புதன், 18 ஏப்ரல், 2012

உறவோடு உறவாடி-பாகம்-2உறவோடு உறவாடி (இரண்டாம் பாகம்.)

ஒரு கூட்டில் வாழ்ந்தவர்கள் என்றாலும் எல்லோரும் கூடிக் கொள்வது விழாக்களில் தான் என்று ஆகிவிட்டது. அவரவர் குடும்பம், குழந்தைகள் படிப்பு என்று முன்பு மாதிரி 10 நாட்கள் யார் வீட்டிலும் சேர்ந்தாற் போல் தங்க முடிவது இல்லை. விழாக்களில் கலந்து கொண்டு ஓடவேண்டியதாக உள்ளது.

திருமணம் நான்கு நாட்கள் நடக்கும். சேர்ந்தாற் போல் உறவுகளுடன் நான்கு நாட்கள் இருந்து கதைகள் பேசி மகிழ்ச்சியாக இருப்போம். மற்ற விழாக்களில் உடனே கலைந்து விடுகிறார்கள். சிலர் ஒருநாளிலேயே திருமணத்தை முடித்து விடுகிறார்கள். எல்லாச் சடங்குகளும் அந்த ஒரு நாளிலே முடித்து விடுகிறார்கள். கேட்டால் விடுமுறை இல்லை, குழந்தைகள் படிப்பு என்று காரணம் சொல்கிறார்கள்.

இந்த முறை பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த என் சின்னத் தங்கை இரண்டு நாள் அதிகமாய் எங்களுடனே இருந்தாள். அவளை அழைத்துக் கொண்டு திருமலை நாயக்கர் மகால் பார்த்து வருஷங்கள் பல கடந்து விட்டன என்று போய்ப் பார்த்து வந்தோம்


திருமலைநாயக்கர் மகால் கி.பி 1636 ஆம் ஆண்டு திருமலைநாயக்கரால் கட்டப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. நேரே ஆட்டோவில் போய் விட்டோம். நுழைவுக் கட்டணம் 10 ரூபாய்.

முன்பு எல்லாம் பாதி இடத்தை அரசு அலுவலகங்கள் பிடித்து இருந்தன. இப்போது முழுக்க முழுக்க பொது மக்கள் பார்வைக்கு உள்ளது.

‘திருமலைநாயக்கர் சொர்க்க விலாசம் ‘ என்னும் இந்த மகாலில் நடுவில் ஒரு கல் பீடம் . அதில் யானைத் தந்தத்தால் ஆன மண்டபம் இருந்தது .இதில் இரத்தினத்தால் ஆன அரியணை இருந்தது.

இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் செலுத்துவராம். இது ஆஸ்தான மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் அழகையும், விஸ்தாரத்தையும், கலைவேலைப்பாட்டையும் , வேறு எங்கும் காணமுடியாது என்றும் ,தொட்டிக் கட்டு அமைப்பில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.


விதானம்மேல் விதானத்தில் உள்ள வேலைப்பாடுகள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
மரக்கதவு போல் உள்ள வேலைப்பாடு அருமை.

அருங்காட்சியகமாய்ச் செயல்படும் அரண்மணையின் உள் தோற்றம் அழகு. வளைவுகள் அற்புதமாக உள்ளன.

உட்புறத் தோற்றம்:
</div
ஓலைச்சுவடிகள், தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பற்றிய கல்வெட்டுக்கள், கல்வெட்டுக்கள் உள்ள கற்கள், பழங்காலப் பாத்திரங்கள் , முது மக்கள் தாழி போன்ற அமைப்பு உள்ள மண்பாண்டம் எல்லாம் கண்ணாடிப் பெட்டிக்குள் உள்ளன.

மகாலின் பின் பக்கம் , கலைவேலைப்பாடுள்ள உடைந்த கல்சாளரங்கள்,(ஜன்னல்), நந்தி, துர்க்கை, உடுக்கை அடிக்கும் கோடங்கி ஆகிய உருவங்கள் உள்ளன. கோடங்கியின் காது குண்டலம்(குழை) எல்லாம் அழகு.

மகால் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, பெயிண்ட் செய்து கொண்டு இருந்தார்கள். குடும்பத்துடன் வந்தவர்கள் கொஞ்ச பேர்தான். நண்பர்கள், தோழிகளுடன் வந்தவர்கள் தான் நிறைய. படிக்கும் மாணவ மாணவிகள் , கல்விச் சுற்றுலா வந்தவர்கள் என்று மகால் நல்ல கலகலப்பாய் இருந்த்தது. நான் சிறுமியாக இருக்கும் போது கல்வி சுற்றுலாவில் மகால் வந்த போது ஆசிரியர் தூணை ஒருத்தராய் கட்டிபிடிக்க முடியாது என்று செய்து காட்டினார்.காதலர்கள் ஜோடியாக வந்து அமர்ந்து உலகத்தை மறந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்- கையில் புத்தகம் வைத்து இருக்கும் மாணவர்கள். அன்று விடுமுறை இல்லை. தூண்களின் அழகை ரசிக்காமல் அதன் மேல் தங்கள் காதலை உறுதிப்படுத்த தங்கள் பெயர்களை இணைத்து ’இதயம் அம்பு’ வரைந்து வைத்திருக்கிறார்கள். சுவரில், தூணில் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் மதிப்பது இல்லை. ஒரு ஜோடியினர் எழுதிக் கொண்டு இருந்தார்கள். தங்கள் காதலை மகால் தூண் போல் உறுதியாக, காலத்தை வென்றும் இருக்கிற மாதிரி உறுதியாக வைத்துக் கொண்டால் அதுவே போதும்.

ஒலி, ஒளி காட்சிக்கு சேர்கள் எல்லாம் போட்டு இருந்தன. தினம் மாலை நடக்கும் போல. 6.30 என நினைக்கிறேன்.நானும் என் தங்கைகளும் அடுத்தமுறை குழந்தைகளை அழைத்து வந்து காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்தோம். விடுமுறைக்கு என் மகள் பேத்தி, பேரன் எல்லாம் வருவதாய் சொல்லி இருக்கிறார்கள்

நாங்கள் சிவகாசியில் இருக்கும் போது அடிக்கடி ஸ்ரீவில்லிப்புத்தூர் போய் வருவோம். அங்கும் ஒரு திருமலைநாயக்கர் மகால் இருக்கிறதாம். அப்போது பார்க்க முடியவில்லை. நீதி மன்றமாய் இயங்கிக் கொண்டு இருந்தது.
2011லிருந்து பொது மக்கள் பார்வைக்கு விடப்படுகிறது என்று கேள்விப்பட்டேன். அதை அடுத்தமுறை மதுரை போகும் போது பார்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டு வெளியே வந்தோம்

வெளியில் திருமலைநாயக்கர் கழுத்தில் மாலை அணிந்து வாளுடன் நின்றுக் கொண்டு இருந்தார். மகாலின் உள்ளே நுழையும்போது அவரைப் பார்த்து ’வணக்கம் வைக்காமல் போனது தப்புதான் இப்போது வணக்கம் சொல்லிக்கிறேன் ’என்று வணக்கம் வைத்து விட்டு வந்தேன்.மகாலுக்கு வெளியில் ஒருவர், அரிசிமாவில் செய்த பிடிகொழுக்கட்டையும், கேழ்வரகு மாவில் செய்த இனிப்பு பிடி கொழுக்கட்டையும், பச்சைப்பயறு சுண்டலும் விற்றார். நல்ல சுகாதாரமாய் மூடி விற்றார். வாங்கிச் சாப்பிட்டு அவரைப் பாராட்டினேன். அவருக்கு மகிழ்ச்சி. உடம்பைக் கெடுக்காத நல்ல சிற்றுண்டி இல்லையா!

மறுநாள் தங்கைகள், அண்ணன் குடும்பத்தார்களுடன் பிள்ளையார் பட்டி, குன்றக்குடி, பிரான்மலை எல்லாம் சென்று வந்தோம். அவை அடுத்த பதிவில்.
-----------31 கருத்துகள்:

 1. இனிப்பு கொழுக்கைட்டை வேற விற்கிறாங்களா..ம்.. :)

  பதிலளிநீக்கு
 2. அற்புதமான பிரும்மாண்டமான படங்களும், விபரங்களும் அருமையோ அருமை , மேடம்.

  சொர்க்கத்திற்கே விலாசம் கொடுத்துக் எங்களையும் கூட்டிச்சென்று விட்டீர்களே!

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. இப்பொழுது சுற்றுலா செல்லும் உணர்வை ஏற்படுத்தி விட்டீற்கள்.

  திருமலை நாயக்கர் மஹால் என்றாலே அந்த பிர்மாண்டம் தான் மனத்தில் வந்து படிகிறது. எந்தக் காலத்திலும் அந்த தூண்களின் சுற்றளவுக்கு மவுசு தான்.

  எனது ஆரம்பக்கல்வி காலம் மதுரையில் இருந்தது. எனது பதிவில், 'பார்த்தவை படித்தவை' பகுதியில் 'மறக்கமுடியாத மதுரை நினைவுகள்' என்று எழுதியிருக் கிறேன்.

  செளகரியப்பட்ட போது படித்துப் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான பகிர்வு.இருபது வருடங்களுக்கு முன்பு கல்லூரி சுற்றுலாவில் சென்று வந்தது.இன்னும் மனதில் பசுமையாக இருக்கு.
  கோமதிக்கா திருப்பி அருமையான விளக்கத்துடன் சுற்றி காட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி.குழந்தைகளை அழைத்து சென்று காட்ட வேண்டும்.
  வழக்கமாக நாம் வாங்கி சாப்பிடும் பண்டங்களை விட அரிசிமாவு,கேழ்வரகு கொழுக்கட்டை,
  பச்சப் பயறு சுண்டல் வித்தியாசமாய் நாங்களும் சாப்பிட்ட திருப்தி.

  பதிலளிநீக்கு
 5. //நான் சிறுமியாக இருக்கும் போது கல்வி சுற்றுலாவில் மகால் வந்த போது ஆசிரியர் தூணை ஒருத்தராய் கட்டிபிடிக்க முடியாது என்று செய்து காட்டினார்.//

  எனக்கும் இதே அனுபவம். ஆறாம் வகுப்பில் இருக்கும்போது சென்றது. இப்போது மீண்டும் செல்ல நினைத்தபடியே உள்ளேன். தள்ளிப் போகிறது.

  விவரங்களுக்கும் படங்களுக்கும் நன்றி.

  /அரிசிமாவில் செய்த பிடிகொழுக்கட்டையும், கேழ்வரகு மாவில் செய்த இனிப்பு பிடி கொழுக்கட்டையும், பச்சைப்பயறு சுண்டலும் விற்றார். நல்ல சுகாதாரமாய் மூடி விற்றார்./

  பிடித்த பண்டங்கள்:). சுகாதாரமாகவும் தந்தவரைப் பாராட்டதான் வேண்டும்.

  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 6. திருமலை நாயக்கர் மஹாலை நன்கு சுற்றிப்பார்க்க முடிந்தது. மேலும் விபரங்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி

  பதிலளிநீக்கு
 7. அன்பு கோமதி, நானும் சுற்றுலாவாகத் திருமலை நாயக்கர் மஹால் சென்றவள்தான். எத்தனை ஓடிஓடிப் பார்த்தோம் என்று இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் படம் எடுத்துப் போட்டிருக்கும் அழகு வெகு நன்றாக இருக்கிறது.உங்கள் கைவண்ணத்தில் புது மஹலைப் பார்க்கும் அற்புதம். மிக மிக நன்றி கோமதி. மீண்டும் மதுரை நாட்களை உணர வைக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 8. ஆம் கயல்விழி, இனிப்பு கொழுக்கட்டையும் விற்கிறார்கள்.வயிற்றை கெடுக்காத பண்டம்.

  பதிலளிநீக்கு
 9. வாங்க கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க ஜீவி சார், நீங்கள் சொன்ன மாதிரி எந்தக் காலத்திலும் அந்த தூண்களின் சுற்றளவுக்கு மவுசு தான்.

  உங்கள் மறக்க முடியாத மதுரை நினைவுகளை படிக்கிறேன் சார்.
  நன்றி உங்கள் வரவுக்கு.

  பதிலளிநீக்கு
 11. நிறைய தகவல்களுடன் நல்ல பகிர்வும்மா. நான் இன்னும் சென்று பார்த்ததில்லை. மதுரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. வாங்க வெங்கட், பதிவை ரசித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க ஆசியா, கல்லூரி சுற்றுலாவில் சென்று வந்தது.இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறதா அருமையான அந்த நாட்களை மறக்க முடியுமா!
  குழந்தைகளை அழைத்து சென்று காட்டுங்கள். பழமையான உணவுகளை ரசித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க ராமலக்ஷ்மி, இப்போது போனால் சித்திரை திருவிழாவையும், பார்க்க்கலாம், திருமலை நாயக்கர் மஹாலையும் பார்க்கலாம்.

  உங்கள் கேமராவில் அழகான படங்களை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும்.

  பிடித்த பண்டங்கள்:). சுகாதாரமாகவும் தந்தவரைப் பாராட்டதான் வேண்டும்.//

  ஆம் ராமலக்ஷ்மி, குழந்தைகளுக்கு நம் பழமையான உணவுகளை மறக்காமல் இருக்க செய்ய இது மாதிரி உண்வுகளை செய்து கொடுப்பவரை பாராட்டதான் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 15. வாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க வல்லி அக்கா, ஓடு, ஓடி மஹாலைப்பார்த்த நினைவு வந்து விட்டதா! மகிழ்ச்சி. உங்கள் மதுரை நினைவுகளை மறக்க முடியுமா!
  நன்றி உங்கள் வரவுக்கு.

  பதிலளிநீக்கு
 17. வாங்க வைரை சதிஷ், உங்கள் வரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வாங்க ஆதி, நாங்கள் மதுரையில் இருக்கும் போது வாருங்கள். மதுரையில் உள்ள எல்லா இடங்களையும் நன்கு பார்க்கலாம். ரோஷ்ணியின் விடுமுறைக்கு இந்த பக்கம் வரலாமே!

  பதிலளிநீக்கு
 19. சகோதரி விதானப் படங்கள் எல்லாம் மிக மிக அருமை. விவரணங்கள் விவரித்த விதம் மிக அருமை. சிறப்பான பதிவு மிக ரசித்தேன் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 20. அழகிய படங்களுடன் விஸ்தாரமான பகிர்வு கோமதியம்மா. நேரில் போய் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க புவனேஸ்வரி ராமநாதன், வெகு நாட்கள் ஆகிவிட்டதே உங்களைப் பார்த்து! நலமா?
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
  நேற்று இலங்கை கோவில்கள் பற்றி பதிவு போட்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. வாங்க பழனிவேல், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. //கோணேஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்//

  கோவையில் புகழ்பெற்ற கோனி அம்மன் போல இங்கு கோணேஸ்வரரா?

  சபாஷ்.

  கோனி என்றால் “அரசி” “ராணி” என்று பொருள்.

  பதிலளிநீக்கு
 24. கோமதிக்காஆஆஆஆ!! என்னே ஒரு ஒற்றுமை!! நானும் இந்த முறை இதே மகாலைப் பற்றித்தான் (ஒலி-ஒளி காட்சி)எழுதிருக்கேன்.

  ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் பார்க்க வேண்டும் என்று நினைத்து, முடியாமல் இருந்தது. இம்முறை கண்டிப்பாகப் பார்த்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்துப் போனது. ஒலி-ஒளி காட்சி மட்டுமே பார்த்தோம். பார்வை நேரம் சரியாகத் தெரியாததால் அரண்மனையைப் பார்க்க முடியவில்லை; உங்கள் பதிவில் பார்த்து ஆசை தீர்த்துக்கொண்டேன். ரொம்ப நன்றி. எனக்காகவே நீங்கள் போய்ப் பார்த்துப் பதிவு எழுதியதுபோல இருக்கிறதுக்கா!!

  பதிலளிநீக்கு
 25. வாங்க ஹுஸைனம்மா, நான் பார்க்காத ஒலி-ஒளி காட்சி நீங்கள் பார்த்து இருக்கீர்கள். நாங்கள் காலையில் போனோம், ஒலி-ஒளி காட்டி மாலை.

  அதைப்பற்றிய விவரங்கள் உங்கள் பதிவில் பார்க்கலாம்.
  இன்னும் பதிவிடவில்லையா?

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. நான் மூன்று நான்குமுறை மதுரை சென்றிருக்கிறேன். நாயக்கர் மஹாலையும் பார்த்திருக்கிறேன். என் பேரக் குழந்தைகளோடு சென்று வர வேண்டும் என்னுமென் ஆசை நிறைவேற இதுவரை சந்தர்ப்பம் ஏற்படவில்லை. நாயக்கர் மஹால் அமைந்துள்ள சாலஒயில் காரை சற்று நேரம் நிறுத்தியதற்கு கட்டணம் வசூலிக்க வந்தவர்களுடன் ஒரு முறை வாக்கு வாதம் ஏற்பட்டது நினைவிலாடுகிறது.

  பதிலளிநீக்கு
 27. வாங்க பாலசுப்பிரமணியன் சார், இந்த விடுமுறையில் பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் வரலாமே!

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. உறவோடு உறவாடி- அருமையாய் அற்புதப்படங்களுடன் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு