திங்கள், 9 செப்டம்பர், 2013

வந்தார் விநாயகர் தந்தார் அருளை

                                                                           உ
                                                                            ==  
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் -- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

இன்று விநாயகர் சதுர்த்தி. எல்லோரும் மகிழ்ச்சியாக விழாவை கொண்டாடிக் கொண்டு இருப்பீர்கள். நாங்கள் கொண்டாடி விட்டோம்.

பிள்ளையார் சுழி போட்டுத்தான் நாம்  எந்தச் செயலையும்  தொடங்குவோம்.
                                               
//எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் போதும் விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தால் விநாயகர் அருளால் எந்த வினைகளும் தடைகளும் வராமல் நாம் தொடங்கும் செயல் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.//    -தினமலர் செய்தி

எல்லோருக்கும்   தொடங்கும் செயல்கள் எல்லாம்  வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

//உருகும் அடியார் அள்ளூர உள்ளே ஊறும் தேன்வருக
உண்ணத் தெவிட்டாச் சிவானந்த ஒளியே வருக புலன்வழிபோய்த்
திருகும் உள்ளத்தார், நினைவினுக்கும் சேயாய் வருக எமை
ஆண்ட செல்வா வருக உமை ஈன்ற சிறுவா வருக இணைவிழியால்
பருகும் அமுதே வருக உயிர்ப்பைங்கூழ் தழைக்க கருணை
மழை பரப்பும் முகிலே வருக  நறும்பாகே வருக வரை கிழித்த
முருகவேட்கு முன் உதித்த முதல்வா வருக வருகவே
மூரிகலசைச் செங்கழுநீர் முனிவா வருக வருகவே.//

//கணபதிக் களிறே போற்றி !
ஐங்கரத்து அப்பா போற்றி !
சிவம் மகிழ் சிறுவா போற்றி !                                    
செந்நெறிகாட்டுவாய் போற்றி !
திருமறை உதவினாய் போற்றி !
திங்களணி திருவே போற்றி!
திரண்டநால் தோளாய் போற்றி !
ஆனைமா முகத்தாய் போற்றி!
அனைத்திடர் களைவாய் போற்றி !
திருவெலாந்தருவாய் போற்றி!
திருவடி இணைகள் போற்றி !//

என்று பாடி  பிள்ளையாரைப் போற்றுவோம்.

 இங்கு நியூஜெர்சியில், நம் ஊரில் விற்பது போல் களிமண் பிள்ளையார் கிடைக்க மாட்டார், ஆனால் களிமண் கிடைக்கிறது.  ஈரக்களிமண் 5 கிலோ வாங்கி வந்தான் மகன். ”போன முறை  மண்பிள்ளையார் சிலை  நான் செய்தேன் , இந்த முறை நீங்கள் இங்கு இருப்பதால் நீங்கள் செய்யுங்கள் அப்பா” என்றான்.  அவர்களும் மகிழ்ச்சியாக பிள்ளையார், மூஞ்சூறு வாகனம் எல்லாம் செய்தார்கள். அலங்காரக் குடை இருந்தது ,அதை மகனின்
பிள்ளையாருக்கு வைத்து விட்டு, தான் செய்த பிள்ளையாருக்கு அலங்கார திருவாச்சி வீட்டில் இருந்த தெர்மோகோலில் செய்தார்கள்.  மகன் போன முறை  செய்த  பிள்ளையாருக்கு ஸ்பிரே பெயிண்ட் அடிக்கப்பட்டது. அந்த பிள்ளையாரும் புதிதாக ஆனார்.

விநாயகரை உருவாக்கும் என் நாயகர்

வருகிறார் 

வந்துவிட்டார் நலங்கள் அருள
கொலு வீற்றிருக்கும் விநாயகர்கள்

என் மகன் செய்த விநாயகர்

என் கணவர் செய்த விநாயகர்

சூரியன் வணங்க வந்தார் விநாயகரை
அதுதான் ஒளி வெள்ளம் 





பிள்ளையாரை மூன்று நாள், ஐந்து நாள் என்று வீட்டில் வைத்து வணங்கிவிட்டுப் பின் கரைப்பது வழக்கம்.  இங்கு மகன் கரைக்க வில்லை. அழகாய்ச் செய்து விட்டு கரைக்க மனம் இல்லை என்பதால்  கரைக்க வில்லை.

முன்னோர்கள் பிள்ளையாரை கரைக்கச் சொல்லும் காரணம் தினமலரில் படித்தேன் .தெரிந்து இருக்கும் அனைவருக்கும். எதற்கும் படித்து பாருங்களேன்.
//மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.//

 பண்டிகை கொண்டாடும் போது எனக்கு நம் ஊரின் நினைவு வந்துவிடும். அங்கெல்லாம் ஊரே  கோலகலமாய் இருக்கும்,  பழங்கள், பூக்கள்,  தென்னை ஓலையில் செய்த அலங்கார தோரணங்கள், எருக்கம்பூமாலை,  என்று எங்கும் கூவிக் கூவி அழைக்கும் கூட்டம்,   எங்கள் வீட்டில் சுற்றிலும் நாலு பிள்ளையார் கோவில்கள். கோவில்களில்  பத்து நாள் முன்பே  விழா நடக்கும்.    பக்தி பாடல்கள் எல்லாக் கோவில்களிலிருந்து ஒலித்துக் கொண்டு இருக்கும்.
பிள்ளையார் திருவீதி உலா 10 நாளும் நடக்கும் . பிள்ளையார் சதுர்த்தி அன்று தேரில் வருவார்.

இங்கு,அமைதியான ஆரவாரம் இல்லாத  விழா நினைவு படுத்துகிறது ,அயல் நாட்டில் இருப்பதை. மற்றபடி குழந்தைகளுடன் கொண்டாடுவது  மகிழ்ச்சியே!
மகன், மருமகள் சேர்ந்து  விநாயகரை அழகாய்  அலங்கரித்தார்கள். பேரனும் நான் உதவிசெய்கிறேன் என்று அவர்களுடன் சேர்ந்து எல்லாம் எடுத்துக் கொடுத்தான் .  மருமகளின் அம்மாவும் வந்து இருந்தார்கள் அவர்களும் நானும் சேர்ந்து பிரசாதங்கள் செய்தோம்.இப்படி உறவுகள் சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சிதான் இல்லையா!

இங்கு பிள்ளையாருக்குப் பிரசாதமாய்  கறுப்பு கொண்டைக்கடலை சுண்டல், தேங்காய் பூரணம் வைத்த மோதகம், எள்ளு உருண்டை., அவல், பொரி, கடலை  வெல்லம் வைத்து  வழிபட்டோம். வீட்டில் வளர்ந்து வரும் வாழை மரத்திலிருந்து சிறிய வாழை இலையில் பிரசாதம் வைத்து வணங்கியது மகிழ்ச்சி தந்தது.



                          வீட்டில் இருக்கும் பலவித பிள்ளையார்கள்





பிள்ளையார் பாடல்களுக்கு பேரன் நடனம் ஆடி எங்களை மகிழ்வித்தான்.

உங்கள் அனைவருக்கும் எங்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

                                                             வாழ்க வளமுடன்!

                                                                       ------------------
    என் மருமகள் தொகுத்து  தந்த விநாயகர்  செய்முறை தொகுப்பு படங்கள்

81 கருத்துகள்:

  1. அழகாய்ச் செய்து விட்டு கரைக்க மனம் இல்லை என்பதால் கரைக்க வில்லை.

    இதுதான் எங்கள் கருத்தும். அழகிய விநாயகரை வாங்கிவந்து வணங்கிவிட்டு அதை கரைப்பதா? அருமையான விநாயகர்களை நீங்களே செய்து விநாயகசதுர்த்தி கொண்டாடி இருப்பது சூப்பர். நனுறியும் உங்களுக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா!விநாயகரை கைகளாலேயே அழகாக உருவாக்கியது அற்புதம்
    படமும் பாடலும் மகிழ்ச்சி தந்தது . விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. தங்கள் நாயகர் கைவண்ணத்தில்
    விநாயகர் உங்கள் வீட்டில் எழுந்தருளியது
    மிக்க மகிழ்வைத் தந்தது
    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. விநாயகரை இவ்வளவு அழகாக செய்து இருக்கிறாரே உங்கள் கணவர்.
    உங்கள் பிள்ளையார் மிக அழகாக இருக்கிறார்.ஒன்று விடாமல்
    செய்து பூசை செய்து விட்டீர்களே!

    விநாயக சதுர்த்தசி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஆகா... அழகான பிள்ளையார்...

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. எங்களுக்கெல்லாம் இப்போதுதான் விநாயகர் வருகிறார் கோமதி.

    நைவேத்யம் ஆனதும் படம் எடுத்துப் போடுகிறேன்.
    உங்கள் கணவர் கையில் உருவான விநாயகர் அதிரூப சுந்தரர்.
    அவரை வணங்கிக் கொள்கிறேன். எங்கள் பிள்ளையார் இன்னும் ஐந்து நாட்கள் எங்களுடன் உறவாய் இருந்து மகிழ்விப்பார்.
    பிறகு பின்புறம் இருக்கும் கிணற்றில் ஐக்கியம் ஆவார். அடுத்த ஆண்டு வரவேண்டுமே.
    நல்லமனங்கள் என்றேன்றும் மகிழ்ச்சியாக வாழ விநாயகன் அருள்வான். வாழ்த்துகள் அம்மா.

    பதிலளிநீக்கு
  7. தந்தையும் மகனும் நல்ல கைவினைக் கலைஞர்கள். அயல் நாடானாலும் நம் நம்பிக்கைகளை மறக்காமல் விழா கொண்டாடுவது நிறைவைத் தரும். பாராட்டுக்கள். அது சரி, நிவேதனப் பலகாரங்களை அயல்நாட்டு நண்பர்களுக்குக் கொடுத்தீர்களா?

    பதிலளிநீக்கு
  8. சூரியன் வணங்க வந்தார் விநாயகரை
    அதுதான் ஒளி வெள்ளம்

    அருளி ஒளி பிரவகிக்கும்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  9. பிள்ளையாரும் படங்களும் பட்சணங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  10. கண்களை வேறு எதையும் பார்கவிடாமல் என்னை மட்டும் பார் என்று விநாயகர் அற்புதமாய் இருக்கின்றார்!
    இத்தனை சிறப்பாக உங்களவர் கைகளில் களிமண்ணிலிருந்து எம்பிரான் உருவாகிக் காட்சி தருகிறாரே...

    வியப்புத் தீரவில்லை எனக்கு...

    அனைத்தும் அழகோ அழகு! அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்!

    த ம.3

    பதிலளிநீக்கு
  11. உங்கள் கணவர் உருவாக்கிய விநாயகர் அழகாக இருக்கிறார். உங்கள் மகன் உருவாக்கிய ரோஸ் விநாயகர் இன்னும் அழகு!

    பதிலளிநீக்கு
  12. What a beautiful vinayaka ?

    congrats .

    Greetings on the eve of Vinayaka chathurthi.

    subbu thatha.
    www.vazhvuneri.blogspot.com
    where r u at NJ?
    you may email
    meenasury@gmail.com

    பதிலளிநீக்கு
  13. மிக அழகாக உருவாக்கியுள்ளார்கள் விநாயகரை. அலங்கார திருவாச்சியும், மகன் செய்த சென்ற வருடப் பிள்ளையாரும் அருமை. பேரன் நடனம் ஆடி மகிழ்வித்தாரா:)?

    வாழையிலையில் பிரசாதம். நாங்களும் எடுத்துக் கொண்டோம்:)!

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  14. விநாயகர் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்வார். நம் சந்தோஷம் தான் அவருக்கு முக்கியம்.

    //நாங்கள் கொண்டாடி விட்டோம்.//

    அப்படியா?.. சதுர்த்தி நாளை காலை இல்லையா, அங்கு?..

    பிள்ளையார் திருஉருவங்களுடன் உங்கள் சிரத்தையும் கலந்து போகவே பதிவு வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  15. விநாயகரை மிக அழகாக வடிவமைத்துள்ள தங்களின் நாயகருக்கு என் முதற்கண் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    மிகவும் அழகாகப் பொறுமையாகச் செய்துள்ளார்.

    அவர் கைகளை வாங்கி என் கண்களில் ஒத்திக்கொள்கிறேன் .. கற்பனையில் தான்.

    >>>>

    பதிலளிநீக்கு
  16. பதிவு, விளக்கங்கள், படங்கள், பிரஸாதங்கள் எல்லாமே ஜோராக அமைந்துள்ளன.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    பதிலளிநீக்கு

  17. "வந்தார் விநாயகர் தந்தார் அருளை"

    தங்கமான தலைப்பு ;)

    சந்தோஷமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  18. அருமை அருமை.. ரொம்ப அழகா வந்திருக்கார் பிள்ளையார்.

    வழக்கம்போல ஐ மிஸ் எள்ளுருண்டை..

    பதிலளிநீக்கு
  19. பிரசாதமும் வாழ்த்துக்களும் பெற்றுக்கொண்டோம்.

    தந்தை தனயனின் கைவண்ணத்தில் பிள்ளையார்கள் மிகவும் அழகாக அருள்பாலிக்கின்றார்கள். இருவருக்கும் வாழ்த்துகள்.

    விநாயகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். அவன்பாதம் பணிவோம்.

    பதிலளிநீக்கு

  20. ஸாரின் அபார திறமை ஆச்சர்யப்படுத்துகிறது. இங்கு கடைக்காரர்களே அச்சில் வைத்து விநாயகரை உருவாக்கும்போது வெறும் கையால் சர்வ சாதாரணமாக மிக அழகிய பிள்ளையாரைக் கொண்டுவந்த திறமை அசத்துகிறது. ஓவியர் அல்லவா....தந்தைக்குத் தப்பாமல் பிள்ளை. சற்றே பொறாமையுடன் பாராட்டுகிறேன். :)))

    ஜீவி ஸார் சொல்லியிருக்கும் 'விநாயகர் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்வார்' வரிகள் உண்மை. விநாயகர் அருள் உங்கள் நாயகருக்கும் மகனுக்கும் பரிபூரணமாக இருக்கிறது.

    ஜி எம் பி ஸார் சொல்லியிருப்பதுபோல வெளிநாட்டில் இருந்தாலும் மறக்காமல் செய்வது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  21. வாங்க வியாபதி, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க ரமணிசார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டை என் கணவரிடம் தெரிவித்து விட்டேன். உங்கள் நல் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் மறக்காமல் அளீக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், பாரட்டுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்து மிக அருமை.
    //உங்கள் கணவர் கையில் உருவான விநாயகர் அதிரூப சுந்தரர்.//
    விநாயகர் அதிரூப சுந்தராக உங்களுக்கு காட்சி அளித்தது மிகவும் மகிழ்ச்சி.
    உங்கள் வீட்டு விநாயகரைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
    உங்கள் மனம் கனிந்த வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  27. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. இங்கு வார இறுதி நாட்கள் என்றால் வெளியே சென்று விடுவார்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள். அதுவும் ஒரு சிறிய சந்திப்பாய் ஏற்பாடு செய்தால் தான் வருவார்கள் நாமும் அவர்கள் வீட்டுக்கு அந்த மாதிரி அவர்கள் கூப்பிடும் போது தான் போக வேண்டும், அது அவர்கள் பழக்க வழக்கம்.
    முதலில் இருந்த வீட்டை விட்டு வேறு வீடு இப்போது தான் வந்து இருக்கிறார்கள். புதிதாக வந்து இருக்கிறோம் என்று அக்கம் பக்கத்து வீட்டினரை கூப்பிட்டு சின்ன விருந்து வைத்து விட்டார்கள். இனி ஏதாவது குழந்தையின் பிறந்தநாள் சமயம் தான் கூப்பிடுவார்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
    உங்கள் அருமையான அழகான பின்னூட்டம் மகிழ்ச்சியை தருகிறது.
    வாழ்த்துக்களுக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வாங்க மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வாங்க சூரி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
    என் வலைத்தளத்தையும், இந்த பதிவையும்
    கூகுள் ப்ளஸ்லில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  33. வாங்க ராமல்க்ஷமி, வாழ்க வளமுடன். உங்கள் ஊரிலும் மிக கோலகலமாய் விநாயகர் சதுர்த்தி நடக்கும் இல்லையா? உங்கள் பாரட்டுக்களை இருவரிடமும் சொன்னேன் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன். இங்கு இராஜ கண்பதி கோவில் இருக்கிறது அங்கு அவர்கள் பஞ்சாங்கம் கொடுத்து இருக்கிறார்கள் பண்டிகைகள் பற்றி அதில் ஞாயிறு காலை ஆரம்பித்துவிடுகிறது சதுர்த்தி , சரி விடுமுறையாகவும் இருக்கிறது என்று அன்று வைத்துக் கொண்டோம்.
    நீங்கள் சொல்வது உண்மை. தன்னை தானே உருவாக்கி கொண்டார் விநாயகர் அவர் நினைத்தார் வந்தார் இல்லையா!
    உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  35. வாங்க மாதவி, வாழ்க வளமுடன்.
    வெகு நாட்கள் ஆகி விட்டது உங்களைப்பார்த்து அடிக்கடி வாருங்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் சொன்னேன் சாரிடம் நன்றி தெரிவிக்க சொன்னார்கள்.
    பதிவை, தலைப்பை ரசித்து

    பாரட்டியதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  37. முத்துலெட்சுமி வாழ்க வளமுடன்.
    ஊருக்கு வரும் போது எள்ளுருணடை செய்து தந்தால் ஆச்சு.வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
    தந்தை தனயனின் கைவண்ணத்தை பாரட்டி வாழ்த்தியதற்கு நன்றி, அவர்களிடம் சொல்லி விட்டேன்.விநாயகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
    வாழ்த்துக்களுக்கு நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  39. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். உங்கள் பின்னூட்டத்தை படித்து மகிழ்ந்தார்கள் சார். நீங்கள் அவரின் ரசிகர் அல்லவா?
    இங்கு களிமண் வாங்கிய வில்லைக்கு அங்கு சிறப்பாக பண்டிகை கொண்டாடி விடலாம், இருந்தாலும் நாமே செய்து கும்பிட்டது மகிழ்ச்சி.
    ஜீவி சார் சொன்னதும்,ஜி எம் பி ஸார் சொன்னதும் மகிழ்ச்சி தான்.பெரியவர்கள் என்றும் பெரியவர்களே! அவர்கள் பாராட்டுக்கள் கிடைப்பது பெரிய பாக்கியம் தான்.

    ஜீவி சார், பாலசுப்பிரமணியம் சார் சொன்னதை குறிப்பிட்டு நீங்கள் மனம் திறந்து, பாரட்டியதற்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  40. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன் .
    கணவர் செய்யும் விநாயகர் படங்கள் அடங்கிய படத்தொகுப்பு ஒன்று பின்னால் சேர்த்து இருக்கிறேன். பாருங்கள் மருமகள் தொகுத்து தந்தாள்.

    பதிலளிநீக்கு
  41. வந்து பார்த்து விட்டேன். அற்புதம்.

    பதிலளிநீக்கு
  42. அழகான விநாயகர் - நெய்முறை மிக மிக நன்று.
    நல்ல பதிவு.
    நாமே செய்து நாமே வணங்கும் திருப்தி பல கோடி பெஞம். மகிழ்ச்சி.
    இனிய வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  43. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    மறுமுறை வந்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வாங்க வேதா. இலங்கா திலகம் வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மைதான் நாமே செய்து கும்பிடுவது பெரும் மகிழ்ச்சிதான்.
    உங்கள் வரவுக்கும் அழகான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. பண்டிகை வாழ்த்துகள் அக்கா. அழகான கைவண்ணம்!! முன்பு கொலுவில் பார்த்த அதே திறன் இப்போதும் இருவரிடமும்...

    // விநாயகரை உருவாக்கும் என் நாயகர்//

    அவங்களுக்கு கைவண்ணம், உங்களுக்கு சொல்வண்ணம்!! :-))))

    எனக்கும், என் பிள்ளைகளுக்கும் எள்ளுருண்டை ரொம்பப் பிடிக்கும்.அந்த எள்ளுருண்டை எப்படிச் செய்றதுன்னு ஒரு பதிவு போடமுடியுமாக்கா? குறிப்பா பாகு காய்ச்சும் முறை... இதுதான் எனக்கு எப்பவும் பிரச்னை...

    பதிலளிநீக்கு
  46. வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.

    அவங்களுக்கு கைவண்ணம், உங்களுக்கு சொல்வண்ணம்!! :-))))//

    ஆஹா! மகிழ்ந்தேன்.
    எள்ளுருண்டை மிக எளிதாக செய்யலாம். நான் செய்யும் முறையில் பாகு காய்ச்ச வேண்டாம்.

    ஒரு கிண்ணம் எள் வறுத்துக்(பட பட வென்று பொரியும் போது நிறுத்திவிட வேண்டும் எள் வறுப்பதை) கொண்டு அதை மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டிக் கொண்டு, வெல்லத்தை சீவியோ அல்லது பொடித்தோ ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு பொடித்த எள்ளுடன் வெல்லத்தை போட்டு மறுபடியும் பொடி செய்ய வேண்டும் மிகவும் ஓட்டி விடக் கூடாது. மிகவும் ஓட்டினால் எள்ளில் இருக்கும் எண்ணெய் இறங்கி கசந்து விடும். பொடித்த எள்ளை பிடித்துப் பார்த்தால் உருண்டையாக பிடிக்க வந்தால் பக்குவம் சரி.

    அந்தக் காலத்தில் மாமியார் எள் உருண்டை செய்ய உரலில் இடிப்பார்கள். அப்போது ஒரு கதை சொல்வார்கள். வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு எள் உருண்டை கொடுத்தார்களாம், அவர் கறுப்பாய் இருக்கிறது வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.

    அப்புறம் இடித்த ஆட்டுக்கல்லிலிருந்து வாசம் அவர் மூக்கை துளைத்ததாம், அவர் இவ்வளவு வாசம் வருதே! என்று ஆச்சிரியப்பட்டு யாரும் இல்லாத நேரத்தில் அந்த ஆட்டுக்கல்லில் ஒட்டி இருந்த துணுக்கை கொஞ்சம் சாப்பிட்டு பார்த்தாராம், நன்றாக இருக்கவே தலையை ஆட்டுக்கல் உள்ளேயே நுழைத்து தின்ன முயன்றாராம் தலைமாட்டிக் கொண்டதாம், எடுக்க முடியவில்லையாம் பிறகு எல்லோரும் வந்து மாப்பிள்ளையின் தலையை எடுத்து விட்டார்களாம் . ஏன் மாப்பிள்ளை முதலில் வேண்டாம் என்று சொல்லி விட்டு என்று ஆட்டுக்கல்லுக்குள் தலையை விட்ட கதையை சொல்வார்கள்.
    கதை எப்படி இருக்கு?
    அவ்வளவு ருசி இருக்கும் எள்ளு உருண்டையில் என்று குழந்தைகளை சாப்பிட வைக்க வழி வழி கதை இது.
    உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
    சத்து மிகுந்தது செய்து கொடுங்கள் நேரம் கிடைக்கும் போது படங்களுடன் செய்முறை பதிவு போடுகிறேன்.
    நன்றி.



    பதிலளிநீக்கு
  47. படிப்படியாக விநாயகர் உருப்பெறும் அழகை நானும் இரசித்தேன். அருமையாக collage செய்து தந்திருக்கிறார் மருமகள்.

    உரலுக்குள் தலைய விட்ட கதை, நானும் கேட்டிருக்கிறேன்:))!

    பதிலளிநீக்கு
  48. அக்கா, ரொம்ப நன்றிக்கா. பாகு இல்லாம செய்யும் முறைக்கு ரொம்ப ரொம்ப நன்றிக்கா. கண்டிப்பா செய்வேன் (அடுத்த வாரம்). வெல்லம் என்றால் (பிரவுன் நிறத்தில் இருக்கும்) கருப்பட்டி இல்லைதானே? கருப்பட்டியில் மண் இருக்கும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் வெல்லத்தைதானே சொல்றீங்க? அதில் மண் இருக்காது என்று நினைக்கிறேன். அப்படியே பொடித்துப் பயனபடுத்த வசதியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  49. வாங்கராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    மருமகள் collage செய்து தந்ததை பாராட்டியதற்கு நன்றி.
    உரல் நம் பக்கம் எல்லோருக்கும் தெரியும் ராமல்க்ஷமி. நாம் எள்ளு உருண்டையை இடித்து செய்வதால் எல்லோருக்கும் தெரியும்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  50. வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
    கருப்பட்டி கறுப்பாய் இருக்கும்.இளம்,மஞ்சள் கலரில் கொஞ்சம் சிவப்பு கலந்த மஞ்சள் என்று கிடைக்கும், அச்சு வெல்லம்,மண்டைவெல்லம், பேட்டை வெல்லம், கல்மண் இல்லாத பக்கெட் வெல்லம் என்று நிறைய கிடைக்கிறது. முன்பு உபயோகித்து பார்த்து அதில் கல் இல்லையென்றால் இப்படி செய்யலாம். அல்லது மண் இருப்பது தெரிந்தால் பொடித்த வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து லேசாக சூடு செய்தால் இளகி வந்தவுடன் வடிகட்டிவிட்டு மூண்டும் அடுப்பில் வைத்து கெட்டி பாகு வைக்க வேண்டும். ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி அதில் பாகை விட்டு கையில் எடுத்துப்பார்த்தால் நல்ல பிசுக்கு பதம் வந்து உருட்டினால் உருட்டு பக்குவம் வரும் அது தான் நல்ல பாகு பதம். அந்த பாகை பொடித்த எள்ளு பொடியில் விட்டு கிளறி சூட்டோடு அரிசி மாவை தொட்டுக் கொண்டு உருட்ட வேண்டும்.

    அவ்வளவு வெல்லப்பாகையும் விட்டு விடக்கூடாது சிறிது சிறிதாக விட்டு கிளற வேண்டும். போதுமான அளவு வந்தவுடன் பாகு விடுவதை நிறுத்தி விட வேண்டும்.
    மீதி பாகு இருந்தால் எடுத்து வைத்தால் அதில் கொஞ்சம் கோதுமை மாவு,மைதாமாவு, அரிசி மாவு போட்டு அப்பம் செய்யலாம்.


    சுத்தமான் வெல்லம் கிடைத்தால் நான் முன்பு சொன்ன பக்குவத்தில் எளிதாக செய்யலாம்.
    கதை எப்படி இருக்கு என்று சொல்லவில்லையே!

    பதிலளிநீக்கு
  51. //விநாயகரை உருவாக்கும் என் நாயகர்// -சூப்பர் அக்கா.
    ரசனையுடன் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி பகிர்வுக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  52. எவ்வளவு அழகான பிள்ளையார்கள்.. நிறைய அனுபவம் போல் தெரிகிறதே அம்மா. கோலாஜும் அருமை. லிங்க் கொடுத்தற்கு நன்றிகள் அம்மா.. தங்கள் பதிவை வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி!!!

    பதிலளிநீக்கு
  53. மஞ்சள் வெல்லத்தில் மண் இருக்காது. அதை வைத்தே செய்றேன்க்கா.

    பாகு இல்லாமல் எள்ளுருண்டை செய்யும்விதம் தெரிந்த மகிழ்ச்சியில் கதை பற்றிச் சொல்ல மறந்துவிட்டேனோ!! ‘உரலுக்குள் தலை விட்ட கதை” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அதன் பின் உள்ள இந்தக் கதை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  54. வாங்க தியானா வாழ்க வளமுடன்.
    அழகான பிள்ளையார் என்று பாராட்டியதற்கு நன்றி. இருவரும் முதன் முறையாகத்தான் செய்தர்கள். மகன் சிறு வயதில் சப்பாத்தி போட்டால் அதிலிருந்து மாவு எடுத்து நிறைய உருவங்கள் செய்வான்.என் கணவர் அதுகூட செய்தது இல்லை. படங்கள் வரைவார்கள்.
    மருமகளின் கோலாஜுயை பாராட்டியதற்கு நன்றி.
    உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  55. வாங்க ஹுஸைனம்மா, வாழக வளமுடன்.

    மஞ்சள் வெல்லத்தில் செய்து பார்த்து குழந்தைகளுக்கு கொடுத்து அவர்கள் என்ன சொன்னார்கள் என்று சொல்லுங்கள். உரலுக்குள் தலை விட்ட கதை” என்று கேள்வி பட்டு இருக்கிறீர்களா? அதுதான் இந்த கதை.

    பதிலளிநீக்கு
  56. வீட்டிலேயே
    எழில் மிகு
    விநாயகர்
    படிப்படியாய்
    தோன்றும் காட்சி
    அருமை.
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  57. பிள்ளையார்ஸ் ரொம்ப ரொம்ப அழகா இருக்காங்க. அருமையான கலைக்குடும்பம் உங்களது. பாராட்டுகள்..

    உங்க பக்குவத்தில்தான் எங்க ஆச்சியும் எள்ளுருண்டை இடிச்சுத்தருவாங்க. அதுவும் வயல்லேர்ந்து அறுவடையான அன்னிக்குன்னா அந்தப்புது எள்ளில் தயாரிக்கப்படுவது நிச்சயம் :-))

    பதிலளிநீக்கு
  58. திருவாச்சியுடன் புள்ளையார் அமர்க்களமா இருக்கார்.

    மகன் கருத்துதான் எனக்கும். புள்ளையாரைக் கரைக்காமல் வீட்டுலே கலெக்‌ஷனுக்கு வச்சுக்கலாமே!

    எங்க அண்ணன்கூட அழகாப் புள்ளையார் செய்வார்.

    அடுத்த ஆண்டு இங்க எங்க வீட்டுக்கு வந்துருங்க. இங்கேயும் பாட்டரி செய்யுமிடத்தில் ஈரக்களிமண் கிடைக்கிறது. நிறம் மட்டும் வெள்ளைதான்.

    பதிலளிநீக்கு
  59. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  60. வாங்க கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    படி படியாக விநாயகர் தோன்றிய படத்தொகுப்பை பாராட்டியதற்கு நன்றி.
    உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  61. வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    எள்ளுருண்டை ஆச்சியின் நினைவுகளை கொண்டு வந்து விட்டதா! மகிழ்ச்சி. புது எள் என்றால் அதிக மணம், ருசி இரண்டும் இருக்குமே!
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  62. வாங்க துளசி, வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    உங்கள் அண்ணன் பிள்ளையார் செய்வார்கள் என்பது மகிழ்ச்சி.
    அடுத்த ஆண்டு வந்து விடுகிறோம் உங்கள் ஊருக்கு திருவலஞ்சுழி விநாயகர் வெள்ளையாக இருப்பார் அவரை செய்து விடலாம்.
    உங்கள் அன்பு அழைப்புக்கும், கருத்துக்கும் நன்றி துளசி.

    பதிலளிநீக்கு
  63. உங்கள் நாயகர், விநாயகர் செய்யும் அழகை ரசித்தேன். எவ்வளவு திறமையானவர் என்று வியந்தேன்.

    கூடியிருந்து எல்லா உறவுகளுடனும் கொண்டாடவே பண்டிகைகள். வெகு விமரிசையாக அதைச் செய்திருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  64. வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.

    விநாயகரை ரசித்தமைக்கு நன்றி.
    பண்டிகையின் நோக்கமே உறவுகளுடன் கொண்டாடி மகிழவும் எல்லோருக்கும் பண்டம் ஈவதும் தானே! பண்டம் ஈகை தான் பண்டிகை ஆனது என்று என் குரு சொல்வார்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  65. வணக்கம் அம்மா, மிக அற்புதமாக விநாயகரை செய்து வணங்கியிருக்கிரீர்கள். கடையில் வாங்கும் சாமியை விட நாமே செய்யும் போது அதற்கு கூடுதல் சக்தியும், அதன்மீது ரசிப்பும் வருவது சிறப்பு. //பண்டிகையின் நோக்கமே உறவுகளுடன் கொண்டாடி மகிழவும் எல்லோருக்கும் பண்டம் ஈவதும் தானே!// உண்மையான வரிகள். //பண்டம் ஈகை தான் பண்டிகை ஆனது என்று என் குரு சொல்வார்// அப்படியா! புதிய செய்திக்க்கும் பகிவுக்கும் மிக்க நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  66. வாங்க பாண்டியன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் நாமே செய்வது மகிழ்ச்சி தான். உங்கள் வரவுக்கும் அருமையான கருத்து பகிர்வுக்கும் நன்றி பாண்டியன்.

    பதிலளிநீக்கு
  67. ரொம்ப அழகாக இருக்கிறார் விநாயகர்.

    படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  68. வாங்க புதுகைத் தென்றல், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  69. //திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
    பெருவாக்கும் பீடும் பெருக்கும் -- உருவாக்கும்
    ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
    காதலால் கூப்புவர்தம் கை.//

    பாடித் துதிக்க விரும்பும் பாடல் தந்தீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  70. வாங்க ஜனா சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  71. ஒரு கைதேர்ந்த கலைஞரின் நளினம் உங்கள் நாயகரின் கைகளில் உருவான தொப்பையப்பரின் ரூபத்தில் பளிச்சிடுகிறது. திருஷ்டி சுத்தி போடவும்! :)

    பதிலளிநீக்கு
  72. வாங்க தக்குடு, வாழ்க வளமுடன்.
    போன முறை நியூஜெர்சி வந்த போது பேரனைப்பற்றி பதிவு எழுதிய போது வந்தீர்கள். இந்த முறை விநாயகர் இழுத்து வந்தார் போலும்!
    நாயகரை பாராட்டியதற்கு நன்றி.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  73. அருமையான விநாயகர் வடிவங்கள். அதிலும் நாமே செய்வது எவ்வளவு சிறப்பு! நன்றாகவே கொண்டாடி இருக்கிறீர்கள் பண்டிகையை. எங்கே போனாலும் நம் கலாசாரத்தை விடாமல் இருப்பதே பெரிய விஷயம் இல்லையா? அடுத்த வருஷம் இங்கே வந்து கொண்டாடலாமே!

    முதல் பாடல் திருஇரட்டை மணிமாலை.

    அடுத்தது என்ன??? தெரியவில்லை. :(

    பதிலளிநீக்கு
  74. விநாயக சதுர்த்தசி வாழ்த்துக்கள்//

    @ராஜலக்ஷ்மி பரமசிவம்,

    தட்டச்சில் தவறா? அல்லது சதுர்த்தசி எனப் புரிதலா? தெரியலை. ஆனால் விநாயகருக்குச் சதுர்த்தி தான். சதுர்த்தசி என்பது ஏகாதசிக்குப் பின்னர் வரும் நான்காம் நாள். :)))))) அது வேறு இது வேறு. சொன்னது தவறானால் மன்னிக்கவும். :)

    பதிலளிநீக்கு
  75. வாங்க கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    விநாயகர் உருவங்களை நாமே செய்து வணங்குவது மகிழ்ச்சி தான்.
    நாங்கள் நான்கு மாதம் தான் இங்கு இருக்க போகிறோம். அப்புறம் ஊருக்கு வந்து விடுவோம்.

    என் கணவர் அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு நம் ஊரில் பிள்ளையார் செய்து விற்பவரிடம் களிமண் விலைக்கு வாங்கி செய்யலாம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

    எப்போதும் ஊரில் பிள்ளையார் வாங்கி வருவதற்கு என்மகனும் அவர்கள் அப்பாவும் போவார்கள் வரும் போது கொஞ்சம் களிமண் வாங்கி வருவான். அதில் ஒருகுட்டி பிள்ளையார் செய்து அவன் பங்குக்கு வைத்து விடுவான்.

    இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இந்தியா வருகிறான் மகன், போனமுறை நவராத்திரி எங்களுடன். தீபாவளி பண்டிகையை கோவையில் எப்போதும் கொண்டாடுவது போல் தாத்தா, பாட்டி பெரியப்பா, சித்தப்பா குடும்பத்துடன் கொண்டாடினான்.
    அடுத்தமுறை விநாயகர் சதுர்த்திக்கு வரச்சொல்லி விடுவோம்.


    ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் தட்டச்சில் தவறு ஏற்பட்டு இருக்கலாம்.

    முதல் பாடல் திருஇரட்டை மணிமாலை.

    அடுத்தது என்ன??? தெரியவில்லை. :(//

    ’திருக்கோவில் தமிழ் வழிபாட்டு திருமுறைத் திரட்டு’ என்ற பாடல் புத்தகம் ஒரு கல்யாண வீட்டில் கொடுத்தார்கள் அதில் உள்ள பாடல்களை தினம் படிப்பேன்.

    அதில் அருள் வேண்டல் பக்கத்தில்
    இந்த ’உருகும் அடியார்’ என்று ஆரம்பிக்கும் பிள்ளையார் பாடல் வரும் யார் எழுதியது என்று அதன் கீழ் இல்லை. தெரிந்தால் சொல்கிறேன் .

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  76. அழகிய பிள்ளையார் சிலைகள்.
    கலைக்குடும்பம் நீங்கள்.

    அர்த்தமுள்ள பதிவு
    என்றும் ஐங்கரன் துணை இருக்க வாழ்த்துக்கள்

    வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
  77. வாங்க சீராளன், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  78. ஐயாவின் கைவண்ணத்திலும், தங்கள் மகனின் கைவண்ணத்திலும் பிள்ளையார் ஜோரா வந்திருக்கிறார். பிரமிப்பாக உள்ளது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  79. வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து பழைய பதிவுகளைபடித்து கருத்து சொல்வது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
    ரோஷ்ணி நலமா?

    பதிலளிநீக்கு