புதன், 9 டிசம்பர், 2009

விசேஷமான நேரங்கள்


வாழ்க்கையில் தனிச் சிறப்பான விசேஷமான நேரங்கள் வரும். அவை ஒரு கனவைப் போல் கடந்து போய்விடும். அந்த நிமிடங்கள் மீண்டும் திரும்பிவர வாய்ப்பில்லை.ஆகவே,அவைவரும் போதே சிக்கென்று பிடித்துக் கொள்ள வேண்டும்.-இது அன்னையின் பொன்மொழி.

அப்படித்தான் மகளது ஊருக்கு(டெல்லி) போய் பேரன் பேத்தியுடன் இருந்த நேரங்களை விசேஷமான நேரங்களாய் கருதுகிறோம் நானும் என் கணவரும். அங்கு இருந்த 14 நாட்களும் சிட்டாய்ப் பறந்து விட்டன. குழந்தைகளுடன் இருந்த ஒவ்வொரு பொழுதும் இன்பமானவை.அன்னை சொன்னது போல் சிக்கென பிடித்துக் கொண்டோம்.

’நவம்பர் குளிர் இப்போது போகிறீர்களே குளிர் அதிகமாய் இருக்குமே,’ என்று கேட்டார்கள் இங்கு எல்லோரும். ’ஆனால் விடுமுறை இப்போது தானே எங்களுக்கு’ என்றார் என் கணவர். பேரக்குழந்தைகளைப் பார்த்து, அவர்களோடு இருக்கப் போவதை நினைக்கும் போது குளிர் என்ன செய்யும்? குளிருக்கு வேண்டிய ஆடைகள் அணிந்து வெற்றிகரமாய் குளிரை சமாளித்து வந்து விட்டோம்.(இனிமேல் அங்கு அதிக குளிர் வரும்.)

குளிர் சமயத்தில் அவர்கள் படும் துன்பத்தையும் பார்த்து வந்தோம்.பள்ளிக்குச் செல்லும் போது எத்தனை உடைகள்!பேத்தி 7 மணிக்கும், பேரன் 8 மணிக்கும் செல்வார்கள்.

அந்த குளிரில் போர்வைக்குள் இதமாய் படுத்துக் கொள்ளத்தான் சொல்லும் .அந்த குளிரில்  குழந்தைகளைப் பள்ளி பஸ் வந்து நிற்கும் இடம் வரை கொண்டு விட தாத்தா (என் கணவர்) ஆனந்தமாய் போனார்கள்,முதல் நாளே பஸ்ஸில் வரும் டீச்சரிடம்’ தாத்தா ஊரில் இருக்கும் வரை தாத்தாதான் வருவார்கள்’ என்று சொல்லிவிட்டானாம் என் பேரன்.


தினமும் காலை 8 மணிக்குப் பேரனைக்கொண்டு விட்டுவிட்டு வருவார்கள்.மதியம் 1 மணிக்கு கூட்டிக் கொண்டு வரக்கிளம்பிவிடுவார்கள்.பஸ் வந்தவுடன் தாததாவின் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடந்து, கதை பேசிக்கொண்டு வருவான்.வீட்டை நெருங்கும்போது கையை விடுவித்துக்கொண்டு வேகமாக ஓடி வந்து, வீட்டுக் காலிங் பெல்லை அடிப்பான்.நாம் டீ.வி பார்த்துக் கொண்டு இருந்தால் ’மேரா டைம்’ என்று கார்ட்டூன் சேனல் பார்ப்பான்.அவன் விளையாடும் கம்ப்யூட்டர் விளையாட்டில் எங்களையும் சேர்த்துக் கொள்வான்.

சில நேரங்களில் சிறு குழந்தை போலவும் ,சிலசமயங்களில் பெரிய மனிதன் போலவும் நடந்து கொள்வான்.இரவு கம்பிளிக்குள் படுத்துக் கொண்டு ஒளிந்து பிடித்து விளையாடுவான்.’ஸ்டோன்,பேப்பர்,சிசர்ஸ்’, ’ஸ்நேக்,வாட்டர்,கன்’ போன்ற விளையாட்டுக்களை எங்களோடு விளையாடுவான்.நாங்கள் ஊருக்குக் கிளம்பும்போது அவனும் எங்களோடு வருவதாக நினைத்து, அவனுடைய விளையாட்டுப் பொருள்களை எடுத்துவைக்கச் சொன்னான். ’விடுமுறை இப்போது கிடையாது. விடுமுறை வரும்போது போகலாம்’ என்று அம்மா கூறியபோது உண்மையைப் புரிந்துகொண்டு சமாதானம் அடைந்தான்.

சிலசமயங்களில் தாத்தா அவனை உயரமாகப் பிடித்தபடி பக்கவாட்டில் ஊஞ்சலாடுவதைப் போல் ஆட்டுவார்கள்.இது அவனுக்கு மிகவும் பிடிக்கும்.’தாத்தா ஜூலா தாத்தா ஜூலா’ என்று கூறிக்கொண்டு பக்கத்தில் வந்து திரும்பி நிற்பான், ஜூலா ஆட்ட வசதியாக.ஆடும் போது கண்களை மூடிக்கொண்டு,கைகளை கூப்பிக்கொண்டு ஓம் நமச்சிவாய என்பான்.சில நேரங்களில் கால்களில் ஏறி நின்று கொண்டு ஊஞ்சல் ஆட்டச் சொல்வான்.

காலையில் 4 மணிக்கு விழித்துக் கொள்ளும் நான், 4.30க்கு பள்ளிவாசலிருந்து வரும் ’பாங்கின்’ ஒலியில் தான் எழுந்து கொள்வேன். தினமும் , தியானம், உடற்பயிற்சிகளை முடித்து சிட் அவுட்டின் கதவைத் திறந்தால் கண்ணன் கோவிலிலிருந்து வரும் ஆலயமணி ஒசை, அருள் மழை பொழியும் பறவைகளின் ஒலி ஆகியவை கேட்கும். சிவானந்த லகரியில் ஒரு மயில் கரிய மேகத்தைக் கண்டு மகிழ்ச்சியால் ஆயிரங் கண்களுடைய அழகிய தோகையை விரித்து “கே-கீ”என்று கூவிக் கொண்டு ஆடும் காட்சியை ஆதி சங்கரர் விளக்குகிறார். அது போல் நான்கு மயில்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் அகவும்.

மதில் சுவரில் வைக்கப்பட்ட உணவைச் சாப்பிட வித விதமான பறவைகள் வரும்.காக்கா,புறா கிளி, சிட்டுக்குருவி,தேன் சிட்டுஆகியவை வரும். கொண்டைவால் குருவி ஒன்று கொண்டையை ஆட்டி ஆட்டி வரும் அழகோ அழகு.பின், பருந்து, அணில் மீதம் கீழே சிதறியவற்றை உண்ண எறும்பு கூட்டங்கள் என சகல ஜீவராசிகளுக்கும் உணவு உண்டு.(அவர்களுக்கு சப்பாத்தி சாதம் என பாம்பே மீல்ஸும் உண்டு)இக்காட்சி கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும்.வீட்டுக்குப் பின் புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் பறவை கூட்டமாய் உட்கார்ந்து எதையோ கொத்தித் தின்னும் போது நாய் துரத்தும் . துரத்தும் போது அவை சட் என்று பறக்கும் . மறுபடியும், மறுபடியும் இந்த விளையாட்டு தொடரும். மழை பெய்து தண்ணீர் தேங்கிக் கிடக்கும். அதில் பறவைகள் உடம்பை முக்கி குளிக்கும். அந்த ஊர் மக்கள் பறவைகளுக்காக ஒவ்வொருவர் வீட்டிலும் தண்ணீருக்கும் ,உணவுக்கும் பாத்திரத்தை வைத்து இருப்பார்கள்.தினம் எறும்பு புற்றுக்கு அரிசிக் குருணை போடுகிறார்கள்.

என் பேரன் சின்ன கண்ணன் எப்படி கண்ணை விட்டு மறைய வில்லையோ அது போல்  அங்கு உள்ள குருவாயூர் கண்ணனும் கண்ணுக்குள் இருக்கிறார். நாங்கள் போன சமயம் அந்தக் கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு கார்த்திகை 1ஆம் தேதியிலிருந்து 48 நாளுக்கு மண்டலாபிஷேக விழா. தினமும் கச்சேரி,நடனம்,பஜனை எனச் சிறப்பாய் நடந்தது.

குருவாயூர் கண்ணனுக்கு நித்தம் பூ அலங்காரம் தினசு தினசாய்.தென்னம் பூவில் வளையல் மாதிரி செய்து அதை மாலையாகப் போட்டு இருந்தார்கள், அப்படி ஒரு அழகு.கோவில் முழுவதும் விளக்கு சரவிளக்கு,அடுக்கு விளக்கு , கொடி கம்பம் அளவுக்கு விளக்கு என விளக்குகளின் அணிவகுப்பு. அவை சுத்தமாய் பளபளப்பாய் இருந்தது மிக விஷேசம்.

தினம் விளக்கை தேய்த்து பள பளப்பாயாக்க வயதான இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் வேலை செய்கிறார்கள். நம்மை பார்த்து ’ராம் ராம் நமஸ்த்தே’என்று சொல்லிவிட்டு வேலையைத் தொடருவார்கள்.அர்ச்சனை கூடைகளும் அப்படி தினம் சுத்தம் செய்கிறார்கள்.

பூஜை செய்பவர்கள் சுத்தமாய் அந்த குளிரிலும் சட்டை போடாமல் பூஜை செய்கிறார்கள். ஐயப்பன் முன் வைத்து இருக்கும் 18 படிகளிலும் தினமும், கலசம்,ஸ்வஸ்திக் போன்ற ஒவ்வொரு வடிவங்களில் விளக்கு வைத்து இருந்தார்கள்.

தினம் மாலை 6.30க்கு கோவிலில் நுழையும் போது சுக்குவெள்ளம்(சுக்குகாபி)
கொடுப்பார்கள்.குளிருக்கு இதமாக இருக்கும்.பிறகு பஜனை. அதில் கைகளைத் தட்டித் தட்டிப் பாடும் போது மீதி குளிரும் போய்விடும்

.பாடுபவர்,’ முன்னால் வாருங்கள் கையை மேலே தூக்கி தட்டுங்கள்’ என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.(அதனால் தான் அந்தக் காலத்தில் பெரியவர்கள் மார்கழிமாதத்தில் காலையில் எழுந்து குளித்து கோவிலுக்கு போய் இறைவனை பாடி ஆடி துதித்து வழிபடசொன்னார்கள்.

கார்த்திகையில் ஐயப்பனுக்கும்,மார்கழியில் மற்ற எல்லா இறைவனுக்கும் எல்லா மதங்களிலும் அதிகாலைப் பிரார்த்தனை உண்டு.அது குளிரைப் போக்கி நம் இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி நம்மை உற்சாகப் படுத்தும் என்பார்கள்.

குளிர், குளிர் என்று போர்வைக்குள் முடங்கிக் கிடந்தால் உடல் நலம் கெட்டுப் போகும்.பிரம்ம முஹூர்த்த நேரத்தில் தியானம் ஜெபம் பிரார்த்தனை செய்வது நல்லது என்றார்கள் நம் பெரியோர்கள்.)பிறகு ஐயப்பனுக்கு பிடித்த அன்னதானமும் உண்டு. பஜனைக்கு இல்லாத கூட்டம் அன்னதானத்திற்கு வந்து விடும்.வரிசையில் நின்று( பனியில்) வாங்க வேண்டும். நல்ல சூடாகத் தருவார்கள்.இரண்டு நாட்கள் பிரசாதம் பெற்றோம். வீட்டில் என் பெண் சப்பாத்தியும் வித, விதமான சப்ஜியும் அப்பாவிற்காக செய்து இருப்பாள் என்று என் கணவர் வந்து விடுவார்கள்.
இப்படியான விசேஷமான நேரங்களைப் பெற்ற நாங்கள் அதனை அவ்வப்போது நினைத்து அசைபோட்டு மகிழ்கிறோம்.
                                                                         வாழ்க வளமுடன்.

36 கருத்துகள்:

 1. //பள்ளிவாசலிருந்து வரும் ’பாங்கின்’ ஒலியில் தான் எழுந்து கொள்வேன். தினமும் , தியானம், உடற்பயிற்சிகளை முடித்து சிட் அவுட்டின் கதவைத் திறந்தால் கண்ணன் கோவிலிலிருந்து வரும் ஆலயமணி ஒசை, அருள் மழை பொழியும் பறவைகளின் ஒலி ஆகியவை கேட்கும். சிவானந்த லகரியில் ஒரு மயில் கரிய மேகத்தைக் கண்டு மகிழ்ச்சியால் ஆயிரங் கண்களுடைய அழகிய தோகையை விரித்து “கே-கீ”என்று கூவிக் கொண்டு ஆடும் காட்சியை ஆதி சங்கரர் விளக்குகிறார்.///


  லொக்கேஷன் சொல்றதை படிக்க படிக்க ஆனந்தம் + லைட்டா பொறாமையும் வருதேய்ய்ய் !:))))

  பிரிவு பத்தி அழகா சொல்லியிருக்கீங்கம்மா :)

  பதிலளிநீக்கு
 2. விசேஷமான நேரங்களைக் கண்ணுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள் விவரித்த அழகில். அடிக்கடி அவை வாய்த்திட என் அன்பான வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. அருமையான விசேஷமான நேரங்கள்.
  தாத்தா பாட்டி வாழ்க்கையை அருமையாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 4. ஆகா...அம்மா அருமையான பயணம் போல!!!

  பெண்,பேரன், பேத்தி, குளிர், பேரன் விளையாட்டு, பறவைகள், கோவில், பஜன்...என்று விசேஷமான நேரங்கள் கலக்கலாக இருக்கு...!

  அழகான நினைவுகளுடன் பகிர்ந்தமைக்கு நன்றி ;)

  பதிலளிநீக்கு
 5. ஆஹ மொத்தத்தில செமையா 10 நாளையும் கொண்டாடிட்டு வந்திருக்கீங்க, அது இன்னும் மனசிக்குள்ளர இனிச்சிட்டே இருக்கின்னு தெரியுது :)

  பதிலளிநீக்கு
 6. அழகான நினைவுகள்ம்மா!!! நல்லா டெல்லில எஞ்சாய் பண்ணியிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 7. தாத்தா பாட்டி வாழ்க்கையை அருமையாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 8. நல்லா என் ஜாய் செஞ்சிருக்கீங்க.. உங்க எழுத்துக்களைப் படிக்க படிக்க இயல்பான ஒரு உற்சாகம் தொத்திக்குது.

  பேரன், பேத்தியுடன் விளையாடுவது எப்போதுமே சுகம் தானே...

  டெல்லியில் நவம்பர் மாதம் குளிர்தான். ஆனால் அடுத்தடுத்த இரண்டு மாதங்கள் அதிகக்குளிர். அந்தக்குளிரிலும் தூக்கம் மாறாத கண்களுடன் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்புவதைப் பார்த்தது உண்டு. இதற்காகவே சீக்கிரமாவும் எழுந்திருச்சிருக்கேன். உண்மையில் அருமையான தருணங்கள் அவை.

  பதிவு ரொம்ப பிடிச்சிருக்குது அம்மா. முன்பு போல இனி அடிக்கடி எழுத ஆரம்பியுங்கள்.

  பதிலளிநீக்கு
 9. நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 10. பேரன் பேத்தியோட உற்காகமாய் விடுமுறை கழிச்சிருக்கீங்க போல :) டெல்லி குளிரையே 4 மணிக்கு எழுந்திருச்சு ஒரு வழி பண்ணிட்டீங்கம்மா :)

  இதை பயணக்கட்டுரையா தொடர்ந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 11. நல்லாயிருக்கு.

  பேரன் பேத்திகளுக்கு தாத்தாகிட்ட ஷ்பெஷல் கவனிப்பு நடக்கும். பாலை விட பாலாடை சுவை அதிகமாச்சே!!

  இங்கயும் குளிர் அதிகம். அம்மா அப்பாவால் வரமுடியாது என்பதால் லீவுக்கு நான் பிள்ளைகளுடன் ஊருக்கு போறேன்.

  பதிலளிநீக்கு
 12. அழகா சொல்லியிருக்கீங்க..அம்மா! நல்ல விவரிப்பு, கண் முன் காட்சிகளை விரிக்கிறது! இனிய தருணங்கள் அடிக்கடி வாய்க்கட்டும்! :-)

  பதிலளிநீக்கு
 13. குழந்தைகளுடன் இன்பமாகக் களித்தபொழுதுகள், ஊரின் அழகு, பறவைகள் உணவு உண்பது, குருவாயூர் கண்ணனின் தர்சனம் யாவும் கண்முன்னே வந்து நின்றது.

  பதிலளிநீக்கு
 14. ஆயில்யன்,
  முதலில் வந்து பாராட்டியதிற்கு
  நன்றி.

  பதிலளிநீக்கு
 15. ராமலக்ஷ்மி,
  வாழ்த்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 16. கோமா,

  தாத்தா,பாட்டி வாழ்க்கையே பேரபிள்ளைகளை ரசிப்பதற்கு தான்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. கோபிநாத்,
  என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 18. ஆம் தெகா,

  நீங்கள் சொன்னது போல் மனதுக்குள்
  இனிமையாகத்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 19. சின்ன அம்மிணி,

  நல்ல எஞ்சாய், குழந்தைகளுடன் குதுகலம் தான்.

  பதிலளிநீக்கு
 20. நன்றி செல்வநாயகி,

  நீங்கள் தான் அருமையாக எழுதுகிறீர்கள்.
  நான் உங்கள் ரசிகை.

  பதிலளிநீக்கு
 21. சென்ஷி,
  உங்கள் பாராட்டு கிடைக்கும் போது தான்
  எனக்கு உற்சாகம் தொத்திக்குது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 22. நிகே,
  வலை குழாமில் இணைந்து விட்டீர்களே,
  உங்கள் முதல் கவிதை படித்தேன் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 23. ஆதவன்,
  இன்னும் வரும்,ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. சந்தனமுல்லை,
  வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. புதுகைத் தென்றல்,
  அம்மா,அப்பாவிற்கு,பேரன் பேத்திகளுடன் குதுகலம் தான்.

  அடிக்கடி இந்த மகிழ்ச்சியை அம்மா,அப்பாவிற்கு கொடுங்கள்.

  உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. மாதேவி வாங்க,
  உங்கள் ரசிப்புக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 27. பிரிவு பற்றிய வரிகள் அருமை!

  பதிலளிநீக்கு
 28. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 29. ரொம்ப ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க....

  படிக்க மிகவும் நெகிழ்வா இருக்கு....

  குட்டீஸ் உடன் கழிக்கும் பொழுது மிகவும் இனிமையானது....

  //குளிர்,
  குளிர் என்று போர்வைக்குள் முடங்கிக் கிடந்தால் உடல் நலம் கெட்டுப் போகும்.பிரம்ம முஹூர்த்த நேரத்தில் தியானம் ஜெபம் பிரார்த்தனை செய்வது நல்லது என்றார்கள் நம் பெரியோர்கள்.)//

  மிகவும் சரியே... அந்த அதிகாலை சுத்த காற்றை சிவாசித்தாலே பல நோய் நொடி பறந்து போகும்...

  பதிலளிநீக்கு
 30. கோபி,விசேஷமான நேரங்களை ரசித்தமைக்கு நன்றி.

  சிஸ்டம் பழுது அடைந்து இருந்ததால்
  வெகு நாட்களாய் மெயில் பார்க்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 31. ராமலக்ஷ்மி புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.

  உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 32. அண்ணாமலையான்,உங்கள் முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. கோமதி, எத்தனை அழகாக டெல்லியையும், மகள் வீட்டையும் வார்த்தைகளால் அலங்கரித்து விட்டீர்கள். அருமை மிக அருமை.
  நானே அந்த பால்கனியில் நின்ற உணர்ச்சி. இன்னும் நிறைய எழுதுங்கள். புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
 34. நன்றி வல்லிஅக்கா.

  உங்கள் ஊக்கத்தால் தான் எழுதி கொண்டு இருக்கிறேன்,நேற்று ஒரு
  தொடர் பதிவு எழுதியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு