திங்கள், 16 ஏப்ரல், 2012

உறவோடு உறவாடி

உறவோடு உறவாடி மகிழ்ச்சியாக போன மாதம் 10 நாட்களைக் கழித்து வந்தேன். மதுரையில் திருப்பரங்குன்றம், பிள்ளையார் பட்டி, குன்றக்குடி, பிரான்மலை எல்லாம் உறவினர்களுடன் சென்று வந்தேன். திருப்பரங்குன்றத்தில்
என் தங்கை பேரனின் ஆயுசுஹோமம், முடிஇறக்குதல், காதுகுத்துதல் ஆகிய விழாக்களில் கலந்து கொண்டேன்.

நம் முன்னோர்கள் உறவுகள் விட்டுப் போகாமல் இருக்க ஒவ்வொரு விழாவுக்கும் ஒவ்வொருவரை முக்கியப்படுத்தி, அவர்கள் வரவை மற்றவர்கள் மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கிறாற்போல வைத்து இருக்கிறார்கள். குழந்தை பிறந்தால்
பேர் வைக்கும் விழாவில் காப்பு போட அத்தை வரவேண்டும் ,ஆண்டு நிறைவுக்கு அடுத்த நாள் மொட்டையடித்துக் காது குத்தும்போது தாய் மாமன் வரவேண்டும் என்று. முன்னதில் மாப்பிள்ளை வீட்டுச் சொந்தம்- அத்தைக்கு முதல்
மரியாதை. அடுத்து பெண் வீட்டு சொந்தம்- மாமாவிற்கு முதல் மரியாதை.

மதுரையில் என் தங்கை வீட்டில் பேரனுக்கு ஆயுசு ஹோமம் முடித்து மாலை கேக் வெட்டும் விழா.அதைத் திருப்பரங்குன்றத்தில் வைத்துக் கொண்டார்கள். மறுநாள் மொட்டை, காதுகுத்து விழா இருப்பதால் முதல் நாளே கல்யாண மண்டபத்தை ஏற்பாடு செய்து அதில் மாலை கேக் வெட்டும் விழா நடந்தது.

மறுநாள் திருப்பரங்குன்றமே ஒரே விழாக் கோலம்! எங்கு பார்த்தாலும் கூட்டம்! கூட்டம்! நான் என் தங்கையைக் கேலி செய்து கொண்டு இருந்தேன் -”என்ன பேரன் காது குத்துக்கு திருப்பரங்குன்றம் ஊரையே அழைத்து விட்டாயா? ”என்று. அன்று நல்ல முகூர்த்தநாள். கல்யாணம், காது குத்து எல்லாம் தடபுடலாய்
அமர்க்களமாய் நடந்து கொண்டு இருந்தது. எங்கள் பக்கம் ஆண்டு நிறைவுக்கு மறுநாள் மொட்டை அடித்து காது குத்தி விடுவார்கள். ஏதாவது தவிர்க்க
முடியாத காரணம் இருந்தால் தான் தள்ளி வைப்பார்கள்.

கிராமத்து மக்கள் இந்த விழாவை வைப்பதற்கு சரியான நேரம் எல்லாம் பார்ப்பார்கள். அதாவது உறவினர்களுக்கு எந்த நேரம் -குறிப்பாக- தாய் மாமனுக்கு ஏற்ற நேரம்(கையில் பணம் உள்ள நேரம்) பார்த்து வைக்க வேண்டுமாம். மொய் வைக்கும் உறவினர்கள் வீட்டுக்கு தேவையான அளவு பொருட்கள், பணம் எல்லாம் செய்து விடுவார்களாம். காது குத்து விஷேசம் தன் அவர்களுக்கு பெரிய விழாவாம். பத்திரிக்கையில் பேர் கட்டாயம் போட வேண்டுமாம். விழாவிற்கு பெரிய பேனர்கள் வைத்து இருந்தார்கள், குலதெய்வ கோவில்களிலும் மொட்டைஅடித்து காது குத்துவார்களாம்.என் தங்கை பேரனுக்கு மொட்டை போடப் போகும் போது,அந்த இடத்தின் பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் காது குத்து விழா நடந்துகொண்டிருந்தது. அதற்கு, வெடி, வான வேடிக்கை, மேளதாளம் ! சீர் வரிசை எல்லாம் இரண்டுஇரண்டாய் ! கூடைகளில் பழங்கள், தட்டு தட்டாய் சீர்வரிசைகள், பித்தளை அண்டா . வெண்கல, பித்தளை
விளக்குகள் என்று தலையில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வந்தனர். கல்யாணமண்டபத்திலிருந்து பாரதி ராஜா படத்தில் வரும் தாய் மாமன் சீர் கொண்டு வரும் பாட்டு நல்ல சத்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தது..ஒரு படத்தில் கவுண்ட மணி ”காது எப்போ குத்துவார்கள் ? எப்போ கடா வெட்டுவார்கள் ”என்று கேட்டுக்கொண்டே இருப்பார். அது போல நான் என் அண்ணன் மகனிடம் கல்யாணமண்டபத்தில் காது குத்துகிறார்களே இங்கே கடா வெட்டுவார்களா என்று கேட்டவுடன் ஒரே சிரிப்புதான் , ”ஆமாம் அத்தை உங்களை கூப்பிடுகிறார்கள், சாப்பிட ”என்று ஒரே கேலிதான்.

மொட்டை அடிக்கும் இடத்தில் ஒரு அம்மா பணம் வாங்கி கொண்டு வெந்நீர் தருகிறார்கள். அங்கேயே குழந்தையை குளிப்பாட்டி விட்டு சரவணப் பொய்கையில் தண்ணீரை மேலே தெளித்துக் கொள்வோம் என்று அங்கு போனோம்.

அம்மாடி ! என்ன கூட்டம், என்ன கூட்டம்! எங்கு பார்த்தாலும் மொட்டை. குழந்தைகள்.ஆண் குழந்தைகள், பெண்குழந்தைகள் என்று கழுத்தில் மாலையும் காதுக்கு வித விதமாய் கம்மலும் போட்டுக்கொண்டு , குழந்தைகள் எல்லாம் புது உடையில் மொட்டைத் தலையுடன் அழகுதான். எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் தான்.

புது மணத் தம்பதிகள் கூட்டம் வேறு. புதுக் கல்யாணத் தம்பதியர் பேண்ட் வாத்தியங்களுடன் வெயிலில் ஊர்கோலம் வந்தார்கள். பேண்ட் வாத்தியம் வாசித்தவர்கள் பெண்கள். வித்தியாசமாக இருக்கிறதே என்று அவர்களைப் படம் எடுத்தேன்.அவர்கள் ”எங்களை உங்கள் வீட்டு விழாவிற்கு கூப்பிடுங்கள் வந்து வாசிக்கிறோம்” என்று சொல்லி அவர்கள் விசிடிங் கார்டு கொடுத்தார்கள்.

//கவிதா பேண்ட்
வடக்குத் தெரு, மார்த்தாண்டம் 629165
கன்னியாகுமரி மாவட்டம்.//


பலூன் விற்பவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில் சவ்வு மிட்டாய் விற்பவர். நீண்ட கைத்தடியில் சவ்வு மிட்டாய்கள் சுற்றப்பட்டு இருக்கும். அதைப் பாலிதீன் கவரால் சுற்றி வைத்து இருந்தார். கைத்தடியின் மேலே உள்ள பொம்மை கூலிங்கிளாஸ் அணிந்து, தலையில் ஸ்கார்ப் அணிந்து இருந்தது .வெயில் காரணமாய், பொம்மைக்கு இந்த அலங்காரம் போலும். குழந்தைகள் அந்த மிட்டாயை விதவிதமாய் வாட்ச், செயின் என்று செய்து வாங்கி அணிந்து கொண்டார்கள்.செயின் பெரிதாக பெரிதாகக் காசு அதிகம் கொடுக்க வேண்டி இருக்குமே என்று பெற்றவர்கள் ”பிள்ளைகளை போதும், போதும் வாங்க” என்று அழைத்துக் கொண்டு இருந்தார்கள்


சரவணப் பொய்கை அருகில் இருக்கும் மலையில் பிள்ளைகள் மகிழ்ச்சியாகச் சறுக்கி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.கோவிலுக்கு வந்திருந்தவர்களில் ஒரு அம்மா காது வளர்த்து, பாம்படம் என்று சொல்லும் நகையை அணிந்து இருந்தார்கள். ரொம்ப நாளாக அவர்கள் காதை வளர்த்தார்களாம். ஒருபக்கப் பாம்படத்தின் எடை 4 பவுனாம்.

என் தங்கை பேரனுக்கு திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் காது குத்து விழா நடைபெற்றது. வைகாசி விசாகத்திற்கு முருகனுக்கு என் தங்கையின் கணவரின் குடும்பத்தார்கள் தாம் பரம்பரை பரம்பரையாக முதல் பால் குடம் அபிஷேகம் செய்வார்கள். அதனால் அவர்களுக்குக் கோவிலில் எல்லோரையும் தெரியும் என்பதால் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். உறவினர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் அழைத்து சென்றால் வரிசையில் காத்து நிற்கும் பக்தர்களுக்கு மனம் நோகும் என்பதால் இடை இடையே அழைத்து சென்று சண்முகரைத் தரிசிக்க வைத்தார்கள்.

34 கருத்துகள்:

 1. கோமதி மேடம்,

  இரட்டிப்பு சந்தோஷம்...ஒன்று எங்கள் ஊரான திருப்பரங்குன்றத்தில் உறவுக்காரர்கள் விழா நிகழ்த்தியது...இன்னுமொன்று இங்கேயிருந்து எங்கள் ஊரை உங்கள் படங்களில் பார்ப்பதற்கு...

  ஆகா......மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 2. மிகவும் மகிழ்ச்சியான தகவல்கள்.

  அத்தை, தாய்மாமன் உறவுகளுக்கு நம் முன்னோர்கள் பல முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அவை பற்றி நாம் நிறையவே பேசமுடியும்.

  உறவுகள் நாளடைவில் விட்டுப்போய் விடாமல் இருக்கவே இந்த சிறப்பு ஏற்பாடுகளை வைத்திருக்கிறார்கள்.

  நல்ல பகிர்வு. சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 3. ஹைய்யோ!!!!!! பாம்படம், ஜவ்வு மிட்டாய்ன்னு கொசுவத்தி ஏத்திட்டீங்களே!!!!

  என் வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை இந்த ஜவ்வு முட்டாய்தான். சிறுமியா இருந்தப்பத் தின்னவிடலை:(

  இப்போ கிடைச்சாலும் தின்ன முடியாது. பயணத்தில் வாயைக் கட்டிருவேன்.

  உறவினர் வீட்டு விழாக்களில் கலந்துகிட்டால் மகிழ்ச்சிக்கு அளவேது? எல்லோரையும் ஒரே இடத்தில் சந்திக்கலாம்!!!!

  எனக்கும் திருப்பரங்ககுன்றத்தில் மொட்டை அடித்தார்களாம். குரங்கு என் புதுச்சட்டையை தூக்கிட்டுப்போயிருச்சு. அண்ணன் விரட்டிப்போய் நிலக்கடலையைப் போட்டு எடுத்து வந்தராம். பெரியக்கா கதையாச் சொல்வாங்க:-))))

  பதிவு அழகு. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப ஜாலியாத்தான் இருந்திருக்கீங்க போல.. கடா வெட்டா விசாரிச்சீங்க ..:))

  கவிதா பேண்ட் வாத்தியக்குழுவுக்கு விளம்பரம் வேற :) ரொம்ப நல்லா இருக்கே..

  பதிலளிநீக்கு
 5. அழகழகா படங்கள்,
  அருமையான விஷயங்கள்,
  என்று பகிர்வு ரொம்ப கலக்கலா இருக்கும்மா.

  இப்பவே ஜவ்வு மிட்டாய் வாங்கி சாப்பிடணும் போல இருக்கு! நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை... :(

  பதிலளிநீக்கு
 6. தங்கையின் பேரனுக்கு வாழ்த்துகள்.

  அருமையாக விவரித்துள்ளீர்கள் உறவுகளோடு உற்சாகமாக கழித்த கணங்களை.

  படங்கள் நன்றாக உள்ளன. Band வாத்தியம் வாசிக்கும் பெண்களின் சிரிப்பு அழகு. அவர்களது முகவரியை அளித்திருப்பது சிறப்பு.

  பாம்படம் அணிந்தவர்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு. சின்ன வயதில் ஊரில் சகஜமாகக் காணக் கிடைப்பார்கள். ‘வலிக்கவே வலிக்காதா’ என வியப்பாகப் பார்த்தபடி இருப்போம்:).

  ஜவ்வு மிட்டாய் காரர்கள் இப்படி பொம்மையோடு விற்பனை செய்வதை நானும் சமீபத்தில்தான் பெங்களூர் லால்பாகில் பார்த்தேன்:) http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/6978482737/in/set-72157623916201860/

  நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 7. நன்றாக இருக்கிறது...உறவுக்கு ஈடு இணை எதுவுமில்லை

  பதிலளிநீக்கு
 8. இந்த பப்பர மிட்டாய் பத்தி தனி பதிவே போட்டு இருக்கறேன்.http://www.kovaineram.blogspot.in/2012/04/blog-post.html

  பதிலளிநீக்கு
 9. நல் உறவுகளின் கூட்டு விழா. இந்த முறைகள் இங்கு உள்ள பிள்ளைகளிற்கு இல்லாது தானே திசை மாறிப் போகிறார்கள் மிக நல்ல ஒன்று கூடல். உறவுகளை இறுக்க. நல்ல படங்கள்.பழைய முறைகளை நினைவு படுத்தும் பதிவு. மகிழ்ச்சி தருகிறது.பாராட்டுகள் சிஸ்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க பாசமலர், உங்கள் ஊரா திருப்பரங்குன்றம்! மகிழ்ச்சி. நிறைய படங்கள் எடுத்தேன் பதிவின் நீளம் கருதி குறைத்து விட்டேன். கோவில், மலை, சரவணப்பொய்கை அருகில் இருக்கும், அரசமரம், முருகன் இருக்கும் இடம் எல்லாம் எடுத்தேன். படங்கள் போடுவது பெரிய கஷ்டமாய் இருக்கிறது ,அது நல்ல பழுகும் வரை அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், உறவுகளின் சிறப்பைப் பற்றி நிறைய சொல்லலாம் தான்.

  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. தலைப்பே அசத்தலாக உள்ளது கூடவே படங்கள் கண்களையும் பகிர்வு மனதினையும் கொள்ளை கொண்டு விட்டன.அருகில் இருந்து பார்த்தாற்போல் சம்பவங்களை கண் முன் கொணர்ந்து நிறுத்தி விட்டீர்கள் கோமதிஅரசு.

  பதிலளிநீக்கு
 13. வாங்க துளசி கோபால், உங்கள் மலரும் நினைவுகள் நன்றாக இருக்கிறது.

  இப்போது குரங்குகள் இல்லை.

  எங்கள் வீட்டிலும் ஜவ்வு மிட்டாய் வாங்கி தரமாட்டார்கள் நான் பள்ளியில் படிக்கும் போது தோழிகளுடன் வாங்கி தின்று இருக்கிறேன். என் வாயில் உள்ள ரோஸ் கலர் காட்டிக் கொடுத்து விடும். உடம்புக்கும் வந்து விடும். அப்புறம் என்ன திட்டுதான்.

  விழாக்களில் தான் இப்போது உறவினர்களை சந்திக்க முடிகிறது.
  அவரவர், குடும்பம், குழந்தைகள் படிப்பு என்று காலம் ஒடுகிறது.

  பதிலளிநீக்கு
 14. மிகவும் சந்தோஷமாக இருந்தது கோமதி. திருப்பரங்குன்றம் பார்த்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. பாம்படம்,ஜவ்வு மிட்டாய்,பெண்கள் பாண்ட் எல்லாமே சூப்பர்.அழகாக விவரம் கொடுத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வரியிலும் மகிழ்ச்சி தாண்டவமாட்டுகிறது. குழந்தை ரொம்ப அழாமல் இருந்தானா.கேக் நல்ல பெரிதாக இருக்கே. சஞ்ஜீவுக்கு ஆசிகள்

  பதிலளிநீக்கு
 15. அழகான பகிர்வும்மா....நம்ம ஊர்பக்கம் ஒரு ரவுண்ட் நான் போயிட்டு வந்த மாதிரி உணர்கிறேன்.

  ஜவ்வு மிட்டாய் நான் சிறு வயதில் சாப்பிட்டிருக்கிறேன். நெக்லஸ், வளையல், வாட்ச் எல்லாம் செய்து தருவாங்க. கூட ஒரு கொசுறாக கன்னத்தில் ஒரு சின்ன துண்டு ஒட்டி விடுவாங்க.

  உறவுகளை ஒரு சேர சந்தித்தாலே மகிழ்ச்சி தான்.

  பதிலளிநீக்கு
 16. கயல்விழி, ஜாலியாகத்தான் இருந்தேன்.
  உங்களை எல்லாம் நான் பார்த்த இடங்களுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
  மலையில் சறுக்கு விளையாடும் பையன்களைப் பார்த்தவுடன் சபரி இப்படி சறுக்குவானா? என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன்.
  பேண்ட் வாத்திய குழு பெண்கள் கேட்டுக் கொண்டார்கள். நம் வீட்டில் விஷேசம் எல்லாம் இப்போது இல்லை. அதனால் மற்றவர்களுக்கு பயன்படுமே என்று கொடுத்தேன். நீங்கள் ஊருக்கு வரும் போது வரவேற்க அழைத்து விடுவோமா?

  விழாவை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் கவரேஜ் செய்து விட்டேனா?

  பதிலளிநீக்கு
 17. வெங்கட், சித்திரை திருவிழாவுக்கு மதுரை வாருங்கள் ஜவ்வு மிட்டாய் கிடைக்கும்.
  பகிர்வை ரசித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க ராமலக்ஷ்மி, நீங்கள் அனுப்பிய ஜவ்வு மிட்டாய் படம் பார்த்தேன்.உங்கள் ஊரில் பொம்மை மாதிரி செய்து தருகிறார்கள். இங்கு, வாட்ச், செயின், மோதிரம் என்று செய்து தருவார்கள்.

  பாம்படம் அணிந்து இருப்பவர்களை கண்டால் எனக்கும் அவர்களுக்கு வலிக்காதா என்று உங்களைப் போல் தான் தோன்றும்.

  படங்களை பாராட்டியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. ராமலக்ஷ்மி, என் தங்கை பேரனுக்கு உங்கள் வாழ்த்தை சேர்த்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
 20. வைரைசதிஷ், உங்கள் தொடர்வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வைரைசதிஷ், உங்கள் தொடர்வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வாங்க கோவை நேரம், உறவுக்கு ஈடு இணை இல்லை தான்.

  உங்கள் பப்பிரமிட்டாய், ஜவ்வு மிட்டாய் பதிவை படித்தேன்.
  நல்ல மலரும் நினைவுகளை பகிர்ந்து இருக்கிறீர்கள்.
  உங்கள் வரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வாங்க வேதா. இலங்காதிலகம், பிள்ளைகளுக்கு உறவுகளை எடுத்து சொல்லவேண்டும், அவர்களை நல்வழி படுத்தவேண்டும்.
  பழைய முறைகளை ரசித்தமைக்கு நன்றி சகோதரி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க ஸாதிகா, தலைப்பை ரசித்தமைக்கும், பதிவு , படங்களை கண் முன்னே கொண்டு வந்து ரசித்தமைக்கு மிக மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க வல்லி அக்கா, என் தங்கை பேரன் சஞ்ஜீவ் மகாலிங்கத்திற்கு உங்கள் ஆசிகளை சேர்த்து விட்டேன். அவன் உங்கள் ஆசிகிடைக்க கொடுத்து வைத்து இருக்கிறான்.
  காது குத்தும் போது கொஞ்சம் அழுதான்.

  பதிவை ரசித்தமைக்கு நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு
 26. வாங்க ஆதி, உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
  நீங்கள் சொல்வது போல்
  உறவுகளை ஒருசேர சந்திப்பது மகிழ்ச்சிதான்.
  நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
 27. மகிழ்ச்சியான குடும்பவிழா. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. வாங்க மாதேவி, மகிழ்ச்சியான குடும்பவிழாதான்.

  அடுத்த பாகம் போட்டு விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 29. அந்த பெண்கள் பாண்ட் கோஷ்டியை பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. மார்த்தாண்டத்திலிருந்து மதுரை அப்புறம் திருப்பரங்குன்றம் என்றால், தங்கள் இசைக் கருவிகளுடன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர...

  வாழ்க்கையின் சிரமங்கள் பல நேரங்களில் வலியும் கொடுக்கின்றன. இப்படிப்பட்ட தொழிற்கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பது இன்னொரு விதத்தில் பெருமிதமாகவும் இருக்கிறது.

  ஒரு திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வேற்படுத்திவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 30. வாங்க ஜீவி சார், பெண்கள் பாண்ட் வாசிப்பதும், இசைகருவிகளை எடுத்துக் கொண்டு வருவதும் கஷ்டம் தான். ஆனால் அவர்கள் தங்கள் வலியை மறந்து மகிழ்ச்சியாக இசைக்கிறார்கள். தன்னம்பிக்கையுடன்.

  தொழிற்கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பது இன்னொரு விதத்தில் பெருமிதமாகவும் இருக்கிறது.//

  அது தான் நான் அவர்கள் முகவரியை கொடுத்தேன் யாராவது அவர்களுக்கு உதவுவார்களே.

  அவர்களின் கஷ்டங்களை உணரும் மென்மையான மனம் உங்களுக்கு
  நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 31. வலைச்சர அறிமுகத்திற்கு
  என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 32. வாங்க ராஜி, வாழ்கவளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு