1 ஆம் தேதி மதுரை "இம்மையிலும் நன்மை தருவார்" திருக்கோயிலுக்கு போய் இருந்தேன். அன்று 3 வது சோமவாரம் . காலையே சங்குகள் தரிசனம் கிடைத்தது, மாலை அபிஷேகம் நடக்க ஹோமம் ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது.
கோயிலுக்குள் கூட்டம் இருந்தது ஆனால் இறைவன் அருளால்
விரைவில் தரிசனம் செய்து வந்து விட்டேன்.
10 ரூபாய் டிக்கட் வாங்கி வரிசையில் நிற்க வேண்டுமே! என்னால் நிற்க முடியாதே ! என்று நினைத்து கொண்டே டிக்கட் தருபவரிடம் என்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது உள்ளே அனுமதிக்க முடியுமா என்று கேட்டேன், " சிறிது நேரம் இருங்கள், உள்ளே கட்டளைக்காரர்கள் தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் வந்த வுடன் உங்களை முதலில் அனுப்புகிறேன்" என்றார் சில வினாடிகளில் உள்ளே அனுமதித்து விட்டார். அவருக்கு நன்றி சொல்லி உள்ளே இறைவனை நன்கு தரிசனம் செய்து வந்தேன்.
என் கண்வரின் நினைவு நாள் அதனால் அன்னதானத்திற்கு பணம் கொடுத்து விட்டு மாலையில் நடக்கவிருக்கும் சங்காபிஷேகத்திற்கு ஹோம பொருட்கள் வாங்கி கொடுத்து விட்டு வந்தேன்.
பெரிய கார்த்திகை அன்று எங்கள் வளாகத்தில் உள்ள விநாயகரை வணங்கி அவருக்கு பின்னால் தெரியும் முழு நிலவையும் வணங்கி வந்தேன்.
முழு நிலவு அரிசோனாவில் நன்றாக இருக்கும் அங்கு நான் எடுத்த நிலவு படங்களை பார்த்து கொண்டு இருக்கிறேன் என்று மகனிடம் சொன்னேன் . மகன் மறு நாள் நடைப்பயிற் சிக்கு போய் விட்டு அங்கு எடுத்த நிலவு படங்களை அனுப்பினான்.

------------------------------------------------------------------------------------------------------
ஹோமத்திற்கு வேண்டிய திரவியங்களை நாம் வாங்கி கொடுத்தால் அதை பிரித்து தனி தனி மூங்கில் தட்டுகளில் பிரித்து வைக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள்.
என் அண்ணி கோகர்ணேஸ்வரர் கோயிலில் நடந்த நான்காவது சோமவார அபிஷேகத்தை அனுப்பி வைத்தார்கள்
இன்னொரு கோயிலில்(காசி விஸ்வநாதர் கோயில்) நடந்த கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் அனுப்பினார்கள் நன்கு துல்லியமாக தெரிகிறது அபிஷேகம் , "ஓம் நமச்சிவாய" மந்திரம் ஒலிக்க அபிஷேகம் செய்வது அருமையாக இருக்கிறது சின்ன காணொளிதான் பாருங்கள்.
எங்கள் வீட்டு கார்த்திகை தீப விழா படம்.
விளக்குகள் இந்த வருடம் கொஞ்சம் தான் வைத்தேன்.. பூஜை முடிந்ததும் வெளியே கொண்டு வைத்த தீபங்களை படம் எடுக்க மறந்து விட்டேன். இப்போது எல்லாம் பண்டிகை கொண்டாடுவது மலைப்பாக இருக்கிறது, நிறைவு செய்தால் ஏதோ சாதித்த நினைப்பும், நிம்மதி பெருமூச்சு ஏற்படுகிறது.
எப்போதும் கார்த்திகை வீட்டில் ஏற்றி விட்டு பக்கத்தில் உள்ள அய்யனார் கோயிலில் போய் சொக்கப்பனை பார்த்து வருவேன் இந்த ஆண்டு போகவில்லை என்று என் உடன்பிறவா தங்கை லட்சுமியிடம் சொன்னேன், தேவகோட்டை அய்யனார் கோயில் சொக்கபனை அனுப்பி விட்டாள்.
கார்த்திகை அன்று அய்யனார் தரிசனமும் சொக்கப்பனை தரிசனமும் கிடைத்து விட்டது.
நிலவு வரும் நேரம் நல்ல மஞ்சள் நிறத்தில் அழகாய் தெரியும்.
நான் அங்கு இருந்த போது நிறைய நிலவு படங்கள் எடுத்து பதிவு செய்து இருக்கிறேன். நிலவை பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
அரிசோனாவில் உள்ள மகா கணபதி ஆலயத்தில் சிவன், பார்வதி திருமணம் அதற்கு மகன் குடும்பத்துடன் சென்று இருந்தான்
அங்கு கார்த்திகை தீபங்கள் அழகாய் ஏற்றி இருந்ததை அனுப்பி வைத்தான்
மகா கணபதி ஆலயத்தில் சர்வீஸ் செய்ததற்கு மகனை பாராட்டி பரிசு அளித்தார்களாம் அதை என்னுடன் பகிர்ந்து கொண்டான். மகிழ்ச்சியாக இருந்தது.

பேரன் அங்கு தீபங்களை ஏற்றினான்
வீட்டிலும் அம்மாவுக்கு உதவியாக தீபங்களை திரிகள் போட்டு தயார் செய்து கொடுத்து ஏற்றினான்.
நாளை மார்கழி பிறந்து விடும் அதிகாலை கோலங்கள் போட்டு, பரங்கி பூ வைத்து விளக்கு ஏற்றி திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குவோம்.
பதிவு போட்டு நாள் ஆகி விட்டது, சங்காபிஷேகம், மற்றும் கார்த்திகை தீபாங்களுக்காக இந்த பதிவு.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------------

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக