வேதாத்திரி மகரிஷி கவிதையும் கோலமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதாத்திரி மகரிஷி கவிதையும் கோலமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஜனவரி, 2024

மார்கழி கோலமும் மகரிஷி கவிதையும்



மார்கழி மாதம் கோல பதிவுகள் போடவே இல்லை, தைபிறக்க போகிறது, அதனால் மார்கழி கோலங்களை பகிர்ந்து விடலாம் என்று இந்த பதிவு. சின்ன  கோலங்கள் தான். எல்லோருக்கும் தெரிந்த கோலங்கள்தான். என் சேமிப்பாக இங்கு பதிவு செய்கிறேன்.

1958 ம் ஆண்டு  வேதாத்திரி மகரிஷி அவர்களின் துணைவி  மார்கழி மாதம்  கோலம் போடும் போது அக்கோலத்தைச் சுற்றி எழுத கவிதை கேட்டாராம்.  மகரிஷியும் தினம் தினம்  மனதில் தோன்றும் எண்ணங்களை கவிகளாய்  சொல்லுவராம்., அன்னை லோகாம்பாள் அவர்கள் கோலத்தைச்சுற்றி எழுதிய  அந்த கவிதைகள்  இந்த பதிவில்  இடம்பெறுகிறது. பாடல்கள் "மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து" என்று புத்தகமாய் வெளி வந்தது.
---------------------------------------------------------------------------------------------------

கருத்தும் கடவுளும்

கடவுளை வணங்கும் போது 
கருத்தினை உற்றுப் பார் நீ !
கடவுளாய்க் கருத்தே நிற்கும் 
காட்சியைக் காண்பாய் ஆங்கே.

நான் பதிவு ஆரம்பித்த முதல் நாள்  கிளிக்கோலம் போட்டு வேதாத்திரி அவர்களின் கருத்தை  பதிவு செய்தேன். (முன்பு கோலம் போட்டு மகரிஷி கருத்தை  எழுதுவேன்.)

நன்மையே நோக்கு

எண்ணம் சொல் செயலால் 
எவருக்கும் எப்போதும் 
நன்மையே விளைவிக்க 
நாட்டாமா யிரு

உள்ளத்தில் கள்ளம் வேண்டாம்

உள்ளொன்று வைத்துப்
புறம் ஒன்று பேசினால்,
உள்ளொளி தீயாகி
உடலை கெடுத்துவிடும்

இயல்பும்- உயர்வும்

அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு,
அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு. 

ஊக்கம் உயர்வு தரும்
ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து,
ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்

உழைப்பின் மேன்மை
உழைப்பினால் , உடலும், உள்ளமும், 
உலகமும், பயன் பெறும் உணர்வீர்

தினக்கடன்
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் 
நினைப்பதும், செய்வதும் நித்தியக்கடன்


                                                 விதியும்  மதியும்

இயற்கை சக்தியே விதி,

இதை யறிந்த அளவே மதி

உணர்தலால் அமைதி
எண்ணத்தின் வேகமும், இயல்பும் , அறிந்தோர்க்கு
எண்ணமே இன்பமயம். எண்ணம் அமைதிபெறும்.

உண்ணுங்கால் எண்ணு

உண்ணும் உணவு  கிடைத்தவகை
எண்ணி யுண்ணிடல் என்றும் உன்கடன்.

எம் மதத்தையும் குறை கூறாதே

உம்மதமே உலகத்தில் 
உயர்வென்று பேசுகிறீர் 
எம்மதத்தாரிடம் இல்லை
ஏழ்மை பஞ்ச பாதகங்கள்?


அன்பின் செயல்

அனைத்துயிரும் ஒன்றென்று 
அறிந்த அடிப்படையில்
ஆற்றும் கடமையெல்லாம் 
அன்பின் செயலாகும்

கடவுளே - உயிர்

அண்டத்தில் கடவுளாய்
அழைக்கபடுபவன்
பிண்டத்தில் உயிரெனப்
பேசப் படுகிறான் 
கண்டத்தின் மேலே 
கருவில் நிலைத்தவன் 
அண்டத்தும் பிண்டத்தும் 
அவனையே காண்கிறான்


வளர்ச்சி நிலைகள்

அழகு மாறி கொண்டே இருக்கும்
அன்பு ஊறிக் கொண்டே இருக்கும்
தொழுகை தூய்மை வளர்க்கும்
தோல்வி ஜெயத்தில் முடியும்

                           

சிறந்த கலாசாலை

உலகமே  ஒரு பெரிய பழைய பள்ளி,
ஒவ்வொருவருக்கும் தினம் புதியபாடம்,
பலகலைகள் கற்றோர்க்கும் பாமர்க்கும் ,
பகிர்ந்து தரும் இன்பதுன்பம் எனும் பரிசு



மெய்வழி

தெய்வநிலை மனிதரெல்லாம் உணர்ந்தால் அல்லால்!
திருத்தமுள வாழ்வேது? ஆற்றல் அற்றோர்
தெய்வம் உண்டு நம்பித் தினம் வணங்கித்
தேர்வுபெற மதம் கண்டார் அறிவறிந்தோர்

கடவுளும் கடமையும்

கடமையில் உயர்ந்தவர் 
கடவுளை நாடுவார்
கடவுளை அறிந்தவர் 
கடமையில் வாழுவார்.


கோலமும் பாடலும் நாளையும் தொடரும் கோலத்தைப்பார்க்க, கவிதையை படிக்க வருவீர்கள் என்று நம்புகிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------