செவ்வாய், 25 நவம்பர், 2025

உனை நினைத்தே கழியும் என் ஆவி

 


உந்தன்  மலர்ந்த முகம் என்றும்  என் மனதில்


அன்று காலை அவர்கள் கையால் தேதி தாள் கிழிக்கப்படவில்லை, அந்தநாளை கிழித்து நான்  பத்திரப்படுத்தி வைக்கத்தான் போலும்

இன்று என் கணவர் இறைவனிடம் சென்ற நாள். (தேதிப்படி)

அன்று  வளர்பிறை ஏகாதசி திதி. கைசிக ஏகாதசி, மிகவும் சிறப்பான ஏகாதசி. அடுத்த மாதம்  1 ஆம் தேதி  நினைவு நாள் வருகிறது.

சைவ குடும்பத்தை சார்ந்தவர்  அவர் மறைந்த நாள் ஏகாதசி. 

ஒரு வருடம் ஆனி மாதம்  பன்னிருதிருமுறை பாராயணம் செய்ய ஆரம்பித்தால் அடுத்த ஆனி முடிப்பார்கள். 

 புரட்டாசி மாதம் முழுவதும் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்கள் பாராயணம் செய்து  நிறைவு செய்வார்கள். சஷ்டி ஆறு நாளும் விரதம் இருந்து 36 தடவை சஷ்டி கவசம் தினம் படிப்பார்கள்.

அவர்கள் இஷ்ட தெய்வம் சுவாமிமலை முருகனும், பழனி மலை முருகனும். 6 மாதத்திற்கு ஒரு முறை சுவாமிமலை போவோம், ஒரு வருடத்திற்கு ஒரு முறை  பழனி மலை போவோம்.

 தமிழ் வருடப்பிறப்புக்கு திருவாடுதுறை, ஆங்கில வருடப்பிறப்புக்கு கங்கை கொண்ட சோழபுரம்.

இவை பல காலம் மதுரை வரும் வரை கடைபிடித்தார்கள்.

அன்று சுவாமிமலை ஸ்ரீ முருகபெருமான் பஞ்ச மூர்த்திகளுடன்  வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தவர் அழைத்து சென்று விட்டார் தன் பக்தரை என்று  நினைத்துக் கொள்வேன்.



பத்ரிநாத் கோயிலையும், கைலையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்தோம். (சார் தம் யாத்திரை)



நிழல் போல தோடர்ந்தேன் 

நார்த்தான் மலை  ஏற்றம் போது எடுத்த படம்.


  நான் எங்கள் குடும்ப வாட்ஸப்  குழுவில் பதிவின்  தலைப்பில் போட்ட வரிகளை போட்டு இந்த படத்தை பகிர்ந்து இருந்தேன் இன்று காலை.  இந்த வரி மாணிக்கவாசகர்  சிவபெருமானை நினைத்து கழியும் தன் ஆவி என்று சொல்லி இருப்பார் திருவாசகப்பாடலில்.   அதைப்பார்த்து விட்டு மகள்
  இந்த   பாடல் வரிகளை  அனுப்பி இருந்தாள்.
 

//இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை தனிமையும் இல்லை~//


இந்த சினிமா பாடல்  பகிர்வை மகள் எனக்கு அனுப்பி வைத்தாள்  இந்த பாடல் உன் நினைப்புக்கு பொருத்தம் என்று.

 நான் சொல்வேன் அடிக்கடி அவளிடம் உன் அப்பா இருப்பது போல நினைத்து தினம் உரையாடி கொண்டு இருப்பதால் தனிமையில் இருப்பது போல உணர்வு இல்லை கடவுள் நம் அருகில் இருப்பது போல நினைத்து கொள்வது போல உன் அப்பா என்னுடம் இருப்பதாய் நினைத்து கொள்கிறேன் என்று சொல்வேன். 



மகள் தன் அப்பாவின் படம் போட்டு அவள் எழுதிய   சின்ன கவிதை பகிர்ந்து   இருந்தாள் 


//நீங்கள் எப்போதும் அவருடன் செல்வீர்களே. நீங்கள் எப்படி பள்ளிப்படை பார்க்காமல் விட்டீர்கள்?

நேரம் கிடைத்தால் அவர் கையேட்டை வைத்து ஒரு பதிவு போடுங்கள். நன்றி//


நெல்லை கேட்டு இருந்தார் அவர்  பதிவில்.  அதனால் கணவரின் நினைவு நாளில் அவர்களின்  கையேட்டை பதிவு செய்து விட்டேன்.

நெல்லைத்தமிழன் கேட்டுக் கொண்டதால் நானும்  வெகு நாள்  பதிய நினைத்து இருந்தேன் இன்று நினைவுகள் பகிர்வில் பகிர்ந்து விட்டேன். இன்னும் இருக்கிறது பின்னர் வரும். 

பழையாறை பற்றிய குறிப்பும் இருந்தது அதுவும் பார்த்து போடுகிறேன்.

  நெல்லைத்தமிழனுக்கு நன்றிகள் பல.

  என் கணவர் நான் அம்மா வீட்டுக்கு பேறுகாலத்திற்கு போய் இருக்கும் போது நிறைய கோயில்கள் போய் இருக்கிறார்கள். அப்புறம் குழந்தைகளை வைத்து கொண்டு பஸ்ஸில் பயணம் செய்ய முடியாத காலத்தில் அவர்கள் மட்டும் போய் வந்து இருக்கிறார்கள்.    அப்போது எல்லாம் போக்குவரத்து அவ்வளவு வசதி இருக்காது . சில கோயில்கள் சைக்கிளில் போவார்கள், நண்பர்களுடன் போவார்கள். நிறைய தூரம் பஸ்சைவிட்டு இறங்கி நடக்க வேண்டும் உன்னால் முடியாது பிள்ளைகளை வைத்து கொண்டு என்று அவர்கள் மட்டுமே போய் இருக்கிறார்கள்.

பின்னால்  காரில், ரயிலில், விமானத்தில் என்று  வசதியாக  பல கோயில்களுக்கு அவர்கள் என்னை   அழைத்து போகும் வாய்ப்பை இறைவன் அளித்தார். இறைவனுக்கு நன்றி.


நான் அவர்களுடன் கோயிலுக்கு போன தை டி.ஜி

இந்த பட்டியலில் நான் பார்த்தது , பிள்ளைகள் பார்த்தது, அவர்கள் மகள் டி.கே . எம், மகன் டி.கே என்று இருக்கும்.


ஆங்கிலத்திலும் எழுதி இருப்பார்கள்.






சிவத்தல மஞ்சரி என் மாமனார் புத்தகம் இவர்களுக்கு கொடுத்து இருந்தார்கள்.

பாடல்  இடம்பெற்ற 274 கோயில் வரலாறு, போகும் வழி தடங்கள் ஆகியவை சொல்லும் புத்தகம்.

இப்போது  கூகுளில் தேடினால் கோயில் இருப்பிடம் செல்லும் தூரம் எந்த மாநிலம் என்று எல்லா விவரங்களும், தல வரலாறும் வந்து விடும் அப்போது எல்லாம் இந்த புத்தகத்தை வைத்து கொண்டு தான் போவார்கள்.





போன கோயில் பற்றி அழகாய் எழுதி வைத்து இருப்பார்கள்


அவர்களெ கோயிலின் தோற்றத்தை, மற்றும்  கோயிலில் தெய்வங்கள்  பற்றி குறிப்பு எழுதி வைத்து இருப்பர்கள்.





பாண்டிய நாட்டில் உள்ள  கோயில்கள்



இப்படி அன்பர்களுடன் இணைந்தும், தனியாகவும் , தன் சகோதர்கள், அம்மா, அப்பாவுடன் இணைந்தும் போவார்கள். 




















இன்னும் வரும் . கணினி டைப் செய்ய் ஒத்துழைக்கும் போது இன்று போட்டு விடுவோம் என்று போட்டு கொண்டு இருக்கிறேன். மகன்  நண்பரின்  அப்பாவிடம்   மடி கணினி புதிதாக வாங்கி கொடுத்து விட்டு இருக்கிறான் அது இன்னும் எனக்கு வந்து சேரவில்லை.  இறையருள் தகுந்த நேரத்தில் கொண்டு வந்து சேர்க்கும். 

அமெரிக்காவில் நன்றி சொல்லும் நாள்( உறவுகளுடன் கொண்டாடும் நாள்) விடுமுறை இப்போது .  அனைவருக்கும் நானும் நன்றி சொல்லி கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து எழுத வைக்கும் அனைத்து நட்புகளுக்கும்,   மற்றும் என்  அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி. 

இந்த பதிவை பதிய விட்ட என் மடி கணினிக்கும் நன்றி. 
அதற்கும் எனக்கு ஒத்துழைக்க மனம் இருக்கு.


வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும்,
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!
- திருநாவுக்கரசர் தேவாரம்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

----------------------------------------------------------------------------------------------------

54 கருத்துகள்:

  1. எல்லா விரத நாட்களிலும் நியமமாக கடைப்பிடித்திருக்கிறார்.  என்ன ஒரு சீரான வாழ்வு...  வணங்குகிறேன். 

    20/11/20 அன்று காலை நீங்கள் எனக்கு போன் செய்தது நினைவுக்கு வருகிறது. கொரோனா பாதிப்புகள் உச்சத்தில் இருந்த நேரம்.  எதிர்பாராத செய்தி.  என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் நான் தடுமாறின நாள்..  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //எல்லா விரத நாட்களிலும் நியமமாக கடைப்பிடித்திருக்கிறார். என்ன ஒரு சீரான வாழ்வு... வணங்குகிறேன். //

      ஆமாம், ஒரு காரியம் எடுத்துக் கொண்டால் அதை கடைபிடிப்பதில்
      மிகவும் கவனமாக இருப்பார்கள். செயலில் நேர்த்தி இருக்கும்.

      //20/11/20 அன்று காலை நீங்கள் எனக்கு போன் செய்தது நினைவுக்கு வருகிறது. கொரோனா பாதிப்புகள் உச்சத்தில் இருந்த நேரம். எதிர்பாராத செய்தி. என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் நான் தடுமாறின நாள்.. //

      25.11. 20 ஸ்ரீராம், என் தங்கை எல்லோருக்கும் போன் செய்தாள். நீங்கள் என்னிடம் பேச வேண்டும் என்றதால் பேசினேன். அந்த நேரம் மிகவும் கொடுமையான நேரம் கடந்து வந்ததேன் எல்லோரின் அன்பினால்.

      நீக்கு
  2. கைலாஷ் பத்ரி யாத்திரையில் வித்தியாசமாக  தெரிகிறார்.

    நிழல் போல நீங்கள் பின்தொடர அவர் நடக்கும் காட்சி வழக்கமான அவர் போஸ். நெற்றியில் திருநீறு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கைலாஷ் பத்ரி யாத்திரையில் வித்தியாசமாக தெரிகிறார்.//
      குளிர் அதிகம் அதனால் அந்த வேடம் நெற்றியில் திருநீறு தெரியவில்லை குல்லா மறைப்பதால்.

      //நிழல் போல நீங்கள் பின்தொடர அவர் நடக்கும் காட்சி வழக்கமான அவர் போஸ். நெற்றியில் திருநீறு..//

      திருநீறு இல்லா படங்களே கிடையாது. திருமண வரவேற்பு படத்தில் போட்டோ எடுப்பவர் துடைத்து விட்டார் அதனால் இருக்காது.

      நீக்கு
  3. மகளின் கவிதை வெளிப்பாடு அன்பின் வெளிப்பாடு. ஆதர்சமாக நினைக்கும் அப்பாவை ஆராதிக்கும் வெளிப்பாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகளின் கவிதை வெளிப்பாடு அன்பின் வெளிப்பாடு. ஆதர்சமாக நினைக்கும் அப்பாவை ஆராதிக்கும் வெளிப்பாடு.//

      நன்றி ஸ்ரீராம், நிறைய கவிதைகள் எழுதுவாள் முன்பு. இப்போது மீண்டும் அவள் அப்பாவிற்காக எழுதி இருக்கிறாள்.

      நீக்கு
  4. சென்று வந்த இடங்கள் பற்றி எவ்வளவு ஒழுங்காக, அழகாக குறித்து வைத்திருக்கிறார் -  யார் யார் சென்றார்கள் என்பது உட்பட...   வியக்கிறேன்.  குறிப்புகளும், விளக்கப்படமும் அழகு, அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சென்று வந்த இடங்கள் பற்றி எவ்வளவு ஒழுங்காக, அழகாக குறித்து வைத்திருக்கிறார் - யார் யார் சென்றார்கள் என்பது உட்பட... வியக்கிறேன். குறிப்புகளும், விளக்கப்படமும் அழகு, அருமை.//

      நன்றி ஸ்ரீராம்.
      இப்போது என்றால் எல்லாம் கணினியில் சேமித்து இருப்பார்கள்.

      நீக்கு
  5. இந்த மாதிரி ஒரு அருமையான புத்தகத்தைக் கொடுத்து அவர் மனதில் விருப்பங்களைத் தெரிவு செய்யும் நல்வாய்ப்பை அளித்த மானாரையும் வணங்க வேண்டும்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த மாதிரி ஒரு அருமையான புத்தகத்தைக் கொடுத்து அவர் மனதில் விருப்பங்களைத் தெரிவு செய்யும் நல்வாய்ப்பை அளித்த மானாரையும் வணங்க வேண்டும். //

      ஆமாம், மாமனாரை வணங்கி கொண்டே தான் இருக்கிறேன். அவர்கள் கோயில்களுக்கு சென்று வழிப்பட பின் தான் இவர்களுக்கு கொடுத்தது. கயிலை மட்டும் போக வில்லை மற்றபடி நிறைய தலங்கள் தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  6. உடனே உடனே சென்று வந்த இடங்கள் பற்றி எழுதி விடுவார் போல.. சாதாரணமாக டைரியில் எழுதுவார்கள். ஸார் இதற்காகவே ஒரு நோட்டு போட்டு சிரத்தையாக எழுதி பாதுகாத்திருக்கிறார். என்ன ஒரு இன்ட்ரஸ்ட்... என்ன ஒரு அர்ப்பணிப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உடனே உடனே சென்று வந்த இடங்கள் பற்றி எழுதி விடுவார் போல.. சாதாரணமாக டைரியில் எழுதுவார்கள். ஸார் இதற்காகவே ஒரு நோட்டு போட்டு சிரத்தையாக எழுதி பாதுகாத்திருக்கிறார். என்ன ஒரு இன்ட்ரஸ்ட்... என்ன ஒரு அர்ப்பணிப்பு..//

      டையிரியும் நிறைய இருக்கிறது, அவர்கள் எழுதிய தினப்படி டையிரி.

      நீக்கு
  7. பொருத்தமான தேவாரத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்திருக்கிறீர்கள். அருமை., அருமையான நினைவுப் பெட்டகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொருத்தமான தேவாரத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்திருக்கிறீர்கள். அருமை., அருமையான நினைவுப் பெட்டகம்.//

      இந்த தேவார பதிகமும் அவர்கள் குறித்து கொடுத்தது தான். தினம் பாட தேவார பாடல்கள் தேவார திரட்டில் உள்ளதை டிக் அடித்து கொடுத்தார்கள், பாசுரங்களும் தினப்படி பாட உண்டு திருமணம் ஆன புதிதில்.

      உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. மனதுக்கு மிக நெருக்கமான, நெகிழவைக்கும் பதிவு.

    பிறகு வந்து கருத்திடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //மனதுக்கு மிக நெருக்கமான, நெகிழவைக்கும் பதிவு.

      பிறகு வந்து கருத்திடுகிறேன்.//

      வாங்க மெதுவாக
      நன்றி.

      நீக்கு
  9. சார் என்றும் தங்கள் நினைவுகளில் தங்களுடனேயே வாழ்கிறார். அவருக்கு எனது வணக்கங்கள்.

    சிவத்தல மஞ்சரி உபயோகமான நூல். ஆம், அந்நாளில் புத்தகங்களைப் பார்த்தே சுற்றுலாத் தலங்கள், இடங்களுக்குச் செல்வார்கள். அதற்கான வழிகாட்டிப் புத்தகங்கள் நிறைய உண்டு.

    சார் ஒவ்வொன்றையும் குறிப்பெடுத்து வைத்திருக்கும் விதம் சிறப்பு. பொறுப்புகள் முடிந்தபின் உங்களையும் எல்லாத் தலங்களுக்கும் அழைத்துச் சென்றது உங்கள் மனதுக்கு நிறைவு.

    புதிய கணினியில் மேலும் தங்கள் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். பழைய கணினிக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //சார் என்றும் தங்கள் நினைவுகளில் தங்களுடனேயே வாழ்கிறார். அவருக்கு எனது வணக்கங்கள்.//

      ஆமாம், எப்போதும் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன்.


      //சிவத்தல மஞ்சரி உபயோகமான நூல். ஆம், அந்நாளில் புத்தகங்களைப் பார்த்தே சுற்றுலாத் தலங்கள், இடங்களுக்குச் செல்வார்கள். அதற்கான வழிகாட்டிப் புத்தகங்கள் நிறைய உண்டு.//

      சாரின் அண்ணா கை அடக்கமாய் சிவத்தல வழி காட்டி என்று புத்தகம் போட்டார்கள் மாமாவின் பிறந்த நாளுக்கு அதையும் கையில் எடுத்து போவார்கள். நேற்று அதையும் தேடினேன் பதிவில் போட கிடைக்கவில்லை.

      //சார் ஒவ்வொன்றையும் குறிப்பெடுத்து வைத்திருக்கும் விதம் சிறப்பு. //

      ஆமாம். என்னை அழைத்து செல்லும் போது தான் முன்பு போன போது கோயில் எப்படி இருந்தது , இப்போது எப்படி இருக்கிறது, அந்த ஊர் மாறி இருக்கா அப்படியே இருக்கா என்பதை எல்லாம் சொல்வார்கள்.

      //பொறுப்புகள் முடிந்தபின் உங்களையும் எல்லாத் தலங்களுக்கும் அழைத்துச் சென்றது உங்கள் மனதுக்கு நிறைவு.//

      குத்தாலம் அருகில் உள்ள திருமண்சேரி கோயிலுக்கு பஸ் வசதி இல்லாமல் இருக்கும் போது குத்தாலத்தில் வாடகை சைக்கிள் எடுத்து என்னை அழைத்து சென்றது நினைவுகளில். இரு சக்கர வாகன்ம் வாங்கிய பின் அதில் சில கோயில்கள், பின் கார் வாங்கிய பின் சில கோயில்கள் என்று அழைத்து சென்று இருக்கிறார்கள். எனக்கு மனநிறைவுதான்.

      //புதிய கணினியில் மேலும் தங்கள் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். பழைய கணினிக்கும் நன்றி.//

      பழைய கணினிக்கு வாழ்த்து சொல்லி விட்டீர்கள் அதற்கு மகிழ்ச்சி ஏற்பட்டு இருக்கும் புது கணினி வரும் வரை என்னுடன் ஓத்துழைக்கும்
      நன்றி ராமலக்ஷ்மி.
      நீங்கள், வல்லி அக்கா எல்லாம் அடிக்கடி போனில் பேசி கொண்டு இருந்தீர்கள் அந்த காலகட்டத்தில்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. நிழற்படம் மனதை பிசைந்து விட்டது.

    நிழலும் புகைப்படத்தில் விழுந்தது இன்றைய பதிவுக்காகத்தான் போலும்.... எல்லாம் இறைவன் செயல்.

    தந்தைக்கான தங்களது மகளின் கவிதை அருமை.

    நீங்காத நினைவுகள் என்றும் தொடரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //நிழற்படம் மனதை பிசைந்து விட்டது.//

      வருத்தப்பட வைத்து விட்டேனா?

      //நிழலும் புகைப்படத்தில் விழுந்தது இன்றைய பதிவுக்காகத்தான் போலும்.... எல்லாம் இறைவன் செயல்.//

      மகன் எடுத்த படம்,நீங்கள் சொல்வது சரிதான் எல்லாம் இறைவன் செயல்.

      //தந்தைக்கான தங்களது மகளின் கவிதை அருமை.//

      நன்றி ஜி

      //நீங்காத நினைவுகள் என்றும் தொடரும்...//

      நினைவுகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

      உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    உங்கள் கணவரைப் பற்றிய நினைவுகளோடு இன்றைய பதிவு மனதை கனக்க வைத்தது.

    தங்களையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவில்களுக்கு அழைத்துச் சென்ற அவரது பண்புக்கு தலை வணங்குகிறேன். அதன் மூலம் நீங்காத நினைவுகளை தந்தபடி அவர் உங்கள் இதயத்தில் வாழ்ந்தபடிதான் இருப்பார். வேறு எங்கும் சென்றிருக்க மாட்டார். படங்களில் அவரையும், உங்களையும் சேர்ந்து காணும் போது, மனதுக்கு கஸ்டமாகி விழிகள் நீரினால் கசிகின்றன. எப்படித்தான் இந்த இறைவனுக்கு இப்படி பிரிக்க மனம் வந்ததோவென மனம் அங்கலாய்கிறது.

    தங்கள் மகளின் கவிதை மிக நன்றாக உள்ளது. அந்தப்பாடலும் பொருளும் உங்களுக்காகவே ஒத்துப் போன மாதிரி அமைந்து விட்டது.

    எத்தனை செய்திகள்..! எத்தனை விபரங்கள்..! ஒன்று விடாமல், சென்ற இடங்களையும், அங்குள்ள கோவில்களைப் பற்றியும், விபரமாக எழுதி வைத்திருப்பது அவரின் இறை பக்தியையும். பொறுமையையும் காட்டுகிறது. சிவனை வணங்குவதை காட்டிலும், சிவனடியார்களை வணங்குவதே சாலச்சிறந்தது என்ற மரபின்படி உங்கள் கணவரை வணங்கிக் கொள்கிறேன். 🙏. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //உங்கள் கணவரைப் பற்றிய நினைவுகளோடு இன்றைய பதிவு மனதை கனக்க வைத்தது.

      தங்களையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவில்களுக்கு அழைத்துச் சென்ற அவரது பண்புக்கு தலை வணங்குகிறேன். அதன் மூலம் நீங்காத நினைவுகளை தந்தபடி அவர் உங்கள் இதயத்தில் வாழ்ந்தபடிதான் இருப்பார். வேறு எங்கும் சென்றிருக்க மாட்டார். படங்களில் அவரையும், உங்களையும் சேர்ந்து காணும் போது, மனதுக்கு கஸ்டமாகி விழிகள் நீரினால் கசிகின்றன. எப்படித்தான் இந்த இறைவனுக்கு இப்படி பிரிக்க மனம் வந்ததோவென மனம் அங்கலாய்கிறது.//

      நீங்கள் சொல்வது போல நினைவுகளை தந்தபடி என்னுடம் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்றும்.
      உங்கள் அன்பான மனதுக்கு நான் தலைவணங்குகிறேன் கமலா.

      //தங்கள் மகளின் கவிதை மிக நன்றாக உள்ளது. அந்தப்பாடலும் பொருளும் உங்களுக்காகவே ஒத்துப் போன மாதிரி அமைந்து விட்டது.//

      கவிதை மகள் எழுதியது, பாடல் ஏதோ புது சினிமா போல. அந்த வரிகள் அவளுக்கு பிடித்து இருந்ததாம் அது என் நினைவுகளுக்கு பொருத்தம் என்று அனுப்பி இருந்தாள்.

      //எத்தனை செய்திகள்..! எத்தனை விபரங்கள்..! ஒன்று விடாமல், சென்ற இடங்களையும், அங்குள்ள கோவில்களைப் பற்றியும், விபரமாக எழுதி வைத்திருப்பது அவரின் இறை பக்தியையும். பொறுமையையும் காட்டுகிறது. சிவனை வணங்குவதை காட்டிலும், சிவனடியார்களை வணங்குவதே சாலச்சிறந்தது என்ற மரபின்படி உங்கள் கணவரை வணங்கிக் கொள்கிறேன். 🙏. நன்றி.//

      சிவனடியார்களை வணங்கும் பண்புக்கு நன்றி.

      உங்கள் அன்பான ஆறுதலான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. தலைப்பு மனதை கலங்க வைத்து விட்டது. உருவத்திற்கு அழிவிருந்தாலும் நினைவுகளுக்கு என்றுமே அழிவில்லை என்பது உங்களின் பதிவின் ஒவ்வொரு வரியும் சொல்கிறது! தங்கள் கணவரின் விளக்கப்படங்களும் குறிப்புகளும் எழுத்தின் அழகும் மிகவும் அருமை! அவரின் நினைவுகளுடன் இவற்றையும் பொக்கிஷங்களாக பாதுகாத்து வரும் உங்கள் மனதில் என்றும் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன் வாழ்க வளமுடன்

      //தலைப்பு மனதை கலங்க வைத்து விட்டது. உருவத்திற்கு அழிவிருந்தாலும் நினைவுகளுக்கு என்றுமே அழிவில்லை என்பது உங்களின் பதிவின் ஒவ்வொரு வரியும் சொல்கிறது! தங்கள் கணவரின் விளக்கப்படங்களும் குறிப்புகளும் எழுத்தின் அழகும் மிகவும் அருமை! அவரின் நினைவுகளுடன் இவற்றையும் பொக்கிஷங்களாக பாதுகாத்து வரும் உங்கள் மனதில் என்றும் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டுகிறேன்!//

      நீங்கள் சொல்வது சரியே உருவத்திற்கு அழிவிருந்தாலும் நினைவுகளுக்கு என்றுமே அழிவில்லை தான்.
      உங்கள் கருத்துக்கும், உங்கள் வேண்டுதலுக்கும் நன்றி மனோ.

      நீக்கு
  13. /வணக்கம் சகோதரி.

    உங்கள் கணவரின் கையெழுத்து மிக அருமையாக உள்ளது. அதுவும் அவர் 82 ல் எழுதிய திருமழபாடி கோவில் பற்றிய விபரங்களும், உங்கள் மாமனார் தந்த புத்தகத்தில் தி. லியை சுற்றியுள்ள ஊர்களைச் பற்றிய கையேடும் பெரிதாக்கிப் படித்தேன். அருமை. நல்லதோர் விபரங்களதந்த இருவரையும் இந்நாளில் வணங்கிக் கொண்டேன். நீங்களும் இவையனைத்தையும் பொக்கிஷ மாக கருதி பாதுகாத்து வருவது சிறப்பான செயல். உங்களுக்கும் என் வந்தனங்கள்.

    உங்களுக்குப் புது கணினி வரப்போவதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். அதிலும் பல பதிவுகள் தந்து எங்களைப் படிக்க வைத்து மகிழ்ச்சியடைய செய்யுங்கள். நீங்கள் கூறுவது போல், உங்களிடமிருக்கும் கணினிக்கும் நன்றி கூற வேண்டும். இத்தனை நாள் அது உங்களுக்கு எவ்வளவு உதவியிருக்கிறது.

    காலங்கள் கண்களை மூடிக் கொண்டபடி ஓடுகின்றன. நம் நினைவுகளும் அதனுடன் ஓடியும் சற்றேனும் மறையாமல் நம்முள்ளே விஸ்வரூபம் எடுத்தபடி நம்மை பக்குவப்படுத்தி கொண்டு இருக்கின்றன.இதுதானே நம் மனதிற்கு என்றும் ஆறுதல் தரும் பொக்கிஷங்கள்

    /வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும்,
    தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்
    சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
    வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே/

    தேவாரப்பாடலும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, வாழ்க வளமுடன்

      //உங்கள் கணவரின் கையெழுத்து மிக அருமையாக உள்ளது. அதுவும் அவர் 82 ல் எழுதிய திருமழபாடி கோவில் பற்றிய விபரங்களும், உங்கள் மாமனார் தந்த புத்தகத்தில் தி. லியை சுற்றியுள்ள ஊர்களைச் பற்றிய கையேடும் பெரிதாக்கிப் படித்தேன். அருமை. நல்லதோர் விபரங்களதந்த இருவரையும் இந்நாளில் வணங்கிக் கொண்டேன். நீங்களும் இவையனைத்தையும் பொக்கிஷ மாக கருதி பாதுகாத்து வருவது சிறப்பான செயல். உங்களுக்கும் என் வந்தனங்கள்.//

      ஆமாம், அவர்க்ளின் கையெழுத்து மிக அழகாய் இருக்கும்.
      கையேட்டை நன்றாக படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி.கோயில் விவரங்களை வரிசையாக பகிரவில்லை. அதை தான் சரியாக செய்ய வேண்டும்.

      அவர்கள் அனைத்தையும் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.
      என் வேலை அதை எடுத்து பகிர்ந்தேன் அவ்வளவுதான்.
      உங்கள் வணக்கங்கள் அவர்களுக்கு உரித்தாகட்டும்.
      நெல்லைத்தமிழன் கேட்டார் அதனால் பகிர்ந்தேன் , அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

      //உங்களுக்குப் புது கணினி வரப்போவதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். அதிலும் பல பதிவுகள் தந்து எங்களைப் படிக்க வைத்து மகிழ்ச்சியடைய செய்யுங்கள். நீங்கள் கூறுவது போல், உங்களிடமிருக்கும் கணினிக்கும் நன்றி கூற வேண்டும். இத்தனை நாள் அது உங்களுக்கு எவ்வளவு உதவியிருக்கிறது.//

      வாழத்துகளுக்கு நன்றி. ஆமாம். இவ்வளவு நாட்கள் உதவியதற்கும் இப்போது உதவி கொண்டு இருப்பதற்கும் நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.

      //காலங்கள் கண்களை மூடிக் கொண்டபடி ஓடுகின்றன. நம் நினைவுகளும் அதனுடன் ஓடியும் சற்றேனும் மறையாமல் நம்முள்ளே விஸ்வரூபம் எடுத்தபடி நம்மை பக்குவப்படுத்தி கொண்டு இருக்கின்றன.இதுதானே நம் மனதிற்கு என்றும் ஆறுதல் தரும் பொக்கிஷங்கள்//

      ஆமாம், யாருக்காவும் காத்து இருக்காமல் காலங்கள் ஓடுகிறது. நம் நினைவுகளும் அதன் பின்னே ஓடுவது உண்மைதான். காலம் நம்மை பக்குவபடுத்துவதும் உண்மைதான். நினைவுகள் தான் நம் பொக்கிஷங்கள் நீங்கள் சொல்வது உண்மை.

      //தேவாரப்பாடலும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      இந்த பாடலையும் அவர்கள் தான் என்னை படிக்க சொன்னார்கள் தினம்.
      அனைத்தையும் மீண்டும் படித்து மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.



      நீக்கு
  14. இவ்வளவு meticulousஆக, இந்த இந்த முக்கிய நாட்களில் இந்த இந்தக் கோயில்கள் தரிசனம், பன்னிரு திருமுறை பாராயணம், சஷ்டி கவசம், பிரபந்தம் என்று ஒரு ஒழுங்குமுறையை வைத்திருந்தது ஆச்சரியமாக இருக்கு.

    கோயில் உலாக்களை எப்போது யார் யாரைக் கூட்டிக்கொண்டு சென்றோம் என்பதைக் குறித்து வைத்துள்ளது வியக்க வைக்கிறது.

    கோயிலுக்குப் போனோமா, தரிசனம் செய்தோமா, சரி அடுத்த கோயில் போகலாம் என்று இருக்காமல், அனைத்தையும் படங்களுடன் குறித்து வைத்துள்ளதை எண்ணி, அட்டா.. இந்த மாதிரி எனக்கு ஒரு போதும் தோன்றியதில்லையே என வருத்தம் ஏற்படுகிறது. ஒரு தலத்தைப் பற்றி நினைத்தாலே, அதன் அமைப்பு, சன்னிதிகள், இறைவன் இறைவி பற்றிய விவரங்கள், மற்ற விவரங்கள் அனைத்தும் அவர் மனதில் எப்போதும் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //இவ்வளவு meticulousஆக, இந்த இந்த முக்கிய நாட்களில் இந்த இந்தக் கோயில்கள் தரிசனம், பன்னிரு திருமுறை பாராயணம், சஷ்டி கவசம், பிரபந்தம் என்று ஒரு ஒழுங்குமுறையை வைத்திருந்தது ஆச்சரியமாக இருக்கு.//

      ஆமாம், அவர்கள் அளவு செய்யும் செயலில் கவனம் , ஒழுங்கு கடைபிடிக்க முடியாது எங்களால். அது அவர்கள் அம்மாவிடமிருந்து அவர்களுக்கு வந்து இருக்கிறது. அவர்களும் பன்னிரு திருமுறை பாராயணம் விடாமல் பல வருடம் கடைபிடித்தார்கள்.

      //கோயில் உலாக்களை எப்போது யார் யாரைக் கூட்டிக்கொண்டு சென்றோம் என்பதைக் குறித்து வைத்துள்ளது வியக்க வைக்கிறது.//

      சென்ற மாதம் அவர்கள் தம்பி மதுரை வந்தவர்கள் அண்ணன் எங்களுடன் எந்த எந்த கோயில் போய் இருக்கிறோம் என்று எழுதி வைத்து இருக்கிறானா என்று கேட்டார்கள். டையிரியில் அதை எழுதி வைத்து இருப்பார்கள் பார்த்து சொல்கிறேன் என்றேன்.

      அவர்களும் பாடல் பெற்ற திருத்தலங்களை பார்த்து வருகிறார்கள்.

      //கோயிலுக்குப் போனோமா, தரிசனம் செய்தோமா, சரி அடுத்த கோயில் போகலாம் என்று இருக்காமல், அனைத்தையும் படங்களுடன் குறித்து வைத்துள்ளதை எண்ணி, அட்டா.. இந்த மாதிரி எனக்கு ஒரு போதும் தோன்றியதில்லையே என வருத்தம் ஏற்படுகிறது. ஒரு தலத்தைப் பற்றி நினைத்தாலே, அதன் அமைப்பு, சன்னிதிகள், இறைவன் இறைவி பற்றிய விவரங்கள், மற்ற விவரங்கள் அனைத்தும் அவர் மனதில் எப்போதும் இருந்திருக்கும்.//

      அந்த தலங்களுக்கு உள்ள தேவார திருப்பதிங்களை எழுதி எடுத்து போய் அங்கு அமர்ந்து பாடி வருவார்கள்.
      இப்போது போல எல்லா கோயில்களும் எல்லா நேரமும் திறந்து இருப்பது இல்லை, குருக்கள் வீட்டை தேடி அவர்களை அழைத்து கொண்டு போய் திறக்கசொல்லி தரிசனம் செய்து வருவார்கள். குருக்கள், பட்டர் வீடுகள் பற்றிய குறிப்பும் இருக்கும் சில கோயில் வரலாறில்.



      நீக்கு
  15. தந்தை தனக்குக் கொடுத்திருந்த சிவத்தல மஞ்சரி இதற்கெல்லாம் ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கும்.

    வாய்ப்பு இருந்திருந்தால் அவரே அனைத்து விளக்கங்களுடன் திருத்தலங்கள் மஞ்சரி என்ற புத்தகத்தையே வெளியிட்டிருக்கலாம்.

    அனைத்துத் தலங்களையும் தரிசிக்கவேணும் என்ற தூண்டுதல் அவருக்குள் எப்படித் தோன்றியதோ? எல்லாம் இறைவன் செயல்.

    பலமுறை நினைத்துக்கொள்வேன், அமெரிக்கா சென்றும் சாரின் பையன் கலாச்சாரத்தையும், பக்தியையும் விடவுல்லையே, கவினையும் அதே பாதையில் கொண்டுவருகிறாரே என நினைப்பேன். அதில் ஆச்சர்யம் இல்லை. முன்னோர்களின் இரத்தம் மற்றும் நினைவுகளின் தொடர்ச்சி அல்லவா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தந்தை தனக்குக் கொடுத்திருந்த சிவத்தல மஞ்சரி இதற்கெல்லாம் ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கும்.//

      நாங்கள் இருந்த ஊர்கள் எல்லாம் கோயில் அதிகமாக இருக்கும் இடம், திருவெண்காடு, மயிலாடுதுறை அதனால் உனக்கு இது உதவியாக இருக்கும் கோயில்கள் போக என்று கொடுத்தார்கள். தந்தை, தாய், மற்றும் உடன்பிறப்புகளுடன் கோயில்கள் போய் மகிழ்ந்தார்கள்.
      அக்கம் பக்கத்தினர் எப்போது உறவினர் வந்தாலும் கோயில்கள் போய் கொண்டே இருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். இருபக்க உறவுகளையும், நட்புகளையும் கோயில்கள் அழைத்து செல்வார்கள்.

      //வாய்ப்பு இருந்திருந்தால் அவரே அனைத்து விளக்கங்களுடன் திருத்தலங்கள் மஞ்சரி என்ற புத்தகத்தையே வெளியிட்டிருக்கலாம்.//

      நான் ஒரு முறை கேட்டேன் இதை புத்தகம் ஆக்கலாம் என்று அதற்கு அப்போது போல இல்லை இப்போது வழிதடங்கள், போக்குவரத்து எல்லாம் மாறி இருக்கிறது இப்போது கூகுளில் தேடினால் அனைத்தும் கிடைக்கிறது என்பார்கள்.
      உங்கள் அனுபவங்களை எழுதலமாமே என்றாலும் கேட்கவில்லை.
      அவர்கள் இறைவனை புத்தகங்கள் எழுதி கொண்டு இருந்தார்கள் .

      //அனைத்துத் தலங்களையும் தரிசிக்கவேணும் என்ற தூண்டுதல் அவருக்குள் எப்படித் தோன்றியதோ? எல்லாம் இறைவன் செயல்.//

      ஆமாம், அதை ஒரு கடமையாக செய்தார்கள். மங்களாசாசனம் பெற்ற வைணவ தலங்களையும் பார்த்து விட்டார்கள். எல்லாம் இறை யருள்தான்.

      //பலமுறை நினைத்துக்கொள்வேன், அமெரிக்கா சென்றும் சாரின் பையன் கலாச்சாரத்தையும், பக்தியையும் விடவுல்லையே, கவினையும் அதே பாதையில் கொண்டுவருகிறாரே என நினைப்பேன். அதில் ஆச்சர்யம் இல்லை. முன்னோர்களின் இரத்தம் மற்றும் நினைவுகளின் தொடர்ச்சி அல்லவா.//

      நீங்கள் சொல்வது போல அவை எல்லாம் முன்னோர்கள் நினைப்பும் ,ஆசிகளும்தான்.

      நீக்கு
  16. இன்றைய ஐந்தாம் ஆண்டு நினைவு மஞ்சரி நினைவுக் கவிதைகளோடு சிறப்பாக, மனதை நெகிழ்த்தும் வகையில் அமைந்துவிட்டது.

    இதில் விட்டுப் போனவை என நான் நினைப்பது உங்களிருவருடன் மகன் இருக்கும் புகைப்படம் (மகளை வெளிப்படுத்துவதில்லை என்பதால் குறிப்பிடவில்லை), பேரன் தாத்தாவுடன் இருக்கும் புகைப்படம்.

    சிறிய வயதில் திருநாவுக்கரசு சார் மறைந்துவிட்டது துயரம். இதில் மாத்திரம் அவர், தன் அப்பாவைக் கொண்டிருக்கவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்றைய ஐந்தாம் ஆண்டு நினைவு மஞ்சரி நினைவுக் கவிதைகளோடு சிறப்பாக, மனதை நெகிழ்த்தும் வகையில் அமைந்துவிட்டது.//

      நீங்கள் சாரின் கையேட்டை பகிர சொல்லி கேட்டதால் இந்த பதிவு மலர்ந்தது.


      //இதில் விட்டுப் போனவை என நான் நினைப்பது உங்களிருவருடன் மகன் இருக்கும் புகைப்படம் (மகளை வெளிப்படுத்துவதில்லை என்பதால் குறிப்பிடவில்லை), பேரன் தாத்தாவுடன் இருக்கும் புகைப்படம்.//

      போன ஆண்டு பதிவில் படங்கள் நிறைய போட்டேன். தாத்தா, அப்பா, பேரன் என்று நான்கு தலைமுறை படங்கள் போட்டேன்.
      பதிவு நீண்டு விட்டது அதனால் போடவில்லை. மகள், பேத்தி, பேரன் படங்கள் போனில் போட்டு இருக்கிறேன்.

      //சிறிய வயதில் திருநாவுக்கரசு சார் மறைந்துவிட்டது துயரம். இதில் மாத்திரம் அவர், தன் அப்பாவைக் கொண்டிருக்கவில்லையே//

      இறைவன் இவ்வளவு நாட்கள் இருக்க வைத்து அவரை நினைக்க வைத்ததை நினைத்து கொள்கிறேன்.


      நீக்கு
  17. இது ஒரு மிக முக்கியமான பதிவு. தலங்கள் பற்றி அவரின் கையேடுகளை முன்பு பார்த்த நினைவில்லை.

    அவர்்நினைவு போற்றுதலுக்குரியது.

    பதிலளிநீக்கு
  18. //இது ஒரு மிக முக்கியமான பதிவு. தலங்கள் பற்றி அவரின் கையேடுகளை முன்பு பார்த்த நினைவில்லை.

    அவர்்நினைவு போற்றுதலுக்குரியது.//

    நீங்கள் கேட்டுக் கொண்டதால் கையேடுகளை இங்கு பகிர்ந்தேன்.
    சில கோயில்கள் பதிவில் சில குறிப்புகளை சார் எழுதி வைத்து கொண்டு போனதை சொல்லி இருப்பேன்.

    மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன் கையேடு இங்கு பதிவாக்க உங்கள் மூலம் இறைவன் கேட்டார் என்றே நினைக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது, முடிந்த போது பதிவிடுகிறேன்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
  19. பெயருக்கு ஏற்ப திருத்தொண்டர் திருநாவுக்கரசராகவே வாழ்ந்திருக்கிறார். எதிலும் நிதானம், ஒழுங்கு, ஆசிரியருக்கே உரிய குறிப்பெடுக்கும், குறிப்பெழுதும் போக்கு ஆகியவை வியக்க வைக்கின்றன.
    நினைவில் வாழும் அவருக்கு அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //பெயருக்கு ஏற்ப திருத்தொண்டர் திருநாவுக்கரசராகவே வாழ்ந்திருக்கிறார். எதிலும் நிதானம், ஒழுங்கு, ஆசிரியருக்கே உரிய குறிப்பெடுக்கும், குறிப்பெழுதும் போக்கு ஆகியவை வியக்க வைக்கின்றன.
      நினைவில் வாழும் அவருக்கு அஞ்சலிகள்.//

      சரியாக சொன்னீர்கள். அவர்கள் அப்பாவும், அம்மாவும் அந்த பெயரை வைத்து வாய் நிறைய முழுதாக கூப்பிடுவார்கள்.
      எல்லா காரியங்களிலும் நிதானம், ஒழுங்கை கடைபிடித்தார்கள்.
      என்னிடம் அடிக்கடி சொல்வது அவசரபடாதே! எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் என்பதுதான்.

      அடுத்த நாள் வகுப்பில் எடுக்க வேண்டிய பாடங்களுக்கு குறிப்பெடுத்து வைத்து கொள்வது போலதான் எல்லாம் செய்வார்கள்.
      ஊருக்கு போக வேண்டுமென்றால் எல்லாம் எடுத்து வைக்க, என்ன கொண்டு போக வேண்டும் என்பதை முன்பே எழுதி வைத்துக் கொள்வார்கள்.

      திட்டமிட்ட வாழ்வு அவர்களின் வாழ்வு.

      உங்கள் கருத்துக்கும், அஞ்சலிக்கும் நன்றி.



      நீக்கு
  20. அக்கா ஸாரிக்கா நீங்க அன்றே நாம் பேசும் போதே சொன்னீங்க இன்று நினைவுநாள் தேதிப்படி திதிப்படி டிசம்பர் 1 என்று....பதிவு பத்தி நான் யோசிக்காமலேயே இருந்துவிட்டேன் அக்கா. இதோ பார்த்து வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா ஸாரிக்கா நீங்க அன்றே நாம் பேசும் போதே சொன்னீங்க இன்று நினைவுநாள் தேதிப்படி திதிப்படி டிசம்பர் 1 என்று....பதிவு பத்தி நான் யோசிக்காமலேயே இருந்துவிட்டேன் அக்கா. இதோ பார்த்து வருகிறேன்//

      வாங்க வாங்க மெதுவா வாங்க

      நீக்கு
  21. சஷ்டி ஆறு நாளும் விரதம் இருந்து 36 தடவை சஷ்டி கவசம் தினம் படிப்பார்கள்.//

    என்ன அழகான ஒழுங்குமுறையான வாழ்க்கை முறை! எல்லா பாராயணங்களும் செய்து கடைபிடித்து...மாமாவுக்கு வணக்கங்கள்!

    இந்த 36 முறை கவசம் படிப்பது பற்றி சமீபத்தில் அறிந்தேன். அப்பாடலிலேயே கடைசியில் வருமே அதன் அர்த்தம் என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. //என்ன அழகான ஒழுங்குமுறையான வாழ்க்கை முறை! எல்லா பாராயணங்களும் செய்து கடைபிடித்து...மாமாவுக்கு வணக்கங்கள்!

      இந்த 36 முறை கவசம் படிப்பது பற்றி சமீபத்தில் அறிந்தேன். அப்பாடலிலேயே கடைசியில் வருமே அதன் அர்த்தம் என்று...//

      ஆமாம். நானும் மகளை குழந்தை உண்டாகி இருக்கும் போது அப்படி தினம் 36 முறை படித்தேன். அவள் சூரசம்ஹாரம் அன்று பிறந்தாள்.

      நீக்கு
  22. நீங்களும் மாமாவும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் அழகு. பத்ரிநாத், கைலைப் பயணம் எல்லாம் ...

    அக்கா மாமா எங்கும் போகவில்லை இதோ மேலே உள்ள ஊருக்குத்தன போயிருக்கிறார்.

    மகள் அனுப்பிய பாடல் நல்ல பொருத்தமான பாடல், அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அக்கா மாமா எங்கும் போகவில்லை இதோ மேலே உள்ள ஊருக்குத்தன போயிருக்கிறார்.//

      ஆமாம், அப்படித்தான் நினைத்து கொள்கிறேன்.

      //மகள் அனுப்பிய பாடல் நல்ல பொருத்தமான பாடல், அக்கா//

      ஆமாம், புது பாடல் போல அதுதான் எனக்கு தெரியவில்லை.

      நீக்கு
  23. நான் சொல்வேன் அடிக்கடி அவளிடம் உன் அப்பா இருப்பது போல நினைத்து தினம் உரையாடி கொண்டு இருப்பதால் தனிமையில் இருப்பது போல உணர்வு இல்லை கடவுள் நம் அருகில் இருப்பது போல நினைத்து கொள்வது போல உன் அப்பா என்னுடம் இருப்பதாய் நினைத்து கொள்கிறேன் என்று சொல்வேன். //

    சூப்பர் நல்ல மனநிலை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சூப்பர் நல்ல மனநிலை..//

      அதனால் தான் நான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இல்லையென்றால் உடைந்து போய் விடுவேன்.

      நீக்கு
  24. மகள் அனுப்பிய கவிதை வரி அருமை...ரொம்ப ரசித்தேன். மகளுக்கு அப்பாவின் மீதான் மதிப்பும் அன்பும்...அப்படிப்பட்ட நல்ல தந்தை. எல்லாருக்கும் இப்படியான தந்தை கிடைப்பது அரிது. நல்ல பிணைப்புடனான குடும்பம் என்பதற்கானது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகள் அனுப்பிய கவிதை வரி அருமை...ரொம்ப ரசித்தேன். மகளுக்கு அப்பாவின் மீதான் மதிப்பும் அன்பும்...அப்படிப்பட்ட நல்ல தந்தை. எல்லாருக்கும் இப்படியான தந்தை கிடைப்பது அரிது. நல்ல பிணைப்புடனான குடும்பம் என்பதற்கானது//

      அப்பா, மகள்,மகன் மூன்று பெரும் சேர்ந்தால் நிறைய பெசுவார்கள் என்னை கண்டு கொள்ள மாட்டார்கள். நான் தேவையில்லை உங்களுக்கு என்று அவர்களிடம் சில நேரம் கோபித்து கொள்வேன். அவர்கள் பேசும் போது இடையில் பேசினால் கூட பிடிக்காது பேசி கொண்டு இருக்கிறேன் இல்லையா என்பது போல பார்ப்பார்கள்.

      நீக்கு
  25. மாமா சென்ற கோவில்கள் குறிப்புகள் அவரது ஆர்வத்தையும் நேர்த்தியையும் சொல்கிறது. அதுவும் படம் போட்டு எழுதியிருப்பதும் சிறப்பு.
    குறிப்புகள் ஒரு சில வாசிக்க முடிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாமா சென்ற கோவில்கள் குறிப்புகள் அவரது ஆர்வத்தையும் நேர்த்தியையும் சொல்கிறது. அதுவும் படம் போட்டு எழுதியிருப்பதும் சிறப்பு.
      குறிப்புகள் ஒரு சில வாசிக்க முடிகிறது.//
      உங்கள் அனைத்து கருத்துக்களூக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  26. இப்போது கூகுளில் தேடினால் கோயில் இருப்பிடம் செல்லும் தூரம் எந்த மாநிலம் என்று எல்லா விவரங்களும், தல வரலாறும் வந்து விடும் அப்போது எல்லாம் இந்த புத்தகத்தை வைத்து கொண்டு தான் போவார்கள்.//

    ஆமாம் அக்கா அப்போது போவதற்கு இப்படியான வரைபடங்கள் மேப். நம் வீட்டிலும் இருந்தது. மாமாவின் ஆர்வம் அளப்பற்கரியது. நேர்த்தியும். பிரமிப்பு.

    சிவஸ்தல மஞ்சரி படம் ரொம்ப விளக்கமாகப் பயனுள்ளதாக இருக்கு ரயில் பாதை கற்சாலை நதிகள் என்று.

    இப்ப கூகுள் காட்டினாலும் இப்படிக் குறிப்புகள் பார்த்து எழுதி வைத்துக் கொண்டு போய்விட்டு வந்து எழுதுவது என்பதெல்லாம் நல்லதொருவிஷயம். அதுவும் தேதி வருடம் வாரியாக....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமாம் அக்கா அப்போது போவதற்கு இப்படியான வரைபடங்கள் மேப். நம் வீட்டிலும் இருந்தது. மாமாவின் ஆர்வம் அளப்பற்கரியது. நேர்த்தியும். பிரமிப்பு.//

      மாநில வரைபடங்கள், ரயில் பாதைகள் மேப் முன்பு விற்பார்கள். என் வீட்டிலும் மதுரை ஊரின் மேப் இருக்கும்.

      //சிவஸ்தல மஞ்சரி படம் ரொம்ப விளக்கமாகப் பயனுள்ளதாக இருக்கு ரயில் பாதை கற்சாலை நதிகள் என்று.//

      ஆமாம்.

      //இப்ப கூகுள் காட்டினாலும் இப்படிக் குறிப்புகள் பார்த்து எழுதி வைத்துக் கொண்டு போய்விட்டு வந்து எழுதுவது என்பதெல்லாம் நல்லதொருவிஷயம். அதுவும் தேதி வருடம் வாரியாக....//

      ஆமாம், இப்போது யார் வீட்டுக்கு போக முகவரி கேட்டால் அவர்கள் இருபிட லோக்கஷேன் ஷேர் செய்து விடுகிறார்கள் அதை வைத்து கொண்டு கஷ்டபடாமல் போய் விடுகிறோம்.

      நீக்கு
  27. சென்ற கோவில்கள் பற்றி ரொம்ப அழாகாகப் படங்களுடன் குறித்து வைத்திருப்பது மிகவும் சிறப்பு. மாமாவைப் பற்றி ரொம்ப வியக்க வைக்கிறது. மதிப்பும்...

    அத்தனையும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா....

    மாமாவின் குறிப்புகளை பார்த்த போது, எனக்கு என் பழைய நினைவுகள் வந்தன.

    எனக்கும் இந்தப் பழக்கம் முன்பு இருந்தது. டயரி போன்று குறித்தும் வைத்திருந்தேன். இந்த அளவிற்கு விரிவாக இல்லை என்றாலும், பார்த்த கோவில்கள் இடங்கள், அங்கு என்ன பார்த்தோம் அமைப்பு, எப்படி இருந்தன, அருகில் நதி, குளம் இருந்தால் அதன் பெயர் எல்லாம் தேதி வருடம் போட்டு, எப்படிச் சென்றோம் போன்றவற்றை விரிவாக இல்லாமல் நம் நினைவுக்கு வருவது போன்றுசுருக்கமாக..........அந்த டயரிகள் எல்லாம் பல வீடுகள் மாறியதில் காணாமல் போய்விட்டன....இப்போது இணையம் ....என்பதால் குறிக்கும் பழக்கம் இல்லை. பதிவு எழுதும் போது வருவதுதான். மொபைல் ஃபோட்டோக்களைப் பார்த்தால் நேரம் தேதி தெரிந்துவிடுகிறதே!!!

    பதிவை மாமாவின் நேர்த்தியையும், ஒழுங்கு முறையையும் வியந்து படித்து ரசித்தேன், கோமதிக்கா.

    மாமா உங்களோடுதான் இருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. மனதை நெகிழ்ச்சியடைய வைத்தது.

    உங்கள் மனதிற்கு இது இதமாக இருந்திருக்கும் கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மனதை நெகிழ்ச்சியடைய வைத்தது.

      உங்கள் மனதிற்கு இது இதமாக இருந்திருக்கும் கோமதிக்கா.//

      உங்களுடன் பகிர்ந்து கொண்டது மனதுக்கு இதம்தான் கீதா.

      நீக்கு
  29. //சென்ற கோவில்கள் பற்றி ரொம்ப அழாகாகப் படங்களுடன் குறித்து வைத்திருப்பது மிகவும் சிறப்பு. மாமாவைப் பற்றி ரொம்ப வியக்க வைக்கிறது. மதிப்பும்...

    அத்தனையும் ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா....//
    நன்றி.

    //மாமாவின் குறிப்புகளை பார்த்த போது, எனக்கு என் பழைய நினைவுகள் வந்தன.

    எனக்கும் இந்தப் பழக்கம் முன்பு இருந்தது. டயரி போன்று குறித்தும் வைத்திருந்தேன். இந்த அளவிற்கு விரிவாக இல்லை என்றாலும், பார்த்த கோவில்கள் இடங்கள், அங்கு என்ன பார்த்தோம் அமைப்பு, எப்படி இருந்தன, அருகில் நதி, குளம் இருந்தால் அதன் பெயர் எல்லாம் தேதி வருடம் போட்டு, எப்படிச் சென்றோம் போன்றவற்றை விரிவாக இல்லாமல் நம் நினைவுக்கு வருவது போன்றுசுருக்கமாக..........அந்த டயரிகள் எல்லாம் பல வீடுகள் மாறியதில் காணாமல் போய்விட்டன....இப்போது இணையம் ....என்பதால் குறிக்கும் பழக்கம் இல்லை. பதிவு எழுதும் போது வருவதுதான். மொபைல் ஃபோட்டோக்களைப் பார்த்தால் நேரம் தேதி தெரிந்துவிடுகிறதே!!!//

    ஆமாம்.

    //பதிவை மாமாவின் நேர்த்தியையும், ஒழுங்கு முறையையும் வியந்து படித்து ரசித்தேன், கோமதிக்கா.

    மாமா உங்களோடுதான் இருக்கிறார்.

    கீதா//

    பதிவை ரசித்து படித்து ஆறுதல் அளித்து , பல கருத்துக்கள் கொடுத்தமைக்கு நன்றி கீதா .

    பதிலளிநீக்கு