ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

புத்தக வாசிப்பும் அனுபவங்களும்


என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விடும் போல் இருந்தது. அதில் வந்த விளம்பரம் என்னைக் கவர்ந்தது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அன்றும் உள்ளது, ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று.


//மோதிரம் வாங்குங்கள்! மோதிரம்!// 2010 ஆண்டு நவம்பர் 1 ம் தேதி எழுதிய பதிவு.


இதோ அந்த விளம்பரத்தைப் பாருங்களேன்:

// விளம்பரம்

சீர்மையிலிருந்து வரவழைக்கப்பட்ட

எங்களுடைய

ரோஜாப்பு மொட்டை

பரிட்சித்துப் பாருங்கள் 

ரோஜாப்பு மொட்டு என்பது

ஒரு ஷோக் மோதிரம்

இந்த மோதிரமானது அன்று அரும்பி இதழ்மலர்ந்த மொட்டை நடுவில் உடையதுபோல
பிரகாசிக்கும். பார்வைக்கு மிக்க பகட்டாயும் சோபிதமாயுமிருக்கப்பட்ட 9-போலி ரவைகள் வைத்து இழைத்தது .இது இங்கலாண்டு கெமிகல்கோள்டு யென்னும் ஒருவித லோகத்தாற் செய்து விராகனிடை 8 ரூபா விலையுடைய 
சுயத்தங்கத்தினால் மேற் பூசலும் பூசப்பட்டது.
இந்த மோதிரத்தில் எண்ணைபட்டாலும் ஜலம்பட்டாலும் பளபளப்பு மங்குகிறதில்லை. கொஞ்சம் காந்தி குறைந்த போதிலும் சீமைசுண்ணாம்பு பூசிவைத்து புருஷினால் துடைத்து விட்டால் மறுபடியும் பிரகாசிக்கும் இந்த மோதிரத்திற்கும் ஜெனங்கள் 2,000 ரூபாய் விலையிருக்குமேயென்று மதிப்பிடுவதற்கு அஞ்சமாட்டார்கள்.--இதன் விலை 2-ரூபாய்தான் வி.பி. தபாற்கூலி பிரத்தியேகம்.

8-மோதிரத்திற்கு மல்பீஸ் இனாம்
8--எட்டு மோதிரங்கள் ஒரேதடவையில் வாங்குவோருக்கு நாணயமானதாய்
(ஒரு பீஸ் சலவைமல்) அதாவது 20-கெஜமுடைய தான் இனாமாய் அனுப்படும்.

4.மோதிரத்திற்கு இனாம்

4--நாலு மோதிரம் ஒரேதடவையில் வாங்குவோருக்கு சரட்பட்டன் ஒரு செட்டு இனாமாய் அனுப்பபடும்.

என்னுடைய முழுகேட்லாக் வேண்டுமானால் அரையணா ஸ்டாம்பு அனுப்பினால் அனுப்பப்படும்.

வித்தியாரத்திநாகர அச்சுக்கூடத்தலைவர்

பி.நா.சிதம்பரமுதலியார்
பெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //



வாங்குங்கள் ஷோக்மோதிரம் விரைந்து.

வைகுந்த அம்மானை என்ற இந்த புத்தகமும் நன்றாக இருக்கிறது.மகாபாரதக் கதையைப் பாடுகிறது.விநாயகர் துதி,சுப்பிரமணியர் துதி,சரஸ்வதி துதி,ஈஸ்வரர் துதி,மகாவிஷ்ணு துதி, எல்லாத் துதியும் முடித்து பின் கதைக்குப் போகிறது.

வல்லி அக்கா பின்னூட்டத்தில்  //எனக்கு முப்பது மோதிரம் வேணுமே தங்கச்சி.:)// வேண்டும் என்றார் பழைய பதிவில்.


அத்தை பெயர் அத்தையின் கையெழுத்து.

No automatic alt text available.
என் அம்மா சேகரித்து வைத்து இருக்கும் பழைய கதை புத்தகத்தில் இடையில் வரும் ரேடியோ விளம்பரம்.


                       குழந்தைகளைக் கவரும் விளம்பரங்கள்.

No automatic alt text available.
ஒரு கதை இரு ஓவியர் அன்று, இன்று என்ற கதை களத்திற்கு அன்றுக்கு "ம.செ," இன்று நடைபெறும் கதைக்கு "ஜெ"
தொடர்கதைகளை சேகரித்து பைண்ட் செய்வதில் சில கஷ்டங்கள்   முடிவு  அடுத்த இதழில் இருக்கிறது முடிவுப் பக்கத்தைக் காணோம்.
மீண்டும் படிக்கும் ஆவல் போச்சு.

No automatic alt text available.
பதின்மூன்றாம் அத்தியாயத்திலிருந்து தான் பொன்னியின் செல்வன் வாங்க ஆரம்பித்தோம். (87ம் வருடம்.) அதற்கு முன் சர்குலேஷன் புத்தகம் வாங்கி படித்து கொண்டு இருந்தேன் மாதா மாதம் பணம்  கொடுத்து விட்டு  எல்லா மாதா, வார இதழ்கள் படித்துக் கொண்டு இருந்த காலம். பொன்னியின் செல்வன் புத்தகம் சேகரிக்க எண்ணி வாங்க ஆரம்பித்த போது பதின்மூன்று அத்தியாயம் ஓடி விட்டது. பழைய புத்தகக் கடையிலும் கிடைக்கவில்லை.



அப்புறம் 2014ம் ஆண்டு மீண்டும் கல்கியில் வந்தது பொன்னியின் செல்வன் ஆனால் படம் மணியம் இல்லை, வேதா என்ற ஓவியர். ( பொன்னியின் சித்திர கதைக்கு வேதா அவர்கள்தான் வரைந்து வருகிறார்.)

12 அத்தியாயம் மட்டும் வாங்கித் தொகுத்து தனியாக வைத்து இருக்கிறேன். கல்கி புத்தகம்  அகலமாக  வித்தியாசமாய் வந்தது பழைய புத்தகம் போல் இல்லை.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு இந்த புத்தகங்கள் 10 ரூபாய் தான்.   இந்த புத்தகங்களை முன்பு ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொள்ளும் போது வாங்கி வந்தவை, தினம் ஒரு பக்கம் படிப்பேன்.

Image may contain: 3 people, people smiling

திருக்குறள், பாரதியார் கவிதைகள் என் கணவர் எனக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் "வாழ்க்கை மலர் " புத்தகம்  வருடம் முழுவதும் படிக்க  (நாள் ஒரு நற்சிந்தனை)

'அன்னையின் அருள்மலர்கள்'  புத்தகம் அன்னையின் பொன்மொழிகள் தொகுப்பு .

தினசரி தியானம் புத்தகம் கைலாயம் போன போது எங்களுடம் ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த மூன்று சாமியார்களும் வந்து இருந்தார்கள் அவர்களில்  ஒரு சுவாமி  பக்தானந்தா அவர்கள் கொடுத்த புத்தகம்.

ஒரு கல்யாண வீட்டில் கொடுத்த புத்தகம்   'மன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை  பாதை ' சுவாமி சிவானந்தா ' அவர்கள் அருளுரை நர்மதா வெளியீடு.

இதுதவிர சிவானந்தலஹரி பாஷ்யம் ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் வெளியீடு புத்தகம் எல்லாம்  படிப்பேன்.

அம்மா கொடுத்த 'ஸெளந்தர்ய லஹ்ரி"  (சகுந்தலை நிலையம் வெளியீடு)
 மாமா கொடுத்த "ஸ்ரீ மஹா பக்த விஜயம்" (லிப்கோ பதிப்பகம் வெளியீடு)

எல்லாம் தினம் கொஞ்ச நேரம் படிப்பேன்.

முக நூலில் புத்தகப் பகிர்வு  நடந்து வருகிறது. படித்தபுத்தகம் அட்டைப் படம் மட்டும் போட்டால் போதும். விளக்க வேண்டாம். படிப்பதில் கொஞ்சம் சோர்வு ஏற்பட்டு இருந்தது , இப்போது மீண்டும் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
வீட்டு வேலைகள், வலைத்தளங்களை படித்தல் என்பதுடன்  புத்தகங்கள் படிக்க எண்ணம் வந்து இருக்கிறது.

 அப்பாவின் ஆன்மீக புத்தக  சேகரிப்புகள் (உபநிஷத்துக்கள்)
அனைத்தும் ஆங்கிலம்  அவை எல்லாம் என் கணவர் படிக்கிறார்கள். 
நான் தமிழாக்கங்களைத்தான் படிக்கிறேன்.

வல்லி அக்கா, ஆதிவெங்கட் இருவரும் புத்தக்ப் பகிர்வுக்கு அழைத்தார்கள் இருவர் அழைப்பையும் ஏற்று இரண்டு வாரங்கள் புத்தகம் பகிர்ந்து கொண்டு விட்டேன். நாள்தோறும் படித்துக் கொண்டு இருப்போம்.

 நான் யாரையும் அழைக்கவில்லை. நம் வலை அன்பர்கள் பலர் நல்ல நல்ல புத்தகப் பகிர்வை முன்பே செய்து விட்டார்கள்.


                                                          வாழ்க வளமுடன்.











51 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    அருமையான பகிர்வு. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் விளம்பரம் படிக்க நன்றாக சுவாரஸ்யமாக இருந்தது. எல்லாம் அந்த காலத்து எழுத்து வரிகளுடன் மனசுக்கு நிறைவாக இருந்தது. எங்கள் அம்மாவும் நிறைய அந்த கால கதைகள் பைண்டிங் பண்ணி வைத்துக்கொண்டு படித்துக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் பகிர்ந்த பழைய எழுத்துக்களை கண்டதும் அப்போது அவர்களுடன் பள்ளி விடுமுறை நாட்களில் அமர்ந்து இந்த மாதிரி சின்ன சின்ன விளம்பரங்கள் சிறிதான கதைகள் முதலியனவற்றை படித்தது நினைவுக்கு வந்தது.

    நல்ல புத்தக வாசிப்பு அனுபவம் உங்களுடையது. தங்கள் வாசிப்பனுபவம் கண்டு மிகவும் மகிழ்வடைகிறேன். தங்களால் நிறைய புத்தகங்கள் அறிந்து கொண்டேன். நிறைய விஷயங்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. 1904 இல் வெளிவந்த புத்தகம் பெரிய பொக்கிஷம். ஆச்சர்யமாக இருக்கிறது. அப்போதே இந்த வியாபார இலவசங்கள் இருந்திருக்கின்றன பாருங்கள்..

    மாருதி ஓவியம் இருக்கும் அந்தத் தொடர்கதை என்னது? சின்ன ஆவல்!

    புத்தகங்கள் பொக்கிஷம்தான். என்னாலும் தொடர்ந்து படிக்க முடியவில்லை. விடுமுறை தினங்களாயிருந்தால் கட்டாயம் மாலை மூன்றரை முதல் இருட்டும்வரை மொட்டைமாடியில் அமர்ந்து படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல தொகுப்பும்மா. 1904-ஆம் வருட புத்தகமா.... அப்பாடி எவ்வளவு பழசு... இங்கே நூலகத்தில் 1929 புத்தகம் பார்த்ததுண்டு.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

    //பள்ளி விடுமுறை நாட்களில் அமர்ந்து இந்த மாதிரி சின்ன சின்ன விளம்பரங்கள் சிறிதான கதைகள் முதலியனவற்றை படித்தது நினைவுக்கு வந்தது.//

    சிறு வயதில் விளம்பரங்கள் , துணுக்குகள், சிரிப்புகள், முதலில் படிப்பது அப்புறம் தான் கதைகள்.

    விளம்பரங்களில் மப்த்லால் குரூப் விளம்பரம் ஆன்மீகவாதிகளுக்கு பிடிக்கும்.
    பன்னிரெண்டு ஜோதிர்லிங்கம் பற்றி எல்லாம் படத்துடன் வரும்.

    விகடன் அட்டைபடம் மிக நன்றாக இருக்கும். குமுதம் பத்திரிக்கையில் ஆறு பொருத்தம் பார்க்கும் படம் எல்லாம் முதலில் பார்க்கும் ஆவலை தூண்டும்.

    உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //1904 இல் வெளிவந்த புத்தகம் பெரிய பொக்கிஷம். ஆச்சர்யமாக இருக்கிறது. அப்போதே இந்த வியாபார இலவசங்கள் இருந்திருக்கின்றன பாருங்கள்..//

    ஆமாம், வியக்க வைக்கும் விளம்பர உத்தி.

    //மாருதி ஓவியம் இருக்கும் அந்தத் தொடர்கதை என்னது? சின்ன ஆவல்!//

    'வானம்பாடிக்கு ஒரு விலங்கு ' - லக்ஷ்மி அவர்கள் தொடர் கதை.

    //புத்தகங்கள் பொக்கிஷம்தான். என்னாலும் தொடர்ந்து படிக்க முடியவில்லை. விடுமுறை தினங்களாயிருந்தால் கட்டாயம் மாலை மூன்றரை முதல் இருட்டும்வரை மொட்டைமாடியில் அமர்ந்து படிப்பேன்.//

    எத்தவித இடையூரும் இல்லாமல் தனிமையில் படிக்க மொட்டைமாடி போய்விடுவீர்களா?
    இப்போதும் உண்டா மொட்டைமாடி வாசிப்பு?

    உங்கள் கருத்துக்கு நன்றி.







    பதிலளிநீக்கு
  6. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.

    //அப்பாடி எவ்வளவு பழசு... இங்கே நூலகத்தில் 1929 புத்தகம் பார்த்ததுண்டு.//
    என் கணவர் இதைவிட பழைய புத்தகம் எல்லாம் சேமித்து வைத்து இருக்கிறார்கள், தொட்டால் உடையும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அருமையான விடயத்தை வெளியிட்டமைக்கு நன்றி சகோ.

    1904-லேயே ஒன்றுக்கொன்று இனாம் என்ற ஆசையை நமது மக்களுக்கு மனதில் விதைத்து விட்டார்கள். அதன் தொடர் இன்றைய தேர்தலில் இலவசம் ஆகிவிட்டது. ஓட்டுப்போட்டால் ஸ்கூட்டர் இலவசம்.

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வாசிப்புப் பழக்கம் போற்றுதலுக்கு உரியது சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  9. Pazaya magazines moolam pudhidhaai pala vishayangal theriya petren!! Pakirdhalukku nanriyum vaazhthukkalum

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

    //1904-லேயே ஒன்றுக்கொன்று இனாம் என்ற ஆசையை நமது மக்களுக்கு மனதில் விதைத்து விட்டார்கள். அதன் தொடர் இன்றைய தேர்தலில் இலவசம் ஆகிவிட்டது. ஓட்டுப்போட்டால் ஸ்கூட்டர் இலவசம்.//

    நீங்கள் சொல்வது சரிதான். இலவசங்களில் மயங்கும் மக்கள் எல்லா காலங்களிலும் உண்டுதான்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

    //தங்களின் வாசிப்புப் பழக்கம் போற்றுதலுக்கு உரியது சகோதரியாரே//

    உங்கள் வாசிப்பு பழக்கம் வியக்க வைக்கும்! எவ்வளவு வாசிப்பு அதை சுவைபட பகிர்ந்து கொள்வது படிக்கும் ஆவலைத்தூண்டும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. // இப்போதும் உண்டா மொட்டைமாடி வாசிப்பு?//

    கட்டாயம் உண்டு. நேற்றும் இருந்தது.

    // 'வானம்பாடிக்கு ஒரு விலங்கு ' - லக்ஷ்மி அவர்கள் தொடர் கதை.//

    படித்த ஞாபகமாய் இருக்கிறது. ஆனால் பல வருஷங்கள் ஆகிவிட்டதால் நினைவில்லை.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    நலமா? வெகு நாட்களாய் பார்க்கவில்லையே உங்களை.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ஸ்ரீராம்

    இப்போதும் மொட்டைமாடி வாசிப்பு உண்டு என்று அறிந்து மகிழ்ச்சி.


    //படித்த ஞாபகமாய் இருக்கிறது. ஆனால் பல வருஷங்கள் ஆகிவிட்டதால் நினைவில்லை.//

    சில கதைகளை படிக்கவில்லை என்று படிக்க ஆரம்பித்தால் அடுத்து என்ன என்பது நினைவுக்கு வந்து படித்த நினைவை கொண்டு வரும்.

    மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இன்னமும் நான் ஶ்ரீராம் அழைத்தப் புத்தக அட்டை பகிரும் தொடருக்குத் தொடங்கவே இல்லை! பார்ப்போம், முடியுமா என! மிக அருமையான சேமிப்புக்களை வைத்துள்ளீர்கள். என் தாத்தாவிடமும் இப்படி ஒரு சேமிப்பு இருந்தது. அந்தக்கால ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்பிலிருந்து மயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் வரை! எங்கே போச்சோ! தெரியலை! மதுரையை மாமா வீட்டில் காலி செய்யும்போது விக்டோரியா எட்வர்ட் ஹால் நூலகத்துக்குக் கொடுத்துட்டாங்கனு கேள்வி! :( நான் வாங்கி வைச்சிருந்தாலும் ஊர் ஊராக மாற்றிக் கொண்டு! என் புத்தகங்களுக்கென்றே இரண்டு க்ரேட் தயார் செய்வார். அது ஒரு காலம். இப்போதெல்லாம் பாதிக்கும் மேல் புத்தகங்களைக் கொடுத்துட்டேன். மிச்சம் இருக்கும் புத்தகங்களுக்கும் உயில் எழுதி வைக்கணும். எக்கச்சக்கப் போட்டி! :))))

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    மயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரமும் என் கணவரின் நண்பர் பரிசாக அளித்தது இருக்கிறது.

    நாங்களும் நிறைய புத்தகங்கள் மாயவரம் நூலகத்திற்கு கொஞ்சம் கொடுத்தோம், மாலைமதி வெளியீடு கதை புத்தகங்களை தெரிந்தவர்களுக்கு கொடுத்தோம்.
    பூந்தளிர் , காமிக்ஸ், போன்ற கதை புத்தகங்களை குழந்தைகளிடம் பைண்ட் செய்து கொடுத்து விட்டோம்.

    நிறைய புத்தகங்கள் படித்து விட்டு தருவதாய் வாங்கி கொண்டு மறந்து விட்டவர்கள் உண்டு.

    மீதி இருக்கும் புத்தகங்களை எங்களுக்கு பின் வேண்டுமென்றால் எடுத்துக் கொண்டு மீதியை நூலகங்களுக்கு கொடுத்துவிட சொல்லி இருக்கிறோம் . பிள்ளைகளிடம்.

    இப்போது புதிதாக வாங்கு வது இல்லை.

    உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. என்னிடம் 1880 களில் வெளி வந்த ஆங்கில புத்தகம் ஒன்று இருந்தது ஆனால் தொடர்ந்து இட மாற்றங்களினால் எங்கே எப்போது தொலைந்தது என்று நினைவில்லை

    பதிலளிநீக்கு
  18. எனக்கும் பத்திரிகைகளிலிருந்து வந்த தொடர்கதையை பைண்டு பண்ணின புத்தகங்கள் வாங்க ஆசைதான்.

    நீங்கள் குறிப்பிட்ட விளம்பரம், காசி கயாவிலிருந்து வரும் போலி விளம்பரங்கள் போல இருந்தது (நினைத்ததைக் கொடுக்கும் மோதிரம், ரேடியோப்பெட்டி போன்று). இத்தகைய விளம்பரங்களை நான் பாக்யா பத்திரிகையிலும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. கோமதி அக்கா நலம்தானே? நீங்களும் போஸ்ட் போட்டு நீண்ட நாளாயிற்று...

    ஓ அது 1904 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகமோ?.. அந்தப் பேப்பரைப் பார்க்கத் தெரியுது.. ஆனா அப்புத்தகப் பேப்பரில் ஒரு வித வாசனை வருமெல்லோ அது எனக்குப் பிடிக்கும்.

    நான் ஒரு அம்மம்மாவைச் சந்தித்திருக்கிறேன்.. அவவின் 94 ஆவது வயதிலோ என்னமோ.. அப்போ கேட்டேன் நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.

    பதிலளிநீக்கு
  20. ஒ அக்காலத்திலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமோ? இக்காலத்து மக்கள்தான் பேய்க்காட்டுகிறார்கள் என்றால் அப்பவும் அப்படியோ ஹா ஹா ஹா.. வாழையடி வாழை.

    ஆஹா அத்தையின் கை எழுத்து என்ன ஒரு நேர்த்தியான அழகு.

    ஓ அப்போதெல்லாம் ரேடியோவுக்கும் விளம்பரம் இருந்துதோ? அப்போ ஒன்று இரண்டு ரேடியோ ஸ்டேசன்ஸ் தானே இருந்திருக்கும்.. அதுக்கு எதுக்கு விளம்பரமோ..

    பதிலளிநீக்கு
  21. உங்கள் அம்மாவின் புத்தக வாசிப்புத்தான் உங்களுக்கும் வந்திருக்குது போலும்...

    பொன்னியின் செல்வன் ஹா ஹா ஹா எனக்கு அதைப்பார்த்ததும் சிரிப்புத்தான் வருது.. ஏனெனில் நான் இன்னும் முதல் பாகம் சில பக்கத்திலேயே நிக்கிறேன்ன் முன்னேற முடியாமல்:).

    என்னிடமும் விவேகானந்தர் புத்தகம், திருக்குறள் எல்லாம் இருக்கு[அப்பாவின் சேகரிப்பு].

    //ஒரு கல்யாண வீட்டில் கொடுத்த புத்தகம் 'மன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை ' சுவாமி சிவானந்தா ' அவர்கள் அருளுரை நர்மதா வெளியீடு.///

    கல்யாண வீட்டில் புத்தகம் குடுக்கினமோ.. இது நல்ல ஐடியாவா இருக்கே...

    பதிலளிநீக்கு
  22. அருமையான விமர்சனங்கள்... கதையோடு நிற்காமல் ஆன்மீகத்தையும் உள்ளே இழுத்து வந்திட்டீங்க..

    பதிலளிநீக்கு

  23. //“வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம்//
    எனக்கு தொட்டு பார்க்கா ஆசையா இருக்கு !


    //பி.நா.சிதம்பரமுதலியார்
    பெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //

    பேரக்ஸ் ரோட் இன்னுமிருக்கு அவர் கடை இருக்கானு பார்க்கணும்

    சேமித்த பொக்கிஷ புத்தகங்கள் எல்லாம் அருமை அக்கா .

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    பழைய புத்தகம் தொலைந்து விட்டதா?
    சில புத்தகங்கள் இப்படித்தான் பத்திரமாய் வைத்து இருந்தாலும் காணாமல் போய்விடும்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் நெல்லைத் தமிழன்.
    வாழ்க வளமுடன்.

    கஷ்டபட்டு பைண்ட் செய்த புத்தகங்களை விலைக்கு கொடுப்பார்கள்?
    அவை அவர்கள் நினைவுகளை சொல்லும் காலத்தின் சுவடுகள் அல்லவா?
    நீங்களும் நிறைய புத்தகங்கள் கொடுத்து விட்டு வந்து விட்டீர்கள் அல்லவா?

    //நீங்கள் குறிப்பிட்ட விளம்பரம், காசி கயாவிலிருந்து வரும் போலி விளம்பரங்கள் போல இருந்தது (நினைத்ததைக் கொடுக்கும் மோதிரம், ரேடியோப்பெட்டி போன்று). இத்தகைய விளம்பரங்களை நான் பாக்யா பத்திரிகையிலும் பார்த்திருக்கிறேன்.//

    பாக்யா பார்த்து பல வருடம் ஆச்சு.
    பாக்யாவில் இது போல விளம்பரங்கள் வருதா?

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //கோமதி அக்கா நலம்தானே? நீங்களும் போஸ்ட் போட்டு நீண்ட நாளாயிற்று...//

    நலம்தான் அதிரா.

    நானும் , நீங்களும் பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது.
    இப்போது இருவரும் ஒரே சமயத்தில் போட்டு இருக்கிறோம்.

    //நான் ஒரு அம்மம்மாவைச் சந்தித்திருக்கிறேன்.. அவவின் 94 ஆவது வயதிலோ என்னமோ.. அப்போ கேட்டேன் நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//

    அந்த காலத்து மனிதர்கள் நன்றாக பேசுவார்கள்.
    எனக்குதான் நீங்கள் சொல்வது புரியவில்லை.
    இது பகடியோ?

    பதிலளிநீக்கு
  27. வாங்க அதிரா,

    //ஒ அக்காலத்திலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமோ? இக்காலத்து மக்கள்தான் பேய்க்காட்டுகிறார்கள் என்றால் அப்பவும் அப்படியோ ஹா ஹா ஹா.. வாழையடி வாழை.//

    அன்றும் இன்றும், என்றும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள், வாழையடி வாழை என்று சொல்லிவிட்டீர்களே.

    //ஆஹா அத்தையின் கை எழுத்து என்ன ஒரு நேர்த்தியான அழகு.//

    ஆமாம் , நன்றாக இருக்கும் அவர்கள் கையெழுத்து.

    //ஓ அப்போதெல்லாம் ரேடியோவுக்கும் விளம்பரம் இருந்துதோ? அப்போ ஒன்று இரண்டு ரேடியோ ஸ்டேசன்ஸ் தானே இருந்திருக்கும்.. அதுக்கு எதுக்கு விளம்பரமோ..//

    ரேடியோ வாங்க விளம்பரம் அது அதிரா.



    பதிலளிநீக்கு
  28. akka
    கோமதியக்கா இது பூஸ் மொழி :) இருங்க நானா எக்ஸ்ப்ளெயின் செய்றேன்
    //நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//

    போன்=born

    நைன்ரீன் நோட் நோட்=1900 19 nought the digit 0.



    பதிலளிநீக்கு
  29. வாங்க அதிரா.
    //அருமையான விமர்சனங்கள்... கதையோடு நிற்காமல் ஆன்மீகத்தையும் உள்ளே இழுத்து வந்திட்டீங்க//

    தினம் படிக்கும் புத்தகங்கள் பகிர்வு.
    மனதுக்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் தரும் சன்னதி ஆண்டவனிடம் சரண்டைவதுதானே?
    ஒரு காலத்தில் கதை புத்தகங்கள் என்று படித்துகொண்டு இருந்த காலத்திலும் கூட இறை நம்பிக்கை தரும் புத்தகங்கள் படிப்பேன்.

    உங்கள் தொடர் கருத்துக்களுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்.

    //“வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம்//
    எனக்கு தொட்டு பார்க்கா ஆசையா இருக்கு !

    அதிரா சொல்வது போல் ஒரு மணத்தோடு இருக்கும் நல்ல பைண்ட் செய்யபட்டதால் கிழியாமல் இருக்கு.
    வாருங்கள் இங்கு தொட்டு பாருங்கள்.


    //பி.நா.சிதம்பரமுதலியார்
    பெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //

    பேரக்ஸ் ரோட் இன்னுமிருக்கு அவர் கடை இருக்கானு பார்க்கணும் //
    பேரக்ஸ் ரோட் பேர் அப்படியே இருக்கா?
    கடை இருக்காது என்று நினைக்கிறேன்
    மதராஸ் ஊரில் இருப்பவர்களிடம் கேட்க வேண்டும்.

    //சேமித்த பொக்கிஷ புத்தகங்கள் எல்லாம் அருமை அக்கா //

    சேமித்தவை எல்லாம் நமக்கு பொக்கிஷம் தானே ஏஞ்சல்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. ஏஞ்சல் வாங்க,

    akka
    கோமதியக்கா இது பூஸ் மொழி :) இருங்க நானா எக்ஸ்ப்ளெயின் செய்றேன்
    //நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//

    போன்=born

    நைன்ரீன் நோட் நோட்=1900 19 nought the digit 0.

    நினைத்தேன். இலங்கை பாசையாக இருக்கும் என்று.
    நீங்கள் அழகாய் விளக்கமாய் சொன்னதற்கு நன்றி ஏஞ்சல்

    பதிலளிநீக்கு
  32. பேரக்ஸ் ரோட் பேர் அப்படியே இருக்கா?//

    yes akka

    பதிலளிநீக்கு
  33. வாங்க ஏஞ்சல் ,

    பேரக்ஸ் ரோட் பேர் அப்படியே இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    மிலிட்டரி இருக்கும் இடமா?

    பதிலளிநீக்கு
  34. ///Blogger Angel said...
    akka
    கோமதியக்கா இது பூஸ் மொழி :) இருங்க நானா எக்ஸ்ப்ளெயின் செய்றேன்
    //நீங்க எப்போ போன் என அவ சொன்னா நான் நைன்ரீன் நோட் நோட் என.. ஹா ஹா ஹா ஆனா நல்ல தெளிவா பேசினா.//

    போன்=born

    நைன்ரீன் நோட் நோட்=1900 19 nought the digit 0.////

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  35. வாங்க அதிரா,
    தெரிந்து கொண்டு விட்டேன்.
    உங்கள் பூஸ் மொழியை.
    ஏஞ்சலுக்கு நன்றி.
    சிரிப்பு மகிழ்ச்சியும் கோபமும் கலந்ததா?
    உங்கள் சிரிப்புக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  36. அது பெரம்பூர் புரசைவாக்கம் வேப்பேரி பக்கத்தில் வரும்க்கா ..இப்போ ஏரியாவே மாறியிருக்கும்
    கூகிளில் தேடினா பெரிய அடுக்கு மாளிககிகளை காட்டுது

    பதிலளிநீக்கு
  37. ஏஞ்சல் , ஒரு வருடத்திற்கு முன் போன இடம் கூட இப்போது வேறு மாதிரி தோற்றம் அளிக்கிறது.1904 ம் வருட இடம் எப்படி அப்படியே இருக்கும்.
    ஒரு பெரிய வீடூ இருந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள் வரும் காலம் ஆச்சே!
    உங்கள் தேடலுக்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  38. அன்பு கோமதி,
    முப்பது மோதிரங்கள் கேட்டெனா. இதென்னடா இது.

    பெரிய நூலகத்தைப் பார்த்த பிரமிப்பு வருகிறது. எத்தனை தகவல்கள்.
    மல் துணி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே.
    குழந்தைகளுக்கு கோடைகாலத்தில் இதமான சட்டைகள் தைக்கலாமே.

    அருமையான புத்தகங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். சென்னையிலிருந்து மகன் தருவித்த
    புத்தகங்கள் எனக்கு இப்போது துணை.

    இருந்தும் பழைய புத்தகங்களைப் படிக்கும் ஆவல் விடவில்லை.
    உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்க மிக ஆசையாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன் அம்மா.

    பதிலளிநீக்கு
  39. அன்பு கோமதி,
    முப்பது மோதிரங்கள் கேட்டெனா. இதென்னடா இது.

    பெரிய நூலகத்தைப் பார்த்த பிரமிப்பு வருகிறது. எத்தனை தகவல்கள்.
    மல் துணி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே.
    குழந்தைகளுக்கு கோடைகாலத்தில் இதமான சட்டைகள் தைக்கலாமே.

    அருமையான புத்தகங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள். சென்னையிலிருந்து மகன் தருவித்த
    புத்தகங்கள் எனக்கு இப்போது துணை.

    இருந்தும் பழைய புத்தகங்களைப் படிக்கும் ஆவல் விடவில்லை.
    உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்க மிக ஆசையாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன் அம்மா.

    பதிலளிநீக்கு
  40. நல்ல பதிவு, தொடர்ந்து உங்கள் பனுள்ள படைப்புக்கள் பலரைச் சென்றடைய தமிழ்US உடன் இணையுங்கள்.

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    பதிலளிநீக்கு

  41. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.

    //முப்பது மோதிரங்கள் கேட்டெனா. இதென்னடா இது.//

    2010ல் போட்ட பதிவுக்கு நீங்கள் அளித்த பின்னூட்டம்.
    தங்கை மோதிரம் விற்கும் போது ஆதரவு அளிக்க நீங்கள் கேட்டது.


    //வல்லிசிம்ஹன் said...
    எனக்கு முப்பது மோதிரம் வேணுமே தங்கச்சி.:)
    இன்னும் இதுபோல நிறைய புத்தகங்கள் உங்களுக்குக் கிடைக்கவும், அவைகளை எங்களுக்குப் பகிர்ந்தளிக்கவும் வேண்டுகிறேன்.//

    கோமதி அரசு said...
    வல்லி அக்கா, 30 மோதிரத்திற்கு ஆர்டர் செய்து விட்டேன்.

    இன்னும் நிறைய புத்தகங்கள் ஊரில் இருக்கும். தீபாவளிக்கு ஊருக்கு போகிறேன், கொண்டு வந்து விடுகிறேன்.

    நன்றி அக்கா.

    நான் அளித்த பதில் பழைய பதிவில்.

    //மல் துணி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே.
    குழந்தைகளுக்கு கோடைகாலத்தில் இதமான சட்டைகள் தைக்கலாமே.//

    ஆமாம் அக்கா, அந்தகாலத்தில் கிளாஸ்கோ மல் துணியில் குழந்தைகளுக்கு சட்டை வெளளைவேளேர் என்று வெயில் காலத்தில் தைத்து போட்டது நினைவுக்கு வருது.

    // சென்னையிலிருந்து மகன் தருவித்த
    புத்தகங்கள் எனக்கு இப்போது துணை.//

    மகன் வீட்டுக்கு வந்து விட்டீர்களா?
    புத்தகங்கள் துணை மகிழ்ச்சி.

    //உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்க மிக ஆசையாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன் அம்மா.//

    வாங்க அக்கா எங்கள் வீட்டுக்கு.
    உங்கள் கருத்துக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  42. வணக்கம் தமிழ்US, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் அழைப்புக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  43. உங்க புத்தகங்கள் சேகரிப்பை பார்த்ததும் எனக்கு நான் ஆனந்தவிகடனில் சேகரித்து பைண்ட் செய்த கதைகள் ஞாபகம். ஆடாத ஊஞ்சல் எனும் நாவல் மிக பிடித்தது. இந்த மாதிரி நிறைய பழைய புத்தகங்கள் இருந்தன. எல்லாமே பிரச்சனையில் அழிந்து போயிற்று. ஓலைச்சுவடிகள் கூட அப்பா வைத்திருந்தார். அப்பாவின் தாத்தா கையெழுத்துடன் கூடிய புத்தகம் கூட வைத்திருந்தார்.
    பொன்னியின் செல்வன் நாவல் மறக்க முடியாதது. கதையை வாசிக்க முன்ன் அதற்கு யார் ஆர்ட் செய்தது என பார்ப்பேன். உங்க அத்தையின் கையெழுத்து புக் பொக்கிஷம் அழகா இருக்கு. நன்றி

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
    சுஜதாவின் கதை தானே ஆடாத ஊஞ்சல்?
    தொலைக்காட்சியில் நாடகமாய் வந்தது.


    //இந்த மாதிரி நிறைய பழைய புத்தகங்கள் இருந்தன. எல்லாமே பிரச்சனையில் அழிந்து போயிற்று. ஓலைச்சுவடிகள் கூட அப்பா வைத்திருந்தார். அப்பாவின் தாத்தா கையெழுத்துடன் கூடிய புத்தகம் கூட வைத்திருந்தார்//

    பிரச்சனையால் எவ்வளவு இழப்புகள் , மனதுக்கு வேதனை தரும் விஷயம்.
    கதை யார் எழுதியது? யார் ஓவியம்? என்று பார்ப்பது எனக்கும் பிடிக்கும்.
    இன்னும் பையண்ட் செய்யாமல் நோட்டு அட்டை யில் கிழித்து சேமித்து வைத்தவை இருக்கிறது.
    பழைய மங்கைமலர், போன்ற பெண்கள் இதழ்கள் எல்லாம் சேர்த்து வைத்து இருக்கிறேன்.

    அதனால் வீட்டில் பாதுகாக்க முடியவில்லை என்பதால் இப்போது வாங்குவது இல்லை.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அம்மு.

    பதிலளிநீக்கு
  45. பழைய புத்தகங்களின் கதையே தனிக்கதைதான் ஒவ்வொரு வீட்டிலும். வீடுமாற்றுகையில் பலவற்றை இழந்தவன் நான் - புத்தகங்களும் அதில் ஒரு கேஷுவல்ட்டி. என்ன செய்வது?

    1904 புத்தகம் படத்தில் பார்த்ததே ஆனந்தமாக இருக்கிறது. அந்தக்கால பாஷை, விளம்பரம், உஷா ரேடியோ அதற்கான ஓவியம்..ஆஹா!

    ஒவ்வொருவரும் முடிந்தால் இந்தப் பழையபுத்தகங்களைத் தூக்கிப்போட்டுவிடாமல் பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டும். ஆனால், அடுத்த தலைமுறை அமெரிக்காவில் அல்லவா போய் உட்கார்ந்துகொண்டிருக்கிறது என்கிற முணு முணுப்பும் கேட்கிறது. இருக்கட்டும். எங்கேயாவது எப்போதாவது சிலர் இவற்றை பொக்கிஷம் எனக் கருதக்கூடும் என்கிற நம்பிக்கையில் பாதுகாக்கவேண்டியதுதான். ஏனெனில், இதெல்லாம் போனால் வராது.. !

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் ஏகாந்தன் , வாழ்க வளமுடன்.

    //பழைய புத்தகங்களின் கதையே தனிக்கதைதான் ஒவ்வொரு வீட்டிலும். வீடுமாற்றுகையில் பலவற்றை இழந்தவன் நான் - புத்தகங்களும் அதில் ஒரு கேஷுவல்ட்டி. என்ன செய்வது?//

    இழந்தவைகளை கணக்கில் கொள்ளாமல் இருப்பதை பாதுகாக்க வேண்டியதுதான்.
    1800 ம் வருட புத்தகமும் இருக்கிறது தேடி எடுத்து போட வேண்டும்.

    உஷா ரேடியோ விளம்பர படம் கோபுலூ அவர்கள்.

    //ஒவ்வொருவரும் முடிந்தால் இந்தப் பழையபுத்தகங்களைத் தூக்கிப்போட்டுவிடாமல் பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டும். ஆனால், அடுத்த தலைமுறை அமெரிக்காவில் அல்லவா போய் உட்கார்ந்துகொண்டிருக்கிறது என்கிற முணு முணுப்பும் கேட்கிறது. இருக்கட்டும். எங்கேயாவது எப்போதாவது சிலர் இவற்றை பொக்கிஷம் எனக் கருதக்கூடும் என்கிற நம்பிக்கையில் பாதுகாக்கவேண்டியதுதான். ஏனெனில், இதெல்லாம் போனால் வராது.. !//

    உண்மைதான் நீங்கள் சொல்வது. ஒருவர் வேண்டாம் என்று தூக்கி போடும் புத்தகம் சிலருக்கு பொக்கிஷம் தான்.

    முடிந்தவரை பாதுகாக்க வேண்டும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.





    பதிலளிநீக்கு
  47. நல்லதொரு பகிர்வு. படங்களோடு பகிர்ந்திருப்பது சிறப்பு.

    எண்பதுகளில் வெளியான தொடர்களை நானும் பைன்ட் செய்து சேகரித்ததுண்டு.

    பதிலளிநீக்கு
  48. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நீங்களும் பைன்ட செய்து வைத்து இருக்கிறீர்களா?
    உங்கள் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. துளசிதரன்: அருமையான பதிவு சகோதரி. ரசித்து வாசித்தேன். அதுவும் பழைய காலத்துச் செய்திகள் மனதை ஈர்க்கத்தான் செய்கிறது. அந்த விளம்பரம் புன்னகையை வரவழைத்தது. நிறைய நற்சிந்தனைகள் புத்தகங்கள் சேகரிப்பு என்று அறிய முடிகிறது. ரேடியோ விளம்பரம் அழகாக இருக்கிறது
    புத்தக வாசிப்பு போய் ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. குறிப்பாகப் படிப்பு முடிந்து கேரளம் வந்ததும், அதன் பின் ஆங்கில இலக்கியம் என்பதால் அவ்வகையான புத்தகங்கள் வாசிப்பு இருந்தது அப்புறம் திருமணம் குடும்பம் என்றான பின் எதுவும் இல்லாமல் போனது. புத்தகங்கள் படங்கள் எல்லாம் பார்க்கவும் மனதிற்கும் இதமாக இருக்கிறது. இப்போது நெட் என்பது எனக்கு மொபைல் வழிதான் என்பதால் ரொமப்வே சிரமமாக இருக்கிறது வாசிப்பது. தற்போது ரிட்டையாராகி கல்லூரியில் ஜாயின் செய்கிறேன் அங்கேனும் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்று முயற்சி செய்ய வேண்டும். நல்ல பகிர்வு
    கீதா: ஹையோ அக்கா புத்தகம் எல்லாம் மனதைப் பறிக்கிறது. அந்த விளம்பரம் ஹா ஹா ஹா ஹா..
    அப்போதைய புத்தகங்கள் என்ன ஓரு அழகு இல்லையா? தற்போதைய இதழ்களை விட அப்போதய இதழ்கள் என்னவோ ஒர் அன்நியோன்யம் கொடுத்ததோ என்று தோன்றுகிறது. விளம்பரங்கள் கூடப் பாருங்கள். வெகுவாக ரசித்தேன்.
    அத்தையின் கையெழுத்துடன் கூடிய புத்தகம் பொக்கிஷம் தான். அந்த ரேடியோ விளம்பரம் ஆஹா சொல்ல வைக்கிறது. குடும்பமே கூடி எனது பழைய நினைவுகள்….பெரியவர்கள் இல்லாத போது இப்படியான பெரிய ரேடியோவைத்தான் எனது பெரிய கஸின் அவள் மட்டும் தான் பயன்படுத்துவாள். அவள் ஆன் செய்து நாங்கள் எல்லோரும் கூடி இருந்து சிலோன் ரேடியோ கேட்டு டான்ஸ் ஆடி என்று அமர்க்களமாக இருக்கும். பெரியவர்கள் வருகிறார்கள் என்று சொல்ல ஒரு பொடியனை வாசலில் அமர்த்தி அவனுக்கு லஞ்சம் ஒரு அல்லது அஞ்சு பைசா அல்லது ரப்பர், பென்ஸில் என்று ஏதோனும்….அல்லது தின்பண்டங்களில் ஷேர் என்று அல்லது கலெக்ட் செய்யும் தீப்பெட்டி படங்கள் கொடுத்தல் என்று பல….ஹா ஹா
    உங்கள் புத்தகக் கலெக்ஷன் அருமை அக்கா….ரொம்ப ரசித்து வாசித்தேன் பதிவை…தொடரட்டும் தங்களின் பகிர்வு….

    பதிலளிநீக்கு
  50. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.

    நீங்கள் மீண்டும் கல்லூரியில் பணியில் சேர்ந்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
    என் கணவரும் பணி ஓய்வுக்கு பின் மீண்டும் வேறு கல்லூரியில் வேலை பார்த்தார்கள்.
    பாடம் நடத்த ஆங்கில இலக்கியங்கள் படிப்பது போல் வரட்டும்.
    நான் ஒரு காலத்தில் திருவெண்காடு நூலகத்தில் கதை புத்தகங்கள் அனைத்தும் படித்து இருக்கிறேன்.
    மாயவர்ம் நூலகம், மதுரை பாரதிநகர் நூலகம் எல்லாம் நிறைய புத்தகங்கள் வாங்க்கி வந்து படித்து இருக்கிறேன்.
    இப்போது வீட்டுக்கு அருகில் நூலகம் இல்லை, இணைய வழி மட்டுமே படித்து வருகிறேன் புது கதைகளை.
    சில நேரம் பழைய சேமிப்புகளை எடுத்து படிப்பேன்.

    நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.
    பழைய பதிவுகளை படித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி துளசிதரன்.

    வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    உங்களை வலை பக்கம் காணவில்லையே என்றூ தேடினேன்.
    ஸ்ரீராம் நெட் கிடைக்கவில்லை பிரச்சனை என்றார்கள்.
    சரியாகி விட்டது மகிழ்ச்சி.

    உங்கள் மலரும் நினைவுகள் படித்து மகிழ்ச்சி அடைந்தேன்.
    இளமை குறும்பு அந்த நினைவுகளில் இருந்தது.

    //தற்போதைய இதழ்களை விட அப்போதய இதழ்கள் என்னவோ ஒர் அன்நியோன்யம் கொடுத்ததோ என்று தோன்றுகிறது. விளம்பரங்கள் கூடப் பாருங்கள். வெகுவாக ரசித்தேன்.//

    உண்மை கீதா.

    பழைய விள்மபரங்கள், பழைய நகைச்சுவைகளை பகிர எண்ணம் பார்ப்போம் முடிந்த போது பகிர்கிறேன்.

    புத்தக வாசிப்பு அனுபவம் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருப்பதை பார்த்தால் புத்தகத்தை நேசிப்பவர்கள் அதிகம் தான் என்று தெரிகிறது.
    உங்க்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.




    பதிலளிநீக்கு