வெள்ளி, 1 அக்டோபர், 2010

முதியோர் நாள்

இன்று காலண்டர் கிழிக்கும் போது ’இன்று முதியோர் நாள்’ என்று போட்டு இருந்தது.
முதுமைக்கு அப்படி ஒரு மரியாதையா!என்ற வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.சரி அது என்ன விபரம் என்று தேடிய போது thats tamil பத்திரிக்கையில் //அக்டோபர் முதலாம் தேதிசர்வதேச முதியோர் தினமாகும்.மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும் கெளரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம்தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்ப்டுத்தியுள்ளது.//

//1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி முதன் முதலாக 1991ம் ஆண்டு சர்வதேச முதியோர்தினம் உலகெங்கும் கொண்டாப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகினறது.உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.//

நம் நாட்டில் பெரியவர்களுக்கு முதியோர் நாள் என்று தனியாக கொண்டாட வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லா நாளும் முதியோர்களை பணியும் நாளாகவே உள்ளது.
எங்காவது வெளியூர் போனால்,பரீட்சை என்றால்,புதிதாக உடை அணிந்தால்எல்லாம் ’தாத்தா பாட்டியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்’என்று நாம் சொல்வதை குழந்தைகள் கேட்கிறார்கள்.கேட்டு நடந்தார்கள்.முன் ஏர் செல்லும் பாதையில் பின் ஏர் செல்லும் என்பார்கள்.நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தால் நம் குழந்தைகளும் கொடுப்பார்கள்.இது தானாய் இயல்பாய் திணிக்கப் படாமல் நடக்கும்.

இந்த காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமாய் இருக்க முடியவில்லை.ஆனால் பண்டிகை,விழாக்காலங்களில் வீட்டுப் பெரியவர்களிடம் அவர்கள் ஆலோசனை கேட்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்கிறோம்.

எனக்கு வயதாகும் போதுதான் என் பெற்றோர்களின் தவிப்பும் ஏக்கமும் புரிகிறது.அம்மா,
’நாலு நாளுக்கு ஒரு முறை கடிதம் எழுது’ என்பார்கள்.(தொலைபேசி,அலைபேசி எல்லாம் வரும் முன்)பிறகு போன் வந்தபின் அவர்களுக்கு வயதாகி காது கொஞ்சம் கேடகாமல் போனபோது போனில் அவர்கள் பேசுவார்கள்,என் நலம் விசாரித்து.’ மற்றதை உன் தம்பியிடம் சொல் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்பார்கள். கம்யூட்டர் அப்போது இல்லை இருந்திருந்தால் எங்களைப் பார்த்து மகிழ்ந்து இருப்பார்கள்.அம்மாவுக்குத் தனியாகக் கடிதம் எழுதியிருக்கலாம் என்றும் தம்பியிடம் போனிலும் அம்மாவிடம் கடிதத்திலும் உரையாடி இருக்கலாம் என்றும் இப்போது நினைக்கிறேன். விஜய் டீ.வீயில்’ காப்பி வித் அனுவில்’ நிகழ்ச்சி முடிவில் ’யாரிடம் மன்னிப்புக் கேட்க நினைக்கிறீர்கள்?’என்பார்கள். நான் என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன்-கடிதம் எழுதாமல் இருந்த்தற்கு.’யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்றால்-என் மாமியாருக்கு.முதுமையை அழகாய் ரசித்து வாழ்வதற்குக் கற்றுக் கொடுத்ததற்கு.

வார வாரம் என் வயதான மாமியாரிடம் தொலைபேசியில் பேசும் போது ,அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ளும்.மாமனார் பேசமாட்டார்கள் .அத்தையிடம் விசாரித்துக் கொள்வார்கள்.

நம் குழந்தைகளிடம் என்ன கேட்கிறோம்?அடிக்கடி பேசுங்கள் என்றுதான் . அது தான் எங்களைப் போன்ற முதியோரகளுக்கு ஊட்ட சத்து மாத்திரைகள்.மகனிடம் பேசும் போது பேரன் உடனே ஓடி வந்து மழலையில் ’தாத்தா’ என்று கூப்பிட்டு அவனது விளையாட்டு சாமான் மற்றும் அவன் பொருட்களை நம்மிடம் காட்டி என்னவோ பேசுகிறான்.கம்யூட்டரில் நுழைந்து நம்மைத் தொட முட்டி மோதும் போது நமக்கு நம்மை தேடுகிறானே என்ற மகிழ்ச்சியும்,அவனுடன் இருக்க முடியாத சூழ் நிலையை நினைத்து வருத்தமும் ஏற்படுகிறது.
மகள் வயிற்று பேரன் 18 நாள் விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போகலாமா என்று மகளிடம் கேட்டதை கேட்கும் போது சந்தோஷமும் ஏற்படுகிறது.

இந்த காலகட்டத்தில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் எதிர்பார்த்து வீணாய்க் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் நோய்க்கு இடம் கொடுத்து விடுவோம்.

குழந்தைகள் எங்கு இருந்தாலும் நலமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையைப் பெற்றோர்களும், பெற்றோர்கள் அங்கு நலமாய் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையைக் குழந்தைகளும் செய்வது தான் இந்த உலகத்தை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

முதியோர்கள் தங்களுக்கு என்று பயனுள்ள பொழுது போக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டிலே முடங்கிக் கிடக்காமல், கோவில்,நண்பர்கள்,உறவினர்,என்று பார்ப்பதை வைத்துக் கொண்டு எப்போதும் தங்களைச் சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டால் தேவை இல்லாத கவலைகள் அண்டாது.என் கணவர் ஒய்வு பெற்ற பின்னும் ஒரு கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்.அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நாளை காந்தியடிகளின் பிறந்தநாள். அவர் தன் வாழ்க்கையை நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்தார்.காந்தியடிகள் நம் முன்னே அற்புதமான சுத்தம்,சுகாதாரம் நிறைந்த,மன நிறைவுள்ள வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து நமக்கு உதாரணமாக விட்டுச் சென்றார்.இயற்கையோடு இயைந்த எளிமையும்,அழகும் பொதிந்த வாழ்க்கை அவருடையது.இன்றைய உலகிற்கு கலங்கரை விளக்கம் காந்தியடிகளின் வாழ்க்கை.


முதியோர் தினத்தில் நமக்கு முன்னே வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும்,வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும் நாம் பாடமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

முதுமைக் காலத்தை நடத்திச்செல்ல உடல் நலம் நன்றாக இருந்தால் தான் முடியும். அதற்கு,உடற்பயிற்சி,தியானம்,உணவுக் கட்டுப்பாடு,நல்ல உறக்கம், நல்ல பழக்க வழக்கம் நல்ல ஒய்வு அவசியம்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.-குறள்

தம்மினும் அறிவில் மேம்பட்ட பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு அவர் வழியில் நடத்தல் ஒருவர்க்குரிய வலிமைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த வலிமையாகும்.

முதியோர்கள் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!

22 கருத்துகள்:

  1. நல்ல.. கருத்துள்ள பதிவு..

    ஆமா.. நம்ம நாட்டு வழக்கப் படி.. எல்லா நாளுமே, முதியோர், தாய், தந்தை தினம்தான்.. தனியா ஒரு நாலு தேவை இல்லை..

    பதிலளிநீக்கு
  2. வாழ்வின் அனுபவங்களிலிருந்து வந்திருக்கும் கருத்துக்களும் ஆலோசனைகளும் அருமை.

    //முதியோர்கள் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துவோம். பகிர்வுக்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  3. \\இந்த காலகட்டத்தில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் எதிர்பார்த்து வீணாய்க் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் நோய்க்கு இடம் கொடுத்து விடுவோம்.\\

    சூப்பர் பஞ்ச் ;))

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு. அருமையாகக் கூறியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. \\முதியோர் தினத்தில் நமக்கு முன்னே வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும்,வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும் நாம் பாடமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.//

    வாழ்க்கையை இனிமையாக்குவோம்.

    \\முதியோர்கள் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துவோம்.. வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
  6. //இந்த காலகட்டத்தில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் எதிர்பார்த்து வீணாய்க் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் நோய்க்கு இடம் கொடுத்து விடுவோம்//

    யதார்த்தம் புரிந்த அறிவுரை!!

    சீனியர் சிட்டிசன்களுக்கு வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  7. //இந்த காலகட்டத்தில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் எதிர்பார்த்து வீணாய்க் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் நோய்க்கு இடம் கொடுத்து விடுவோம்//

    சில நேரங்களில்,அம்மாவிடம் அப்பாவிடம் பேச நினைத்து, சூழல் காரணமாக அதிகம் பேச இயலாது போகும்போது நிறையவே வேதனை தருகின்றது :(

    பதிலளிநீக்கு
  8. ஆம் முத்துலெட்சுமி,வாழ்க்கையை இனிமையாக்குவோம்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி ஹீஸைனம்மா,வாழ்த்துவோம் பெரியவர்களை.

    பதிலளிநீக்கு
  10. நேரம் கிடைக்கும் போது அப்பா,அம்மாவிடம் பேசுங்கள்.

    அவர்கள் மகிழ்வார்கள்.

    பதிலளிநீக்கு
  11. //குழந்தைகள் எங்கு இருந்தாலும் நலமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையைப் பெற்றோர்களும், பெற்றோர்கள் அங்கு நலமாய் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையைக் குழந்தைகளும் செய்வது தான் இந்த உலகத்தை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.///

    இது உண்மை தான்... இருந்தாலும் சில இடங்களில் நடக்கும் கொடுமைகளை கேட்டால்...ம்ம்ம்ம் என்ன சொல்ல...

    உங்களுக்கு என் வணக்கங்கள்...

    பதிலளிநீக்கு
  12. ஆம் மங்கை, உலகத்தின் சில இடங்களில் நடை பெறும் கொடுமைகள்
    கேட்கும் போது கஷ்டமாய்த்தான் இருக்கு.

    திருநெல்வேலியில் 8வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    மக்கள் கருணையும், அன்பும் நிறைந்தவர்களாய் இருக்க ஒரே வழி பிராத்தனை தான். வேறு என்ன செய்வது?

    திருடனாய் பார்த்து திருந்தவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ,அது போல மனிதன் தானாய் திருந்த வேண்டும்.

    உங்கள் வணக்கத்திற்கு நன்றி.

    தனி மனித அமைதி நிலவ வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  13. மிகவும் பயனுள்ள கருத்துகளைச் சொல்லும் கட்டுரைக்கு நன்றி

    ///தம்மினும் அறிவில் மேம்பட்ட பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு அவர் வழியில் நடத்தல் ஒருவர்க்குரிய வலிமைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த வலிமையாகும் ///

    இதைப் புரிந்துக் கொள்ளவும் ஒரு மனப்பக்குவம் வேண்டும். :)

    விஜயதசமி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. கபீரன்பன்,உங்கள் வருகைக்கு நன்றி,

    விஜயதசமி வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. மிக அருமையான பகிர்வு கோமதிம்மா

    பதிலளிநீக்கு
  16. நெகிழ வைக்கும் பதிவு.... ரொம்ப நல்லா இருக்குதுங்க.

    பதிலளிநீக்கு
  17. நன்றி சித்ரா, உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு