சனி, 9 பிப்ரவரி, 2013

டிக் டிக் கடிகாரம் , அன்பைக்கூறும் கடிகாரம்!


                                                                                                                                                                                             
ஆசியா அவர்கள் தொடர் பதிவுக்கு  அழைப்பு விட்டு இருந்தார்கள்.
-நீங்கள் வெகு காலமாய் பாதுகாத்து வைத்து இருக்கும்  பொருளைப்பற்றி -என்று கூறியிருந்தார்கள்.  அந்த பொருளின் படமும் போடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள். என் அப்பாவைப் பற்றிக்கூற எனக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய ஆசியாவிற்கு நன்றி.

நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கி கொடுத்த பாரின்
வாட்சைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.




\

                                                        அப்பா வாங்கி தந்த வாட்ச்

அப்பாவிற்கு நாங்கள் எல்லோரும் செல்ல குழந்தைகள்தான்.  இருந்தாலும் என் தங்கைகள் சிறுமியாக இருந்ததால் என் அக்காவிற்கும், எனக்கும் வாட்ச் வாங்கி தந்தார்கள்.  என் அக்கா பியூசி படித்துக் கொண்டு இருந்தார்கள்.  அப்பா வாங்கி வந்த  இரண்டு வாட்சில்  ஒன்று  வட்டம், மற்றொன்று சதுரம். அப்போது அந்த காலக்கட்டத்தில் - , சதுரம் தான் பேஷன்.  என் அக்கா சதுர வாட்சை எடுத்துக் கொண்டார்கள்.  எனக்கு வட்ட வாட்ச் வந்தது ஆனால் எனக்கு வட்டம்  பிடிக்கவில்லை.  அப்பாவிடம் எனக்கும்  சதுரமே வேண்டும் என்று கேட்டேன்.  இப்போது பாரின் சாமான்கள் எளிதாக கிடைப்பது போல் அப்போது கிடைக்காது. அப்பாவின் நண்பர்- பாரினுக்கு போனவரிடம் சொல்லி வைத்து வாங்கி  கொடுத்தார்கள். அதை மாற்ற முடியாது என்பதால் அதற்கு அப்பா. என் மனம் நோகாமல்  அந்த வாட்சை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுமாறு  எனக்கு நிறைய ஐஸ் வைத்து என்னிடம் கொடுத்து விட்டார்கள்.  அது என்னவென்றால் உன் கைக்கு இந்த வட்டம் தான் நன்றாக இருக்கும்,  அக்கா கைக்கு அந்த சதுரம் தான் நன்றாக இருக்கும்,  உன் வாட்ச் எல்லா  காலங்களிலும் போட்டுக் கொள்ளலாம், அக்கா வாட்ச் இந்த சதுர பேஷன்  இருக்கும் போது மட்டும் தான் போட முடியும்.  அப்புறம் வேறு மாடல் பேஷனாகி  விட்டால் இது பழைய பேஷனாகி விடும். வட்டம் அன்றும், இன்றும், என்றும் நீ போட்டுக் கொள்ளலாம் என்று எல்லாம் சொல்லி என்னை சமாதானப்படுத்திவிட்டார்கள்.

அக்காவின் வாட்ச் கறுப்பு ஸ்ட்ராப், என் வாட்ச் தங்ககலர் ஸ்ட்ராப்.
அம்மாவின் சிங்கப்பூர் வாட்ச் சில்வர் கலரில் வெள்ளைகல் சுற்றி பதித்த , மூடி
போட்டது. அந்த வாட்சை பெரும்பாலும் நான் தான் கட்டி செல்வேன்.

பள்ளியில் தோழிகள் மணி கேட்டால் பெருமையாக அதை திறந்து மணி சொல்வேன். எல்லோரும் அதை திறந்து மூட ஆசைப்பட்டு மணி கேட்பார்கள்.
ஒரு பொருட்காட்சிக்குச் சென்றிருந்த போது அந்த வாட்ச், கூட்டத்தில் எங்கோ விழுந்துவிட்டது.  பொருட்காட்சி முழுவதும்  நானும் என் அண்ணனும் தேடினோம்.








 போகிறவர்,  வருகிறவர்கள் மிதித்து ,மூடி உடைந்து வாட்ச் மட்டும் கிடைத்தது.  அம்மாவிடம் திட்டு வாங்கினேன். வாட்சை பத்திரமாக வைக்க தெரியாதவளுக்கு எதற்கு வாட்ச் என்று  அம்மா வேறு அப்பாவிடம் சொல்லிக்  கொண்டு இருந்தார்கள்.  அது ஒரு காரணம் அப்பா வாங்கி கொடுத்த வட்ட வாட்சை நான் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டதற்கு.

 என் திருமணத்தின் போது நல்ல தங்க கலர் ஸ்ட்ராப் வாங்கி அதில் மாட்டி வைத்துக் கொண்டேன்.  குடித்தன்ம் வைக்க திருவெண்காட்டிற்கு காரில் அழைத்துப் போகும்போது திருவெண்காட்டை சேர்ந்த  நண்பர் வீட்டு சிறு பெண் மடியில் படுத்துக் கொண்டு வந்தாள்/  அவள் தலை மேல் என் கையை வைத்துக் கொண்டு இருந்தேன் நான்.  அவள் திடீரென்று எழுந்ததில் அவள் தலைமுடியில் வாட்ச்  ஸ்ட்ராப் மாட்டிக் கொண்டு அறுந்து போனது.  எனக்கு அழுகை ஒருபக்கம் . அதை வெளிக்காட்டக் கூடாது அல்லவா புகுந்த வீட்டார் முன் ? அடக்கிக் கொண்டேன்.  என் கணவர் அப்புறம் கலர் கலராய் ஸ்ட்ராப்  வாங்கித் தந்தார்கள், மாற்றி மாற்றி போட்டுக் கொள்ளலாம் என்று. சென்னை பர்மா பஜாரில் அரக்கு கலர், கறுப்பு கலர் ஸ்ட்ராப்புகள்  வாங்கித் தந்து தங்ககலர் ஸ்ராப்பை விட இதுதான்  உனக்கு நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லி கொடுத்தார்கள். என்ன செய்வது? வாங்கி கொண்டேன்.

இரண்டு முறை அப்பா வாங்கித் தந்த வாட்ச் ரிப்பேர் செய்யப்பட்டது. ஒருமுறை வாட்ச் கடைக்காரரின் மகன், இது மிகவும் பழைய மாடலாய் இருக்கே . இதை ரிப்பேர் செய்ய முடியாது என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த  அவருடைய  அப்பா,  கொடுங்கள் . என்ன வாட்ச்? டிட்டோனியா ?நல்ல வாட்ச் அல்லவா ! என்று சொல்லி, நான் ரிப்பேர் செய்து தருகிறேன் என்று ரிப்பேர் செய்து தந்தார், பழைய ஆட்களுக்கு தான் பழமையின் மதிப்பு தெரியும். இப்போது குழந்தைகள் இத்தனை வருடம் உழைத்து விட்டதா? ரிப்பேர் எல்லாம் செய்ய வேண்டாம் வேறு வாங்கி கொள்ளுங்கள் என்கிறார்கள்.


எனக்கு, மருமகன் அவர்கள் சிங்கப்பூர் சென்ற போது தங்க கலரில் கறுப்புடயல் வாட்ச் வாங்கி வந்தார் -ஓவல்ஷேப்பில்.  அது ஒரு முறை டெல்லியில் ஒருகடையில் சாமான் வாங்கப்போனபோது  பர்ஸோடு அந்த வாட்சையும் அந்த கடைமேசையில்  மறந்து வைத்து விட்டேன். (வாட்ச் செல் மாற்ற வேண்டும் என்பதால் பர்ஸில் வைத்து இருந்தேன். ) டெல்லியிலிருந்து சென்னை கிளம்ப ரயிலுக்கு போகும் போதுதான் நினைவு வந்தது. மகளிடம் சொன்னேன். அது எங்கே இருக்க போகிறது பார்க்கிறேன் என்றாள். நாங்கள் ஊருக்கு வந்து விட்டோம்.

மகளிடமிருந்து போன்.-- வாட்ச் கிடைத்து விட்டது என்று.

டெல்லியில் வெயிலினால் எனக்கு  அலர்ஜி வந்த போது ஒரு ஹோமியோபதி டாக்டரிடம் போயிருந்தோம். அந்த டாக்டர் கொடுத்த மருந்து  சீட்டு எனது பர்சில் இருந்திருக்கிறது. அந்த மருந்து சீட்டைப் பார்த்த கடைக்காரர் அதில் குறித்திருந்த டாக்டருக்கு  போன் செய்து கேட்டு இருக்கிறார். டாக்டர் தெரியாது என சொல்லிவிட்டார்.  ,இப்படி கடைக்காரர்  உடைவர்களிடம் பொருளை சேர்த்துவிட முயற்சிப்பது பெரிய விஷயம் இல்லையா!  எனது மகள் கடைக்குச் சென்று பர்சையும் வாட்சையும வாங்கி வந்து விட்டாள். கடைக்காரருக்கு நன்றி சொல்லி.

நல்ல மனம்வாழ்க என்று வாழ்த்த தோன்றுகிறது அல்லவா!

அவள் வாங்கி வந்த அந்த வாட்ச் மறுபடியும் என்ன ஆச்சு என்பதை   சொல்கிறேன் . என்னாச்சு!     அடுத்த பாராவுக்கு வாருங்கள்.

 மகன், மருமகள், உறவினர்களுடன் கங்கைகொண்ட சோழபுரம் போவதற்கு
கிளம்பினோம் .  என் மாமியார் நான் வீட்டில் இருக்கிறேன்.  நீங்கள் எல்லோரும் போய் வாருங்கள் என்று சொல்லி விட்டார்கள்.  போகும் வரை வேலை சரியாக இருந்தது . வளையல், வாட்ச்  எல்லாம் காரில் போகும் போது மாட்டிக் கொள்ளலாம் என்று எடுத்து சென்றேன். காரில் வளையலை மாட்டிக்கொண்டு வாட்சை கட்ட ஆரம்பிக்கும் போது போன் வந்தது வீட்டிலிருந்து அத்தை காலில் வெந்நீரை விட்டுக் கொண்டார்கள் என .
அப்புறம் பாதியிலேயே திரும்பி டாகடர்  இருக்கிறாரா என்று பார்க்க காரை விட்டு இறங்கி போய் பார்த்து வந்தேன். அவர் இருந்தார், வீட்டிற்கு வந்து அத்தையை டாகடரிடம் காட்டி மருந்து போட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டோம். பின் , அத்தை எங்களிடம் நீங்கள் கோவிலுக்கு என்று கிளம்பிவிட்டு போகாமல் இருக்க வேண்டாம் போய் வாருங்கள். என்று சொன்னார்கள்

 மறுபடியும் காரில் ஏறும்போதுதான் நினைவுக்கு வந்தது -வாட்ச்.  காரைவிட்டு இறங்கி டாக்டர் இருக்கிறாரா என்று பார்க்கும் போது மடியில் இருந்த வாட்ச் விழுந்து  விட்டிருக்கிறது . நான் கவனிக்கவில்லை.  மறுபடியும் டாகடர் வீட்டு வாசலில் போய் பார்த்தால் கிடைக்கவில்லை. அங்கு போக்குவரத்து அதிகம் உள்ள இடம்.  யாரோ அதிர்ஷ்டசாலிக்கு அன்று இறைவன் அதைப் பரிசளித்து விட்டார்.

’வாட்சை பத்திரமாக வைக்கத் தெரியவில்லை அவளுக்கு எதற்கு வாட்ச். என்று என்  அப்பாவிடம் அம்மா கேட்டது  நினைவுக்கு வந்தது.


எனது மகன் எங்கள் 60 கல்யாணத்திற்கு இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி  சில்வர் கலர் வாட்ச் பரிசு அளித்தான். அது இருக்கிறது ,இப்போது.






அமெரிக்கா போன போது  மறுபடியும் கறுப்பு டயல்  உள்ள தங்க கலர் வாட்ச் வாங்கி தந்தார் கணவர்.  உனக்கு தங்கத்தில் வாட்ச் வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தார்கள் .  பார்ப்போம் எப்போது வரும் என்று.

 எத்தனை இருந்தாலும் என் அப்பா முதல் முதலில் வாங்கி கொடுத்த வாட்ச் போல்  ஆகுமா! அந்த வாட்ச என்றும்   அப்பாவின் நினைவை சொல்லிக் கொண்டு என்னுடன் இருக்கும்..

யாருக்கு விருப்பமோ அவர்கள் இந்த தொடரில் பங்கு கொள்ளுங்கள்.
பாதுகாத்து வரும் பொருளைப்பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.
========================================================================                                                                    
                                                    வாழ்க வளமுடன்!




44 கருத்துகள்:

  1. படிக்கும் போது "என்ன ஆகி விட்டதோ...?" என்று மனதும் 'டிக் டிக்' என்று இருந்தது... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. //உன் கைக்கு இந்த வட்டம் தான் நன்றாக இருக்கும், அக்கா கைக்கு அந்த சதுரம் தான் நன்றாக இருக்கும், உன் வாட்ச் எல்லா காலங்களிலும் போட்டுக் கொள்ளலாம், அக்கா வாட்ச் இந்த சதுர பேஷன் இருக்கும் போது மட்டும் தான் போட முடியும். அப்புறம் வேறு மாடல் பேஷனாகி விட்டால் இது பழைய பேஷனாகி விடும். வட்டம் அன்றும், இன்றும், என்றும் நீ போட்டுக் கொள்ளலாம் என்று எல்லாம் சொல்லி.. //

    ஐஸ் இல்லையே! அத்தனையையும் அர்த்தமுள்ளதாகத் தானே அடுக்கி இருக்கிறார்! அதுவும் எவ்வளவு பொறுமையாக!

    பதிலளிநீக்கு
  3. அழகான வட்ட வடிவ வாட்ச் பற்றியும், தங்கள் அப்பாவின் நினைவலைகள் பற்ற்யும், மிகவும் அழகாகவே எழுதியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.

    தொலைந்து போன வாட்ச்சை தேடுவது போல வரையப்பட்டுள்ள ஓவியம் மிகவும் அற்புதமாக உள்ளது.

    ஓவியமாக அமைந்துள்ள தங்களின் அன்புக் கணவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. என்னவொரு அற்புதமான பகிர்வு!அன்பைக்கூறும் கைக்கடிகாரம் எத்தனை விதம்..அத்தனையும் அழகு,அதனுடன் கூடிய அப்பா பற்றிய நினைவுப்பகிர்வும்,
    அனுபவங்களும் சூப்பர்.
    இந்த பகிர்வுக்கு என்னுடைய மதிப்பெண் 100/100 .முதலில் எழுதி அசத்திய உங்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து என் பரிசாக பெற்றுக் கொள்ளுங்கள்.
    என் அழைப்பை ஏற்று சிரமம் பாராமல் எண்ணங்களை எழுதியமைக்கு மிக்க நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பெட்டகத்தில் அன்பான டிக்..டிக்.

    அழகாகப் பகிர்ந்து எங்கள் நினைவலைகளையும் மீட்டுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு

  6. அப்பா வாங்கிக் கொடுத்த வாட்ச் இன்னும் இருக்கிறதா.?ரிப்பேர் செய்ய வேண்டாம் என்பதனால் உபயோகத்தில் இல்லையா.?சில பொருட்களின்மேல் நம்மை அறியாமல் நாம் ஆசை வைத்து விடுகிறோம். அழகான ப்கிர்வு.

    பதிலளிநீக்கு
  7. ரசித்து வாசித்தேன். சந்தர்ப்பம் பார்த்து, தங்க வாட்ச் சீக்கிரம் கிடைப்பதற்கான வழியும் செய்துட்டீங்களே!!

    அதுல பாருங்க, எப்பவுமே எல்லா வீட்டிலயும் அப்பா வாங்கித் தர்றேன்னு சொன்னாலும், இந்த அம்மாக்கள்தான் நடுவில் எதையாவது சொல்வது!! (நானும் இப்போது இப்படியான அம்மாதான்... ஹி..ஹி..)

    பதிலளிநீக்கு
  8. அப்பா உனக்கு இது தான் அழகாக இருக்கும் என்று சொல்லி அழகாக ஐஸ் வைத்திருக்கிறார்...:)

    அழகான பகிர்வு. பாதுகாத்து வரும் பொருள் தொலைந்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக தான் இருக்கும்.

    ஓவியம் மிகவும் அழகு.

    பதிலளிநீக்கு
  9. அப்பாவின் இதயத்தின் ஓசையல்லவா அதில் இப்போதும் கேட்கும்

    பதிலளிநீக்கு
  10. வாங்க திண்டுக்கல் தன்பாலன், வாழ்கவளமுடன்.

    படிக்கும் போது என்ன ஆகி விட்ட்தோ என்று மனது டிக் டிக் என்று இருந்த்தா!மகிழ்ச்சி , நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுட்ன்.

    ஐஸ் இல்லையே! அத்தனையையும் அர்த்தமுள்ளதாகத் தானே அடுக்கி இருக்கிறார்! அதுவும் எவ்வளவு பொறுமையாக!//

    ஆம், உணமைதான், நீங்கள் சொல்வது.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,வாழ்க வளமுடன்.

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    என் கணவரின் ஓவியத்தை பாராட்டியதற்கு மிகவும் நன்றி.
    உங்கள் ஸ்பெஷல் பாராட்டுக்கு தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
  13. //எத்தனை இருந்தாலும் என் அப்பா முதல் முதலில் வாங்கி கொடுத்த வாட்ச் போல் ஆகுமா! அந்த வாட்ச என்றும் அப்பாவின் நினைவை சொல்லிக் கொண்டு என்னுடன் இருக்கும்..//

    உண்மைதான் மேடம்.
    அருமையான சுவாரசியமான பதிவு. ரசித்துப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. வாங்க பாயிசா காதர், வாழ்க வளமுடன். என் மலரும் நினைவலைகள் நன்றாக இருக்கிறதா மகிழ்ச்சி.
    உங்கள்,வ்ரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    படிக்கும் போது 100/100 வாங்கியது இல்லை, இப்போது உங்களிடமிருந்து100/100 பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    பூங்கொத்துக்கு நன்றி.
    என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு என்னுடைய நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
    என நினைவு பெட்டகம் டிக் டிக் உங்கள் நினைவலைகளை மீட்டி விட்டதா?
    நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    வாட்ச் இன்னும் இருக்கிறது. அந்த மாதிரி பழைய பொருட்க்ளை பத்திரமாய் வைத்து இருப்பதைப்பற்றி தான் தொடர்கட்டுரைக்கு ஆசியா அழைத்து இருந்தார்கள். ரிப்பேர் செய்து த்ந்துவிட்டார் உபயோகத்தில் இருக்கிறது கீ கொடுக்கும் கடிகாரம் அது.
    அப்பா இருந்து இருந்தால் வேறு வாட்ச் வாங்கி தருகிறேன் பழசாகி விட்டது என்று சொல்லி இருப்பார்கள்.
    அப்பா சிறு வயதில் இறந்து விட்டதால் அந்த வாட்ச் எனக்கு பொக்கிஷம்.
    பதிவை பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது சரிதான், நேரம் பார்த்து தங்க வாட்சை நினவுபடுத்தி விட்டேன்.
    நானும் என் அம்மா மாதிரி சில சமயம். ஆனால், என் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவைகளை நான் தான் என் கணவரிடம் சொல்லி வாங்கி தரவேண்டும்.
    என் அப்பா மாதிரி தானாக பார்த்து செய்ய தெரியாது அவர்களுக்கு.
    அன்பை வெளிக்காட்ட தெரியாத நல்ல மனிதர்.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
    //அழகான பகிர்வு. பாதுகாத்து வரும் பொருள் தொலைந்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக தான் இருக்கும்.//
    மருமகன் வாங்கி தந்த வாட்சை பத்திரமாக வைத்துக் கொள்ள முடியவில்லை என்று மிகவும் வருத்தம் தான்.
    என் கணவரின் ஓவியத்தை பாராட்டியத்ற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.

    //அப்பாவின் இதயத்தின் ஓசையல்லவா அதில் இப்போதும் கேட்கும்//

    அருமையாக சொன்னீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ரமாரவி, வாழ்க வளமுடன்.

    பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. அருமையான மலரும் நினைவுகள். நீங்கள் ஒவ்வொருமுறை வாட்ச்சைத் தொலைக்கும்போதும் மீண்டும் கிடைக்க வேண்டுமே என்று மனம் பதறியது.

    கூடிய சீக்கிரம் தங்க வாட்ச் கிடைக்கட்டும்!

    இப்படித் தொடர் எழுதுவது நல்ல உத்தி!

    பதிலளிநீக்கு
  23. என்னுடைய திருமணத்தின் போதெல்லாம் கூட இந்த சதுர வாட்ச் தான் பேஷன்.
    ஆனால் எனக்கு அமைந்ததும் வட்ட டயல் வாட்ச் தான். இன்றும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.

    அது கொடுக்கும் இனிய நினைவுகள் ஓராயிரம்.
    உங்கள் மலரும் நினைவுகளை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.

    நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    என் பதிவை மனம் ஒன்றி படித்தமைக்கு நன்றி.

    தங்க வாட்ச் கிடைக்க வாழ்த்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க ராஜி, நீங்களும் பழைய வாட்சை பாதுகாத்து வைத்து இருக்கிறீர்களா! மகிழ்ச்சி.மலரும் நினைவுகளை பாராட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. கோமதி அக்கா அப்பா என்றதும் பொறுமையாக படித்தேன்.

    ரொம்ப அருமையாக ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  27. Nostalgiaவை கிளறிவிட்ட அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  28. வாங்க ஜலீலா, வாழ்க வளமுடன்.

    என் அப்பாவைப்பற்றி நிறைய எழுதலாம் இன்னொரு முறை அவர்களைப்பற்றி முழுமையான பதிவு பதிகிறேன்.
    இந்த பதிவில் கொஞ்சம் தான்.

    அப்பா அருமையான பிள்ளை மனம் படைத்தவர்.

    பதிவை பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  29. வாங்க மதுரை அழகு, வாழ்க வளமுடன். உங்கள நினைவுகளை கிளறி விட்டதா இந்த பதிவு!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  30. அன்பைக் கூறும் கடிகாரம்... நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  31. கோமதிம்மா உங்கள் பொக்கிஷம் பற்ரி ரசிக்கத்தக்க வகையில் சுவாரஸ்யமாக எழுதி இருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  32. வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.
    பதிவை பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. டிக் டிக் டிக். ரசித்து வாசித்தேன். தங்க வாட்ச் இனி வாங்கித் தந்தே ஆகணும்:)!

    சித்திரம் மிக அருமை. ஒரு படம் வரைய எவ்வளவு நேரம் எடுக்கிறது என்பதும் அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  34. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்களை காணாமல்,எங்கே ஊருக்கு போய் விட்டீர்களோ! என்று நினைத்தேன்.

    நீங்கள் எல்லோரும் பாராட்டியதே தங்கவாட்ச் வாங்கிய மாதிரிதான். ஒரு காலத்தில் ஆசை பட்டேன், இப்போது அந்த ஆசை இல்லை.
    சித்திரத்தை பாராட்டியதற்கு மகிழ்ச்சி சாரின் நன்றி உங்களுக்கு.
    நான் என் பதிவை படித்து காட்டியதும் அவர்கள் வரைய ஆரம்பித்தால் அரைமணி அல்லது ஒருமணி நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.
    திருக்கடவூர் படம் இதை விட நன்றாக வரைந்து இருந்தார்கள் ஆனால் சேமித்து வைக்க மறந்து விட்டார்கள் அது மெளஸை தட்டிய உடன் காணாமல் போய் விட்டது, பின்பு அவசர அவசரமாய் இன்னொன்று வரைந்து தந்தார்கள்.
    நீங்கள் எல்லோரும் பாராட்டுவது அவர்களுக்கு உற்சாகம் தருகிறது அதனால் வரைகிறார்கள். இல்லையென்றால் நேரம் இல்லை என்று பாட்டு பாடுவார்கள்.
    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  35. எத்தனை வாட்ச் வந்தாலும் அப்பா வாங்கி தந்த வாட்சை தொலைக்காமல் பாதுகாத்து கவனமாக வைத்துள்ளதர்க்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  36. இலக்கியச் சிறுகதைக்கான விஷயம் இந்தப் பதிவில் இருக்கிறது.

    (அடுத்தமுறை யுஎஸ் வரப்ப சொல்லுங்க.)

    பதிலளிநீக்கு
  37. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.


    இலக்கியச் சிறுகதைக்கான விஷயம்!

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    அடுத்தமுறை யுஎஸ் வரும் போது சொல்கிறேன்.
    நன்றி.


    பதிலளிநீக்கு
  38. 'மணியான' நினைவுகள். 'நேரம்' போவது தெரியாமல் படிக்க முடிந்தது!

    பதிலளிநீக்கு
  39. கடிகாரத்தின் மீது நமக்கு சிறு வயதில் எழும் ஈர்ப்பு அலாதியானது, அதுவும் அக்காலத்தில் அதன் தரமும், மதிப்பும் சற்று அதிகம். உங்கள் பதிவின் மூலம் எனது நினைவுகள் கூட மீண்டெழுந்தன, அருமையான கடிகாரங்கள் கூட அவை. நன்றிகள் இவைக் குறித்து பகிர்ந்தமைக்கு... !

    பதிலளிநீக்கு
  40. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் பின்னூட்டம் அருமை .
    நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வாங்க இக்பால் செல்வன், வாழ்கவளமுடன்.
    உங்கள் முதல் வரவுக்கு முதலில் நன்றி.

    கடிகாரத்தின் மீது நமக்கு சிறு வயதில் எழும் ஈர்ப்பு அலாதியானது, அதுவும் அக்காலத்தில் அதன் தரமும், மதிப்பும் சற்று அதிகம். உங்கள் பதிவின் மூலம் எனது நினைவுகள் கூட மீண்டெழுந்தன,//

    நீங்கள் சொல்வது உண்மை.
    சிறுவயதில் நமக்கு முதல் கடிகாரத்தின் மேல் ஏற்படும் ஈர்ப்பு அதிகம் தான்.
    உங்கள் பழைய நினைவுகள் நினைவுக்கு வந்தைமைக்கு மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. பெண் பிள்ளைகளுக்கு அப்பா எப்பவுமே தி பெஸ்ட் ..அப்பா வாங்கித்தந்த வாட்ச் பொக்கிஷம் தான் . .அந்த பொருட்காட்சி திடல் ஓவியம் மிக மிக அழகு ..அந்த ஜையன்ட் வீல் கூட ரொம்ப தத்ரூபமா இருக்கு ..நான் ஆசியாவின்லின்க் பார்த்து அன்றே வந்தேன் அன்று படக் படக் என்று ப்ளாக் பிளாஷ் செய்திட்டிருன்தது ..இன்று தான் மீண்டும் பின்னூட்டமிட முடிந்தது .அருமையான நினைவுகளை பகிர்ந்தத்ற்றக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  43. வாங்க ஏஞ்சலின், வாழ்க வாழமுடன்.
    பெண் பிள்ளைகளுக்கு எப்போதுமே அப்பாவை பிடிக்கும் தன் அப்பா சிறந்த , உயர்ந்த, மனிதர் என்ற எண்ணமும் இருக்கும். உண்மை.
    நீங்கள் சொன்னது போல் சிலரும் சொல்லி இருக்கிறார்கள் படக் படக் என்று ஓடிக் கொண்டே இருக்கிறது படிக்க முடியவில்லை என்று.

    ஓவியத்தையும் , பதிவையை ரசித்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு