Wednesday, July 16, 2014

வானர விஜயம்!

கானகத்தை விட்டு வானரங்கள்  மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு வரும் காலம் ஆகி விட்டது, தண்ணீர்க்காவும், உணவுக்காவும் .

நாங்கள் போனமாதம் கோவை போயிருந்த போது  எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்தார்கள் இரண்டு குரங்கார். நாங்கள் பயந்து போய் கதவை அடைத்து விட்டோம். எங்கள் வீட்டு மதில் சுவர் மேல் உட்கார்ந்து கொண்டு இருந்த குரங்குகளை  நான் ஜன்னல் வழியாக போட்டோ எடுத்தேன்.  

         கதவை அடைத்து விட்டார்களே ! என்ன செய்வது என்று யோசிக்கிறது

எங்கள் வீட்டு மதில் மேல் ஏறிக்கொண்டு  பவளமல்லி மரத்தை உலுக்கி எடுத்துவிட்டது. 

                                                         மதில் மேல் என் ராஜாங்கம்
                                வேப்பமரத்தில் ஏறிக் கொண்டு சாகஸம் செய்தது.
   யார் ஜன்னலிலிருந்து என்னை படம் எடுப்பது ! 

அதற்கு உள்ளுணர்வு தோன்றியது போலும் ஜன்னல் பக்கம் உற்றுப் பார்த்தது.
    ஏய்! என்னை ஏன் படம் எடுக்கிறாய் ? என்று என்னைப்பார்த்து உர் என்றது.

நிழலுக்கு எங்கள் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைத்து இருந்த மினி வேனில் ஏறிக் கொண்டு  ஆராய்ச்சி செய்தது.

தெருவில் போகிறவர்கள் வருபவர்களை வேடிக்கை பார்த்தது

தெருவில் போகும் குழந்தைகள்  சத்தம் போட்டவுடன் ஒவ்வொரு மரமாகத் தாவித் தாவிப் போய் விட்டது.

நாங்கள் முன்பு திருவெண்காட்டில் இருந்தபோது ஊர்மக்கள் குரங்குகள் மிகவும் அட்டகாசம் செய்தது என்று மரத்தில் கூண்டு வைத்து அதில் பழங்கள், கடலை வைத்துப் பிடித்து  ஊருக்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.

மயிலாடுதுறையில் வீடுகளில் முன்பெல்லாம் தொலைக்காட்சி ஆண்டெனாக் குழாய்களில் குரங்குகள் ஏறி ஆட்டிக் கெடுத்துவிடும். அதனால் அந்தக் குழாய்களில் முள்கம்பிகளைச் சுற்றியிருப்பார்கள்.

மயிலாடுதுறையில் என் மகனும், மகளும் ஸ்வீட் கடைக்குப் போய் கடலை பக்கோடா வாங்கி கொண்டு பேசிக் கொண்டே கடலையைச் சாப்பிட்டு வரும் போது தெருவில்  வித்தை காட்டுபவர்  கையில் பிடித்து இருக்கும் குரங்கு பாய்ந்து  வந்து என் மகன் கையில் இருக்கும் பொட்டலத்தைப் பறித்ததில் மகன் கன்னத்தில் கையில் அதன் நகம் கீறி விட்டது.அவன் இரத்தக்களறியாக வந்த காட்சியை மறக்க முடியாது. டாக்டரிடம் அழைத்துச் சென்று ஊசி போடப்பட்டது. கண்ணில் அதன் நகம் படாமலும், முகத்தில் உடலில் குரங்கு கீறிய தடங்கள் இல்லாமலும்  கடவுள் காப்பாற்றினார்.

 வித்தைக்காரர் குரங்கின் இடுப்பில் கயிறு கட்டி  கையில்   பிடித்து இருந்தும்  குரங்கு பாய்ந்து வந்தது, கடலை ஆசையால். இப்போதும் குரங்கைப் பிடித்துக் கொண்டு வித்தைக்காரர்கள் போகும்போது எல்லாம், என்மகன் காயம் பட்டு வந்து நின்ற கோலம் நினைவுக்கு வந்து விடும்.

ஒருமுறை குடும்பத்துடன் பிருந்தாவனில் இருக்கும் பெருமாள் கோவில் பார்க்கப் போய் இருந்தோம். 12 மணிக்கு உச்சிகால பூஜை ஆனவுடன் நடை  அடைத்து விடுவார்கள். என்று வேகமாய்ப் போய்க்கொண்டு இருந்தோம், அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு, என் பெண்ணின் கண்ணாடியை பறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விட்டது.  கோவிலின் பக்கத்தில் இருந்த குடியிருப்பின் மாடி மீது தாவித் தாவி ஓடிக் கொண்டு இருந்தது . ஒரு பையன் ராதே சியாம், ராதே சியாம் என்று சொல்லிக் கொண்டே அதன் பின்னால் ஓடினான். ஏதோ ஒன்றைத் தூக்கிப் போட்டான் அதன் பின்  குரங்கும் தூக்கிப் போட்டது,கண்ணாடியை. (சிறுவயதில் படித்த குல்லாகதை நினைவுக்கு வருதா ? ) .  அந்த பையன் மிக அழகாய்க் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு வந்து தந்தான். ஆனால் பிரேம் வீணாகி விட்டது, லென்ஸ் நன்றாக இருந்தது. என் பெண்ணிற்கும் எந்த காயமும் படாமல் தப்பினாள். அப்புறம் பெருமாள் எங்களை அடுத்தமுறை வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டார்.  வாசலிருந்து பெருமாளை வணங்கி வந்தோம .

இந்த சம்பவம் பற்றி என் மகளும் பதிவு எழுதி இருக்கிறாள்  “ஞானக்கண்ணால் கடவுள் தரிசனம்” படித்துப் பாருங்களேன்.

இப்போது சமீபத்தில் (ஜுன் மாதம்) விராலிமலை போய் இருந்தோம் பெண்ணும் வந்து இருந்தாள். கையில் தண்ணீர் பாட்டில் வைத்து இருந்தாள், மேலே படிஏறிக் கோவில் வாசல் போய்விட்டோம், என் மகள் கையிலிருந்து தண்ணீர் பாட்டிலை வெடுக்கென இழுத்தது. அவள் கெட்டியாகப் பிடித்து இருந்தாள், அப்புறம் பக்கத்தில் இருந்தவர்கள் அதை விரட்டி விட்டார்கள்.
கோவில் உள்ளேயும் பெரிய பெரிய குரங்குகள் நடமாடிக் கொண்டு இருந்தன. உள் பிரகாரம் முழுவதும்.நவக்கிரக சன்னதியை சுற்றி கும்பிடலாம் என்று மகள் முன்னாலும் நான் பின்னாலும் போய் கொண்டு இருந்தோம். ஒரு குரங்கு நவக்கிரக சன்னதியின் கம்பி தடுப்பில் உட்கார்ந்து கொண்டு என் மகள் முகத்துக்கு நேரே வந்து பயமுறுத்தியது. அவள் அலறிப் பின்னால் நகர்ந்து விட்டாள்.

காவல்காரரிடம், ’முன்பு எல்லாம் குரங்குகள் கோவிலுக்குள் வராதே! இப்போது  இப்படிக் கோவில் முழுவதும் குரங்குகள் இருந்தால் எப்படி இறைவனை வணங்குவது?’ என்றுகேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் ,’என்ன செய்வது? மக்கள் பழங்களைக் கொடுத்துப் பழக்கிவைத்து விட்டார்கள்’ என்று .

பிலடெல்பியாவில் இருக்கும் வனவிலங்கு பூங்காவிற்கு மகனுடன் போய் இருந்தோம். அங்கு பார்த்த சில வித்தியாசமான  குரங்குகள்  படம் கீழே:-
சிங்க மூஞ்சிக் குரங்கு

குரங்குகள் நன்கு இஷ்டம் போல் விளையாட அதற்கு தனியாக  நீண்ட குழாய் அமைப்பில் வலைத்தடுப்பு பூங்கா முழுவதும் அது செல்லும்படி அமைத்து இருந்தார்கள். அதில் சின்னது பெரியது என்று வித விதமான  குரங்குகள் விளையாடி மகிழ்ந்து கொண்டு இருந்தன.  மனித குரங்கும் உண்டு.மனிதக்குரங்கு

கொரில்லா குரங்கு மூன்று இருந்தன, அதில் தலையில் வெயிலுக்கு பேப்பர் போட்டுக் கொண்டு அமர்ந்து இருக்கும்  குரங்கு இப்போது இல்லை.   இறந்து விட்டது என்று மகன் சொன்னான்.
வெள்ளை மூஞ்சிக் குரங்கு                                                  கறுப்பு வெள்ளைக் குரங்கு
                    
   
கறுப்பு வெள்ளைக் குரங்கு. இதன் முகம் இதன் பின் பகுதி முழுவதும் வெள்ளை.


படத்தில் உள்ள குரங்குகள் தான் கீழே இருப்பது

முகம் காட்ட மறுத்து விட்டது. 

படம் எடுக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் ஓரமாய் உட்கார்ந்து கொண்டது. பக்கத்தில் வரவே இல்லை.

எல்லாம் கண்ணாடி தடுப்பின் வழியாகத்தான் எடுக்க முடியும். ஓரளவுதான் எடுக்க முடிந்தது.    யானையைப் பார்த்தால் விநாயகர் நினைவுக்கு வருவது போல் குரங்குகளைப் பார்த்தால் ராமருக்கு பாலம் கட்ட உதவிய வானரசேனைதான் நினைவுக்கு வரும் இல்லையா?

  கீதாசாம்பசிவம் அவர்கள் சமீபத்தில் அவர்கள் குடியிருப்புக்கு குரங்கு வந்து பயமுறுத்தியதை பகிர்ந்து இருந்தார்கள். உடனே எனக்கும் எங்கள் வீட்டுக்கு வந்த குரங்காரைப்பற்றியும்  வனவிலங்குப் பூங்காவில் பார்த்த சிலவகை   குரங்குகளையும் பகிர ஆசை வந்து விட்டது. கீதா அவர்களுக்கு நன்றி.

                                                             வாழ்க வளமுடன்
-----------------

42 comments:

இராஜராஜேஸ்வரி said...

எங்கள் தோட்டத்திலும் யானையார் ஒற்றையாக வந்து அதகளம் தான்..

இரும்புக்கேட்டை பிய்த்து எறிந்துவிட்டார்..

அம்பாளடியாள் வலைத்தளம் said...

ஆஹா ...மிக மிக தெளிவாகவும் அருமையாகவும் எங்கள் முன்னோர்களைப்
படம் பிடித்துள்ளீர்கள் என்னையும் தான் :))))))) ஆனாலும் இன்று உங்கள் சகோதரி
அம்பாளடியாளுக்கு பிறந்த நாளாயிற்றே வாழ்த்துச் சொல்ல வேண்டாமா ?..:))

Geetha Sambasivam said...

//குரங்கு பாய்ந்து வந்து என் மகன் கையில் இருக்கும் பொட்டலத்தைப் பறித்ததில் மகன் கன்னத்தில் கையில் அதன் நகம் கீறி விட்டது.அவன் இரத்தக்களறியாக வந்த காட்சியை மறக்க முடியாது. //

அயோத்தியில் இதை நேரிலே பார்த்தோம். :( என்றாலும் பயம் தான் குரங்கு என்றால்! அதே செல்லப் பிராணிகளிடம் அவ்வளவு பயம் ஏற்படுவதில்லை.

Geetha Sambasivam said...

உங்கள் மகனுக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து நிச்சயமாய்க் கடவுள் தான் காப்பாற்றினார். :)

Geetha Sambasivam said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அம்பாளடியாள். உங்களோட பின்னூட்டத்தை இப்போத் தான் கவனிச்சேன். :)

துரை செல்வராஜூ said...

கம்புக்குக் களை எடுக்கப் போய் தம்பிக்கு பெண் பார்த்த கதை போல - உங்க வீட்டுக்கு வந்த வானரங்களைப் பார்க்கலாம் என்று வந்தால் - அப்படியே பேச்சு வாக்கில் பிலடெல்பியா வரைக்கும் அழைத்துக் கொண்டு வந்து விட்டீர்கள்..

அதுங்க பாட்டுக்கு ராமா..ன்னு தான் இருந்தன..

ஆனாலும் - நம்மூரில் நாம் மட்டும் வாழ்வதையே விரும்புகின்றோம். வானரங்களின் வாழ்விடங்களை அழித்து ஒழித்து விட்டோம்.

அவைகளால் தொந்தரவு தான் - ஆபத்து தான்!.. அதற்கு அவைகள் மட்டுமே காரணம் அல்ல!..

அவற்றுக்கும் நல்லருள் பொழிய ராமன் இருக்கின்றான்!..

நகைச்சுவையுடன் இனியதொரு பதிவினை வழங்கியமைக்கு மகிழ்ச்சி..

Angelin said...

என்ன இருந்தாலும் நம்மூர் வானரங்களின் அழகே தனி தான் :)
எங்க வீட்டிலும் சென்னைல ஒருவர் வந்து சாப்பிட்டு தண்ணி குடிச்சி போவாராம் ..அம்மா இறந்த பின்னும் அவர் வந்து தேடினார்னு தங்கை சொன்னாள் ..அவை கொஞ்சம் குறும்பு செய்தாலும் அன்பான ஜீவன்கள்தான் :)

ஸ்ரீராம். said...

சமீபத்தில் மதுரை போயிருந்தபோது அழகர் கோவிலில் ஏகப்பட்ட 'நண்பர்களை'ப் பார்த்தேன். அந்தப் புகைப்படங்களை முக நூலில் பகிர்ந்து வருகிறேன்! சோளிங்கரில் கூட நிறைய 'நண்பர்கள்' வழி மறிப்பார்கள்.

படங்கள் அருமை. இரண்டு படங்கள் மட்டும் திறக்கவில்லை. அதில் ஸார் ஒன்றும் வரைந்த படங்கள் இல்லையே.....? ஏனென்றால் ஸார் நண்பரின் படமேதும் வரைந்திருக்கிறாரா? என்று பார்த்தேன். :)))

G.M Balasubramaniam said...


குரங்குகள் பற்றி ஒரு பதிவே எழுத நடந்த நிகழ்வுகள் நிறையவே இருக்கின்றன. வீட்டுச் சன்னலில் இருந்து பிலடெல்ஃபியா வரையிலான குரங்குகள் பற்றிய உங்கள் பதிவினை ரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

பயங்கரமான சேட்டை தான்...!

படங்கள் அருமை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

குரங்குப்பதிவு பார்கவும் படிக்கவும் குதூகலம் அளித்தது.

நேரில் வந்தால் என்ன பாடுபடுவோமோ !

பகிர்வுக்கு நன்றிகள்.

>>>>>

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
ஒற்றை யானை வந்தால் மிகவும் ஆபத்து என்பார்களே.
தோட்டத்தை , இரும்பு கேட்டை எல்லாம் கெடுத்து விட்டாரே கஷ்டம் தான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

// இராஜராஜேஸ்வரி said...
எங்கள் தோட்டத்திலும் யானையார் ஒற்றையாக வந்து அதகளம் தான்..

இரும்புக்கேட்டை பிய்த்து எறிந்துவிட்டார்..//

அடப்பாவமே ! இது வேறு நடந்துள்ளதா? சொல்லவே இல்லையே !!!!!

ஏதாவது பரிகாரம் செய்யணுமோ என்னவோ !

எதற்கும் அந்த யானையாரின் நான்கு கால்களுக்கும் வெள்ளிக்கொலுசு போட்டு, வாலுக்கு மட்டும் தங்கக்கவசமாக போட்டுப்பாருங்கோ.

அதன்பிறகு வருகை தந்து வாலாட்டாமல் இருந்தாலும் இருக்கலாம். வாழ்த்துகள்.

எதற்கும் தொந்திப் பிள்ளையாரப்பாவை வணங்கி
ஜாக்கிரதையாகவே இருங்கோ.

கோமதி அரசு said...

வணக்கம் அம்பாளடியாள் வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து காலையிலேயே வாழ்த்து சொல்லிவிட்டேன்.
மறுபடியும் சொல்கிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

கோமதி அரசு said...

வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
உங்கள் கை சரியாகி விட்டதா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

எங்கள் தெருவில் நிரந்தரமாய் ஒரு குரங்கு வசித்து வருகிறது
என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

நீங்கள் சொல்வது சரிதான்.
அதன் வாழும் இடங்களை அழித்துவிட்டோம். அவைகளுக்கு அருள்புரிய ராமர் இருப்பது உணமை தான்.

அதன் உணவு பழக்கத்தை வேறு மாற்றி விட்டோம். நாம் சாப்பிடும் உணவுக்கும், பானத்திற்கும் அதை பழக்கம்படுத்தி விட்டோம்.


உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஏஞ்சலின், வாழ்கவளமுடன். நலமா?
பழகிய குரங்கா ? அம்மாஅதற்கு அன்புடன், உணவும், தண்ணீரும் தந்த காரணத்தால் அம்மாவை தேடுகிறது.
”பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம்கூட நண்பனே ”என்ற பாடல்தான் நினைவுக்கு வருது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
அழகர் மலை, பழமுதிர்சோலை அதன் இருப்பிடம் அல்லவா அதைப் பார்க்காமல் இருக்க முடியுமா?
அதன் படங்கள்
முகநூலில் தான் பார்க்க வேண்டுமா?
சார் படம் வரையவில்லை.

ஏன் இந்தமுறை படங்களை பார்க்கமுடியவில்லை?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்வும் அருமை. பல வருடங்களுக்கு முன் பெங்களூரின் மல்லேஷ்வரம் பகுதியில் வசித்த போது கூட்டமாகக் குரங்குகள் வீட்டுக்குள்ளே வந்து விடும். விரட்டுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.

சே. குமார் said...

படங்களுடன் பகிர்வு அருமை அம்மா.
வாழ்த்துக்கள்.

Yarlpavanan Kasirajalingam said...

"குரங்குகளைப் பார்த்தால் ராமருக்கு பாலம் கட்ட உதவிய வானரசேனைதான் நினைவுக்கு வரும்" என்ற உண்மையைச் சுட்டி அழகான பதிவைப் பகிர்ந்துள்ளீர்கள்.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி சார்.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
ஆம், தனபாலன் பயங்கரமான சேட்டைதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
வீட்டிற்கு, தோட்டத்திற்கு குரங்கு வந்தால் கஷ்டம் தான்.
திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு யானை வராமல் இருக்க நீங்கள் சொன்ன ஆலோசனை நன்றாக இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தைஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
எப்போதாவது குரங்கு விஜயம் செய்யும் போதே கஷ்டமாய் இருக்கே!
எப்போதும் உங்கள் குடியிருப்பில் இருந்தால் மிகவும் கஷ்டம் தான். இந்த பதிவில் திருவெண்காடு அனுபவம் எழுதியிருக்கிறேன் இல்லையா? அது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என நினைக்கிறேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.

கூட்டமாய் குரங்குகள் வந்தால் விரட்டுவது கஷ்டம் தான்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் யாழ்பாவணன் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

Ramani S said...

படங்களும் விளக்கமும் அருமை
பதிவாக்கித் இதுவரை அறியாத வானர ராஜாக்களைக்
கண்டு களிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

ADHI VENKAT said...

குரங்காரின் படங்கள் அருமையாக வந்துள்ளன. தங்கள் மகனுக்கு அன்று கடவுள் தான் காப்பாற்றியுள்ளார்.

நாங்களும் விராலிமலை சென்ற போது நானும் ரோஷ்ணியும் நமஸ்கரித்தோம். அப்போது எங்களிடமிருந்த ரோஷ்ணியின் slice பாட்டிலை தட்டி பறித்துச் சென்றது.கோவில் முழுதும் குரங்குகள் தான். அப்போ ரோஷ்ணி அவள் அப்பாவிடம் இனிமே இந்த கோவிலுக்கே வரக்கூடாதுப்பா என்று அழுது கொண்டே சொன்னாள்....:)

இங்கு வீட்டுக்கு பின்னே உள்ள கோவில் மதிலில் குரங்காரின் நடமாட்டம் தான். முன்பு 21 குரங்குகள் வரும்...:)

தங்கள் மகனுக்கு ஏற்பட்ட அனுபவம் போல் நெய்வேலியில் ஏற்பட்ட அனுபவத்தை பற்றி ”கத்திரிக்காய் சாம்பார்” என்ற பதிவில் என்னவர் எழுதியிருப்பார்.

கோமதி அரசு said...

வணக்கம் ஆதி, வாழ்க வளமுடன்.
எங்கள் மகனை இறைவன் தான் காப்பாற்றினார்.
விராலிமலையில் ரோஷ்ணியிடமிருந்தும் slice பாட்டிலை தட்டி பறித்துச்சென்றதா?
பாவம் குழந்தை பயந்து போய் இருப்பாள்.

இரண்டு குரங்கு வந்தாலே இங்கு ஒரே கூச்சலும் கும்பலும் தாங்க முடியவில்லை 21 குரங்கு என்றால் இயல்பு வாழ்க்கையே வாழ முடியாதே!

வெங்கட் எழுதிய கத்திரிக்காய் சாம்பார் லிங் கொடுத்தால் படித்து பார்ப்பேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கீத மஞ்சரி said...

குரங்கார் தொடர்பான அனுபவங்கள் ஒவ்வொன்றும் திகிலுண்டாக்குகின்றன. நல்லவேளையாக குழந்தைகளுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல் போனதே. எப்போதும் எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம். நீங்கள் குறிப்பிடுவது போல் நாம்தான் அநாவசியமாக இயற்கைக்கு மாறாக விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவுகளைக் கொடுத்துப் பழக்கிவைத்து இருக்கிறோம். புகைப்படங்கள் அனைத்தும் அருமை. எத்தனை வகையான இனங்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி கோமதி மேடம்.

கோமதி அரசு said...

வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
குழந்தைகளுக்கு இறைவன் அருளால் பெரிய ஆபத்து ஏதும் ஏற்படவில்லை.
நீங்கள் சொல்வது போல் எப்போதும் எசசரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம் தான்.

வனவிலங்கு பூங்காவில் தயவு செய்து நீங்கள் உணவு ஏதும் கொடுக்காதீர்கள் என்று போட்டு இருப்பார்கள். அப்படியும் அதை யாரும் மதிப்பது இல்லை.

அவை வளர்ந்த சூழ்நிலை, அதன் உணவு பழக்க வழக்கம் எல்லாம் அறிந்து கொள்ளாமல் தவறு செய்து வருகிறோம். விமானநிலையத்தில் சிதறி கிடக்கும் உணவுகளை சாப்பிட வரும் பறவைகளால் விமான விபத்து ஏற்படுகிறது.

சுற்றுலா செல்பவர்கள் வீசி எறிந்து வரும் பாட்டில்கள், உணவு கழிவுகளால் விலங்குகள், பறவைகளுக்கு ஏற்படும் துன்பங்கள் எவ்வளவு!

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.

ADHI VENKAT said...

http://venkatnagaraj.blogspot.com/2011/02/blog-post_25.html

ammaa ithai padiththu paarkkavum.

கோமதி அரசு said...

வணக்கம் ஆதி, வாழ்க வளமுடன்.
நான் கேட்டவுடன் வெங்கட் அவர்களின் கத்திரிக்காய் கறி சுட்டி கொடுத்ததற்கு நன்றி.
படித்துப் பார்த்தேன்.நன்றாக இருந்தது.

கோமதி அரசு said...ஆதி,
வெங்கட் பதிவை படித்து முன்பே பின்னூட்டம் போட்டு இருக்கிறேன்.
நினைவு இல்லை அதனால் மறுபடியும் படித்த போது புதிதாக படிப்பது போல் நன்றாக இருந்தது.
பழைய பின்னூட்டம் கீழே:-

நித்தம், நித்தம் நெல்லு சோறு, நெய் மணக்கும் கத்திரிக்காய் பாட்டு நினைவுக்கு வருகிறது.

குரங்கு கத்திரிக்காய் சாப்பிட்ட அழகை ரசித்ததுடன் விட்டு இருக்கலாம் பாட்டி. கன்னத்தை தடவி விட்டு இருக்க வேண்டாம். பாவம் பாட்டி.

மனசுரங்கத்திலிருந்து வரும் விஷயங்கள் தொடரட்டும் வெங்கட்.
நன்றி ஆதி.

KILLERGEE Devakottai said...


நாட்டில் எத்தனையோ மனிதஉருவில் மிருகங்கள் வாழும்போது பாவம் நமது மூதாதையர்கள் இவர்கள் நாம்தான் அரவணைத்து போகவேண்டும்,,,
நேமிருப்பின் எனது வலைப்பக்கம் வருக சகோதரி,,,
www.killergee.blogspot.com

கோமதி அரசு said...

வணக்கம் KILLERGEE Devakottai , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் வலைப்பக்கத்திற்கு வருகிறேன்.

மாதேவி said...

படங்கள் அருமை.

கோமதி அரசு said...

வணககம் மாதேவி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.