Friday, April 1, 2011

கதிர்காமம்


நாங்கள் 09.03 2011 முதல் 15.03.2011 வரை இலங்கைக்கு கயிலை புகழ் ’மனோகர் டிராவல்ஸ்’ மூலம் இலங்கைக்கு ஆன்மிகப்பயணம் மேற்கொண்டோம். பாடல் பெற்ற ஸ்தலங்களாகிய திருக்கேதீச்சுரம், திருகோணமலை ஆகிய கோயில்களுக்கும், அருணகிரிநாதரால் பாடப்பட்ட கதிர்காமத்திற்கும் சென்று வந்தோம்.

முருக பக்தர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கதிர்காமம் சென்றுவர விரும்புவார்கள். சிறு வயதில் முருகன் பக்திப் பாடல்களில்

’ கதிர்காம வேலவனே, வேலையா!,
கதிர்காம வேலவனே, கந்தையா!
வேலனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! ’

என்று பாடுவதுண்டு. அப்படிப் புகழ்பெற்ற கதிர்காமத்தை என் கணவரும் நானும் தரிசித்து வந்தோம். மட்டில்லாத மகிழ்ச்சி அடைந்தோம். அங்கு திரையத்தான் தரிசிக்கமுடியும் என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். நம் மனதில் வீற்றிருக்கும் இறைவன் பிறர் கண்ணுக்கு எப்படி தெரியவில்லையோ அது போல் திரை என்பது மறைத்திருந்தாலும் நம் அகக் கண்ணல் முருகனை அங்கு காணலாம். அந்தத்திரையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயிலில் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காணலாம்.

இலங்கைத் தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது கதிர்காமம். கொழும்புவிலிருந்து 284 கி.மீ தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. ஹம்பந்தோட்டா,பதுளை ஆகிய ஊர்களில் இருந்து இவ்வூருக்குச் செல்லலாம். இத்தலத்தைச் சிங்களத்தில் ’கதரகம’ என்று கூறுகிறார்கள். இது மாணிக்கக் கங்கை என்னும் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. அங்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடிப் பின் கோயிலுக்கு வருகிறார்கள்.

இக்கோயில் கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளதாம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் ஓர் அரசனால் இது கட்டப்பட்டதாம்.. பூசை, பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிட்டு இக்கோயிலுக்கென 550 பணியாளர்களை நியமித்தானாம். ஆரத்திமாதர்கள் 18 பேரும்
இத்னுள் அடங்குவர். சனிக்கிழமைகளில் ஆரத்தி மாதர்கள் போதிமரத்துக்கு வாச நன்னீரைக் கொண்டுவருவார்களாம்.

பத்து அடி உயரமான மதில்களில் யானைகள், மயில்கள் ஆகியவற்றின் உருவங்கள் வரிசையாக இருக்கின்றன. கோயிலைச் சுற்றி வர ’வட்டாரம்’ எனப்படும் சிறு பிரகாரம் உள்ளது. பக்தர்கள் இதனுள் செல்ல அனுமதிக்கப் படுவது இல்லை. ஆரத்திமாதர் மட்டுமே செல்லலாம். இக்கோயிலின் வாசலில் பரண் போல் ஒரு பந்தல் உள்ளது. அதன்மேல் காய்ந்த இலைகள் இருந்தன. ஆண்டுக்கொரு தடவை யானை பசுமையான இலை, கொம்புகளைக் கொடுக்க ,அதனை வாங்கிப் பந்தல் போடுவார்களாம். இதற்குப் ’பசுமைப்பந்தல்’ என்று பெயராம்.

கோயிலின் மேற்கூரை செப்புத்தகடுகளால் ஆனது. வாயிற்கதவுகள் பித்தளையால் செய்யப்பட்டு வேலைப்பாடுகளுடன் அரண்மனைக் கதவு போல் உள்ளன. அதனுள் நுழைய சந்திரவட்டக்கற்களால் ஆகிய இரண்டு படிகள் உள்ளன. உள்ளே மரவேலைப்பாடு கொண்ட அழகிய தூண்கள் உள்ளன. வெண்கல மணிகள் பல இரண்டு பக்கமும் உள்ளன. மேற்பகுதிகளில் திரைகள் உள்ளன. தாமரைப்பூவேலைப்பாட்டோடு அவை காணப்படுகின்றன. வெண்கலத்தால் ஆன பெரிய சேவல் விளக்குகள் இரண்டு புறமும் நிற்கின்றன. முருகனைப் பற்றிய புராணக் காட்சிகள் படங்களாகச் சுற்றிலும் காணப்படுகின்றன. ஒரு மேடையின் மீது சந்நிதியுள்ளது. பூசைசெய்யும் குருமார்கள் ஏறுவதற்குச் சில படிகள் உள்ளன. மேலே உள்ளது லதாமண்டபம் எனப்படும். .ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படும் யானைத் தந்தங்கள் அங்குள்ளன .மேடையில் ஒரு பள்ளம் உள்ளது. அதில் பாதம் நனைத்த பின்னர் அவர்கள் பூசை செய்யத் திரைக்குள் போகிறார்கள். திரைக்குள் என்ன இருக்கிறது என்பது ரகசியமாகவே உள்ளது. விழாக்காலங்களில் யானைமீது முருகன்
உலாவரும் போது கூட அலங்கரிக்கப்பட்டு, துணியால் மூடப்பட்டே இருப்பதால் முருகனின் உருவத்தை யாராலும் பார்க்க முடியாதாம். முருகனுக்கு நைவேத்தியம் துணியால் மூடப்பட்டுக் காவடிபோல் குருமார்களால் தோளில் கொண்டுவரப்படுகிறது. பக்தர்கள் இறைவனுக்குப் பலவிதமான பழ்ங்கள், சிவப்பு செயற்கை மாலை, சிவப்புத்துணி இவற்றைத் தட்டில் வைத்துப் பட்டுத்துணியால் மூடிப் பயபக்தியுடன் கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து மீண்டும் அதனைப் பெற்றுச் செல்கிறார்கள். மூடிய திரைக்குள் பூசை நடைபெறுகிறது. அந்த நேரத்தில் மணிகள் ஒலிக்கப்படுகின்றன.

பூசை முடிந்ததும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விபூதி, தீர்த்தம் வழங்கப்பட்டன. தேங்காயில் சூடம் ஏற்றி அவருக்குக் காட்டிவிட்டு தங்கள் தலையையும் சுற்றித் தேங்காயை உடைக்கிறார்கள். அங்கிருக்கும் ஒரு பெரிய அரச்மரம், ஒரு சிறிய அரச மரம் (போதி மரங்கள்) ஆகியவற்றையும் வணங்குகிறார்கள். இங்குள்ள போதிமரம் சங்கமித்திரை கொண்டுவந்த கிளையிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது. புத்தர் கோயிலும் அங்கு உள்ளது. பெளத்தர்களுக்குரிய 16 முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாம்.

கோயிலுக்கு அருகில் பைரவர் சந்நிதி, தேவானை சந்நிதி, ஆகியவை திரைகளுடன் உள்ளன. பைரவர் சந்நிதிக்கு எதிரில் சிறிய விஷ்ணு உருவம் உள்ள சந்நிதி உள்ளது. அது திறந்து உள்ளது. திரை இல்லை.

தண்டபாணிக்குச் சந்நிதி உள்ளது. இத்னைப் பழனிக்கோயில் என்கின்றனர். இங்கு திரைக்கு முதலில் பூசை நடை பெறுகிறது. திரையில் தண்டபாணிக் கடவுளின் ஓவியம் உள்ளது. பின்னர் திரையைத் திறந்த பின்னர் உள்ளே உள்ள பிள்ளையார்க்குரிய கற்சிலையும், முருகனுக்கு பஞ்சலோகத்தில் ஆன சிலையும் உள்ளன. அங்கு தண்டபாணிக்கு எதிரில் வேல் பீடம் உள்ளது. 1936-ல் மலையாள, தமிழ் மக்களால் கார்த்திகை தீபத்திற்கென திருவிளக்கு ஒன்று செய்து வைக்கப்பட்டுள்ளது.
குருக்கள் தன் வாயைத் துணியால் கட்டிக்கொண்டு முதுகில் ஒரு பட்டுத் துண்டைத் தொங்க விட்டுக்கொண்டு பூசை செய்கிறார். தூப தீபங்கள் காட்டுகிறார். பூசை நேரத்தில் சந்நிதியின் இரண்டு புறமும் இருக்கும் மணிவரிசைகளைப் பக்தர்கள் ஒலிக்கச் செய்கிறார்கள். வலது பக்கத்தில் ஒரு சிறிய சிவலிங்கமுள்ள சந்நிதி உள்ளது. அதற்கும் பூசை நடைபெறுகிறது. பூசை முடிந்ததும் சுண்டல் பிரசாதமாக வழ்ங்கப்பட்டது.

கதிர்காம முருகப்பெருமானுக்கு நேர் எதிரில் வள்ளி திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கு திரையில் தாமரைப்பூவைக் கையில் ஏந்தி ஒயிலான தோற்றத்தில் இருக்கிறாள் வள்ளி. அருகில் ஒரு அம்மன்கோயிலும் ஒரு மசூதியும் உள்ளன.

ஏப்ரல் மாதத்தில் புத்தரிசிப் பொங்கல் நிகழ்வு நடைபெறுமாம். மாணிக்கக் கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து அடுப்புகளைக் கட்டிப் புதுப்பானைகளில் பொங்கலிடுவார்களாம். வள்ளியம்மை தேவாலயத்திலும் இது நடைபெறுமாம். ஆண்கள் தான் பொங்கலை இடுவார்களாம்.

விழாக்காலங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்களாம். கரகாட்டம், மயிலாட்டம், தீப்பந்த ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கோலாட்டம், தீமிதி, தீச்சட்டி ஏந்தல், உருள்வலம் ஆகியனவும் நடைபெறுமாம்.

கதிர்காமத்திற்குச் சற்று வடக்கில் செல்லக்கதிர்காமம் என்னும் ஊர் உள்ளது. இதனை முன்னர் ’வள்ளித்தீவு ’என்று அழைத்தார்களாம். இந்த இடத்தில் தான் முற்காலத்தில் வள்ளி பிறந்து வளர்ந்தாள் என்று கூறுகின்றனர். இங்கு மாணிக்கக் கங்கையாற்றின் கரையில் மாணிக்கவிநாயகர் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள காட்டில்தான் முருகனுக்கு உதவியாக விநாயகர் யானைவடிவில் வந்து வள்ளியைத் துரத்தியதாகவும் பின்னர் இங்கு தான் வள்ளி திருமணம் நடந்ததாகவும்
கூறுகிறார்கள். இந்த காட்சிகள் எல்லாம் மனத்திரையில் விரிகிறது. இயற்கை அள்ளி தந்த வளங்கள் எல்லாம் நிறைந்த இடம். //குறிஞ்சியிலே பூமலர்ந்து குலுங்குதடி-தேன் இருக்குது தினை இருக்குது ,// என்ற பாடல் நினைவுக்கு வரும். வள்ளி பரண்மேலிருந்து ஆலோலம்பாடி கிளிகளை ஓட்டிய காட்சி கண்ணில் நிறைகிறது.

நீர் வளம் நிலவளம் எல்லாம் நிறைந்த இடம். அன்று மழை பெய்து சிவப்பு கலராய் வெள்ள பெருக்காய் தண்ணீர் ஓடி வந்துகொண்டு இருந்தது. திருக் கோயிலில் பஞ்சமுக விநாயகர் உற்சவர் சிலையும் உள்ளது. ஐந்து தலை நாக உருவம் சிமெண்டினால் செய்யப்பட்டுள்ளது. கார் வாங்க வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறிய பின் காரின் நம்பர் பிளேட் ஒன்றை இங்குள்ள ஒரு மரத்தின் மீது அடித்து வைக்கின்றனர். இப்படி அடிக்கப்பட்டுள்ள பல நம்பர் பிளேட்டுக்களை அங்கு காணலாம். அருகில் ஒரு புத்தர் கோயிலும் உள்ளது.

இக்கோயிலுக்கருகில் வள்ளி விளையாடிய குகை ஒன்று உள்ளது. வள்ளியின் சிலை ஒன்று இதனுள் உள்ளது. ஒரு துவாரத்தின் வாயிலாக இதனைப் பார்க்கலாம். வள்ளி இங்கு தயிர் கடைந்ததாகக் கூறுகிறார்கள். ஒரு பாறையின் மீது வள்ளியின் பாதச்சுவடுகள் காணப்படுகின்றன.

கதிர்காமத்திற்கு அருகில் 4 கி.மீ தூரத்தில் கதிரைமலை உள்ளது.படிகள் மேலேறிச் சென்றால் முருகனுக்கு சந்நிதி உள்ளதாம்.அங்கு வேலாயுதம் இருக்கிறதாம்.முருகனால் ஸ்தாபிக்கப்பட்டதாம்.இந்த இடத்திற்கு எங்களை அவர்கள் அழைத்துச்செல்லவில்லை இரவு நேரம் ஆனதால் அழைத்து
செல்லவில்லையோ என்னவோ தெரியவில்லை.

நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
//கதிரை மலைகாணாத கண் என்ன கண்ணே
கற்பூர ஒளி காணாக் கண் என்ன கண்ணே//
என்று பாடியுள்ளார்அருணகிரிநாதர் கதிர்காம முருகனைத் தம் திருப்புகழில் 13 பாடல்களில் பாடியுள்ளார்.அவற்றுள் ஒன்று:

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள்காண்
அரவுபிறைவாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள்காண்
இருவினையிலாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி னோதப் பெருமாளே.

திருக்கோணமாமலை வைத்தியர் திரு.சி.ஆறுமுகம் பிள்ளைஅவர்கள் கதிர்காம முருகன் மீது,கதிரைமலைப் பதிகம்,கதிர்காமமாலை ஆகியநூலகளை இயற்றியுள்ளார்கள்.1904ல் இவை வெளிவந்துள்ளன.

கதிரைமலைப்பதிகத்தில் ஒரு பாடல்:

அற்புதஞ் செய்கின்ற ஆறுமுகவேலவனே யடியனேன்
மீதிலன்பாய் அமரர் தன் இடர்தனை யகற்றியது
போலவே யைய வென்னிடர்களெல்லாம்
பொற்புடன் கரிமீது வந்தே தொலைத்து நற்
புனிதனாக்கிட வேண்டியே போற்றினேன்
பாதமலர் புண்ணியாசமயம் புறங்காட்டி யகலாமலே
சிற்சபையில் மாதர்கள் சிறந்த வாலாத்திகள்
சீராயெடுத்து நிற்கச் சிறியனேன் தீவினைகள்
சீக்கிர மகற்றிடச் சித்ர வடிவேலேந்தியே
கற்பகன் பூசைகள் கருத்தாய் நடத்திடக்
கதிரமலைதன்னில் வாழுங் கந்தனே வந்திதோ
காட்சியது தந்தெனைக் கடைத்தேற்றியருள் புரிவையே

கதிர்காமம் சென்று வந்தது எங்களுக்கு மிகுந்த மனமகிழ்வைத்
தந்தது.

-------------------

14 comments:

கோவை2தில்லி said...

நல்லதொரு பயணக்கட்டுரை. கதிர்காமம் சென்று வந்த மாதிரி இருந்தது. நல்ல பல தகவல்களை தந்துள்ளீர்கள் அம்மா.

ஜீவி said...

கோயிலைப் பற்றிய விவரிப்புகளை அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.

Chitra said...

படங்களுடன், நல்ல பகிர்வு.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் பயணக்கட்டுரைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

உங்க கூடவே நாங்களும் கதிர்காமம் வந்து முருகனை தரிசனம் செய்தமாதிரியே இருந்த்து. நல்லா எழுதி இருக்கீங்க.

அமுதா கிருஷ்ணா said...

ஒரு முறை போக வேண்டும் என்ற ஆவலை தூண்டியது பதிவு.

ராமலக்ஷ்மி said...

படங்களும் விரிவான தகவல்களுமாக அருமையான பகிர்வு.

கோமதி அரசு said...

நன்றி ஆதி.

நன்றி ஜீவி சார்.

நன்றி சித்ரா.

நன்றி வெங்கட்நாகராஜ்

நன்றி லக்ஷ்மி அக்கா.

நன்றி அமுதா கிருஷ்ணா.

நன்றி ராமலக்ஷ்மி.

மாதேவி said...

கதிர்காமக் கந்தன் மிகவும் விரிவாக எழுதியுள்ளீர்கள்.நேரடிதர்சனம் போல இருந்தது.

மகிழ்ச்சியாக இருக்கிறது.

கதிரமலை படிகளில் ஏறிச் செல்லலாம்.கட்டணம் செலுத்தி வாகனத்தில் செல்லக்கூடியதாக பாதையும் அமைக்கப் பட்டுள்ளது.

நான் சென்று பலகாலம் ஆகிவிட்டது.பொதுவாக பகலில் தான் செல்வதுண்டு.

கோமதி அரசு said...

வாங்க மாதேவி,
காலையில் போய் இருந்தால் கதிரை மலைப் பார்த்து இருப்போம்.

நன்றி மாதேவி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காரின் நம்பர் ப்ளேட் அடித்துவைப்பது வித்தியாசமாக இருக்கிறது..விதவிதமான வேண்டுதல்கள்.ம்.

நல்ல விவரமான பதிவும்மா.

திருப்புகழில் அந்த திருமகளுலாவும் பாடலுக்கு இந்தமுறை வள்ளிகல்யாணத்தன்று டில்லியில் குழந்தைகள் கோலாட்டம் ஆடினார்கள்.

அமைதிச்சாரல் said...

நேரடியா தரிசனம் செஞ்ச உணர்வு..

விரிவான தகவல்களையும் அளிச்சதுக்கு நன்றி கோமதிம்மா..

கோமதி அரசு said...

வாங்க அமைதிச்சாரல் , என் பழைய பதிவுகளையும் படித்து மறு மொழி தருவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, நன்றி.

மாய உலகம் said...

கோயில்களைப்பற்றிய விளக்கங்கள் அருமை