மே மாதம் 29ம் தேதி மதுரைக்குப் போனபோது சில கோவில்களுக்குப் போய் இருந்தோம் (மடப்புரம் ,திருப்பூவணம், திருமோகூர், ஆனமலை நரசிம்மர் கோவில், திருவாதவூர்.)
மதுரை மேலூருக்கு தெற்கே 9 கிலோ மீட்டர்தொலைவில் திருவாதவூர் உள்ளது.
மாணிக்கவாசகரின் அவதாரத்தலமாகிய திருவாதவூரில் அருள்மிகு திருமறைநாயகி உடனுறை திருமறைநாதர் திருக்கோவில் உள்ளது.
இக் கோவில் மாணிக்கவாசகருக்கு சிலம்பொலிஒலிக்க செய்த இடம். பழமை வாய்ந்த கோவில். இப்போது புது பொலிவுடன் இருக்கிறது, மிக அழகாய்.
திருமறைநாதர், திருமறைநாயகி, மாணிக்கவாசகர்
பைரவ தீர்த்தம்
தலவிருட்சம் மகிழமரம்
மகிழமரம் வேலி போட்டு கம்புகள் முட்டுக் கொடுத்து பாதுகாக்கப்படுகிறது
வானரங்களும் யாரும் மரத்தை தொடாமல் பார்த்துக் கொள்கிறது.
கோவிலுக்கு உள் நுழையும் போது முதலில் அழகாய் மண்டபம் - பழுது பார்க்கப்படுகிறது.
ஸ்வாமி சன்னதி உள் நுழைவாயிலில், குருந்த மரம் அடியில் மாணிக்க வாசகருக்கு தீட்சை கொடுக்கும் காட்சி சித்தரிக்கப் பட்டு இருக்கிறது.
சிவன் இக் கோவிலில் சுயம்பு ரூபமாய் இருக்கிறார். அவரது தலையில் பசுவின் கால்தடம் இருக்குமாம்.
உள் பிரகாரத்தில் மாணிக்க வாசகருக்கு தனி சன்னதி
மாணிக்கவாசகர்
தட்சிணாமூர்த்தி சன்னதி
இறைவனுக்கு சந்தனம் அரைக்கும் இடம்
சந்தனம் அரைத்து எடுத்தபின் அதை கழுவிவிட வசதியாக துவாரம்
உட்பிரகாரம்
அம்மன் சன்னதி செல்லும் வழி
அம்மன் சன்னதி
அம்மன் சன்னதி அருகில் பசுமடம்.
அம்மன் சன்னதி கோடியில் சிவலிங்கம்
தேர் மண்டபம் அருகில் தேர்.
வைகாசி மாதம் நடக்கும் பிரமோற்சவத்தில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாம் திருநாள் திருத்தேர் உலா.
இக் கோவிலில் மாசி மாதம் மகாசிவராத்திரி சிறப்பாக நடைபெறும். வைகாசி, , ஆனி உற்சவம்., ஆவணிமாத மூலத்திருவிழா , திருக்கார்த்திகை உற்சவம் எல்லாம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இங்கு சனிபகவான், பைரவர் வழிபாடும் சிறப்பாம். வாதநோய்கள் நீங்குவதாகவும் மற்றும் பக்தர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இங்கு வரும் பக்தர்களுக்கு இருக்கிறதாம்.
திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்து வளர்ந்த இல்லம் ஊரின் தெற்குத் திசையில் ஒரு சிறுகோவிலாக விளங்குகிறது. அந்தக் கோவில் சில நேரம் திறந்து இருக்கும் சில நேரம் மூடி இருக்கும். மூடி இருந்தாலும் பரவாயில்லை வெளியிலிருந்தாவது அவரை வழிபடலாம் என்று போனோம்.
சிவபெருமானே குருவாய் குருந்தமரநிழலில் வீற்றிருந்து இருந்து தீட்சை அளித்தகாட்சி கோபுரவாயிலில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நால்வர் வழிபாடு :-
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
வாழிதிருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி.
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.
நேற்று மாணிக்கவாசகரின் குருபூஜை.
பால்நினைந் தூட்டுந் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே.
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்டமுழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டிஎன்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும்அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்றுண்டென்னில்
அதுவும்உன்றன் விருப்பன்றே.
நாமும் இறைவனை சிக்கென பிடித்துக் கொள்வோம். அவருக்கே தெரியும் நமக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று. தாய்க்கு தானே தெரியும் குழந்தைக்கு எப்போது பசிக்கும், எப்போது எது தேவை என்று. தாயைப் போன்ற இறைவன் நமக்கு எல்லாம் அருள்வார்.
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.
திருவாசகம் அளித்த மாணிக்கவாசகர் திருத்தாள் போற்றி!
வாழ்க வளமுடன்.
----------------------------------