ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ஓடி விளையாடு பாப்பா



ஓடி விளையாடு பாப்பா என்று பாரதி சொன்னார்.மாலை முழுவதும் விளையாட்டு என்றார். ஆனால் இப்போது குழந்தைகளை நாம் விளையாட விடுகிறோமா என்றால் இல்லை. தினம் ’படி படி’ தான். பள்ளி விட்டு வந்தாலும் சிறிது நேரம் விளையாட விடுவது இல்லை. வீட்டுப் பாடங்கள் முடி,படி என்பது தான் பெற்றோர்களின் தாரக மந்திரம்.

பாரதிதாசன் அவர்களின் குடும்ப விளக்கில் குழந்தை வளர்ப்புப் பற்றி வருவதில் விளையாட்டைப் பற்றி குறிப்பிடுகிறார்.குழந்தைகள் தன் பிஞ்சுக் கால்களால் தத்தித் தத்தி ஓடி விளையாடும் போது அம் முயற்சியைப் பாராட்டி அதற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்கிறார்.

அமிழ்தே அமிழ்தே ஓடிவா அன்பின் விளைவே ஓடிவா
கமழும் பூவே ஓடிவாஎன் கண்ணின்மணியே ஓடிவா
பச்சைக் கிளியே ஓடிவாஎன் பாடும் தும்பி ஓடிவா
மெச்சும் குயிலே ஓடிவாஎன் விரியும் சுடரே ஓடிவா

என்றெல்லாம் குழந்தையை வருணித்து அதே நேரத்தில் ஓடியாடி விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் வகைசெய்வதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களில் பொன்னூசல்(ஊஞ்சல்) அம்மானை,பூப்பந்து ஆகிய விளையாட்டுக்களைப் பாடிக் கொண்டே ஆடுவார்கள்.பந்தாடிப் பாடும் பாடலைக் கந்துகவரி என்பார்கள்.

இந்த விளையாட்டுக்கள் எல்லாம் மனதுக்கும் உடலுக்கும் நல்ல உரம் அளிக்கும்.

ஓடி,ஆடி விளையாடினால் தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம்.மாலை சூரியஒளியில் ’டி’ வைட்டமின் இருப்பதாய்ப் பெரியவர்கள் சொல்லி விளையாட விடுவார்கள்.
இயற்கையில் கிடைக்கக்கூடிய சூரிய ஒளி மிகச்சிறந்த கிருமிக் கொல்லியாகும். உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் ’டி’ சத்தைத் தோல் மூலமாகப் பெறுவார்கள்.சூரிய ஒளியில் விளையாடினால் நல்ல உடல் நலத்துடன் இருக்கலாம். எங்கே குழந்தைகள் வீட்டிற்கு வருவதற்கே இருட்டிவிடும் என்றால் விடுமுறை நாட்களில் ஆவது விளையாட விட வேண்டும்.

’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
புலி’(வேங்கைபுலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கள் எல்லாம் கண்ணுக்கு கைக்கு,கால்களுக்கு நல்ல பயிற்சி தரும்.பாண்டி விளையாட்டும் நல்ல விளையாட்டு.

என் அம்மா தன் டைரிக்குறிப்பில் பாண்டி விளையாட்டுக்கு ஒரு பாட்டு எழுதி வைத்து இருந்தார்கள்.

அது:

பாண்டிவிளையாடு


------------------
பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ
பாட்டி எனக்குப் பரிசளித்த
பல்லாங்குழியைப் பாரிதோ

மாமா நேற்று வாங்கித் தந்த
மாணிக்கத்தை பாரிதோ
அத்தை தந்த கட்டி முத்தின்
அழகை வந்து பாரிதோ

சேரருக்கு மங்கலங்கள்
செப்பி விளையாடலாம்
சோழருக்குச் சோபனங்கள்
சொல்லி விளையாடலாம்

இன்னும் பாண்டி யாடலாம்
ஓய்ந்து விட்டால் நிறுத்தலாம்
கட்டும் பாண்டியாடலாம்
களைத்து விட்டால் நிறுத்தலாம்

எய்யாப் பாண்டியாடலாம்
ஏய்த்து விட்டால் நிறுத்தலாம்
பசும் பாண்டியாடலாம்
பசித்தவுடன் நிறுத்தலாம்

பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ.

பாண்டி விளையாடினால் நல்ல பசி எடுக்கும். பசி எடுத்தவுடன் விளையாட்டை நிறுத்திவிட்டு
சாப்பிடப் போய் விடுவார்கள் போலும். அந்த காலத்தில் நல்ல ஆரோக்கியமாக குழந்தைகள் இருந்தார்கள்.இப்போது ஒரு மழை விழுந்தால் போதும், உடனே சளி பிடித்து விடுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.
நல்லா சிரித்து,ஓடி விளையாடி குழந்தைகள் எல்லாம் குதூகலமாய் இருக்க வேண்டும்.

பள்ளிக்கு வெளியேயும் குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
விளையாட்டில் வெற்றி தோல்வியைச் சம்மாகப் பாவிக்கும் மனப்பான்மை,விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை,அடிபட்டால் முதல் உதவி செய்யும் குணம்,எல்லாம் தானாக வரும்.நம் கடமை அவர்கள் நல்ல குழந்தைகளுடன் பழகுகிறார்களா விளையாடுகிறார்களா என்று கவனிப்பதும்,சண்டை வந்தால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நாம் தலையிடாமல் இருப்பதும் தான்.


இப்போது கம்யூட்டர் கேம்,வீ கேம்,எல்லாம் வந்துவிட்டது. அதை அளவோடு விளையாடிவிட்டு வெளியே சென்று விளையாடினால் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
பசங்க கிரிக்கெட்,வாலிபால்,கபடி,என்று விளையாடலாம்.நாகர்கோவில்,கன்னியாகுமரி பக்கமெல்லாம் பெண்களும் இந்த விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள்.அங்கு பெண்கள் தற்காப்புக் கலையும் பயில்கிறார்கள்.

குழந்தைகளுக்கு ஒரே மாதிரி வேலைகள் சலிப்பூட்டும்.இதையே குழந்தைகள் ’போர்’ என்று குறிப்பிடுவர்கள்.இதை போக்குவதற்கு விளையாட்டு துணை புரியும்.

ஓடி விளையாடி,கூடி விளையாடி உடல் நலத்தோடும்,மனநலத்தோடும் குழந்தைகள் எல்லாம் வாழவேண்டும்.

வாழ்க வளமுடன்!
வாழக நலமுடன்!



.

29 கருத்துகள்:

  1. நல்ல பதிவும்மா. இப்பல்லாம் பசங்க வெளியே விளையாட போவதே இல்லை. அவங்க போறேன்னு சொன்னாலும், தில்லி போன்ற நகரங்களில் வெளியே விளையாட பெற்றோர்கள் அனுமதிப்பதுமில்லை. என்னுடைய அம்மா கூட இது போல நிறைய பாடல்களை எழுதி வைத்திருக்கிறார்கள். எப்போதாவது பதிவிடவேண்டும். பகிர்வுக்கு நன்றிம்மா..

    பதிலளிநீக்கு
  2. இந்தக் காலத்துக்கு மிக அவசியமான பதிவு.

    //’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
    புலி’(வேங்கைபுலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள்.//

    ஆடியிருக்கிறோம்:)! அப்படியே மலரும் நினைவுகளைக் கிளப்பி விட்டது பதிவு!

    அம்மாவின் டைரிக்குறிப்பிலிருந்த பாடல் பகிர்வு அருமை. தாளகதியோடு பாட ஏற்றது.

    //ஏய்த்து விட்டால் நிறுத்தலாம்//

    நிறுத்த விட மாட்டார்கள்:))!

    //ஓடி விளையாடி,கூடி விளையாடி உடல் நலத்தோடும்,மனநலத்தோடும் குழந்தைகள் எல்லாம் வாழவேண்டும்.//

    மெத்த சரி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பாடல் பகிர்வு..

    நாங்கள் விளையாண்ட அளவுக்கு விளையாடமுடியலை, இப்ப இருக்கிற குழந்தைகளால்.. :(
    இருந்தாலும் முடிந்தவரை முயற்சிக்கிறோம்..

    பதிலளிநீக்கு
  4. இப்பொழுதுள்ள சூழலுக்கு மிகவும் அவசியமான பதிவு. எத்தனை விதமா விளையாடி இருக்காங்க முன்பு. டைரிக்குறிப்பு பாடல் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள்.//

    இது மட்டும்தான் என்னோட சின்ன வயசுல விளையாடியிருக்கேன் இப்பவெல்லாம் இப்படி பாடல்களை படிக்கிறதோட சரி :(

    பதிலளிநீக்கு
  6. // ’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
    புலி’(வேங்கைபுலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கள் எல்லாம் கண்ணுக்கு கைக்கு,கால்களுக்கு நல்ல பயிற்சி தரும்.பாண்டி விளையாட்டும் நல்ல விளையாட்டு. //

    சின்ன வயசுல வேலையாடினது..
    நினைத்தாலே இனிக்கும்..

    என்னோட பசங்க கொஞ்சம் ஓடியாடி வெளையாடுறாங்க, இப்பலாம்..
    ரெண்டு மூனு வருஷதுக்கபுரம் பிளட் சிஸ்டம் லைபுல என்ன பண்ணப் போறேனோ.. முடிஞ்ச வரைக்கும் திறந்த வெளிய ஓடியாடி வெளையாட வெக்கணும்.. உண்மைதான்.

    நல்ல சொல்லி இருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  7. அருமையான பாடல்ம்மா :)

    ஓடியாடி விளையாடுறதே இப்பெல்லாம் பார்க்க முடியிறதில்ல. நிறைய விசயங்களை இழந்திட்டு வர்ரோம்.

    இது மாதிரி நிறைய பாடல்கள் போடுங்கம்மா படிக்கவே ஆசையா இருக்கு

    பதிலளிநீக்கு
  8. அக்கம் பக்கம் குழந்தைகளுடன் சேர்ந்து பார்க் போன்ற இடங்களுக்கு நீங்களும் கூடபோய் விடுமுறை நாட்களில் விளையாட வேண்டியது தான்.

    உங்கள் அம்மா எழுதி வைத்து இருக்கும் பாடல்களை பதிவிடுங்கள்.

    இந்தக் கால தலைமுறைகள் தெரிந்து கொள்ளலாம் அல்லவா!

    பதிலளிநீக்கு
  9. ராமலக்ஷ்மி,உங்களை மலரும் நினைவுக்கு அழைத்து சென்றதில் எனக்கு மகிழ்ச்சி.

    பள்ளியில் பாடச்சுமை,எதிர்கால கனவுகளை சுமந்து கொண்டு இருக்கும் பெற்றோர்களின் அன்பு சுமை இவை
    குழந்தைகளை விளையாட்டிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளது.

    கிராமக் குழந்தைகள் ஆனந்தமாய் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  10. முத்துலெட்சுமி,முடிந்தவரை குழந்தைகளை விளையாட விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. அம்மா தான் கேட்ட பாடல்கள்,தனக்கு பிடித்த பொன்மொழிகள்,தேசபக்தி பாடல்கள்,கடவுள் பாடல்கள்,பழமொழிகள் என்று நிறைய எழுதி வைத்து இருக்கிறார்கள்.

    ’அம்மாவின் பொக்கிஷங்கள்’என்று கொஞ்சம் பாடல்கள் பதிவிட்டு இருக்கிறேன் புவனேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  12. ஆயில்யன்,இப்பவும் விளையாடலாம் ஊருக்கு வந்து குழந்தைகளுடன்.

    பதிலளிநீக்கு
  13. மாதவன்,சின்ன வயது நினைவுகள் இனிக்கிறதா!

    குழந்தைகளையும் முடிந்தவரை வெளியில் விளையாட விடுங்கள்.

    அவர்களுக்கும் இனிமையான நினைவுகள் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  14. ஆதவன்,நீங்கள் எல்லாம் கொடுக்கும் ஆதரவில் தான் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

    பாடல்கள் போடுகிறேன்,நன்றி.

    பதிலளிநீக்கு
  15. //’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
    புலி’(வேங்கைபுலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’//

    ஹை, நானும் விளையாடியிருக்கிறேன்!!

    இப்ப குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப கொஞ்சம் பயமாகவும் இருக்கு - போக்குவரத்து நெரிசலும் ஒரு காரணம்.

    மணலைக் குவித்து, அதில் தீக்குச்சியை ஒளித்து வைத்து, தேட வேண்டும். அந்த விளையாட்டைத் தற்போது விளையாட அனுமதிக்கும் அளவில் நம் சுற்றுப் புறமும் சுகாதாரமாக இல்லையே?

    வீட்டில், தரையில் பெரிய பெரிய டைல்ஸ்களில் பாண்டி விளையாடக் கற்றுக் கொடுத்தேன் சின்னவனுக்கு. போரடிக்கிறது என்று சொல்லிவிட்டான்!! :-((

    ஆர்வமாக சைக்கிள் ஓட்டுகிறான், கொஞ்சம் நிம்மதி!!

    பதிலளிநீக்கு
  16. கால, இட சூழலுக்கு ஏற்ற மாதிரி தான்
    இப்போது குழந்தைகளை விளையாட விட முடிகிறது.

    சைக்கிள் ஓட்டுவதும் நல்ல உடற்பயிற்சி தான் ஹீஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  17. நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கீங்கம்மா. விடுமுறை நாட்களில் தான் வெளியே போய் பார்க்கில் விளையாட முடிகிறது. மற்ற நாட்களில் வீட்டுக்குள்ளேயே விளையாடிக் கொள்கிறாள். இனிமே முயற்சி செய்கிறோம்.

    பதிலளிநீக்கு
  18. இப்போது கம்யூட்டர் கேம்,வீ கேம்,எல்லாம் வந்துவிட்டது. அதை அளவோடு விளையாடிவிட்டு வெளியே சென்று விளையாடினால் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.


    .rightly said.

    பதிலளிநீக்கு
  19. அம்மாவின் பாண்டி பாடல் பகிர்வுக்கு நன்றிங்க.... மெட்டுடன் பாட, அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. கோமதி.. இந்தக் காலத்துல இப்பிடி விளையாட்டு எல்லாம் யாருக்கும் தெரியவில்லை.. இதன் பயனும்.. ஏதாவது க்ளாசுக்கு அனுப்புறதிலே பெற்றோர் எல்லாம் குறீயா இருக்காங்க..

    இந்த மாத லேடீஸ் ஸ்பெஷலுக்காக உங்களை ப்லாகரா தேர்ந்தெடுத்திருக்கிறேன்.. விருப்பமிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி thenulakshman@gmail.com

    பதிலளிநீக்கு
  21. சுவாரஸ்யமான பதிவு. மன ஆழத்தை கிளறி விட்டீர்கள்.

    //நாங்கள் விளையாண்ட அளவுக்கு விளையாடமுடியலை, இப்ப இருக்கிற குழந்தைகளால்//

    உண்மைதான் நீங்க குறிப்பிட்டிருக்கிற அனைத்து விளையாட்டுகளும் விளையாடியிருக்கிறோம்.
    வடிவாம்பாள் சொன்னா மாதிரி, ‘அந்தக் காலத்தில் நாங்க ஆடாத ஆட்டமா?’

    பாவம்தான் இக்காலக் குழந்தைகள்!!!
    என் பிள்ளைகள் இவற்றையெல்லாம் கொஞ்ச காலம் தாத்தா வீட்டில் இருந்த போது அண்ணன் பிள்ளைகளோடு விளையாடியிருக்கிறார்கள். அம்மட்டோடு திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  22. அம்மாவின் பாடல் அருமை. இவை எல்லாம் இப்போது எங்கே? நீங்கள் கூறியதுபோல.
    படிப்புச்சுமை கூடிவிட்டது.ரியூசன் நேரமின்மை...

    வாரஇறுதி மாலைகளில் மட்டும் பிளாட்ஸ்களில் சிரித்துவிளையாடும் சத்தங்கள் மகிழ்ச்சி அளிக்கும்.

    பதிலளிநீக்கு
  23. இதையும் கொஞ்சம் படிக்கலாமே


    பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்!

    http://maattru.blogspot.com/2010/12/blog-post_07.html

    பதிலளிநீக்கு
  24. வணக்கம்
    இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
    நான் ஊருக்கு போய் இருந்தேன். மாமாவின் முதல் திதிக்கு. நேற்றுதான் மாலை வந்தேன்.
    உங்கள் தகவலுக்கு நன்றி.
    உங்கள் பதிவும் வலைச்சரத்தில் இடம்பெற்று இருப்பதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு