ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மெல்ல மெல்ல விடியும் வைகறைப் பொழுது.


                                
                                        காலைப் பொழுது ---  நான் எடுத்த புகைப்படங்கள்
-



காலைப்  பொழுது மிகவும் ரம்மியமாய் இருக்கும்.  அதிகாலையில் எழுந்துகொள்வது கஷ்டம். ஆனால் எழுந்துகொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.அதிகாலை  நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள். அந்த நேரம் செய்யும் பிரார்த்தனைகள் , ஜப, தவங்கள்,  உடலுக்கு சக்தி அளிக்கும் உடற்பயிற்சிகள் என்று எல்லாமே நன்மை பயக்கும்.

 ஆனால் காலையில் எழுந்து கொள்ள வேண்டுமே!

 காலை எழுந்துகொள்ள வேண்டும் என்றுஅலாரம் வைத்துக் கொண்டு படுப்பவர்கள் கூட அது அடிக்கும் போது அதன் தலையில் தட்டிவிட்டு மறுபடியும்  போர்வையை முகம்  முழுதும் மூடிக் கொண்டு  தூங்குவது உண்டு. 




இப்போது செல்போனில் அலாரம்  வைத்துக் கொண்டு படுப்பவர்கள், அது அடிக்கும் போது கை அனிச்சையாக  அணைத்துவிட்டு சுகமாய் தூங்குவது உண்டு.

என் மகன் காலையில் எழுப்பிவிடு அம்மா என்று சொல்லிப் படுப்பான்,
காலையில் எழுப்பினால்,  ’ அம்மா!   கொஞ்சம் நேரம் கழித்து ,
கொஞ்சநேரம் கழித்து ” என்பான். “ நீ தானே எழுப்ப சொன்னாய்!” என்றால் ,
நீங்கள் எழுப்பும் போது இன்னும் கொஞ்சம் தூங்க ஆசையாக இருக்கிறது,
அப்போதுதான் சுகமாய் தூக்கம் வருகிறது ” என்பான். அவன் எழுந்து
கொள்ளவேண்டிய நேரத்திற்கு முன்பே அவனை எழுப்ப
ஆரம்பித்துவிடுவேன்.  அவன்  எந்த நேரம் எழுந்து கொள்ள நினைத்தானோ
அந்த நேரம் சரியாக இருக்கும். அவனுக்கும் அது தெரிந்துவிட்டதால்
சிறிது நேரம் படுத்துக்கொண்டுவிட்டுதான் எழுந்துகொள்வான்.

முன்பு குழந்தைகள், கணவர் எல்லோரும்  எழுந்துகொள்வதற்கு முன், நான்
எழுந்து   தியானம், உடற்பயிற்சி, மற்றவேலைகள் என்று பம்பரமாய் சுற்றிய   உடம்பு கொஞ்சம்  மக்கர் செய்கிறது. செல்லில் நாலுமணிக்கு அலாரம் வைத்தால்,  அதைக் கேட்டு எழுந்து கொள் என்கிறது மனம்,  கொஞ்சம் படுத்துக் கொள் என்கிறது உடல்.  சில நேரம் மனம் சொல்வதை கேட்டு சுறுசுறுப்பாய் எழுந்துகொள்வேன். சில நேரம் உடல் சொல்வதை கேட்டுப் படுத்துக் கொள்வேன். எப்படி என்றாலும் ஐந்து மணிக்கு மேல் படுத்திருக்க முடியாது.  தொட்டில் பழக்கம் என்பார்களே அப்படி .என் அம்மா காலை எழுந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

காலையில் மொட்டை மாடியில் என் வரவுக்குக்  புள்ளினங்கள் காத்திருக்கும்., காக்கா, புறா, தவிட்டுக்குருவி, புல்புல், மைனாவுடன் மற்ற ஜீவராசிகள் அணில், எறும்பு எல்லாம் காத்து இருக்கும்.  முதல்நாள் உணவை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து இருப்பேன்.  அதை விடியற் காலையில் பறவைகளுக்கு வைப்பேன். விடியற்காலையில் பறவைகள்  கூட்டில் தன் குஞ்சுகளை விட்டுவிட்டு, அதற்கு இரை தேடிப் பறந்து வரும்- அந்தநேரம்  உணவு அதற்கு மிகவும்  மகிழ்ச்சி அளிக்கும் .






ஒரு மண் பாத்திரத்தில் தண்ணீரும் வைத்து இருக்கிறேன். காலையில் கொஞ்சம் நடந்து கொண்டே பறவைகள் உண்ணும் அழகைப் பார்ப்பேன். அண்டங் காக்கா வந்தால், மற்ற பறவைகள் அது சாப்பிட்டுப் போகும் வரை பக்கத்தில் வராது,  காக்கா சாப்பிட்டு முடித்தால் புறா வரும். 


அதுவும் எந்த பறவையையும் பக்கத்தில் விடாது. கீழே சிந்துவதை சாப்பிடலாம் என்றால் அதையும் விடாது .கீழேயும்  வந்து துரத்தும். இக்காட்சியை என் கணவர் வீடியோ எடுத்துத் தந்தார்கள்.



                                           


 அப்புறம் அணில் , தவிட்டுக்குருவி, மைனா வந்து சாப்பிட்டது  போக மீதி இருக்கும் பருக்கைகளை எறும்பு இழுத்துப் போகும். சிறிது நேரத்தில் அந்த இடம் சுத்தமாகி விடும் !

மெல்ல மெல்ல சூரியன் வெளிக் கிளம்பும் அழகைப் பார்ப்பது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கும்.  வானம் விடியல்காலையில் பார்க்க மிக ரம்மியமாய் இருக்கும்.

வானம் எனக்கு ஒரு போதி மரம் !
 நாளும்எனக்கு ஒரு செய்தி சொல்லும்” 

காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது -நீலக்
 கடல் அலையில் மயில் எழுந்து நடனம்புரியுது”

என்ற பாடல்கள் என் மனதில் ஓடும்.    கிளிக்கூட்டம் பறக்கும் ’கீச் கீச்’ என்ற சத்தத்துடன், கொக்கு வரிசையாய் பறக்கும்.  கிருஷ்ணபருந்து பறக்கும்,  மீன் கொத்தி, மரக்கொத்தி, வாலாட்டும் குருவி, கறுப்புக்குருவி., தேன்சிட்டு எல்லாம் பறக்கும். காலைப் பொழுது அருமையானது. அதை எல்லாம் பார்த்து மகிழ கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும் நாளும்.
மாணிக்கவாசகரும், ஆண்டாளும் பாடிய காலைப் பொழுதுப் புள்ளினப் பாடல்கள் எல்லோருக்கும் தெரியும், மாறுதலாய் காலை அழகைப்பற்றிய வாணிதாசன்  கவிதை ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

       காலை அழகு

வெள்ளி முளைப்பினிலே - அழகு

துள்ளுது வான்பரப்பில்!-சிறு
புள்ளின ஓசையிலே - அழகு
பொங்கி வழியுதடி!

காலைப் பிறப்பினிலே - அழகு

கண்ணைக் கவருதடி! - சிறு
சோலைக் கலகலப்பில் - அழகு
சொரியுது உள்ளத்திலே!

சேவல் அழைப்பினிலே - அழகு
சிந்தையை அள்ளுதடி! - மன
ஆவல் அழித்துவிட்டால் - அழ
கானது நம்முடைமை!

தாமரை மொட்டுக்குள்ளே - அழகு
தங்கிக்  கிடக்குதடி! - கதிர்
சாமரை வீச்சினிலே - விரிந்து  
சஞ்சலம் போக்குதடி!

வீடு துலக்கும்பெண்கள் - குளிர்முகம்
வீசும் ஒளியழகில் - வான் 
நாடு விட்டு நகரும் - முழுமதி
நாணி முகம் வெளுத்தே!

பாரதியார் ’காலைப் பொழுது’என்று   பாடியுள்ளார்.

பாரதிதாசன் அதிகாலை பற்றிப்பாடி இருக்கிறார்.

பாரதியார் அக்கவிதையில் ஒற்றுமையைக் காண்கிறார் . பாரதிதாசன்  தன் பாடலில் உழைப்பைப் பற்றி  பாடுகிறார்.

இப்போது பரீட்சைக்கு படிக்கும் குழந்தைகள் காலை எழுந்து படித்தால் நல்லது , இரவு சீக்கீரம் தூங்கப்போய் அதிகாலை எழுந்து படித்தால், படித்தவை நினைவில் நிற்கும்.  நான் நன்கு படிப்பேன், நான் படிப்பது என் நினைவில் நிற்கும் ,நான் சிறப்பாய்த் தேர்வு எழுதுவேன், நல்ல மதிப்பெண்கள் பெறுவேன்என்று நாளும் மனதுக்குள் சொல்லிவிட்டுக் காலையில் படித்தால் படித்தவை  நினைவில் நின்று நன்கு தேர்வு எழுதமுடியும். எல்லா குழந்தைகளும் நன்கு படித்து நல்ல குழந்தைகளாய் வளர வாழ்த்துக்கள். குழந்தைகள் எல்லாம் அன்பும் கருணையும் நிறைந்து வாழ வேண்டும்.

நல்ல எண்ணத்தைக் காலையில் நினைத்தால் அது அப்படியே பலிக்கட்டும் என்று வானத்தில் உள்ள தேவதைகள் வாழ்த்துவார்களாம்!  நாமும் நாளும் வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் ! என்று நினைக்கலாம். வையகம் அமைதியாய் அன்பாய் இருந்தால் நாமும் அப்படியே இருக்கலாம் இல்லையா!.

                   
                                               வாழ்கவளமுடன்.


                                                    ---------------------

67 கருத்துகள்:

  1. ரம்யமான காலைப் பொழுது உங்கள் வரிகளில் இன்னும் ரம்யமானது.

    நீங்கள் பறவைகளுக்கு உணவளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    அந்தக் காணொளி மிகவும் இயற்கையாக அமைந்துள்ளது.

    அலாரம் தலையில் அடி வாங்குகிறதே அந்தப் படம் எல்லோர் வீட்டிலும் நடப்பதை அழகாய் படம் பிடித்துக் காட்டுகிறது.

    வைகறைப் பொழுது காட்சிகள் உங்கள் வரிகளில் நேரில் பார்க்கும் உணர்வைக் கொடுக்கிறது.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. வானம் எனக்கு ஒரு போதி மரம் !
    நாளும்எனக்கு ஒரு செய்தி சொல்லும்”

    அருமையான காட்சி ..

    நீரும் உணவும் மாடியில் வைத்திருக்கிறேன் ..

    பறவைகள் அந்த நீரில் குளிக்கின்றன ..

    பிறகே உணவு எடுக்கின்றன ..
    அதிசயித்து கவனிக்கிறேன் ..

    பதிலளிநீக்கு
  3. //காலையில் மொட்டை மாடியில் என் வரவுக்குக் புள்ளினங்கள் காத்திருக்கும்., காக்கா, புறா, தவிட்டுக்குருவி, புல்புல், மைனாவுடன் மற்ற ஜீவராசிகள் அணில், எறும்பு எல்லாம் காத்து இருக்கும்...

    விடியற்காலையில் பறவைகள் கூட்டில் தன் குஞ்சுகளை விட்டுவிட்டு, அதற்கு இரை தேடிப் பறந்து வரும்- அந்தநேரம் உணவு அதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.//

    எவ்வளவு கடப்பாடுகள்!.. இறைவன் தான் எத்தனை சொந்த பந்தங்களைக் கொடுத்திருக்கிறான்!..

    உடலுக்குள்ளும் அலாரம் உண்டு.
    இந்த மாதிரி சிந்தனைகளே அலாரம் மாதிரி செயல்பட்டு உசுப்பி எழுப்பி விட்டு விடும்!

    காக்கை குருவி எங்கள் சாதி என்று சொன்னவனின் பரம்பரை வழிவழி வந்து கொண்டுதானிருக்கிறது!





    பதிலளிநீக்கு
  4. காலைப் பொழுது நடப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கொஞ்ச நாட்களாக அதிக பயணம் செய்து வருவதால் காலை நடைப்பயிற்சி நின்று போயிருக்கிறது. உங்கள் பதிவைப் படித்தவுடன் நாளையிலிருந்து போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

    பறவைகள் வந்து உணவு உண்ணும் காட்சி காணொளி ரசிக்க வைத்தது.

    இனி காலைப் பொழுதில் உங்கள் நினைவு நிச்சயம் வரும், கோமதி.

    பதிலளிநீக்கு
  5. நானும் பறவைகளுக்கு இங்கு அரிசி வைப்பதுண்டு. நாளெல்லாம் அவற்றின் கீச்சுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். மிகவும் ரசிப்பேன்.

    ஆமா, என்ன உணவு வகைகள் அவற்றிற்கு வைப்பீங்க? உங்களிடமும், அமைதிச்சாரலக்காவிடமும் டிப்ஸ் கேக்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். நீங்களே பதிவு எழுதிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் காலையில் எழுந்து கொள்ள சோம்பல் படுவதுண்டு! ஆனால் எழுந்து கொண்ட நாட்கள் சுகமானது. உங்கள் வீட்டு காலைக்காட்சிகள் மிகவும் அழகு! ரசித்து பகிர்ந்த தங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான பகிர்வு. வீடியோ சுவாரஸ்யம். காகங்கள், புறாக்கள், தவிட்டுக்குருவி, அணில் எல்லாவற்றையும் படமெடுத்துத் தந்து விட்டீர்கள். வைகறைக் காட்சிகள் அழகு.

    அலாரத்தை அணைக்கப் போர்வைக்குள்ளிருந்து கை மட்டும் நீளும் சித்திரம் அருமை. சன்னல் காட்சியும் தத்ரூபம். எழுப்ப வந்திருக்கிறதோ குருவி:)?

    பதிலளிநீக்கு
  8. வியக்க வைக்கும் அழகிய காலைக் கதிரவனின் படங்களுடன் கூடிய அழகிய காட்சி வியக்க வைக்கிறது பாராட்டுகள்.....

    பதிலளிநீக்கு
  9. நல்ல பகிர்வு அருமையான படங்கள் இயற்கை யோடு ஒன்றும் போது மனம் நிறைவுகொள்கிறது அல்லவா

    பதிலளிநீக்கு
  10. விடியலை அழகாக ரசித்திருக்கிறீர்கள். எங்கள் வீட்டிலும் அணிலும் காகமும் ஒன்றாக சாப்பிடும். புகைப்படம் உள்ளது. பின்னர் பகிர்கிறேன்..
    இனிமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  11. வைகறைப்பொழுது காட்சிகள் மனத்துக்கு இதமாக இருக்கின்றது.

    விடியோ நன்றாக ரசிக்கவைத்தது.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராஜி, வாழ்க வளமுடன்.
    பதிவை, ரசித்து அழகாய் பிடித்தவைகளை பகிர்ந்த் கொண்டதற்கு நன்றி ராஜி.
    முதலில் வருகை தந்து பின்னூட்டம் அளித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன். விடியல் பொழுதின் காட்சிகளை ரசித்தமைக்கு நன்றி.
    நீங்களும் பறவைகளுக்கு உணவும் தண்ணீரும் வைப்பது மகிழ்ச்சி.

    ஒவ்வொரு பறவையும் தன் அலகால் உடல் முழுவதும் சுத்தம் செய்து விடுகிறது.

    உங்கள் வீட்டில் குளிப்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்னது போல் இறைவன் சொந்த பந்தங்களை கொடுத்து இருக்கிறார்.

    நீங்கள் சொல்வது போல் உடலுக்குள் அலராம் உண்டு நாளை சீக்கீரம் எழுந்து கொள்ள் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுத்தால் அலராம் இல்லாமலே மனம் எழுப்பி விட்டு விடுகிறது.
    பாரதி தனக்கு உணவு இல்லை என்றாலும் குருவிகளுக்கு உணவு படைத்தார் அவருக்கு நிகர் அவரே!
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    பதிவினால் நன்மை உங்கள் நடைபயிற்சி தொடர்வது.
    நானும் அப்படித்தான் அமுதவன் என்ற பதிவர் காலை நடை பயிற்சியை பகிர்ந்து இருந்தார், என் விட்டு போன நடையை அவர் பதிவின் மூலம் தூண்டி விட்டார்.
    தினம் காலை நினைத்துக் கொள்வது மகிழ்ச்சி.
    எனக்கும் நினைவு வரும் உங்கள் பின்னூட்டத்தால்.நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க ஹுஸைனம்மா, வாழ்கவளமுடன்.

    நீங்கள் கேட்ட டிபஸ் : காலையில் சாதம், விரத நாட்களில், பண்டிகை நாட்களில் பட்சணங்கள் கூடுதலாய். சாதம் இல்லையென்றால் பிஸ்கட், அரிசி, நாம் சாப்பிடும் உணவு எல்லாம் அவையும் சாப்பிடுகிறது எல்லாம் வைக்கலாம். வடை என்றால் பிச்சி பிச்சி வைப்பேன் இல்லையென்றால் எல்லா பறவைகளுக்கும் கிடைக்காது, ஒரு காக்கா மட்டும் கொத்தி சென்று விடும்.

    பறவைகளின் கீச், கீச் ஒலியை ரசிப்பது மகிழ்ச்சி, நமக்கு உற்சாகத்தை அளிக்கிறது அல்லவா!
    நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  17. மினி வேடந்தாங்கலே உங்க வீட்டுல இருக்கு கோமதிம்மா.. ஒவ்வொண்ணையும் பார்க்க அவ்ளோ ஆசையா இருக்கு.

    @ஹுஸைனம்மா,.. கோமதிம்மா சொன்னதுபோல்தான் நானும் சாப்பாடு கொடுப்பேன். வடை,தோசை,இட்லி போன்ற உணவுகளைப் பிச்சுப்போட்டு வைப்பேன். எப்பவாவது கைப்பிடியளவு தானியங்கள் முக்கியமா சோளத்தைப் போட்டு வைப்பேன். சோளம் புறாக்களுக்கு ரொம்பப்பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  18. வாங்க சுரேஷ், வாழ்கவளமுடன்.
    விடியல்காலையில் எழுந்து கொண்டால் அன்று முழுவதும் நாள் நன்றாக தான் இருக்கும்.
    இப்பொழுது வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டுவேலைகளை மின்சாரம் இருக்கும் போதே முடித்துக் கொள்ள சீக்கரம் எழுந்து கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதனால் விடியல் பொழுதை அவர்களால் ரசிக்கத்தான் முடியவில்லை.
    உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.

    வைகறை காட்சிகள் நீங்கள் எடுத்தால் இன்னும் நன்றாக எடுப்பீர்கள்.
    காணொளி நன்றாக இருக்கா, மகிழ்ச்சி.

    ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி. குருவி எழுப்பத்தான் வந்து இருக்கிறது. நான் பறவைகள் சாப்பிடும் அழகை சொல்லி சொல்லி இப்போது என்னுடன் சேர்ந்து சில நேரங்களில் அவர்களும் வந்து ரசிப்பார்கள் பறவைகளை அப்படி ரசித்தபோது தான் எடுத்தார்கள் வீடியோ.
    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க மாலதி, வாழ்கவளமுடன். நீங்கள் கவிதாயினி அல்லவா ! அது தான் இத்தனை ரசனை உங்களுக்கு.
    நன்றி மாலதி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க மலர் பாலன், வாழ்க வளமுடன் நீங்கள் சொல்வது உண்மைதான். இயற்க்கையோடு ஒன்றும் போது மகிழ்ச்சிதான். வீட்டுகடமைகள் இருப்பதால் மனமில்லாமல் இறங்கி வருவேன்.
    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க முரளிதரன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வீட்டிலும் காகமும், அணிலும் ஒன்றாக உண்ணும் படம் இருக்கா? பகிர்ந்து கொள்ளுங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.
    நன்றி முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  23. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
    பதிவை ரசித்தீர்களா? நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
    வைகறை பொழுது நீங்கள் சொல்வது போல் இதமானது தான்.
    வீடியோவை ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க விமலன், வாழ்கவளமுடன்.
    சில நேரங்களில் படங்களுக்காக பதிவு.
    நன்றி, உங்கள் முதல்வருகைக்கும், கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  26. வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.

    காலையில் மினி வேடதாங்கல் பார்க்கலாம்.

    நல்ல வெயில் வரும் போது எங்காவது மரத்தில் இளைப்பாறும் , மாலை மறுபடியும் வந்து விடும். வேப்பமரத்தில் வேப்பம்பழம் பழுத்துவிட்டால் கிளிக்கூட்டம் அதிகமாய் இருக்கும்.
    உங்கள் ஊரில் புறா அதிகமாய் இருக்கும் அதனால் சோளம் எல்லாம் வாங்கி போடுகிறீர்கள். இங்கு யார் வீட்டிலோ வளர்க்கும் புறா இரண்டு மட்டும் தினம் வரும்.

    உங்கள் வரவுக்கு நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  27. மிகவும் அழகான பதிவு. மிகச்சிறப்பாகவே ஒவ்வொன்றையும் பற்றி விளக்கியுள்ளீர்கள்.

    நான் மிகவும் ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  28. //காலையில் மொட்டை மாடியில் என் வரவுக்குக் புள்ளினங்கள் காத்திருக்கும்., காக்கா, புறா, தவிட்டுக்குருவி, புல்புல், மைனாவுடன் மற்ற ஜீவராசிகள் அணில், எறும்பு எல்லாம் காத்து இருக்கும்...

    விடியற்காலையில் பறவைகள் கூட்டில் தன் குஞ்சுகளை விட்டுவிட்டு, அதற்கு இரை தேடிப் பறந்து வரும்- அந்தநேரம் உணவு அதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.//

    ஆம், இவைகளையெல்லாம் நம் உறவினர் போல கண்டு மகிழ்வதில் தான் எத்தனை மகிழ்ச்சி! ;)))))

    நானும் சில நேரங்களில் இவற்றையெல்லாம் பார்த்து ரஸித்து மகிழ்ந்தது உண்டு.

    அது ஓர் தனி இன்பமே! மிக நன்றாக அனுபவித்து மகிழ்ந்து எழுதியுள்ளீர்கள்.


    >>>>>>

    பதிலளிநீக்கு
  29. சார் வரைந்துள்ள ஓவியம் வழக்கம்போல் அட்டகாசம்.

    நல்ல உறக்கத்தில் இழுத்துப்போத்திக்கொண்டு ஒருவர், அவர் தலைப்பக்கம் அலாரம் அடிக்கிறது.

    இவர் என்னதான் தூங்கினாலும் உலகம் வழக்கம்போல விழிக்கிறது..... இயற்கை அதனதன் காரியங்களைச் செய்கிறது என்பதைக்காட்டிடும் படம் என மிகச்சிறப்பாக உள்ளன.

    அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>>>>>

    பதிலளிநீக்கு
  30. விடியலில் விழிப்போர் வெற்றியடைகின்றனர், தங்கள் வாழ்க்கையில்.

    விடியலில் தூங்குவோர் மகிழ்ச்சியடைகின்றனர், தங்களின் இனிமையான தூக்கத்தில்.

    மொத்தத்தில் இதெல்லாம் அவரவர்களின் வயது, தேவை போன்றவற்றைப் பொருத்ததே.

    வாழ்க்கையே ஓர் ஓட்டப்பந்தயம், அதில் சிலர் கட்டாயம் இங்குமங்கும் ஓட வேண்டிய நிர்பந்தம் ..... அணில் போலவும் எறும்புகள் போலவும், அந்தப்பறவைகள் போலவும்.

    சிலருக்கு இதன் தேவைகளும், நிர்பந்தங்களும் சூழ்நிலைகளும் மாறலாம்.

    எல்லாமே அழகாக உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அன்பான தகவலுக்கும், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ooooo

    பதிலளிநீக்கு
  31. காலையில் மொட்டை மாடியில் என் வரவுக்குக் புள்ளினங்கள் காத்திருக்கும்., காக்கா, புறா, தவிட்டுக்குருவி, புல்புல், மைனாவுடன் மற்ற ஜீவராசிகள் அணில், எறும்பு எல்லாம் காத்து இருக்கும். முதல்நாள் உணவை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து இருப்பேன். அதை விடியற் காலையில் பறவைகளுக்கு வைப்பேன். விடியற்காலையில் பறவைகள் கூட்டில் தன் குஞ்சுகளை விட்டுவிட்டு, அதற்கு இரை தேடிப் பறந்து வரும்- அந்தநேரம் உணவு அதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் .//படிக்கையில் பரவசமாக உள்ளது.படங்கள் இதமாக உள்ளது.உண்மையில் இந்த பகிரவை படீகும் பொழுது நாமும் அதே போல் காலையில் எழுந்து மொட்டை மாடி சென்று...என்ர ஆர்வத்தை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  32. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.
    //நான் மிகவும் ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன்.//


    நீங்கள் ரசித்து வாசித்தது மகிழ்ச்சி.

    //ஆம், இவைகளையெல்லாம் நம் உறவினர் போல கண்டு மகிழ்வதில் தான் எத்தனை மகிழ்ச்சி! ;)))))//

    நீங்கள் சொல்வது சரி சார், நம் உறவினர் போல் ஆகி விட்டார்கள். தினம் அவைகள் சாப்பிடுவதை பார்த்த அனுபவத்தில் அதற்கு தண்ணீர் சாதம் பிடிப்பது இல்லை என்று தெரிந்து கொண்டேன் அடிக்கடி சாப்பிடும் உறவினரின் விருப்பு வெறுப்புகள் நமக்கு தெரிந்துவிடும் அது போல் ஒருமுறை குக்கர்குள் விழுந்து விட்ட சாதம் வடிகட்டி கொண்டு வைத்தேன் சாப்பிடவில்லை. அது காய்ந்தபின் மறு நாள் சாப்பிடுகிறது அதிலிருந்து
    அதன் விருப்பங்கள் தெரிந்து அதற்கு பிடித்த உணவு கொடுக்க ஆரம்பித்து விட்டேன். அது மகிழ்ச்சிதான்.
    என்ன இன்னும் பக்கத்தில் வர மாட்டேன் என்கிறது, அது வருத்தம். நாம் சாப்பாடு வைக்க வரும் வரை காத்து இருக்கும் ,நாம் கொஞ்சம் நகர்ந்தால் தான் உணவு எடுக்கும்.பக்கத்தில் போய் படம் எடுக்க போனால் ஓடி விடுகிறது. தூரத்திலிருந்து தான் படம் எடுக்க வேண்டி உள்ளது.

    //இவர் என்னதான் தூங்கினாலும் உலகம் வழக்கம்போல விழிக்கிறது..... இயற்கை அதனதன் காரியங்களைச் செய்கிறது என்பதைக்காட்டிடும் படம் என மிகச்சிறப்பாக உள்ளன.//

    ஆம், சார் பொழுது யாருக்காகவும் காத்து இருப்பது இல்லை அது தன் கடமையை செய்கிறது. உங்கள் அழகான விமர்சனத்திற்கும், ஓவியத்தை ரசித்து ஸ்பெஷல் பாராட்டுக்கள் சாருக்கு வழங்கியதற்கு நன்றி.

    //வாழ்க்கையே ஓர் ஓட்டப்பந்தயம், அதில் சிலர் கட்டாயம் இங்குமங்கும் ஓட வேண்டிய நிர்பந்தம் ..... அணில் போலவும் எறும்புகள் போலவும், அந்தப்பறவைகள் போலவும்.

    சிலருக்கு இதன் தேவைகளும், நிர்பந்தங்களும் சூழ்நிலைகளும் மாறலாம்.//

    சரியாக சொன்னீர்கள் சார் சிலருக்கு வாழ்க்கை ஓட்ட பந்தயம் தான்.
    வீட்டுவேலை, ஆபீஸ் வேலை என்று இரட்டை பாரம் சுமக்கும் பெண்கள் இருக்கிறார்கள்.

    சிறு வயதில் நானும் குழந்தைகளை சீக்கிரம் பள்ளிக்கு அனுப்புவது, கணவரை கல்லூரிக்கு அனுப்புவது என்று காலை பொழுதின் அழகை ரசிக்க முடியாமல் இருந்து இருக்கிறேன். இப்போது தான் நிதானமாய் ரசிக்க முடிகிறது.

    எப்படியோ வாழ்க்கையை அதன் போக்கில் போய் ரசிக்க பழகி கொண்டு விட்டோம்.
    உங்களுடைய விரிவான பின்னூட்டங்கள் மகிழ்வை தருகிறது.
    மிகவும் நன்றி சார்.





    பதிலளிநீக்கு
  33. வாங்க ஸாதிகா, வாழ்கவளமுடன்.

    //உண்மையில் இந்த பகிரவை படீகும் பொழுது நாமும் அதே போல் காலையில் எழுந்து மொட்டை மாடி சென்று...என்ர ஆர்வத்தை தூண்டுகிறது.//

    மகிழ்ச்சி ஸாதிகா, நேரம் கிடைக்கும் போது மொட்டை மாடி சென்று பாருங்கள். ரம்மியமாய் இருக்கும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  34. இதமான காலைப்பொழுதில் நீங்கள் எடுத்த படங்கள் மிக அழகு.

    பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நம் கடமைகளை செய்வது மிகச்சிறப்பு.

    //இப்போது செல்போனில் அலாரம் வைத்துக் கொண்டு படுப்பவர்கள், அது அடிக்கும் போது கை அனிச்சையாக அணைத்துவிட்டு சுகமாய் தூங்குவது உண்டு.//

    என் மகள் இதைதான் செய்வாள் பிறகு என்னிடம் ஏம்மா நீ எழுப்பக்கூடாதா? என்பாள்.

    காலைப்பொழுதுகளை மிக அழகாக விவரித்து இருக்கீங்க,மேடம்.

    பதிலளிநீக்கு
  35. வாங்க ரமாரவி, வாழ்க வளமுடன்.
    .//என் மகள் இதைதான் செய்வாள் பிறகு என்னிடம் ஏம்மா நீ எழுப்பக்கூடாதா? என்பாள்.//
    குழந்தைகள் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். அம்மா எழுப்ப வேண்டும் அவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் என்று கெஞ்சி கொஞ்சுவார்கள். காலை குழந்தைகளை எழுப்புவதே எல்லோர் வீட்டிலும் வாடிக்கை.
    அம்மாக்களுக்கு இது ஒரு சுகமான வேலை.(சில வீடுகளில் டென்சன்)
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ரமாரவி.

    பதிலளிநீக்கு
  36. என்ன ஒரு அழகான நினைவு. காலை வேளை எவ்வளவு இனிமையோ அவ்வளவு இனிமை உங்கள் பதிவி அதுவும் உங்கள் கணவர் எடுத்த வீடியோ
    பிரமாதம்.
    இந்த ஒரு தயாள குணமே வருங்கால சந்ததிகளைக் காக்கும்.
    கோமதி காலைக் கதிரவனின் புகைப்படங்கள் மிகவும் அற்புதம். உங்களிடம் ஒளிந்திருந்த இன்னோரு கோணத்தைப் பார்க்கிறேன்.மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  37. வாங்க வல்லி அக்கா, வாழ்கவளமுடன்.
    பதிவு இனிமையாக இருக்கா மகிழ்ச்சி.கணவர் எடுத்த வீடியோவை பாராட்டியதற்கு நன்றி. என் புகைப்படங்கள் நன்றாக இருக்கிறதா ? மகிழ்ச்சி.உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  38. வாங்க காஞ்சனாராதாகிருஷ்ணன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. அருமையான படங்கள்.
    பாரதியார் கவிதை இப்போ தான் படிக்கிறேன்.
    காலைப் பொழுதின் ஈர்ப்பே அலாதி.

    பதிலளிநீக்கு
  40. வாங்க அப்பாதுரை, வாழ்கவளமுடன்.
    பாரதியார் கவிதை காலைப் பொழுது வாசித்து பார்த்தீர்களா மகிழ்ச்சி எல்லோரும் பாரதியார் பாட்டு படித்து இருப்பார்கள் என்பதால் வாணிதாசன் எழுதிய ’காலை அழகு’ பகிர்ந்து கொண்டேன்.

    நீங்கள் சொன்னது போல் காலைபொழுதின் ஈர்ப்பு அதிகம் தான்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. படங்களும் பகிர்வும் அருமை. ஓவியம் அருமை. எல்லோர் வீட்டிலும் நடக்கும் காட்சிகள் தான் அலாரம் அடிப்பதும், அதை நிறுத்தி விட்டு தூங்குவதும்....:)

    இங்கு நான் குரங்குகளுக்கும், பூனை அணிலுக்கும் , காக்கைக்கும் என உணவுகளை வைப்பேன்...

    பதிலளிநீக்கு
  42. குளிர்கால காலை நேர தேநீர் போல , அருமையான பதிவு ....

    பதிலளிநீக்கு
  43. வாங்க ஜீவன் சுப்பு , வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. அதிகாலையில் எழும் பழக்கம் இந்நாட்களில் மறைந்து கொண்டே வருகிறது என்று தோன்றுகிறது. வேலை பார்ப்பவர்களை விடுங்கள். படிக்கும் குழந்தைகளையே சொல்லலாம். பறவைகளுக்கு உணவளிக்கும் பழக்கம் மனதுக்கு உற்சாகம் தரும். புகைப் படமெடுத்துப் பகிர்ந்தது சந்தோஷம். அரசு சாரின் படங்கள் பொறாமையைக் கொடுக்கின்றன. நினைத்ததை வரைந்து விடுகிறாரே.

    பதிலளிநீக்கு
  45. ரம்யமான காலைப்பொழுது மிக மிக ரசிக்க வைத்தது உங்கள் புகைப்படங்கள். பாரதியின் வரிகளில் மெய் மறந்தேன்.

    பதிலளிநீக்கு
  46. வாங்க ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
    அதிகாலையில் எழும் பழக்கம் இல்லாததற்கு காரணம் அவர்கள் இரவில் வெகு நேரம் கழித்து தூங்குவது ஒரு காரணமாய் இருக்கும். பழைய வாழ்க்கை முறை இல்லையே இப்போது உள்ள குழந்தைகளுக்கு.
    பள்ளிகள் சீக்கிரம் ஆரம்பிப்பதால் அவர்கள் இரவு சீக்கிரம் தூங்க போவது நல்லது.


    எல்லோருக்கும் தூக்கம் என்பது ஆரோக்கியத்தை தரக்கூடியது என்கிறார்கள். இரவு சீக்கிரம் படுத்தால் சீக்கிரம் எழுந்து கொள்ளலாம், இரவு நேரம் கழித்து தூங்குபவர்கள் மெதுவாய் எழுந்து கொள்ளலாம். சூரியன் வரும் முன் எழுந்து கொள்வது நல்லது.

    நீங்கள் சொல்வது போல் பறவைகள் உணவு எடுத்துக் கொள்வதை பார்ப்பதே மனதுக்கு உற்சாகம் தான்.

    சார் படத்தை ரசிக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி.


    பதிலளிநீக்கு
  47. வாங்க சசிகலா, வாழ்க வளமுடன்.
    ரம்யமான காலை பொழுதை ரசித்தமைக்கு நன்றி சசிகலா.

    பதிலளிநீக்கு
  48. வைகறைத் துயில் எழுவது பலருக்கும் இயலாத ஒன்றாகத்தான் இருக்கிறது.கடமை அழைக்கும்போது நேரம் காலம்தான் ஏது? காணொளியும் பதிவும் வழக்கம்போல அருமை

    பதிலளிநீக்கு
  49. வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்னது போல் கடமை அழைக்கும் போது நேரம் காலம் பார்க்க முடியாது தான்.
    பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி, நன்றி இந்திரா.

    பதிலளிநீக்கு
  50. இனிய காலை வணக்கம் சகோதரி

    அப்பப்பா.... என்னை உங்கள் வலைக்குள் நுழைய விடமாட்டேன் என இத்தனை நாள் துள்ளித்துள்ளி முரண்டு கொண்டிருந்தது உங்கள் வலைப்பூ. அதை அடக்கும் வழி கண்டு பிடித்து ஒருவாறு உள்ளே வந்துவிட்டேன்...:)

    அருமை. வரும்போதே புத்தம் புதுக்காலை பொன்னிறவேளைன்னு அழகான பதிவில் மனதை அள்ளிக்கொண்டுவிட்டீர்கள்.

    அதைவிட அழகழகான புள்ளினங்கள், அணில், மொட்டைமாடி தரிசனம்...

    அருமையாக இருக்கிறது அழகிய படங்களும் உங்கள் பதிவுகளும்...
    வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  51. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
    ஏன் துள்ளிதுள்ளி முரண்டு பிடித்தது என்று தெரியவில்லையே !

    வெற்றிகரமாய் துடுக்கை அடக்கி அழகான பின்னூட்டம் அளித்துவிட்டீர்கள்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  52. வைகறையின் அழகு உங்களின் பதிவில் இன்னும் கூடுதலாய் மிளிர்கிறது! உங்கள் பதிவில் ஒவ்வொரு வரியையும் படித்த போது, உங்களுடனேயே அருகிலிருந்து அத்தனை அழகுகளையும் ரசித்தது மாதிரி இருந்தது!!

    பதிலளிநீக்கு
  53. வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன். நீங்கள் தஞ்சையில் இருப்பதாய் சொன்னீர்களே வந்து விட்டீர்களா?
    உங்கள் வரவுக்கும், வைகறையின் அழகை ரசித்தமைக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  54. காக்கை குருவி நம் ஜாதி என்பது சத்தியம்!

    நம்மூர் குருவிகளுக்கு காலை உணவு ப்ரெட். என்ன இருந்தாலும் வெள்ளையர்கள் பாருங்க:-)

    இப்பதான் சில மாதங்களா வெறும் சாதம் பிற்பகலுக்கு வைக்கிறேன்.

    சீனர்கள் அதிகமாகிவிட்டனர் நம்மூரில். அதான் குருவிகளுக்கும் உணவுப்பழக்கம் மாற்றிப்பழக்கணும்.

    பர்ட் பாத் தண்ணியிலே குடியலும் குளியலும்.

    இந்த பத்து நாளா ஸ்நாக் கிடைக்குது அவுங்களுக்கு. நம் வீட்டு சூரியகாந்திப்பூவில் வரும் விதைகளை வரிசை வரிசையா கொத்தி எடுத்துத் தின்னுகிறார்கள். சட்னு பார்த்தால் பூக்கள் எல்லாம் முன் மண்டை சவரம் செஞ்ச குருக்களாத்து அம்பிகள் தலைபோல் உள்ளன!!!

    நேற்று விஸிட் வந்த தோழி ஒரு பேப்பர் பையை மாட்டி விட்டால் சூரியகாந்தி விதைகள் கிடைக்கும் என்றார்கள்.

    நமக்குக் கடையில் 100 கிராம் வாங்கினால் ஆச்சு. தினம் ஃப்ரெஷா தின்னணுமுன்னு அவுங்களுக்கு டாக்டர் அட்வைஸ் னு சொன்னேன்:-))))

    பதிலளிநீக்கு


  55. வாங்க துளசி, வாழ்கவளமுடன்.

    //இந்த பத்து நாளா ஸ்நாக் கிடைக்குது அவுங்களுக்கு. நம் வீட்டு சூரியகாந்திப்பூவில் வரும் விதைகளை வரிசை வரிசையா கொத்தி எடுத்துத் தின்னுகிறார்கள். சட்னு பார்த்தால் பூக்கள் எல்லாம் முன் மண்டை சவரம் செஞ்ச குருக்களாத்து அம்பிகள் தலைபோல் உள்ளன!!!//

    குருவிக்கு சூரியகாந்தி விதை முறு முறு ஸ்நாக் போல!

    சூரியாகாந்தியின் விதைகள் கொத்தப்பட்டவுடன் பூவின் நிலையை உவமானம் சொல்லி ரசிக்கும் உங்கள் ரசனை அருமை.
    உங்கள் வருகைக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி துளசி.

    பதிலளிநீக்கு
  56. எனக்கு. காலைப் பொழுது பற்றிய படங்களைப் பார்க்கவே ஊரின் ஏஎனக்கு. காலைப் பொழுது பற்றிய படங்களைப் பார்க்கவே ஊரின் ஏக்கம் வருகிறது. வீடீயோவும் நன்று.
    மிக உற்சாகம் வரும் காலைப்போழுது பற்றிய பதிவு எழுதும் சிந்தனைக்கு தங்களிற்கு வாழ்த்துக் கூற வேண்டும்.
    மறுபடியும் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    க்கம் வருகிறது. வீடீயோவும் நன்று.
    மிக உற்சாகம் வரும் காலைப்போழுது பற்றிய பதிவு எழுதும் சிந்தனைக்கு தங்களிற்கு வாழ்த்துக் கூற வேண்டும்.
    மறுபடியும் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  57. வாங்க வேதா .இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.

    உங்களுக்கு ஊர் ஏக்கம் வந்து விட்டதா!

    வைகறை ஆதவன் , வானம், புள்ளினம் எல்லாம் எப்போதும் மகிழ்ச்சி தருவது.
    வேலை அதிகமாய் உள்ளபோது ரசிக்க முடியாதவைகளை இப்போது ரசிக்க நேரம் இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  58. விடியலை அழகாக ரசித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  59. வாங்க சமுத்ரா. வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  60. அன்பு கோமதி,
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். மிகச் சிறப்பான பதிவை பகிர்ந்து இருக்கிறார் இந்த வார வலைச்சர ஆசிரியர்.
    அவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  61. அன்பு ரஞ்சினி வாங்க, வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  62. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்.
    பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு.

    பதிலளிநீக்கு
  63. பதில்கள்
    1. வணக்கம் Aradhya, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு