புனுகீஸ்வரர் கோவில்
டிசம்பர் 12. 11. 2022 ல் மயிலாடுதுறை போன போது அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகள் தொடர் பதிவாக போட்டு வருகிறேன்.
மயூரநாதர் கோவில் நான்கு பகுதிகளுடன் நிறைவு பெற்றது.
இந்த பதிவில் மயிலாடுதுறையில் கூறைநாட்டில் உள்ள புனுகீஸ்வரர் கோவில் இடம்பெறுகிறது.
வெளியிலிருந்து எடுத்த படம்
உள்ளே இருந்து எடுத்த படம்.
உள் நுழையும் கோபுர வாசல் சுவரில் இடம் பெற்ற சிலை . புனுகு பூனை சிவனை மலர் கொண்டு வழிபடுகிறது
நிற்கும் பிள்ளையார்
சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை
கோவிலுக்குள் போகும் வழி
கொடிமரம்
கொடிமரம் வணங்கும் இடத்தில் இப்போது புதிதாக படம் வரைந்து இருக்கிறார்கள், எத்திசையில் விழுந்து வணங்குவது என்று சிலருக்கு தெரியாமல் இருக்கும். அதனால் படம் வரைந்து வைத்து இருக்கிறார்கள்.
ஆண் வணங்கும் "அஷ்டாங்க நமஸ்காரம் " முறை படம் சரி
பெண் வணங்கும் "பஞ்சாங்க நமஸ்காரம்" வரைய வில்லை.
இந்த கோவில் வரலாறு :- அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரர்சுவாமி திருக்கோயில், புண்ணிய நதியாம் காவிரிக்குத் தென்பால், கூறைநாட்டில் அமைந்து உள்ளது. சிவபெருமானை மதியாமல் தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட தேவேந்திரன் சாபம் பெற்று, இத்திருக்கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான் மகிழும் வண்ணம் புனுகுப் பூனை உருவெடுத்துப் பூஜித்து சாப விமோசனம் அடைந்து , இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றார் என்பது இத்தல வரலாறு .
கோயில் சிறப்பு:-
சனிபகவான் திருநள்ளாரில் இருப்பதைப் போன்று கிழக்கு நோக்கி இருக்கிறார். தனி விமானத்துடன் கூடிய கருவறையில் தனியாக இருப்பது தனிச்சிறப்பு.
சனிப்பெயர்ச்சி விழா, மற்றும் வாராவாரம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடக்கும்.
என் கணவர் இந்த கோவிலுக்கு "தனியூர் சாலிய புராணம்" என்று நூல் எழுதி இருக்கிறார்கள்.
இந்த கோவில் அம்மன் சாந்த நாயகி மேல் "சாந்த நாயகி பிள்ளைத் தமிழ்" என்ற நூலை எழுதி முடித்தார்கள் சாந்தநாயகி அருளால் இனி வெளியிட வேண்டும்.
இந்த முறை போன போது மணி 12 அதனால் நடை சாற்றி விட்டார்கள். கார்த்திகை கடைசி சோமவார நாள். அதனால் மாலை நடக்கும் சங்காபிஷேகத்திற்கு எடுத்து வைத்து தயார் செய்து கொண்டு இருந்ததால் கோவில் வாசல் கதவு அடைக்கவில்லை. அம்மன், சுவாமி சன்னதி கதவு அடைத்துவிட்டார்கள்.
சுவாமி சன்னதிக்குள் இருக்கும் மற்ற சன்னதிகள், மற்றும் சுவாமி அம்மனை புனுகீஸ்வரர் பதிவு சுட்டியில் பார்க்கலாம்.
தலமரம் பவளமல்லி , நேசநாயனாருக்கு தனி சன்னதி உள்ளது. சிவ நேசநாயனார் என்று பேர் உள்ளது இங்கு.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டத்தில் காம்பீலி வட்டம் காம்பீலி நகரத்தில் தோன்றிய நேசநாயனார் சாலிய மரபில் வந்தவர். சிவனையும் சிவ அடியார்களை நேசித்தபடியால் இவர் சிவநேசநாயனார் என்று அழைக்கப்பட்டார். அவர் புனுகீஸ்வரர் கோவிலில் காம்பீலியிலிருந்து எடுத்து வந்த விநாயகரையும், தண்டாயுதபாணியையும் பிரதிட்டை செய்தார் என சொல்லப்படுகிறது. ஆண்டு தோறும் பங்குனி ரோகிணியில் நேசநாயனாருக்கு இவர்கள் சிறப்பாக குருபூஜை செய்கிறார்கள்.
மாலை நடப்பதற்கு தயாராக இருக்கும் 1008 சங்குகள்.
மூன்று வலம்புரி சங்குகள் தான் பிரகாரம் சுற்றி வலம் வரும் , இன்னும் மேடையில் கடம் அலங்காரம் செய்து வைப்பார்கள்
மெய் காப்பாளர் மருமகள் இருந்தார்கள் கோவிலில், அவர்கள் இன்று இங்கு தங்கி சங்காபிஷேகம் பார்த்து போங்கள் என்றார்கள். ஆசைதான் ஆனால் மகனுடன் ஊருக்கு போகும் முன் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்த படியால் கிளம்பி விட்டோம்.
மயிலாடுதுறையில் இருந்த போது தவறாது எல்லா வாரமும் கலந்து கொள்வோம்.
//(16/07/2017) அன்று மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி திருக்கோயிலில்
மஹா கும்பாபிஷேகம் நடந்தது.//
இந்த கோவில் கும்பாபிஷேகம் நாங்கள் மதுரை வந்த பின் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு மதுரையிலிருந்து போய் இருந்தோம். அதில் எல்லா சன்னதி படங்களும் இருக்கிறது பார்க்கலாம்.
பின்னூட்டங்கள் குறைவு என்றாலும் பார்வையாளர் 2715பேர் பார்த்த பதிவு.
விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை இந்த பதிவில் இடம்பெற்றவை.:-
1570 பேர் பார்த்த பதிவு.
இந்த கோவிலில் 2014 ல் நடந்த லட்சதீப விழாவைப் போட்டு இருக்கிறேன். இதில் என் கணவர் வரைந்த படங்களும் இருக்கிறது. சாந்தநாயகி அம்மனுக்கு குருக்கள் அழகான சந்தனக்காப்பு அலங்கார செய்து இருக்கும் படம் இடம் பெற்று இருக்கும்.
பெரியபுராணத்தில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும்நன்மைகளைக் கூறும் பாடல்கள், திருமந்திரத்தில் உள்ள பாடல்கள் சொல்லி விளக்கம் கொடுத்து பேசினார்கள் அதன் பின் பேராசிரியர் பெருமக்கள் பேசினார்கள். முதலில்பேசிய பேராசிரியர் என் கணவர்.
கணவர் சொற்பொழிவு செய்யும் படம் இடம்பெற்று இருக்கும்.
இந்த பதிவில் வெளிபிரகாரம் பார்க்கலாம்.
பின்னால் தெரியும் நேசநாயனார் அரங்கத்தில் தான் சொற்பொழிவுகள் நடக்கும். (இப்போது போன போது எடுத்த படம்) அரங்கத்தின் பின் சகஸ்ரலிங்கம், நர்த்தன விநாயகர், சனி பகவான் தனி சன்னதியில் உள்ளார்.
ஆலயங்களில் நவராத்திரி விழா இந்த பதிவில் புனுகீஸ்வரர் கோவில் நவராத்திரி விழா , மற்றும் பக்கத்தில் உள்ள காமாட்சி, மற்றும் பெருமாள் கோவில் கொலு படங்கள் இடம்பெற்று இருக்கும்.
படிக்காதவர்கள் படிக்கலாம்.
கம்பி தடுப்பு போட்டு இருக்கும் இடத்தில் நவராத்திரிக்கு அம்மன் கொலுவீற்று இருப்பாள். படிகளில் கொலு பொம்மைகள் வைத்து இருப்பார்கள்.
கீழே தெரியும் இந்த கடப்பை கற்களை எடுத்து விட்டால் உள்ளே கொலுவுக்கு அழகான தெப்பக்குளம் இருக்கும் அதில் நீருற்றி மீன்கள் போட்டு தாமரை மலர்கள் போட்டு பொம்மைகள் வைத்து இருப்பார்கள். நவராத்திரி விழா பதிவில் பார்க்கலாம்.
கோவில் திருக்குளம் நீராழி மண்டபத்தில் நந்தி இருக்கிறார்
கோவில் குளத்தை சுற்றியும் புதர் மண்டி கிடக்கிறது பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கும்பாபிஷேக பதிவில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லா குளத்தை போட்டு இருந்தேன். இப்போது நீர் இருக்கு ஆனால் நாணல் மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிக்கிறது.
திருக்குளத்துக்கு அருகில் உள்ள தியான மண்டபம்
குளத்திற்கு அருகில் இன்னொரு புறத்தில் பெரிய தொட்டியில் லட்சதீப திருவிழாவிற்கு வேண்டிய மண் அகல்கள் உள்ளன.
குளத்திற்கு அருகில் இன்னொரு புறத்தில் பெரிய தொட்டியில் லட்சதீப திருவிழாவிற்கு வேண்டிய மண் அகல்கள் உள்ளன.
சிவலிங்கம் இருக்கிறது .
அம்மன் சன்னதிக்கு எதிரில் திருக்குளம் உள்ளது.
மயிலாடுதுறையில் இருக்கும் போது கூறைநாட்டில் முதலில் 14 வருடம் இருந்தோம் கோவில் பக்கம் அதனால் மாலை நேரம் தினம் நான் மட்டும் போவேன். கோவில் நந்தவனத்து செடிகளுக்கு தண்ணீர் விடுவேன். பிரதோஷம், மற்றும் விழாக்களுக்கு கணவரும் வருவார்.
அப்புறம் பூக்கடை தெரு வந்து விட்டோம். இங்கு வந்தாலும் போய் கொண்டு இருந்தேன் . வெகு தூரம் நடந்து போவேன்.
கணவருடன் வண்டியிலும் போவேன்.
ஞாயிறு தோறும் நடக்கும் கூட்டு வழிபாட்டுக்கு நாங்களும், குழந்தைகளும் கலந்து கொள்வோம். அதை நடத்தி வந்த ராமலிங்கம் செட்டியார், மற்றும் அவர் மனைவியை மறக்கவே முடியாது. அவர்கள் புரட்டாசி மாதம் ஆரம்பித்தார்கள் வழிபாட்டு மன்ற ஆண்டுவிழா புரட்டாசி மாதம் முதல் ஞாயிறு நடைபெறும் அப்போதும் கணவர் உரை ஆற்றுவார்கள். தன்னுடன் பணிபுரிந்த பேராசிரியர்களையும் பேச வைப்பார்கள்.
சிவபூஜை நடைபெறும் , நிறைய பேர் செய்வார்கள் இருமுறை என் மாமனார் கலந்து கொண்டார்கள்.
இப்போது திரு . தட்சிணாமூர்த்தி அவர்கள் நடத்தி வருகிறார்கள்.
சமய தத்துவ ஆராய்ச்சிகள், சொற்பொழிவுகளை ஆசிரியர்களை வைத்து நடத்தி வருகிறார்கள். புரட்டாசி ஆண்டு விழா, மற்றும் தை, ஆடி மாதம் 1008 விளக்கு பூஜை விழாக்களை சிறப்பாக நடத்தி வருகிறார்.
கோவில் நிர்வாகத்தினரும் அனைத்து விழாக்களையும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். கோவில் மூலம் கிடைத்த நட்புகளை மறக்கவே முடியாது. இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். போனில் பேசி கொள்ளலாம் என்று மகனும் நானும் பேசி கொண்டோம்.
நட்புகள் யாரையும் சந்திக்கவில்லை. தெரிந்தால் வருத்தப்படுவார்கள்.
இத்துடன் மயிலாடுதுறையில் கோவில்களை தரிசனம் செய்து என் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பதிவுகள் நிறைவு பெறுகிறது.
பதிவில் இடம் பெற்ற படங்கள் எல்லாம் மகன் எடுத்த படங்கள்.
சாந்தநாயகி , புனுகீஸ்வரர் இருவரும் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேன்டும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------
அனைத்து படங்களும், தகவல்களும் அருமை...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//அனைத்து படங்களும், தகவல்களும் அருமை.//
உங்கள் கருத்துக்கு நன்றி.
பழைய பதிவில் ஸார் வரைந்த இரண்டு படங்களையும், ஸாரையும் கண்டு வந்தேன். ["ஏங்க... ஸ்ரீராம் நீங்க வரைஞ்சு ரெண்டு படத்தையும் நல்லா இருக்குன்னு பாராட்டி இருக்காருங்க,,," "அப்படியா? தேங்க்ஸ்னு சொல்லிடும்மா" - இப்படி நடந்திருக்கக் கூடிய உங்களுக்கிடையேயான உரையாடலை மனப்பூர்வமாக அமைத்துப் பார்த்துக் கொள்கிறேன்!]
பதிலளிநீக்கு//பழைய பதிவில் ஸார் வரைந்த இரண்டு படங்களையும், ஸாரையும் கண்டு வந்தேன். ["ஏங்க... ஸ்ரீராம் நீங்க வரைஞ்சு ரெண்டு படத்தையும் நல்லா இருக்குன்னு பாராட்டி இருக்காருங்க,,," "அப்படியா? தேங்க்ஸ்னு சொல்லிடும்மா" - இப்படி நடந்திருக்கக் கூடிய உங்களுக்கிடையேயான உரையாடலை மனப்பூர்வமாக அமைத்துப் பார்த்துக் கொள்கிறேன்!]//
நீக்குஆமாம், ஸ்ரீராம் அப்படித்தான் எங்கள் உரையாடல் இருந்து இருக்கும்.அப்படியே சொல்லி விட்டீர்கள். நீங்கள்" சாரின் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சே " என்று சொன்னால் அடுத்தபதிவில் போட்டுவிடலாம் என்பார்கள்.
கடப்பா கல்லை நீக்கினால் நவராத்திரி சமயங்களில் நீரூற்றி குளம் போல செய்து கொள்ளலாம் - நல்ல ஏற்பாடு.
பதிலளிநீக்கு//கடப்பா கல்லை நீக்கினால் நவராத்திரி சமயங்களில் நீரூற்றி குளம் போல செய்து கொள்ளலாம் - நல்ல ஏற்பாடு. //
நீக்குநவராத்திரி கொலு பதிவில் பார்த்தால் தெரியும். முன்பு மணல் போட்டு மூடி இருப்பார்கள் இப்போது இப்படி கல் போட்டு மூடி இருப்பது நல்ல யோசனையாக இருக்கிறது.
தட்சன் யாகத்துக்கு இந்திரனும் சென்றானா? சாபம் பெற்றானா? இதுபோல புராணக் கதையை இப்போதுதான் அறிகிறேன்.
பதிலளிநீக்குதட்சன் யாகத்துக்குப் போய் தேவர்கள் பட்டபாடு, கஷ்டம்
நீக்குஇதெல்லாம் படித்ததில்லையா கேட்டதில்லையா!.. ஸ்ரீராம்..
//தட்சன் யாகத்துக்கு இந்திரனும் சென்றானா? சாபம் பெற்றானா? இதுபோல புராணக் கதையை இப்போதுதான் அறிகிறேன்.//
நீக்குதட்சன் யாகத்தில் தேவர்கள் எல்லோரும் கலந்து கொண்டது தெரியும் தானே! புனுகு பூனையாக பூஜை செய்த கதை மட்டும் தெரிந்து இருக்காது என்று நினைக்கிறேன்.
சிவன் கோவிலில் ஸ்வாமியை தரிசித்து, பிரகாரம் எல்லாம் சுற்றியபின் வெளியே வரும்போது கொடிமரத்துக்கு அருகில் நமஸ்காரம் செயய்வேண்டும். பெருமாள் கோவிலில் உள்ளே நுழையும்போதே நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பதிலளிநீக்கு//சிவன் கோவிலில் ஸ்வாமியை தரிசித்து, பிரகாரம் எல்லாம் சுற்றியபின் வெளியே வரும்போது கொடிமரத்துக்கு அருகில் நமஸ்காரம் செயய்வேண்டும். பெருமாள் கோவிலில் உள்ளே நுழையும்போதே நமஸ்காரம் செய்ய வேண்டும்//
நீக்குஆமாம். போகும் போது கொடிமரத்திற்கு ஒரு வணக்கம் பின் தரிசனம் செய்தபின் கொடிமரத்தை கீழே விழுந்து வணங்கி சில நிமிடம் பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லி தியானித்து வர வேண்டும் என்பார்கள்.
படங்கள் யாவும் சிறப்பு. கோவிலின் பெருமை அறிந்தேன். திருக்குளம் வழக்கம்போல கவனிப்பாரற்றுக் கிடப்பது வேதனை.
பதிலளிநீக்குதிருக்குளங்களைப் பராமரிக்காமல் விடுவதே இன்றைய கலாச்சாரம்!..
நீக்குகூறை நாடு மயிலாடுதுறையில் தனிப்பகுதி. நான் சென்றதில்லை..
நீக்குநல்லதொரு கோயிலை அறியாமல்
தரிசனம் செய்யாது இருந்திருக்கின்றேனே!..
கௌதமரின் குடிலில் இருந்து இந்திரன் பூனையாக உருமாறித் தான்
நீக்குதப்பித்தானாம்...
அந்தப் பழியும் பாவமும் நீங்குவதற்கு வழிபட்ட தலமாக இருக்குமோ?..
தங்கள் மாமனாரின்
நீக்குசிவத்தொண்டும்
ஐயா அவர்களின் அரும் பணியும்
இந்தக் கோயிலுடன் ஒன்றியிருக்கின்றன என்பதை அறியும் போது மனம் நெகிழ்கின்றது..
ஓம் நம சிவாய..
/படங்கள் யாவும் சிறப்பு. கோவிலின் பெருமை அறிந்தேன். திருக்குளம் வழக்கம்போல கவனிப்பாரற்றுக் கிடப்பது வேதனை.//
நீக்குஆமாம், திருக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை மீட்டு எடுத்து தண்ணீர் வரவழைத்தார்கள். இப்போது இப்படி இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.
படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குபுனுகு பூனை சிவன் புகைப்படம் அற்புதம்.
தகவல்கள் சிறப்பு நல்லதொரு தரிசனம் கிடைத்தது நன்றி
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது.
புனுகு பூனை சிவன் புகைப்படம் அற்புதம்.
தகவல்கள் சிறப்பு நல்லதொரு தரிசனம் கிடைத்தது நன்றி//
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அனைத்தும் வெகு அழகு. அதிலும் நீராழி மண்டபத்தின் நிழல் நீரில் தெரியும்படி இருக்கும் படங்கள் சிறப்பு. தகவல்கள் அனைத்தும் சிறப்பு. நம் ஊரில் தான் எத்தனை எத்தனை சிறப்பான கோவில்கள்… பார்க்க ஒரு பிறவி போதாது… தற்போது திருச்சி கோவில்கள் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தும் வெகு அழகு. அதிலும் நீராழி மண்டபத்தின் நிழல் நீரில் தெரியும்படி இருக்கும் படங்கள் சிறப்பு. //
நன்றி.
//தகவல்கள் அனைத்தும் சிறப்பு. நம் ஊரில் தான் எத்தனை எத்தனை சிறப்பான கோவில்கள்… பார்க்க ஒரு பிறவி போதாது… தற்போது திருச்சி கோவில்கள் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன்.//
ஆமாம், நீங்கள் சொல்வது போல கோவில்கள் நிறைய இருக்கிறது. வாழ்நாள் எல்லாம் பார்த்தாலும் நிறைவு செய்ய முடியாதுதான்.
தேடி தேடி கோவில்களை தரிசனம் செய்து வருவது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தகவல்களுடன் பகிர்வு அருமை. மகன் புகைப்படங்களை சிறப்பாக எடுத்து உள்ளார். சங்குகளின் அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சி. இந்தக் கோவிலிலும் ஓவியம் மிக அழகு.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//தகவல்களுடன் பகிர்வு அருமை. மகன் புகைப்படங்களை சிறப்பாக எடுத்து உள்ளார். //
நன்றி.
//சங்குகளின் அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சி. இந்தக் கோவிலிலும் ஓவியம் மிக அழகு.//
ஆமாம், ஆரம்பத்தில் 108 சங்கு பூஜை இருந்தது பிரகு அன்பர்கள் நிதி உதவி செய்ய 1008 ஆனது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு//கூறை நாடு மயிலாடுதுறையில் தனிப்பகுதி. நான் சென்றதில்லை..//
கூறைநாடு என்று அந்த இடத்திற்கு பெயர் ஒரு காலத்தில் கூறைபுடவை னெய்பவர்கள் அந்த இடத்தில் வசித்தனர். இப்போது கூறைபுடவை நெய்து கொடுக்கும் ஒரு சில கடைகள் இருக்கிறது.
கூறைநாட்டை தாண்டிதான் பேரூந்து நிலையம் போவீர்கள்.
நாங்கள் கூறைநாடு பஸ் நிறுத்தம் அருகில் இருந்தோம்.
//நல்லதொரு கோயிலை அறியாமல்
தரிசனம் செய்யாது இருந்திருக்கின்றேனே!.//
மயிலாடுதுறை போகும் வாய்ப்பு கிடைக்கும் அப்போது போய் பார்த்து வாருங்கள்.
//கௌதமரின் குடிலில் இருந்து இந்திரன் பூனையாக உருமாறித் தான்
நீக்குதப்பித்தானாம்...
அந்தப் பழியும் பாவமும் நீங்குவதற்கு வழிபட்ட தலமாக இருக்குமோ?..//
இருக்கலாம், புராண வரலாறு நிறைய இருக்கிறது.
தங்கள் மாமனாரின்
நீக்குசிவத்தொண்டும்
ஐயா அவர்களின் அரும் பணியும்
இந்தக் கோயிலுடன் ஒன்றியிருக்கின்றன என்பதை அறியும் போது மனம் நெகிழ்கின்றது..
ஓம் நம சிவாய..//
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி ஆண்டு விழாவுக்கு மாமாவுக்கும் அழைப்பு அனுப்புவார்கள். இரண்டு முறை கலந்து கொண்டு சிவபூஜை செய்ததை கோவில் அன்பர்கள், நண்பர்கள் இன்னும் சொல்லி கொண்டே இருப்பார்கள்.
என் கணவர் இந்த கோவில் அம்மனுக்கு "சாந்தநாயகி பிள்ளைத் தமிழ்" என்று புத்தகம் எழுதி நிறைவு செய்து விட்டார்கள். வந்த வேலை முடிந்து விட்டது என்று. அதை புத்தகம் ஆக்க திரு தட்சிணாமூர்த்தி அவர்களிடம் கொடுத்து இருக்கிறோம். அன்னை சாந்த நாயகி தகுந்த நேரத்தில் அதை வெளி கொணர்வார்.
இந்த கோவில் நினைவுகளை மறக்கவே முடியாது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தங்கள் தயவில் மயிலாடுதுறை கோயில்களை உலா வந்தேன். படங்களும், விளக்கங்களும் சிறப்பாக இருந்தன. சார் AVC யில் வேலை பார்த்தார்களா?
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
நீக்கு//தங்கள் தயவில் மயிலாடுதுறை கோயில்களை உலா வந்தேன். படங்களும், விளக்கங்களும் சிறப்பாக இருந்தன. சார் AVC யில் வேலை பார்த்தார்களா? //
சார் மேலையூரில் இருக்கும் பூம்புகார் கல்லூரியில் "தமிழ்த்துறை தலைவராக" வேலை பார்த்தார்கள். பணி ஓய்வுக்கு பின் மயிலாடுதுறை தருமைஆதீன கலைக் கல்லூரியில் "கெஸ்ட் லெக்சரராக" பணி ஆற்றினார்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
கோபுரமே தனி அழகுதான் இல்லையாக்கா...
பதிலளிநீக்குபுனுகுப்பூனை சிவன் சிற்பம், விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை எல்லாமே அழகு. இப்படிக் கருப்பு நிறத்தில் சிற்பங்கள் மனதை ஈர்க்கும்.,..
கீதா
வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//கோபுரமே தனி அழகுதான் இல்லையாக்கா...//
ஆமாம் கீதா.
//புனுகுப்பூனை சிவன் சிற்பம், விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை எல்லாமே அழகு. இப்படிக் கருப்பு நிறத்தில் சிற்பங்கள் மனதை ஈர்க்கும்.,..//
ஆமாம், கருப்பு நிறத்தில் உள்ள சிற்பங்கள் மனதை ஈர்க்கும் தான்.
கொடிமரம் கீழ் பெண் வணங்குவது ஆண் வணங்குவது போல இருக்கே என்று கேட்க நினைத்தேன் நீங்கள் சொல்லிவீட்டீர்கள்
பதிலளிநீக்குஎன் கணவர் இந்த கோவிலுக்கு "தனியூர் சாலிய புராணம்" என்று நூல் எழுதி இருக்கிறார்கள்.//
சிறப்பான விஷயம் கோமதிக்கா...
வலம்புரி சங்குகள்//
இவை மட்டும் வலம் வருவதால் வலம் புரி சங்குகள் ஆனதோ!!! (வலம்புரி காரணம் தெரியும் என்றாலும் இதுவும் தோன்றியது)
அம்மன் சன்னதி சுற்றி வரும் போது எடுத்த படம் கோணம் அழகாக இருக்கு. விமானம் பார்க்கவே அழகுதான்
கம்பித் தடுப்பு படமே கவர்ச்சியா இருக்கு...நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளை மெதுவாக வாசிக்கிறேன்.
கம்பிட்த் தடுப்புக்குக் கீழ் இருக்கும் நீராழி மண்டபம் நந்தி படங்கள் செமையா இருக்கு...ஆனால் புதர் மண்டி பராமரிக்கப்படாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது.
கோவில் நந்தவனத்து செடிகளுக்கு தண்ணீர் விடுவேன். பிரதோஷம், மற்றும் விழாக்களுக்கு கணவரும் வருவார். //
நல்ல விஷயம் கோமதிக்கா. நீரூற்றுவது..எல்லாம் சிறப்பு. மாமாவும், உங்கள் மாமனாரும் இக்கோயிலுடனான பிணைப்பு எவ்வளவு சிறப்பான விஷயம் இல்லையா கோமதிக்கா...
நல்ல மலரும் நினைவுகளும் இப்போதைய பயணத்தில். ஆமாம் நட்புகளுக்குத் தெரிந்தால் வருந்துவார்கள். ஆனால் உங்கள் பயணமே வேக வேகமாக இருந்ததால் கடினம்தான் எல்லோரையும் பார்ப்பது.
அனைத்தும் அருமை கோமதிக்கா
கீதா
கொடிமரம் கீழ் பெண் வணங்குவது ஆண் வணங்குவது போல இருக்கே என்று கேட்க நினைத்தேன் நீங்கள் சொல்லிவீட்டீர்கள்//
நீக்குஆமாம், வரைய எளிதாக இருப்பதால் இருவருக்கும் ஒன்றாக வரைந்து விட்டார் போலும்.
இவை மட்டும் வலம் வருவதால் வலம் புரி சங்குகள் ஆனதோ!!! (வலம்புரி காரணம் தெரியும் என்றாலும் இதுவும் தோன்றியது)
ஆஹா!
இந்த கோவிலில் எங்கள் குடும்பத்திற்கு நிறைய பிணைப்புகள் இருக்கிறது..
//நல்ல மலரும் நினைவுகளும் இப்போதைய பயணத்தில். ஆமாம் நட்புகளுக்குத் தெரிந்தால் வருந்துவார்கள். ஆனால் உங்கள் பயணமே வேக வேகமாக இருந்ததால் கடினம்தான் எல்லோரையும் பார்ப்பது.//
ஒருத்தர் வீட்டுக்கு போனால் இன்னொருவர் வருந்துவார். அதனால் எல்லோரிடமும் போனில் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். இனி ஒறு சந்தர்ப்பம் கிடைத்தால் இரண்டு மூன்று நாள் இருந்தால் தான் எல்லோர் வீட்டுக்கும் போக முடியும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. கோவில் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. கோபுர படங்களை தரிசித்து கொண்டேன். சிவனை பூஜிக்கும் பூனையின் சிறபமும், நிற்கும் பிள்ளையார், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிற்பங்களும் அழகாக இருக்கிறது. நிற்கும் பிள்ளையாரை தரிசித்து கொண்டேன்.
கொடிமர வணக்கத்தை எத்திசை நோக்கி வணங்கி செலுத்துவது என குறிப்பிட்டிருப்பது. சிறப்பு. எல்லா கோவில்களுக்கும் இதுதான் முறையா? சிலர் சில கோவில்களில், கோவிலை சுற்றி வந்ததும் கொடிமரத்தின் வலது பக்கம் வந்ததும் விழுந்து வணங்க வேண்டுமென கூறுகிறார்களே...
சங்காபிஷேகத்திற்கு தயார் செய்து வைத்திருக்கும் படம் நன்றாக உள்ளது. கோவிலுக்கு செல்லும் நேரங்களில் முறையாக சென்று வந்தால் என்றும் சிறப்புதான். இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. தாங்களும், தங்கள் கணவரும் சிவன் கோவிலுக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் மிகவும் மகிழ்வை தருகிறது. தாங்கள் பிறக்கும் போதே இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நல்ல விஷயங்களையும், இறைவனுக்கு நல்ல தொண்டாற்றும் தெய்வீக செயல்களையும் செய்து வரும் உங்களுடனான இந்த பதிவுலக நட்பு ஏற்பட்டதில் எனக்கும் மிகப் பெருமையாக உள்ளது. அதற்கும் இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
நீங்கள் தந்த சுட்டிகளில் சென்று மேலும் இந்த கோவிலைப்பற்றி படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. கோவில் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. கோபுர படங்களை தரிசித்து கொண்டேன்.//
நன்றி.
//கொடிமர வணக்கத்தை எத்திசை நோக்கி வணங்கி செலுத்துவது என குறிப்பிட்டிருப்பது. சிறப்பு. எல்லா கோவில்களுக்கும் இதுதான் முறையா? சிலர் சில கோவில்களில், கோவிலை சுற்றி வந்ததும் கொடிமரத்தின் வலது பக்கம் வந்ததும் விழுந்து வணங்க வேண்டுமென கூறுகிறார்களே...//
கொடிமரத்தின் வலது பக்கம் வணங்கலாம்.
நாம் வணங்கும் போது நமக்கு பின்னால் எந்த சன்னதியும் இருக்க கூடாது.
உள்ளே எந்த சன்னதியிலும் விழுந்து வணங்க கூடாது.
கோவில் உள்ளே தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து கொடிமரத்துக்கு கீழே தான் விழுந்து வணங்கி சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்து விட்டு வர வேன்டும் என்பார்கள்.
எல்லோருமே இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டே பூமிக்கு வந்து இருக்கிறோம்.
உங்கள் அன்புக்கு நன்றி.
கோவில்களுக்கு செல்லும் பாக்கியம் கணவரால் கிடைத்தது இறைவன் கருணையால் இறைவன் மேல் நாட்டம் உள்ள துணை கிடைத்தார்.மாமியார் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு தினம் போவார்கள். அம்மா அப்பா இறந்த பின் அவ்வளவாக வெளியே போக மாட்டார்கள், ஆனால் பேரன், பேத்திகளுடன் காசி மற்றும் பல கோவில்களை தரிசனம் செய்தார்கள். வீட்டில் எப்போதும் இறை நாமம் செய்து கொண்டே இருப்பார்கள்.
இந்த கோவில் மூலவர்களை தரிசனம் செய்ய நான் முன்பு போட்ட பதிவுகளின் சுட்டிகளை கொடுத்தேன்.
நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
உங்கள் விரிவான அன்பான கருத்துக்கு நன்றி.
நீண்ட பகிர்வு புனுகீஸ்வரர் தலவரலாறு அறிந்தோம்.
பதிலளிநீக்குஉங்கள் குடும்பத்துக்கும் கோவிலுக்கும் உள்ள தொடர்பு படிக்கும் போது மகிழ்ச்சி தந்தது.
படங்கள் எல்லாம் அழகாக இருக்கிறது
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//நீண்ட பகிர்வு புனுகீஸ்வரர் தலவரலாறு அறிந்தோம்.//
ஆமாம் , தவிர்க்க முடியவில்லை, இரண்டு பதிவாக கொடுத்து இருக்கலாம்.
//உங்கள் குடும்பத்துக்கும் கோவிலுக்கும் உள்ள தொடர்பு படிக்கும் போது மகிழ்ச்சி தந்தது.//
எங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை தந்த கோவில்.
படங்கள் எல்லாம் அழகாக இருக்கிறது//
உங்கள் கருத்துக்கு நன்றி.