வியாழன், 23 டிசம்பர், 2010

வெங்காயம் வெங்காயம்!




படங்கள் : நன்றி : கூகிள்



காயமேயிது மெய்யடா!-இதில்
கண்ணும் கருத்தையும் வையடா

நோயும் நொடியும் வாராமல் காத்து
நுட்பமாக உய்யடா!

என்று பட்டுக் கோட்டை பாடியது போல் இந்த காயத்தைப் பாதுகாக்க வெங்காயம் உதவி இருக்கிறது.வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன.
உடம்புக்கு நல்ல ஊட்டச்சத்தைத் தருகிறது.பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாக பயன் படுத்துகிறார்கள்.நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயத்திற்கு முக்கிய இடமுண்டு. பல் வேறு நாட்டு விஞ்ஞானிகளும் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதயத்திற்கு சக்தி தருகிறது.நரை, தலை வழுக்கையைத் தடுக்கும்.உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள், வாத நோய்களைக் குணமாக்குகிறது.

இது என்ன! நாட்டில் தலைப்புச் செய்தியாக -தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கையில்- என்று வெங்காயத்தை தோல் உரிப்பதுப் போல் உரி உரி என்று உரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த சமயத்தில் வெங்காயம் பற்றி பேச்சு என்ன வேண்டி இருக்கிறது?

தெருவில் வெங்காய கலரில் புடவை கட்டிப் போகும் பெண் தனக்கு தெரிந்த இன்னொரு பெண்ணுடன் பேசும் போது வெங்காயம் விலையை பார்த்தீர்களா! என்னா விலை விக்குது. வெங்காயம் வாங்க கடைக்கு போனா தங்கம் நிறுக்கிற மாதிரி நிறுக்கிறான் கடைக்காரான் என்பது தான்.

வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. அதிக அளவு மழையால் வெங்காயப் பயிர் பாதிக்கப்பட்டதும் வெங்காயவிலை ஏற்றத்திற்கு காரணம்.மக்களுக்கு வெங்காயம் உரிக்காமலே கண்ணில் நீர் வருகிறது, அதன் விலையைக் கேட்டு!

வெங்காயம் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று சொல்கிறது அரசாங்கம்.வெங்காயத்தை எவ்வளவு நாள் பதுக்க முடியும்? அழுகி நாறிப் போய் விடாதா?
இநத விலை ஏற்றத்தை தன் டயர் வியபாரத்திற்கு பயன் படுத்திக் கொள்ளும் புத்திசாலி வியாபாரியின் விளம்பரம்: ஜாம்ஜெட்பூரில் உள்ள ஒரு டயர் கடையில் லாரி டயர் வாங்கினால் 5 கிலோ வெங்காயம். கார் டயர் வாங்கினால் 1 கிலோ வெங்காயம். இது எப்படி இருக்கு!

பதவி நாற்காலிகளுக்கும் இந்த வெங்காயத்தால் ஆபத்து. 1996 லில் தில்லியில் முதல்வர் மதன்லால் குரானா காலத்தில் தில்லியில் பரபரப்பாக பேசப் பட்ட வெங்காய விலை ஏற்றம்
அவர் ஏற்றம் மிகு முதல்வர் பதவியைப் பறித்தது. பின் வந்த சுஷ்மா சிவராஜ் காலத்திலும் வெங்காய விலை குறையாததால் 1998லில் தோல்வி அடைந்தார்.

அன்றாடம் கூலி வாங்கி அதில் அரிசி,பருப்பு, காய்கறிகள் வெங்காயம் வாங்கி சாப்பிடும் ஏழை மக்களுக்கு மிகவும் கஷ்டம்.வெங்காயம் கிலோ 100 ரூபாய் என்றால் என்ன செய்வார்கள்?
பட்டுக்கோட்டை ஒரு பாட்டில் ‘ ஏழைக்கு காலம் சரியில்லை’ என்று பாடுவார். அது சரிதான். ஒரு பச்சை மிளகாய்,வெங்காயம் வைத்துக்கொண்டு ஆனந்தமாய் கஞ்சி குடித்து விடுவார்கள் ஏழைகள். அந்த வெங்காயத்திற்கும் இப்போது வழி இல்லாமல் போகிறது.

இப்போது உள்ள பொருளாதார சூழ் நிலையில் நடுத்தர மக்களே கஷ்டப்படும் போது ஏழைகள் பாடு என்னாகும்? 1960ல் பட்டுக்கோட்டை பாடியபாட்டு இது:

கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே- என்
காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
ஏழைக்குக் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினால் கடன்காரனெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான் -வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான்

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக் கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே- அது
குட்டியும் போடுது வட்டியிலே

வித விதமாய்த் துணிகள் இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லை-இதை
எண்ணாமலிருக்கவும் முடியல்லே

கன்ணுக்கு அழகாப் பெண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்?

அவரே இன்னொரு பாட்டில்

சாமிக்கு தெரியும்,பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலமை-அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை- இதைப்
பாடிப் பாடி விளையாடி ஆடிப்பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம்

நாட்டில் எல்லா வளங்களும் எல்லா நலன்களும் எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துவோம்.


வரலாறு காணாத வெங்காயத்தின் வரலாறு :

//வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உணவுப் பொருளாகும்.ஆறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன் படுத்தி உள்ளனர்.அராபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறர்கள்.நேபாளத்தில் வெங்காயம் இறைவனுக்கு நிவேதனம் செய்யப் பயன்படுகிறது. யூதர்களும் முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர்.மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிர்டேஸ் வெங்காயத்தின் பயனைப்பற்றிக் கூறியுள்ளார்.அமெரிக்கரும், இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறர்கள்.

வெங்காயத்தின் பிறப்பிடம் வடமேற்கு இந்தியா,ரஷ்யா,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளாகும். மேற்கு ஆசியா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகள் வெங்காயத்தின் இரண்டாவது பிறப்பிடமாகும். வெங்காயத்தின் தாவர பெயர் ஆலியம் ஸெபா ஆகும்.இது அலியேசி குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். வெங்காயத்தின் ஆங்கிலப் பெயர் ஆனியன் ஆகும்.
இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘பெரியமுத்து’ என்பது பொருளாகும். வெங்காயத்தின் காரத்தனமைக்கு காரணம் ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது.சிறிய வெங்காயம்,பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன, ஒரே பலனைத் தான் தருகின்றன.//

நன்றி:

’தெய்வீக மூலிகை’
Dr.c.k.மாணிக்கவசாகம்

நான் இதை எழுதிக் கொண்டு இருக்கும் போது மத்திய மாநில அதிரடி நடவடிக்கையால் வெங்காய விலை சரிவு என்று தலைப்புச் செய்தி சொல்கிறது. இறக்குமதியில் சுங்கவரியை ரத்து செய்தல்,ஏற்றுமதியை ஜனவரி 15 வரை தடைசெய்தல்.பதுக்கல்காரர்களை ஒடுக்குதல் எனப் பல நடவடிக்கைகளை அரசு எடுக்கிறதாம். எப்படியோ ஏறிய விலை இறங்கினால் சரி. 100 விற்ற வெங்காயம் 40 என்கிறது.

பெரியார் அடிக்கடி வெங்காயம் என்று சொல்லி வெங்காயத்திற்குப் பெருமை சேர்த்தார்.
வெங்காய விலை குறைந்தவுடன் வெங்காயத்தைப் பயன் படுத்தி என்னென்ன நன்மை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம்.

23 கருத்துகள்:

  1. ”காயமே இது பொய்யடா” இந்த வெங்”காயத்தின்” விலை உயர்வும் பொய்யடா!! பாகிஸ்தானுக்கு கிலோ 15 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெங்காயத்தினை இன்று கிலோ 40 ரூபாய்க்கு இறக்குமதி செய்யும் நிலை. வெங்காயத்தினைப் பற்றிய நல்லதோர் பகிர்வுக்கு நன்றிம்மா..

    பதிலளிநீக்கு
  2. //ஒரு பச்சை மிளகாய்,வெங்காயம் வைத்துக்கொண்டு ஆனந்தமாய் கஞ்சி குடித்து விடுவார்கள் ஏழைகள். அந்த வெங்காயத்திற்கும் இப்போது வழி இல்லாமல் போகிறது.//

    உண்மைதான்:(!

    நல்ல பதிவு.

    //வெங்காய விலை குறைந்தவுடன் வெங்காயத்தைப் பயன் படுத்தி என்னென்ன நன்மை பெறலாம் என்பது பற்றி பார்ப்போம்.//

    சரி:)!

    பதிலளிநீக்கு
  3. //100 விற்ற வெங்காயம் 40 என்கிறது.// நல்ல செய்தி தான்.

    பதிலளிநீக்கு
  4. நாமெல்லோரும் வெங்காயத்தைப்பத்தி இடுகை எழுதி போராட்டம் நடத்தினதாலதான் விலை குறைஞ்சிடுச்சு.. கரெக்டா :-))))))))

    பதிலளிநீக்கு
  5. இதுலே வேடிக்கை என்னன்னா வெங்காயம் வெட்டும் போதுதான் கண்ணீரை வரவழைக்கும் இப்போ அதோட விலையை கேட்டாலே கண்ணீர் வருதே. வெங்காய விலையேற்றத்தின் காரணமாக சில பொருள்களின் விலை ஏறிப் போயிடிச்சி. இனிமே வெங்காய விலை குறைஞ்சா கூட எங்கே மற்ற பொருள்களின் விலை இறங்கவா போகுது?

    பதிலளிநீக்கு
  6. இந்த நேரத்திற்கேற்ற நல்ல பகிர்வு அம்மா. வெங்காய சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் விஷம் இறங்கும் என்பார்கள். வெங்காயம் உரிப்பவர்களுக்கு கண்ணில் நீர் வருவதால் ”காட்ராக்ட்” வரும் வாய்ப்பு குறைவு என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படிப் பட்ட வெங்காயம் விலை குறைந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  7. இக்கரையிலும் "பொன்காயம்" ஆகிவிட்டது.
    சுடச்சுடக் கண்ணீர் காவியம் :)
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ரெண்டு வாரத்துக்கொருமுறை சந்தையில் வாங்குவேன் நல்லவேளை போனவாரத்துக்கு முந்தியவாரம் வாங்கியதே இன்னும் இருக்கு ..தப்பிச்சேனேன்னு இருக்கு.. இப்ப வெங்காயமில்லாத ஐட்டமா செய்துட்டிருந்தேன்..:)

    நல்ல பாட்டெல்லாம் நினைவு படுத்தினீங்கம்மா..

    பதிலளிநீக்கு
  9. என்ன செய்வது வெங்கட்நாகராஜ், இந்த மாதிரி நிலைகளை ஏற்றுக் கொள்ளும் நிலையை நமக்கு ஏற்படுத்துகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  10. ராமலக்ஷ்மி,வெங்காயம் மருத்துவத்திற்கு நிறைய பயன் படுகிறது.

    பதிவின் நீளம் கருதி பின்பு எழுதலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

    சரிதானே!

    பதிலளிநீக்கு
  11. அமுதாகிருஷ்ணா முதல் வருகைக்கு நன்றி.

    வெங்காயத்திற்கு உங்கள் கேள்வியின் நிலை வரவேண்டாம்.

    பதிலளிநீக்கு
  12. புவனேஸ்வரி, இப்படித்தான் விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. அமைதிச்சாரல்,நீங்கள் சொல்வது உண்மை தான் போல்!

    பதிலளிநீக்கு
  14. கிணற்றுத் தவளை,மற்றப் பொருள்களின் விலை இற்ங்குதோ இல்லையோ நம்மை விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மன நிலைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  15. ஆதி,பாம்பு கடித்து விட்டால் நிறைய வெங்காயத்தை தின்ன வேண்டும். இதனால் விஷ்ம் இறங்கும்.

    முதல் உதவியாய் மூர்ச்சை ஆனவர்களுக்கு வெங்காயத்தை கசக்கி முகர வைத்தால் மூர்ச்சை தெளியும்.

    இன்னும் நிறைய நன்மைகள் வெங்காயத்தால் உண்டு.

    பதிலளிநீக்கு
  16. ”பொன்காயம்”நன்றாக சொன்னீர்கள் மாதேவி.

    பதிலளிநீக்கு
  17. வெங்காயம் இல்லாமல் ஐட்டம் செய்வது அறிந்து மகிழ்ச்சி.

    விலை அதிகமென்று யாரும் வாங்கவில்லை என்றால் விலை குறைய வாய்ப்பு உண்டு. நல்ல யோசனை முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  18. வெங்காயம்...

    எவ்ளோ காஸ்ட்லி சமாசாரத்தை பற்றி எழுதி இருக்கிறீர்கள்...

    வெங்காயம் உரித்தால் தான் கண்ணீர் வரும்.. அது பழைய மொழி
    வெங்காயம் விலை கேட்டாலே கண்ணில் கண்ணீர் ஆறாய் ஓடும் ... புதுமொழி..

    பதிலளிநீக்கு
  19. கோபி, வாங்க வாங்க!

    காஸ்ட்லி சமாசாரம் தான் உங்களை வரவழைத்து இருக்கிறது.

    புது மொழி நல்லா இருக்கு கோபி.

    பதிலளிநீக்கு
  20. வெற்றிப் பெற வாழ்த்துக்கள் சொன்னீர்கள் ஜோதிஜி.

    தமிழ்மணத் தேர்வில் முதல் சுற்றில் என் மூன்று பதிவும் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

    நன்றி ஜோதிஜி.

    பதிலளிநீக்கு