புதன், 1 மே, 2019

சாமானியரின் குரல்




ஒரு பொருள் உற்பத்தி ஆகி அது சந்தைக்கு விற்பனைக்கு வருவதற்குள் அவர்கள் படும்பாடுகள், விற்பனைக்கு வரும்போது மக்கள் ஆதரவு இல்லை என்றால் அதனால் அவர்கள் படும் வேதனைகள், இவைதான் இந்தப் பதிவில்.

புதிய தலைமுறையில்  ஞாயிறு மாலை சாமானியரின் குரல் என்று பாடுபடும் தொழிலாளிகளைப் பற்றி வைப்பார்கள். அதில் ஒரு நாள் பனை ஓலையில் விசிறி செய்யும் தொழிலாளிகள் பற்றி பார்த்த காட்சிகளின் தொகுப்பு.
சிறு குழந்தைகளும் இந்த தொழில் செய்கிறார்கள்.


கல்லூரி செல்லும் பெண்  காலை கல்லூரிக்கு செல்லும் முன்னும், மாலை வீடு வந்த பின்னும் இந்த வேலையைச் செய்வார்களாம். தன் படிப்புக்கு உதவியாக இருக்கிறது இதில் வரும் வருமானம் என்கிறார்.

நாள் முழுவதும் செய்தாலும் கூலி குறைவுதான் என்கிறார் இவர்

விசிறிக்கு சாயம் முக்கி  விசிறியின் ஓரம்  அழகுபடுத்தும் கைகள் காய்த்து போய் இருக்கிறது

ஒரு விசிறிக்கு இரண்டு ரூபாய் கிடைக்கும் என்கிறார்

ஓலைகளை வாங்கி வந்து அதை அழகாய் கத்திரித்து  கொடுப்பது இவர் வேலை

சாயம் முக்காமல் வேலைபாடுகள் செய்யாமலும் விற்கலாம்  ஆனால் மக்கள் அழகுபடுத்தினால்தான் வாங்குவார்கள்.
எல்லாம் முடிந்து விற்பனைக்கு  வீடு வீடாய்க் கொண்டு போய் விற்கப் போனால் அவர்கள் பேசும் பேரம் இருக்கே! என்ன சொல்வது என்கிறார்.

வீடு தேடி வரும் பொருட்களைப்  பேரம் பேசும் மக்கள் பெரிய பெரிய மால்களில் அவர்கள் சொல்லும் விலையைக் கொடுத்து வாங்கி வருவார்கள்.

வீடு தோறும் மின்சாரம், மின்சாரம் நின்று போனால்  இன்வெர்ட்டர் பயன்பாடு இப்படி இருக்கும்போது இந்த விசிறியை வாங்க ஆட்கள் குறைவே.
இப்போது மக்களிடம் வசதி வாய்ப்பு பெருகி விட்டது குழந்தைகள் பிறக்கும் போதே மின்விசிறி, ஏசி இல்லாமல் தூங்கமாட்டான் என்று பெரியவர்கள் பெருமைப் படுவதை கேட்க முடிகிறது.

இவர்கள் படும் இன்னல்களைப் பார்த்தாவ்து வீட்டுக்கு விற்க வரும் விசிறியை இரண்டு வாங்கிப் போடுங்கள், எவ்வளவோ செலவு செய்கிறோம், இரண்டு விசிறி வாங்கிப் போடுவதால் நாம் குறைந்து விட மாட்டோம்.

கோடையில் வரும்   திருவிழா சமயம் விசிறி தானம் செய்வார்கள்.இந்த முறை வந்த சித்திரைத் திருவிழாவில்  தேர்தல் சமயம் என்பதால் அன்பளிப்புகள் தடை செய்யப்பட்டதால் மக்கள் விசிறி தானம் செய்யமுடியவில்லை.

மதுரை சித்திரை திருவிழாவில் விசிறி விற்ற முதியவர்(தென்னை ஓலை விசிறி)

மாயவரத்தில் ஒரு    தையல் டீச்சர் திருப்பதிக்கு அலங்கார விசிறி புரட்டாசி மாதம் செய்து கொடுப்பார்கள்.

இன்று தொழிலார்கள் தினத்தில் இந்த விசிறி செய்பவர்களைப் பற்றிப்  பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

மீள்பதிவாக கீழே    2013 ல் பகிர்ந்த பதிவு::- 

மே  1 ஆம் தேதி தொழிலாளர் தினம். 

அனைத்துத்  தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  உழைப்பாளிகள் ஆன உழவர்களை வள்ளுவர் போற்றுகிறார் :-

//சுழன்றுமேர்ப் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை.//

எந்தத் தொழில் செய்தாலும் அதைத்  தெய்வமாகப் போற்றி,  தன்
திறமையைக் காட்டி முன்னேற வேண்டும் என்று சொல்வார்கள். அதைப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அழகாய்ப் பாடலாக்கி வைத்து இருக்கிறார்.

அவர் புரிந்த தொழில்கள் பல! முதலில் உழவுத் தொழில்.
17 தொழில்களில் ஈடுபட்டு இருக்கிறார்.
 இதை ப, ஜீவானந்தம் அவர்கள், கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிவைத்து இருந்த கைக்குறிப்பை படித்துச் சொன்னது.
அவை ;
1.விவசாயி
2. மாடு மேய்ப்பவன்
3.மாட்டு வியாபாரி
4. மாம்பழ வியாபாரி
5.இட்லி வியாபாரி
6. முறுக்கு வியாபாரி
7. தேங்காய் வியாபாரி
8. கீற்று வியாபாரி
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
10. உப்பளத்தொழிலாளி
11. மிஷின் டிரைவர்
12.தண்ணி வண்டிக்காரன்
13.அரசியல்வாதி
14.பாடகன்
15,நடிகன்
16.நடனக்காரன்
17. கவிஞன்

இத்தனை தொழில் புரிந்த பட்டுக்கோட்டை அவர்களை இந்த தொழிலாளர் தினத்தில் நினைவுகூறலாம்.

அவர் பலதொழில்கள் பற்றிப் பாடி இருக்கிறார்.

தொழிலாளர் தினம் என்றால்,” செய்யும் தொழிலே தெய்வம்” பாடல் எல்லாவானொலியிலும் ஒலிபரப்புவார்கள்
.
இப்போது தொலைக்காட்சிகளிலும் இடம்பெறுகிறது
.
தொழில் செய்யும் போது தூங்ககூடாது என்பதை அழகாய்,” தூங்காதே தம்பி தூங்காதே” என்று பாடல் மூலம் சொல்லி இருப்பார். திரு எம்,ஜி,ஆர் அவர்கள் நாடோடி மன்னனில் பாடி, அவருக்குப் புகழ் சேர்த்த பாடல்.   விவசாயி எவ்வளவுதான் பாடு பட்டாலும் விவ்சாயிக்கு கையும், காலும் தான் மிச்சம் என பாடுகிறார், எத்தனை தொழிலாள்ர்களைப் பாடி இருக்கிறார். மிகவும் கேட்காத பழைய பாடல்களை தொகுத்து உங்களுக்கு  பகிர்ந்து இருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.
                                                                                                                                             
//செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்
          ------

                                                          உழைப்பு தேவை

//படிப்பு தேவை --- அதோடு
உழைப்பு தேவை--- முன்னேற
படிப்பு தேவை= அதோடு
 உழைப்பும் தேவை!

உண்மை  தெரியும்
உலகம் தெரியும்
படிப்பாலே --நம்
உடலும் வளரும்
தொழிலும் வளரும்
உழைப்பாலே---எதற்கும்  (படி)

பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள்
பலப்பல உண்டு --மன
பக்குவம் கொண்டு
மக்கள்முன்னேறக்
காரணம் ரெண்டு---அதுதான்
வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடுகட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத் தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும்தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி. நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிர் விவரம்கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி!--எதற்கும் (படி)

ஜனத்தொகை மிகுந்தாலும்
பசித்துயர் மலிந்தாலும்
பணத்தொகை மிகுந்தோர் --மேலும்
பணம்சேர்க்க முயல்வதாலும்
உழைத்தால் தான் பற்றாக்குறையை
ஒழிக்க முடியும்---மக்கள்
ஓய்ந்திருந்தால் நாட்டின்நிலைமை
மோசமாக முடியும்---- எதற்கும்     (படி)//

திரைப்படம்--- சங்கிலித்தேவன்.    1960

                                                 -----------------

            கரம் சாயா  விற்பவர்   
                                                           
//சாயா  சாயா கரம் சாயா கரம் சாயா
ஓரணாதான்யா சாப்பிட்டு போய்யா
ஒடம்பை பாருய்யா வாய்யா வாய்யா
வேலைக்கில்லாமே வீண்செலவாகும்
மூளைக்கு மருந்து சாயா
வேடிக்கையான ஜோடிக்கு சீமான்
ஜாலிக்கும் விருந்து சாயா.

வேளைக்கு வேளை  வீட்டுக்கு வீடு
வேண்டிய  நண்பன் சாயா
வெளியிலே அறையிலே  கடையிலே கப்பலிலே
சபையில் குடிப்பது சாயா ஏன்யா? ( கரம்சாயா)

கொழுத்துத் தேயிலே குளிரும் பனியிலே
கொழுக்கும் மலையிலே வெளைஞ்சுது;
கொறைஞ்ச வெலையிலே மிகுந்த சுவையிலே
குணமும், மணமும் நிறைஞ்சது

மேடையிலே பேசும் லீடரும் போலீஸ்
வீரரும் விரும்பிக் கேட்பது;
நாடகம் சினிமா நாட்டியமாடும்
தோழரும் வாங்கி சுவைப்பது
மூலையில் தூங்கும் சோம்பலும் நீங்கும்
ஏலமும் சுக்கும் கலந்தது;
இரவிலே பகலிலே ரயிலே, வெயிலிலே
ஏரோப் பிளேனிலே கிடைப்பது     (கரம்சாயா)//

படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
                                                          ------------------

                                     தாயத்து விற்பவர்
                                     ----------------------------      
ஒரு பாட்டில் தாயத்து விற்கும் தொழிலாளியிடம்
பணம் வருமானத்திற்கு ஏதாவது வழி இருக்கா இதிலே என்று கேட்கிறார்  ஒருவர்

அதற்கு தாயத்து விற்கும் வியாபாரி சொல்லும் பதில்:

//ஒடம்பை வளைச்சு நல்லா ஒழைச்சி பாரு - பாரு
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உக்கார்ந்து கிட்டு சேக்கிற பணத்துக்கு
ஆபத்திற்கு அது உனக்கெதுக்கு ?//

என்கிறார்.
திரைப்படம் மகாதேவி  வருடம்1957

நாங்க இதயமுள்ள கூட்டம் என்று சொல்லும்
வாசனை திரவியம் விற்பவர் பாடுவது:

//சட்டையிலே தேச்சுக்கலாம்
சகலருமே பூசிக்கலாம்
கைகுட்டையிலே நனைச்சுக்கலாம்
கூந்தலிலே  தெளிச்சுக்கலாம்.
கொஞ்சம் பட்டாலும் போதுமுங்க
வாடை பல நாள் இருக்குமுங்க//

திரைப்படம்-- சங்கிலித்தேவன் வருடம் 1960
                                            ------

நிழற்படம் எடுப்பவர் பாடும் பாட்டு

//காப்பி ஒண்ணு எட்டணா
கார்டு சைசு பத்தணா
காணவெகு ஜோரா யிருக்கும்
காமிராவைத்தட்டினா

பிள்ளைகுட்டி கூடநிண்ணு
பெரிதாகவும் எடுக்கலாம்
பிரியம்போல காசு பணம
சலிசாகவும் கொடுக்கலாம்.

தனியாக வந்தாலும்
கூட்டமாக வந்தாலும்
சார்ஜ் ஒண்ணுதான் வாஙக- ஒரு
சான்ஸ் அடிச்சுப்பாக்க வாருங்க.//

திரைப்படம்
படித்தபெண் வருடம்-- 1956


இந்தப் பாடல்கள் எல்லாம்  எங்கள் வீட்டில் இருந்த  புத்தகத்திலிருந்து எடுத்தவை.

புத்தகத்தின் பெயர்

‘மக்கள்கவிஞர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்”

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்   பாடல்களை தொகுத்தவர் பி.இ. பாலகிருஷ்ணன் அவர்கள்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட் வெளியிட்டு இருக்கிறது. அந்தக்காலத்தில் அதன் விலை 10 ரூபாய்.

//உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கலகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும்
நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.//

----வேதாத்திரி மகரிஷி

                                                 வாழ்கவளமுடன்
===================================================

55 கருத்துகள்:

  1. இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள் சகோ
    உண்மை எவ்வளவோ செலவு செய்யும் நாம் இவர்களின் கஷ்டங்களை உணர்ந்து பார்ப்பதில்லை நல்லதொரு சிந்தனையை தூண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      எவ்வளவோ செலவு செய்யும் நாம் இவர்களுக்கு உதவ முடிவது ஒரு மன ஆறுதலை தரும் விஷயம் இல்லையா?

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  2. இவர்களைப்பற்றிப் படிக்கும்போது மனது கனத்துத்தான் போகிறது. சிறுவயதில் பனைவிசிறியை உபயோகப்படுத்தியது ஞாபகத்துக்கு வருகிறது.

    விரைவில் இந்தத் தொழிலும் நசியும். எல்லோரும் ஃபேனுக்கு மாறிவருவதால். பாவம்தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
      இவர்கள் படும் பாட்டைப் பற்றி அவர்கள் தொலைக்காட்சியில் சொன்ன போது மனம் கனத்துத்துதான் போனது நிறை அவர்கள் சொன்னதை குறிப்பு எடுத்து வைத்து இருந்தேன் , பொறுமையாக போட எண்ணிய பதிவு இன்று அவசர அவசரமாய் போடு படி ஆகி விட்டது வீட்டுக்கு வந்த விருந்தினர்களால் அவர்களுக்கு மதிய உணவு தயார் செய்ய வேண்டி இருந்தது, மாலை வரவேற்பு, நாளை திருமணம் .திருமணத்திற்கு வரும் உறவினர் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள்.

      பாட்டரியில் இயங்கும் மினி மின்விசிறியுடன் தான் குழந்தைகளிய வைத்து இருப்பவர் பயணம் செய்கிறார்கள்.

      நீக்கு
  3. இன்னொன்று... நாம் பெரும்பாலும் எளியவர்களிடம்தான் பேரம் பேசுகிறோம். அதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இதுவும் தவறான பழக்கம்தான்.

    என் மாமனார் என்னிடம் எப்போதும் சொல்வது, 10-20 ரூபாய் அதிகமாக ஆட்டோகாரரிடம் கொடுத்தால் அவர் வீடு கட்டிவிட மாட்டார். காய்கறிக்காரர்கள் கொஞ்சம் ஜாஸ்தி விலை சொன்னால், நமக்குப் பணம் இருக்கும்போது கொடுப்பதில் என்ன தவறு என்பார்.

    உழைப்பாளர் தினத்தில் நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மாமனார் சொல்வது போலதான் நானும். இவர்களை போல வீட்டுக்கு தலையில் சுமந்து வந்து பொருட்களை விற்பவர்களிடம் பேரம் பேச மாட்டேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. அருமையான தகவல்கள்! காலஞ்சென்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு உழைப்பாளர் தினத்தில் அழகான சமர்ப்பணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
      கல்யாணசுந்தரம் அவர்கள் பாடிய ஆளவு யாரும் உழைப்பாளர்களை பற்றி பாடவில்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. விசிறிபற்ரிய விவரிப்பு அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. சிறுவயதில் சன்னா ஜோர் கரம் என்று என்று பாடிக்கொண்டே பட்டாணி விற்பவர் ஏனோ நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு பழைய நினைவுகள் வந்தது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. தொழிலாளர் தின வாழ்த்துகள். பதிவு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வள்முடன்
      தொழிலாளர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

      நீக்கு
  8. எங்கள் வீட்டிலும் இரண்டு பனையோலை விசிறிகள் இரண்டு எடுக்கத் தயாராய் எங்காவது நீட்டிக் கொண்டிருக்கும். அவசரத்துக்கு உதவும். எங்கள் வீட்டில் மட்டும் அல்ல, எல்லார் வீட்டிலும் அப்படி இருக்கும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தலைவலி குறைந்து விட்டதா?
      எங்கள் வீட்டில் தென்னை ஓலை விசிறி, பனை ஓலை விசிறி எல்லாம் இருந்தது.
      இப்போது இல்லை. அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்க்கும் போது திருவிழாவில் வாங்க வேண்டும் என்று நினைத்தேன். எல்லோர் வீட்டில் வீட்டின்கூறையில் செருகி வைத்து இருப்பார்கள் முன்பு. அப்புறம் அலமாரி மேல் இருக்கும் எடுக்க கை வாகாய்.
      இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.

      நீக்கு
  9. உண்மைதான். மால்களில் சத்தமில்லாமல் வாங்கும் நாம் இவர்களிடம் பேரம் பேசி வாங்குவோம். அவர்கள் ஏதோ சரியாய் கணித்து விலை வைத்திருக்கிறா மாதிரியும், இவர்கள் பேராசைப் படுவது போலவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் ஸ்ரீராம். மால்களில் ஒன்றும் சொல்லமுடிவது இல்லை.

      இவர்களிடமே குறைந்த வில்லைக்கு வாங்கி பெரிய விள்மபரம் செய்து அதிக விலைக்கு நம் தலையில் கட்டுவார்கள் அவர்கள்.
      நமக்கு தெரிந்தும் தப்பு செய்கிறோம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. உழைப்பாளர் தின நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. எங்க வீட்டில் எப்போதும் தென்னை ஓலை விசிறி இருக்கும். இப்போவும் பனை ஓலை விசிறிகள் வைச்சிருக்கோம்.ஹோமம், யாகங்கள் செய்கையில் பயன்படும்! இந்தத் தொழிலைச் செய்ய இப்போது இவர்கள் இருக்கிறார்கள். வரும் நாட்களில் என்ன செய்வது என நினைத்தால் இளம்பெண்களும், குழந்தைகளும் கூட ஆர்வத்துடன் கற்பது பாராட்டத் தக்கதே!

    பட்டுக்கோட்டையார் பாடல் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      ஆமாம், முன்பு எல்லோர் வீடுகளில் தென்னைஓலை , பனை ஓலை விசிறிகள் இருக்கும்.
      வீடுகளில் ஹோமம் , யாகங்கள் செய்ய பயன் படும்தான்.

      பனை ஓலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் வாங்க தான் ஆள் இல்லை.

      பட்டுக்கோட்டையார் பாடல்கள் எம்.ஜி.ஆர் சினிமாக்களில் நிறைய பாடி இருக்கிறார்.


      திருடாதே பாப்பா, திருடாதே ! சின்னபயலே சின்னபயலே சேதி கேளடா, சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பல் இல்லாமல் என்ற பாடல்கள் பிரபலம்.
      செய்யும் தொழிலே தெய்வம் பாடல் அந்தக் கால வானொலியில் அடிக்கடி வைப்பார்கள்.

      எங்கள் வீட்டில் இவரின் பாடல் புத்தகம் இருப்பதால் அதைப் பார்த்து இங்கு பகிர்ந்தேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. பாடல்கள் அனைத்தும் சிறப்பு...

    அதை விட காட்சிகளின் தொகுப்பு மிகவும் சிறப்பு...

    தொழிலாளிதின வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தொழிலாளர் தின வாழ்த்துகள்.

    செய்திகளின் தொகுப்பு அருமை.

    அந்நாளில் இரண்டு ஓலை விசிறிகள் எப்போதும் வீட்டிலிருக்கும். தேடி வாங்கும் ஆர்வம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
    தொழிலாளர் தின வாழ்த்துக்களுக்கு நன்றி.

    உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  16. ஆ கோமதி அக்கா உழைப்பாளர் தினத்தில் நீங்களும் நிறைய உழைத்துப் பெரிய போஸ்ட் போட்டிருக்கிறீங்க...

    உண்மைதான் சிறிய தொழிலாளிகளை மக்கள் ஏமாத்தி விடுகின்றனர்.
    அழகிய பாடல்களுடன் கூடிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      நான் பழைய பதிவும், புதியபதிவும் கொடுத்து கொஞ்சம் உழைத்தேன்.
      இன்று , நேற்று இரண்டு நாளும் உறவினர் திருமணவிழா அதனால் இப்படி.

      நீக்கு
  17. பனை ஓலை விஸிறி செய்து போன வருடம் ஒருவர் ஒரு லட்சம் உழைத்தாராம்.. முரசொலியிலோ எங்கோ அவரின் பேட்டியும் வந்ததாம். தனக்கு ஒரு விசிறிக்கு 10 ரூபாய் கிடைக்குமாம் ஆனால் கடைக்காரர் 20 ரூபாய்க்கு விற்கிறாராம் அதை.
    2 ரூபாய் என்பது பொய்யாக அல்லது பல வருடங்களுக்கு முந்திய தகவலாக இருக்கக்கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, அந்த அம்மாவிற்கு விசிறி செய்ய இரண்டு ரூபாய் கூலி கொடுத்துஇருப்பார், வ்ண்ணம் ஏற்றுபவருக்கு பணம் கொடுத்து இருப்பார். ஓலையை ஓரம் வெட்டி அழகிய வேலைபாடு செய்ய பணம் கொடுத்து இருப்பார். தனி தனியாக கூலி கொடுத்து வேலை வாங்கி மொத்தமாய் எடுத்து போய் 10 ரூபாய்க்கு விற்று இருப்பார்.
      அவர்கள் அதை 20 ரூபாய்க்கு விற்று இருப்பார்கள்.

      பனைமரத்தில் ஏறுபவருக்கு கூலி கொடுத்து ஓலை இறக்கி கொண்டு வர வேண்டும், வண்டிக்கூலி கொடுக்க வேண்டும்.

      நிறைய பேர் உழைப்பு ஒரு விசிறி என்றார்கள் அதிரா.

      அம்மா ஊருக்கு போய் விட்டார்களா?

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. அதில் அவரே அனைத்தும் செய்கிறார்... ஓலை வெட்டுவதிலிருந்து முடிவுவரை... அதனால முழுக்காசும் கிடைக்கிறது போலும்... வீடியோப் பார்த்தேன்.

      இல்லைக் கோமதி அக்கா, அம்மா யூன் எண்ட் வரை நம்மோடு நிற்பா.

      நீக்கு
    3. அதிரா, அம்மாவுடன் மகிழ்ந்து இருங்கள்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரி

    உழைப்பாளர் தினத்தன்று நல்ல பதிவை தொகுத்து தந்திருக்கிறீர்கள். விசறி செய்யும் உழைப்பாளர்கள் படங்களை தொகுத்து மிகவும் அழகாக அதற்கு வார்த்தைகளை எழுதி தொகுத்து மிக அருமையாக அமைந்துள்ளது பதிவு. நாங்களும் திருமங்கலத்தில் இருக்கும் வரை பனை ஓலைவிசிறி, தென்னம்ஓலை விசிறி என ஆண்டுதோறும் வாங்கி பயன்படுத்தி வந்தோம். விசிறிக்காற்றின் சுகமே தனிதான். மிகுந்த வெயிலின் போது விசிறியில் ஒருகை தண்ணீர் தெளித்து விசிறிக்கொண்டால் சில்லென காற்று வரும். மின்விசிறி இல்லாத அந்த காலத்தில் இந்த விசிறிகள் மிகவும் உபயோகித்தோம்.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடல்களை நினைவு கூர்ந்தது மிக அருமை. அனைத்து பாடல்களும் மிக நன்றாக உள்ளது. "கரம் சாயா"விற்பவர் பாடும் பாட்டும், "நிழற்படம்" எடுப்பவர் பாட்டும் புதிது. மிக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி. நேற்று வர இயலவில்லை. அதனால் இன்று தாமத வருகை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      ஆமாம் , அந்தக்காலத்தில் வெட்டிவேர் விசிறி கிடைக்கும் கோடைகாலத்தில்.
      அதை நீங்கள் சொல்வது நனைத்து விசிறி கொள்வார்கள். ஜன்னலுக்கு வெட்டிவேர் தட்டி மறைப்புக்கு போடுவார்கள், அதன் மேலும் தண்ணீரை விட்டு கோடை வெப்பத்தை தனித்துக் கொள்வார்கள்.

      பட்டுக்கோட்டை பழைய பாடல்களில் யாரும் கேட்காத பாடல்கள் நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள்.

      அந்த புத்தகத்தில் இருந்ததால் பகிர்ந்து கொண்டேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. அன்பு கோமதி,
    மிக மிக அருமையான பதிவு.
    பட்டுக்கோட்டையார் இத்தனை தொழில்கள் செய்திருக்கிறாரா.
    இந்த அருமையான புத்தகம் உங்கள் வீட்டில் இருப்பதே பெருமை.

    அறிவு புகட்டும் இத்தனை பாடல்களைத் தினமும் கேட்டாலும் தவறில்லை.

    விசிறி பழைய நாட்களில் இல்லாத இடமே இல்லை. பாட்டி போட்டோவில் கூட தென்னை விசிறி வைத்திருப்பார். என்ன சுகம் அந்தக் காற்றில்.

    அருமையான படங்கள்.
    உழைப்பவர்கள் வாழ்வு உயரட்டும்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
    பல தொழில்கள் செய்து இருப்பதாய் தெரிகிறது அக்கா.
    அருமையான பாடல்கள்தான் அக்கா பட்டுக்கோட்டை பாட்டுக்கள்.
    அந்தக் காலபாட்டிகள் விசிறி மட்டை இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

    ஒரு நாள் அந்த படம் இருந்தால் பதிவில் போடுங்கள்.

    உழைப்பவர்கள் வாழ்வு உயரட்டும் அக்கா.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. //ஒரு பொருள் உற்பத்தி ஆகி அது சந்தைக்கு விற்பனைக்கு வருவதற்குள் அவர்கள் படும்பாடுகள்,//

    பொருள் உற்பத்தி செய்வோர் சந்தை விலைக்கு அன்னியப்பட்டவர்கள். நம் நாட்டின் தலையெழுத்து இது.

    திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் கிலோ கால் ருபாய்க்கு வாங்கப்படும் வெண்டைக்காய் சென்னையில் கிலோ 40 ரூபா என்று விற்கப்படுகிறது.

    கேட்டால் 5 கைகள் மாறி வருகிறது. அவர்கள் சம்பாதிக்க வேண்டாமா என்பார்கள். இடைத் தரகர்களைக் குறைக்க யாரும் எந்த வணிக சங்கமும் சம்மதிப்பதில்லை. இந்த 5 அடுக்கு வணிக நிலைப்படிகள் தாம் எல்லா விலைவாசி ஏற்றத்திற்கும் காரணம்!

    உங்களுக்கு அமெரிக்க வால் மார்ட் பற்றியும் அதன் நேரடி விவசாயக் கொள்முதல் பற்றியும் தெரியும். இந்தியாவில் நிறைவேற்ற முடியாத கனவு இது. அந்தக் காலத்தில் வாரத்தில் ஒரு நாள் சாந்தை என்ற ஒன்றிருந்தது. வார சந்தை என்று கூட சொல்வார்கள். அது எங்கே போயிற்று?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது போல் விவாசாயிகள் நேரடி விற்பனை செய்தால் பிழைக்கலாம்.
      உழவர் சந்தை, வார சந்தை மதுரையில் நன்றாக நடக்கிறது.
      எங்கள் வீட்டுக்கு அருகில் வார சந்தை உண்டு, வெள்ளிக் கிழமை அன்று.
      ஒரு வாரத்திற்கு தேவையானதை வாங்கி கொள்ளலாம்.
      எல்லாம் மிக அருமையாக இருக்கும்.

      உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. அன்றைக்கே இந்தப் பதிவைப் படித்தேன்.. கருத்துரை என்ன ஆயிற்று?..

    கருத்துரை எழுதிய நினைவில் சென்று விட்டேனோ!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      கருத்துரை இன்று தான் வந்து இருக்கிறது.
      கருத்துரை எழுதியதாய் நினைத்து இருப்பீர்கள்.

      நீக்கு
  23. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இப்படி விசிறி செய்வதற்கும் கட்டில் நாடா நெய்வதற்கும் கைத்தொழில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்..

    இன்னும் நினைவில் இருக்கிறது..

    கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்..
    கவலை உனக்கிலை ஒத்துக் கொள்..

    என்று பாட்டோடு பண்பாட்டையும் சொல்லிக் கொடுத்தார்கள்...

    இன்றைக்கு அப்படியெல்லாம் கிடையாது...

    மது அருந்தும் காட்சிகள் வந்தால் மது உடல் நலத்துக்குக் கேடு என்று திரையில் அறிவிப்புச் செய்கிறார்கள்..

    ஆனல் விஜய் என்றொரு தொலைக்காட்சியில் காமெடி என்று நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மேடையில் மது அருந்துவது மாதிரியும் குடித்து விட்டு ரகளை செய்வது மாதிரியும் காட்டுகிறார்கள்...

    இன்னும் சில அயோக்கியத் தனங்களையும் ஆபாசப் பேச்சுகளுடன் காட்டுகிறார்கள்..

    ஆக்..ஆக்.. ஆக்.. என்று ஒரு பெண் சிரிக்கிறாள்..
    வேலையற்ற மற்றவர்கள் வெட்டிக் கூச்சலிடுகின்றார்கள்...

    பொது நாகரிகத்தைக் கீழ் நிலைக்குச் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்...

    இந்த நாகரிகம் எத்தனை எத்தனைக் கைத் தொழில்களை அழித்திருக்கிறது...

    ஒரு காலத்தில் தாய் தந்தையர் தாம் கற்ற செல்வத்தைத் தாம் பெற்ற செல்வங்களிடம் ஒப்படைத்தார்கள்...

    இன்றைக்கு டாக்டர் மகன் டாக்டராக பொறியாளரின் மகன் பொறியாளராக அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி ஆகின்றான்..

    வம்சாவளியாக தொலைக்காட்சியும் மகன் கைக்குப் போகின்றது...

    வேலையற்ற வெட்டிக் கூட்டத்தின் மகன் மட்டும்
    அதே வெட்டிக் கூட்டத்தில் ஓரங்கமாகின்றான்..

    இன்னும் சொல்லலாம்... இப்போது வேண்டாம்!...

    பதிலளிநீக்கு
  24. பழைய பாடத்திட்டத்தில் கைதொழில் உண்டு.
    தக்களி நூற்பது, மேட்டித்துணியில் தையல் வேலை
    போன்றவை உண்டு.

    இப்போது இருந்தாலும் பாடம் நடத்த மற்ற ஆசிரியர்கள் அந்த வகுப்பை வாங்கி கொள்கிறார்கள். நீதி போதனை வகுப்பில் நிறைய கற்றுக் கொண்டோம்.மாலை சிறு தோட்டம் அமைத்தல் உண்டு. தண்ணீர் செடிகளுக்கு விட்டு விட்டுதான் வீட்டுக்கு போக முடியும். பாத்திகட்டுதல் கீரை விதை விதைத்தல், அவற்றை எறும்பிடமிருந்து காப்பாற்ற சாம்பல் தெளித்தல் என்று நிறைய கற்றோம்.

    நிறைய இழப்புகள் இப்போது உள்ள பிள்ளைகளுக்கு.

    நீங்கள் சொல்வது போல் தொலைக்காட்சியில் நிறைய வேண்டாதவை வருகிறது.
    நல்லதை மட்டும் பார்த்து விட்டு போக வேண்டும்.

    கோடை விடுமுறையில் அலை பேசி பார்க்காதீர்கள் விளையாடுங்கள் விளையாட்டுப் பொருட்கள் இங்கே கிடைக்கும் வாங்கி விளையாடுங்கள் என்று விளம்பரம் வருது.

    உங்கள் ஆதங்கம் புரிகிறது. நாளைய தலைமுறைக்கு நல்லது கெட்டதை புரிந்து கொள்ளும் திறனை தாய், தந்தையர் மட்டும் இல்லை சமூகமும் தர வேண்டும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  25. அருமையான பதிவு. டிவியில் இருந்து எடுத்துப் போட்டு இருக்கும் படங்களும் நன்றாக இருக்கிறது. ஆமாம் இம்மக்கள் மூலதனம் போட்டு செய்துவிட்டு அப்புறம் விற்கவில்லை என்றால் எத்தனை கஷ்டம் இல்லையா? உழைப்பும் அவர்களது தினசரி வாழ்வின் ஜீவாதாரமும் பாதிக்கப்படுகிறதே. உழைப்பாளர் தினம் வாழ்த்துகள் சொல்வதுடன் இப்படியான மக்களிடம் பொருட்களை வாங்குவோம். நல்ல பதிவு

    துளசிதரன், கீதா

    கீதா: கோமதிக்கா நான் கூடியவரை இது போன்ற மக்களிடம் தான் பொருட்கள் வாங்குவது. பேரம் பேச மாட்டேன். அதீதமாகச் சொல்கிறார்கள் அல்லது ஏமாற்றுகிறார்கள் என்று தோன்றினால் மட்டுமே அங்கிருந்து நகர்வது இல்லை என்றால் அவர்களிடம் தான் வாங்குவது என்ற கொள்கை உண்டு. நான் கூடியவரை பெரிய கடைகளைத் தவிர்ப்பதும் இதற்காகத்தான்.

    காய்களை சந்தையில் போய் வாங்குவதன் காரணமும் பாவம் அந்த எளிய மக்கள் அவர்களும் பிழைக்க வேண்டாமா குழந்தைகள் படிக்க வேண்டாமா என்பதால்.

    நல்ல பதிவு அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கும், உங்கள் கருத்துக்கும் நன்றி.

      வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      ஒரு சிலர் ஏமாற்றுவார்கள் தான். நமக்கே தெரிந்து விடும். அந்த மாதிரி உள்ளவர்களிடம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் தான்.


      எளிய மக்கள் விற்கும் காய்கள் வாரசந்தையில் நன்றாக இருக்கும் கீதா.
      அவர்கள் குறைந்த லாபம் வைத்து தான் விற்பார்கள்.

      நீக்கு
  26. பள்ளியில் சில கைத்தொழில்கள் கற்றதுண்டு.

    வீட்டிலிருந்து செய்து கொண்டுவந்து விற்பவர்களிடமும் வாங்குவதுண்டு. சென்னையில் இருந்தவரை. இங்கு அப்படி யாரும் வருவதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளியில் கைத் தொழில் கற்றது நினைவு இருக்கிறதா இப்போதும்?
      பெங்களூரில் விழாக்காளுக்கு அழகு அழகாய் சீனீ மிட்டாய்கள், குங்குமம் வைக்க அழகான பொம்மைகள் எல்லாம் விற்பார்களே!
      கடையில் தான் கிடைக்கும் போல.

      நீக்கு
  27. இவர்களைப் பார்க்கும் போது மனம் என்னவோ செய்யும். பாவம் மக்கள் என்று தோன்றும். ரொம்பவே தோன்றும். இந்த எளிய மக்கள் என்று வாழ்வாதாரத்தில் மேலே வருகிறார்களோ அப்போதுதான் நாடு உருப்படும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கீதா எளிய மக்களின் வாழ்வாதாரம் உயரும் போது நாடு நலம் பெறும் என்பது உண்மைதான்.

      நீக்கு
  28. பட்டுக்கோட்டையார் பற்றியது மிக அருமை. அவர் தொழில்கள் பற்றி நிறையச் சொல்லியிருப்பார்.

    பள்ளியிலும் இதை ஒரு வகுப்பாக வைத்துக் கற்றுக் கொடுக்கலாம். கைத்தொழில் என்பது மிக மிக அவசியம். காந்திஜி கூட குடிசைத் தொழிலை வளர்க்க வேண்டும் என்று சொன்னவர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டுக்கோட்டையார் கைத்தொழில் பற்றி நிறைய பாடி இருக்கிறார்.
      சர்வோதாயா கடைகளில் குடிசை தொழில் செய்பவர்களிடமிருந்து தான் பொருட்களை வாங்கி விற்பார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  29. அருமையான தொகுப்பு மா...

    பல நாள் ஊர் சுற்றலுக்கு பின் இன்று தான் வலைப்பக்கம் வர முடிந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்.
      விடுமுறையில் குழந்தைகள், உறவுகளுடன் சுற்றுலா மகிழ்ச்சி தரும் விஷயம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  30. தினத்துக்கு ஏற்ற பகிர்வு.உழைப்பாளிகளை ஊக்குவிப்போம்.
    பனம் பொருட்கள் வாங்கி வைத்துள்ளோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி வாழ்க வளமுடன்.
      நலமா? பல காலம் ஆகி விட்டது உங்களை வலைத்தளம் பக்கம் பார்த்து.
      பெண் நலமா?

      பனை பொருட்கள் அங்கும் அழகாய் செய்வார்கள் தானே.
      பெரிய பனை ஓலை விசிறி எல்லாம் பெரிய வீடுகளில் இருக்குமே!
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  31. அருமையான பதிவு. எங்கள் வீட்டில் எப்போதும் பனையோலை விசிறி இருக்கும். கோடையில் எங்கள் குடியிருப்பின் காவலர்களுக்கும் வாங்கித்தருவேன். ஊரிலிருந்து வந்திருக்கும் மகள் குடும்பத்தோடு பிசியாக இருப்பதால் இப்போதுதான் ஒவ்வொரு பதிவாக படித்து வருகிறேன். தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் Bhanumathy Venkateswaran, வாழ்க வளமுடன்.
    உங்கள் கோடையில் உங்களின் கொடை சிறப்பு.
    மகள் குடும்பத்தோடு மகிழ்ந்து இருங்கள்.
    நேரம் கிடைக்கும் போது படிக்கலாம். பதிவு இங்கேதான் இருக்கும்.
    மன்னிப்பு எல்லாம் வேண்டாம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு