நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வருவோம்.
வீட்டில் வாங்கும் வாரஇதழ்களில் வரும் கதைகளை ஆர்வமுடன் படித்து அடுத்த வார இதழை எதிர்பார்த்த காலம் உண்டு.
மழை நேரம் வானொலி கேட்க முடியாது கரண்ட் கட், டிரான்ஸிஸ்டருக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு விடும் அதை வெயிலில் காய வைக்க வேண்டும்.
அப்போது எல்லாம் நாம் நாடுவது கதைப் புத்தகம் தான்.
படுத்துக் கொண்டு கடலையைக் கொறித்துக் கொண்டு கதை படிப்பது ஒரு சுகமான அனுபவம். அப்போது கதையில் ஆழ்ந்து விட்டால் (கதை திகில் நிறைந்த காட்சி அல்லது மர்மம் வெளிப்படும் சமயம் என்றால் ) அம்மா கூப்பிட்டாலும் கேட்காது.
இப்போது தொலைக்காட்சிப் பெட்டி, கணினி என்று நேரத்தைப் போக்கும் காலத்திலும் புத்தக வாசிப்பு இருப்பதும் படித்த படித்துக் கொண்டு இருக்கும் புத்தகங்களை ஒரு வாரம் பகிர நண்பர்களை அழைப்பதும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. (முக நூலில்)
என்னை இரண்டு பேர் அழைத்து இருக்கிறார்கள். வாசிப்பைச் சுவாசிப்பாய்
நேசிப்பவர்கள்.
ரேவதி நரசிம்மன் ( வல்லி அக்கா)
ஆதி வெங்கட்
இன்று முதல் நாள் பதிவாய் "ராஜாளி மடம்" கதைப் புத்தகம்.
என்னை அறியாமலே முதல் பகிர்வாய் கி.ரா. கோபாலன் அவர்கள் கதையைப் பகிர்ந்து இருக்கிறேன்.
வாசிப்பை ஊக்கப்படுத்தியவர்.
அவரைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து இருக்கிறேன்.
எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ள புத்தகம். வாசித்த புத்தகப் பகிர்வு என்ற போது இதைப் பகிர எண்ணம் வந்தது. 1952 ம் வருடம் கல்கியில் எழுதப்பட்ட கதை. தொடர்நாவல்.
நான் பிறக்கும் முன்பே வந்த கதை!
இந்த புத்தகம் எனக்கு ஒரு மாமி கொடுத்தார்கள். அவர்கள் வேறு ஊருக்குப் போவதால் ஒரு சில கதைப் புத்தகங்கள் கொடுத்தார்கள் வைத்துக் கொள்ள. அவர்கள் நினைவைச் சொல்லிக் கொண்டு. அது இப்போது எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியில் இருக்கிறது.
முன்பு பல காலங்களுக்கு முன் படித்த கதை. அதை எழுதியவரைப் பற்றி நீங்கள் கேட்டால் சொல்ல வேண்டுமே என்று இணையத்தில் தேடினால் "தி.இந்து" பத்திரிக்கையில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் இவரைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்.
//1945-ல், கும்பகோணம் சாரங்க பாணி கீழச் சன்னதித் தெருக் கோடியில் ஆராவமுதுக்குச் (பெருமாளைச் சொல்கிறேன்) சொந்தமான ஒரு மண்டபம் இருந்தது. கோயிலுக்குச் சொந்தமான பல மண்டபங்கள் அந்தக் காலத்திலேயே தனியார்வசம் போய்விட்ட காரணத்தால், ‘பெருமாளுக்கு இன்னும் சொந்தமாக இருந்த மண்டபம்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது இருந்த கோயில் நிர்வாகி படித்தவராக இருந்திருக்க வேண்டும். அந்த மண்டபத்தில் ஒரு வாசக சாலை நடத்த அனுமதித்திருந்தார்.
அந்தக் காலத்து தினசரிகள், வார, மாதப் பத்திரிகைகள் அனைத்தும் வரும். நிறையப் பேர் படிக்க வருவார்கள். சுதந்திரப் போராட்டக் காலம் அது. அந்த வாசக சாலையை நடத்துவதில் கி.ரா.கோபாலன் என்பவர் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
கி.ரா.கோபாலன் இளம்வயதிலேயே மறைந்த ஒரு நல்ல எழுத்தாளர். ‘கல்கி’ இதழ் ஆரம்பித்த புதிதில் நடத்திய சிறுகதைப் போட்டியில் (அது தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் முதல் போட்டியாகக்கூட இருக்கலாம்) முதல் பரிசு பெற்றவர். அந்தக் காலத்துப் பிரபல எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்ட போட்டி அது.
க.நா.சுப்ரமணியம் கதை அனுப்பலா மென்று நினைத்தாராம். ‘‘அதுக்குள்ளே ரா.கி. (கல்கி) என்னைக் கூப்பிட்டு ஜூரியா இருக்கச் சொல்லிட்டார். ஒருவேளை நானும் கதை அனுப்பிச்சுடுவேன்னு பயந்துட்டாரோ என்னவோ’’ என்று க.நா.சு. பிற்காலத்தில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
பரிசு பெற்ற கதையின் பெயர் ‘ஏழ்மை யில் இன்பம்’என்று நினைக்கிறேன். லேசான அங்கதச் சுவையுடன் வறுமையைப் படம்பிடித்துக் காட்டும் கதை. புதுமைப்பித்தன் பாதிப்பாக இருக்கலாம்.
வாசக சாலையின் பெயர் ‘ஜெய மாருதி வாசக சாலை’. வாசக சாலையின் லோகோ அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு விண்ணில் பறப்பது போல் இருக்கும். அந்தப் படத்தை வரைந்தவரும் கோபாலன்தான்!
கி.ரா.கோபாலன் எழுத்தாளர் மட்டும் இல்லை; நல்ல ஓவியர். தமிழ் சாகித்தியங்களும் எழுதியிருக்கிறார். இதைப் பற்றி ஒரு முக்கிய செய்தியைப் பதிவு செய்தாக வேண்டும்.
அவர் ‘நித்திரையில் வந்து என் நெஞ் சில் இடங்கொண்ட’என்ற ஓர் இசைப் பாடலை இயற்றி அக்காலகட்டத்தில் மிகப் பிரபலப் பாடகராக இருந்த என்.சி. வசந்த கோகிலத்திடம் கொடுத்திருக் கிறார். பாட்டு நன்றாக இருந்ததால் இசைத் தட்டாக வெளியிட ஒப்புக் கொண் டார். ஆனால், இசைத்தட்டு வெளிவந்த போது, இயற்றியவர் பெயராக ‘சுத்தானந்த பாரதி’ பெயர் இருந்தது.
கோபாலன் கோபத்துடன் வசந்த கோகிலத்தைப் பார்க்கப் போயிருக்கிறார். வசந்த கோகிலம் கணவர் ‘சாச்சி’ (சதாசிவம்) சொல்லியிருக்கிறார்: ‘ ‘உன் பேரை யாருக்குத் தெரியும்? அதுக்காக ரெக் கார்ட் கம்பெனி சுத்தானந்த பாரதியார் பெயரைப் போட்டிருக்கான். நல்லா விற்கணுமில்லையா? உனக்குப் பணம் வந்தாச்சு இல்லையா, பேசாமெ இரு. கேசு, கீஸுன்னு அலையாதே. டேய்… யார்றா அங்கே, இவருக்கு நூறு ரூபா கொடு. நானும் பணம் தர்றேன், போறுமா?’’
கோபாலன் இதைச் சொன்னது என் மனத்திரையில் இன்னும் அப்படியே நிழலாடுகிறது.//
இதைப் படித்தபோது மனம் கஷ்ட பட்டது.
மேலும்
நம் நம்பிக்கைதான் நம் வரலாறு என்ற இன்னொரு கட்டுரையிலும் இவரைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.
//அவர் ஓர் எழுத்தாளர். ஓவியம் வரையவும் தெரியும். முப்பது வயது இருக்கும். ஒட்டிய கன்னங்கள். கூர்மயான கண்கள். நீண்ட மூக்கு. கதர் குர்த்தா, வேட்டி,, மேல்துண்டு. வாயில் எப்பொழுதும் வெற்றிலை, சீவல், புகையிலை. மெலிதான தோற்றம். பெயர் கி.ரா.கோபாலன்.
கி.ரா. கோபாலன் ஒரு நல்ல எழுத்தாளர். தமிழின் நல்ல எழுத்தாளர்களில் பலர், கோஷ்டிச் சண்டை விளம்பரத்தில் அகப்பட்டுக் கொள்ளாத காரணத்தினால், இக்காலச் சந்ததியினருக்கு அறிமுகம் ஆகாமலேயே போய்விட்டார்கள். ‘கல்கி’ யில் முதல் பரிசு வாங்கிய அவர் கதை ( ‘ஏழ்மையில் இன்பம்’’ ) ஒரு நல்ல கதை. அவர் பிறகு ‘கல்கி’யில் துணை ஆசிரியராகச் சேர்ந்து சில ஆண்டுகள் பணிபுரிந்தார். இளமையிலிருந்தே வறுமையில் உழன்ற காரணத்தினாலோ என்னவோ காசநோய்க்குப் பலியானார்.//
நான் இன்று முக நூலில் பகிர்ந்த கதை ராஜாளி மடம் என்ற கதையில் ஓவியர் பெயர் 'ரா" என்று கையெழுத்துப் பார்த்தேன். தன் கதைக்கு அவரே ஓவியம் வரைந்ததை அறிந்து கொண்டேன்.
இக் கட்டுரையால்.
அபலை அஞ்சுகம் நாவல் எழுதிய கி. ரா. கோபாலன்,
“
தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு கி.ரா. கோபாலன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல; நல்ல கவிஞருமாவார். சித்திரக் கலையிலும் மிகுந்த அனுபவம் உள்ளவர். "காட்டூர் கண்ணன்" "கோணல்" "துதிக்கையார்" முதலிய புனைபெயர்களில் நீண்ட காலமாகக் கல்கி பத்திரிகையில் எத்தனையோ கவிதைகளையும், ஹாஸ்யக் கட்டுரைகளையும், அரசியல் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய எண்ணற்ற சிறுகதைகளையும் ராணி மாதவி, ராஜாளி மடம், அபலை அஞ்சுகம் முதலிய அருமையான பெரிய நாவல்களையும் வாசகர்கள் படித்து மகிழ்ந்திருப்பார்கள். "மாலவல்லியின் தியாகம்" என்ற சரித்திரத் தொடர்கதை கல்கியில் வெளிவந்த போது படித்துப் பாராட்டாதவர்கள் இல்லை. பின்னால் இந்தக் கதையில் அவர் எழுதி வைத்திருக்கும் திடுக்கிடும் சம்பவத்தைப் போலவே திரு. கி.ரா. கோபாலன் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினத்தன்று அனைவரையும் திடுக்கிடும்படி செய்துவிட்டு மறைந்துவிட்டார். அவருடைய இளம் மனைவியையும் எட்டு வயதிலிருந்து மூன்று மாதக் குழந்தை வரையில் இருக்கும் உலகம் தெரியாத ஐந்து குழந்தைகளையும் தனியே விட்டு விட்டு சென்ற அவரின் மறைவு வேதனை அளிப்பதாகும். அவருடைய மறைவு தமிழ் நாட்டுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் மிகப் பெரிய நஷ்டமாகும். ” http://www.chennailibrary.com/gopalan/gopalan.html
சிறந்த எழுத்தாளர் வறுமையில் வாடி நோய்வாய்ப்பட்டு மறைந்ததைப் படிக்கும் போது மனது கஷ்டப்படுகிறது.
பழைய எழுத்தாளர்களைப் பற்றி ஜீவி சார் "பூவனம்" வலைத்தளத்தில், "அழியாசுடர் "வலைத்தளத்தில் எல்லாம் படித்து இருக்கிறேன். ஆனால் இவரைப் படித்த நினைவு இல்லை.
ஜீவி சாருக்கு இந்த எழுத்தாளரைத் தெரிந்து இருக்கலாம், கும்பகோணத்தில் இருந்து இருப்பதால்.
இக் கதையில் வரும் பொன்னி, மருதப்பன்.
கதாநாயகி வேதாவையும், கதாநாயகன் டாக்டர் பரசுராமனையும் சேர்த்து வைப்பவர்கள் இந்த பொன்னி, மருதப்பன் தான்.
கதாநாயகி வேதா, பொன்னி, கதாநாயகன் டாகடர் பரசுராமன்
படத்தில் வேலைக்காரி செங்கம்மா, கதாநாயகி வேதா, படுக்கையில் படுத்து இருப்பது சாரதா என்ற பெண்மணி, கவலையுடன் இருப்பது சாரதாவின் சகோதரி மரகதம், டாகடர் பரசுராமன்.
நல்ல விறுவிறுப்பான கதை. இந்தக் கட்டிடத்தில் (ராஜாளி மடத்தில்) இருக்கும் மூன்று பெண்கள், மற்றும் அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண்பற்றிய கதை. அன்பு, பாசம், மர்மம் நிறைந்த திருப்பங்கள் நிறைந்த கதை.
வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------