சனி, 5 ஜனவரி, 2013

கன்னியாகுமரி




எங்கள் மகனுடன் குலதெய்வம் கோவிலுக்குப்  போய் விட்டு, பின் நாங்கள்
 கன்னியாகுமரிக்கு  டாக்ஸியில். பயணம் புறப்பட்டோம். என் மகன் பாபநாசம் நீர்வீழ்ச்சி, மணிமுத்தாறு அணை எல்லாம் போக ஆசைப்பட்டான். ஆனால் டாக்ஸி டிரைவர் அங்கு தண்ணீர் இல்லை , டேம் திறக்கவில்லை என்றார்.  அதனால் நேரே கன்னியாகுமரிக்குப் போனோம்.

 நான் சிறு வயதில் நாகர் கோவிலில் இருந்த போது   உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போது கன்னியாகுமரிக்கு அடிக்கடி போவோம்.  அப்போது காந்தி மியூஸியம் மட்டும் தான் உண்டு.  விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை கட்டிய பிறகு போகவே இல்லை.  இப்போது தான் நேரம் வாய்த்தது.






அங்கு போய் சேர்ந்த போது  விவேகானந்தர் பாறைக்கு மட்டும் தான் போட் போகும், திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்குப் போகாது, சீக்கிரம் போங்கள், 4 மணிக்கு மேல் டிக்கட் கிடையாது என்றார்கள்.   நாங்கள் மாலை  சூரியன் மறைவதையும் பார்க்க நினைத்தோம்.  அதற்கு ஏற்ற மாதிரி போனோம்.

மாலை மூன்று மணி சமயம் டிக்கட் வாங்கி வரிசையில் நின்று பின் போட்டில் போய்  ஏறினோம்.  லைஃப் ஜாக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அழுக்கு அடைந்து பார்க்கவே அசிங்கமாய் இருந்தது  அதை கையில் எடுத்துக் கொண்டு போய் அமர்ந்தோம். ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவ, மாணவிகள் மலையாளம் கலந்த தமிழில் பேசி அந்த சூழலை கலகலப்பாக்கினார்கள்.  ஐயப்பபக்தர்களும்  நிறைய இருந்தார்கள்.  படகு போகும் போது தாழப் பறந்த கிருஷ்ணபருந்துகள் மிக அழகாய்  இருந்தன.  அலைகளின் ஆர்ப்பரிப்புக்கு மேல் மக்களின் பேச்சு சத்தம் நிறைந்து இருந்தது..


 1892ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ பாத பாறை என்னும்  இந்த இடத்திற்கு நீந்தி வந்து  தியானம் செய்தாராம். அதனால் இந்த  இடத்தில் விவேகானந்தர் மண்டபம் கட்டப்பட்டது.



விவேகானந்தர்   மண்டபத்துக்குள் போனவுடன்  மக்கள் அமைதி காத்தனர்.  ஏனென்றால் அங்கு அமைதி காக்க சொல்லிப் போட்டு இருந்ததுதான். ஒரு பக்கத்தில் சாராதாதேவி படமும், இன்னொரு  பக்கத்தில்  ராமகிருஷ்ணர் படமும் சிறு மண்டபம் போல் தோற்றமளிக்கும் இடத்தில் இருந்தது.

மண்டபத்தில்  நடு நாயகமாய் கம்பீரமாய்க் கைகளைக் கட்டிக் கொண்டு நெடிய அழகிய தோற்றத்தில் ஒளி பொருந்திய கண்களால் நம்மைப் பார்த்துக் கொண்டு நின்றார் விவேகானந்தர்.

 மண்டபத்தின் கீழ்ப்பகுதியில் மக்கள் தியானம் செய்ய ஒரு இடம் இருக்கிறது. உட்கார்ந்து தியானம் செய்யலாம்.

தியான மண்டபத்திற்கு  நேரே  கன்னியாகுமரி அம்மன் பாதம் அழகாய் அங்கு இருக்கிறது. பாதங்களில் நகங்களுக்கு சிவப்பு வண்ணம் தீட்டி இருப்பது மேலும் அழகூட்டுகிறது.  கண்ணாடித்  தடுப்பு வழியாக அம்மன் பாதத்தை தரிசிக்க வேண்டும்.

எல்லா மொழிகளிலும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிடும் புத்தகங்கள் கிடைக்கிறது.  நான் ” வாழக் கற்றுக்கொள்! !” என்ற புத்தகமும் ”அருள்நெறிக் கதைகள்” என்ற புத்தகமும் வாங்கினேன். நினைவுப் பரிசுகள் விற்பனை செய்யும் கடையும் அங்கு இருக்கிறது.

விவேகானந்தர் பாறையின் ஒருபுறத்தில் மழை நீர் சேகரிப்பு செய்வதற்கு ஒரு குளம்போல் கட்டி  இருந்தார்கள் .அது நிறைய கொள்ளளவு  கொண்டது.
அந்த நீர் சேகரிப்பில் காற்று அடிக்கும் போது அலை அடித்தது  நீர்ப் பரப்பில் அந்த அலைகளைப் பார்கக மிக அழகாய் இருந்தது. அந்த இடத்தில் த்ண்ணீர் தேவையை மழை நீர் சேகரிப்பு பூர்த்தி செய்கிறது.

மழை நீர் சேகரிக்கும் பகுதி

விவேகானந்தர் பாறையில் இருந்து கன்னியாகுமரி நகரின் தோற்றம்

குமரி அம்மனை நாங்கள் தரிசிக்க முடியவில்லை.  விடுமுறை ஆனதால் கூட்டம் நிறைய இருந்தது.  நீண்ட வரிசை இருந்தது.  இரவுக்குள் திருநெல்வேலி செல்லவேண்டியிருந்ததால் காத்திருக்க நேரமில்லை.

 சூரியன் மறைவு பார்க்க போன இடத்திலும் ஏமாற்றம். அங்கு மேகம் மறைத்துக் கொண்டே இருந்தது. பேரன் மட்டும் மணலில் எந்த எதிர்ப்பார்ப்பு இன்றி மகிழ்ச்சியாக விளையாடினான். நமக்கு தான் அம்மன் தரிசனம் இல்லை, சூரியன் கடலில் மறைவதை பார்க்க வில்லை என்ற  ஏமாற்றமும்  வருத்தமும் ஏற்பட்டது.. அந்த நேரம் பேரனைப் பார்த்து போது நாமும் குழந்தையாக இருந்தால் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இப்படி மணலில் விளையாடி  மகிழ்ச்சியாக இருப்போம் அல்லவா என்ற   எண்ணம்  எழுந்தது  உண்மை.

எங்கள் கார் கடல்   மணலில் மாட்டிக் கொண்டது . பக்கத்தில் இருந்த மீனவர்கள் வந்து உதவி செய்தபின் எங்கள் பயணம்  மீண்டும் திருநெல்வேலியை நோக்கி தொடர்ந்தது. ( கார்  மணலில் இருந்து ரோட்டுக்கு வரும் வரை பேரனுடன் மண்ணில் விளையாடினேன்.)

அடுத்த முறை கன்னியாகுமரி  அம்மனை எப்படியும் தரிசிப்போம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டோம்



----------------

35 கருத்துகள்:

  1. இப்போது அதிக அலை காரணமாக படகு பயணத்தை நிறுத்தி இருந்தார்கள் .மீண்டும் தொடங்கியதும் தைரியமாய் போய் படமெடுத்து பதிவு தந்தமைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. மிக அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள் குமரி சென்று வந்த அனுபவத்தை.

    உண்மைதான். குழந்தைகளைப் போல் எதிர்பார்ப்புகள் இல்லாதிருக்கப் பழகிக் கொண்டால் ஏமாற்றங்கள் இல்லை.

    அடுத்தமுறை செல்லும்போது அம்மன் தரிசனம் கிடைத்திட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு

  3. நெடுந்தூரத்தில் இருந்து ஒரிடம் பார்க்கப் போகும்போது நினைத்தவற்றைக்காண முடியாவிட்டால் பெருத்த ஏமாற்றமே. தினம் தினம் செல்லக் கூடிய இடங்கள் அல்லவே. எதிர்பாரா நிகழ்வுகளை சந்திக்கும் வகையில் பயண திட்டம் எப்போதும் அமைவதில்லை. பலமுறை சென்று வந்த இடம். பதிவைப் படித்தவுடன் இன்னும் எப்போது என்று மனம் ஏங்குகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு பயணம் என்றாலே தனி உற்சாகம்தான்!

    பதிலளிநீக்கு
  5. ( கார் மணலில் இருந்து ரோட்டுக்கு வரும் வரை பேரனுடன் மண்ணில் விளையாடினேன்.)

    அழகான காட்சி ...!

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கைப் பயணம் போலவே எல்லாப் பயணங்களும் மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் என்பதைக் காணமுடிகிறது. உங்களின் நம்பிக்கையும் பிரார்த்தனையும் வீண் போகாது. பேரன் மகிழ்வு தருகிறான். அதை இறுகப் பிடித்துக் கொண்டால் தெய்வம் தானே வரும்.அருமையான பதிவு கோமதி. வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க கவியாழி கண்ணாதாசன், வாழ்க வளமுடன். உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி நன்றி.

    நாங்கள் போய் வந்தபின் மறுபடியும் நிறுத்தி வைத்து விட்டார்கள் படகு போக்குவரத்தை.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்ததால் குமரி அம்மனை தரிசிக்க காத்து இருக்க முடியவில்லை.

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மை. மகன் விடுமுறையில் வந்து இருக்கும் போது அவர்களுக்கு ஏற்ற மாதிரி பயணத்திட்டம் வகுத்தோம்.
    குறுகிய நாட்களில், கோவில் உறவினர் வீடுகள் என்று போக வேண்டி இருந்த்தால் கிடைத்தவரை மகிழ வேண்டிய நிலை.

    நீங்களும் மறுபடியும் ஒரு முறை போய் வாருங்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க கே.பி. ஜனா சார், வாழ்கவளமுடன்.முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி பயணம் எப்போதும் மகிழ்ச்சி தருவது தான்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
    நான பேரனுடன் குழந்தையாக விளையாடியதை மனக்கண்ணில் கண்டீர்களா! மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. //விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை கட்டிய பிறகு போகவே இல்லை. இப்போது தான் நேரம் வாய்த்தது.//

    நானும் இங்கெல்லாம் சமீபத்தில் சென்று வந்தேன்.

    >>>>>>>

    பதிலளிநீக்கு
  13. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமாக பயணக்கட்டுரையைக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  14. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மைதான்.
    குழந்தையும் தெய்வமும் ஒன்று அல்லவா!
    அவனை மகிழ்ச்சி படுத்தியதே மகிழ்ச்சி தான்.அவனுடன் அவன் இஷ்டப்படி மணலில் விளையாடியது அவனுக்கும் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  15. வாங்க வை.கோபால்கிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    நீங்களும் சமீபத்தில் சென்று வந்தீர்களா மகிழ்ச்சி.

    உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. கோமதியக்கா, நல்ல பகிர்வு.இது மாதிரி பகிர்வுகளும் பயணமும் மனதிற்கு புத்துண்ர்ச்சியை தருவது இயற்கை.கன்னியாகுமரி பலமுறை போய் வந்தும் இன்னும் திருவள்ளுவர் சிலையை சென்று பார்க்க முடியலை.பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. அந்த 'மாற்றி யோசி'ப் படம் அழகாக இருந்தது.

    எல்லோரும் கரையிலிருந்து விவேகானந்தர் பாறையை நோக்கித் தான் காமிராவைத் திருப்ப நினைப்பார்கள். நீங்கள் பாறையிலிருந்து கரை என்று மாற்றி படம் எடுத்தது மாறுபட்ட பார்வையில் அட்டகாசமாக இருந்தது.


    பதிலளிநீக்கு
  18. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.

    எத்தனை முறை போனாலும் கன்னியாகுமரி அலுக்காது. புத்துணர்ச்சி கிடைப்பது உண்மை.
    நாங்கள் போனபோது திருவள்ளுவர் சிலை கீழே ஏதோ வெலை நடந்துக் கொண்டு இருந்தது அதனால் அங்கு போக அனுமதி இல்லை.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன். உங்கள் ரசனைக்கு நன்றி. இன்னும் கூட ஜூம் செய்து எடுத்து இருக்கலாம். என் சின்ன காமிராவில் இவ்வளவு தான் எடுக்க முடியும், என் மகன் அட்டகாசமாய் எடுத்து இருந்தான் அவன் காமிராவில் அதை ஒரு முறை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  20. கன்னியாகுமரி பயண அனுபவம் நன்றாக இருந்தது.
    பல வருடங்களுக்கு முன் நாங்கள் சென்று வந்திருக்கிறோம். உங்கள் பயண அனுபவம் படித்தபின் மீண்டும் போக வேண்டும் என்ற ஆவல் வந்தது.
    பேரனுடன் மணல் விளையாட்டு ரொம்பப் பிடித்திருந்தது!
    அடுத்தமுறை அம்மன் தரிசனம் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
    கன்னியாகுமரி பார்க்க ஆவல் வந்து விட்டதா உங்களுக்கும் மகிழ்ச்சி.
    அடுத்தமுறை அம்மன் தரிசனத்திற்கு எனறு நேரம் ஒதுக்கி போகவேண்டும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. எதிர்பார்ப்பற்ற குழந்தையும்..
    குழந்தையாகத்தெரிந்த பாட்டியும்..
    நல்ல இருக்கே..:)

    பதிலளிநீக்கு
  23. வா முத்துலெட்சுமி, வாழ்க வளமுடன்.
    எதிர்பர்ப்பற்ற குழந்தையும், குழந்தையாகத் தெரிந்த பாட்டியும் நல்லா இருக்கா!
    பாட்டி பேரன், பேத்திகளுடன் இருக்கும் போது குழந்தையாகி விடுவார்கள்.

    நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
  24. படங்களும் பதிவும் மிக அருமையாக இருக்கு மேடம்.

    //நாமும் குழந்தையாக இருந்தால் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இப்படி மணலில் விளையாடி மகிழ்ச்சியாக இருப்போம் அல்லவா என்ற எண்ணம் எழுந்தது உண்மை.//

    உண்மைதான் மேடம்.

    பதிலளிநீக்கு
  25. கன்னியாகுமரி அழகான பார்க்கவேண்டிய தளம் படங்களும் அழகு.கடல் அலையில் விளையாட எத்தனை வயதானாலும் மனம் குழந்தையாகிவிடுகிறது உண்மை தானே.

    பதிலளிநீக்கு
  26. எங்களுக்கும் அழகாக கன்னியாகுமரியை சுற்றிப்பார்த்த அனுபவத்தை கொடுத்துவிட்டீர்கள்.
    ஒருமுறை போய் வந்திருக்கிறேன். உங்கள் பதிவை படித்தவுடன் மிண்டும் ஒருமுறை போகவேண்டும் என்ற ஆவல் வருகிறது.

    பகிர்வுக்கு நன்றி,

    ராஜி.

    பதிலளிநீக்கு
  27. பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க RAMVI, வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல் வரவுக்கும்,
    கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க சசிக்கலா, வாழ்கவளமுடன்.
    கடல் அலை, கடல் மணல் இரண்டிலும் விளையாடும் போது மனம் குழந்தை ஆகும், அதுவும் விளையாட பேரக் குழந்தையும் இருந்தால் கேட்கவா வேண்டும்!
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன். கன்னியாகுமரி பார்க்கும் ஆவல் வந்து விட்டதா! மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்.
    வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கன்னியாகுமரி சென்று வந்தேன். எல்லா காட்சிகளையும் தத்ரூபமாக சித்தரித்திருக்கிறீர்கள். மழைநீர் சேகரிப்பும் கிருஷ்ணபருந்து மேலே வருவதும் அழுக்கான லைஃப் ஜாக்கெட்டுகளும் என்று எழுத்தாளர்களுக்கேயுரிய பார்வை. நான் சென்றிருந்தபோதும் வள்ளுவர் சிலைக்கு படகுப்பயணத்தை ஏதோ காரணம் சொல்லி நிறுத்தியிருந்தார்கள்.
    தங்கள் அனுபவத்தை சுவைபட சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  33. வாங்க அமுதவன் சார், வாழ்க வளமுடன். நாங்களும் கன்னியாகுமரிக்கு இரண்டு மாதம் முன்பு தான் போனோம் .
    உங்கள் முதல் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. அழகான பகிர்வு.

    கன்னியாகுமரி சென்றுவந்த பழைய நினைவுகள் மீண்டன. ஒருதடவை வந்திருக்கின்றேன். அப்பொழுது ஒருநாள் தங்கியிருந்து அனைத்தும் பார்க்கக் கிடைத்தது. மகிழ்கின்றேன்.

    மீண்டும் பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  35. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
    கன்னயாகுமரி மலரும் நினைவுகள் வந்ததா ! மகிழ்ச்சி.
    எங்கே மாதேவியை காணவில்லை என்று தேடினேன் வந்து விட்டீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு