மயிலாடுதுறையில் இருக்கும் போது உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து மனவளக்கலை பயின்றேன், ஆழியார் சென்று ஆசிரியர் பயிற்சி கற்று மயிலாடுதுறை மன்றத்தில் பல வருடம் பணி செய்தேன். முன்பு சொல்லி இருக்கிறேன்.
ஆகஸ்ட் 30ம் தேதி "மனைவி நல வேட்பு நாள்" என்று கொண்டாடுவார்கள். மகரிஷியின் மனைவி அன்னை லோகாம்பாள் பிறந்த தினத்தை "மனைவி வேட்பு நாளாக" கொண்டாடுவோம். மாயவரத்தில் இருக்கும் போது எங்கள் மன்றத்தில் நடந்த விழாவில் நானும், என் கணவரும் கலந்து கொண்டோம். நேற்று மகனிடம் பேசி கொண்டு இருந்தேன், ஆழியாரில் நடந்த விழாவை நேரலையில் பார்த்தேன் என்று.
மகன் முன்பு மயிலாடுதுறையில் "நீங்கள் கலந்து கொண்டதை கூகுள் போட்டோ காட்டியது அம்மா" என்றான். அவனுக்கு நான் அனுப்பிய படங்களை சேமித்து வைத்து இருந்து இருக்கிறான்.
நான் உடனே அனுப்பி வைக்க சொன்னேன், அனுப்பி வைத்தான். அந்த படங்களும், ஆழியாரில் நடந்த விழா படங்களும் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
---------------------------------------------------------------------------------------------------
எத்தனையோ சிறப்பு தினங்கள் இருக்கிறது, மனைவியை கொண்டாடும் தினம் ஏற்பட்ட காரணம் படித்துப்பாருங்கள்
படிக்க முடிகிறதா?
மயிலாடுதுறையில் மன்றம்
கைகளை கோர்த்து கொண்டு கண்களை நேருக்கு நேர் நீடித்த நிலைத்த பார்வையாக சிறிது நேரம் பார்க்க வேண்டும்.
பிறகு ஒருவரை ஒருவர் 'வாழ்க வளமுடன்" என்று மூன்று முறை வாழ்த்த வேண்டும். அப்புறம் மலரை கணவர் கொடுப்பர் மனைவிக்கு, மனைவி கனியை கொடுப்பார் கணவனுக்கு.
அந்த நேரம் உறுதி மொழி எடுக்க சொல்வார்கள்.
மென்மையான இந்த மலர் போன்ற மனம் கொண்ட நீங்கள் மனைவியாக வந்தற்கு நான் பாக்கியம் செய்தவன் , உன்னை என் வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாப்பேன் என்பார் கணவர்.
மனைவி கனியை கணவருக்கு கொடுத்து இக்கனி போன்ற கனிவான மனம் படைத்த நீங்கள் எவ்வாறு கனியில் உள்ள வித்து முளைத்து மீண்டும் வளர்ந்து பூவாகி, காயாகி, கனியாவது போல் இக் குடும்பத்தில் என்னை ஏற்று மலரச்செய்து கனி போன்ற சுவை நிறைந்த வாழ்க்கை அளிததற்கு நன்றி கூறி இக கனியை அளிக்கிறேன். என்பார் மனைவி.
ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் குடும்ப உறுப்பினர் யாராக இருந்தாலும் தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால் இருவருக்கிடையேயுள்ள உயிர்த்தொடர் மூலம் அவ்வாழ்த்துப்பரவி குடும்பத்தில் அமைதி நிலவி மகிழ்வையும், நிறைவையும் கொடுக்கும் என்பார் மகரிஷி.
இருவரும் தங்களுக்கு இறைவன் கொடுத்த துணை என்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ்த்தி கொள்ளும் நாள்.
அதுவும் தன் வீட்டை துறந்து கணவன் வீட்டுக்கு வந்துதன் குடும்பம் இதுவென்று நினைத்து வாழும் மனைவியை வாழ்த்தும் தினம்.
நம் நாட்டின் பண்பாட்டின்படி பார்த்தால் பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று கூறலாம்.திருமண வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே தன் வீட்டு அன்பு உறவுகளை துறந்து வரக்கூடிய இயல்பு அவர்களுக்கு வந்து விடுகிறது. அப்படி நம் அன்பை நாடி வந்த பெண்ணுக்கு ஆதரவும் அன்பும் கொடுக்க வேண்டியது அவசியம், உண்மையை உணர்ந்து கொள்வது பெண்மை, என்ற மதிப்பிலே, தாய்மை என்ற மதிப்பிலே எல்லோருக்கும் கொடுக்ககூடிய மதிப்பை போல நம் வீட்டிற்கு வந்த பெண்ணிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அது கடமை.
என்று சொல்லி அதற்கு ஒரு கவிதை சொல்லி இருக்கிறார்.
'பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப் '' என்ற மேலே பகிர்ந்த மகரிஷி கவிதையை கணவர்கள் பாடி நிறைவு செய்வார்கள்.
அன்று ஒருநாள் கணவன் கவி பாடி வாழ்த்துவதை பெற மனைவி விரும்புவார்கள் தானே!.
பெண்ணின் பெருமையை சொல்லும் மகரிஷி கவிதை.
மயிலாடுதுறையில் ஒவ்வொரு வருடமும் இந்த விழாவில் கலந்து கொண்ட நினைவுகள் மிகவும் இனிமையானது, ஒரு வருடம் கலந்து கொண்டதை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
மலரை கணவரும், கனியை மனைவி வைத்து இருப்பதும் இந்த படத்தில் தெரியும்.
என் கையில் மலர் கொடுத்தார்கள்
இருவரும் அடுத்தவர் நாடித்துடிப்பை உணரும்படி கைகளை கோர்த்து கொள்ள வேண்டும்.
பெண்ணின் பெருமையை பேசுகிறார்
தன் பெற்றோர்களுக்கு கனிகளை எடுத்து கொடுத்து மகிழ்ந்த குழந்தைகள்
ஆசிரிய பெருமக்கள்
கீழே ஆழியாரில் நடந்த விழா படங்கள் காணொளி

ஆழியார் அறிவுத் திருக்கோவிலில் நடந்த விழா
நேரம் கிடைக்கும் போது விருப்பம் இருந்தால் இந்த காணொளியை கேட்டுப் பாருங்கள். நிறைய பேர் பேசினார்கள். திரு . இறையன்பு அவர்களின் பேச்சு நன்றாக இருக்கிறது கேட்டுப்பாருங்கள்.
குடும்பம் எப்படி ஏற்பட்டது, குடும்ப வகைகள் பற்றி எல்லாம் சொன்னார். 1. இரத்தவழி குடும்பம், 2. குழுமன குடும்பம் 3. நிரந்தரம் மற்ற குடும்பம் 4. தந்தைவழி குடும்பம், 5.துணை குடும்பம். இப்போது உள்ளது துணை குடும்ப அமைப்பை சேர்ந்தது என்றார்.
திருவள்ளுவர் குடும்பம் பற்றி சொன்னதை மிக அழகாய் சொன்னார். "வாழ்க்கை துணை" என்ற சொல்லை திருவள்ளுவர் குறிப்பிட்டதை கணவன் பொறுப்பு, மனைவி பொறுப்பு பற்றி சொன்ன குறள்களை விளக்கமாக சொன்னார்.
குறுத்தொகை பாடலை பாடி அழகான விளக்கம் சொன்னார். குறுத்தொகை பாடலை 40 ஆண்டுகளுக்கு முன்
கவிஞர் மீரா மாற்றி பாடியதை சொன்னதை மிக அழகாய் சொன்னார் . கவிதையை கேட்டு பாருங்கள். தெரிந்து இருக்கும் உங்களுக்கு இருந்தாலும் கேட்கலாம்.
ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அப்போதுதான் சமூகம் நன்றாக இருக்கும். . கணவன், மனைவி ஒரே திசையில் பார்ப்பதுதான் புரிதல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட அடையாளம் புன்னகை புரிதல்தான் .
இப்போது உள்ள குடும்பத்தை பற்றி சொன்னார். முன்பு கூட்டுக் குடும்பம், அப்புறம் தனிக் குடும்பம்(தனி குடித்தனம்), இப்போது கணவன் தனி, மனைவி தனி குடும்பம்.
அவர் சொன்னது இந்த விழாவில் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். திருமணம் ஆகாதவர்களிடம் இதை கொண்டு செல்லுங்கள். இன்று பெரும்பாலும் கலந்து கொண்டவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடிந்தவர்களாக இருக்கிறார்கள்.
வாழ்வை தொடங்குபவர்களிடம் இந்த நல்லது சென்று சேர வேண்டும் என்றார்.
30 நாட்கள் மட்டும் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்ந்து விட்டால் 30 வருடம் மகிழ்ச்சியாக கடந்து விட முடியும்.
புதிதாக வாழ்வை தொடங்குபவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை என்றார். சண்டையும் வேண்டும் அதை அப்புறம் போட்டு கொள்ளலாம் என்றார்.
இறையன்பு அவர்கள் பேச்சை இளைய சமுதாயம் கேட்க வேண்டும். என்று விரும்புகிறேன்.
மிக அருமையாக பேசினார் முன்னாள் கலெக்டர் திரு . ஸ்வரன்சிங் அவர்கள். வரதட்சிணை வாங்கவில்லை, அதனால் சண்டை இல்லை என்றார். 35 வருடமாக சண்டை இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வதாகவும் சொன்னார். கிராமங்களை தத்து எடுத்து குடிபழக்கத்தை ஒழித்து குடிக்கும் கணவர்களிடமிருந்து காப்பாற்ற வேன்டும் என்றும் குடிக்கும் பெண்களை பற்றியும் நகைச்சுவையாக சொன்னார்.
அங்கு நடந்த விழா படம்
ஆழியாரில் அறிவு திருக்கோவிலில் நடந்த மனைவி நல வேட்பு விழா காணொளி இறையன்பு அவர்கள் பேசிய போது எடுத்த படம். மயிலாடுதுறை அன்பர் அனுப்பி இருந்தார்.
நீ பாதி நான் பாதி என்று ஒரு பதிவு ஆகஸ்ட் 30 தேதி 2010 ல் எழுதி இருக்கிறேன், நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.
குடும்பத்திலிருந்து அமைதி தொடங்கி சமுதாய விரிவாக அமைய வேண்டும்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
_----------------------------------------------------------------------------------------















