மாமனார் அவர்கள்
அம்மாவீடு - புதுப்பொலிவுடன்
எங்கள் வீடு
தற்காலிக பூஜை அறை
தங்கை கொடுத்த மாவில் தோசை
சாதம் குக்கரில்
என்ன ஆளையே காணோம் என்று நினைத்தீர்களா?
இந்தப் பதிவு, நான் பதிவுலகிற்கு வந்து நான்கு வருடம் முடிந்து ஐந்தாவது ஆண்டு துவக்கத்தில் வருகிறது..
2009 ஜுன் 1ஆம் தேதி என் வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.
ஊர்ப்பயணங்களால் ஆண்டு நிறைவையும் , ஆரம்பத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
கோவை, மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, என்று பயணங்கள். அதனால் தான் வலைப் பக்கமே வரவில்லை. கோவையில் மாமனார் அவர்களைப் பார்க்கப் போனோம். பின் அங்கிருந்து மதுரையில் எங்கள் சொந்தவீட்டில் கொஞ்சம் புதுக் குடித்தனம்.
புதுக்குடித்தனமா? என்று கேட்பவர்களுக்கு -
1986 ல் நாங்கள் மதுரையில் வீடு வாங்கினோம். வாங்கியதிலிருந்து வாடகைக்கு விட்டு விட்டதால் அதில் இருந்ததே இல்லை. மாடியில் ஒரு அறை எங்களுக்கு என்று கட்டி வைத்து இருப்பதால், மதுரை போனால் அதில் தங்கிக் கொள்வோம். எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள எனது தம்பி, தங்கைகள், அண்ணன் வீடுகளில் நன்றாக மகிழ்ச்சியாக சாப்பிட்டுக் கொள்வேன்.
இந்த முறை மழை பொய்த்துப் போனதால் வீட்டில் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லை, கார்ப்பரேஷன் தண்ணீரும் வரவில்லை. நாங்களே தண்ணீர் விலைக்கு வாங்கித்தான் தொட்டியில் ஏற்றி பயன்படுத்தினோம். அதனால் வாடகைக்கு விட வேண்டாம், பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டோம். வீடு காலியாக இருக்கும்போது நாம் போய் சமைத்து சாப்பிடலாம் என்று முடிவுசெய்தார் என் கணவர். எனக்கு அதிர்ச்சி! பின் இத்தனை நாளும் ,ஊரிலிருந்து வந்து இருக்கிறேன் என்றால் உறவினர்கள் எல்லாம் ஆளுக்கு ஒவ்வொரு நாள் என் வீட்டில் இன்று சாப்பாடு என்று முறை வைத்துக் கொண்டு நம்மை உபசரிப்பது வழக்கம். நானும் ஜாலியாக இருப்பேன் அது முடியாமல் என்னை அங்கு போயும் சமைக்க சொன்னால் அதிர்ச்சி வராதா?
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று , போனவுடன் இரவு உணவு நம் வீட்டில் என்று சொல்லி விட்டார்கள். அவசரத்திற்கு தண்ணீர் சுடவைக்க என்று இண்டக்ஷன் ஸ்டவ் வாங்கி வைத்து இருந்தேன். அதில் முதலில் பால் காய்ச்சினோம். சாமி படம் ,விளக்கு என்று கொண்டு போனதை வைத்து வணங்கினோம். ஒரு தங்கை கோலம் போட்டாள். ஒரு தங்கை விளக்கு ரெடி செய்தாள் முன்பே தங்கை, வீட்டைச் சுத்தம் செய்து வைத்து இருந்தாள் நல்ல முறையில் பால்காய்ச்சி எல்லோருக்கும் கொடுத்து, பிள்ளையார் சுழி போட்டு விட்டேன், என் சமையலுக்கு. கரண்ட் அடுப்புக்கு இலவசமாய்,ஒரு தோசைக்கல், குக்கர், ஒரு வாணலி கொடுத்து இருந்தார்கள் அதுபோக ரைஸ் குக்கர் மற்றும் கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள் எடுத்து சென்று இருந்தேன். பலசரக்கு சாமான்கள் வேறு வாங்கி ஆரம்பித்து விட்டேன், வெற்றிகரமாய் என் நளபாகத்தை.
இரவு தேங்காய் சட்னி , தோசை சுட்டு கொடுத்து விட்டேன்.பழைய மிக்ஸி ரிப்பேர் செய்யப்பட்டு எடுத்து செல்லப்பட்டது.
அண்ணி,தங்கைகள் எல்லாம் ஊரிலிருந்து வந்த என்னை ஏன் சிரமப்படுத்துகிறீர்கள் ஜாலியாக இருந்து விட்டு போகட்டுமே! என்று என் கணவரிடம் கேட்ட போது, புன்சிரிப்பாய் எப்போதும் தான் உங்கள் வீடுகளில் சாப்பிடுகிறோமே! இப்படி ஒரு மாறுதலுக்கு என்று சொல்லி விட்டார்கள், என்னால் தப்பிக்க முடியவில்லை.
கரண்ட் கட் ஆகுமே ! கரண்ட் அடுப்பை மட்டும் நம்பி பயனில்லையே ! என்று என் தங்கை, கையில் எடுத்து செல்லும் சிலிண்டர் அடுப்பை கொண்டு வந்து தந்தாள். அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும். கரண்ட் இல்லாத போது அதில் இட்லி செய்தேன்.
இப்படி இரண்டு நாள் போயிற்று என் மேல் கருணை வைத்த மின்சாரம், ஒரு நாள் எங்கள் வீட்டில் மட்டும் போய்விட்டது! பியூஸ்!--
வீட்டிற்குள் என்றால் என் கணவரே பார்த்து விடுவார். அது கம்பத்தில் போய் விட்டது. அன்று சனிக் கிழமை இரவு. மின்துறையில் இருந்து யார் வருவார்கள்? அடுத்த நாள் ஞாயிறு -யாரும் வரமாட்டார்கள். எதற்கும் வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் எழுதி வைக்க வேண்டும் என்றார்கள். அப்போது தான் பழுது பார்ப்பவர்கள் வந்து பார்ப்பார்கள் என்றார்கள்.
யாரும் வரவில்லை அப்படியும். மறுநாள் போய் கேட்டால், இப்போது எல்லாம் இந்த கடைக்கு வந்து பார்க்க வருவதே இல்லை என்றார் கடையில் இருந்த ஒரு பணியாள்.
மின்சார அலுவலகத்திற்கு சென்று எழுதி வைத்து விடுங்கள் என்று சொன்னார்கள் .எனக்கு வழியே தெரியாது. ஒவ்வொருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டு போனால், ”மேல் மாடியில் நோட்டு இருக்கும் அதில் என்ன கோளாறு என்று எழுதி வைத்து விட்டுப் போங்கள்” என்றார்கள். நோட்டை எடுத்துப் பார்த்தால், அதில் பலர் , ”எங்கள் வீட்டில் மின் இணைப்பு தடை பெற்று மூன்று நாட்கள் ஆகி விட்டது, தயவு செய்து மின்சாரம் இயங்க உதவ வேண்டும்” என்று எழுதி முகவரி போன் நம்பர் எல்லாம் கொடுத்து இருந்தார்கள். அதைப்பார்த்து நானும் காப்பி அடித்து அதேபோல் எழுதி வைத்து விட்டு வந்தேன். அப்படியும் அதற்கு மறுநாள் வந்து தான் சரி செய்தார்கள்.
மின்துறையில் இருந்து வந்தவர் ”எல்லாம் பழைய காலத்து ஒயர். அதை எல்லாம் மாற்ற வேண்டும். அப்போது தான் போஸ்டில் மின்தடை ஏற்படாது ”என்றார். புது ஒயர் போடப்பட்டது. பியூஸ் போனதும் ஒரு நன்மைக்குத்தான். அதனால் தான் புது ஒயர் மாற்றப்பட்டது.
அப்புறம் என் சமையல் என்னாயிற்று என்று கேட்டீர்களா? அது அவ்வளவுதான். மறுபடியும் ஜாலியாக அண்ணி வீடு, தங்கை வீடு , தம்பி வீடுதான்.
அண்ணி அம்மா வீட்டை வாங்கி மறுபடியும் கொஞ்சம் ரிப்பேர் செய்து மாடி கட்டி இருக்கிறார்கள். பின்னால் உள்ள பரண் அறையில் அம்மாவின் பழைய சாமான்கள் , பழைய போட்டோக்கள், பழைய மர்பி ரேடியோ எல்லாம் இருந்தது. நாங்கள் விளையாடிய பழைய இரும்பில் செய்த விளையாட்டு சாமான்கள், நிறைய இருக்கும். ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தான் இருக்கிறது. செப்பு சாமான்கள் இருந்தன. எல்லோரும் எடுத்துக் கொண்டது போக மீதி இருந்தன. அது என் பெரிய தம்பிக்குரிய பங்கு. அவன் வேறு ஊரில் இருப்பதால் அண்ணி அதைப் பின்கட்டில் ஒரு அறையில் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள். அதை எல்லாம் அந்த அறை வெள்ளை அடிக்கப் படுவதால் வெளியே எடுத்து வைத்தார்கள் . அதை எல்லாம் போட்டோ எடுத்துக் கொண்டேன். அம்மாவின் அந்தக்கால இலட்சுமி படம் போட்ட தகர உண்டியல், அதில் சேமித்து வைத்து இருந்த பழைய நாணயங்கள், பழைய டெலிபோன், பழைய விளக்குகள், அம்மா பயன்படுத்தும் தட்டு, சீனிச்சம்புடம், டபரா , கிண்ணங்கள் என்று அவற்றை போட்டோ எடுத்துக் கொண்டேன். என் அப்பாவின் அலுவலக போட்டோக்கள், தாத்தா, பாட்டி, போட்டோக்களை எல்லாம் எடுத்துக் கொண்டேன் எனது கேமராவில் .
ஒவ்வொருவரும் அவர்களுக்கு வேண்டியதை நினைவாக வைத்து இருக்கும் போது நாம் அதை எடுத்துக்கொள்ளக் கூடாது அல்லவா ? எனக்கு தேவையானதை அம்மா இருக்கும் போதே ஆலபத்திலிருந்து கேட்டு வாங்கி கொண்டேன். அவரவர்கள் (தம்பி,தங்கைகள்) அம்மா அப்பாவுடன் இருக்கும் போட்டோக்களை ,அம்மா முன்பே அவரவர்களுக்கு கொடுத்து விட்டார்கள்..
அப்புறம் திருந்செந்தூருக்கு என் கணவரின் தம்பி பேரனுக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவிற்கு போய் இருந்தோம். அங்கு உள்ளதை தனிப் பதிவாய் போடலாம் என நினைத்திருக்கிறேன்.. கடற்கரை அனுபவம் மிக அதிகம் இந்த முறை.அங்கு செப்பறை கோவில் , இராஜவல்லிபுர அகிலாண்டேஸ்வரி கோவில் எல்லாம் போனோம் . அழகிய கோவிலகள். இயற்கை வனப்பு மிகுந்த இடம்.
இப்போது மீண்டும் கோவை பயணம் - ஒரு மணிவிழாற்கு போகப் போகிறேன். அதற்கு இடையில் உங்களுடன் இந்த சந்திப்பு.
அம்மாவின் பொக்கிஷங்கள்.
இரும்பு விளையாட்டு சாமான்கள் நாங்கள் சிறு வயதில் விளையாடியது
அப்பா கீழ் வரிசையில் முதலில் அமர்ந்து இருக்கிறார்கள்
எங்கள் வீட்டு பழைய ரேடியோ பெட்டி
மரத்தில் செய்த பாத்திரம் திருவனந்தபுரத்தில் தாத்தாஅம்மாவுக்கு கொடுத்தது, மரவை என்று பேர்
அம்மா வைத்து இருந்த விளக்குகளில் கொஞ்சம், தம்பியின் பங்கு
அம்மாவின் கூஜா
அம்மா பயன்படுத்தும் தட்டு, சீனிச்சம்புடம், டபரா , கிண்ணங்கள்
அப்பா நாலாவது வரிசையில் நாலாவதாக நிற்கிறார்கள்
அப்பாவின் அப்பா
அப்பா
அப்பாவின் அப்பா, அம்மா
தம்பி வைத்து இருந்த உண்டியலில் பழைய நாணயங்கள்
உண்டியல்
மதுரையில் எங்கள் பகுதி முழுவதும் தண்ணீர் கஷ்டம் . எங்கு பார்த்தாலும் காணப்படும் காட்சி.

நல்ல மழை பெய்து மதுரையில் தண்ணீர் கஷ்டம் நீங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு திருநெல்வேலிப் பயணம் தொடர்ந்தோம்.
வாழ்க வளமுடன்















































