வியாழன், 28 ஜனவரி, 2010

நலம் ,நலம் அறிய ஆவல்

நான் இங்கு சுகமே நீஅங்கு சுகமா?



கடிதத்தை,’மடல்,திருமுகம்,முடங்கல்,ஓலை’எனறெல்லாம் அக்காலத்தில் குறிப்பிட்டார்கள் .
இலை என்ற பத்திரத்திலும்,பனைஓலையிலும் கடிதங்கள் வரைவார்கள்.ந.மு வேங்கடசாமி நாட்டார் முடங்கல் பற்றி எழுதியது:// பல்லாயிர ஆண்டுகளாகப் பனுவல்களும்,ஆவண்ங்களும்,பிறவும்,இந்நாட்டிலே பனையோலையிற்
றீட்டப் பெற்றுவந்தன. ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குச் செய்தி தெரிவிக்க வேண்டின் அதனைப் பனையோலையில் எழுதிச் சுருள் செய்து, காப்பிட்டு ஏவலாளர் முதலாயினார் கைகொடுத்துச் செல்லவிடுவது வழக்கம். அதனை ஓலையென்றும்,முடங்கலென்றும் கூறுவர். ஓலையில் எழுதப்படுதலின் ஓலையென்பது பெயராயிற்று;இலை என்னும் பொருளுடைய பத்திரத்தில் வரையப்படுதலின் பத்திரமென்பது பெயராயினாற்போல,பிற்காலத்தே ஓலையென்பது மங்கலமல்லாத செய்தி வரைந்ததாகப் பொருள் படுவதாயிற்று. செய்தி வரைந்த ஓலையை வளைத்துச் சுருள் செய்தலின்,அது முடங்கல் எனவும் பெயர் பெறும். முடங்கல்-வளைதல். முடங்கல் வரைதலைப்பற்றிய வேறு சில செய்திகளும் பின் காட்டுவனவற்றால் அறியலாகும்.

சிலப்பதிகாரம்,புறஞ்சேரியிறுத்த காதையில்,மாதவி தீட்டிய முடங்கலொன்றைக் கோவலன் பெற்ற வரலாறு காணப்படுகிறது. மாதவி திருமுகமெழுதக் கொண்ட கருவிகள் :சண்பகம் மாதவி,பச்சிலை,பித்திகை,மல்லிகை,செங்கழுநீர் என்பவற்றால் நெருக்கத தொடுதத மாலையின் இடையே கட்டிய, முதிர்ந்த தாழம்பூவின வெள்ளியதோடும் ,அதற்கு அயலதாகிய
பித்திகையின் முகையும்,செம்பஞ்சிக் குழம்பும் ஆகும்.பித்திகை அரும்பை எழுது கோலாகக் கொண்டு ,செம்பஞ்சிக் குழம்பிலே தோய்த்துத் தாழையின் வெண்டோட்டில் எழுதினளென்க.//


சைவசமயத்தில் சிவபெருமான் பாணபத்திரரின் வறுமை தீர்க்க சேர அரசனுக்குக் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.அப்பாடல் சைவத்திருமுறைகளில் காணப்படுகிறது.
சுவாமி சிவானந்தா எழுதிய கடிதங்கள் தத்துவங்களை விளக்குகின்றன. அக்கடிதங்களின்
தொகுப்பு,epistles of sivananda என்ற தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.
சிறந்த கருத்துக்களைக்கூற டாக்டர் மு.வ. அவர்கள் கடிதவடிவத்தை எடுத்துக் கொண்டு
தம்பிக்கு, தங்கைக்கு என்று புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

நேரு,காந்தி போன்ற தலைவர்களின் கடிதங்கள் இலக்கியமாகவும்,வரலாறாகவும் அமைந்தன என்பார்கள்.மெக்காலே எழுதிய கடிதங்கள் ஆங்கில இலக்கியமாகக் கருதப்படுகின்றன.
சிலப்பதிகார காலத்திலிருந்து கொஞ்சகால முன்பு வரை கடிதம் எழுதும் பழக்கம் நன்றாக
இருந்து வந்தது.தொலைபேசி வந்தபிறகு கொஞ்சம் குறைந்தது.கைபேசி வந்தபின் மிக,மிக குறைந்து விட்டது.


அன்புள்ள என்று ஆரம்பித்து ,பேரோ அல்லது கண்ணே மணியே என்றோ ஏதோ எழுதி, இங்கு நாங்கள் எல்லோரும் நலம் அங்கு எல்லோரும் நலமா?நலம் நலம் அறிய ஆவல் என்று
அந்த காலத்தில் கடிதம் இப்படித்தான் நலம் விசாரித்து எழுதிக் கொள்வார்கள். இங்கு மழை பெய்கிறது,அங்கு மழை உண்டா? மாடு கண்ணு போட்டுதா,வெள்ளாமை எப்படி இருக்கு? என்று ஊர் நடப்பு,நாட்டு நடப்பு எல்லாம் கேட்டுக் கொள்வார்கள்.
பழைய கடிதத்தை எடுத்துப்பார்த்தால் அந்த அந்த காலக்கட்டங்களின் நிலை புரியும்.


ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டாலும் நலமா என்றும் செளக்கியமா என்றும் நல்லா இருக்கிறீர்களா? என்றும் கேட்டுக் கொள்வார்கள். விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றதில் நாம் இழந்தவை ஏராளம்,அதில் கடிதப்போக்குவரத்தும் ஒன்று. திருவள்ளுவர்:

//அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.//

என்று சொன்னார் ,ஆனால் இப்போதைய குறள்:

’செல் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை
மடிக்கணிணி இல்லாருக்கு எவ்வுலகும் இல்லை.” என்றாகிவிட்டது

யாருக்கும் கடிதம் எழுதவோ ,அதை ஆசை ஆசையாய் படிக்கவோ நேரம் இல்லை.
போகிற போக்கில் செல்லில் பேசிக்கொள்வதுதான்! வண்டி ஓட்டிக் கொண்டு ,அப்படிப் பேசுவதால் நடக்கும் விபரீதங்கள் எத்தனை எத்தனை?

வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்களை இழந்தோம்.


திருமணம் ஆன பின் அப்பா அம்மாவிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தால் குதுகலம்.
அம்மா சமையல் குறிப்பு,கோலம், பூஜை முறைகள் எல்லாம் எழுதி அனுப்புவார்கள்.
குழந்தைப் பேறுக்கு அம்மாவின் வீட்டுக்குப்போன போது, கணவர் என் நலம்,குழந்தை நலம்
கேட்டு எழுதும் போது பெருமிதமான குதுகலம்.குழந்தை வளர்ப்பு எல்லாம் அக்கா அம்மாவிடம் கடிதத்தில்கேட்டுத் தான் .அண்ணன் அக்கா எல்லாம் கடிதம் எழுதும் போது
புதிதாக என்ன சினிமா பார்த்தாய்? புதிதாக என்ன கோவில் போனாய் என்று கேட்பார்கள்

தங்கை ,தம்பி அம்மாவிடம் பள்ளி டூர் போக சிபாரிசு செய்யச் சொல்லி எழுதுவார்கள்.
தோழிகள் எப்போது இனி சந்தித்து கொள்வது எப்போது என்றெல்லாம் கேட்டு எழுதுவார்கள்.எனது மாமனார் வாராவாரம் கடிதம் எழுதுவார்கள்.அவர்கள் எங்களை ஒவ்வொரு பண்டிகைக்கும் வந்து சேருங்கள் என்று எழுதுவார்கள். வாராவாரம் கடிதம் எழுதவில்லையென்றால் உன்னிடமிருந்து கடிதம் இல்லையே அம்மா கவலைப்படுகிறாள்
என்று என் கணவருக்குக் கடிதம் வரும்.என் அப்பாவிடமிருந்தும் நாலுநாளைக்கு ஒருதடவை கடிதம் எழுது என்று கடிதம் வரும்.சின்மையானந்த்ர் நடத்திய தொடர் சொற்பொழிவு விபரம் எல்லாம் அதில் இருக்கும்.

என் மகள் திருமணமாகி இரண்டு கடிதங்கள் எழுதியிருப்பாள்,அப்புறம் எல்லாம் போன் தான்.
மகன் வேலைக்குப் போன புதிதில் ஒரு கடிதம் எழுதினான் அப்புறம் போன்.இப்போது
இண்டர் நெட் சாட் தான்.

மின்னஞ்சலில் கடிதங்களை எழுதித் தாள்களை மிச்சப்படுத்தி மரங்களைப் பாதுகாத்து மழைவளம் பெறுவோம் என்பது இப்போதைய சுலோகம் .

கடிதம் எழுதச் சோம்பல் படும் நமக்கு இது ஒரு நல்ல கருத்தாகவே படுகிறது.

எப்படி இருந்தாலும் ஏதாவதொரு வடிவில் கடிதங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்
இல்லையா?

வாழ்க வளமுடன்!

18 கருத்துகள்:

  1. அருமையான தலைப்பு. கால ஓட்டத்தில் காணாமல் போனவற்றில் வருத்தம் தருவது கடிதம் எழுதுவதுதான்.

    //’செல் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை
    மடிக்கணிணி இல்லாருக்கு எவ்வுலகும் இல்லை.” என்றாகிவிட்டது//

    சரியாகச் சொன்னீர்கள்.

    //எப்படி இருந்தாலும் ஏதாவதொரு வடிவில் கடிதங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்
    இல்லையா?//

    ஆமாம், மின்னஞல்களிலாவது தொடர்வது ஆறுதலான விஷயம்தான்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் தலைப்பு பிடித்திருக்கிறது :)

    எதையாவது ஒதுங்க வைக்கும்போது இப்போதும் பழய கடிதங்கள் கிடைக்கும்போது ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் கவர் வாங்கி எழுதி போட சோம்பெறித்தனம் .. முன்பே எழுதி போடாமல் வைத்திருக்கும் கடிதங்கள் கூட என்னிடம் உண்டு. கொஞ்ச நாள் முன்பு அம்மா அப்பா கூடவே தம்பியும் மூவருமாக எழுதிய் கடிதம் கூட கைக்கு கிடைத்தது.

    பதிவில் பல விதமான கடிதங்கள் பற்றிய விவரங்கள் அறிந்து கொண்டோம். காத்திருக்கப் பிரியப்படாததால் இப்பொதெல்லாம் டிவிட்டர் பேஸ் புக் என்று உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறிவிடுவதால் மெயில் கடிதங்கள் கூட அருகி வருகின்றன். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தாலும் மற்றவருடன் தொடர்புடன் இருக்க வேண்டும் என்கிற அவா மட்டும் கூடிக்கொண்டு தானே இருக்கிறது . மகிழ்வோம்

    பதிலளிநீக்கு
  3. எப்படி இருந்தாலும் ஏதாவதொரு வடிவில் கடிதங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்
    இல்லையா?
    //

    சரியா சொன்னீங்க..:))

    பதிலளிநீக்கு
  4. //மின்னஞ்சலில் கடிதங்களை எழுதித் தாள்களை மிச்சப்படுத்தி மரங்களைப் பாதுகாத்து மழைவளம் பெறுவோம் என்பது இப்போதைய சுலோகம் .//

    இதுவும் சரியான சுலோகம் இல்லை என்றும் சிலர் கருதுகிறார்களே!
    (செல் போன் குப்பைகள் பயோ டீகிரேட் தலைவலிகள் ).

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  5. //ஆமாம்,மின்னஞ்சகளிலாவது தொடர்வது ஆறுதலான விஷயம் தான்.//

    ஆமாம் ராமலக்ஷ்மி.

    தலைப்பை பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. முத்துலெட்சுமி,உங்களுக்கும் தலைப்பு பிடித்தது அறிந்து மகிழ்ச்சி.

    //மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே,இருந்தாலும் மற்றவருடன்
    தொடர்புடன் என்கிற் அவா மட்டும்
    கூடிக்கொண்டு தானே இருக்கிறது மகிழ்வோம்.//

    மகிழவேண்டிய விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
  7. //எப்படி இருந்தாலும் ஏதாவதொரு வடிவில் கடிதங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்
    இல்லையா?//

    மிக மிக சரியாக சொன்னீர்கள்...

    கால ஓட்டத்தில் அடித்து செல்லப்பட்ட பல விஷயங்களில் கையால் எழுதப்படும் கடிதமும் ஒன்று...

    நான் இப்போது கூட 10-15 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட கடிதங்களை திருப்பி பார்ப்பதுண்டு...

    விஞ்ஞானத்தின் வளர்ச்சி, ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் விழுங்கி விடுகிறது..

    நினைவுகளை கிளறிய ஒரு அருமையான பதிவு கோமதி மேடம்..

    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. கடிதம் நான்விரும்பிப்படிப்பது எத்தனையோ யுக்திகள் வந்தபோதும் அதற்குள்ள மவுசு குறையாது.

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    நேரம்கிடைக்கும்போது என் தளங்களின் பக்கம் உங்கள் பார்வை பதியட்டும்

    http://niroodai.blogspot.com

    http://fmailkka.blogspot.com

    http://kalaisaral.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. //நான் இப்போது கூட 10,15 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட கடிதங்களை திருப்பி பார்ப்பதுண்டு//

    ஆம்,கோபி நானும் பழை கடிதங்களை
    சில நேரங்களில் படிப்பதுண்டு,படித்து பசுமையான நினைவுகளில் ஆழ்ந்து விடுவதுண்டு.

    வாழ்த்துக்கு நன்றி கோபி.

    பதிலளிநீக்கு
  10. அன்புடன் மலிக்கா,
    பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

    உங்கள் வலை தளங்களைப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. சூப்பர் டாபிக்,

    நான் கல்யாணமாகி வந்த புதுசுல வீட்டுக்கு கடிதம் போடுவேன். இப்பல்லாம் போன், ஈமெயில்தான்.

    பதிலளிநீக்கு
  12. //தேடாம லேதான்
    கிடைத்து விடுகிறதோ
    நம்மில் பலருக்கும்
    தீராத் தேவையாகவே
    இருந்துவரும் அந்தப்
    பரிபூரண மனநிறைவு?

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி அலைவது தானே மனித மனம்.(நமக்குள் தான் இருக்கு மனநிறைவு)

    ராமலக்ஷ்மி கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  13. வந்த புதிதில் அம்மா எழுதி அனுப்பிய கடிதம் மிகுந்த பத்திரமாக இருக்கிறது :)

    என்னதான் மெயில்களும் மற்ற தொடர்பு சாதனங்களும் பெருகிவிட்டாலும் தபால்காரரின் மணியோசைக்கு எதிர்ப்பார்ப்பு எழும்புவது இன்றைக்கும் தொடர்கிறது - எல்லோருக்குமே இப்படியான அனுபவம் இருக்கலாம் :)

    பதிலளிநீக்கு
  14. கோலம் சமையல் குறிப்பு, பூஜை முறைகள் எல்லாமே கடிதத்திலா!!!

    சிறப்பான பகிர்வு... நானும் ஒரு சில கடிதங்களை பத்திரமாக வைத்துள்ளேன்..:))

    பதிலளிநீக்கு