ஞாயிறு, 13 அக்டோபர், 2013

பொளைச்சுக் கிடந்தால் வரேன் தாயி!


நாங்கள் எந்த வருடத்திலிருந்து கொலுவை வைக்க  ஆரம்பித்தோம்  என்று பேசிக் கொண்டு இருந்தோம்.  முதலில் கொலு வைக்க  ஆரம்பித்தபோது திருவெண்காட்டில் இருந்தோம்.1980 ம் வருடம் ஆரம்பித்தோம்.

 பொம்மை கொண்டு வரும் தாத்தாவின் நினைவுகளை மருமகளிடம்  பகிர்ந்து கொண்டேன்.அதை நீங்களும் படித்துப் பாருங்களேன். ஒவ்வொரு கொலு சமயத்திலும் பொம்மை கொண்டு வரும் தாத்தா நினைவு வந்து விடும்.

ஒரு வயதான தாத்தா பண்ருட்டியிலிருந்து பொம்மைகள்
கொண்டு வருவார், அவரிடம் முதன் முதலில் பிள்ளையார்,  சிவலிங்கம்
நந்தி மூன்றும் 12 ரூபாய்க்கு வாங்கினேன்.


எங்கள் அம்மா வீட்டிலும் கொலு உண்டு, மாமியார் வீட்டிலும் கொலு
வைப்பது உண்டு.  விடுமுறை இல்லை என்று நவராத்திரிக்கு ஊருக்கு
வரமாட்டார்கள் என்னவர். குழந்தைகளுக்கு நவராத்திரி கொலுவைப் பற்றி
தெரிய வேண்டுமே! இப்போது போல் காமிராவில் கொலுவை படம் எடுத்து
உடனே அனுப்பும் வசதி எல்லாம் கிடையாதே!  கொலு வைக்க வேண்டும்
என்ற எண்ணம் திடீர் என்று தான் வந்தது.பக்கத்து வீட்டில் ஒரு மாமி  வீட்டில் முன் வாசலில் மண் கொட்டி வைத்து இருப்பார்கள். அதில் குழந்தைகளை விளையாட அழைத்து செல்வேன். அப்படி அவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும்போது  பண்ருட்டி தாத்தா பொம்மைகளுடன் வந்தார். பொம்மை வேண்டுமா? கொலு பொம்மை என்று கேட்டு  மாமியின் வீட்டு திண்ணையில் ஓய்வாய் உட்கார்ந்து தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தார். அப்போது சும்மாதான்
பொம்மைகளைப் பார்வை இட்டேன். மாமி, தாத்தாவிடம் ’நாங்கள் கொலுவைப்பது இல்லை எங்களுக்கு வேண்டாம்’ என்றார்கள்.

 நான் ’எங்கள் அம்மா வீட்டில், அத்தை வீட்டில் எல்லாம் கொலு வைப்பார்கள்’ என்றவுடன்  மாமி,’ நீயும் தான் வையேன்’ என்றார்கள்.  உடனே ஆசை தொற்றிக் கொண்டது. மூன்று பொம்மைகளை எடுத்து வைத்து விட்டேன். என்
கணவரிடம் கேட்க வேண்டுமே! கொலு வைக்கலாமா  என்று கேட்க
வேண்டுமே என்ற தயக்கம் இருந்தாலும்   ஆசை வென்றது.என்ன சொல்லப்
போகிறார்கள் சம்மதித்து விடுவார்கள் என்று  எனக்கு நானே சமாதானம்
செய்துகொண்டு வாங்கிவிட்டேன்.

தாத்தாவும் ’மூன்று போதுமா ’என்று கேட்டார், ’அடுத்த வருடம் தான் இனி
வருவேன்’ என்றார். ’போதும் அடுத்தவருடம் வாங்கிக் கொள்கிறேன்’ என்று
சொல்லி விட்டேன், நிறைய வாங்கும் ஆசையை அடக்கிக் கொண்டு.

எல்லாப்பொம்மையுமே அழகு. ’என்னை வாங்கிக் கொள்’ என்றது.

மாலை கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த அப்பாவிடம், குழந்தைகள் அப்பா
கொலுபொம்மை  கொலுபொம்மை என்று குதித்து கும்மாளமிட்டனர். பெண்ணுக்கு விபரம் தெரியும்: பையனுக்கு விவரம் புரியாது  இருந்தாலும் அக்காவுடன் சேர்ந்து குதித்து மகிழ்ந்தான்.என் கணவர் பொம்மைகளைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வி,’ இவ்வளவு பெரிதா?’என்றுதான்.

’எங்கள் வீட்டில் இவ்வளவு பெரிய பொம்மையே கிடையாது. நீ என்ன
இவ்வளவு பெரிதாக வாங்கி இருக்கிறாய்?’

  ’நாலு ரூபாய் தான் ஒரு பொம்மை’ என்றேன். ’நான் ரூபாய்க்கு சொல்லவில்லை இவ்வளவு பெரிதாக வாங்கிவிட்டாயே என்று தான் கேட்டேன்’ என்றார்கள்.

எப்படியோ  தாத்தாவும் ’பொளைச்சு கிடந்தால்  வரேன் தாயி அடுத்தவருடம் என்று சொல்லிச் சொல்லியே  வருட வருடம் பொம்மைகளை கொண்டு வந்து கொடுத்தார். நான்கு வருடங்கள்.

 ராமர், லக்ஷ்மணர்,சீதை,அனுமன்செட், மயில்பீலியுடன் பெரிய கிருஷ்ணர்(மயில்பீலியை தனியாக கழற்றி மாட்டலாம்)  தங்க கலரில் இரண்டு  பாவை விளக்குகள் , பெருமாள், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை , கடிகாரம், செட்டியார், புத்தர், வெங்காடஜலபதி என்று அவரிடம் வாங்கியது எல்லாம் மிக அழகு.

அப்புறம் நாங்கள் மாயவரம் வந்து விட்டோம்.அங்கு வந்த பின் கைலாய குடும்ப செட் -சிவன், பார்வதி, பிள்ளையார்,நாரதர் மாம்பழம்  கொடுக்கும் காட்சி.  மற்றும் மீனாட்சி வாங்கினேன். நால்வர் செட் வாங்கினேன்.
(அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்.)

முன்பு வாங்கிய சிவலிங்கம் மதுரை சொக்கநாதர் ஆனார். ஆமாம்! மீனாட்சி பொம்மை வாங்கி அதன் அருகிலே வைத்து மீனாட்சி சொக்கநாதர் ஆனார்.

என் கணவரின் அண்ணா வீட்டில் முன்பு கொலு வைக்க மாட்டார்கள்
அவர்கள் மூன்று வருடம் எங்கள் கொலுவுக்கு வந்தார்கள்( அப்புறம் அவர்கள் வீட்டிலும் கொலு  வைக்க ஆரம்பித்து விட்டதால் வரவில்லை) அவர்கள் வாங்கி தந்த அன்ன படகில் சரஸ்வதி, லட்சுமி, ராதாகிருஷ்ணர் ஊஞ்சல் ஆடும் காட்சி, நாதஸ்வர செட் இவைகளுடன்  பொம்மைக் குடும்பம் பெரிதானது.

அம்மா, தங்கைகள் ஒரு முறை வந்தார்கள் அவர்கள் சிவன், பார்வதி. ஆறு
முகர் ஆறு தாமரைகளில் இருக்கும்  பொம்மை, கார்த்திகை பெண்கள்
அறுவர் வாங்கி வந்தார்கள்.மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  போன போது  நம் வீட்டில்  செட்டியார் மட்டும் இருக்கிறாரே! என்று செட்டியார் அம்மாவும் வாங்கினேன் பலவருடங்களுக்கு பிறகு செட்டியாருக்கு வாழ்க்கைத் துணை கிடைத்தார்.தெரிந்தவர்கள் கொலுப் பார்க்க வரும்போது  குபேர பொம்மை,
பிள்ளையார், சரஸ்வதி, கிருஷ்ணர், பெரிய யானைகள் எல்லாம் வாங்கித்
தந்தார்கள்.  அவை  வாசலில் வரவேற்பது போல் நித்திய கொலுவானது.
அதை வைக்கப்  பெட்டியில் இடமில்லை. அந்த நித்தியகொலு படம் துளசி கோபால் அவர்கள் மாயவரம்  பதிவர் சந்திபைப் பற்றி  எழுதிய இடுகையில் இடம் பெற்றது.

இனி வருபவர்களிடம் தயவு செய்து வரும்போது பூ வாங்கி வாருங்கள்
போதும் பொம்மைகள் வேண்டாம் வைக்க இடமில்லை என்று அன்புக்
கட்டளை இட்டேன். அப்படியும் சிலர் ,’பெரிதாக வாங்கினால் தானே வைக்க
இடமில்லை சின்னதாக வாங்கி வருகிறோம் ’என்று வாங்கி வருவார்கள்.
நான் போகும் ஊர்களில் எல்லாம் கொலுவுக்கு என்று சேர்த்த கலைப்பொருட்கள் ஏராளம்.

நீ பொம்மை வாங்கி விடுகிறாய் அதை எடுத்து அடுக்குவது, படிகளை செட்
செய்வது, மீண்டும் அதை பேக் செய்வது எல்லாம் பெரிய வேலை என்று
வேலை அதிகமாகிறது என்று என் கணவர் அலுத்துக் கொண்டதால்
இப்போது வாங்குவது இல்லை. அப்படி வாங்கினாலும் கொலுவில்
பொம்மை கொஞ்சமாய் இருக்கும் வீடுகளுக்கு கொடுத்து விடுவது என்று
இருக்கிறேன்.

அம்மா   ஒயரில், கம்பளி நூலில் செய்த பொம்மைகள்  புதிதாக செய்து
கொடுப்பார்கள் வருட வருடம். அவை கொலுவில் இடம்பெற்று நெஞ்சில்
அவர்களின் நினைவை எப்போதும் தந்து கொண்டு இருக்கிறது .

மகனின் ஓவியங்கள், மருமகள், மகள், பேரன், பேத்திகள் என்று அவர்களின்
கைவேலைகள் கொலுவை அலங்கரிக்கிறது.

சென்ற வருடம்  மாயவரத்தில் மகன் மருமகள், பேரன் வந்து  உற்சாகமாக கொண்டாடிய கொலு படங்கள் இவை:-                                    

                                              

                                              
  மகன் செய்த சாக்பீஸ் கோவில், அப்பா செய்த மலைக் கோவில்  அருவியுடன்.
                                       

                                             


மகன் , மருமகள் சேர்ந்து செய்த பூங்கா ரயில்
கணவர் செய்த சரஸ்வதி அம்மன்  
நவராத்திரியில் போட்ட கோலங்கள் 
பன்னீர் தெளித்து விட்டேன் . சந்தனம், குங்குமம் எடுத்துக் கொள்ளுங்கள் !

கொலுவுக்கு வந்து கொலு பார்த்தவர்களுக்கு ஜூஸ், பிஸ்கட் , எடுத்துக் கொள்ளுங்கள்.  மற்றும்  வெற்றிலைபாக்கு ,மஞ்சள் குங்குமம் கூடையில்.
பெற்றுக் கொள்ளுங்கள். எல்லோர் வீட்டிலும் சுண்டல் சாப்பிட்டு இருப்பீர்கள் அதனால் ஒரு மாறுதலுக்கு பிஸ்கட், மிட்டாய்  எடுத்துக் கொள்ளுங்கள்.

நியூஜெர்சியில் இன்று சரஸ்வதி பூஜை!
எல்லோருக்கும், சரஸ்வதிபூஜை,  விஜய தசமி வாழ்த்துக்கள்!
இன்று படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு கலைமகள்  கல்விச் செல்வத்தை அள்ளித் தர வாழ்த்துக்கள்!

                                                         வாழ்க வளமுடன்!

                                                                            ----------------

56 கருத்துகள்:

 1. கொலு அருமை... நீங்கள் சொன்னதை எல்லாம் எடுத்துக் கொண்டோம்... மகிழ்ச்சி...

  இனிய சரஸ்வதிபூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. பிரமிட் கொலுவை நான் பார்த்த நினைவில்லையே.. எப்படியோ விடுபட்டிருக்கிறது. மிக அருமை..

  பதிலளிநீக்கு
 3. அழகான கொலு கோமதி அம்மா.. தங்கள் கணவர், மகன், மருமகள், பேரன், பேத்தி என அனைவரின் படைப்புகளும் அருமை. எங்கள் வாழ்த்துகளை அவர்களுக்கு சொல்லிவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. மிகச் சிறப்பான கொலு.....

  இங்கேயும் சில வீடுகளில் கொலு பார்த்தேன். சில பொம்மைகள் மிகப் பழமையானவை...... கணினி முழுதும் சரியானதும் பதிவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான கொலு ..பாராட்டுக்கள்..

  நேற்று கொடுத்த விரிவான இரண்டு கருத்துரைகளும் அரங்கேற மறுத்துவிட்டன..!

  பதிலளிநீக்கு
 6. //எப்படியோ தாத்தாவும்
  ’பொளைச்சு கிடந்தால் வரேன் தாயி அடுத்தவருடம் என்று சொல்லிச் சொல்லியே வருட வருடம் பொம்மைகளை கொண்டு வந்து கொடுத்தார். நான்கு வருடங்கள்.//

  இனிமையான நினைவுகள். அருமையான மனிதர்கள்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 7. //நான் போகும் ஊர்களில் எல்லாம் கொலுவுக்கு என்று சேர்த்த கலைப்பொருட்கள் ஏராளம்.//

  கலையுணர்வு மிக்கவர் நீங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  நவராத்திரி கொலு என்பது குதூகுலம் அளிக்கும் ஓர் பண்டிகை. நம்மையும் பொம்மைகளால் மனதளவில் குழந்தைகளாக ஆக்கிவிடுவதே இதன் தனிச்சிறப்பு. ;)))))

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 8. திருவெண்காட்டில் இருந்திருக்கிறீர்கள் என்றவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி சகோதரியாரே. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் அது. திருவெண்காட்டில், வாதாபி கணபதி என்றொரு ஆலயம் உண்டு. அது தான் தமிழ் நாட்டின் முதன் விநாயகர் ஆலயம்.
  அருமையான பதிவு
  சரசுவதி திருநாள், விஜயதசமி திருநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. விமர்சனம் சுவையாயும் (நகை) சுவையாயும் இருந்தது

  பதிலளிநீக்கு
 10. கொலு ஆரம்பித்த கதையும் அனுபவங்களும் கடைப்பிடிக்க சில ஆலோசனைகளுமாய் பகிர்வு அருமை. படங்களும் அழகு. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் விஜய தசமி வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. இனிய விஜயதசமி நல் வாழ்த்துக்கள்!

  கொலு அத்தனையும் மிக மிக அழகு சகோதரி!
  அந்த வாக்தேவியின் சிலை மனதைக் கொள்ளை கொண்டது!!!

  அற்புதம்! அமைத்த - உங்கள் கணவர் - சகோதரருக்கு விசேட வாழ்த்துக்கள்!
  அருமையா பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

  த ம. 2

  பதிலளிநீக்கு
 12. சரஸ்வதி அம்மன் சித்ரம் பிரமாதம்.

  ஒரு சிரத்தையும் பக்தியும் இருந்தால் தான்
  இது போல் வரைய முடியும். சிற்பம் வடிக்க இயலும்.

  எல்லாம் வல்ல தேவி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
  எல்லா நலன்களும் தந்தருள்வாள்.
  தங்கள் கணவருக்கு ஒரு கன்க்ராட்ஸ்.

  சுப்பு தாத்தா.
  www.pureaanmeekam.blogspot.in

  பதிலளிநீக்கு
 13. கண்ணைக்கவர்ந்த கொலு பொம்மைகள் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல குடுபத்துடன் சேர்ந்து அழகாக செய்திருக்கிங்க. அனைவருக்கும் என் பாராட்டை சொல்லுங்க. எனக்கு கொலு பார்க்க ஆசையாக இருந்தது எங்கள் வீட்டிலோ அக்கம் பக்கத்திலோ எங்கும் பார்க்க முடியவில்லை.
  இன்று தங்கள் வலையில் கண்டேன். மிக்க மகிழ்ச்சிங்க.

  பதிலளிநீக்கு
 14. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். உற்சாகமாய் முதலில் வந்து கொலுப் பார்த்து நான் சொன்னதை எடுத்துக் கொண்டதற்கு நன்றி.
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. முத்துலெட்சுமி வா, வாழ்க
  வளமுடன்.
  பிரமிட் போனமுறை தான் புதிது, காசி வாங்கி வந்த புது பொம்மைகள்.ரயில் ஓடுவதை பார்த்து மெய் மறந்து போய் விட்டதால் அதன் அருகில் இருந்த இதை பார்க்க மறந்து இருப்பாய்.
  ரயில் மலை,காட்சிகளை பெரிது செய்து பார்த்தால் தெரியும். அந்த வாளகத்தில் தான் இருக்கிறது.
  நன்றி உன் வ்ருகைக்கும், கருத்துக்கும்.

  பதிலளிநீக்கு
 16. வாங்க தியானா, வாழ்க வளமுடன்.
  உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் வாழ்த்துக்களை குடும்பத்தினர்களிடம் சொல்லி விட்டேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வாங்க வெங்கட், வாழ்க வளமுடன்.
  உங்கள் கடுமையான வேலைகளுக்கு மத்தியில் கொலுப் பார்க்க வந்தமைக்கு நன்றி.
  நீங்கள் பார்த்த கொலுக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
  பழமையான பொம்மைகளைப் பார்க்க ஆசை.

  பதிலளிநீக்கு
 18. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
  உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

  //நேற்று கொடுத்த விரிவான இரண்டு கருத்துரைகளும் அரங்கேற மறுத்துவிட்டன..!//

  என்ன காரண்ம தெரியவில்லையே!
  உங்கள் இந்த கருத்து மட்டும் தான் தெரிகிறது.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

  நவராத்திரி கொலு என்பது குதூகுலம் அளிக்கும் ஓர் பண்டிகை. நம்மையும் பொம்மைகளால் மனதளவில் குழந்தைகளாக ஆக்கிவிடுவதே இதன் தனிச்சிறப்பு. ;)))))//

  உண்மை சார், நீங்கள் சொல்வது.
  பொம்மைகள் நம்மை குழந்தை ஆக்குவது உண்மை. பொம்மைகளை பார்க்கும் போது அனைத்தையும் வாங்க துடிக்கும் மனம் குழந்தை தானே!

  பொம்மைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை உண்டு.
  அவை கொடுக்கபட்ட காலம், வாங்கிய நினைவுகள், கொடுத்தவர்கள் என்று எப்போதும் என்னை நினைவுகளால் உற்சாகப்படுத்தும் வசந்த காலம் தான்.
  உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டக்களுக்கு மிகவும் நன்றி.
  பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 20. வாங்க கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  திருவெண்காட்டு நங்கையை பரஞ்சோதி மணந்து கொண்டார். பின் அவர் வாதாபிக்கு போரில் படைதளபதியாக போய் (நரசிம்ம பல்லவருக்காக) சாளுக்கியர்களை வென்று அங்கிருந்து கொண்டு வந்த பிள்ளையாருக்கு பெயர் வாதாபி பிள்ளையார். அது அவர் ஊரான திருச்செங்காட்டில் உள்ளது. அவர் மகன் சீராளனை பிள்ளைக்கறி கேட்ட கதை விழாவாக சித்திரை சதயத்தில் வெகு சிறப்பாக் நடை பெறும். நாங்கள் போய்ப் பார்த்து இருக்கிறோம். சரித்திர புகழ் பெற்றது தான்.
  உங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க ராமலக்ஷ்மி,வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது போல் கொலுவைக்கும் போது ஏற்படும் அனுபவங்கள் ஏராளம். (பெட்டியிலிருந்து எடுப்பதிலிருந்து மறுபடி பெட்டிக்கு போகும் வரை)

  ஒவ்வொரு வருடமும் பார்க்க வரும் அன்பர்களால் கிடைக்கும், ஆலோசனைகள்.

  கொலுப் பார்க்க வருபவர்களுக்கு வெற்றிலை பாக்குடன் சின்னதாய் பரிசு பொருள் கொடுத்தாலும் அவர்கள் அதை உபயோகப்படுத்துவது போல கொடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு எனற கலவையான உணர்வுகள் ஏற்படுத்தும் விழாதான் நவராத்திரி கொலு.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 23. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
  உங்கள் தொடர் வருகை மிக உற்சாகம் தருகிறது.
  உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க சூரி சார், வாழ்க வளமுடன்.
  சரஸ்வதி அம்மன் சந்தனத்தால் செய்தார்கள் என் கணவர். எங்கள் குடும்பத்தில் சரஸ்வதி பூஜை அன்று மஞ்சளில் செய்வது பழக்கம். என் கணவர் சந்தனத்தால் செய்யும் முறைக்கு மாறி விட்டார்கள்.
  கணவரின் சகோதர்கள் எல்லாம் மஞ்சளில் தான் செய்கிறார்கள்.

  உங்கள் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
  கணவரிடம் உங்கள் வாழ்த்தை சொல்லிவிட்டேன், அவர்கள் தங்களுக்கு தன் வணக்கத்தையும், நன்றியையும் சொல்ல சொன்னார்.

  பதிலளிநீக்கு
 25. வாங்க சசிகலா, வாழ்கவளமுடன்.
  உங்கள் வலைச்சர பொறுப்பு மிக சிறப்பாக இருந்தது. அதை நிதானமாய் படிக்கிறேன். இங்கு பேரனுடன் நேரம் போவதால் நிறைய பதிவுகள் படிக்க முடியவில்லை.

  //எனக்கு கொலு பார்க்க ஆசையாக இருந்தது எங்கள் வீட்டிலோ அக்கம் பக்கத்திலோ எங்கும் பார்க்க முடியவில்லை.//

  அடுத்தமுறை மாயவரத்திற்கு எங்கள் வீட்டுக்கு கொலுவுக்கு வந்து விடுங்கள்.
  உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.
  நீங்கள் வலைப்பக்கம் வந்து வெகு நாட்கள் ஆகி விட்டது. கொலு அழைத்து வந்து விட்டது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 26. அருமையான கொலு. நல்ல அனுபவங்களும்.

  விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 27. ஊர்கூடி தேர் இழுப்பதுபோல் வீட்டில் அனைவரும் சேர்ந்து கொலு வைப்பது கேடக படிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
  ஓரே நாளில் எங்கள் வீட்டுக் கொலுவுக்கும், மகன் வீட்டுக் கொலுவுக்கும் வந்து சிறப்பித்து விட்டீர்கள்.
  வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும்
  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 29. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

  நீங்கள் சொல்வது போல் ஊர்கூடி தேர் இழுப்பது போன்றது தான் விழாக்கள்.
  தனியாக செய்தால் அலுப்பு தட்டி விடும்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 30. தாத்தா கதை நிறைய யோசிக்க வைக்கிறது.

  ஆண்களைப் பொறுத்த மட்டில் கொலு நிறைய வேலை என்றே நினைத்திருக்கிறேன்.

  இப்போதெல்லாம் கொலுவுக்கு சுண்டலுடன் சிறு பரிசுகள் வேறு தருகிறார்களே?

  பதிலளிநீக்கு
 31. கொலு அமர்க்களமா இருந்தது.வரவேற்பும் சூப்பர்

  பதிலளிநீக்கு
 32. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
  தாத்தா கதை நிறைய யோசிக்க வைக்கிறதா? எப்படி?
  தள்ளாத வயதிலும் உழைத்து சம்பாதிக்கும் மனிதராக இருக்கிறாரே என்றா? தள்ளாத வயதிலும் இப்படி அவர் பொம்மை விற்று வயிற்று பிழைப்பை பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறாரே ! என்ற நினைப்பா?

  //ஆண்களைப் பொறுத்த மட்டில் கொலு நிறைய வேலை என்றே நினைத்திருக்கிறேன்.//

  ஆண்களுக்கு வேலைதான், படிகள் அமைக்க உதவுவார்கள். ஆனால் எல்லா வீட்டிலும் ஆண்கள் உதவுவது இல்லை. எங்கள் வீட்டில் என் அம்மாதான் எல்லாம் செய்வார்கள்.
  பிள்ளைகள் பெரியவர்கள் ஆனவுடன் ஆளுக்கு ஒரு வேலை கொடுத்து கொலுவில் உற்சாகமாய் பங்கு பெற செய்தார்கள்.

  // இப்போதெல்லாம் கொலுவுக்கு சுண்டலுடன் சிறு பரிசுகள் வேறு தருகிறார்களே?//

  ஆம், இப்போது அப்படி பழக்கம் இருக்கிறது.

  எங்கள் பக்கம் நவராத்திரிக்கு தன் பெண்கள் புகுந்த வீட்டுக்கு போன பின்னும் நவராத்திரிக்கு புடவை வாங்கி கொடுக்கும் பழக்கம் உண்டு.

  கொலு பார்க்க வரும் பெண்களை மனையில் உட்கார வைத்து அவர்களுக்கு நலுங்கு இட்டு புடவை துணிமணி வயதுக்கு ஏற்றமாதிரி கொடுப்பது வழக்கமாய் இருக்கிறது.

  கொலு பார்க்க வருபவர்களுக்கு பரிசுகள் அவர் அவர் வசதியை பொறுத்து மாறும். எப்படி கொடுத்தாலும் உயர்வு , தாழ்வு பார்க்காமல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி கொடுக்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரி கொடுப்பது தான் நல்லது.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
  பதிலளிநீக்கு
 33. வாங்க மகிவதனா, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
  உங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 34. அன்பு கோமதி கொலுவின் அழகையும் தாங்கள் கொடுத்திருக்கும் விவரங்களும் மிக மிக அருமை.
  தங்கள் கணவரின் அருமைக் கலைநயமும் தங்கள் ஆர்வமும் பிரமிக்கச் செய்கின்றன. நல்லதொரு குடும்பம் பலகலைக் கழகமாக உங்கள் குடும்பமே திகழ்கிறது. அப்பாவின் கைவண்ணம் மகனுக்கும் தொற்றிக் கொண்டதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.
  விஜயதசமி வாழ்த்துகள் மா. குடும்பத்தினருக்கும் சேர்த்து.:)கோலங்கள் அனைத்தும் பிரமிக்கவைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 35. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
  பதிவை ரசித்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.
  பித்தளை தாம்பாளத்தில் போட்ட தாமரை மட்டும் தான் நான் வரைந்தது, மற்றவை கோல அச்சு (சல்லடை போல் கோல அச்சு விற்கிறார்கள்)தட்டு, அதை போட்டு விட்டு சுற்றி பார்ட்ர் வரைந்து இருக்கிறேன் நான். இன்னொரு சின்ன பித்தளை தட்டில் உள்ளது அலங்கார கோல ஸ்டிக்கர். என் தங்கை வாங்கி தந்தாள் கொலுவுக்கு.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 36. 'பொழைச்சுக் கிடந்தால்'.. என்கிற வார்த்தையை என் சிறு வயதில் எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொல்லி அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

  நாளை பிழைத்துக் கிடத்தல் நம் கையில் இல்லை என்பதை உணர்ந்த மாதிரியான வாக்கியம். அப்படி இருக்கையில் 'எந்த உறுதியில் நாளை பார்க்கலாம் என்று நான் சொல்வேன்'
  என்கிற நிலையில் சொல்லப்பட்ட வாக்கியம். அப்படிச் சொல்வதற்கும் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் வாக்கியம். அதனால் (ஆண்டவன் அருளால்) பொழைச்சுக் கிடந்தால்
  பார்த்துக்கலாம் என்று தாத்தா சொன்னார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

  'தாத்தா கதை நிறைய யோசிக்க வைக்கிறது' என்று அப்பாஜி அவர் பாணியில் சொன்னதும் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 37. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.

  நாளை பிழைத்துக் கிடத்தல் நம் கையில் இல்லை என்பது உண்மைதான்.

  நீங்கள் சொல்வது போல் அந்தக் காலக் பெரியவர்கள் பொளைச்சு கிடந்தா பார்ப்போம், மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான், எல்லாம் அவனுக்கு தெரியும், மேலே ஒருத்தன் பார்த்துக் கொண்டு இருக்கிறான் , வருவதும், போவதும் நம் கையில் இல்லை என்று சர்வ சாதாரணமாய் பேசுவார்கள் தான்.

  அது போல் தாத்தாவும் ஆண்டவன் அருளால் பொளைச்சு கிடந்தால் பார்த்துக்கலாம் என்று சொல்லி இருப்பார் தான்.

  உங்கள் வரவுக்கும் அருமையான விளக்கம் தந்தமைக்கும் நன்றி சார்.
  அப்பாதுரை சாருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 38. கொலுப் படங்களும், தங்களது அனுபவங்களும் என பதிவே நேரில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தியது. மலைக்கோயில், பூங்கா ரயில் என கண்கொள்ளாக் காட்சிகள்.

  பதிலளிநீக்கு
 39. வாங்க ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.
  அடுத்தமுறை கொலுவுக்கு மாயவரம் வந்து விடுங்கள்.
  நேரில் கண்டு மகிழலாம்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 40. எங்கள் வீட்டில் கொலு வைத்துப்பழகவில்லை. சகோதரி புகுந்த வீட்டில் இருந்ததால் அவள் வைப்பாள். சுவாரஸ்யம்தான். ஒவ்வொரு பொம்மையாக பார்த்துப் பார்த்து வாங்கி, இதை எங்கே எந்தப் படியில் எந்த பொம்மையுடன் ஜோடி சேர்க்கலாம் என்றெல்லாம் திட்டமிட்டுச் செய்யலாம். ஆனால் வருடா வருடம் முடிந்தவுடன் பத்திரமாக துணியில் சுற்றி எடுத்து வைக்க, வருடா வருடம் மறுபடி பிரிக்க எல்லாம் ரொம்பப் பொறுமை வேண்டும். 80 களில் 3 பொம்மைகள், அதுவும் பெரிய பொம்மைகள் 12 ரூபாய் என்பது விலைவாசி எப்படி எல்லாம் ஏறிவிட்டது என்று எண்ண வைத்தது!

  பதிலளிநீக்கு
 41. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  நீங்கள் இதற்கு முந்திய பதிவை நேரம் கிடைக்கும் போது பாருங்கள். அது மகன் வீட்டில் வைத்த புது கொலு.

  இங்கு சார் செய்த அம்மன் அடுத்த ஒரு பதிவில் போடுகிறேன்.

  கொலு வைக்கும் போதும், அடுத்து நவராத்திரி நிறைவு பெற்ற பின் எடுத்து வைப்பதும் கஷ்டம் தான். ஆனால் கொலு பார்ப்பவர்கள் கொலுவைப் பார்த்து கருத்துக்கள் சொல்லும் போதும், இந்த பொம்மை எங்கு வாங்கினீர்கள் அது, இது என்று கேட்கும் போது கஷ்டங்கள் மறந்து மனம் மனம் மகிழ்ந்து போவது உண்மை.
  இப்போது ஒரு பொம்மை ஆயிரம், இரண்டாயிரம் என்று சொல்லும் போது கேட்க அதிர்ச்சியாக இருக்கிறது.
  மகன் வீட்டுக்கு கொலு பொம்மை நான்கு பொம்மைகள் வாங்கி கொடுத்தோம் 120 டாலர். 80 ம்வருடம் நான் 12 ரூபாய்க்கு வாங்கினேன் மூன்று பொம்மை.
  இப்போது நான்கு பொம்மை அமெரிக்காவில் 120 டாலர் நம் ஊர் காசுக்குப் பார்த்தால் நமக்கு மலைப்பாய் இருக்கிறது விலைவாசி உயர்வைப் பார்த்து.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 42. தாமதாமாக வந்திருக்கிறேன். கொலு வைப்பதில் ஒரு ஆனந்தம் தான். முதலில் பத்து நாட்கள் சமாளிக்கணுமே என்று இருந்தாலும், கொலுவை வைத்தவுடன் ஒரு சந்தோஷம் தொற்றிக் கொள்ளுகிறது.
  மெதுமெதுவே பொம்மைகள் சேர்ந்துவிட்ட கதையை தாத்தாவின் வார்த்தைகளுடன் நன்றாகப் பகிர்ந்து இருக்கிறீர்கள்.
  உங்கள் பதிவை வைத்து அப்பாதுரை ஒரு தொடர் கதை ஆரம்பித்து விட்டாரே!

  பாராட்டுக்கள், கோமதி!

  பதிலளிநீக்கு
 43. வணக்கம் அம்மா,
  அனைவரும் சேர்ந்து அழகாக கொழு அமைத்து உள்ளீர்கள் அம்மா. தங்களுக்கு விஜயதசமி வாழ்த்துக்கள். பதிவில் ஆங்காங்கே உங்கள் உற்சாகமும் துள்ளி விளையாடுகிறது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க அம்மா. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். தாமதம் இனி தவிர்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 44. மலைக்கோயில் என்னை மிகவும் கவர்ந்த்து...படங்கள் அருமை அம்மா...

  பதிலளிநீக்கு
 45. வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
  உங்கள் பின்னூட்டத்திற்கு தாமதமாய் நானும் நன்றி சொல்கிறேன். மூன்று தினங்கள் வீட்டில் இல்லை.
  உங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 46. வாங்க பாண்டியன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.
  தொடர் வருகைக்கு மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 47. வாங்க கலியபெருமாள், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 48. கொலு அருமை..தங்களின் உபசரிப்புக்கும் நன்றி!படங்களுடன் பதிவு அருமை! என் வலைப்பூவில் களை எனும் கவிதையை நேரம் கிடைக்கையில் படிக்க வேண்டுகிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 49. வாங்க சேஷாத்திரி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.
  உங்கள் கவிதைகள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது. மகனுடன் விடுமுறையில் வெளியூருக்கு சென்று விட்டதால் அதை படிக்காமல் விட்டுப் போய் இருக்கிறது. தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 50. வாங்க கே.பி.ஜனா சார், வாழ்க வளமுடன். உங்கள் வருகைக்கும், பூங்கா ரயிலை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 51. மிகத் தாமதமாக வந்தேன் ஆயினும் கொலுஉருவங்கள் மிக அழகு அப்பாவின் மலையும் நீரும் மிகக் கவர்ந்தது.
  இனிய வாழ்த்து.
  என்னே ஓர கலைவண்ணம். இறையருள் நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 52. வாங்க வேதா இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.
  என் கணவரின் மலை காட்சி உங்களுக்கு பிடித்தமைக்கு நன்றி.உங்கள் ஆசிகள் மன மகிழ்ச்சி தந்தது.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 53. அடடா! தாமதமாக வந்து விட்டேன!அருமையான கொலு .சுப்பர்

  பதிலளிநீக்கு
 54. வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கொலுவை ரசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு