புதன், 3 மார்ச், 2010

இளமைப் பருவம்

பருவங்கள் பலவகைப் படும் அவை: காப்பு பருவம்,செங்கீரை பருவம்,தாலப் பருவம் சப்பாணிப் பருவம்,முத்தப் பருவம்,வருகை பருவம்,அம்புலிபருவம்,அம்மானை பருவம்,நீராடற்பருவம்,ஊசற்பருவம் ஆகியவை பெண்களுக்கு உரியவை.ஆண்களுக்கு கடைசியில் உள்ள மூன்று பருவத்திற்கு பதிலாக சிற்றில் பருவம்,சிறுபறை பருவம் சிறுதேர்பருவம் ஆகிய மூன்றும் உரியவை.இவை எல்லாமே இளமை கொஞ்சும் பருவங்கள்.

குழந்தைப் பருவம் மிகவும் அற்புதமானது,கள்ளம் கபடு தெரியாத பருவம்.என்றும் குழந்தையாக இருந்திருக்கலாமே என்று ஒவ்வொருவரும் நினைக்க வைக்கும் பருவம்.

பாரதியார் பாப்பா பாட்டில் பாடியது போல் மாலை முழுவதும் விளையாட்டு தான்.

என் இளமை பருவம் முழுவதும். மிகவும் இனிமையானது,அந்த பொழுதுகள் இனி திரும்பி வராது,ஆனால் நினைத்து மகிழலாம்.

எங்கள் வீடு எப்போதும் அண்ணனின் நண்பர்கள்,என் தோழிகள்,தம்பி,தங்கைகள் விளையாட்டு சகாக்கள் என்று நிறைந்து இருக்கும். வீட்டில் கேரம் போர்டு,டிரேடு,சீட்டு எல்லாம் விளையாடுவோம்.கோவையில் நாங்கள் இருந்த வீட்டுக்கு முன்பு பெரிய விளையாட்டு திடல் உண்டு.அதில் நெட் கட்டி ரிங்பால் விளையாடுவோம்.ஓட்ட பந்தையம்,உயரம் தாண்டுதல் போட்டி எல்லாம் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு சேர்த்து வைத்த காசில் பரிசுகள் வாங்கி கொடுப்போம். சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டதும் அங்கு தான்.14 வீடுகள் உள்ள குடியிருப்பு எல்லோருக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்ற விளையாட்டு துணை கிடைத்தது.பெரியவர்களும் நாள் கிழமைகளில் தங்கள் வீட்டு பலகாரங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்து மகிழ்வார்கள்.(தீபாவளி பண்டிகை,கிறிஸ்துமஸ்,ரம்ஜான்)கோவையில் இருந்த 5வருடமும் பொற்காலம் தான்.

மாலை 6 மணி ஆகிவிட்டது என்று அம்மா கூப்பிடும் போது சிணுங்கலுடன் தான் வீட்டுக்குள் ஆஜர்.(இப்போதும் என் பேத்தியை பார்த்து என் மகள் கேட்கும் கேள்வி, விளையாட்டு முடித்து வீட்டுக்கு வா என்று கூப்பிட்டால் ஏன் மூஞ்சியை தூக்குகிறாய்? என்பதுதான்)

பள்ளியில் தோழிகள் அமராவதி,புவனேஸ்வரி,யோகேஸ்வரி,சரஸ்வதி,பிரேமா என்று அறுவர்
கூட்டணி வைத்திருந்தோம்.நாங்கள் எப்போதும் சேர்ந்தே விளையாடுவோம்,சாப்பிடுவோம்.

பள்ளியில் சுற்றுலா சென்றால் முதலில் பேர் கொடுப்பது இந்த அறுவர் கூட்டணி தான்.பள்ளி விழாக்களில் ஆடுவதற்கும், மாறு வேட போட்டியில் கலந்துகொள்வதற்கும் பேர் கொடுப்பதில் நான் தான் முதல். படிப்பில் முதல் இல்லை! பிரேமா வீடு பள்ளி பக்கத்தில் இருக்கும். அதனால் மதியம் உணவு முடிந்த வுடன் அவள் வீட்டுக்கு போய் அரிநெல்லிக்காய் பறித்து உண்போம்.கோவையில் பள்ளியின் வாசலில் மாங்காய் அழகாய் வெட்டி, மிளகாய்ப் பொடிதூவி விற்பார்கள். வாங்கி தோழிகள்எல்லோரும் கண்சிமிட்டாமல் உண்போம் (இப்போது முடியுமா) பிரேமாவின் வீட்டில் ஞாயிறு தோறும்” சின்மயாமிஷனின் பாலவிஹார்’நடை பெறும். பஜனைப் பாடல்கள்,திருப்புகழ்,பஜகோவிந்தம்,பகவத்கீதை எல்லாம் சொல்லித்தருவார்கள். என் அப்பாவும் அவள் அப்பாவும் சின்மயாமிஷன் நண்பர்கள். தோழிகள் சாப்பாடு கொண்டு வரவில்லை என்றால் நான் தனியாக சாப்பிடமாட்டேன். பிரேமா வீட்டிற்கு போய்விடுவேன். அங்கு அவள் அம்மா அவர்கள் வீட்டு உணவைத் தருவார்கள்.பிரேமாவின் பக்கத்து வீட்டில் பின்னணிப் பாடகி கோவை கமலா இருந்தார்கள். சுந்தராம்பாள் மாதிரி பாடுவார்கள்.நாங்கள் பிரேமா வீட்டுக் கொலுநிகழ்ச்சியின் போது பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வோம்.

என் அண்ணன் சபர்பன் பள்ளியில் படித்தார்கள்.அவர்களுடன் ரெங்கராஜ் என்பவரும் படித்தார். பள்ளியின் அருகில் தான் அவர் வீடு. அண்ணனும் அவரும் பள்ளி விட்டதும் அரட்டை அடித்து விட்டு தான் வருவார்கள்.அவர் தான் பின்னாளில் சத்தியராஜ் என்ற நடிகரானார்.

என் இளமைப் பருவம் கோவையில் உள்ள ஐயப்பன் சமாஜம், ராமர்கோவில், பாலவிஹார் என்றுதான் கழிந்தது.ஐயப்பன் சமாஜத்தில் நடக்கும் பாட்டு கச்சேரி,சிவானந்தவிஜயலட்சுமியின்
தொடர் சொற்பொழிவுகள், சின்மையானந்தர்,தயானந்தர்,கிருபானந்தவாரியார்,பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியோரின் சொற்பொழிவுகள் என்று ஆன்மீகம் சார்ந்தே இருந்தது.

சிறியவயதிலே திருமணம் ஆகிவிட்டது.திருமணம் ஆனபின் பள்ளியில் சேர்ந்து படித்தேன்.நான் 11வது படிக்கும் போது துணை முதல்வரின் மனைவி துர்க்கா அவர்கள், 10வது படித்தார்.பிறகு நான் B.A பொருளாதாரம் படித்தேன்.மதுரை காமராஜர் திறந்த வெளி பல்கலை கழகத்தில்.புள்ளியியல் எடுக்கும் ஆசிரியர்,என்னிடம் மேடம்,மேடம் இந்த கணக்கை போட்டு காட்டுங்கள் என்று கேட்பார், நான் பெரிய மேதைஎன்று நினைத்து.புள்ளியியலில் கணக்குகள் அதிகம் வரும்.கணக்கிற்கும் எனக்கும் வெகுதூரம்.அதனால் புள்ளியியலும் எனக்கு தூரமாகிவிட்டது.முதலாம் ஆண்டு படிப்புடனே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.


பிறகு ஆங்கிலத் தட்டச்சு,தமிழ்த் தட்டச்சு,தையல் என்று படித்து ,பின் யோகாவில் ஆசிரியர் பயிற்சி என்று என் கற்றல் தொடர்கிறது.இப்போது என் குழந்தைகளின் மூலமாக கம்யூட்டர் பற்றி படிக்கும் எனது கல்வி தொடர்கிறது. அதனால் இன்றும் என் இளமைப்பருவம்
நீடித்துவருகிறது.

பதின்மப் பருவமே ஒருவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டமாகும்.


வல்லி அக்கா அவர்கள் இளமைப் பருவத்தைப் பற்றி எழுதுங்கள் என்றார்கள். எழுதி விட்டேன்.

25 கருத்துகள்:

 1. பகிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகள் யாவும் இதம்.

  //திருமணம் ஆனபின் பள்ளியில் சேர்ந்து படித்தேன்.//

  //யோகாவில் ஆசிரியர் பயிற்சி என்று என் கற்றல் தொடர்கிறது. இப்போது என் குழந்தைகளின் மூலமாக கம்யூட்டர் பற்றி படிக்கும் எனது கல்வி தொடர்கிறது.//

  எங்கிருந்து எங்கு வரை தொடர்கிறது கற்றல் எனப் புரிகிறது. எல்லோருக்கும் நல்ல முன் உதாரணம் நீங்கள்.

  பதிலளிநீக்கு
 2. அம்மா, அந்த இளமைப் பருவ நினைவுகள் எத்தனை ஆண்டுகள் கடந்தும் பசுமையாக மனதில் படிந்து விடுகிறது என்பதற்கு இந்த பதிவு ஒரு சான்று போல் உள்ளது. பகிர்ந்து கொண்டமைக்கு, நன்றி!

  //இப்போது என் குழந்தைகளின் மூலமாக கம்யூட்டர் பற்றி படிக்கும் எனது கல்வி தொடர்கிறது. அதனால் இன்றும் என் இளமைப்பருவம்
  நீடித்துவருகிறது.//

  அது! அதுதான் வேணும். எஞ்சாய் பண்ணுங்க :)

  பதிலளிநீக்கு
 3. படிக்கவே சந்தோஷமாக இருக்கிறது. பெரும் பிரபலங்கள் அப்போதைய உங்கள் நண்பர்களா? :)

  பதிலளிநீக்கு
 4. மாலை 6 மணி ஆகிவிட்டது என்று அம்மா கூப்பிடும் போது சிணுங்கலுடன் தான் வீட்டுக்குள் ஆஜர்.(இப்போதும் என் பேத்தியை பார்த்து என் மகள் கேட்கும் கேள்வி, விளையாட்டு முடித்து வீட்டுக்கு வா என்று கூப்பிட்டால் ஏன் மூஞ்சியை தூக்குகிறாய்? என்பதுதான்) //

  வழி வழியா தொடருதுங்கிறீங்க ;))

  பதிலளிநீக்கு
 5. நினைவுகள் மறப்பது இல்லை ராமலக்ஷ்மி.

  நீங்கள் சொல்வது போல் எனக்கும்
  இதமாக இருக்கிறது.

  நன்றி,ராமலக்ஷ்மி .

  பதிலளிநீக்கு
 6. பசுமை நிறைந்த நினைவுகள் மறப்பதில்லை தெகா ,நீங்கள் சொன்னமாதிரி.

  நன்றி தெகா.

  பதிலளிநீக்கு
 7. இதில் என்ன சந்தேகம் முத்துலெட்சுமி,

  வழி,வழியாதான் தொடருது.

  பதிலளிநீக்கு
 8. இனிய நினைவுகள்.

  கற்பதற்கு ஆர்வம் இருந்தால் போதும் என்பதை அழகாகக் கூறிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 9. கையை ஆதரவாப் பிடிச்சிக்கிட்டு உங்க காலங்களை சுத்திக்காட்டின உணர்வு அம்மா..

  பதிலளிநீக்கு
 10. சென்ஷி, என் கையை ஆதரவாய் பிடித்துக் கொண்டு சுத்திப்பார்த்ததற்கு
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. // என் கற்றல் தொடர்கிறது.இப்போது என் குழந்தைகளின் மூலமாக கம்யூட்டர் பற்றி படிக்கும் எனது கல்வி தொடர்கிறது. அதனால் இன்றும் என் இளமைப்பருவம் நீடித்துவருகிறது.//

  கற்றல் தொடரட்டும் :)

  //பதின்மப் பருவமே ஒருவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டமாகும்.//

  அதன் பிறகு வரும் பருவங்கள் பதின்மத்தினை நினைத்து நினைத்து மகிழும் பருவங்களாகவே அமையும் :)

  பதிலளிநீக்கு
 12. //அதன் பிறகு வரும் பருவங்கள் பதின்பத்தினை நினைத்து நினைத்து மகிழும் பருவங்களாகவே அமையும்.//

  ஆம் ஆயில்யன் .நீங்கள் சொல்வது சரி.

  நன்றி ஆயில்யன்.

  பதிலளிநீக்கு
 13. மாதேவி! கற்றலுக்கு ஆர்வம் தேவை வாய்ப்புகளையும் தவறவிட கூடாது.

  நான் வாய்ப்பை தவற விட்டவள்.

  மாதேவி என் இனிய நினைவுகளில் பங்கு கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. //குழந்தைப் பருவம் மிகவும் அற்புதமானது,கள்ளம் கபடு தெரியாத பருவம்.என்றும் குழந்தையாக இருந்திருக்கலாமே என்று ஒவ்வொருவரும் நினைக்க வைக்கும் பருவம். //

  மிக மிக சரி.... இந்த பருவம் போன்று ஒரு இனிய பருவம் வாழ்வில் மீண்டும் வருவதில்லை..

  //எங்கள் வீடு எப்போதும் அண்ணனின் நண்பர்கள்,என் தோழிகள்,தம்பி,தங்கைகள் விளையாட்டு சகாக்கள் என்று நிறைந்து இருக்கும். வீட்டில் கேரம் போர்டு,டிரேடு,சீட்டு எல்லாம் விளையாடுவோம்//

  அப்போ ஒரே கலகல லகலக தான்..

  //ஓட்ட பந்தையம்,உயரம் தாண்டுதல் போட்டி எல்லாம் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு சேர்த்து வைத்த காசில் பரிசுகள் வாங்கி கொடுப்போம்.//

  வாவ்.... வெரி குட்...

  //பெரியவர்களும் நாள் கிழமைகளில் தங்கள் வீட்டு பலகாரங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்து மகிழ்வார்கள்.(தீபாவளி பண்டிகை,கிறிஸ்துமஸ்,ரம்ஜான்)கோவையில் இருந்த 5வருடமும் பொற்காலம் தான்//

  படிக்கும் போதே ஆனந்தமா இருக்கு... நானே அங்கு இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்... அது தானே உங்கள் எழுத்தின் வெற்றி...

  //இப்போதும் என் பேத்தியை பார்த்து என் மகள் கேட்கும் கேள்வி, விளையாட்டு முடித்து வீட்டுக்கு வா என்று கூப்பிட்டால் ஏன் மூஞ்சியை தூக்குகிறாய்? என்பதுதான்//

  சரியான அணுகுமுறை...

  //பள்ளி விழாக்களில் ஆடுவதற்கும், மாறு வேட போட்டியில் கலந்துகொள்வதற்கும் பேர் கொடுப்பதில் நான் தான் முதல். படிப்பில் முதல் இல்லை//

  இப்படி ஒப்புக்கொள்ள கூட ஒரு தைரியம் வேண்டும்...

  //என் இளமைப் பருவம் கோவையில் உள்ள ஐயப்பன் சமாஜம், ராமர்கோவில், பாலவிஹார் என்றுதான் கழிந்தது.ஐயப்பன் சமாஜத்தில் நடக்கும் பாட்டு கச்சேரி,சிவானந்தவிஜயலட்சுமியின்
  தொடர் சொற்பொழிவுகள், சின்மையானந்தர்,தயானந்தர்,கிருபானந்தவாரியார்,பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியோரின் சொற்பொழிவுகள் என்று ஆன்மீகம் சார்ந்தே இருந்தது.//

  அது உங்கள் எழுத்தில் நன்கு தெரிகிறது மேடம்..

  //புள்ளியியல் எடுக்கும் ஆசிரியர்,என்னிடம் மேடம்,மேடம் இந்த கணக்கை போட்டு காட்டுங்கள் என்று கேட்பார், நான் பெரிய மேதைஎன்று நினைத்து.புள்ளியியலில் கணக்குகள் அதிகம் வரும்.கணக்கிற்கும் எனக்கும் வெகுதூரம்.அதனால் புள்ளியியலும் எனக்கு தூரமாகிவிட்டது//

  நிரம்ப ஆச்சரியப்பட வைக்கிறீர்கள்... இப்படி கூட யாரவது உண்மையை ஒப்புக்கொள்ள முடியுமா என்று...

  //பிறகு ஆங்கிலத் தட்டச்சு,தமிழ்த் தட்டச்சு,தையல் என்று படித்து ,பின் யோகாவில் ஆசிரியர் பயிற்சி என்று என் கற்றல் தொடர்கிறது.இப்போது என் குழந்தைகளின் மூலமாக கம்யூட்டர் பற்றி படிக்கும் எனது கல்வி தொடர்கிறது. அதனால் இன்றும் என் இளமைப்பருவம்
  நீடித்துவருகிறது.//

  ஆஹா... என்னே ஒரு நிறைவான வாழ்க்கை உங்களுடையது... அதனாலேயே உங்களுள் மகிழ்ச்சி தங்கி இருக்கிறது...

  கலக்கல் எழுத்து கோமதி மேடம்...

  பதிலளிநீக்கு
 15. கோபி,நெகிழ வைத்து விட்டீர்கள்.

  விரிவான பின்னூட்டம் போட்டமைக்கு
  நன்றி.

  விட்டுபோன பதிவையும் படித்து
  பின்னூட்டம் போட்டு எழுதும் ஆர்வத்தை
  மேம் படுத்துகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 16. //றியவயதிலே திருமணம் ஆகிவிட்டது.திருமணம் ஆனபின் பள்ளியில் சேர்ந்து படித்தேன்.//

  அப்ப கல்யானம் பண்ணிட்டு காதல் பண்ணின க்ரூப்பா நீங்க.:)

  அப்பறமும் படிச்சிருக்கீங்க கோமதி அம்மா.
  //குழந்தைகளின் மூலமாக கம்யூட்டர் பற்றி படிக்கும் எனது கல்வி தொடர்கிறது.//

  அதான் ப்ளாக் படிக்கறோமே :)

  பதிலளிநீக்கு
 17. வாங்க சின்ன அம்மிணி,
  வேலைகள் அதிகமோ,புதிய பதிவுகள்
  உங்களிடமிருந்து வரவில்லையே!

  // அப்ப கல்யாணம் பண்ணிட்டு காதல் பண்ணின க்ருப்பா நீங்க//

  ஆமாம் சின்ன அம்மிணி.

  //அதான் ப்ளாக் படிக்கிறோமே//

  தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. இப்பதான் உங்க பதிவுக்கு பின்னூட்டம் இடறேனு நினைக்கிறன். ரொம்ப அருமைய எழுதறீங்க . நன்றி

  பதிலளிநீக்கு
 19. L.K உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்
  நன்றி.

  இதற்கு முன் சாலை பாதுகாப்பு பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள்.

  நானும் உங்கள் பதிவுகளுக்கு வந்து இருக்கிறேன்.

  வரபோகும் இணைய இதழுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. அன்புத் தங்கை கோமதிக்குத்
  தாமதமாக வந்து பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கணும்.
  கடந்த பத்து நாட்கள் மிகவும் பிசியாகப் போய் விட்டது.
  உங்கள் பதின்ம நினைவுகள் உங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. மகிழ்ச்சியான வருடங்களைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.
  நாங்களும் கோவையில்
  1969லிருந்து 73 வரை இருந்தோம்.
  இனிமையன காற்றும்,சிறுவாணித் தண்ணீரும் மறக்க முடியாத விஷயங்கள். நன்றி கோமதி. எழுத்து மென்மேலும் வளர வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
 21. குழந்தைகள், பேத்தி எல்லாம் வீட்டில் புது வசந்தத்தை உண்டாக்கி வீடு கல,கல என்று இருக்கும் போது எப்படி எழுத முடியும் .

  மறக்காமல் வந்து இப்போது வாழ்த்தியதற்கு நான் தான் உங்களுக்கு
  நன்றி சொல்ல வேண்டும்.

  70 வரை கோவையில் இருந்தோம்.69லில் என் அக்காவிற்கு சபீதாஹாலில் திருமணம் நடை பெற்றது.
  71லில் தேனி, பிறகு மதுரை.
  73 நவம்பர் 7ம்தேதி எனக்கு திருமணம்.

  மகிழ்ச்சியான வருடங்களை கொடுத்த இறைவனுக்கு தினம் நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்,நீங்கள் சொன்னமாதிரி.

  என்னை தொடர் அழைப்புக்கு அழைத்து
  என் பதின்ம காலத்தை நினைக்க வைத்தற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு கோமதி, இணைப்பு கொடுத்ததற்கு மிக நன்றி மா.
   எவ்வளவு விவரம். அத்ற்கு எத்தனை சிறிய பின்னூட்டம் கொடுத்திருக்கிறேன் மன்னிக்கணும் தங்கச்சி.
   ஆஹா இவ்வளவு பிரபலங்களா உங்கள் வாழ்வில். திருமண்மான பிறகு படிட்டீர்களா.
   எவ்வளவு புத்திசாலிம்மா நீங்கள்.
   மனம் பூரிக்கிறது.
   என்றும் நலமுடன் வாழ வேண்டும்..

   நீக்கு
  2. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
   நீங்கள் தான் நிறைய தொடர் பதிவுகளுக்கு அழைப்பு விடுத்து எழுத சொல்வீர்கள்.முதன் முதலில் நீங்கள் தான் என்னை எழுதலமே கோமதி என்று சொன்னவர்கள். ஆர்வமாய் படித்து பின்னூட்டம் கொடுத்தவர்கள்

   புத்திசாலி இல்லை அக்கா, என்னைபுத்திசாலி ஆக்க முயற்சி செய்து தோல்வி கண்டவள். சிறிய மூளையில் நிறைய ஏறவில்லை.

   உங்கள் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி.
   பழைய பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.


   நீக்கு