை சேமிப்பில் இடையில் வரும் விளம்பரங்க்கள்.


சென்னை, மதுரை, கோவை போன்ற நகரில் நிறைய எஃப் எம் ஒலிபரப்புகள் கேட்கிறது. எங்கள் மயிலாடுதுறையில் சில எஃப் எம் கள்தான் கேட்கும். காரைக்கால் பண்பலை நன்கு கேட்கும் அதில் இன்று ஒரு தகவல் அளித்து வந்த திரு.தென்கச்சி சுவாமி நாதன் அவர்களை மறக்க முடியாது.


தினம் ஒரு தலைப்பில் நேயர்களை பேச வைப்பது, விடுகதை நேரம் அது இது என்று 

இப்போதும் நாள்தோறும் காரைக்கால் வானொலி நிலையம் புதுச் செய்திகளை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. 


அம்பாளடியாள் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள்.  10 கேள்விகள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மதுரைத் தமிழன் அவர்கள் அம்பாளடியாளை அழைத்து இருந்தார்கள்.

அதில் பத்தாவது கேள்வி தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? என்று அதற்கு என் பதில் இனிய பாடலகள் கேட்பது தான் .


10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..

//தனியாக இருந்தால்  பாடல் கேட்பது பிடிக்கும்,  அதுவும் நல்ல பாடல்களை கேட்பது மிகவும் பிடிக்கும்.  தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள், அதில் பாடல்கள்,  கேட்பேன் தனிமையை இனிமை ஆக்குவது இசைதான். மன அமைதி தருவது இசை. தனிமையை போக்குவது இசைதான். எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் பாடல்கள் கேட்டுக் கொண்டு செய்வது எனக்கு பிடித்த ஒன்று.//




வானொலி கேட்பதையும்,. புத்தகம் வாசிப்பதையும், தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தவுடன் மக்கள் மிகவும் குறைத்துக் கொண்டார்கள். இப்போது மறுபடியும், வானொலி கேட்பதும், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமும் வந்து கொண்டு இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் விற்கும் புத்தகங்கள் அதற்கு சாட்சி. 

மின் வெட்டால் துன்பங்கள் நிறைய ஏற்பட்டாலும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டதும் பழைய நினைவுகள் வந்து இளமை

திரும்பியதில் மகிழ்ச்சிதானே! 

                                                              வாழ்க வளமுடன்.







36 கருத்துகள்:

  1. பிரமிப்பான நிறைய விடயங்கள் அருமை சகோ

    பதிலளிநீக்கு
  2. மறந்தவைகள் அனைத்தையும் மீண்டும் நினைவு படுத்தியுள்ள மிகச்சிறப்பான பதிவு.

    எங்கள் வீட்டிலும் முன்னொரு காலத்தில் ஒரு பழைய ரேடியோ இருந்தது இப்போது என் நினைவுக்கு வந்தது. அதற்கு ஓர் ஆண்டுக்கு 15 ரூபாய் வீதம், பல வருஷங்கள் தபால் ஆபீஸில் பணம் கட்டி லைஸென்ஸ் புதுப்பித்த ஞாபகமும் வந்தது. லைஸென்ஸ் பெறாமல் + புதுப்பிக்காமல் ரேடியோ வைத்துக்கொள்வது அந்தக் காலத்தில் சட்டப்படி குற்றம். ரேடியோவை பறிமுதல் செய்துகொண்டு சென்று விடுவார்கள். :)

    ஆச்சர்யம் அளிக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. பாட்டரியில் இயங்குவதானால் அது ட்ரான்சிஸ்டர்தானே என் மூத்தமகன் முதலாம் ஆண்டு நிறைவின் போது ரூ 600 கொடுத்து ஒரு மர்ஃபி ரேடியோ வாங்கினோம் அதை இயக்கும் வால்வுகள் கிடைக்காததால் பரணுக்குப் போய் இப்போது காணாமலேயே போய் விட்டது

    பதிலளிநீக்கு
  4. மிக மிக அருமையான பதிவு அக்கா ..தென்கச்சி சாமிநாதன் பேச்சை கேக்க ஆர்வமா உக்காந்திருப்போம் .
    காலை மூன்று கடவுள் பாடல்கள் விவித்பாரதி மியூசிக் எல்லாமே டைம் பார்க்கவேண்டிய அவசியமில்லாமல் சரியான நேரத்துக்கு ஒலிபரப்புவாங்க ..ஞாயிறுகளில் மாலை 4 மணிக்கு பாத்திமா பாபு குரலில் லக்ஷ்மி ,அனும்மா ஆகியோரின் கதைகள் வாசிக்கப்படும் ..
    எவ்ளோ ஆசையா இருக்கும் தெரியுமா .இரவு பாடல்கள் தாலாட்டும் ..இங்கும் ரேடியோ வாங்கி வச்சிருக்கோம் பாட்டரி போட்டது ஆனா தமிழில் கேக்க முடியாது ..
    ஹ்ம்ம் மறைந்த பல அழகிய நினைவுகளை மீட்டெடுத்து தந்ததற்கு நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
  5. ஏகப்பட்ட பழைய நினைவுகள் மனசில் முட்டி மோதுகின்றன. எதையும் விட்டு வைக்கவில்லை நீங்கள். அருமையாக ஆழமாக அசை போட்டிருக்கிறீர்கள். உங்கள் பழைய பதிவிலும் இதைத் தான் கூறியிருஇப்பேன் என்று நினைக்கிறேன்.

    'வானொலி'பத்திரிகை, ரேடியோ அண்ணா, கூத்தபிரான், சுகி சுப்ரமணியன், சமுத்திரம் அந்தக்கால கர்நாடக பாடக மேதைகள் எல்லோரும் வரிசையாக நினைவுக்கு வந்தார்கள். கர்நாடக சங்கீதத்தை வள்ர்த்த அசாத்திய பெருமை என்றும் வானொலிக்கு உண்ட

    இன்றும் ஒரு சின்ன பாக்கெட் ரேடியோ வைத்திருக்கிறேன். பாட்டரி போட்டு இயக்கலாம். இருந்தாலும் நிகழ்ச்சிகளில் நிறைய மிஸ்ஸிங். அதனால் திருப்தி இல்லை.

    பதிலளிநீக்கு
  6. திரு.தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் அற்புத கருத்துக்களை மீண்டும் கொடைக்கானல் FM-ல் மீண்டும் மீண்டும் ரசிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  7. என்னுடைய கமெண்ட் என்ன ஆச்சு? மற்றவர்களின் பின்னூட்டங்கள் சமர்த்தாய் மெயில் பாக்ஸுக்கு வருகின்றன. ஆனால் நான் போட்ட பின்னூட்டம் காணோம்.

    பதிலளிநீக்கு
  8. பழசை எல்லாம் அசை போடும் போதே அந்தப் பிராயத்து வயசுக்கு மனசு போய் விடுவதென்னவோ உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம். has left a new comment on your post "அந்த நாளும் வந்ததே":

    கைக்கடிகாரத்திலும், அலைபேசியிலும் என்று இப்போது எங்கே திரும்பினாலும் வானொலி கேட்க முடிகிறது. என்ன, இதிலெல்லாம் பண்பலை மட்டுமே கேட்கமுடியும். முன்பு எங்கள் வீட்டில் பிலிப்ஸ் வால்வ் ரேடியோ இருந்த காலங்கள் இனிமையானவை. வேறு பொழுது போக்கு ஏது அப்போது? வானொலி நாடகங்கள், ஞாயிறு நாடகவிழா ஒரு மணி நேர நாடகம், ஒலிச்சித்திரம், பினாகா கீத் மாலா, மண் சாஹே கீத், மனோ ரஞ்சன், ஜெய்மாலா, சாயாகீத் உங்கள் விருப்பம்,... வானொலி புத்தகத்தில் முன்கூட்டியே படித்து வைத்துக் கொண்டு அடுத்த பாடல் என்ன என்று சொல்வது ஒரு சுவாரஸ்யம். வானொலி நாங்களும் தொடர்ந்து வாங்குவோம். நான் மதுரை வானொலி நிலையத்தில் இளைய பாரதம் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன். என் அப்பா எழுதிய நாடகங்கள் ரேடியோவில் வந்திருக்கின்றன. ஒன்றை அவரே வாசித்தும் வழங்கியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    //எங்கள் வீட்டிலும் முன்னொரு காலத்தில் ஒரு பழைய ரேடியோ இருந்தது இப்போது என் நினைவுக்கு வந்தது. அதற்கு ஓர் ஆண்டுக்கு 15 ரூபாய் வீதம், பல வருஷங்கள் தபால் ஆபீஸில் பணம் கட்டி லைஸென்ஸ் புதுப்பித்த ஞாபகமும் வந்தது. லைஸென்ஸ் பெறாமல் + புதுப்பிக்காமல் ரேடியோ வைத்துக்கொள்வது அந்தக் காலத்தில் சட்டப்படி குற்றம். ரேடியோவை பறிமுதல் செய்துகொண்டு சென்று விடுவார்கள். :)//

    நீங்கள் கருத்தில் சொல்லிய விஷயம் நான் சொல்ல விட்டு போனது . இப்போது உள்ளவர்களுக்கு இது தெரிந்து இருக்காது.
    உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.


    //பாட்டரியில் இயங்குவதானால் அது ட்ரான்சிஸ்டர்தானே//

    ஆமாம், டிரான்சிஸ்டர்தான். பாட்டரி போட்டு இயங்க்குவது போல் ஒரு மாடலும் பாட்டரி போட்டும், மின்சாரத்தில் இயங்க்குவது போலும் பின் வந்தது. எங்கள் வீட்டில் இரண்டும் இருந்தது. எங்கள் அம்மா வீட்டு ரேடியோ பெட்டியும் பரணிலிருந்து சில வருடங்களுக்கு முன்தான் பழைய சாமான் எடுபவரிடம் போடப்பட்டது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
    உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
    இரவு வைக்கும் "நினைவில் நின்றவை", "உறங்கும் வேளை" என்று வைக்கும் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். மகன் அலைபேசியில் நிறைய பண்பலைகள் தரவிறக்கம் செய்து தந்தான். கீதம் பழையபாடல் பண்பலை நன்றாக இருக்கிறது.கர்நாடக சங்க்கீதம் தனியாக இருக்கிறது.
    கரைக்கால் பண்பலையில் பொன்னியின் செல்வன் கஏட்டுக் கொண்டு இருந்தேன் இப்போது மதுரை வந்தபின் கேட்க முடியவில்லை.

    உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஜீவி சார் வாழ்க வளமுடன்.

    //ஏகப்பட்ட பழைய நினைவுகள் மனசில் முட்டி மோதுகின்றன. எதையும் விட்டு வைக்கவில்லை நீங்கள். அருமையாக ஆழமாக அசை போட்டிருக்கிறீர்கள். உங்கள் பழைய பதிவிலும் இதைத் தான் கூறியிருஇப்பேன் என்று நினைக்கிறேன்.//
    ஆமாம் சார்.

    //கர்நாடக சங்கீதத்தை வள்ர்த்த அசாத்திய பெருமை என்றும் வானொலிக்கு உண்டு//

    ஆமாம் சார். என் அப்பா புதன் கிழமை சென்னை வானொலியில் இரவு வைக்கும் கர்நாடக கச்சேரி கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

    //இன்றும் ஒரு சின்ன பாக்கெட் ரேடியோ வைத்திருக்கிறேன். பாட்டரி போட்டு இயக்கலாம். இருந்தாலும் நிகழ்ச்சிகளில் நிறைய மிஸ்ஸிங். அதனால் திருப்தி இல்லை.//

    ரேடியோ மிர்சியில் காலை நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது. காலை பக்தி பாடலுடன் இடையில் புராண கதைகள் உண்டு. இரமாயணத்தில் ஊர்மிளையின் பாத்திரம் பற்றி பேசினார்கள். இப்போது மகாபாரதத்தில் சகுனி பாத்திரத்தை பற்றி பேசுகிறார்கள் பக்தி பாடல்களும் மிக நன்றாக இருக்கும், தினம் ஒரு கோவில் உலவும் உண்டு. 7 மணிக்கு அப்புறம் சினிமா பாடல்கள் வந்து விடும்.

    உங்க்கள் விரிவான கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  15. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் திரு. தென்கச்சிசுவாமிநாதன் பேச்சு கொடைக்கானல் FM-ல் கேட்பது அறிந்து மகிழ்ச்சி.
    நானும் கொடைக்கானல் FM கேட்குதா என்று பார்க்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மீள் பதிவு என்றதும் இதன் பழைய பதிவினுக்கும் (மார்ச்,5,2012) இற்கும் சென்று அனைவரது பின்னூட்டங்களையும், உங்கள் மறு மொழிகளையும் படித்தேன். அப்போதுதான், நான் வலைப்பக்கம் வரத் தொடங்கி இருந்த சமயம் என்பதால் நான் கருத்துரை ஏதும் தரவில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் படித்தது நினைவுக்கு வருகிறது. மீள் பதிவே என்றாலும் மீண்டும் படிக்கும்போது ஒரு புதிய பதிவைப் படிக்கும் உணர்வையே தந்தது. அந்நாளைய வானொலி நினைவுகள், இன்றைய மலரும் நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    //என்னுடைய கமெண்ட் என்ன ஆச்சு? மற்றவர்களின் பின்னூட்டங்கள் சமர்த்தாய் மெயில் பாக்ஸுக்கு வருகின்றன. ஆனால் நான் போட்ட பின்னூட்டம் காணோம்.//
    உங்கள் பின்னூட்டத்தை காக்கா தூக்கி சென்று விட்டது.

    உங்கள் பின்னூட்டத்தை அலைபேசியில் படித்தேன் அதை சாரிடம் காட்டினேன், ஸ்ரீராம் மதுரை வானொலியில் இளைய பாரத நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார், அவர் அப்பாவின் நாடகம் இடம்பெற்று இருக்கிறதாம் என்று பேசிக் கொண்டு இருந்ததில் பப்ளிஸ் செய்ய காலதாமதம் ஆகி விட்டது. The comment doesn't exist or no longer exists. அப்புறம் இப்படி வந்து விட்டது.

    மன்னித்துக் கொள்ளுங்கள் ஸ்ரீராம்.

    நீங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் இங்க்கு குறிப்பிட்டது அருமை.
    அதை கேட்டு ரசித்தவர்களுக்கு பழைய நினைவுகள் வரலாம்.
    இளைய பாரத நிகழ்ச்சியில் என்ன பேசினீர்கள் ? அதையும் சொல்லி இருக்கலாம்.
    உங்களுக்கு வாழ்த்துக்கள். அப்பாவின் என்ன கதை இடம்பெற்றது? அப்பா எந்த கதையை வாசித்தார்கள்? என்பதை சொல்லுங்க்கள் கேட்க ஆவல்.
    உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  18. வணக்கம் நிலாமகள் வாழ்க வளமுடன்.
    //பழசை எல்லாம் அசை போடும் போதே அந்தப் பிராயத்து வயசுக்கு மனசு போய் விடுவதென்னவோ உண்மைதான்//

    நீங்கள் சொல்வது உண்மைதான்.

    வீட்டில் பெரிய ரேடியோ இருந்தாலும் அப்பா புது டிரான்சிஸ்டர் வாங்கி வந்தவுடன் எங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி ! இன்று நினைத்தாலும் வருகிறது.
    உங்க்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்க்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.

    //மீள் பதிவு என்றதும் இதன் பழைய பதிவினுக்கும் (மார்ச்,5,2012) இற்கும் சென்று அனைவரது பின்னூட்டங்களையும், உங்கள் மறு மொழிகளையும் படித்தேன்//

    பழைய பதிவையும் பின்னூட்டங்களையும், என் மறுமொழிகளையும் படித்தது அறிந்து மகிழ்ச்சி.

    //மீள் பதிவே என்றாலும் மீண்டும் படிக்கும்போது ஒரு புதிய பதிவைப் படிக்கும் உணர்வையே தந்தது. அந்நாளைய வானொலி நினைவுகள், இன்றைய மலரும் நினைவுகள்.//
    மலரும் நினைவுகள் கொஞ்சம் சேர்த்து இருக்கிறேன், கொஞ்சம் வேண்டாம் என்று நீக்கி இருக்கிறேன்.
    இந்த பதிவில் அம்மாவின் புத்தக சேமிப்பு படங்கள் புதிதாக இணைத்து இருக்கிறேன். சகோதரி அம்பாளாடியாள் கேள்வி பதில் புதிதாக இணைத்து இருக்கிறேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மிக அருமை. இலங்கை வானொலியில் BH அப்துல் ஹமீது, KS ராஜா ஆகியோரை மறக்க முடியாது. சிறு வயதில் காலை வேளைகளில் மதுரை, நெல்லை வானொலி நிலையங்களின் பக்திப் பாடல்கள், வேளாண் குறிப்புகளை அதிகம் கேட்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் கார்த்திக் சரவணன், வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொன்னது போல் BH அப்துல் ஹமீது, KS ராஜா ஆகியோரை மறக்க முடியாது.

    நான் குறிப்பிட மறந்தவர்களை நீங்கள் குறிபிட்டமைக்கு நன்றி கார்த்திக்.

    இலங்கை வானொலியின் பாட்டுக்கு பாட்டு, கதையும் கானமும் எல்லாம் மறக்க முடியாது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  23. சிறப்பான பதிவு..

    மலர்ந்த நினைவுகளுக்குள் மனம் ஆழ்ந்து விட்டது..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    நீங்க்களும் உங்கள் மலரும் நினைவுகளில் ஆழ்ந்து விட்டீர்களா?
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. மீண்டும் இல்லங்களில் வானொலி ஒலிக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி. கேட்ட நிகழ்ச்சிகளை அழகாகத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். கூடவே நினைவலைகள். ஆம் அது ஒரு பொற்காலம்.‘விரும்பிக் கேட்டவை... அடுத்தடுத்து என்ன பாடல்கள் வருமென சஸ்பென்ஸோடு காத்திருந்து கேட்பது ஒரு தனி சுகம். ‘ரேடியோ மாமா’, ‘வானொலி அண்ணா’வாக மாறி வீட்டில் இளையவர்களை வைத்து சிறுவயதில் நிகழ்ச்சிகள் செய்து விளையாடுவதுண்டு:).

    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    //ரேடியோ மாமா’, ‘வானொலி அண்ணா’வாக மாறி வீட்டில் இளையவர்களை வைத்து சிறுவயதில் நிகழ்ச்சிகள் செய்து விளையாடுவதுண்டு:).//
    உங்கள் மலரும் நினைவுகள் அருமை ராமலக்ஷ்மி.
    விரும்பிக்கேட்டவை நிகழ்ச்சியில் பெயர் சொல்வதே பெரிய ஆச்சியமாய் வியந்து கேட்டக்காலம்.
    உங்க்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  27. மூன்றாவதாக உங்கள் பின்னூட்டம் இருக்கிறது பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  28. கோமதி அக்கா, எனக்கு உங்கள் புளொக் கொம்பியூட்டரில் ஓபின் ஆகுது ஆனா கொமெண்ட் போடவோ வாசிக்கவோ முடியாமல் ஆடிக்கொண்டே இருக்குது அதனால மொபைல் மூலம் மட்டுமேதான் எல்லாம் முடியுது, சோ வர தாமதமாகிட்டுது.

    பதிலளிநீக்கு
  29. இது மீள் பதிவு என்றீங்க அதனால கொப்பி பேஸ்ட் பண்ணியிருக்கிறீங்கபோல, அது மொபைல் மார்ஜின் க்குள் நிக்குதில்லை அதனால முழுவதும் வாசிக்க முடியவில்லை.

    இலங்கை வானொலியில் காலையில் பக்திப் பாடல்கள் போடுவினம் மும் மதப் பாடல்களும் போகும் அதனாலேயே கிறிஸ்தவ இஸ்லாமிய பாட்டுக்கள் எல்லாம் பாடம் ... அடுத்து இசையும் கதையும் ஒலிபரப்பாகும் அதன் நினைவாகவே என் பக்கத்தில் இசையும் பூஸும் என ஒரு லேபல் போட்டு எழுதி வருகிறேன்.

    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. athira has left a new comment on your post "அந்த நாளும் வந்ததே":

    நீங்கள் தமிழ்மணம் வச்சிருக்கிறீங்க ஆனா போஸ்ட்டை இணைக்கவில்லை, சரி இம்முறை நான் இணைச்சுவிட்டு கொஞ்சம் பேரெடுப்பமே:) என இணைச்சேன் ஆனா அது இன்னொருவர் இணைக்க முடியாதுபோல, என்னைப் பார்த்து முறைச்சது:)

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    நிறைய கஷ்டப்பட்டாலும் வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி அதிரா.

    https://mathysblog.blogspot.in போட்டு பாருங்க்கள் கணினியில் படிக்க முடியும்.
    மீள்பதிவு என்பதால் தமிழ்மண ஓட்டு பட்டை வரவில்லை என்று நினைக்கிறேன்.

    //இலங்கை வானொலியில் காலையில் பக்திப் பாடல்கள் போடுவினம் மும் மதப் பாடல்களும் போகும் அதனாலேயே கிறிஸ்தவ இஸ்லாமிய பாட்டுக்கள் எல்லாம் பாடம் ...///

    மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. மும்மத பழைய பாடல்கள் மிக அருமையாக இருக்கும்.


    //அடுத்து இசையும் கதையும் ஒலிபரப்பாகும் அதன் நினைவாகவே என் பக்கத்தில் இசையும் பூஸும் என ஒரு லேபல் போட்டு எழுதி வருகிறேன்.//

    நானும் படித்து ரசித்து இருக்கிறேன் அதிரா உங்கள் தளத்தில்.

    உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  32. பால்யத்தின் நினைவுகளுக்குச் சென்று மீண்டுவந்தேன்.. அந்த வானொலி விளம்பரத்தில் இருப்பதுபோல வண்ணச்சுடர், ஒலிச்சித்திரம் போன்றவை ஒலிபரப்பாகும் தருணங்களில் வீட்டின் அங்கத்தினர் (அப்போது அப்பா, சித்தப்பா, தாத்தா என்று கூட்டுக்குடும்பமாக இருந்தோம்) அனைவரும் சுற்றி அமர்ந்து கேட்டுரசித்த காலத்தை இப்போது நினைதாலும் ஏக்கமாக உள்ளது. உங்களிடம் பகிர்வதற்குதான் எவ்வளவு விஷயங்கள் உள்ளன. மலைப்போடு வாசித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.

    பால்யநினைவுகள் வந்தது அறிந்து மகிழ்ச்சி கீதமஞ்சரி.
    பழைய காலம் திரும்பி வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா?
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  34. அருமையான நினைவுகள்...

    எனக்கு கோடை fm தான் ரொம்ப பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.

    எனக்கு கோடை fm தான் ரொம்ப பிடிக்கும்...

    நன்றாக இருக்கிறது கோடை fm நிறைய நல்ல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகிறார்கள்.
    உங்க்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு