திங்கள், 20 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம் !   பொதுவாக, சிறுவயதில் தான் நிறைய தீபாவளி எதிர்பார்ப்புகள்   இருக்கும்.  அந்தக் கால நினைவுகளில் கொஞ்சம்  பார்ப்போம்.

சிறுவர் சிறுமியாக இருக்கும்போது புத்தாடை எதிர்பார்ப்பு,  வாண வேடிக்கைக்கு என்ன புது மாதிரி மார்க்கட்டுக்கு வந்து இருக்கிறது என்று பார்த்து வாங்குவது என்று ஆண்டு தோறும் தீபாவளி வருவதற்கு முந்திய மாதமே ஏற்பாடுகள் நடக்கும். சக வயது தோழி, தோழர்களிடம் நான் அது வாங்கப் போகிறேன், இது வாங்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்வது. கேப் வெடிக்க புது மாதிரி துப்பாக்கி , தூக்கத்திலும் கனவில் அதைப்பற்றிய நினைவுதான்.

பத்திரிக்கைகளில் தீபாவளி சமயத்தில் வரும் சிரிப்புகளில் முக்கியம், ”சட்டையைக் கொஞ்சம் பெரிதாகத் தையுங்கள் . வளரும் பிள்ளைகள் !”என்று தையல்காரர்களிடம் சொல்வது தான். எங்கள் வீட்டில் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  பெரியவளுக்குப்  பத்தாமல்  போனால் சின்னவள் போட்டுக் கொள்ளலாம்., பெரியவனுக்குப் பத்தாமல்  போனால் சின்னவன் போட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்பா பொருத்தமான  அளவில் தான் வாங்குவார்கள் எல்லோருக்கும். வித விதமாக ரெடிமேட் உடைகள் தான் வாங்குவார்கள்.பாவாடை, தாவணி போடும்போது மட்டும் தைக்கப்பட்டது. அதை அக்கா அழகாய்த் தைத்துத் தருவார்கள். இப்போது அதுவும் ரெடிமேட் கிடைக்கிறது.

 இப்போது போல் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு இல்லை என்றாலும்  வார, மாத இதழ், தீபாவளி  சிறப்பிதழ்  மூலம் நமக்குக் கிடைத்து விடும். வானொலியிலும் தீபாவளிச் சிறப்புத் தேன் கிண்ணம், தீபாவளிப் பாடல்கள் என்று  தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கேட்கலாம்.

இப்போது மாதிரி எப்போது வேண்டுமென்றாலும் (நினைத்தபோது எல்லாம்) துணி எடுக்கும் வழக்கம் எல்லாம் அப்போது இல்லை. தீபாவளி, பிறந்தநாள், பொங்கல் மட்டும்தான்.  ஏதாவது துணி அதிகப்படியாக எடுத்தது இருந்தால் அது கார்த்திகைக்கும் கிடைக்கும். அதுபோல் தான் வெடிகள் மத்தாப்பு, மற்றும் பூச்சட்டி எனும் புஸ்வாணம், இதைக் கொஞ்சம் கார்த்திகை தீபத்திற்கு என்று பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள் அம்மா.( எல்லாவ்ற்றையும் ஒரே நாளில்கொளுத்திக் கரியாக்காதீர்கள் என்பது அம்மாவின் கருத்து) அப்பா,” குழந்தைகளை திருப்தியாக வெடிக்க விடு! கார்த்திகைக்கு வேறு வாங்கிக் கொள்ளலாம் ”என்பார்கள். பூஜையின் போது சரவெடி வெடிக்கப்படும்.

 10 நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் தயார் செய்வார்கள் அம்மா. பிஸ்கட் டின்கள், மற்றும் பித்தளை, எவர்சில்வர் டிரம்களில் பலகாரம் செய்து வைத்திருப்பார்கள்.

தீபாவளிக்கு முன்பே ,தினமும் பலகாரங்கள் சாப்பிடுவது, தீபாவளிக்கு வாங்கிய துணிமணிகளை  வீட்டுக்கு வந்தவர்களிடமும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் காட்டி மகிழ்வது என்று மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது தீபாவளித் திருநாள்.

தீபாவளி அன்று வீட்டில் சாமி கும்பிட்டபின் புத்தாடைகளைக்கட்டிக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு, உறவினர்களுக்கு என்று பலகாரம் கொடுத்து வரச் சொல்வார்கள் அம்மா . இந்த வெடிகளை வெடித்து விட்டு கொஞ்சநேரம் கழித்துச் செல்கிறோம் என்றால் விட மாட்டார்கள் . ”முதலில் கொடுத்து விட்டு வந்து, சாப்பிட்டு விட்டு,அப்புறம் போய் நிதானமாய் வெடிகளை வெடிக்கலாம் ”என்பார்கள்.

சுத்தியல் மாதிரி அமைப்பில், கந்தகம் வைத்துத் தரையில் ஓங்கி அடித்து அண்ணன் வெடிப்பான். அப்பா திட்டுவார்கள்,” விதவிதமாய் வெடிகள் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன், இதை எங்கு இருந்து வாங்கினான்? காதை அடைக்கிறது” என்று. அப்போதெல்லாம்  எல்லாப் பையன்களும் அப்படி வெடிப்பார்கள். அப்புறம் அது தடை செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

 வட்டமாய் நட்டு போன்ற அமைப்பில் பொட்டுவெடிகளை வைத்து, தரையில் ஓங்கி அடிக்கும் உத்தி வந்தது. ஓலை வெடியை தனித் தனியாகப் பொருத்திப் போட, ஆளுக்கு ஒரு பாக்கெட் உண்டு.  ஊசி வெடியும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உண்டு.. அதுவும் ஆளுக்கு ஒரு பாக்கெட்,

பட்டர்பிளை, பாம்புமாத்திரை, என்று தனித்தனியாக எடுத்துக் கொண்டு அவரவர்களுடைய  நண்பர்களுடன் கதைகள் பேசி மகிழ்ந்து வெடிப்போம்.  ஒன்று ஒன்றாக வெடிக்கச் சோம்பல்பட்டும் சத்தம் அதிகமாய் கேட்க ஆசைப்பட்டும் ஆறு ஏழு ஊசி வெடியின் திரிகளை  ஒன்றாகச் சுற்றி வைத்து வெடித்து  மகிழ்வோம்.

ராக்கெட் விட, பாட்டில்கள் தயார் செய்து வைத்துக் கொள்வோம். சரம் வைக்கும் போதும், லட்சுமி வெடி வைக்கும் போதும், ”திரியைக் கிள்ளி வை !இல்லையென்றால் வெடிக்காது”என்று அண்ணன் சொல்வதைக் கேளாமல், பற்ற வைத்து விட்டுஓடி வருவேன். ”நுனியில் கொஞ்சம் தீக்கொழுந்து
கனன்று வரும் போது தான் ஓடி வரவேண்டும்” என்று அண்ணன் சொல்லித் தந்தான்.  வைத்து விட்டு வெடி பற்றுவதற்கு  முன்பே ஓடிவந்தால் ஒரே சிரிப்பு.  சில நேரம் திரியில் தீப்பொறி வரவில்லை என்று பக்கத்தில் பார்க்கப் போனால் டபாரென்று வெடித்து நம்மைப் பயமுறுத்தும்.அவை எல்லாம் அற்புதமான நேரங்கள். திரும்பி வராத காலங்கள்.

பெரிய வெடிகள், லட்சுமிவெடி, பெரிய சரம் , தரை சக்கரம், புஸ்வாணம் எல்லாம்  அப்பா பக்கத்தில் இருக்கும் போது தான் வெடிக்க வேண்டும் என்பது கட்டளை. அது எல்லாம் இரவுதான். எல்லோரும் பார்த்து ரசிப்பதற்கும் பாதுகாப்பை உத்தேசித்தும்.

’பார்த்தால் நிறைய பகிர்ந்தால்  கொஞ்சம் ’என்பது போல்  அம்மா செய்த பலகாரங்கள்  மட மட என்று குறைந்து விடும், டின்களில்,  ”என்னம்மா! பலகாரம் கொஞ்சம் தான் இருக்கு போல”  என்றால், ”மறுபடியும் செய்துகொள்ளலாம்.” என்பார்கள் . கொஞ்சத்தை வேறு பாத்திரத்தில் முன்னதாகவே எடுத்து வைத்து இருப்பார்கள் . டின்களில் உள்ளதை காலி செய்தபின் அவை வெளியே வரும்.  கார்த்திகை வரை இந்த பலகாரம் ஓடும் அடுத்து கார்த்திகைக்கு அவல்பொரி, நெல்பொரி, அரிசி பொரி உருண்டைகள் அப்பம் என்று வந்து விடும்.

அக்கா, தம்பி, தங்கைகளுடன் ஆனந்தமாகக் கொண்டாடிய தீபாவளி
எப்போதும் மனதை விட்டு நீங்காத மகிழ்ச்சியான தருணங்கள்.. இப்போதும் தம்பி, தங்கைகள் கூப்பிட்டார்கள் ,”  உங்களுக்கு இந்த வருடம் தீபாவளி கிடையாதே! இங்கு  வாருங்கள்  எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம்” என்று.

திருமணம் ஆனவுடன், தலை தீபாவளியைப் புகுந்த வீட்டில் கொண்டாடியதும் மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கள் பக்கம் பண்டிகை விழாக்கள் எல்லாம் கணவன் வீட்டில் தான்!  பெண்வீட்டார் , வரிசைகளைக் புகுந்த வீட்டில் கொண்டுவந்து கொடுத்துச் செல்வார்கள்.

என் அப்பா தீபாவளிக்கு முன் கோவைக்கு என் மாமனார் வீட்டுக்கு வந்து, சீர் கொண்டு வந்து கொடுத்தார்கள்.. வைலட் கலரில் இளம் மஞ்சள் கலர் பார்டர்-  உடல் முழுவதும் நட்சத்திர ஜரிகை வேலைப்பாடு- கொண்ட பட்டுப்புடவை மற்றும் தேன்குழல், நெய் உருண்டை, காரசேவ், சோமாசி எல்லாம் கொடுத்து விட்டிருந்தார்கள் அம்மா.

எங்கள் மாமனார் வீட்டில் ஒவ்வொரு தீபாவளிக்கும் போட்டோ ஸ்டுடியோவுக்குச்  சென்று குடும்பப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.
அதை மனதில் வைத்துக் கொண்டு  சீர் கொடுக்க வந்த அப்பாவிடம் நான்,
”தீபாவளிக்கு அம்மாவுக்கு என்ன புடவை எடுத்தீர்கள்?  நீங்களும் அம்மாவும் போட்டோ  எடுத்து அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி அவர்களை ஊருக்கு வழி  அனுப்பி வைத்தேன்.  (அப்பா என் கண்ணில் இருந்து மறையும் வரை
பார்த்துக் கொண்டு இருந்தேன். அது தான் அவர்களைக் கடைசியாக நான் பார்ப்பது என்று அப்போது தெரியாது ,) அப்பாவும் ஊருக்குப் போய்  போட்டோ எடுத்து அனுப்பினார்கள். கார்த்திகை சோமவாரத்தில் இறந்து போனார்கள் அப்போது  அவர்களுக்கு வயது 51. தீபாவளி வரும் போதெல்லாம் அப்பாவின் வருகையும் நினைவுக்கு வரும்.
                            

இப்போது ஒரு வெடி டப்பாவில் இருந்து பலவெடிகள் வெடித்துக் கொண்டே இருப்பது போல், எங்கள் தலைதீபாவளியின் போது   ’டபுள்ஷாட் " எனும் வெடிகள் வந்திருந்தது. கணவர் அதை வாங்கி வந்தார்கள். கீழே ஒரு வெடி வெடித்து விட்டு, மேலே போய் இன்னொரு வெடி வெடிக்கும். இலட்சுமி வெடி, சரவெடிகள், அணுகுண்டுகள், ராக்கெட், சாட்டை, பென்சில், வித வித  மத்தாப்புகள்,  என்று வாங்கிவந்தார்கள்.

இப்படி தீபாவளிக்கு வெடித்து  வந்ததில் ஒரு மாற்றம்- நானும் அம்மா ஆனவுடன். குழந்தைகள் நிறைய வெடிக்க வேண்டும் என்பதால் நான் வெடிப்பதைக் குறைத்துக்கொண்டேன்.  அவர்கள் வெடிப்பதைப் பார்த்து ஆனந்தம் அடைவதுடன் நிறுத்திக் கொண்டேன். இருந்தாலும் என் பிள்ளைகள் கொஞ்சமாவது என்னை வெடிக்க வைப்பார்கள்.

:”வெடி ரோக்கா ”(வெடியின் பெயர், விலை விபரம் உள்ள சீட்டு) வாங்கி வந்து ,
என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று குறித்துக் கொண்டு அப்பாவும் மகனும், மகளும் கடைக்குப் போவார்கள்.  அதன்படி வாங்கி வருவார்கள்.
இப்போது தங்கள் ஊரில் வெடிக்க முடியாது என்பதால், மகன் இங்கு தீபாவளிக்கு வந்தால் இஷ்டம் போல் விதவிதமாய் வெடிகள் வாங்கி வெடித்து மகிழ்வான்.

சிறுவயதில், எங்கள் மகன் பகலில் சாட்டை வைக்க வேண்டும் என்று
”சாட்டை! சாட்டை” என்று அழுதான். அவனது அழுகையைக்  டேப் செய்ய ஆசைப் பட்டு சாட்டையை கொடுக்காமல் பகலில் சாட்டை வைக்க கூடாது என்று சொல்லி மேலும் அழ வைத்து டேப் செய்தார்கள். எல்லோரும் எதுக்கு அழுகிறாய் என்று கேட்டால் மறுபடியும் ஆரம்பிப்பான் ”சாட்டை சாட்டை” என்று  இப்படி அவனை எல்லோரும் சேர்ந்து கலாட்டா செய்ததை  டேப்பில் பதிவு செய்து வைத்து இருந்தோம்.   அடிக்கடி போட்டுக் கேட்டு மகிழ்வோம்.

என் மகன் வெகு நாட்களுக்கு அப்பா மாதிரி சட்டை தான் வேண்டும் என்பான். இருவருக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்துத் தைக்கக் கொடுப்போம். கல்லூரி சென்றபின் தான் ”அப்பாவுக்கு வேறு வாங்க வேண்டும். எனக்கு வேறு வாங்க வேண்டும். அப்போதுதான்  இரண்டு சட்டைகளையும் நான்  போடலாம்” என்பான்.

என் பெண்ணுக்கு நான் எடுத்துக் கொடுக்கும் துணிகள் பிடிக்கும். அம்மா
செலக்ட் செய்தால் மிக அருமையாக இருக்கும் என்பாள். இப்போது காலம் மாறுது கருத்துகளும் மாறுது . இப்போது சேலை மட்டும் தான் என் தேர்வு. மகள் மருமகளுக்கு எல்லாம்,   மாடல் உடைகள் அவர்கள் தேர்வு.

அத்தையும் அம்மாவைப் போலவே ருசியாக  நிறைய பலகாரங்கள் செய்வார்கள்.  கை முறுக்கு, தட்டை,  மைசூர்பாக், பாதாம் ஸ்வீட் , நெய் உருண்டை என்று எல்லாம்  செய்வார்கள்..

அம்மாவைப் போல நானும் தீபாவளி சமயம்  பலகாரங்கள் நிறைய செய்தகாலம் உண்டு. இப்போது  ஏதோ கொஞ்சம் செய்கிறேன்.  புதிது புதிதாக
செய்த  ஆர்வம் இப்போது இல்லை.  முன்பெல்லாம் தீபாவளி அன்று புதுவகையான இனிப்புதான் ஒவ்வொரு வருடமும். இறைவன் அருளால் அது நன்றாக அமைத்து விடும்.

ஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு  என்ற பதிவில் எங்கள் வீட்டுத் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பற்றி ஆதவன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருப்பேன்.  எங்கள் வீட்டுத் தீபாவளி எப்படி இருக்கும் என்பதை படிக்க விரும்பினால் படிக்கலாம்.

புத்தகத்தில் படித்த  தீபாவளி கருத்துக்கள்  :-

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. துலாமாத மகாத்மியத்தில் தீபாவளியைப் பற்றி குறிப்பிடும் போது “தையலே லட்சுமி! ஜல கங்கா” என்றுவருகிறது.அன்று எந்த இடத்தில்   குளித்தாலும்  கங்கையில் குளித்த பலன் என்று சொல்லப்படுகிறது. ஆதிகாலத்தில் தீபாவளியை ”எண்ணெய்த் திருவிழா ”என்றே குறிப்பிட்டார்களாம்.

தீப ஒளி வழிபாடு நம் பண்பாடு, இறைவன் இசையால் மகிழ்பவன். இசையின் மூலம் ஒலி  இசையாக மாற்றாமல் ஒலியையே இறைவனுக்கு சமர்ப்பிப்பது வெடி வழிபாடு. ஒளி வழிபாட்டோடு  ஒலி வழிபாடும் இறைவனுக்கு உகந்ததே! கோவில் திருவிழாக்களில் வெடி வெடித்தும் பல்வண்ண வாணவேடிக்கைகளும் இடம்பெறும்.

தீபாவளி என்பது இறைவனுக்கு நாம் செய்யும் ஒளி, ஒலி வழிபாடு. எண்ணெய்க் குளியல், புத்தாடை, பலவித பக்ஷணங்கள், பெரியவர்களிடம்
 ஆசி பெறுதல், வெடி வெடித்தல், மத்தாப்பு கொளுத்துதல், ஆலயம், செல்லுதல், அனைத்தும் தீபாவளி கொண்டாட்டங்களில் இருப்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் பண்டிகை..

பெரியவர்களிடம் ஆசி பெறுதல் எனும்போது என் மாமனார் அவர்களின்  நினைவு வந்து விட்டது.  முன்பு எல்லாம் அவர்கள் கடிதம் எழுதும் போது ”தீபாவளிக்கு முன்னதாக  வந்து சேருங்கள் ”என்று எழுதுவார்கள். போன தீபாவளிக்கு மகனுடன் அவனது ஊரில் கொண்டாடியதால்  கோவையில்  இருக்கும் மாமாவிடம் ஸ்கைப் மூலம்  ஆசி பெற்றோம். இந்த வருடம் தெய்வமாக இருந்து அனைவருக்கும் ஆசி வழங்குவார்கள். அவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் மாமா கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.


மகன், மருமகள் பேரனுடன் கொண்டாடடிய போன தீபாவளியை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம் இப்போது.   குழந்தைகள் வரும் நாளே தீபாவளிப் பண்டிகை  போல் மகிழ்ச்சி தரும் நாள்.

காலையில் இறைவனை வழிபட்டு,  தீபாவளி மருந்து சாப்பிட்டு விட்டு,  பின் பலகாரங்கள் சாப்பிட்டு,  வாணங்களைக் கவனமாய்  வெடித்து, மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

                                                         வாழ்க வளமுடன்!

                                                                    -----------------

48 கருத்துகள்:

 1. வட்டமாய் நட்டு போன்ற அமைப்பில் பொட்டுவெடிகளை வைத்து, தரையில் ஓங்கி அடிக்கும் உத்தி வந்தது// இப்போ கிடைச்சா வாங்கி வைங்க..

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு. பழைய நினைவுகளை நீங்கள் அசைபோட்டதில், எங்கள் மனமும் நீங்கா நினைவுகளால் நிறைந்துவிட்டது.

  இப்போது எல்லாமே எப்போதுமே கிடைப்பதால், பண்டிகைகள் அத்தனை சுவாரசியமாய் இருப்பதில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். :-)

  உங்களுக்கும் குடும்பத்தோருக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 3. ஒவ்வொரு தலைமுறையினரும் அந்த்க் காலத்திலே என்று ஆரம்பிப்பது வழக்கம்.. நமக்கு நமது அப்பா- அம்மா, தாத்தா – பாட்டிகள் ”அந்தக் காலத்திலே’ என்று சொன்னார்கள். நாம் இந்த காலத்திலே நமது பிள்ளைகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும், சொல்லுகிறோம்.

  மலரும் நினைவுகளைச் சொல்லி, மகிழ்வான அந்தநாள் மகிழ்ச்சியைப் பகிர்ந்த சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. தீபாவளி என்றாலே மகிழ்ச்சி,ஆனந்தம்.

  அன்பின் இனிய தீபவளி நல்வாழ்த்துக்கள்..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள், கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 6. முத்துலெட்சுமி வாழ்க வளமுடன்.

  பொட்டுவெடி வெடிக்கும் நட்டு இப்போது கிடைக்குதா ! தெரியவில்லை, கிடைத்தால் வாங்கி வைக்கிறேன்.
  உன் வரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ஹுஸைனம்மா , வாழ்க வளமுடன்.
  நீண்ட நாட்களுக்கு பின் உங்களை என் பதிவில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
  உங்களின் இனிய கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் தி, தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.

  நீங்கள் சொல்வது உணமை. அந்தக்காலத்திலே என்று அந்தக்காலத்தை நினைத்து பேசாமல் இருக்க முடியாது போலும்.

  உங்கள் இனிய கருத்துக்கும் நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

  நீங்கள் பண்டிகைக்கு ஊருக்கு வந்து இருக்கிறீர்களா?
  உங்கள் கருத்துக்கும்,இனிய வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 11. குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 14. // ”சட்டையைக் கொஞ்சம் பெரிதாகத் தையுங்கள் . வளரும் பிள்ளைகள் !”என்று தையல்காரர்களிடம் சொல்வது தான். //

  :) பொதுவாக அந்தக்காலப் பெரியவர்களின் வழக்கமாக இருந்து வந்தது.

  >>>>>

  பதிலளிநீக்கு
 15. //இப்போது மாதிரி எப்போது வேண்டுமென்றாலும் (நினைத்தபோது எல்லாம்) துணி எடுக்கும் வழக்கம் எல்லாம் அப்போது இல்லை.//

  உண்மை. இது உண்மையோ உண்மை. அதனால் தான் இப்போது தீபாவளி என்பது தனிச்சிறப்பாக யாருக்கும் தோன்றுவதே இல்லை.

  >>>>>

  பதிலளிநீக்கு
 16. //10 நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் தயார் செய்வார்கள் அம்மா. பிஸ்கட் டின்கள், மற்றும் பித்தளை, எவர்சில்வர் டிரம்களில் பலகாரம் செய்து வைத்திருப்பார்கள். //

  வெளியே கடையில் வாங்குவதை அகெளரவமாகப் பார்த்தவர்கள்.

  இன்று கடையில் வாங்கி மனையில் வைப்பவர்களே அதிகமாகியுள்ளனர்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 17. //சுத்தியல் மாதிரி அமைப்பில், கந்தகம் வைத்துத் தரையில் ஓங்கி அடித்து அண்ணன் வெடிப்பான். அப்பா திட்டுவார்கள்,” விதவிதமாய் வெடிகள் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன், இதை எங்கு இருந்து வாங்கினான்? காதை அடைக்கிறது” என்று. அப்போதெல்லாம் எல்லாப் பையன்களும் அப்படி வெடிப்பார்கள். அப்புறம் அது தடை செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.//

  இதற்கு வேட்டுக்குழாய் என்று பெயர். மிகப்பெரிய சத்தம் மட்டுமல்ல, சிறிது நேரத்திற்கு ஒரு வித Bad Smell கந்தக நெடி வாடை அடிக்கும்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 18. திடீரென்று நடுவில் ‘நெட்’ கனெக்‌ஷன் நீண்ட நேரம் போய் விட்டதால், என்னால் தொடர்ச்சியாக என் பின்னூட்டங்களை அனுப்ப முடியாமல் போய்விட்டது. :( சேமித்து வைத்துக் கொள்ளவும் முடியாமல் போய்விட்டதால் மீண்டும் யோசித்து யோசித்து RETYPE செய்து அனுப்பும்படி ஆகிவிட்டது. :(

  -=-=-=-=-=-

  ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயங்களையும் மிக அழகாகக் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

  என் மனதுக்குத் திருப்தியாக உள்ளது.

  குழந்தைப்பருவத்தில் எனக்கும் இதிலெல்லாம் மிகவும் அதிக அனுபவங்கள் உண்டு. இன்னும் எல்லாமே பசுமையாக என் நினைவினில் உள்ளன.

  என் இளமை காலத்தில் எனக்கு ஓர் தீபாவளியன்று நேர்ந்த மிகவும் சுவாரஸ்யமானதோர் உண்மைச் சம்பவத்தை ’VGK-10 - மறக்க மனம் கூடுதில்லையே’ என்ற என் கதையின் 4th & 5th பகுதியில் அப்படியே சுவைபட என்னால் எடுத்துக்காட்ட முடிந்தது.
  http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html
  அந்த அற்புதமான காட்சி அனைவராலும் மிகவும் பாராட்டிப் பேசப்பட்டது. :)

  அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .... இந்த நாள் அன்று போல இன்பமாய் .... இல்லையே .... என்று மனதுக்குள் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

  காலம் செய்த கோலம் ! நாம் என்ன செய்வது?

  அன்று தீபாவளியின் போது, மிகவும் எளிமையாக நமக்குக் கிடைத்த அந்த மகிழ்ச்சிகள் நிச்சயமாக நம் வாரிசுகளுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை.

  TV, Cell Phone, WhatsApp, Skype, e-mail, chatting, video games etc., etc., என்று உலகத்தையே தங்களின் உள்ளங்கையில் வைத்துள்ள இவர்களின் மகிழ்ச்சிக்கோ இன்று எல்லையே இல்லை எனலாம்.

  இரண்டு தலைமுறைகளுக்கும் மேல் பார்க்கக் கொடுத்து வைத்துள்ள நமக்கு, மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது என்பது எவ்வளவு உண்மையாக உணர முடிகிறது! :)

  இனிப்பான பகிர்வுகளுக்கும், தகவலுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 19. பழைய நினைவுகள் என்னையும் அந்தக் காலத்திற்குக் கூட்டிச் சென்றது.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள், கோமதி.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் இராஜராஜேஸ்வரி,
  வாழ்க வளமுடன்.
  வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
  //தீபாவளி வரும் போதெல்லாம்
  தீபாவளி அன்றே மறைந்த மாமியார் நினைவும் , தீபாவளிகளில் மாமனார் அன்பளிப்பாக த்ரும் புத்தம் புது ரூபாய் நோட்டு அன்பளிப்புகளும் பசுமையாக நினைவுவரும்..!//

  தீபாவளி அன்றே மாமியார் இறைவனடி சேர்ந்து விட்டார்களா?மறக்கவே முடியாது தீபாவளி வரும் போதெல்லாம். நான் என் அப்பாவை தீபாவ்ளி தோறும் நினைத்துக் கொள்வது போல்.
  என் மாமனாரும் புத்த்ம்புது ரூபாய் நோட்டுதான் தருவார்கள்.

  உங்கள் வாழ்த்துக்களுக்கும், பகிர்வுக்கும் நன்றி.  பதிலளிநீக்கு
 21. சொல்ல மறந்துட்டேன்.

  சார் வரைந்துள்ள அந்தப்படம், மிகவும் அழகாக உள்ளது. அவருக்கு என் பாராட்டுக்களைச் சொல்லவும்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 22. இனிமையான நினைவுகள் கோமதிம்மா....

  Google +ல் படம் பார்த்தேன். மிகவும் அருமையாக வந்திருக்கிறது.....

  பொட்டு வெடி வெடிக்கும் நட்-போல்ட்! இப்பல்லாம் கிடைக்குதா?

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

  1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  2. வளரும் பிள்ளைகள் கொஞ்சம் பெரிதாக தையுங்கள் என்று சொல்வது பொதுவாக அந்தக்காலப் பெரியவர்களின் வழக்கமாக இருந்து வந்தது என்றாலும்

  அதை தான் தீபாவளி மலரில் சிரிப்பாய் சொல்வார்கள் என்றேன்.

  3, நீங்கள் சொல்வது சரிதான் கடையில் வாங்குவதை அவர்கள் விரும்புவது இல்லைதான்.
  இப்போது உள்ளவர்கள் முடியாத பட்சத்தில் கடையில் வாங்குகிறார்கள்

  4.//இதற்கு வேட்டுக்குழாய் என்று பெயர். மிகப்பெரிய சத்தம் மட்டுமல்ல, சிறிது நேரத்திற்கு ஒரு வித Bad Smell கந்தக நெடி வாடை அடிக்கும்//

  பெயர் நினைவில் இல்லை சிறு வயதில் பார்த்ததும் அப்பா சொன்னதும் மட்டும் தான் நினைவில் உள்ளது.

  5. //மீண்டும் யோசித்து யோசித்து RETYPE செய்து அனுப்பும்படி ஆகிவிட்டது. :(//

  நெட் இணைப்பு விட்டு விட்டு இருந்தும் அடித்தவை போனபின் மீண்டும் டைப் செய்து கருத்துக்களை அனுப்பியமைக்கு மிகவும் நன்றி சார்.

  மறக்க மனம் கூடுதில்லையே’ கதையை நானும் படித்து இருக்கிறேன் சார். மிக நன்றாக இருக்கும். எத்தனை திருப்பங்கள் கதையில் முன்பு சந்தித்த மனிதர்களை மீண்டும் சந்திக்கும் போது அவர்கள் நிலை , நம் மனது எல்லாவிஷ்யங்களையும் பகிர்ந்து இருக்கிறீர்கள்.

  6. சாரின் படத்தை பற்றி கருத்து சொல்லி பாராட்டியதை சாரிடம் சொன்னேன், மகிழ்ந்தார்கள்.
  நன்றி சார்.

  பதிவை படித்து இத்தனை பின்னூட்டங்கள் போட்டத்ற்கு மிகவும் நன்றி, மகிழ்ச்சி சார்.

  பதிலளிநீக்கு
 24. இனிமையான நினைவலைகள்:)! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.சார் வரைந்த படமும் அருமை.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்கவளமுடன்.
  உங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
  சார் படம் நல்லா இருக்கா மகிழ்ச்சி.

  நீங்கள் சொன்னது போல் நட்போல்ட் கிடைக்குதா என்று தெரியவில்லை முத்துலெட்சுமியும் கேட்கிறாள் வேண்டும் என்று கிடைத்தால் வாங்க வேண்டும்.
  பொட்டுவெடிகாலத்தில் அது வந்தது, ரோல் கேப் வந்தபின் துப்பாக்கிதான்.

  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி வெங்கட். திருச்சியா, டெல்லியா எங்கு இருக்கிறீர்கள்? ஆதி, ரோஷ்ணிக்கு எங்கள் வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  சாரிடம் சொல்லிவிட்டேன் உங்கள் கருத்தை.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ராமல்க்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 28. அன்பின் இனிய தங்களுக்கு வணக்கம்..

  தீபாவளியை முன்னிட்டும் மகளின் வளைகாப்பினை முன்னிட்டும் சிறு விடுப்பில் ஊருக்கு வந்துள்ளேன்.

  தங்களின் யூகம் - எனக்கு ம்கிழ்ச்சி..

  அனைவருக்கும் நலங்கள் விளைய அபிராமவல்லி அருள் புரிவாள்!..

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.

  //தீபாவளியை முன்னிட்டும் மகளின் வளைகாப்பினை முன்னிட்டும் சிறு விடுப்பில் ஊருக்கு வந்துள்ளேன்.//
  வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தினர்களுக்கு.
  வளைகாப்பு நல்ல முறையில் நடைபெற வாழ்த்துக்கள்.
  வாழ்த்துக்கள் தங்கள் மகளுக்கு
  வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொன்னது போல் அனைவருக்கும் எல்லா நலங்களையும் அபிராமவல்லி நல்கட்டும்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. நீங்கா நினைவுகள் என்றும் இனிமை!
  இந்த இனிமை நிலைக்க வேண்டுகிறேன் அக்கா!

  மிக அருமை!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 32. நீங்கா நினைவுகள் என்றும் இனிமை!
  இந்த இனிமை நிலைக்க வேண்டுகிறேன் அக்கா!

  மிக அருமை!
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வேண்டுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இளமதி.

  பதிலளிநீக்கு
 34. அந்த நாட்கள், அவற்றில் இணைந்த‌ குதூகலம் அது ஒரு பொற்காலம் தான்! மலரும் நினைவுகளை மிக அழகாய்த் தொகுத்திருக்கிறீர்கள்! என்னை அப்படியே திரும்ப பார்ப்பது போல இருந்தது!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 35. உங்களது தீபாவளி பதிவு அந்த நாளைய விவரங்கள் பல அடங்கியது. பட்டாசுகளை நன்றாகக் கொளுத்தி மகிழ்ந்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது!நட்டு-போல்ட்டுகளில் கேப் வைத்து அடித்து மகிழும் நினைவைத் திரும்பக்கொணர்ந்து மகிழ்வித்தீர்கள்!

  அப்பாவைப்பற்றிய குறிப்பு நெகிழ்வித்தது.
  -ஏகாந்தன்

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.

  அந்த நாட்கள், அவற்றில் இணைந்த‌ குதூகலம் அது ஒரு பொற்காலம் தான்! மலரும் நினைவுகளை மிக அழகாய்த் தொகுத்திருக்கிறீர்கள்! என்னை அப்படியே திரும்ப பார்ப்பது போல இருந்தது!//

  ஓ , அப்படியா! மகிழ்ச்சி.

  அது ஏனோ சிறுவயது நினைவுகள் மறப்பது இல்லை. இடைபட்ட காலங்கள் மறந்து விடுகிறது. அப்போது நிற்க் நேரம் இல்லாமல் ஓடியதாலா என்று தெரியவில்லை.

  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் ஏகாந்தன், வாழ்க வளமுடன். என் பேரனுக்கு ஏகன் என்ற பேரும் உண்டு. எங்கள் எல்லோருக்கும் பிடித்த பேர்.

  சிறுவயதில் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்த காலமும், என் அப்பாவின் நினைவுகளும் நினைவை விட்டு அகலாதவைகள்.

  இப்போது நட்டு- போல்ட் கிடைக்கிறதா? கிடைத்தால் வாங்கி வையுங்கள் என்கிறாள் மகள். ஊருக்கு போனால் கிடைக்குதா என்று பார்க்க வேண்டும்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 38. இந்தப் பதிவை நீங்கள் சொன்னதுபோல ஃபேஸ்புக்கில் லைக் போட்டிருக்கிறேன். ஆனால் பதிவைப் படிக்கவில்லை! எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை! :)))

  பெரியதாக தைக்கும் துணிகள் பற்றி கீதா மேடம் பதிவிலும் படித்தேன்.தஞ்சையில் எங்கள் ஏழுமலை டைலர் மேல் எங்களுக்கு ஒரு கொலைவெறியே இருந்தது. "அப்பா சொன்னால் அப்படியே தைத்துத் தர வேண்டுமா?" என்று! 'நீதி' படத்தில் வரும் சந்திரபாபு போட்டிருக்கும் டிராயர் போல தைத்துத் தருவார்!

  வெடிகள் விஷயத்தில் 'எங்கள்' கௌதமன் பற்றிச் சொல்ல வேண்டும்! பங்கு பிரிக்கப்பட்டு பிரித்த வெடிகளை எல்லோரும் வெடிக்கும்வரை வேடிக்கை பார்ப்பார். எல்லோரும் கன்ஃபார்மாக முடித்து விட்டார்கள் என்று தெரிந்த உடன் மெதுவாக அவர் பங்கு வெடிகளை எடுத்து வெடிக்க ஆரம்பிப்பார். மற்ற சகோதரர்களுக்கு வரும் கோபம், பொறாமை பற்றிக் கேட்கவா வேண்டும்?

  உங்கள் அப்பா, மாமனார் பற்றிச் சொல்லியிருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது.

  ஸார் வரைந்திருக்கும் படம் வழக்கம்போலவே அருமை. தெருக்கடைசியில் நின்று வெடிக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறேன். வேறு வீடுகள் காணோமே! :)))

  பதிலளிநீக்கு
 39. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 40. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். நீங்கள் தீபாவளி வேலையாக கடைத்தெரு சென்று இருப்பீர்கள் அதனால் படிக்க முடியவில்லை என்று நினைத்தேன்.

  நீதிபதி படத்தில் வரும் சந்திரபாபு மாதிரியா? அது ரொம்ப அதிகமாச்சே!

  வளரும் பிள்ளைகளுக்கு கச்சிதமாய் மிக சரியாக டிரஸ் வாங்குவதில்
  என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை வரும். அளவாக டிரஸ் எடுப்பதற்கும் கலர் தேர்வுக்கும். லைட் கலர் இங்கிலீஷ் கலர் தான் பிடிக்கும் அப்பாவிற்கு அப்படித்தான் டிரஸ் செலக்‌ஷன் செய்வார்கள்.அம்மா டார்க் கலர் வாங்க சொல்வார்கள்.

  பெண்களுக்கு அதற்கு பொருத்தமாய் பாசி மணி மாலைகள், வளையல்கள், எல்லாம் அழகாய் தேர்ந்து எடுத்து வாங்கி வருவார்கள்.
  எந்த ஊருக்கு சென்றாலும் வரும் போது அழகான பாசி, மணி மாலைகள் உண்டு. அதற்கும் சண்டை வரும் இதில் போடும் காசை தங்கநகைகள் வாங்கி வைத்தால் பின் திருமணத்திற்கு உதவும் என்று.

  எங்கள்' கௌதமன் சாருக்கு பயங்கர குறும்பு போலவே!
  மற்றவர்கள் வெடித்து முடித்தவுடன் வெடித்தால் மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்று நினைத்து இருபார் கள் போலும்.

  தீபாவளி காலங்களில் என் அப்பா, என் அண்ணன், மாமா இவர்களை மறக்க முடியாது.


  தலைதீபாவளி ஓவியம் அது. வீட்டின் முன் வாசல் பக்கம் விளையாட்டு திடல் தான் இருக்கும், எதிரில் வீடு கொஞ்சம் தள்ளிதான் இருக்கும்.

  உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 41. அருமையான தீபாவளி நினைவுகள் கோமதிம்மா ..சார் வரைந்த படம் ரொம்ப அழகா இருக்கு .
  எனக்கும் வெடிக்கும் ரொம்ப டிஸ்டன்ஸ் :) நான் சாட்டை மற்றும் பென்சில் மட்டுமே அதுவும் ஒரு எக்ஸ்ட்ரா எக்ஸ்டன்சன் எனக்குன்னே ஸ்பெஷலா செய்து இணைத்து தருவார் அப்பா .சங்கு சக்கரம் ,கூட நா கொளுதினதில்லை :)
  அவ்ளோ பயம் :) இங்கே இங்கிலாந்தில் சரியா நவம்பர் 5 அன்னிக்கு bon fire டே அன்னிக்கு எல்லாரும் திறந்த வெளியில் சென்று வெடிகளை வெடிக்கலாம் அன்னிக்குத்தான் இங்குக்ள்ள பஞ்சாபியரும் குஜராத்தியரும் diwali என்ஜாய் பண்ணுவாங்க :)
  சின்ன வயசில் எங்களுக்கு தீபாவளி டைம் தான் புது துணியை முன்கூட்டி கிறிஸ்மஸுக்கு எடுப்பாங்க நல்ல செலக்சன்ஸ் கிடைக்கும்

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் ஏஞ்சலின், வாழ்கவளமுடன்.

  உங்கள் வெடி அனுபவம் மிக அருமை.
  என் அக்கா லட்சுமி வெடியை கையால் பொருத்தி தூக்கி போடுவார்கள். அவர்கள் அளவுக்கு எனக்கு தைரியம் கிடையாது.

  நவம்பர் மாதம் வெடி வெடிப்பதை பார்த்து ரசிக்கலாம் நீங்கள்!

  மகன் ஊரிலும் இப்படி போய் பார்த்து ரசித்தோம்.

  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 43. சுவாரசியமான விவரங்கள். நெகிழ வைத்த 'அப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்த' வரி. அருமையான நினைவுகளை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

  காலம் மாறியிருக்கிறது,இல்லையா? எப்போது துணி எடுத்தாலென்ன? தீபாவளிக்கு மட்டும் தான் எடுக்க வேண்டுமா? துணியெடுத்தால் தீபாவளினு வச்சுக்க வேண்டியது தான்.

  இனிப்பு வகைகளைக் குறைத்தால் நன்றாக இருக்கும். அன்றைய நாட்களை விட இன்றைக்கு இன்னும் அதிக வகை இனிப்புகள் கிடைப்பதாகத் தோன்றுகிறது.

  பட்டாசு வெரைட்டி எங்கேயோ போய்விட்டது. கையில் பிடித்துக் கொண்டு விடும் ராகெட் வெடியைப் பார்த்து அசந்து போனேன். என் இள வயதில் இப்படியெல்லாம் இல்லையே என்று ஏங்க வைத்துவிட்டன சில வெடிகள்.

  தீபாவளி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 44. வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
  அப்பாவின் நினைவுகள் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள் சார்.
  கல்யாணம் தைமாதம் எங்களுக்கு, தலைதீபாவளி எட்டு மாதங்கள் கழித்து தான் தீபாவளி வந்தது. இப்போது போல் நினைத்த போது ஊருக்கு போக முடியாது அப்போது. என் கணவருக்கு விடுமுறை இல்லை என்பார்கள். நான் பள்ளி சென்று 11வது படித்துக் கொண்டு இருந்தேன். அதனால் அப்பாதான் இரண்டு முறை ஆபீஸ் வேலையாக நாகப்பட்டினம் வந்தவர்கள் என்னை வந்து பார்த்து போனார்கள்.

  நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததால் அப்பாவின் மடியில் குழந்தையாக படுத்துக் கொண்டு வீட்டு கதைகள் பேசினேன்.அதை இன்றும் கணவர் குடும்பத்தினர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இவள் அப்பாவின் மடியில் படுத்து செல்லம் கொஞ்சினாள் என்று.

  நீங்கள் சொல்வது போல் புதுதுணி கட்டும் நாளெல்லாம் தீபாவளி தான்.

  அன்றைய நாளை விட இப்போது இனிப்பு வகைகள் அதிகமாகி விட்டது தான். புது புது இனிப்பு வந்து கொண்டே இருக்கிறது.

  முன்பு போல் கல்லை தின்றாலும் செரிக்கும் வயதும் இல்லை.

  பட்டாசுகளும் புது புது வகைகள் வந்து விட்டன. நாளும் புது புது கண்டுபிடிப்புகள் எல்லாவற்றிலும் வந்து விட்டது.

  அதைப் பார்த்து மகிழ்ந்து அன்று இப்படி, இன்று இப்படி என்று நம்மை போன்றவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

  உங்களை நீண்ட நாட்களுக்குப் பின் என் தளத்தில் பார்த்தது மகிழ்ச்சி.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
  பதிலளிநீக்கு
 45. இனிமையான தீபாவளி நிகழ்வுகள் நெஞ்சத்தில் என்றும் இனிக்கும் நினைவுகள். தங்கள் அப்பாவைப் பற்றி எழுதியதை வாசித்தபோது என்னையறியாமல் கண்கள் கலங்கிப்போயின. இத்தனை வருடங்களில் எத்தனை அனுபவங்களைக் கண்டிருப்பீர்கள். நெஞ்சம் நெகிழ்கிறது.

  பதிலளிநீக்கு
 46. அன்பு கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.

  என் அப்பா மிகவும் அன்பான , மகிழ்ச்சியான மனிதர். குழந்தைகளின் மேல் அவ்வளவு பாசம் உள்ளவர்கள் , அவர்களின் பாசத்தை தம்பி, தங்கைகள் , மற்றும் பேரன், பேத்திகள் அனுபவிக்க முடியவில்லையே! என்ற வருத்தம் எப்போதும் உண்டு.

  என் மனதில் இனிமையான நினைவுகளும், வருத்தமான நினைவுகளும் இருக்கிறது. நீங்கள் சொன்னது போல் இத்தனை வருடங்களில் எத்தனையோ அனுபவங்களை அனுபவத்தி இருக்கிறேன்.

  பிறப்பு, இறப்புகளையும், இன்பம், துன்பங்களையும் பார்த்துஇருக்கிறேன்.

  பேத்தி, பேரன்களால் மகிழ்ச்சியும் அடைந்து இருக்கிறேன்.
  இறைவன் அருளால் இனி எல்லாம் நடக்க வேண்டும்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
  பதிலளிநீக்கு