புதன், 9 டிசம்பர், 2015

மழை! மழை! எங்கும் மழை!

மழை! மழை! எங்கும் மழை!. மழைக்கு ஏங்கித் தவித்து மழைக்காகப் பிரார்த்தனை செய்து மழையைக் கேட்டால், கொடுத்தார் வருணபகவான்.  பெருமழை- கனமழை. தாங்கிக் கொள்ள ஈசன் தான் வந்து இருக்க வேண்டும். கங்கையைத் தன் தலையில் தாங்கி பின் அதை மிதமாய் ஓடவிட்டது போல் இந்த கனமழையைத் தாங்கி மிதமழையாக நின்று நிதானமாய் பெய்யும் மழையாக கொடுத்து இருக்கலாம்.

இருக்கும் ஏரி, குளங்களை, சரிசெய்து கொள்ளுங்கள்,  தூர்வாரி மழை நீரை சேமித்துக் கொள்ளுங்கள்,என்று  சின்ன எச்சரிக்கை விட்டு வந்து  இருக்கலாம். இனியாவது  அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் என்று பாடம் புகட்டி சென்று விட்டது.

எத்தனை பொருள் இழப்பு, உயிர் இழப்பு !   இதிலிருந்து மீண்டு வர எத்தனைக் காலம் பிடிக்கும்?
உதவும் உள்ளங்கள், மனிதநேயம் மிக்கவர்கள் , எல்லாம் செய்யும் தொண்டுகள்  ஏராளம். சாதி  மதம்   கடந்த அன்புள்ளங்களின் சேவை போற்றுதலுக்கு குரியவை, அவர்கள் எல்லோரையும்  வாழ்த்தி வணங்கி மகிழ வேண்டும்.

மழை மீண்டும் வரும் என்கிறார்கள் . இனி வடமாவட்டங்களில்  மழை இல்லை, தென் மாவட்டங்களில் மழை என்கிறார்கள். மணி முத்தாறு நிறைந்து வருகிறது  என்கிறார்கள். மேலும் மக்களை சோதனை செய்யாமல்  இறைவன், இயற்கை காத்து அருள வேண்டும்.

நாங்கள் இரண்டு மாதங்களுக்கு முன் (அக்டோபர்)தம்பி மகள் திருமண நிச்சயதார்த்தத்திற்கு மாங்காடு போய் இருந்தோம்.   அன்று மாலை நல்ல மழை. அப்போது மெதுவாய் ஆரம்பித்தது மழை. நாங்கள் போன ஊரில் எல்லாம் மழை தான்.
தேவகோட்டை  தாமரைக்குளம்.
தேவகோட்டையில் திருமண வீடு

தேவகோட்டைக்கு  நண்பர் வீட்டுத் திருமணத்திற்குப் போய் இருந்தோம் , அங்கு திருமணத்தின் போது நல்ல மழை. திருமணம் நடத்தும் இருவீட்டாரும். திருமணத்திற்கு வந்தவர்களும் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.  திருமணம் அவர்கள் பூர்விக வீடுகளில்தான் நடக்கும் . வீட்டில் மழை நீர் வராதபடி கெட்டிப் பந்தல் அமைத்தாலும்,  குழாயில் வரும் மழை நீர் வேகமாய் வந்ததால் முற்றத்திலும் மழை நீர் வர ஆரம்பித்து விட்டது ,  எல்லோரும் திருமணம் முடியும் வரை மழையைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார்கள்.  தாலிகட்டும் வரை பொறுத்தமழை, மீண்டும் பெய்ய ஆரம்பித்து விட்டது.

வாசுதேவ நல்லூர் சேவும்மாள்


 தம்பி மகள் திருமணம்  சென்ற மாதம் 29 ம் தேதி  தென்காசியில்.  அதற்கு போகும் போது மதுரையிலிருந்து தென்காசி செல்லும் பாதை எல்லாம் மிக அழகிய பச்சை பசேல் என்று வயல்கள்.  கண்ணுக்கு இனிமையாக இருந்தது. வாசுதேவநல்லூர் என்ற இடத்தில் உள்ள வயலை படமெடுத்துக் கொண்டு இருந்த போது ஒரு அம்மா வந்து என்  வயல்தான் மழையால் என்ன பாதிப்பு என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  ”என் பேர் சேவு அம்மாள், சாத்தூர் சேவு நினைவு வைத்துக் கொள்ளுங்கள் என் பேர் மறக்காது ”என்றார் உண்மையில் மறக்கவில்லை. அவர்கள் வயல் மழையால் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.

தென்காசியில் தம்பிமகள் கல்யாணத்தன்று மாலை முதல் தொடர் மழை. தென்காசி அருகில் உள்ள இலஞ்சி கோவில் அருகே மழையால் ஒரு குளம் நிரம்பி  மறுகால் பாய்ந்தது.  அங்காங்கே மடை வழியாக நீர் சல சலத்துக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது.தென்காசி ஏரியில் பறவைகள். (முக்குளிப்பான்கள்)    ஏரியும் நிறைந்து இருக்கிறது.

 தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் கோபுரமும், ஏரியும்.

வானவில் மனிதன் என்ற வலைதளம் வைத்து இருக்கும் திரு . மோகன் ஜி அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் ஜெயராஜ்  மணி அவர்கள் எழுதிய கவிதையை  வாழ்த்துக்களுடன் பகிர்ந்து இருந்தார்கள்.  நான் இருவரையும் வாழ்த்தி அதை இங்கு பகிர்கிறேன்,  படித்துப் பாருங்களேன், படித்து இருந்தாலும் மறுமுறை.

அழைத்ததால் தானே வந்தேன்?

(ஜெயராஜ் மணி எனும் அன்பர் எழுதியதாய் ஒரு கவிதை வந்தது. உள்ளம் தொட்டதால், அவருக்கு வாழ்த்துக்களுடன் பகிர்கின்றேன் )

நெஞ்சுருகி குமுறியதால் தானே வந்தேன்
பஞ்சம் என்று கதறியதால் தானே வந்தேன்
கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன்,
உனக்காக கீழ் இறங்கினேன்.
கொஞ்சமும் நினைவு இல்லையா?
வஞ்சனை செய்கிறாயே
என்னை அழைத்து விட்டு ..

வறண்ட என் நிலக் காதலி
நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்
சுரண்டி அவள் மேனியெல்லாம்
சிமெண்டாலே போர்த்தி வைத்தாய்
நனைத்து அணைப்பதாலே
உடல் குளிர சுகம் கொள்வாள்
அனைத்தும் நிராகரித்து
கடல் சேரவே வழி செய்தாய்
குளம் குட்டை ஏரியென
அங்கங்கே தங்கியிருந்தேன்
வளம் கொளித்த அத்தனைக்கும்
பங்கம் செய்யவே வாழ்ந்திருந்தாய்
உனக்கு வழி வேண்டி
சாலைகள் நீட்டினாய்,
தொழிற்சாலைகள் கட்டினாய்,
காண்கிரீட் கட்டடமாய்
நிலமெல்லாம் நிரப்பினாய்.
நான் செல்லும் வழியடைத்து
திட்டமிட்டு துரத்தினாய்.
பூமித்தாய் மூச்சி விட திணறுகிறாள்!
மண் பார்க்க முடியாமல்
அவள் முகமெல்லாம்
மறைத்து விட்டாய்.
எனக்கென்று இருந்த சின்னஞ் சிறு
உறவுகள் தானே குளமும் குட்டையும்.
கண்மூடித்தனமாக
மண் போட்டு மூடி விட்டாய்.
என்னையே நம்பியிருந்த
கடைசி உறவுகளையும்
கொள்ளளவு ஏற்றியே உடைப்பெடுத்து
கொல்ல வைத்தாய்.
பள்ளம், குழி, சிறு தாழ்வு இருந்தாலே
வெள்ளமாய் தங்கி வாழ்வு தருவேனே?
உள்ளம் என்று இருந்திருந்தால்
கள்வன் போல் வசப்படுத்தி
கல் மண் கொட்டி குப்பை நிரப்பி
 மட்டும் தங்கும் தப்பை நினைப்பாயா?
என்னை வந்த வேகத்திலே
விரட்டி விட்டு
மண்ணை துளையிட்டு
நானூறு அடியில் என்ன தேடுகிறாய்?
நாற்பது அடியில்
கிணற்றின் மடியில்
நாளும் சுரந்தேனே !
ஊற்று, கால் என்றெல்லாம் நீ
முகர்ந்து குடிக்க மகிழ்ந்தேனே!
நினைவில்லையா?
எனக்கான இடத்தை நீ
உனக்காக வளைத்த மடத்தை
செய்யாமல் இருந்திருந்தால்
உன் கால் சுற்றி
கட்டிய வீட்டை சுற்றி
தேங்கி கிடக்கும் மடமையை
நானா செய்திருப்பேன்?
அவமானம் வேறு
வெகுமானமாக தருகிறாய்.
நீர் வடியும் இடமெல்லாம்
நீயாக அடைத்து விட்டு
பேரிடர் என்கிறாய்,
வெள்ளப்பெருக்கு என்கிறாய்,
மக்கள் அவதி என்கிறாய்,
இயல்பு வாழ்க்கை பாதிப்பென்கிறாய்.
அலுவலகம் செல்வதற்கு,
தொழில் நிற்காமல் நடப்பதற்கு,
மழை நிற்க வேண்டுகிறாய்.
பிழையாக குழி
நீ உனக்கே தோண்டுகிறாய்
உன் வாழ்வாதாரம் வேண்டியே
உன்னைத் தேடி நான் வந்தேன்.
உனக்கே வேண்டாம் என்ற போது
நான் கடலுக்கே போகிறேன்.
இனியாவது நீ திருந்துவாயா
உனக்காக நான் வந்தால் ?


வான்மழை கேட்கும் கேள்வி சரிதானே!
ஏரி ,குளம் ,ஆறு எல்லாம் நிரம்பி வழிய ,
மாரி அளவாய்  பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க!
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


49 கருத்துகள்:


 1. வணக்கம் சகோ
  தேவகோட்டை எந்த ஏரியாவில் திருமணத்திற்க்கு போனீர்கள் ? சிவன் கோவில் அருகிலா ?

  கவிதை ஆயிரம் அர்தங்கள் பொதிந்தது வேதனை மிக்கது நல்ல வர்ணனை எழுதியவர்களுக்கு எமது வாழ்த்துகளும்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  சத்திரத்தார் தெருக்கு போய் இருந்தோம் திருமணத்திற்கு.
  தாமரைகுளம் அருகில் புதிதாக கட்டப்பட்ட மலைக்கோவில் அருகில் மாப்பிள்ளை வீடு.
  சிவன் கோவில் அருகில் கல்யாணபெண்ணின் தாத்தா வீடு இருக்கிறது. மழையால் சிவன் கோவில் செல்லவில்லை .
  கவிதையை வாழ்த்தியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. சென்னையில் இன்று நல்ல வேளை பெரிய அளவில் கனமழை இல்லை. இன்னும் ஒரு வார காலத்தில் படிப்படியாய் குறைந்து இயல்பு நிலைக்கு வந்து விடும் என்று சொல்கிறார்கள்.

  அந்த மழை உள் மாவட்டங்களில் திரும்பியிருக்கிறது. பச்சை பசேல் வயலைப் பார்க்கும் பொழுது மனதுக்கு இதமாக இருக்கிறது. இறைவன் அருளால் மக்கள் உழைப்பு காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக பிரார்த்திப்போம்.

  வழக்கம் போல நேரில் பார்க்கிறார் போலவான உங்கள் படப்பிடிப்பு அழகோ அழகு. கவிதை ஆற்றோட்ட்மாக வார்த்தைகளாய் வரிகளாய் தாண்டிச் சென்ற ஜாலத்தை ரசித்தேன். உள்ளத்தைத் தொட்ட கவிதை. கவிஞருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பலமுறை பிரார்த்தனை செய்தும் மழை கொடுக்காத இயற்கை, திரும்பத் திரும்பக் கேட்டதால் எரிச்சலுற்று விட்டது போலும்! "போதுமா? போதுமா?" என்று முகத்திலடிப்பது போல கொட்டிக் கொண்டிருக்கிறது.

  வாசுதேவநல்லூர் என்கிற பெயரைக் கேட்டதும், "யாயும் ஞாயும் யாரா கியரோ" என்கிற குருந்தோகப் பாடலைத் தழுவி "உனக்கும் எனக்கும் ஒரே ஊர்.. வாசுதேவநல்லூர்" என்கிற மீராவின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன!

  அழகிய படங்கள். குறிப்பாக பச்சை வயல்.

  தம +1

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன். நீங்களும் சென்னை தானே சார் ? உங்கள் ஏரியாவில் தண்ணீர் நின்றதா? இப்போது வடிந்து விட்டதா?

  நீங்கள் சொல்வது போல் மக்கள் உழைப்பு வீணாக கூடாது என்பது தான் எங்கள் பிராத்தனை சார், பழைய முறையிலும் , நவீன முறையிலும் விவசாய்ம் செய்து கொண்டு இருந்தார்கள். நிறைய படங்கள் எடுத்தேன். வழி எல்லாம் மலைகளும், வயல்களும் நிறைந்த அழகிய ஊர்கள். அவை அழியாமல் இறைவன் தான் காக்க வேண்டும்.
  கவிதை பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி சார்.
  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. மன்னிக்கவும்! குறுந்தொகை என்பது எப்படியோ டைப் ஆகியிருக்கிறது!

  :)))

  பதிலளிநீக்கு
 7. மழை சொல்வது எல்லாம் முகத்தில் அறையும் உண்மை அருமையான கவிதை.
  படங்கள் அருமை

  பதிலளிநீக்கு
 8. எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம் தான்... தங்களுக்கு நெல்லை மாவட்டம் தானே?

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  மழை கெடுக்கவும் செய்யும், வாழவும் வைக்கும் அதுதான் அதன் இயல்பு ஸ்ரீராம்.
  வாசுதேவநல்லூர் மிகவும் அழகான ஊர் வயல்களை ரசித்துக் கொண்டே போனதில் நேரம் போனதே தெரியவில்லை, தம்பி என்ன இன்னும் காணோம் என்று போன் செய்து விட்டான்.

  குறுந்தொகை என்பது புரிந்து விட்டது, கை செய்யும் தவறு எதற்கு மன்னிப்பு எல்லாம்?

  பச்சை வயல் படம் எடுக்க எடுக்க அலுக்கவே இல்லை. இன்னும் வயல்வெளிகளை வீட்டுமனைகளாக ஆக்கும் பேராசை இல்லாத மக்கள். பாடுபட்டு பயிரிட்ட நிலத்தில் பலன் கிடைக்க வேண்டும்.


  பதிலளிநீக்கு
 10. வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.

  கவிதை உணர்ந்து எழுதி இருக்கிறார் . அத்தனையும் உண்மை .

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் கார்த்திக் சரவணன் , வாழ்க வளமுடன். நீங்களும், உங்கள் மகனும், நடித்த அகம்,புறம் குறும்படம் பார்த்தேன். எல்லோரும் நன்றாக நடித்து இருந்தீர்கள்.
  எனக்கு திருநெல்வேலி. உங்கள் ஊர் ராஜபாளையமா? முன்பு உறவினர்கள் அங்கு இருந்தார்கள் என்று அம்மா சொல்வார்கள். .

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் நாகேந்திர பாரதி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. மழை ஆசை தீரக் கொட்டித் தீர்த்து விட்டது. எங்கும் தண்ணீர். மக்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது .
  கவிதை மிக அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. பசுமை நிறைந்த படங்கள் கண்ணிற்குக் குளுமை. புது மண தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. தங்களுடைய பதிவு - படங்கள் அருமை..

  ஆனாலும் -
  மழைக்கவிதை நெஞ்சில் கனக்கின்றது..

  குறை நீங்கி அனைவரும் நல்வாழ்வு வாழவேண்டும்..

  பதிலளிநீக்கு
 15. நீர்நிலைகளைப் படம் பிடிப்பதில் எப்போதுமே உங்களுக்கு ஆர்வம் அதிகம். உங்களுடைய பழைய பதிவுகளைப் பார்த்தாலே தெரியும். இப்போது எடுக்கப்பட்ட ’பச்சைப் பசேல்’ கண்ணுக்கு குளிர்ச்சி. மேற்கோள் கவிதையும் பொருத்தமானது. தேவகோட்டை என்றவுடன் கில்லர்ஜிக்கு ஊர்ப் பாசம் வருவது இயல்புதான்.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சென்னையிலா இருக்கிறீர்கள் ? உங்கள் ஏரியா எப்படி இருக்கிறது?
  காணொளி இப்போது தான் சரி செய்து இருக்கிறேன். படங்களை ரசித்தமைக்கும், மணமக்களை வாழ்த்தியமைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது போல் அனைவரும் நலமாய் வாழ பிரார்த்திப்போம்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
  படங்கள் மட்டும் தான் பார்க்க முடிந்து இருக்கிறது யாரும் காணொளி பற்றி சொல்லவில்லயே ! என்று பார்த்தால் காணொளி இயங்கவில்லை என்பது தெரிந்தது, இப்போது சரி செய்து இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.
  தேவகோட்டை ஜிக்கு ஊர்பாசம் தான் அதனால் தான் விசாரிப்பு.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. மழை சொல்வது எல்லாம் முகத்தில் அறையும் உண்மைஆனாலும்
  நாம் இதை உணர்வோமா என்றுதான் தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 20. அருமையான படங்கள். காணொளி போல் இருக்கும் படங்கள் இயங்கவில்லையே சகோதரி. செட்ட்நாட்டு வீடு அழகு...மழை கொட்டித் தீர்த்துவிட்டது. ஆனால் ஏனோ அதைப் பழி சொல்ல முடியவில்லை. மக்களாகிய நாம் செய்த தவற்றிற்குப் பாடம் கற்பித்து உள்ளது. நாம் திருந்த வேண்டும். அந்தக் கவிதை கீதா சாம்பசிவம் சகோதரி தளத்திலும் பகிர்ந்திருந்தார்கள். அருமையான கவிதை...

  கீதா: என்னைப் போலவே இயர்கையைப் படம் எடுக்கும் ஆர்வம் உடையவர்கள் நீங்கள். இப்போது எனது புகைப்படக் கருவி பழுதடைந்துவிட்டதால் படங்கள் எடுக்க முடியவில்லை. நான் பயணம் செய்யும் போதேலாம் ஓடும் ரயிலில் இருந்து எல்லாம் ஆறுகளைப் படம் பிடிப்பேன், மலைகள் என்று...
  அழகான புகைப்படங்கள். அந்தப் பசுமை மாறாத வயல்கள் கண்ணுக்குக் குளிர்ச்சி...எல்லோரும் இன்புற்றிருக்கப் பிரார்த்திப்போம்..

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
  காணொளி சரி செய்து விட்டேனே! இப்போது பாருங்கள்.
  கவிதை கீதாவும் பகிர்ந்தார்களா? நல்ல படிப்பினை கூறும் கவிதை.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  வணக்கம் கீதா, வாழ்கவளமுடன்.
  உங்களுக்கும் புகைப்படத்தில் ஆர்வமா? என் காமிராவும் இப்போது மக்கர் செய்கிறது.
  இனி கூட்டுப்பிரார்த்தனை ஒன்றே வழி.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உணமையை உணர்ந்தால் நல்லது. இனியாவது கவனமாய் இருக்க வேண்டும்.
  உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. பச்சைப்பசேலென்ற வயல்வெளிகள் கண்ணுக்கு இதம் என்றாலும் மழையை நம்பியிருக்கும் விவசாயிகளின் வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்று எண்ணும்போது வருத்தமாக உள்ளது. அதிகம் பெய்தாலும் சிரமம்... பொய்த்துப்போனாலும் சிரமம்...பாவம் அவர்கள்.

  நகரத்தில் பெய்யும் மழைக்கோ போக்கிடமில்லாமல் செய்துவிட்டோம் நாம்... மழையின் குரலாய்ப் பதிவு செய்யப்பட்ட கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் சாட்டையடி.. இனியாவது புரிந்து நடந்துகொள்வோம்.. பகிர்வுக்கு நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
  விவாசயிகளின் வாழ்க்கை கஷ்டம் தான்.
  நம் நாட்டில் மழையும், வெயிலும் நிறைய இருக்கிறது இரண்டையும் முறையாக
  பயன்படுத்தினால் வாழ்வு வளம்பெறும்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
  விவாசயிகளின் வாழ்க்கை கஷ்டம் தான்.
  நம் நாட்டில் மழையும், வெயிலும் நிறைய இருக்கிறது இரண்டையும் முறையாக
  பயன்படுத்தினால் வாழ்வு வளம்பெறும்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. இப்போத் தான் முகநூலில் சுட்டியைப் பார்த்தேன். இந்தக் கவிதையை நானும் போன வாரம் பகிர்ந்திருக்கேன். மழையின் புலம்பல் என்னும் பெயரில். அதைப் பார்த்துவிட்டுக் கவிஞர் தன் கவிதை தான் அது என்றும் தினகரனில் வந்தது என்றும் பின்னூட்டம் இட்டிருக்கிறார்.

  சுட்டி இதோ! http://sivamgss.blogspot.in/2015/11/blog-post_21.html இங்கே இன்றும் தூற்றல் போட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இரவு முழுதும் தூறல்! அவ்வப்போது நின்றாலும் சூரியன் முழு வீச்சில் ஒளி வீசவில்லை. :(

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
  இப்போது தான் முகநூலில் போட்டேன்.
  சூப்பர் வேகமாய் படித்து கருத்து சொல்லி விட்டீர்கள்.

  மாயவரத்திலும் தொடர் மழைதான், இன்று தான் கொஞ்சம்
  வெயில் முகம் காட்டினார் சூரியன்.

  மோகன் ஜி பகிர்ந்து இருந்தார் முகநூலில்.
  கவிதை எனக்கு பிடித்து இருந்தது இங்குபகிர்ந்தேன்.
  பார்க்கிறேன் உங்கள் பகிர்வை.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 28. மாமழை போற்ற நாம் இன்னும் முன்னேற்பாட்டுடன் இருந்திருக்கலாம். ஹ்ம்ம்..

  நல்ல இடுகை. நன்றி :)

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
  உங்கள் மகன் இருக்கும் ஏரியா இப்போது எப்படி இருக்கிறது?

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. நானும் முக நூலில் தான் பார்த்தேன். அருமையான அழகான படங்கள். இதே போல பசுமையாக என்றும் இருக்கட்டும்.
  மழையோடு பயணம் செய்திருக்கிறீர்கள் கோமதை. கவிதையில் வேதனையும் உண்மையுகம்.

  மிக மிக நன்றி வாழ்க வளமுடன் அம்மா. சிகாகோ சென்ற பிறகு மீண்டும் பார்க்கலாம். இறைவன் அருள் நிறையட்டும்.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
  மழையோடுதான் பயணம். மழை கவிதை சொன்ன உண்மை
  நன்றாக இருந்ததால் பகிர்ந்தேன்.
  நீங்கள் நலமாக சிகாகோ சென்று வாருங்கள்,
  நலத்திற்கு மெயில் செய்யுங்கள். உடல்நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 32. தேவகோட்டை வீடு அழகு.

  கவிதை முன்பே வாசித்தேன் கோமதிம்மா, உண்மைதானே.. வருத்தமாக இருக்கிறது. எவ்வளவு நீரைச் சேமித்திருக்கலாம், எத்தனை உயிரைக் காத்திருக்கலாம் என்று. இனிமேலாவது அனைவரும் பாடம் கற்றுக் கொண்டால் நல்லது.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் தேன்மதுரத்தமிழ் கிரேஸ், வாழ்க வளமுடன்.
  இனி நடப்பது நல்லதாக நடக்க இறைவன் அருளவேண்டும்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 35. சிந்திக்க வைக்கும் பகிர்வு. நல்ல கவிதை. உணர்ந்து திருந்த வேண்டும் இனியேனும்.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
  ஆம், நீங்கள் சொல்வது போல்உணர்ந்தால் நல்லது.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 37. புது மண தம்பதிகளுக்கு என் வாழ்த்துக்கள்.
  தங்களுடைய பதிவு - படங்கள் அருமை..
  குறை நீங்கி அனைவரும் நல்வாழ்வு வாழவேண்டும்..

  பதிலளிநீக்கு
 38. தங்களனைவருக்கும் -
  அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
  எல்லா வளமும் பெற்று வாழ்க நலமுடன்!..

  பதிலளிநீக்கு
 39. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 40. வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
  மணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி.
  நீங்கள் சொன்னது போல் கிறை நீங்கி அனைவரும் நல்வாழ்வு பெற பிராத்திப்போம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 41. வணக்கம், துரை செல்வராஜூ சார், வாழக வளமுடன்.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
  உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 43. பசுமை அழைக்கிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 44. வணக்கம் மாதேவி , வாழ்க வளமுடன்.
  வெகு நாட்கள் ஆகி விட்டதே உங்களைப்பார்த்து, நலமா?
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 45. வாசுதேவநல்லூர் எங்கள் ஊர்.
  கடும் வெள்ளத்தையும் தாங்கிய ஊரால் இந்த வருட வறட்சியை தாங்க முடியாமல் தவிக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 46. வணக்கம் ராமர் மணி முத்து, வாழ்க வளமுடன்.
  உங்கள் ஊர் மட்டுமல்ல எல்ல ஊர்களும் வறட்சியில் தவிக்கிறது.
  இந்த நிலை மாறி வளம் பெற பிரார்த்தனைகள்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு