சனி, 3 டிசம்பர், 2016

விரதங்களும் உடல் நலமும்


நம் முன்னோர்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள்.உடல் நலமாக இருந்தால் தான் நாம் இந்த பூமியில் மகிழ்ச்சியாய் வாழமுடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டார்கள்.

உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க ஆகாரம்.

ரத்தஓட்டத்தையும்,ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க மிதமான உழைப்பு.

ஒரு பெண் கருவுற்ற நாள் முதல் நல்ல சத்தான ஆகாரம் உண்டு,மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள வேண்டும்.அப்போது தான் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.நாளைய சமுதாயம் மன வளம்,உடல் நலம் மிக்கதாய் இருக்கும்.

“நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னை சீரணிக்கும்”
--வேதாத்திரி மகரிஷி

எனவே சுத்தமானதும்,எளிமையானதும்,சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம்  நம்  உடலுக்குத் தேவை.  காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை  இவற்றையும்  மிதமாக  உட்கொள்ள வேண்டும்.

சமச்சீரான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஊட்டச்சத்துக்கள் அளவிலும், தரத்திலும், சமவிகிதத்தில் இருக்குமாறு  உண்பதே சரிவிகித உணவு. சரிவிகித  உணவு  சாப்பிட்டால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

திருவள்ளுவரும் இதை அழகாய்ச் சொல்கிறார்.

”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”

உணவு அளவுக்கு மேல் கூடினாலும் குறைந்தாலும் மருத்துவ நூலோர் வகுத்த வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்று நோயை வரச்செய்யும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி யுணின்.”

முன்பு உண்ட உணவு செரித்த்தை அறிந்து பின்பு உண்டால் உடலுக்கு மருந்து என்று வேறு ஒன்றும் வேண்டியது இல்லை.

“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.”

உடலுக்குத் தேவையான உணவை அளவோடு உண்டால்,உடம்பை நீண்ட காலம் வாழ வைக்க முடியும்.

இதற்குத் தான் உபவாசம்,விரதம்,நோன்பு,போன்ற பழக்கங்கள் ஏற்பட்டன. அதிலும்கூட  தங்கள் இஷ்ட தெய்வத்திற்குத் தகுந்தாற் போல் விரதம்  கடைப்பிடித்தார்கள் .

விரதம்,நோன்பு ஆகியவற்றை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.

நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம்,ஆகியவை நமது உடல்நலத்தைப் பெரிய அளவில் தீர்மானிக்கின்றன. தட்பவெப்பத்திற்கேற்ப உணவுப் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற அந்தந்த உணவு வகையை எடுத்துக் கொள்வது நல்லது. நமது பாரம்பரிய உணவு வகைகளை உண்ணவேண்டும். நார்ச்சத்துக்கு பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளை உண்ணலாம். இரும்புச் சத்துக்கு வெல்லம் நல்லது.நொறுக்கு தீனிக்கு மாறாகப்பழங்கள் ! குழந்தைகளுக்கு நாமே தயாரித்த சத்துமா கஞ்சி கொடுக்கலாம். பூச்சி கொல்லிகள் தெளிக்காத பச்சைக் காய்கறிகள் நல்லவை. கீரைகள்,கேழ்வரகு இதில் எல்லாம் சுண்ணாம்புச்சத்து உள்ளது. சிறு வயது முதல் இளநீர்,மோர் பருகப் பழகுவது நல்லது.அவரவர்களுக்கு என்ன ஒவ்வாதிருக்கிறதோ, அதை விட்டு விட்டு, எது உடம்புக்கு ஒத்துக் கொள்கிறதோ அதை உண்டால் உடல் நலமாக இருக்கும்.

காலையில் இஞ்சி,நடுப்பகல் சுக்கு,மாலையில் கடுக்காய் இப்படி எப்போது எதைச் சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் வகுத்துத் தந்த முறையில் உணவை உண்டால் நாளும் நலமாக இருக்கலாம்.

உடல் உழைப்பாளிக்கும்,மூளை உழைப்பாளிக்கும், உண்ண வேண்டிய உணவு மாறுபடும்.உடல் உழைப்பு இல்லாதவர்கள் அதிக உணவு உண்டால் ஆற்றல் இழப்பு தான் ஏற்படும்.உண்ணும் உணவு எளிதில் ஜீரணித்து கழிவுகள் நன்கு வெளியேறினால்தான் உடல் பலம் பெறும்.சத்து குறைந்தாலும் நோய்; சத்து மிகுந்தாலும் நோய்..பசிக்கு மட்டும் உணவல்ல, உடலின் செயல் பாட்டுக்கும் உணவு அவசியம். .அவசர உணவு,அதிக உணவு,அகால உணவு,நல்லதல்ல.

விரத நாட்களில் உணவைத் தவிர்ப்பதும்,பண்டிகை நாட்களில் விருந்தை ஏற்பதும் வழக்கம்.

நாள்தோறும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கும் வயிறாகிய இயந்திரத்திற்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு கொடுக்கலாம்.

“விரதமகாத்மியம்” என்னும் நூல் 159 விரதங்கள் இருப்பதாய்ச் சொல்கிறது. நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் கொஞ்சம் தான்.

உபவாசம் என்பது ஒரு நோய்த் தடுப்பு முறையே:

சிலர் விரத காலங்களில் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு இருப்பார்கள்,இது மலக் குடலைச் சுத்தம் செய்யுமாம்.
சிலர் இளநீர், ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ்,,மற்ற பழச்சாறுகள், குடிப்பார்கள்.

சிலர் நீர்மோர்,பானகம், மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.
சிலர் பழம்,பால் எடுத்துக் கொள்வார்கள்.பழ ஆகாரம் என்பது தான் பலகாரம் ஆனது என்று சொல்கிறார்கள். விரத  காலங்களில் பலகாரத்திற்குப் பதில் பழ ஆகாரம் நல்லது.

உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்:

கழிவுகள் சீராக வெளியேறும்;  எடை குறையும்:  உடல் சமநிலை பெறும்; ஜீரண உறுப்புகள்ஓய்வு பெறும்;  நற்சுவாசம் பெறலாம்; ரத்தம் சுத்தமாகும்; நரம்புகள் ஓய்வு பெறும்; நோய் தரும் திசுக்கள் அழியும்;கழிவுகள் நன்கு நீங்கும்; மனம் சமநிலை அடையும்; நற்சிந்தனை உண்டாகும்.

சில விரதங்களால் சிலவகையான பலன்கள் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்:-

1.திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் பரிபூரண அன்பைப் பெறலாம்.
2.செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
3.வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
4.வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட 
ஆயுளைப் பெறலாம்.
5. சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் விரோதிகள் பயம் இல்லை
6.ஞாயிற்றுக் கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயிலிருந்து விடுதலை பெறலாம்,நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக் கிழமையன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

மார்கழி ஏகாதசி விரதம் :-

கிருஷ்ணபக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிப்பது இந்நாள்.  தேவர்களுக்கு இடுக்கண் புரிந்த முராசுரனை விஷ்ணு கொன்று தேவரை களிப்பித்த நாள். இதில் உதயம் ஏகாதசி , மத்யம்  த்வாதசி , அந்தியம் திரயோதசி
உத்தமம்.  இந்நாளில் ஒரு நாள் விரதமிருக்கின்   ஆயிரம்  ஏகாதசி பலம் உண்டு  என்று சொல்லப்படுகிறது.

என் அம்மாவும் விரதங்களும்:-

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமை (சோமவாரவிரதம்)வீட்டில் என் அப்பாவைத் தவிர எல்லோரையும் கடைபிடிக்க வைத்தார்கள். காலையும், மதியமும், உணவு அருந்தாமல், மாலை மாவிளக்கு செய்து பூஜை முடிந்தபின் தான் உணவு.

பள்ளி சென்று வந்தபின் குளித்து பூஜையில் உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் பஜனை. அம்மா எப்போது பாடல் முடிப்பார்கள் உணவு தருவார்கள் என்று இருக்கும்..பூஜை முடிந்தபின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு மாவிளக்குப் பிரசாதம் கொடுத்து வந்தபின் தான் எங்களுக்கு உணவு. அப்பாதான், ’காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் சீக்கீரம் சாப்பிடுங்கள்’’ என்பார்கள். 
இந்த விரதத்தைச் சிறு  வயதில் கடைபிடிக்கக் கஷ்டமாய் உணர்ந்தாலும், இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்றும் சோமவார விரதம் கடைப்பிடித்து வருகிறேன்.

 வெள்ளிக் கிழமை பூஜைக்கு. அம்மா  பொங்கல் செய்து தருவார்கள் .. 
அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி,’விளக்கு போற்றி’ சொல்லி, பூஜை முடிந்தபின்தான் காலை உணவு.   . அந்தப் பழக்கம்தான்  இறைவன் அருளால் நல்லபடியாக நடக்கும் என்ற மனப் பக்குவத்தை இப்போது கொடுத்து இருக்கிறது.

சஷ்டி விரதம் மாதத்தில் இரண்டு வரும். அந்த இரண்டு நாளும் நானும் என் கணவரும் விரதம் இருக்கிறோம். தீபாவளியை ஒட்டி வரும் சஷ்டி விரதநாட்களில் ஒரு வேளை மட்டும் உணவு.  .6 ஆம் நாள் சூரசம்ஹாரம் முடிந்தபின் உணவு.    நானும் கணவரும் சேர்ந்து கடைப்பிடிப்பதால் கஷ்டம் இல்லை..இந்த விரதம் என் கணவர் வீட்டில் அப்பா,அம்மா,அண்ணன்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் திருச்செந்தூரில் போய் ஆறு நாளும் இருந்து விரதம் கடைப் பிடிப்பார்கள்.இப்போது வயது ஆகிவிட்டதால் அத்தை,மாமா 
கடைப்பிடிப்பது இல்லை. 

என் கணவருக்கும்,என் மகனுக்கும் காய்ச்சல் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது அப்போது அம்மாவிடம் கேட்ட போது ’ஞாயிறு விரதம் இரு , நோய் நொடி இல்லாமல் இருக்கும்’ என்றார்கள் 19 வருடமாய் நானும் என் கணவரும் இருந்து வருகிறோம்,குழந்தைகளும்’ நாங்களும் இருக்கிறோம்’ என்று இருந்தார்கள் மகள் கல்யாணம் ஆகும் வரை,மகன் வேலை கிடைக்கும் வரை இருந்தார்கள்.

மகனுக்கு விதிமுறைகள் விரதத்தில் தளர்த்தப்படும்.பொரி விற்கும் பாட்டி பொரிஉருண்டை,தேன் மிட்டாய் கொண்டு வருவார்கள், அது மட்டும் வாங்கிச் சாப்பிடுகிறேன் என்பான் சரி என்று ஒத்துக் கொள்வேன்.காலை மட்டும் டிபன் கிடையாது. மதியம் உணவு உண்டு.இரவு உணவு சப்பாத்தி.காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்வதால் சத்துமாவு கஞ்சி கொடுத்து விடுவேன் குழந்தைகளுக்கு.

விரதங்களைக் கடைப் பிடிக்க முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம்.

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி,தான தர்மங்கள் செய்து,மனதாலும் வாக்கினாலும் செயலாலும் ஒழுக்கமான காரியங்களைச் செய்து,பிறர் துன்பங்களைத் தன்னுடையது போல் நினைத்து உதவிகள் செய்பவன் தான் ’சத்புருஷ விரதம் செய்த பலனை அடைவதாய் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஒழுக்கசீலனாக,தர்மசாஸ்திரப்படி சத்புருஷவிரதம் அனுஷ்டித்து இறைஉணர்வோடு வாழ்பவர்கள், நோயினால் அவதிப்படுவதில்லை அப்படியே நோய் வந்தாலும் அதைத் தாங்கும் சக்தியையும் எதிர்த்துப் போராடும் உள்ளத்தையும் இறைவன் அவர்களுக்கு அளிக்கிறார்.என்பது ஆயுர்வேதத்தின் ஆசான் சரகரின் வாக்கு.

வேதங்கள் நமக்கு உணர்த்துவது எல்லா உயிர்களும் துன்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதே. .இதைத்தான் தாயுமானவர்’ எல்லோரும் 
இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன்  பராபரமே ! என்கிறார்.

எல்லோருடைய இன்பத்துக்கும் ஆசைப்பட்டால் நாமும் இன்பமாக இருப்போம். இதைத்தான் ஆயுர்வேதமும் கூறுகிறது.

சமஸ்கிருதத்தில்  “சர்வ ஜன சுகினோ பவந்து” என்பார்கள்.

வாழ்க நலமுடன்!     வாழ்க வளமுடன்!

25 கருத்துகள்:

  1. சிறப்பான தகவல்கள் கோமதிம்மா.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா..

    பதிலளிநீக்கு

  2. மிகவும் பயனுள்ள தகவல்கள்.

    இவற்றையெல்லாம் ஆழ்ந்து படித்து முடிக்கும் வரை நானும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்தேன். மேலும் ஒருமுறை சாப்பிட்டதும் அடுத்த முறை சாப்பிடும்வரை இடையில் நான் சாப்பிடாமல் விரதம் இருந்தும் வருகிறேன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். :)))))

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீராம். has left a new comment on your post "விரதங்களும் உடல் நலமும்":

    நல்ல தகவல்கள். மீண்டும் விரதம் ஆரம்பிக்கலாமா என்று பார்க்கிறேன். முன்பு அவ்வப்போது 6 டு 6 மௌன விரதம் கூட இருந்திருக்கிறேன். எல்லாமே தற்காலிகமாகத்தான். தொடர்ந்து செயல்படுத்தியதில்லை!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    //இவற்றையெல்லாம் ஆழ்ந்து படித்து முடிக்கும் வரை நானும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்தேன். மேலும் ஒருமுறை சாப்பிட்டதும் அடுத்த முறை சாப்பிடும்வரை இடையில் நான் சாப்பிடாமல் விரதம் இருந்தும் வருகிறேன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். :)))))//

    உங்கள் பின்னூட்டத்தில் நல்ல தகவலை சொன்னீர்கள். அடுத்த முறை உணவு இடைவேளையில் நொறுக்குதீனிகளை சாப்பிட்டுவிட்டு பசியில்லை என்று குழந்தைகள் சொல்வார்கள் அப்படி செய்யாமல் இருந்தால் நல்லது.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் பின்னூட்டத்தை அலைபேசியில் படித்துவிட்டு
    ப்பளிஸ் செய்ய மறந்து விட்டதால், The comment doesn't exist or no longer exists.
    என்று வந்து விட்டது.
    எவ்வளவு கவனமாய் இருந்தாலும் இப்படி சில நேரம் ஆகி விடுகிறது, மன்னித்துக் கொள்ளுங்கள்.

    நானும் இப்போது சனிக்கிழமை காலை 4 மணிக்கு எழுந்து கொள்வேன் அப்போது இருந்து மெளனம் தான், மாலை ஆறுமணிக்கு நிறைவு செய்கிறேன்.
    15 வருடங்கள் விடாமல் சனிக்கிழமை காலை ஆரம்பித்து ஞாயிறு காலைதான் பேசுவேன். மெளனவிரதம்பற்றியும் பதிவு எழுதி இருக்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் பயனுள்ள குறிப்புகள் அம்மா... நன்றி...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய ஆரோக்கியத்திற்கு அன்றைய விரத - உணவுக் கட்டுப்பாட்டு முறைகளே காரணம் என்பதை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்..

    விதையொன்று போட சுரையொன்று முளைக்குமா!.. என்பர் ஆன்றோர்..

    அவர்களெல்லாம் இன்றைக்கு மாதிரி வெறும் காகிதப் பட்டங்களைச் சுமந்தவர்கள் அல்லர்..

    அந்த நடைமுறைகளெல்லாம் பலவிதமாக ஏளனம் செய்யப்பட்டன..
    சில வார இதழ்களும் அன்றைய நாட்களில் அவ்வாறு செய்தன..

    அந்த வேடதாரிகளே - இன்றைக்கு மக்களுக்கு ஆரோக்கிய வாழ்வைப் பற்றி உபதேசித்து பணப்பையை நிரப்பிக் கொள்கின்றன..

    >>> ஒழுக்கசீலனாக,தர்மசாஸ்திரப்படி சத்புருஷவிரதம் அனுஷ்டித்து இறைஉணர்வோடு வாழ்பவர்கள், நோயினால் அவதிப்படுவதில்லை அப்படியே நோய் வந்தாலும் அதைத் தாங்கும் சக்தியையும் எதிர்த்துப் போராடும் உள்ளத்தையும் இறைவன் அவர்களுக்கு அளிக்கிறார் - என்பது ஆயுர்வேதத்தின் ஆசான் சரகரின் வாக்கு.<<<

    இப்படி நல்வாக்கு அருளிய சரக மகரிஷி எந்த ஆதாயத்தையும் அடைந்தாரில்லை..

    இதை மனதில் கொள்வது அனைவருக்கும் நல்லது..

    நல்லதொரு பதிவு.. மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. விரத அருமையும்
    விரத முறையும்
    சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
    அறியாதன பல அறிந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

    //அவர்களெல்லாம் இன்றைக்கு மாதிரி வெறும் காகிதப் பட்டங்களைச் சுமந்தவர்கள் அல்லர்..//

    முன்னோர்களும், மகரிஷிகளும், சித்தர்களும் உடல்நலத்தை , மனநலத்தை பாதுகாக்க நிறைய சொல்லி சென்று இருக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல் எந்த கைமாறும் கருதாமல். எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல்.
    உங்கள் விரிவான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.




    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன், நன்றி

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. விரதங்களினால் ஏற்படும் ஸுகம் அளவிற்கதிகமானது. அழகாகவும்,அனுபவப்பூர்வமாகவும் விளக்கியிருக்கிறீர்கள். லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸுகினோபவந்து. விரதங்கள் மஹிமை , உணவோடும்,வாழ்வோடும் ஒத்துப் போகிறது. நல்ல விரிவுக்கட்டுரை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் காமாட்சியம்மா, வாழ்க வளமுடன்..
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. விரதங்கள் இருப்பது உடலுக்கு நல்லதுதான் ஆனால் அப்படிச் சொன்னால் யாரும் விரதம் இருக்க மாட்டார்கள் என்று கருதியே இன்னின்ன நாள் விரதம் இன்னின்ன நன்மை பயக்கும் என்று சுகர் கோட்டாகக் கூறினார்கள் எதற்கும் நம் முன்னோர்களை உதாரணம் காட்டுவது சரியில்லை என நினைக்கிறேன் உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நம் முன்னோர்களால் மடேர்நிடி சாவுகளைத் தவிர்க்க முடிந்ததில்லை பல தலைச்சன் குழந்தைகள் உயிருடன் இருந்ததில்லை நம் முன்னோர்களின் இறப்பு விகிதம் மிக அதிகம் சராசரி வயதும் மிகவும் குறைவு

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    விரதம், பக்தி, சாஸ்திரம், சடங்கு எல்லாம் காரண காரியத்திற்குதான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. ஒரு காலத்தில் எல்லா விரதங்களும் இருந்து வந்த நினைவுகள் வந்தன. இப்போதெல்லாம் மருத்துவர் அறிவுரைப்படி மூன்று வேளையும் உணவு உண்ணும் விரதம் தான்! :))))

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஜனா சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன். விரத்த்தை விட உடல்நலம் தான் முக்கியம்.

    பதிலளிநீக்கு