அண்மையில் 'கழுகுமலை' பதிவு போட்ட போது- சமணர் படுக்கை பற்றி குறிப்பிட்டு எழுதிய போது, அந்த பதிவுக்கு பின்னூட்டம் கொடுத்த G.M. பாலசுப்பிரமணியம் சார்,
//புதுக்கோட்டைக்கு அருகில் ஓவியங்களுடனும் கல் படுக்கைகளுடனும் சிற்பங்களுடனும் ஒரு இடம் பார்த்திருக்கிறேன். பெயர் நினைவுக்கு வரவில்லை. வாழ்த்துக்கள் //
என்று சொல்லி இருந்தார்கள். அவர்களுக்கு நான் ”அந்த ஊர் பெயர் சித்தன்னவாசல் , அங்கு மகள் மருமகனுடன் சென்று வந்தோம், அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்” என்று பதில் அளித்தேன். சாரால் மற்றொரு பதிவு போட வாய்ப்பு கிடைத்து விட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் செல்லும் வழியில் 16 கிலோ மீட்டர் அருகில் சித்தன்னவாசல் உள்ளது.
சமணர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைதியான சூழல்களில் தங்கள் இருப்பிடத்தை வைத்திருந்திருக்கிறார்கள்
இங்குள்ள மலை மீது சமணர்களின் படுக்கைகளும், குடைவரை ஓவியம் வரையப்பட்ட இடங்களும் உள்ளன. ஏழடி பாட்டம் என்ற இடத்தில் இயற்கையாக அமைந்த குகையில் 17 கல் சமணர் படுக்கைகள் உள்ளன. இப்படுக்கைகளில் வழுவழுப்பாய் தலையணை போல உள்ளன
கி.மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி கல்வெட்டு இங்கு காணப்படுகிறது. குடவரை ஓவியங்கள் மூலிகையால் தயார் செய்யப்பட்ட வண்ணங்களால் வரையப்பட்டது. இப்போது கொஞ்சம் அழிந்து விட்டது. அங்கு முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் வண்ண ஓவியங்களில் தாமரைக் குளத்தில் மலர் பறிக்கும் துறவிகள், விலங்குகள் , அன்னம், மீன்கள் , அல்லி மலர்கள் எல்லாம் அழகாய் வரையப்பட்டு இருந்தது. தூண்களின் மேல் புறம் ராஜா, ராணி நடன் மங்கை ஓவியங்கள் உள்ளன. முன் மண்டபத்தின் சுவரில் தீர்த்தங்கரர்களில் ஒருவரான பார்சுவநாதர் சிலை இருக்கிறது. கருவறையில் மூன்று சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் உள்ளன. படம் எடுக்க அனுமதி இல்லை.
குடவரைக்கு செல்லும் முன் கீழே தமிழ்நாடு அரசு நுழைவு டிக்கட் வாங்க வேண்டும். மேலே தொல்பொருள் ஆராய்ச்சி துறை வழங்கும் டிக்கட் வாங்க வேண்டும்.
முன்பு நான் போன போது படிகளுக்கு கைப்பிடி கிடையாது. இந்த முறை போன போது அழகிய கைப்பிடிகள் வைத்து இருந்தார்கள். ஏறுவதற்கு மிக வசதியாக இருந்தது.
போகும் பாதையில் கல் ஆசனம், சோபா போல் இருந்தது. அதில் நான், என் மகள், பேத்தி, பேரன் எல்லாம் உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம். என்னை பேத்தி மகாராணி போல் கால் மேல் கால் போட்டு அமருங்கள் என்றாள். நானும் அப்படியே உட்கார்ந்து,” மாதம் மும்மாரி பொழிகிறதா? ” என்று ராஜா கேட்பது போல் கேட்டேன். ஒரே சிரிப்பு தான்.
ஒரு குகை மாதிரி இருந்த பாறையின் உள்ளே போய் வந்தோம். என் பேரன் அந்த சமயம் மொட்டை அடித்து இருந்தான். அவன் ஒரு பாறை மேல் அமர்ந்து தவம் செய்வது போல் அமர்ந்தான். “ஆஹா! சின்னம் சிறு பாலகன் தவம் செய்கிறானே என்று மகிழ்ந்து இவனுக்கு வரம் தாருங்கள், சுவாமி!” என்றதும் அவனுக்கு ஒரே சிரிப்பு !
சமணர் படுக்கை இருக்கும் இடம் போகும் பாதை, மலையின் பின் பகுதியில் கீழே இறங்கி குறுகலாய் போகிறது. அது திகைக்க வைக்கும்(திகில் ஊட்டும்) பாதைதான். அதில் கீழே விழுந்து விடாமல் இருக்க தடுப்பு போட்டு இருக்கிறார்கள்.
மலை மீது இருந்து பார்க்கும் போது இயற்கைக் காட்சி அழகாய் இருக்கும். மயில் அகவிய ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் மயில் கண்ணுக்கு தெரியவில்லை.
கல் படுக்கைகளை வேலி போட்டுத் தடுத்து வைத்து இருக்கிறார்கள் வெளியிலிருந்து தான் பார்க்க வேண்டும். சமணர் படுக்கை இருக்கும் மலை இடுக்குகளில் வவ்வால்கள் தொங்கி கொண்டு இருந்தது.
பின்பு கீழே இறங்கி இன்னொரு இடத்தில் இருந்த குடவரைக் கோயிலுக்குச் சென்றோம்
குடவரை ஓவியத்தை பார்க்க தனியாக அனுமதி சீட்டு வாங்க வேண்டும். அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு உள்ளே முதலில் எங்கள் குடும்பத்தை மட்டும் விட்டார்கள்.
| குடைவரை ஓவியங்கள் உள்ள இடம் |
உள்ளே சிறு இடம் தான். அங்கு இருந்த தொல்லியல் துறை கைடு நல்ல விளக்கம் சொன்னார். மேல் விதானத்தில் எத்தனை சாமியார் பூக்குடலை வைத்துக் கொண்டு பூப்பறிக்கிறார்கள், அன்னப்பறவை, மற்ற விலங்குகள் எத்தனை என்று நம்மிடம் கேள்வி கேட்டு, பின் அவர் தெரிவித்தார். நமக்கு அவர் சொன்னபிறகு எல்லாம் பளிச்சென்று தெரிகிறது.
பிறகு உள்ளே மூன்று சமண தீர்த்தங்கரர்கள் சிலை இருக்கும் இடத்தில் நம்மை நடுவில் நிற்க வைத்து விட்டு ,அவர் அந்த அறையின் மூலையிலிருந்து வாயை அசைக்காமல் தொண்டை வழியாக கைடு சத்தம் செய்கிறார் . அது அந்த அறை முழுவதும் எதிரொலிக்கிறது. மிக அருமையான அதிர்வு ஏற்படுகிறது. அதில் அவர் தேர்ச்சி பெற்றவர் என்பதை உறுதிப்படுத்த, நம்மையும் அதுபோல் செய்து பார்க்க சொல்கிறார், நம்மால் முடியவில்லை. உடனே முகமெல்லாம் பூரிப்பாய் மலர்ந்து சிரிக்கிறார்.
அங்கு அருகில் ஒரு பூங்கா இருக்கு. அங்கு கொண்டு போன உணவுகளை சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்கலாம் என்று பார்த்தால் அங்கு உணவு உட்கொள்ளக் கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத்து இருக்கிறார்கள். பொது இடத்தை நாம் சுத்தமாக் வைத்துக் கொண்டு இருந்தால் அப்படி அறிவிப்பு வைத்து இருக்க மாட்டார்கள்.
பார்க்கில் அழகான சிலைகள் வைத்து இருந்தார்கள். மகாவீரர் சிலை. புலியை முறத்தால் துரத்திய வீரப்பெண்மணி சிலை, மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, அன்ன ரதம் ஆகியவை இருந்தது.
மாயாபஜார் படத்தில் அன்னப் படகில்,” ஆஹா இன்ப நிலாவினிலே, ஒஹோ ஜெகமே ஆடிடுதே - மகிழ்ந்து ஆடிடுதே என்ற பாடலை நினைத்துக் கொண்டேன்.
அங்கு குழந்தைகள் விளையாட சறுக்கு , ஊஞ்சல், சீஸா பலகை எல்லாம் இருந்தன. குழந்தைகள் விளையாடினார்கள். மரங்களில் நிறைய குரங்குகள் இருந்தன.
தண்ணீர் தாகம் எடுத்த குரங்கு தண்ணீர் டியூப்பில் நீர் கசிவு இருந்த இடத்திலிருந்து நீர் பருகியது. சரியாக வரவில்லை என்று டியூபில் ஒட்டி இருந்த டேப்பை விலக்கி குடித்தது.
சித்தன்னவாசல் புகைப்படங்கள் மகள் எடுத்தது. கார்ட்டூன் படம் கணவர்.
இருவருக்கும் நன்றி.
வேறு இடத்த்தில் மரநிழலில் அமர்ந்து உணவை உண்டு ஓய்வு எடுத்து ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
---------------------------------------

