திங்கள், 10 ஜனவரி, 2011

டைரி - புத்தாண்டுத் தொடர்பதிவு

2010,2011 -ஆம் வருட நினைவுகளை தொடர்பதிவெழுத புவனேஸ்வரி ராமநாதன் அழைத்தார்கள்.

எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. மனம் எனும் டைரியில் எத்தனை எத்தனையோ நினைவுகள் குறித்து வைக்கப் பட்டுள்ளன. அதில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன், புவனேஸ்வரியின் அன்பு அழைப்புக்காக.

1996 ல் மனவளக் கலை யோகா பயிற்சியில் ஆசிரியர் பட்டம் வாங்கி மன்றத்தில் சர்வீஸ் செய்யும் போது, தீட்சை கொடுத்தவிபரம்,அன்று ’சிந்தனை விருந்து’ எந்த தலைப்பில் கொடுத்தேன் என்பது பற்றிய விவரம் எழுதி வைத்து இருப்பேன், குறிப்பு நோட்டில். அது தான் என் முதல் டைரிக் குறிப்பு என்று நினைக்கிறேன்.

என் வாழ்வில் கடந்த 2010ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. மகிழ்ச்சியை, இன்பத்தை அள்ளித் தந்த ஆண்டு. ஏப்ரல் 11 ஆம் தேதி என் குழந்தையின் குழந்தையைக் கைகளில் ஏந்தி உச்சி மோந்த நாள். வெளி நாட்டில் (நியூஜெர்சி) ஜூன் மாதம் பிறந்த பேரனை எப்போது பார்ப்போம், எப்போது அள்ளி அணைப்போம் என்று ஒவ்வொரு கணமும் நினைத்து, அந்த அற்புத தருணம் கைகூடிய வருடம்.

நியூஜெர்சியிலிருந்து “சிறு சிறு அரும்புக்குக் குறும்புகள் வளருது ஓ மைனா மைனா!”என்ற தலைப்பில் என் பேரனின் குறும்புகளை எழுதியதை,
// பாட்டியாவது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம் தெரியுமா? கோமதி அரசு எழுதிய ’சிறு சிறு அரும்புக்கு குறும்புகள் வளருது , ஓ மைனா மைனா’ படித்துப்பார்! பேரக்குழந்தையின் குறும்பு, பாட்டிக்கு எவ்வளவு மகிழ்ச்சி தரும் என்று புரியும்//
என்று சேட்டைக்காரன் அவர்கள் வலைச்சர ஆசிரியராய் இருந்த போது என் வலைத்தளத்தைக் குறிப்பிட்டு அறிமுகப் படுத்தினார். அது ஒரு மகிழ்ச்சி எனக்கு.

அடுத்து நியூஜெர்சியிலிருந்து அன்னையர் தினத்திற்கு எழுதிய ’அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்’ என்று எழுதிய பதிவை தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் வலைச்சர ஆசிரியராய் இருக்கும்போது,

// அன்னையர் தினத்தில் “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்” அப்பிடீங்கிறாங்க கோமதிஅரசு//
என்று குறிப்பிட்டு என்னை அறிமுகப்படுத்தினார்கள். அது இன்னொரு மகிழ்ச்சி எனக்கு.

பிறகு ’தேவதை’ பத்திரிகையில்(ஆகஸ்டு 16 2010) ’வலையோடு விளையாடு’ என்ற பகுதியில் ‘குருந்தமலை குமரன்’ என்ற பயணக்கட்டுரையும், ’தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்’ என்ற சிறு பகுதியும், ‘எண்ணம் முழுதும் கண்ணன் தானே’என்ற பதிவிலிருந்து சிறு பகுதியும் வெளியிட்டார்கள். தொகுத்து வழங்கிய நவநீதன் அவர்களுக்கு நன்றி.

2011ஜனவரி ’லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிக்கையில்-புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பிதழ்- ’மார்கழி கோலங்கள்’ என்ற எனது பதிவு, ‘மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. தேனம்மை அந்தப் பத்திரிக்கைக்காக கதை, கட்டுரை, கவிதை கேட்டு இருந்தார்கள். பெண்களைப் பற்றி கட்டுரை எழுதி அனுப்பி இருந்தேன். மார்கழி மாதசிறப்பு கோலங்கள் பொங்கல் சிறப்பிதழ் என்பதால் ’மார்கழி கோலங்கள்’ என்ற பதிவைப் போட்டிருந்தார்கள். தேனம்மைக்கும், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜாராகவன் அவர்களுக்கும் நன்றி.

தமிழ் மணவிருதுக்கு மூன்று படைப்புகளை அனுப்பி வைத்தேன். முதல் சுற்றில் தேர்வாகி இருப்பதை முதன் முதல் செந்தழல் ரவி அவர்கள் வந்து சொல்லி அதை பார்ப்பதற்கு லிங்கும் கொடுத்தார்கள். பார்த்தால் என் மூன்று பதிவுகளும் தேர்வாகி இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. இரண்டாம் சுற்றிலும் வெற்றி பெறச்செய்த வலை உலக அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். தமிழ்மணத்திற்கு நன்றி! நன்றி!

அடுத்த இரண்டாவது சுற்றில் ‘ விரதங்களும் உடல் நலமும்’ தேர்வாகி இருப்பதை ராமலக்ஷ்மி அவர்கள் சொன்னார்கள்.திகழ், ஜோதிஜி, துளசி மேடம் எல்லாம் வந்து வாழ்த்து சொல்லும் போது விருது கிடைத்த மகிழ்ச்சியைக் கொடுத்து விட்டது.

நான் பதிவெழுத வந்தது முதல் பின்னூட்டங்கள் மூலம் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த எல்லோருக்கும் நன்றிகள்.

பதிவு எழுத வந்த புதிதில் வல்லிசிம்ஹன் அக்கா அழைத்த தொடர் அழைப்புக்கு (வாழ்க்கை வாழ்வதற்கே) சந்தனமுல்லை அவர்கள் 'scrumptious blog award' விருது கொடுத்தார்கள். நான் ஆதவன், தீபாவளி தொடர் பதிவுக்கு அழைத்து அவர்களும் அதே விருதைக் கொடுத்தார்கள். முத்துலெட்சுமி தனது பதிவு உலகப் பிரவேசத்தின் 5 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பதிவுலக அன்பர்களுக்கு நேர்மறை எண்ணங்களை பரப்ப வாழ்த்தி ’வியல் விருது’ என்ற விருதினை எனக்குக் கொடுத்தார்கள். முத்துலெட்சுமி சொன்னது போல் ’வாழ்க பதிவுலகம்! வளர்கநட்பு!!’

எல்லோரும் நன்றாக எழுதுகிறார்கள். நேரமின்மையால் எல்லோருடைய பதிவுகளுக்கும் போய் படிக்க முடிவதில்லை. இருந்தாலும் அவர்கள் வந்து எனக்கு வாழ்த்துச் சொல்லும் போது அந்த அன்பு உள்ளங்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

புத்தாண்டுக் கொள்கையாய் நான் கடைப்பிடிக்க நினைப்பது- பிறரிடம் குறையைப் பார்க்காமல் நிறைவைப் பார்ப்பது. என் கணவர் அடிக்கடி சொல்லும் அறிவுரை ’குறை சொல்லாதே’ என்பது தான். கதவில் நாம் போய் இடித்துக் கொண்டாலும் கதவு இடித்து விட்டதாய்ச் சொல்வது தானே நம் வழக்கம்!

குறை காண வேண்டாம்!
----------------------
//
குறை காண்போர் அறிவில் நற்
குணங்கள் பயனற்றிருக்கும்.//---------வேதாத்திரி மகரிஷி.

இதைக் கடைபிடித்தாலே குடும்பத்தில் அமைதி இன்பம் பெருகும். குறை கூறும் போது மன வருத்தம் ஏற்படுகிறது. கருத்து வேற்றுமை ஏற்படுகிறது. நிறை காணும் போது துன்பம் விலகி இன்பம் பெருகிடும்.

நிறை காண்போம்
----------------

//குற்றமே காணும் குறையுடையோர் வாழ்வினிலே
பெற்ற பயன்சினம் வஞ்சம் பொறாமை வருத்தம் இவற்றால்
முற்றுமிழந்தார் வாழ்வின் இன்பமும் பிறவிப்பயன்
நற்றவத்தோர் வழி நின்று நல்லனவெலாம் ரசிப்போம்.//----- வேதாத்திரி மகரிஷி.

புத்தாண்டில் வாழ்வில் வளம் அத்தனையும் பெற்று அமைதியோடு வாழ்வோம்.
இறைவன் எல்லோருக்கும் எல்லா வளங்களும் அருளப் பாரதியார் பாடுகிறார்:

//மண்மீதுள்ள மக்கள் பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையாலிடும்பை தீர்ந்தே
இன்பமுற்றன்புடனிணங்கி வாழ்த்திடவே
செய்தல் வேண்டும், தேவதேவா!
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
பூ மண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமுமிடி மையுநோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க! என்பேன், ஐயனே!
இந்நாள், இப்பொழுதெனக்கிவ் வரத்தினை
அருள்வாய்.//


//எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே யெண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முனிங்கு
நசித்திடல் வேண்டு மன்னாய்.//

பாரதியார் சொன்னது போல் நல்லதே எண்ணுவோம்.

தொடர் அழைப்புக்கு அழைத்த புவனேஸ்வரி அவர்களுக்கு நன்றி.

30 கருத்துகள்:

 1. இந்த வருடமும் உங்கள் எழுத்துக்களை தொடருங்கள் அம்மா. உங்கள் எழுத்துக்களில் நல்ல பல விஷயங்களை நாங்கள் தெரிந்து கொள்கிறோம். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நிறைய அருமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி கோமதியம்மா.

  பதிலளிநீக்கு
 3. குடும்பத்திலும் எழுத்துப் பயணத்திலும் நல்ல நிகழ்வுகளோடு அமைந்த 2010 போலவே இவ்வாண்டும் அமையட்டும்மா. நல்ல பகிர்வு.

  உங்கள் புத்தாண்டு கொள்கையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. நன்றி. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. அருமையாக தொகுத்து எழுதி இருக்கீங்க.... பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. // என் கணவர் அடிக்கடி சொல்லும் அறிவுரை ’குறை சொல்லாதே’ என்பது தான். கதவில் நாம் போய் இடித்துக் கொண்டாலும் கதவு இடித்து விட்டதாய்ச் சொல்வது தானே நம் வழக்கம்!//

  இங்கே என் மனைவி சொல்வதை அங்கே உங்கள் கணவர் சொல்கிறார்.

  என் அம்மா அந்தக்காலத்திலே ஒண்ணு சொல்வார்:
  'ரோஜாச்செடி பக்கத்திலே நீ போய்ட்டு அதைக்கிள்ளனும்னு பாத்துட்டு, அங்க‌
  முள் தைச்சுடுத்துன்னு சொல்லறயே !!'

  சுப்பு ரத்தினம்.

  பதிலளிநீக்கு
 6. வாழ்க்கையில் முதலில் நாம் குழந்தையாக இருக்கும் பொது மற்றவர்களுக்கு மகிழ்ச்சி..
  பிறகு.. நாம் குழந்தையாக இருந்தாலும் நம்மைவிட வயதில் குறைந்த குழந்தைகை கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம்.
  பிறகு தந்தை, தாயாக தத்தம் மழலைகளை கொஞ்சுகிறோம்.
  அதன்பின் பேரக் குழந்தைகள்..
  -- எந்த வயதானாலும் குழந்தைகளைப் பாத்தாலே மனம் பூரா மகிழ்ச்சிதான்..
  தகுந்த காலத்தில், கொள்ளுப் பேரக் குழந்தைகளை கண்டு மகிழ்ச்சியுர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. நல்ல தொகுப்பும்மா. 2010-இன் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி. இந்த ஆண்டும், வருகின்ற ஆண்டுகளும் இதுபோலவே சிறப்பாய் அமையட்டும்.

  பதிலளிநீக்கு
 8. இந்த ஆண்டைபோல இன்னும் சிறப்புக்களைத்தாங்கி 2011 இப்பக்கங்களை நிறைக்கட்டும்..

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துகள் அம்மா :)

  //குறை சொல்லாதே// அருமையான விசயம் நிறைய முறை நண்பர்களிடத்தில் ஏதேனும் வம்பு வழக்கு குறை சொல்லுதல் என்று நிறைய மனஸ்தாபங்களினை பெற்று/வளர்த்து கொண்டு வாழ்ந்த காலஙக்ள் உண்டு -முன்பு,எங்கோ யாரோ சொன்ன இதே கருத்தினை ஒட்டிய சம்பவம் முற்றிலுமாக மாற்றிவிட்டது இப்பவெல்லாம் என் தவறுகளுக்கு என்னை நானே குறை சொல்லுவதில்தான் முடிகிறது - இதையும் மாத்தணும் :)

  பதிலளிநீக்கு
 10. கடந்த வருசம் உண்மையிலயே சிறப்பான வருசம் தான். இந்த வருடமும் சிறப்பா இருக்கும்மா:)

  வாழ்த்துகள்.உங்க ஆசிகளும் வேணும்.

  பதிலளிநீக்கு
 11. நன்றி ஆதி.

  நீங்களும் அருமையாக எழுதுகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 12. என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றி புவனேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 13. ராமலக்ஷ்மி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. சித்ரா, பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.

  உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. சூரி சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. மக்க வயித்திலே பேரனை பெத்து பேரன் வயித்திலே பிள்ளையை பெத்து நூறு வயசு வாழவேணும் என்கிற பாட்டு நினைவுக்கு வருகிறது.

  நன்றி மாதவன்.

  பதிலளிநீக்கு
 17. வாழ்த்துக்கு நன்றி வெங்கட் நாராஜ்.

  பதிலளிநீக்கு
 18. //இப்பவெல்லாம் என் தவறுகளுக்கு என்னை நானே குறை சொல்லுவதில்தான் முடிகிறது - இதையும் மாத்தணும் :)//

  கழிவிரக்கம் ஆகாது ஆயில்யன்,
  மாத்துங்க முதலில்.

  நீங்கள் நிறைய எழுதுங்கள்.

  இந்த புத்தாண்டில் நிறைய பதிவை உங்களிடமிருந்து எதிர்ப் பார்க்கிறேன்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. கோமதி அக்கா இந்த 2010 புத்தாண்டு டைரி மகிழ்சியாக இருந்தது போல்வே.

  இவ்வாண்டும் மகிழ்சியாக அமைய வாழ்த்துகக்ள்.

  பேரனை எப்பாதான் கொஞ்சுவோமோ, தவித்த அருமையான் பாட்டி
  தேவதை, லேடிஸ் ஸ்பெஷல்
  தமிழ்மனம் அனைத்துக்கும் பாராட்டுக்கள்

  ( யாரும் முக்கால் வாசி பேர் செய்து பார்த்துவந்து சொல்வதில்லை
  வாழை தண்டு கூட்டு செய்து பார்த்து வந்து சொன்னமைக்கு ரொம்ப சந்தோஷம்.)

  பதிலளிநீக்கு
 20. உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஆதவன்.

  என் ஆசிகள் என்றும் உங்களுக்கு உண்டு.

  வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 21. ஜலீலா, உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  வாழைத் தண்டு கூட்டு சாதத்தில் போட்டு சாப்பிட்ட போது பிஸிபேளா டேஸ்ட் வந்தது. நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 22. அருமையான அறிவுரை குறை காண வேண்டாம் என்பது . இந்த ஆண்டு முதல் பின்பற்றலாம் என்று இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. அருமையான பகிர்வு,உங்களை பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்,பாராட்டுக்கள் பல.நிறை,குறை பற்றிய குறிப்பும் அருமை,உங்கள் அழகான நல்லெண்ணங்கள் எல்லாம் நிறைவேற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. சி.கருணாகரசு :

  சிந்தனை சிறக்கவும் எண்ணங்கள் செழிக்கவும் என் வாழ்த்துக்கள்.

  உங்கள் வாழ்த்துக்கு நன்றி கருணாகரசு.

  உங்கள் பின்னூட்டம் டெலிட் ஆகிவிட்டது, மன்னிக்கவும்.

  மெயிலிருந்து எடுத்துப் போட்டு உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 25. நினைவுகளை அழகாக தொகுத்து எழுதி இருக்கிங்க!நல்ல பகிர்வு!

  பதிலளிநீக்கு
 26. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியா.

  பதிலளிநீக்கு
 27. நல்ல எண்ணங்கள். மிக்க நன்றி கோமதிக்கா.

  பதிலளிநீக்கு
 28. வாங்க ஹீஸைனம்மா, வெகு நாட்கள் ஆச்சே உங்களைப் பார்த்து.

  நன்றி உங்கள் வரவுக்கு.

  பதிலளிநீக்கு