ஆசியா அவர்கள் தொடர் பதிவுக்கு அழைப்பு விட்டு இருந்தார்கள்.
-நீங்கள் வெகு காலமாய் பாதுகாத்து வைத்து இருக்கும் பொருளைப்பற்றி -என்று கூறியிருந்தார்கள். அந்த பொருளின் படமும் போடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள். என் அப்பாவைப் பற்றிக்கூற எனக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய ஆசியாவிற்கு நன்றி.
நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கி கொடுத்த பாரின்
வாட்சைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
\
அப்பா வாங்கி தந்த வாட்ச்
அப்பாவிற்கு நாங்கள் எல்லோரும் செல்ல குழந்தைகள்தான். இருந்தாலும் என் தங்கைகள் சிறுமியாக இருந்ததால் என் அக்காவிற்கும், எனக்கும் வாட்ச் வாங்கி தந்தார்கள். என் அக்கா பியூசி படித்துக் கொண்டு இருந்தார்கள். அப்பா வாங்கி வந்த இரண்டு வாட்சில் ஒன்று வட்டம், மற்றொன்று சதுரம். அப்போது அந்த காலக்கட்டத்தில் - , சதுரம் தான் பேஷன். என் அக்கா சதுர வாட்சை எடுத்துக் கொண்டார்கள். எனக்கு வட்ட வாட்ச் வந்தது ஆனால் எனக்கு வட்டம் பிடிக்கவில்லை. அப்பாவிடம் எனக்கும் சதுரமே வேண்டும் என்று கேட்டேன். இப்போது பாரின் சாமான்கள் எளிதாக கிடைப்பது போல் அப்போது கிடைக்காது. அப்பாவின் நண்பர்- பாரினுக்கு போனவரிடம் சொல்லி வைத்து வாங்கி கொடுத்தார்கள். அதை மாற்ற முடியாது என்பதால் அதற்கு அப்பா. என் மனம் நோகாமல் அந்த வாட்சை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுமாறு எனக்கு நிறைய ஐஸ் வைத்து என்னிடம் கொடுத்து விட்டார்கள். அது என்னவென்றால் உன் கைக்கு இந்த வட்டம் தான் நன்றாக இருக்கும், அக்கா கைக்கு அந்த சதுரம் தான் நன்றாக இருக்கும், உன் வாட்ச் எல்லா காலங்களிலும் போட்டுக் கொள்ளலாம், அக்கா வாட்ச் இந்த சதுர பேஷன் இருக்கும் போது மட்டும் தான் போட முடியும். அப்புறம் வேறு மாடல் பேஷனாகி விட்டால் இது பழைய பேஷனாகி விடும். வட்டம் அன்றும், இன்றும், என்றும் நீ போட்டுக் கொள்ளலாம் என்று எல்லாம் சொல்லி என்னை சமாதானப்படுத்திவிட்டார்கள்.
அக்காவின் வாட்ச் கறுப்பு ஸ்ட்ராப், என் வாட்ச் தங்ககலர் ஸ்ட்ராப்.
அம்மாவின் சிங்கப்பூர் வாட்ச் சில்வர் கலரில் வெள்ளைகல் சுற்றி பதித்த , மூடி
போட்டது. அந்த வாட்சை பெரும்பாலும் நான் தான் கட்டி செல்வேன்.
பள்ளியில் தோழிகள் மணி கேட்டால் பெருமையாக அதை திறந்து மணி சொல்வேன். எல்லோரும் அதை திறந்து மூட ஆசைப்பட்டு மணி கேட்பார்கள்.
ஒரு பொருட்காட்சிக்குச் சென்றிருந்த போது அந்த வாட்ச், கூட்டத்தில் எங்கோ விழுந்துவிட்டது. பொருட்காட்சி முழுவதும் நானும் என் அண்ணனும் தேடினோம்.
என் திருமணத்தின் போது நல்ல தங்க கலர் ஸ்ட்ராப் வாங்கி அதில் மாட்டி வைத்துக் கொண்டேன். குடித்தன்ம் வைக்க திருவெண்காட்டிற்கு காரில் அழைத்துப் போகும்போது திருவெண்காட்டை சேர்ந்த நண்பர் வீட்டு சிறு பெண் மடியில் படுத்துக் கொண்டு வந்தாள்/ அவள் தலை மேல் என் கையை வைத்துக் கொண்டு இருந்தேன் நான். அவள் திடீரென்று எழுந்ததில் அவள் தலைமுடியில் வாட்ச் ஸ்ட்ராப் மாட்டிக் கொண்டு அறுந்து போனது. எனக்கு அழுகை ஒருபக்கம் . அதை வெளிக்காட்டக் கூடாது அல்லவா புகுந்த வீட்டார் முன் ? அடக்கிக் கொண்டேன். என் கணவர் அப்புறம் கலர் கலராய் ஸ்ட்ராப் வாங்கித் தந்தார்கள், மாற்றி மாற்றி போட்டுக் கொள்ளலாம் என்று. சென்னை பர்மா பஜாரில் அரக்கு கலர், கறுப்பு கலர் ஸ்ட்ராப்புகள் வாங்கித் தந்து தங்ககலர் ஸ்ராப்பை விட இதுதான் உனக்கு நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லி கொடுத்தார்கள். என்ன செய்வது? வாங்கி கொண்டேன்.
இரண்டு முறை அப்பா வாங்கித் தந்த வாட்ச் ரிப்பேர் செய்யப்பட்டது. ஒருமுறை வாட்ச் கடைக்காரரின் மகன், இது மிகவும் பழைய மாடலாய் இருக்கே . இதை ரிப்பேர் செய்ய முடியாது என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய அப்பா, கொடுங்கள் . என்ன வாட்ச்? டிட்டோனியா ?நல்ல வாட்ச் அல்லவா ! என்று சொல்லி, நான் ரிப்பேர் செய்து தருகிறேன் என்று ரிப்பேர் செய்து தந்தார், பழைய ஆட்களுக்கு தான் பழமையின் மதிப்பு தெரியும். இப்போது குழந்தைகள் இத்தனை வருடம் உழைத்து விட்டதா? ரிப்பேர் எல்லாம் செய்ய வேண்டாம் வேறு வாங்கி கொள்ளுங்கள் என்கிறார்கள்.
எனக்கு, மருமகன் அவர்கள் சிங்கப்பூர் சென்ற போது தங்க கலரில் கறுப்புடயல் வாட்ச் வாங்கி வந்தார் -ஓவல்ஷேப்பில். அது ஒரு முறை டெல்லியில் ஒருகடையில் சாமான் வாங்கப்போனபோது பர்ஸோடு அந்த வாட்சையும் அந்த கடைமேசையில் மறந்து வைத்து விட்டேன். (வாட்ச் செல் மாற்ற வேண்டும் என்பதால் பர்ஸில் வைத்து இருந்தேன். ) டெல்லியிலிருந்து சென்னை கிளம்ப ரயிலுக்கு போகும் போதுதான் நினைவு வந்தது. மகளிடம் சொன்னேன். அது எங்கே இருக்க போகிறது பார்க்கிறேன் என்றாள். நாங்கள் ஊருக்கு வந்து விட்டோம்.
மகளிடமிருந்து போன்.-- வாட்ச் கிடைத்து விட்டது என்று.
டெல்லியில் வெயிலினால் எனக்கு அலர்ஜி வந்த போது ஒரு ஹோமியோபதி டாக்டரிடம் போயிருந்தோம். அந்த டாக்டர் கொடுத்த மருந்து சீட்டு எனது பர்சில் இருந்திருக்கிறது. அந்த மருந்து சீட்டைப் பார்த்த கடைக்காரர் அதில் குறித்திருந்த டாக்டருக்கு போன் செய்து கேட்டு இருக்கிறார். டாக்டர் தெரியாது என சொல்லிவிட்டார். ,இப்படி கடைக்காரர் உடைவர்களிடம் பொருளை சேர்த்துவிட முயற்சிப்பது பெரிய விஷயம் இல்லையா! எனது மகள் கடைக்குச் சென்று பர்சையும் வாட்சையும வாங்கி வந்து விட்டாள். கடைக்காரருக்கு நன்றி சொல்லி.
நல்ல மனம்வாழ்க என்று வாழ்த்த தோன்றுகிறது அல்லவா!
அவள் வாங்கி வந்த அந்த வாட்ச் மறுபடியும் என்ன ஆச்சு என்பதை சொல்கிறேன் . என்னாச்சு! அடுத்த பாராவுக்கு வாருங்கள்.
மகன், மருமகள், உறவினர்களுடன் கங்கைகொண்ட சோழபுரம் போவதற்கு
கிளம்பினோம் . என் மாமியார் நான் வீட்டில் இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் போய் வாருங்கள் என்று சொல்லி விட்டார்கள். போகும் வரை வேலை சரியாக இருந்தது . வளையல், வாட்ச் எல்லாம் காரில் போகும் போது மாட்டிக் கொள்ளலாம் என்று எடுத்து சென்றேன். காரில் வளையலை மாட்டிக்கொண்டு வாட்சை கட்ட ஆரம்பிக்கும் போது போன் வந்தது வீட்டிலிருந்து அத்தை காலில் வெந்நீரை விட்டுக் கொண்டார்கள் என .
அப்புறம் பாதியிலேயே திரும்பி டாகடர் இருக்கிறாரா என்று பார்க்க காரை விட்டு இறங்கி போய் பார்த்து வந்தேன். அவர் இருந்தார், வீட்டிற்கு வந்து அத்தையை டாகடரிடம் காட்டி மருந்து போட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டோம். பின் , அத்தை எங்களிடம் நீங்கள் கோவிலுக்கு என்று கிளம்பிவிட்டு போகாமல் இருக்க வேண்டாம் போய் வாருங்கள். என்று சொன்னார்கள்
மறுபடியும் காரில் ஏறும்போதுதான் நினைவுக்கு வந்தது -வாட்ச். காரைவிட்டு இறங்கி டாக்டர் இருக்கிறாரா என்று பார்க்கும் போது மடியில் இருந்த வாட்ச் விழுந்து விட்டிருக்கிறது . நான் கவனிக்கவில்லை. மறுபடியும் டாகடர் வீட்டு வாசலில் போய் பார்த்தால் கிடைக்கவில்லை. அங்கு போக்குவரத்து அதிகம் உள்ள இடம். யாரோ அதிர்ஷ்டசாலிக்கு அன்று இறைவன் அதைப் பரிசளித்து விட்டார்.
’வாட்சை பத்திரமாக வைக்கத் தெரியவில்லை அவளுக்கு எதற்கு வாட்ச். என்று என் அப்பாவிடம் அம்மா கேட்டது நினைவுக்கு வந்தது.
எனது மகன் எங்கள் 60 கல்யாணத்திற்கு இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி சில்வர் கலர் வாட்ச் பரிசு அளித்தான். அது இருக்கிறது ,இப்போது.
அமெரிக்கா போன போது மறுபடியும் கறுப்பு டயல் உள்ள தங்க கலர் வாட்ச் வாங்கி தந்தார் கணவர். உனக்கு தங்கத்தில் வாட்ச் வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தார்கள் . பார்ப்போம் எப்போது வரும் என்று.
எத்தனை இருந்தாலும் என் அப்பா முதல் முதலில் வாங்கி கொடுத்த வாட்ச் போல் ஆகுமா! அந்த வாட்ச என்றும் அப்பாவின் நினைவை சொல்லிக் கொண்டு என்னுடன் இருக்கும்..
யாருக்கு விருப்பமோ அவர்கள் இந்த தொடரில் பங்கு கொள்ளுங்கள்.
பாதுகாத்து வரும் பொருளைப்பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.
========================================================================
வாழ்க வளமுடன்!



