வெள்ளி, 29 அக்டோபர், 2010

விரதங்களும் உடல் நலமும்

நம் முன்னோர்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள்.உடல் நலமாக இருந்தால் தான் நாம் இந்த பூமியில் மகிழ்ச்சியாய் வாழமுடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டார்கள்.

உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க ஆகாரம். ரத்தஓட்டத்தையும்,ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க மிதமான உழைப்பு.

ஒரு பெண் கருவுற்ற நாள் முதல் நல்ல சத்தான ஆகாரம் உண்டு,மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள வேண்டும்.அப்போது தான் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.நாளைய சமுதாயம் மன வளம்,உடல் நலம் மிக்கதாய் இருக்கும்.


“நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னை சீரணிக்கும்”
--வேதாத்திரி மகரிஷி

எனவே சுத்தமானதும்,எளிமையானதும்,சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம்  நம்  உடலுக்கு தேவை.  காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை  இவற்றையும்  மிதமாக  உட்கொள்ள வேண்டும்.


சமசீரான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஊட்டசத்துக்கள் அளவிலும், தரத்திலும், சமவிகிதத்தில் இருக்குமாறு  உண்பதே சரிவிகித உணவு. சரிவிகித  உணவு  சாப்பிட்டால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

திருவள்ளுவரும் இதை அழகாய் சொல்கிறார்.

”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”

உணவு அளவுக்கு மேல் கூடினாலும் குறைந்தாலும் மருத்துவ நூலோர் வகுத்த வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்று நோயை வரசெய்யும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி யுணின்.”

முன்பு உண்ட உணவு செரித்த்தை அறிந்து பின்பு உண்டால் உடலுக்கு மருந்து என்று வேறு ஒன்றும் வேண்டியது இல்லை.

“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.”

உடலுக்கு தேவையான உணவை அளவோடு உண்டால்,உடம்பை நீண்ட காலம் வாழ வைக்க முடியும்.


இதற்கு தான் உபவாசம்,விரதம்,நோன்பு,போன்ற பழக்கங்கள் ஏற்பட்டன.அதிலும்கூட தங்கள்
இஷ்ட தெய்வத்திற்கு தகுந்தாற் போல் விரதம் கடைப்பிடித்தார்கள்.

விரதம்,நோன்பு ஆகியவற்றை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.

நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம்,ஆகியவை நமது உடல்நலத்தைப் பெரிய அளவில் தீர்மானிக்கின்றன. தட்பவெப்பத்திற்கேற்ப உணவுப் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற அந்தந்த உணவு வகையை எடுத்துக் கொள்வது நல்லது. நமது பாரம்பரிய உணவு வகைகளை உண்ணவேண்டும். நார்ச்சத்துக்கு பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளை உண்ணலாம். இரும்புச் சத்துக்கு வெல்லம் நல்லது.நொறுக்கு தீனிக்கு மாறாகப்பழங்கள் ! குழந்தைகளுக்கு நாமே தயாரித்த சத்துமா கஞ்சி கொடுக்கலாம். பூச்சி கொல்லிகள் தெளிக்காத பச்சைக் காய்கறிகள் நல்லவை. கீரைகள்,கேழ்வரகு இதில் எல்லாம் சுண்ணாம்புச்சத்து உள்ளது. சிறு வயது முதல் இளநீர்,மோர் பருகப் பழகுவது நல்லது.அவரவர்களுக்கு என்ன ஒவ்வாதிருக்கிறதோ, அதை விட்டு விட்டு, எது உடம்புக்கு ஒத்துக் கொள்கிறதோ அதை உண்டால் உடல் நலமாக இருக்கும்.

காலையில் இஞ்சி,நடுப்பகல் சுக்கு,மாலையில் கடுக்காய் இப்படி எப்போது எதைச் சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் வகுத்துத் தந்த முறையில் உணவை உண்டால் நாளும் நலமாக இருக்கலாம்.

உடல் உழைப்பாளிக்கும்,மூளை உழைப்பாளிக்கும், உண்ண வேண்டிய உணவு மாறுபடும்.உடல் உழைப்பு இல்லாதவர்கள் அதிக உணவு உண்டால் ஆற்றல் இழப்பு தான் ஏற்படும்.உண்ணும் உணவு எளிதில் ஜீரணித்து கழிவுகள் நன்கு வெளியேறினால்தான் உடல் பலம் பெறும்.சத்து குறைந்தாலும் நோய்; சத்து மிகுந்தாலும் நோய்.பசிக்கும் மட்டும் உணவல்ல, உடலின் செயல் பாட்டுக்கும் உணவு அவ்சியம்.அவசர உணவு,அதிக உணவு,அகால உணவு,நல்லதல்ல.

விரத நாட்களில் உணவைத் தவிர்ப்பதும்,பண்டிகை நாட்களில் விருந்தை ஏற்பதும் வழக்கம்.

நாள்தோறும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கும் வயிறாகிய இயந்திரத்திற்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு கொடுக்கலாம்.

“விரதமகாத்மியம்” என்னும் நூல் 159 விரதங்கள் இருப்பதாய்ச் சொல்கிறது. நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் கொஞ்சம் தான்.

உபவாசம் என்பது ஒர் நோய் தடுப்பு முறையே:

சிலர் விரத காலங்களில் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு இருப்பார்கள்,இது மலக் குடலை சுத்தம் செய்யுமாம்.
சிலர் இளநீர், ஆரஞ்சுஜீஸ், எலுமிச்சை ஜீஸ், பழச்சாறுகள், குடிப்பார்கள்.

சிலர் நீர்மோர்,பானகம், மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.
சிலர் பழம்,பால் எடுத்துக் கொள்வார்கள்.பழ ஆகாரம் என்பது தான் பலகாரம் ஆனது என்று சொல்கிறார்கள். விரத  காலங்களில் பலகாரத்திற்கு பதில் பழ ஆகாரம் நல்லது.

உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்:

கழிவுகள் சீராக வெளியேறும்;  எடை குறையும்:  உடல் சமநிலை பெறும்; ஜீரண உறுப்புகள்ஓய்வு பெறும்;  நற்சுவாசம் பெறலாம்; ரத்தம் சுத்தமாகும்; நரம்புகள் ஓய்வு பெறும்; நோய் தரும் திசுக்கள் அழியும்;கழிவுகள் நன்கு நீங்கும்; மனம் சமநிலை அடையும்; நற்சிந்தனை உண்டாகும்.

சில விரதங்களும் பலனும்:

1.திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் பரிபூரண அன்பைப் பெறலாம்.
2.செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
3.வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
4.வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
6.ஞாயிற்றுக் கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயிலிருந்து விடுதலை பெறலாம்,நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக் கிழமையன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

மார்கழி ஏகாதசி விரதம் :-

கிருஷ்ணபக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிப்பது இந்நாள் தேவர்களுக்கு இடுக்கண் புரிந்த முராசுரனை விஷ்ணு கொன்று தேவரை களிபித்த நாள். இதில் உதயம் ஏகாதசி , மத்யம்  த்வாதசி , அந்தியம் திரயோதசி
உத்தமம்.  இந்நாளில் ஒரு நாள் விரதமிருக்கின்   ஆயிரம்  ஏகாதசி பலம் உண்டு  என்று சொல்லப்படுகிறது.


என் அம்மாவும் விரதங்களும்:

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமை (சோமவாரவிரதம்)வீட்டில் என் அப்பாவைத் தவிர எல்லோரையும் கடைபிடிக்க வைத்தார்கள். காலையும், மதியமும், உணவு அருந்தாமல், மாலை மாவிளக்கு செய்து பூஜை முடிந்தபின் தான் உணவு.

பள்ளி சென்று வந்தபின் குளித்து பூஜையில் உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் பஜனை.அம்மா எப்போது பாடல் முடிப்பார்கள் உணவு தருவார்கள் என்று இருக்கும்.பூஜை முடிந்தபின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு மாவிளக்குப் பிரசாதம் கொடுத்து வந்தபின் தான் எங்களுக்கு உணவு. அப்பாதான் ’காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் சீக்கீரம் சாப்பிடுங்கள்’ என்பார்கள். 


இந்த விரதத்தை சிறு  வயதில் கடை பிடிக்க கஷ்டமாய் உணர்ந்தாலும், இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.

பிறகு வெள்ளிக் கிழமை பூஜை. சர்க்கரைப் பொங்கல் செய்து தருவார்கள் அதை விளக்கு முன் வைத்து விட்டு அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் சொல்லி,’விளக்கு போற்றி’ சொல்லி விட்டு பூஜை முடிந்தபின் தான் காலை உணவு. அந்தப் பழக்கம்தான் மனவைராக்கியம்,எல்லாம் இறைவன் அருளால் நல்லபடியாக நடக்கும் என்ற மனப் பக்குவத்தை இப்போது கொடுத்து இருக்கிறது.இன்றும் சோமவார விரதம் கடைப்பிடித்து வருகிறேன்.

சஷ்டி விரதம் மாதத்தில் இரண்டு வரும். அந்த இரண்டு நாளும் நானும் என் கணவரும் விரதம் இருக்கிறோம் தீபாவளியை ஒட்டி வரும் சஷ்டி விரதநாட்களில் ஒரு வேளை மட்டும் உணவு.6 ஆம் நாள் சூரசம்ஹாரம் முடிந்தபின் உணவு.நானும் கணவரும் சேர்ந்து கடைப்பிடிப்பதால் கஷ்டம் இல்லை.இந்த விரதம் என் கணவர் வீட்டில் அப்பா,அம்மா,அண்ணன்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் திருசெந்தூரில் போய் ஆறு நாளும் இருந்து விரதம் கடைப் பிடிப்பார்கள்.இப்போது வயது ஆகிவிட்டதால் அத்தை,மாமா கடைப்பிடிப்பது இல்லை.

என் கணவருக்கும்,என் மகனுக்கும் காய்ச்சல் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது அப்போது அம்மாவிடம் கேட்ட போது ’ஞாயிறு விரதம் இரு , நோய் நொடி இல்லாமல் இருக்கும்’ என்றார்கள் 19 வருடமாய் நானும் என் கணவரும் இருந்து வருகிறோம்,குழந்தைகளும்’ நாங்களும் இருக்கிறோம்’ என்று இருந்தார்கள் மகள் கல்யாணம் ஆகும் வரை,மகன் வேலை கிடைக்கும் வரை இருந்தார்கள்.

மகனுக்கு விதிமுறைகள் விரதத்தில் தளர்த்தப்படும்.பொரி விற்கும் பாட்டி பொரிஉருண்டை,தேன் மிட்டாய் கொண்டு வருவார்கள், அது மட்டும் வாங்கிச் சாப்பிடுகிறேன் என்பான் சரி என்று ஒத்துக் கொள்வேன்.காலை மட்டும் டிபன் கிடையாது. மதியம் உணவு உண்டு.இரவு உணவு சப்பாத்தி.காலை உணவை தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்வதால் சத்துமாவு கஞ்சி கொடுத்து விடுவேன் குழந்தைகளுக்கு.

விரதங்களைக் கடைப் பிடிக்க முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம்.

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி,தான தர்மங்கள் செய்து,மனதாலும் வாக்கினாலும் செயலாலும் ஒழுக்கமான காரியங்களைச் செய்து,பிறர் துன்பங்களைத் தன்னுடையது போல் நினைத்து உதவிகள் செய்பவன் தான் ’சத்புருஷ்விரதம்’ செய்த பலனை அடைவதாய் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஒழுக்கசீலனாக,தர்மசாஸ்திரப்படி சத்புருஷவிரதம் அனுஷ்டித்து இறைஉணர்வோடு வாழ்பவர்கள், நோயினால் அவதிப்படுவதில்லை அப்படியே நோய் வந்தாலும் அதைத் தாங்கும் சக்தியையும் எதிர்த்துப் போராடும் உள்ளத்தையும் இறைவன் அவர்களுக்கு அளிக்கிறார்.என்பது ஆயுர்வேதத்தின் ஆசான் சரகரின் வாக்கு.

வேதங்கள் நமக்கு உணர்த்துவது எல்லா உயிர்களும் துன்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதே .இதைத்தான் தாயுமானவர்’ எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றியேன் பாராபரமே ’என்கிறார்.

எல்லோருடைய இன்பத்துக்கும் ஆசைப்பட்டால் நாமும் இன்பமாக இருப்போம். இதைத்தான் ஆயுர்வேதமும் கூறுகிறது.

சமஸ்கிருத்தில் “சர்வ ஜன சுகினோ பவந்து” என்பார்கள்.

வாழ்க நலமுடன்!
வாழ்க வளமுடன்!

வெள்ளி, 1 அக்டோபர், 2010

முதியோர் நாள்

இன்று காலண்டர் கிழிக்கும் போது ’இன்று முதியோர் நாள்’ என்று போட்டு இருந்தது.
முதுமைக்கு அப்படி ஒரு மரியாதையா!என்ற வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.சரி அது என்ன விபரம் என்று தேடிய போது thats tamil பத்திரிக்கையில் //அக்டோபர் முதலாம் தேதிசர்வதேச முதியோர் தினமாகும்.மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும் கெளரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம்தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்ப்டுத்தியுள்ளது.//

//1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி முதன் முதலாக 1991ம் ஆண்டு சர்வதேச முதியோர்தினம் உலகெங்கும் கொண்டாப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகினறது.உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.//

நம் நாட்டில் பெரியவர்களுக்கு முதியோர் நாள் என்று தனியாக கொண்டாட வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லா நாளும் முதியோர்களை பணியும் நாளாகவே உள்ளது.
எங்காவது வெளியூர் போனால்,பரீட்சை என்றால்,புதிதாக உடை அணிந்தால்எல்லாம் ’தாத்தா பாட்டியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்’என்று நாம் சொல்வதை குழந்தைகள் கேட்கிறார்கள்.கேட்டு நடந்தார்கள்.முன் ஏர் செல்லும் பாதையில் பின் ஏர் செல்லும் என்பார்கள்.நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தால் நம் குழந்தைகளும் கொடுப்பார்கள்.இது தானாய் இயல்பாய் திணிக்கப் படாமல் நடக்கும்.

இந்த காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமாய் இருக்க முடியவில்லை.ஆனால் பண்டிகை,விழாக்காலங்களில் வீட்டுப் பெரியவர்களிடம் அவர்கள் ஆலோசனை கேட்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்கிறோம்.

எனக்கு வயதாகும் போதுதான் என் பெற்றோர்களின் தவிப்பும் ஏக்கமும் புரிகிறது.அம்மா,
’நாலு நாளுக்கு ஒரு முறை கடிதம் எழுது’ என்பார்கள்.(தொலைபேசி,அலைபேசி எல்லாம் வரும் முன்)பிறகு போன் வந்தபின் அவர்களுக்கு வயதாகி காது கொஞ்சம் கேடகாமல் போனபோது போனில் அவர்கள் பேசுவார்கள்,என் நலம் விசாரித்து.’ மற்றதை உன் தம்பியிடம் சொல் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்பார்கள். கம்யூட்டர் அப்போது இல்லை இருந்திருந்தால் எங்களைப் பார்த்து மகிழ்ந்து இருப்பார்கள்.அம்மாவுக்குத் தனியாகக் கடிதம் எழுதியிருக்கலாம் என்றும் தம்பியிடம் போனிலும் அம்மாவிடம் கடிதத்திலும் உரையாடி இருக்கலாம் என்றும் இப்போது நினைக்கிறேன். விஜய் டீ.வீயில்’ காப்பி வித் அனுவில்’ நிகழ்ச்சி முடிவில் ’யாரிடம் மன்னிப்புக் கேட்க நினைக்கிறீர்கள்?’என்பார்கள். நான் என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன்-கடிதம் எழுதாமல் இருந்த்தற்கு.’யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்றால்-என் மாமியாருக்கு.முதுமையை அழகாய் ரசித்து வாழ்வதற்குக் கற்றுக் கொடுத்ததற்கு.

வார வாரம் என் வயதான மாமியாரிடம் தொலைபேசியில் பேசும் போது ,அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ளும்.மாமனார் பேசமாட்டார்கள் .அத்தையிடம் விசாரித்துக் கொள்வார்கள்.

நம் குழந்தைகளிடம் என்ன கேட்கிறோம்?அடிக்கடி பேசுங்கள் என்றுதான் . அது தான் எங்களைப் போன்ற முதியோரகளுக்கு ஊட்ட சத்து மாத்திரைகள்.மகனிடம் பேசும் போது பேரன் உடனே ஓடி வந்து மழலையில் ’தாத்தா’ என்று கூப்பிட்டு அவனது விளையாட்டு சாமான் மற்றும் அவன் பொருட்களை நம்மிடம் காட்டி என்னவோ பேசுகிறான்.கம்யூட்டரில் நுழைந்து நம்மைத் தொட முட்டி மோதும் போது நமக்கு நம்மை தேடுகிறானே என்ற மகிழ்ச்சியும்,அவனுடன் இருக்க முடியாத சூழ் நிலையை நினைத்து வருத்தமும் ஏற்படுகிறது.
மகள் வயிற்று பேரன் 18 நாள் விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போகலாமா என்று மகளிடம் கேட்டதை கேட்கும் போது சந்தோஷமும் ஏற்படுகிறது.

இந்த காலகட்டத்தில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் எதிர்பார்த்து வீணாய்க் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் நோய்க்கு இடம் கொடுத்து விடுவோம்.

குழந்தைகள் எங்கு இருந்தாலும் நலமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையைப் பெற்றோர்களும், பெற்றோர்கள் அங்கு நலமாய் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையைக் குழந்தைகளும் செய்வது தான் இந்த உலகத்தை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

முதியோர்கள் தங்களுக்கு என்று பயனுள்ள பொழுது போக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டிலே முடங்கிக் கிடக்காமல், கோவில்,நண்பர்கள்,உறவினர்,என்று பார்ப்பதை வைத்துக் கொண்டு எப்போதும் தங்களைச் சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டால் தேவை இல்லாத கவலைகள் அண்டாது.என் கணவர் ஒய்வு பெற்ற பின்னும் ஒரு கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்.அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நாளை காந்தியடிகளின் பிறந்தநாள். அவர் தன் வாழ்க்கையை நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்தார்.காந்தியடிகள் நம் முன்னே அற்புதமான சுத்தம்,சுகாதாரம் நிறைந்த,மன நிறைவுள்ள வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து நமக்கு உதாரணமாக விட்டுச் சென்றார்.இயற்கையோடு இயைந்த எளிமையும்,அழகும் பொதிந்த வாழ்க்கை அவருடையது.இன்றைய உலகிற்கு கலங்கரை விளக்கம் காந்தியடிகளின் வாழ்க்கை.


முதியோர் தினத்தில் நமக்கு முன்னே வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும்,வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும் நாம் பாடமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

முதுமைக் காலத்தை நடத்திச்செல்ல உடல் நலம் நன்றாக இருந்தால் தான் முடியும். அதற்கு,உடற்பயிற்சி,தியானம்,உணவுக் கட்டுப்பாடு,நல்ல உறக்கம், நல்ல பழக்க வழக்கம் நல்ல ஒய்வு அவசியம்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.-குறள்

தம்மினும் அறிவில் மேம்பட்ட பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு அவர் வழியில் நடத்தல் ஒருவர்க்குரிய வலிமைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த வலிமையாகும்.

முதியோர்கள் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே

நானும் என் கணவரும் கடந்த வாரம் உறவினர் திருமணத்திற்காக மதுரை போய் இருந்தோம்.
திருமண வீட்டில் மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்ய அழகான குங்குமச் சிமிழில் அட்சதை அரிசியை போட்டு தந்தார்கள். இருந்த இடத்திலிருந்து அட்சதையை போடும் போது அது மற்றவர்கள் மேல் தான் விழும். மணமக்களுக்கு பரிசு பொருள் கொடுக்க போகும் போது அட்சதையைப் போட்டு வாழ்த்திவரலாம்.இன்னொரு வீட்டுக் கல்யாணத்தில் எல்லோரும்’அப்படியே இருங்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கு மணமக்கள் வருவார்கள் அப்போது அட்சதைப் போட்டு ஆசிர்வாதம் செய்யுங்கள்’ என்றார்கள். இது நல்ல யோசனையாக இருந்தது. வயதானவர்கள் படி ஏறி கூட்டத்தில் இடித்துக் கொண்டு போகாமல் இருந்த இடத்தில் வாழ்த்த முடியும்.

திருமண வீட்டில் வெகு நாள் பார்க்காத உறவுகள், நண்பர்களைப் பார்த்து அன்பை பரிமாறி கொண்டபின் ’ஒரு வாரம் நீ இருந்து வா நான் அடுத்த ஞாயிறு வந்து அழைத்துப் போகிறேன்’ என்று என் தங்கை வீட்டில் விட்டு விட்டுப் ஊருக்கு போய்விட்டார்கள். எல்லோரும் 'மதுரைக்கு நல்ல மழை தான்' என்றார்கள். பின்ன, எப்போதும் விசேஷத்திற்கு வந்துவிட்டு ஒடினால், இப்படித்தான் சொல்வார்கள்.

அவர்கள் சொன்ன மாதிரி நல்ல மழை தான் பெய்தது. தல்லா குளப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஆகி மண்டல பூஜை நடந்து கொண்டு இருக்கிறது என்றார்கள். திருவிழா வேறு நடக்கிறது இன்று கருட வாகனம் என்றார்கள், அதற்குப் போனோம்.
மாலை 4.30க்கு போனதால் கூட்டம் இல்லை. கருட வாகனத்தில் அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள் பார்க்க முடியாத படி சுற்றிலும் திரைச்சீலையால் மறைத்து விட்டார்கள்.

உள்ளே பெருமாளை பார்த்து விட்டு வரும் போது என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. தங்கைகளும் நானும் அம்மாவுடன் மார்கழி மாதம் காலை 4.30க்கு பசுவும் கன்றும் வந்து பால் கறந்து பல்லாண்டு பாடி கதவைத் திறக்கும் போது சென்று வணங்கிய நினைவு வந்தது. சுடச் சுட வெண்பொங்கல் பெரிய நெல்லிக்காய் அளவுதான் தருவார்கள். வாங்கி உண்டு விட்டு அடுத்த கோவிலுக்கு அம்மாவின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்துக் கொண்டு போவதைப்பற்றி பேசிக் கொண்டே ஆட்டோவில் ஏறினோம். அப்போது நரிமேட்டிலிருந்து நாங்கள் அம்மா,பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று பேசிக்கொண்டே நடந்தே போவோம். இப்போது ஆட்டோ,டாக்ஸி,கார் என்று போகிறோம், ஆனால் அப்போது உள்ள மகிழ்ச்சி இல்லை.

அடுத்து நாங்கள் சென்ற கோயில் ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில் ஆகும்.
அந்த கோவிலில் இப்போது ஏகப்பட்ட மாற்றங்கள் .
கோவில் பக்கத்தில் உள்ள பழைய போலீஸ் ஓட்டுக் குடியிருப்புகள் அடுக்கு மாடி குடியிருப்புகளாய் மாறிவருகிறது. ஒரு சில பழைய வீடுகள் இன்னும் இருக்கின்றன. அதை அப்புறம் கட்டுவார்கள் என நினைக்கிறேன்.பக்கத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில்
மார்கழி மாதம் போகும் போது காலை போலீஸ் மார்ச்பாஸ்ட் நடக்கும்,வாத்தியங்கள்(பியூகிள்) வாசித்துக் கொண்டு இருப்பார்கள். போலீஸ் பாரேட் நடப்பதைப், பார்க்க அழகாய் இருக்கும்.
மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை வெகு சிறப்பாய் நடந்ததாம் என் தங்கை சொன்னாள்.
தினம் அன்னதானம் நடக்கிறது .

அழகர் பூ பல்லாக்குப் பார்க்க மாரியம்மன் கோவில்தான் வருவோம். அழகான பூப் பல்லாக்கு கோவில் பக்கம் வரும் போது வாடிவிடும். தல்லாகுள பெருமாள் கோவில் அருகில் எதிர் சேவையின் போது வாணவேடிக்கை மிகவும் நன்றாக இருக்கும்.வித,விதமாய் வெகு நேரம் வாணவேடிக்கை நடக்கும்.

ஒவ்வொரு முறை போகும் போதும் நேரம் இருந்தால் மதுரை மீனாட்சியைப் பார்க்க போவோம்.கும்பாபிஷேகம் ஆனபின் போக முடியவில்லை.ஒரு முறை போனபோது முதல் ராஜகோபுர வாசலிருந்து கூட்டம். எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று போனால் பொற்றாமரைக் குளம் வரைதான் போக முடிந்தது. அதன் பின் தடுப்பு மூங்கில்கழியை தாண்டி
காவலுக்கு நின்ற பெண் போலீஸ் அதிகாரியிடம் சொல்லிவிட்டு ‘சுவாமியைப் பார்க்க போகிறோம் மீனாட்சியை பார்க்க முடியாது ஒரே கூட்டமாய் இருக்கிறது’ என்றோம் அந்த பெண் போலீஸ் ’மீனாட்சியைப் பார்த்தாலும் சுவாமியைப் பார்த்தாலும் ஒன்று தான் போங்க,போங்க’ என்றார்கள்.

இந்தமுறை எனக்கு இரண்டு முறை மீனாட்சிஅம்மனைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்து.
புதன்கிழமை,சனிக்கிழமை என்று ஒரே வாரத்தில் இரண்டு முறை பார்த்து விட்டேன்.

என் தங்கையின் பெண் ’செவ்வாய்,வெள்ளி,கூட்டமாய் இருக்கும் அப்போது போககூடாது பெரியம்மா! புதன்கிழமை போகலாம்.’ என்றாள். எனக்கும் அன்று பிறந்தநாள். அம்மாவிடம் ஆசி பெற்று வரலாம் என்று போனோம். இலவசமாய் செருப்பு பாதுகாக்க அழகான கட்டிடங்கள் உள்ளது. நான்கு வீதிகளிலும் சுற்றிவந்து கோபுரங்களைத் தரிசிக்க பேட்டரி கார் வசதி உள்ளது.வேறு வாகனக்களுக்கு அங்கு அனுமதி இல்லை.

அம்மன் சன்னதிக்கு முதலில் போனோம். ஊஞ்சல் பக்கம் அம்மனின் சேலைகள் ஏலம் விட்டுக் கொண்டு இருந்தார்கள். சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம் ஏலத்தில் பத்து பத்து ரூபாயாகத்தான் ஏற்ற வேண்டுமாம். அம்மனின் பட்டுப்புடவைகள் என்னவாயிற்று? எல்லாம் பாலியஸ்டர் பட்டு புடவைகள். ஒரு புடவைக்கும் அடுத்தபுடவைக்கும் ஏலம் விட நேரம் ஆனது. கூடி இருப்பவர்கள் சீக்கிரம் ஏலம் விட சொன்னார்கள். மடி கணினியை வைத்துக் கொண்டு புடவையின் எண், விலை பார்த்து ஏலம் விட்டுக் கொண்டு இருந்தார்கள். நேரம் ஆகிவிட்டதால் ஒரு அம்மா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருந்தார்கள் போலும் ஏலம் விடுபவர் மைக்கில் கன்னத்தில் இருந்து கையை எடுங்கள் அல்லது இடத்தைவிட்டு நகருங்கள் என்று அதட்டிக்கொண்டு இருந்தார்.

பிள்ளையாருக்குப் பக்கத்திலிருந்து வரிசை ஆரம்பித்து விடுகிறது. கூட்டம் அவ்வளவாய் இல்லை. விறு,விறு என்று நகர்ந்து விட்டது கூட்டம்,15ரூபாய் கட்டணம் ஒரு பக்கம்,இலவச வரிசை ஒரு பக்கம் என்று போனதால் நெரிசல் இல்லாமல் பார்க்க முடிகிறது. உள்ளே போகும் அர்ச்சகர் கொஞ்சம் விலகி நின்றால் இன்னும் சீக்கிரம் பார்க்கலாம். அம்மன் சன்னதியை விட்டு வெளியே வந்தால் என் தங்கை பெண், 'பெரியம்மா சுழலும் லிங்கம் பார்த்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டாள். ’பார்த்தது இல்லையே எங்கு இருக்கு’ என்று கேட்டேன் ’மேலே அப்படியே விதானத்தை பாருங்கள்’ என்றாள். அண்ணாந்து பார்த்தால் லிங்கம் நம்மை நோக்கி உள்ளது .நாம் எந்தப்பக்கம் நின்று பார்த்தாலும் ஆவுடையாரின் அபிஷேகத்தண்ணீர் விழும் பகுதி நம் பக்கம் நேராய்த் தோன்றுவதைப்போல் அற்புதமாய் வரைந்த அந்த ஒவியர் பாராட்டப்பட வேண்டியவரே.

அடுத்து சோமசுந்தரரைப் பார்த்தோம். நல்ல அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள், சரவிளக்கு வரிசையாக ஜெகசோதியாக பிரகாசமாய் இருந்தது. அம்மன் சன்னதியிலும் இப்படி பிரகாசமாய் விளக்கு இருந்தால் அம்மனை இன்னும் திருப்தியாய்ப் பார்த்து மக்கள் விரைவாய்க் கண்டு களித்துச் செல்வார்கள்.

புது மண்டபத்தில் எங்கள் வீட்டுக் கொலுவிற்காகச் சில அழகு பொருட்கள் வாங்கி வீடு வந்தோம், புரட்டாசி முதல் சனிக்கிழமை என் கணவர் ஊரிலிருந்து வந்தவுடன்,
’ நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனேனே கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்தேன்’ என்றவுடன் அவர்களும் இன்று போகலாம் கூடல் நகர் பெருமாள் கோவிலில் தான் இன்று கூட்டம் இருக்கும்’ என்று சொன்னார்கள். கிளம்பினால் நல்ல மழை! ஆட்டோவில் போனாலும் தண்ணீர்! வண்டிக்குள்ளும்! மதுரையில் மழைபெய்தால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
கீழவாசல் எல்லாம் தண்ணீர்! வண்டிகள் தண்ணீருக்குள் மாட்டிக்கொண்டு பரிதாபமாய் நின்று கொண்டு இருந்தன. அம்மன் சன்னதிவாசலிலும் தண்ணீர் நின்றது. மழை நீர் வடிகால் வசதி சரியில்லை.

எனக்கு, கணவருக்கு சீக்கிரம் சுழலும் லிங்கத்தை காட்ட ஆசை. 15 ரூபாய் டிக்கட் எடுத்து அம்மனை தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து சுழலும் லிங்கத்தைக் காட்டினேன் அவர்களும் ஆச்சிரியப்பட்டு ஓவியரைப் பாரட்டினார்கள். பின் சுவாமி சன்னதிக்கு வந்தால் என் கணவர் மேலே பார்! என்று எனக்கு சுழலும் லிங்கம் காட்டினார்கள்.சுவாமி சன்னதி வாயிலில் மேல் விதானத்தில் இரண்டு ஒரங்களிலும் சுழலும் லிங்கம் வரைந்து இருக்கிறார்கள். நாங்கள் அண்ணாந்து பார்ப்பதைப் பார்த்து வெளியூர்களில் வந்த அன்பர்களும் என்ன? என்ன ?என்று கேட்டு எல்லோரும் பார்த்து பரவசப் பட்டார்கள்.

போனமுறை பார்க்க முடியவில்லை. வர வர மீனாட்சி அம்மன் கோவிலும் திருப்பதி பெருமாள்கோயில் மாதிரி ஆகிவிட்டது என்று புலம்பிக் கொண்டு இருந்தது சொக்கன், சொக்கி காதில் விழுந்து இந்த முறை நல்ல காட்சி தந்தார்கள் சொக்கனும் சொக்கியும்.

மதுரையில் தண்ணீர் கஷ்டம் உள்ளது. குடி தண்ணீருக்கு சில வீடுகளில் மோட்டார் போட்டு பிடிப்பதால் சில வீடுகளுக்கு தண்ணீர் வருவது இல்லை.புகார் செய்தால் எடுப்பது போல் எடுத்து விட்டு மறுபடியும் போட்டு கொள்கிறார்கள் என்ன செய்வது! அவர்களாய் திருந்தினால் தான் உண்டு.

இந்த மழை காலத்தில் மழை நீரை நல்ல முறையில் சேமித்து தண்ணீர் பஞ்சத்தை விரட்ட வேண்டும்.வைகையில் நீர் நிறைய வேண்டும்.மக்கள் கஷ்டம் தீர வேண்டும் என்று பிட்டுக்கு மண் சுமந்தவனிடம் வேண்டிவந்துள்ளேன்.

கோவில்பட்டியில் சித்தப்பாவீட்டிற்கு தங்கை,தம்பியோடு போய்வந்தேன்.சித்தப்பா வீட்டீல் துக்கம் நிகழ்ந்து இருந்தாலும்,அதை மறந்து அண்ணன் குழந்தைகளை அன்போடு உபசரித்தார்கள். சித்தப்பாவின் உருவில் என் அப்பாவை கண்டேன்.

நான் ஒரு வாரமும் அன்பு மழையில் நனைந்து வந்தேன். தம்பி, தங்கைகள்வீடு, மாமாபெண் வீடு, தங்கை மகள் வீடு, என் மகனுக்கு பெண் எடுத்த வீடு என்று போய் புது தெம்பைப் பெற்று வந்துள்ளேன். இப்போது
’பெரியம்மா!’,’அத்தை!’ என்று குழந்தைகளின் அன்புக் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

குரு வணக்கம்.

குரு வணக்கம்
--------------
தந்தைதா யாவானும் சார்கதியிங் காவானும்
அந்தமிலா இன்பநமக் காவானும்-எந்தமுயிர்
தானாகு வானும் சரணாகு வானும் அருட்
கோனாகு வானும் குரு.

அண்ணலே,நீ அருட்குருவாக வந்து என் உள்ளமாகிய கல்லைப் பிசைந்து தெய்வக் கனியாக மாற்றி அமைக்க வல்லவன். என் உடல்,பொருள்,ஆவியெல்லாம் உனக்கே உரியனவாகும்.

எருவை, செடியானது தன் மயமாக்குவது போன்று குரு சிஷ்யனைத் தன் மயம் ஆக்குகிறார். அவர் கருணையே வடிவெடுத்தவர்.
கைம்மாறு கருதாத பேரியல்பை அவரிடம் காணலாம்.மனிதனைத் தெயவமாக மாற்றியமைப்பவரைத் தெய்வமாகக் கருதாது வேறு எங்ஙனம் கருதுவது?
-சுவாமி சித்பவானந்தர்.

ஒவ்வொருவர் வாழ்விலும் குருவினுடைய பார்வை, குருவினுடைய நினைவு குருவினுடைய சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது.
இதை தான்” குரு தானாக வருவார்” என்று அருள் தந்தை கூறுகிறார்--

//குரு என்றால் யார்? குரு என்றால் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இங்கே அவன் ஒரு நிமிடமாகிலும் சிந்தித்திருக்க வேண்டும்;தேடி இருக்க வேண்டும். நான் பிறந்து வந்துள்ளேனே,என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே,தெரிந்து கொள்ள வேண்டும், என்று இவனாக நினைத்திருந்தாலும்,சரி, அல்லது இவனுடைய பெற்றோர்கள் நினைத்து இருந்தாலும் சரி,அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவைத் தேடிக்கொடுத்து விடும். வெளியிலே இருந்து வந்த ஒரு உருவத்தை குரு என்று சொல்வதை விட,ஒரு மனிதனுடைய கர்மா,அவனுடைய action, அவனுடைய சிந்தனை,அவனுடைய தெளிவு,அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தை கொடுத்து விடுகிறது;அதுவே குருவையும் கொண்டு வந்து கொடுத்து விடும் காலத்தாலே. அந்த குருவினுடைய பார்வை,சொல் இவைகள் எல்லாம் சாதகனுடைய உள்ளுணர்வைத் தூண்டி விடுகிறது.//

அறிவே தான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞ்ர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வாம்.
-அருள்தந்தை.


புருவத்திடை உந்தன் பூவிரால் தொட்டு
எந்தன் உயிருணர்த்தி
புன்செயல்கள் பதிவழிந்து,பூர்வநிலை அறிவறிய
துரியம் தந்து
கருவறிந்து அகத்தவத்தால் களங்கங்கள் போகப்
பெருங்களத் தமர்த்தி
கருத்துடனே விளைவறிந்து ஐந்து புலனையாளுங்
கலை போதித்து
உருவத்தில் உயிரை,உயிர்க்குள் உள்ளமெய்ப்
பொருளை அறிவாய்க்காட்டி
ஒழுக்கத்தால் உலகினையே நட்புக் கொள்ளும்
அன்புநெறி விளங்கவைத்து
திருத்தமொடு காயகற்பம்,சீர்கர்மயோகம்,
உடற்பயிற்சி தந்து
சிந்தனையை,உடல்நலத்தைச் சீரமைத்து உய்வித்த
குருவே வாழ்க.


எவரொருவர் குருவை மதிக்கிறார்களோ அவர்கள் தரத்தில் உயர்ந்து பிறவிப் பயனை அடைவார்கள்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நீ பாதி நான் பாதி

மனைவி என்பவள் சரி சமம் ஆனவள் என்பதைக் காட்டவே அர்த்த நாரீஸ்வர் தோற்றத்தை இறைவன் காட்டினார் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்.

ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் பெற்ற தாய்,உடன்பிறந்த சகோதரி, கட்டிய மனைவி,பெற்றெடுத்த மகள் என்று பெண்ணைச் சார்ந்தே வாழ்கிறான்.ஒருவனுக்கு உயிரையும்,உடலையும் தந்து உலவ விடுபவள் தாய்.அந்தத் தாய் தன்னை மாதிரி தன் மகனைப் பாதுகாத்துப் பேண இன்னொரு தாய் போன்ற பெண்ணைத் தன் மகளுடன் இணைக்கிறாள். ’மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பது போல் வரும் பெண் வாழ்க்கையைச் சொர்க்கமாகவும் மாற்றலாம்,நரகமாகவும் மாற்றலாம்.

அதனால் தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் என்றார். நல்ல பெண் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் நலம். அல்லாவிட்டால் பிணி.

ஒரு ஆணின் வாழ்க்கையில் பெண் வாழ்க்கைத் துணையாக வந்த பிறகே வாழ்க்கைப் பயணம் அர்த்தமாகிறது.

குடும்ப வாழ்க்கையிலே,இன்ப,துன்பங்களில் பங்கு கொண்டு வாழ்வை நல்லபடியாக நடத்த கணவன் மனைவி உறவு சீராக இருக்க வேண்டும்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.கருத்து வேறுபாடு பிணக்கு இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பேசி அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.இருவரும் நல்ல நட்போடும் மாறாத அன்போடும் இருந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும்.

தரமில்லாத மனிதனை சரிபடுத்தி,நிலையில்லாத மனிதனை நெறிப்படுத்தி கணவனை நல்லவனாக,வல்லவனாக ,எல்லாம் உள்ளவனாக மாற்ற நல்ல மனைவியால் தான் முடியும்.

இயற்கை தனக்களித்த பொறுமை,தியாகம்,இரக்கம்,தாய்மை போன்ற குணங்களால் கணவனுக்கு எல்லாமே தானாகி அவனுக்குச் சிறப்பையும் மகிழ்ச்சியையும் நல்ல மனைவியால் தான் அளிக்க முடியும்.இல்லறமாகிய நல்லறத்தைச் சிறப்பிக்க முடியும்.


இப்படி எல்லாமாகிய மனைவியைக் கணவன் போற்ற வேண்டும். அதற்கு ஒரு நாள் தான்
‘ மனைவி வேட்பு நாள்’என்கிறார் அருள் தந்தை வேதாத்திரி.

சுமார் 20 ஆண்டு காலமாக வளர்த்து ஆளாக்கிய பிறந்தகத்தை சுற்றத்தாரை,பிறந்த ஊரைப் பிரிந்து, தன்னை நம்பி இல்லறம் ஆற்ற வந்த மனைவியை என்றென்றும் போற்ற வேண்டும். அவர்களின் பெருமையை உணர வேண்டுமென்று அருட்தந்தை அவர்கள் தன் மனைவி அன்னை லோகாம்மாள் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 30ம் தேதியை மனைவி வேட்பு விழாவாக-Wife's Appreciation Day- அறிவித்தார்கள்.

//உலகில் இதுவரை ’தந்தைநாள்’ ,தாயார் நாள், தனித்தனியே கொண்டாடுகிறார்கள்.
சுமங்கலி பூஜை என்ற அளவிலே கணவன் வேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள்.
மனைவி வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா?
இது என் மனதை உறுத்தி கொண்டே இருந்தது.ஆனாலும் ஒருவர் தலையிட்டு செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்து தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு,இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ஆவது நாளை மனைவி வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளில் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள்.நீங்களும் உங்கள் வாழ்க்கைத துணையை நன்றியோடு வாழ்த்தி இக் கவியைச் சொல்லி மகிழுங்கள்:-

பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்
பற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டு என்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

-அருள் தந்தை.//

இந்த மனைவி வேட்பு நாளில் இக் கவிதையைக் கணவன் கூறி,மலர் போன்ற மென்மையான மனத்தையுடைய மனைவிக்கு மலரினை அளிக்கிறான்.தியாக உள்ளம் படைத்த மனைவி உள்ளப் பூரிப்போடு உவகையோடும் உள்ளக் கனியாகத திகழ்கின்ற கணவனுக்கு ‘கனியைக்’ கொடுக்கிறாள்.இப்படி இந்த ஒரு நாள் மட்டும் அல்லாமல் என்றென்றும் மனைவியை மதித்து போறற வேண்டும் என்பது தான் அருட் தந்தை அவர்களின் மனைவி நல வேட்பு விழாவின் நோக்கமாகும்.


இன்ப துன்பத்தில் சரிபாதியை ஏற்றுக்கொள்ளும் மனைவியைப் போற்றிப் பாதுகாத்து வந்தால் வீடு நலம் பெறும்.

பெண்களுடைய முன்னேற்றம் தான் குழந்தைகள் முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் குடும்ப முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் நாட்டு முன்னேற்றம்.

எந்த வீட்டில்,நாட்டில் பெண் மதிக்கப் படுகிறாளோ அந்த நாடும்,வீடும் முன்னேறும் எங்கெல்லாம் பெண் இழிவு படுத்தப் படுகிறாளோ அங்கு முன்னேற்றம் தடை படும்.

உயிரில் கலந்து,உணர்வில் உறைந்து,நினைவில் நிறைந்து,இதயம்புகுந்த உறவே மனைவி.

அமைதியான சுற்றுச் சூழலில் அமைந்த இல்லம்,இறையருளால் அமைந்த பெற்றோர்கள்,வாழ்நாள் முழுவதும் ஈருடல் ஓர் உயிராக இணைந்த நல்வாழ்க்கைத் துணை,
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மக்கள் செல்வம்,இனிய நட்புடன் கூடிய உறுதியான,உண்மையான் குடும்ப உறுப்பினர்கள், நிறைவான வாழ்க்கை வசதிகள்,சுற்றத்தோடு கூடிய இனிய உறவினர்கள்,சமுதாயத்தில் நன்மதிப்பு இவற்றுடன்
இல்லறத்தில் கூடி மகிழ்ந்து,இறைநிலையோடு இணைந்து வாழும் குடும்பமே இனிய குடும்பமாகும்.

//எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன
எவ்வுயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவழியாய்
வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் -அற்புதமே
வாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனை பேர்?//

என்பது அருட்தந்தையின் கேள்வி.

கணவன் மனைவி சிறப்பை உணர்ந்து ஒருவருக்கு ஒருவர் மதித்து வாழ வேண்டும்.

வீட்டின் விரிவே வியனுலகம் ஆதலின்
வீட்டறத்தில் வெற்றி காண்-என்பர்.

கணவன் மனைவி உறவை உயிராக மதித்து அன்பை வளர்த்து அறவழியே வாழ்வோம்.

புதன், 25 ஆகஸ்ட், 2010

தட்டிக் கொடுக்கும் தேவதை











மாதம் இருமுறை வரும் பெண்கள் பத்திரிக்கை "தேவதையில்" என் வலைபக்கம் வந்துள்ளது.அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.(ஆகஸ்ட் 16-31)

என் பதிவுகளை படித்து அதை அழகாக தொகுத்து வழங்கிய நவநீதன் அவர்களுக்கு நன்றி.

//வலைப் பதிவு எனப்படும் திறந்தவெளியில் தங்கள் எண்ணங்களை கொட்டி வைக்கும் பெண்களை தட்டிக் கொடுக்கும் பகுதி இது//

வலையில் எழுதும் என் போன்றவர்களுக்கு இது உற்சாகத்தை தரும்.மேலும் எழுத தூண்டு கோலாய் அமையும்.

ஒரு காலத்தில் குறிப்பிட்ட இரண்டு மாத ,வார இதழகள் வாங்கி படிப்போம்,அதன் பிறகு எல்லா மாத, வார இதழ்களை படிக்கும் ஆவலில் வீட்டுக்கு தினம் படித்து விட்டு திருப்பி கொடுப்பவர்களிடம் வாங்கி படித்தோம். இப்போது டீ.வி வந்த பின் பத்திரிக்கை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தாலும் புதிதாக பத்திரிக்கை வந்து கொண்டு தான் இருக்கு.அதில் ’வளம் பெற வரம் தரும் தேவதை’ என்று இந்த பத்திரிக்கை வந்துள்ளது.அதில் ’வலையோடு விளையாடு’ எனற பகுதியில் தான் நமக்காக் இரண்டு பக்கங்களை அளித்து நம்மை மகிழ்ச்சி படுத்துகிறார்கள்.

பலதரப்பட்ட விருப்புகளை கொண்டவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்கிறது தேவதை.

குழந்தைகள்,இளம் வயதினர்,நடுவயதினர்,வயதானவர்கள் என்று எல்லோர்க்கும் நிறைவு அளிக்கிறது.

தேவதைக்கு ஆண்டு ஒன்றாம். அதை வாழ்த்துவோம்,மேலும் வளர.
நான் இந்த பதிவுலத்திற்கு வந்தும் 1 ஆண்டு ஆகிறது. உங்கள் எல்லோர் ஆதரவும்
எப்போதும் வேண்டும். என்னை உற்சாகப் படுத்தி எழுத தூண்டும் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

தேவதை இதழில் நான் வந்து இருப்பதை எனக்கு முதலில் சொன்ன வல்லி அக்காவிற்கு நன்றி.

தேவதையில் வந்த என் பக்கத்தை தெளிவாக்கி என் வலைபக்கத்தில் போடதந்த ராமலக்ஷ்மிக்கு நன்றி.

வெள்ளி, 30 ஜூலை, 2010

எண்ணம் முழுதும் கண்ணன்

நியூஜெர்சியிலிருந்து வந்து ஒரு மாதம் ஓடிவிட்டது.அங்கு இருந்த 75 நாட்களும் சிட்டாய் பறந்தன.சின்ன கண்ணனுடன் விளையாட்டு,இடங்களை சுற்றிப் பார்த்தல் என்று நாட்கள் இறக்கைக்கட்டிப் பறந்தன்.

சின்னகண்ணனை பிரிந்து வந்து இருந்தால் மிகவும் வருத்தப் பட்டு இருப்போம். அவன் எங்களுடன் வந்ததால் மகிழ்ச்சி இரண்டு பங்கு ஆனது.

இங்கு கோவையில் சின்னகண்ணனின் பிறந்தநாள்,பழனியில் முடி இறக்குதல்,காது குத்து எல்லாம் நல்லபடியாக இறைவன் அருளால் நன்றாக நடந்தது.

உறவினர் வருகை, நண்பர்கள் வருகை,அக்கம் பக்கத்தில் பேரனை பார்க்க வருதல் ,கோவில் பிரத்தனைகள் என்று நாட்கள் நிமிஷமாய் கரைந்து விட்டது. மகனின் விடுமுறை முடிந்து விட்டது.மகனை பிரியமுடியாமல் பிரிந்து ஊருக்கு சென்றான்.

மருமகளும்,பேரனும் எங்களுடன் சிறிது நாட்கள் இருந்து, இப்போது அம்மாபாட்டியிடம் தன் குறும்புகளை காட்ட போயிருக்கிறான்.அவனுடைய சிரிப்பு, பேச்சு,குறும்புகள் மனதை ஆக்கிரமித்து உள்ளது.

விளையாட்டு சாமான்களை தூக்கி பின் பக்கம் வீசும் விளையாட்டு பிடிக்கும் அவனுக்கு.
கீகொடுத்து பொம்மைகளை விட்டால் வேகமாய் வந்து அதை எடுத்து பின் பக்கமாய் தூக்கி போடுவார்.அதனால் நன்மையும் ஏற்பட்டது பின்பக்கம் தூக்கி போடும் பழக்கம் இருந்ததால்
கண்ணாடி கிண்ணத்தை பின் பக்கம் தூக்கி போட்டதால் கையில் குத்தவில்லை.முன் பக்கம் வைத்து தட்டி இருந்தால் கையில் குத்தி இருக்கும்.

துணி மடித்து வைத்து இருந்தால் அதை இழுத்து போட்டு விட்டு சிரிப்பான்.புத்தகங்கள் அடிக்கி வைத்து இருந்தால் கலைத்து விடுவான்.கலைவாணர் மாதிரி விதவிதமாய் சிரிப்பான்.
முடி இறக்கும் போது யாராவது என்னை காப்பற்றுங்களேன் என்பது போல் எல்லோரையும் பார்த்து அழுததும்,காது குத்தும் போதும் எப்படி அழுவோனோ என்று நினைத்தேன்.ஆனால் காது குத்துபவர் நல்ல திறமைசாலி.காது குத்தும் போது அழசந்தர்ப்பம் கொடுக்காமல் நிமிஷமாய் நேர்த்தியாய் காது குத்தி விட்டார்.

மொட்டை அடித்தபின் எங்கேயும் இடித்துக் கொள்ளாமல் பார்த்து கொள்வதே பெரியவிஷயமாய்
இருந்தது.முடி எங்கே போச்சு என்றால் தலையை தொட்டுப் பார்த்து சிரித்துக் கொள்வான்.
ஒட்டலில் சாப்பிடப் போனபோது பரிமாறுபவர் முடி எங்ககண்ணு சாமிக்கு கொடுத்தீர்களா என்று கேட்டபோது எதோ புரிந்த மாதிரி சிரிப்பு. அவர் குழந்தைக்கு வேற்று முகமே இல்லை
என்று திருஷ்டி முறித்தார்.

அத்தையின் நிச்சியத்தார்த்த விழாவில் இவர்தான்(குட்டி கண்ணன் தான்) திருமண பட்டோலை வாசித்தார். என் மகளின் மாமனார் நல்ல குரல்வளம் உள்ளவர் அவரை மூகூர்த்த பட்டோலை வாசிக்க சொன்னர்கள் அவர்களுடன் இவனும் சேர்ந்து வாசித்தான் அமைதியாய் இருக்கும் போது இவன் பேசியதால் அரங்கம் முழுதும் மகிழ்ச்சி ஆரவாரம்.
நீயும் உன் அத்தை திருமண பட்டோலை வாசிக்கிறாயா என்று எல்லோரும் அவனிடம் கேட்டு ஒரே சிரிப்பு.எல்லா திருமண உறுதி செய்யும் வீட்டிலும் என் கணவர்தான் வாசிப்பார். விடுமுறை இல்லாத காரணத்தால் அவர்கள் வரவில்லை, அதை பேரன் வாசித்து நிறைவு செய்து விட்டான்.
தாத்தாவிடம் உங்களுக்கு பதிலாய் உங்கள் பேரன் வாசித்தான் என்று சொன்னவுடன் அவர்களுக்கும் எல்லை இல்லா மகிழ்ச்சி.

இடமாற்றங்களாலும்,நடப்பதற்கு ஏற்றவாறு உடல் மெலிய ஏற்படும் வயிற்றுப் போக்குக்கு கோவையில் எங்கள் குடும்ப வைத்தியரிடம் போனபோது அவர் தொட்டவுடன் ஊசிதான் போடபோகிறார் என்று ஒரே அழுகை.ஊரில் தடுப்பு ஊசிக்கு மட்டும் தான் டாகடரிட்ம் போய் ஒரே சமயத்தில் இரண்டு ஊசிகள் போட்டு வருவதால் அவர் தொட்டவுடனேயே அழுகை.அங்கு காத்திருந்தபோது அங்கு மாட்டியிருந்த ’மருத்துவ பிரத்தனை’
என்ற சாட் பார்த்தேன். அது நன்றாக இருந்த்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மருத்துவபிரார்த்தனை
-------------------
//ஆண்டவனே என்னுடைய நோயாளிக்ளிடம் உனது நோய் தீர்க்கும் சக்தியை செலுத்துவாய்.
எல்லாம் வல்ல இறைவனே பொறுக்கமுடியாத வலியினால் வருவோரைச் சந்திப்பதே எனது வாழ்க்கை பணியாக உள்ளது.சொல்ல போனால் சோகமான சூழலே இந்த சோதனையைய்
எதிர் கொள்ள செய்திருக்கிறது.

ஆனால் இந்த சோகத்திலும் ஒரு சுகம் என்ன வென்றால் அவர்களது துயரத்தை துடைப்பதற்கு எனக்கு அருமையானதொரு வாய்ப்பை நீ அளித்திருப்பதுதான்.

இந்த பெரும் பொறுப்பை எனது தோள்கள் மீது சுமத்தியிருக்கும் நீ அதை நிறைவேற்றுவதற்கான துணிவை தந்துருக்கிறாய்.

அந்த பணியை செவ்வனே செய்து முடிக்கும் சக்தியை இறைவா நீ எனக்கு அருள்வாய்.
ஆனால் எப்போதும் உன்னிடத்தில் நான் அசையாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
உண்மையிலேயே நீதான் நோய் தீர்க்கும் மருத்துவர் என்பதையும் நலவாழ்வுக்கு ஆதாரம் என்பதையும் உன்னுடைய அபார கருணை பாயும் வழியாகத் தான் நான் இருக்கிறேன் என்பதையும் நான் மறவாமல் இருக்க வேண்டும்.//

அந்த டாக்டரிடம் என் மாமனாருக்கு நல்ல நம்பிக்கை. மாமனாரின் நூற்றாண்டு விழாவில் அவருக்கு பொன்னாடை போற்றி கவுரவப் படுத்தினார்கள்.அவரைப் பற்றி அன்று வெளியிட்ட விழாமலரில் குறிப்பிட்டார்கள் .


இப்படி எண்ணம் எல்லாம் செல்லகுட்டியின் நினைவுதான். இங்கேயே இருக்க ஆசை தான்
அந்த பாட்டி வீட்டிலும் போய் இருக்க வேண்டாமா? அவர்களும் அவர்கள் பிள்ளை குறும்புகளை ரசிக்க வேண்டாமா? அங்கும் ஒரு பெரிய தாத்தா இருக்கிறார்கள். அவனின் வருகையால் தன் உடல் துன்பத்தை மறந்து சிரித்து வருகிறார்கள். கோவை பெரிய தாத்தாவின் கைத்தடியை பிடித்து எழுந்து நின்று அவர்களைப் பார்த்து சிரிப்பான் இரண்டு குழந்தைகள் சிரிப்பது போல இருக்கும்.அவர்களிடமும் ஒளிந்து விளையாடினான்.

அந்த பாட்டி வீட்டில் போய் சமையல் அறையில் அரிசி டப்பாவை திறந்து அதை அள்ளி கீழே போட்டு விளையாடுகிறானாம். தண்ணீர் டிரம்மை திறந்து விடுகிறானாம். வாசல் திறந்து இருந்தால் வெளியே போய் விடுகிறானாம்.வாகக்ரில் வேகமாய் நடக்கிறானாம். தன் குறும்புகளால் எல்லோரையும் குதுகலப் படுத்திக் கொண்டு இருக்கிறான்.அவன் பிறந்த நாள் சமயம் எல்லோரிடமும் சொல்லி ஆசிபெற்றுக் கொள்ள முடியவில்லை.(ஜீலை5ம் தேதி பிறந்தநாள்) இப்போது எல்லோரும் அவனை வாழ்த்துங்களேன். செல்ல கண்ணனின் பெயர் கவின் திருநாவுக்கரசு.

அன்பு உள்ளங்களே வாழ்த்துங்கள். நோய் நொடி இல்லாமல் பேரன் நூறாண்டு வாழட்டும்.
வாழ்க வளமுடன்.

இன்னும் இரண்டு வாரத்தில் நியூஜெர்சி சென்று விடுவான். மீண்டும் அவன் வரும் வரை நினைவுகளை பொக்கிஷமாய் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.