Wednesday, October 26, 2016

தீபாவளி வாழ்த்துக்கள்.

தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம் !   பொதுவாக, சிறுவயதில் தான் நிறைய தீபாவளி எதிர்பார்ப்புகள்   இருக்கும்.  அந்தக் கால நினைவுகளில் கொஞ்சம்  பார்ப்போம்.

சிறுவர் சிறுமியாக இருக்கும்போது புத்தாடை எதிர்பார்ப்பு,  வாண வேடிக்கைக்கு என்ன புது மாதிரி மார்க்கட்டுக்கு வந்து இருக்கிறது என்று பார்த்து வாங்குவது என்று ஆண்டு தோறும் தீபாவளி வருவதற்கு முந்திய மாதமே ஏற்பாடுகள் நடக்கும். சக வயது தோழி, தோழர்களிடம் நான் அது வாங்கப் போகிறேன், இது வாங்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்வது. கேப் வெடிக்க புது மாதிரி துப்பாக்கி , தூக்கத்திலும் கனவில் அதைப்பற்றிய நினைவுதான்.

பத்திரிக்கைகளில் தீபாவளி சமயத்தில் வரும் சிரிப்புகளில் முக்கியம், ”சட்டையைக் கொஞ்சம் பெரிதாகத் தையுங்கள் . வளரும் பிள்ளைகள் !”என்று தையல்காரர்களிடம் சொல்வது தான். எங்கள் வீட்டில் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  பெரியவளுக்குப்  பத்தாமல்  போனால் சின்னவள் போட்டுக் கொள்ளலாம்., பெரியவனுக்குப் பத்தாமல்  போனால் சின்னவன் போட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்பா பொருத்தமான  அளவில் தான் வாங்குவார்கள் எல்லோருக்கும். வித விதமாக ரெடிமேட் உடைகள் தான் வாங்குவார்கள்.பாவாடை, தாவணி போடும்போது மட்டும் தைக்கப்பட்டது. அதை அக்கா அழகாய்த் தைத்துத் தருவார்கள். இப்போது அதுவும் ரெடிமேட் கிடைக்கிறது.

 இப்போது போல் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு இல்லை என்றாலும்  வார, மாத இதழ், தீபாவளி  சிறப்பிதழ்  மூலம் நமக்குக் கிடைத்து விடும். வானொலியிலும் தீபாவளிச் சிறப்புத் தேன் கிண்ணம், தீபாவளிப் பாடல்கள் என்று  தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கேட்கலாம்.

இப்போது மாதிரி எப்போது வேண்டுமென்றாலும் (நினைத்தபோது எல்லாம்) துணி எடுக்கும் வழக்கம் எல்லாம் அப்போது இல்லை. தீபாவளி, பிறந்தநாள், பொங்கல் மட்டும்தான்.  ஏதாவது துணி அதிகப்படியாக எடுத்தது இருந்தால் அது கார்த்திகைக்கும் கிடைக்கும். அதுபோல் தான் வெடிகள் மத்தாப்பு, மற்றும் பூச்சட்டி எனும் புஸ்வாணம், இதைக் கொஞ்சம் கார்த்திகை தீபத்திற்கு என்று பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள் அம்மா.( எல்லாவ்ற்றையும் ஒரே நாளில்கொளுத்திக் கரியாக்காதீர்கள் என்பது அம்மாவின் கருத்து) அப்பா,” குழந்தைகளை திருப்தியாக வெடிக்க விடு! கார்த்திகைக்கு வேறு வாங்கிக் கொள்ளலாம் ”என்பார்கள். பூஜையின் போது சரவெடி வெடிக்கப்படும்.

 10 நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் தயார் செய்வார்கள் அம்மா. பிஸ்கட் டின்கள், மற்றும் பித்தளை, எவர்சில்வர் டிரம்களில் பலகாரம் செய்து வைத்திருப்பார்கள்.

தீபாவளிக்கு முன்பே ,தினமும் பலகாரங்கள் சாப்பிடுவது, தீபாவளிக்கு வாங்கிய துணிமணிகளை  வீட்டுக்கு வந்தவர்களிடமும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் காட்டி மகிழ்வது என்று மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது தீபாவளித் திருநாள்.

தீபாவளி அன்று வீட்டில் சாமி கும்பிட்டபின் புத்தாடைகளைக்கட்டிக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு, உறவினர்களுக்கு என்று பலகாரம் கொடுத்து வரச் சொல்வார்கள் அம்மா . இந்த வெடிகளை வெடித்து விட்டு கொஞ்சநேரம் கழித்துச் செல்கிறோம் என்றால் விட மாட்டார்கள் . ”முதலில் கொடுத்து விட்டு வந்து, சாப்பிட்டு விட்டு,அப்புறம் போய் நிதானமாய் வெடிகளை வெடிக்கலாம் ”என்பார்கள்.

சுத்தியல் மாதிரி அமைப்பில், கந்தகம் வைத்துத் தரையில் ஓங்கி அடித்து அண்ணன் வெடிப்பான். அப்பா திட்டுவார்கள்,” விதவிதமாய் வெடிகள் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன், இதை எங்கு இருந்து வாங்கினான்? காதை அடைக்கிறது” என்று. அப்போதெல்லாம்  எல்லாப் பையன்களும் அப்படி வெடிப்பார்கள். அப்புறம் அது தடை செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

 வட்டமாய் நட்டு போன்ற அமைப்பில் பொட்டுவெடிகளை வைத்து, தரையில் ஓங்கி அடிக்கும் உத்தி வந்தது. ஓலை வெடியை தனித் தனியாகப் பொருத்திப் போட, ஆளுக்கு ஒரு பாக்கெட் உண்டு.  ஊசி வெடியும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உண்டு.. அதுவும் ஆளுக்கு ஒரு பாக்கெட்,

பட்டர்பிளை, பாம்புமாத்திரை, என்று தனித்தனியாக எடுத்துக் கொண்டு அவரவர்களுடைய  நண்பர்களுடன் கதைகள் பேசி மகிழ்ந்து வெடிப்போம்.  ஒன்று ஒன்றாக வெடிக்கச் சோம்பல்பட்டும் சத்தம் அதிகமாய் கேட்க ஆசைப்பட்டும் ஆறு ஏழு ஊசி வெடியின் திரிகளை  ஒன்றாகச் சுற்றி வைத்து வெடித்து  மகிழ்வோம்.

ராக்கெட் விட, பாட்டில்கள் தயார் செய்து வைத்துக் கொள்வோம். சரம் வைக்கும் போதும், லட்சுமி வெடி வைக்கும் போதும், ”திரியைக் கிள்ளி வை !இல்லையென்றால் வெடிக்காது”என்று அண்ணன் சொல்வதைக் கேளாமல், பற்ற வைத்து விட்டுஓடி வருவேன். ”நுனியில் கொஞ்சம் தீக்கொழுந்து
கனன்று வரும் போது தான் ஓடி வரவேண்டும்” என்று அண்ணன் சொல்லித் தந்தான்.  வைத்து விட்டு வெடி பற்றுவதற்கு  முன்பே ஓடிவந்தால் ஒரே சிரிப்பு.  சில நேரம் திரியில் தீப்பொறி வரவில்லை என்று பக்கத்தில் பார்க்கப் போனால் டபாரென்று வெடித்து நம்மைப் பயமுறுத்தும்.அவை எல்லாம் அற்புதமான நேரங்கள். திரும்பி வராத காலங்கள்.

பெரிய வெடிகள், லட்சுமிவெடி, பெரிய சரம் , தரை சக்கரம், புஸ்வாணம் எல்லாம்  அப்பா பக்கத்தில் இருக்கும் போது தான் வெடிக்க வேண்டும் என்பது கட்டளை. அது எல்லாம் இரவுதான். எல்லோரும் பார்த்து ரசிப்பதற்கும் பாதுகாப்பை உத்தேசித்தும்.

’பார்த்தால் நிறைய பகிர்ந்தால்  கொஞ்சம் ’என்பது போல்  அம்மா செய்த பலகாரங்கள்  மட மட என்று குறைந்து விடும், டின்களில்,  ”என்னம்மா! பலகாரம் கொஞ்சம் தான் இருக்கு போல”  என்றால், ”மறுபடியும் செய்துகொள்ளலாம்.” என்பார்கள் . கொஞ்சத்தை வேறு பாத்திரத்தில் முன்னதாகவே எடுத்து வைத்து இருப்பார்கள் . டின்களில் உள்ளதை காலி செய்தபின் அவை வெளியே வரும்.  கார்த்திகை வரை இந்த பலகாரம் ஓடும் அடுத்து கார்த்திகைக்கு அவல்பொரி, நெல்பொரி, அரிசி பொரி உருண்டைகள் அப்பம் என்று வந்து விடும்.

அக்கா, தம்பி, தங்கைகளுடன் ஆனந்தமாகக் கொண்டாடிய தீபாவளி
எப்போதும் மனதை விட்டு நீங்காத மகிழ்ச்சியான தருணங்கள்.. இப்போதும் தம்பி, தங்கைகள் கூப்பிட்டார்கள் ,”  உங்களுக்கு இந்த வருடம் தீபாவளி கிடையாதே! இங்கு  வாருங்கள்  எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம்” என்று.

திருமணம் ஆனவுடன், தலை தீபாவளியைப் புகுந்த வீட்டில் கொண்டாடியதும் மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கள் பக்கம் பண்டிகை விழாக்கள் எல்லாம் கணவன் வீட்டில் தான்!  பெண்வீட்டார் , வரிசைகளைக் புகுந்த வீட்டில் கொண்டுவந்து கொடுத்துச் செல்வார்கள்.

என் அப்பா தீபாவளிக்கு முன் கோவைக்கு என் மாமனார் வீட்டுக்கு வந்து, சீர் கொண்டு வந்து கொடுத்தார்கள்.. வைலட் கலரில் இளம் மஞ்சள் கலர் பார்டர்-  உடல் முழுவதும் நட்சத்திர ஜரிகை வேலைப்பாடு- கொண்ட பட்டுப்புடவை மற்றும் தேன்குழல், நெய் உருண்டை, காரசேவ், சோமாசி எல்லாம் கொடுத்து விட்டிருந்தார்கள் அம்மா.

எங்கள் மாமனார் வீட்டில் ஒவ்வொரு தீபாவளிக்கும் போட்டோ ஸ்டுடியோவுக்குச்  சென்று குடும்பப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.
அதை மனதில் வைத்துக் கொண்டு  சீர் கொடுக்க வந்த அப்பாவிடம் நான்,
”தீபாவளிக்கு அம்மாவுக்கு என்ன புடவை எடுத்தீர்கள்?  நீங்களும் அம்மாவும் போட்டோ  எடுத்து அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி அவர்களை ஊருக்கு வழி  அனுப்பி வைத்தேன்.  (அப்பா என் கண்ணில் இருந்து மறையும் வரை
பார்த்துக் கொண்டு இருந்தேன். அது தான் அவர்களைக் கடைசியாக நான் பார்ப்பது என்று அப்போது தெரியாது ,) அப்பாவும் ஊருக்குப் போய்  போட்டோ எடுத்து அனுப்பினார்கள். கார்த்திகை சோமவாரத்தில் இறந்து போனார்கள் அப்போது  அவர்களுக்கு வயது 51. தீபாவளி வரும் போதெல்லாம் அப்பாவின் வருகையும் நினைவுக்கு வரும்.
                            

இப்போது ஒரு வெடி டப்பாவில் இருந்து பலவெடிகள் வெடித்துக் கொண்டே இருப்பது போல், எங்கள் தலைதீபாவளியின் போது   ’டபுள்ஷாட் " எனும் வெடிகள் வந்திருந்தது. கணவர் அதை வாங்கி வந்தார்கள். கீழே ஒரு வெடி வெடித்து விட்டு, மேலே போய் இன்னொரு வெடி வெடிக்கும். இலட்சுமி வெடி, சரவெடிகள், அணுகுண்டுகள், ராக்கெட், சாட்டை, பென்சில், வித வித  மத்தாப்புகள்,  என்று வாங்கிவந்தார்கள்.

இப்படி தீபாவளிக்கு வெடித்து  வந்ததில் ஒரு மாற்றம்- நானும் அம்மா ஆனவுடன். குழந்தைகள் நிறைய வெடிக்க வேண்டும் என்பதால் நான் வெடிப்பதைக் குறைத்துக்கொண்டேன்.  அவர்கள் வெடிப்பதைப் பார்த்து ஆனந்தம் அடைவதுடன் நிறுத்திக் கொண்டேன். இருந்தாலும் என் பிள்ளைகள் கொஞ்சமாவது என்னை வெடிக்க வைப்பார்கள்.

:”வெடி ரோக்கா ”(வெடியின் பெயர், விலை விபரம் உள்ள சீட்டு) வாங்கி வந்து ,
என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று குறித்துக் கொண்டு அப்பாவும் மகனும், மகளும் கடைக்குப் போவார்கள்.  அதன்படி வாங்கி வருவார்கள்.
இப்போது தங்கள் ஊரில் வெடிக்க முடியாது என்பதால், மகன் இங்கு தீபாவளிக்கு வந்தால் இஷ்டம் போல் விதவிதமாய் வெடிகள் வாங்கி வெடித்து மகிழ்வான்.

சிறுவயதில், எங்கள் மகன் பகலில் சாட்டை வைக்க வேண்டும் என்று
”சாட்டை! சாட்டை” என்று அழுதான். அவனது அழுகையைக்  டேப் செய்ய ஆசைப் பட்டு சாட்டையை கொடுக்காமல் பகலில் சாட்டை வைக்க கூடாது என்று சொல்லி மேலும் அழ வைத்து டேப் செய்தார்கள். எல்லோரும் எதுக்கு அழுகிறாய் என்று கேட்டால் மறுபடியும் ஆரம்பிப்பான் ”சாட்டை சாட்டை” என்று  இப்படி அவனை எல்லோரும் சேர்ந்து கலாட்டா செய்ததை  டேப்பில் பதிவு செய்து வைத்து இருந்தோம்.   அடிக்கடி போட்டுக் கேட்டு மகிழ்வோம்.

என் மகன் வெகு நாட்களுக்கு அப்பா மாதிரி சட்டை தான் வேண்டும் என்பான். இருவருக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்துத் தைக்கக் கொடுப்போம். கல்லூரி சென்றபின் தான் ”அப்பாவுக்கு வேறு வாங்க வேண்டும். எனக்கு வேறு வாங்க வேண்டும். அப்போதுதான்  இரண்டு சட்டைகளையும் நான்  போடலாம்” என்பான்.

என் பெண்ணுக்கு நான் எடுத்துக் கொடுக்கும் துணிகள் பிடிக்கும். அம்மா
செலக்ட் செய்தால் மிக அருமையாக இருக்கும் என்பாள். இப்போது காலம் மாறுது கருத்துகளும் மாறுது . இப்போது சேலை மட்டும் தான் என் தேர்வு. மகள் மருமகளுக்கு எல்லாம்,   மாடல் உடைகள் அவர்கள் தேர்வு.

அத்தையும் அம்மாவைப் போலவே ருசியாக  நிறைய பலகாரங்கள் செய்வார்கள்.  கை முறுக்கு, தட்டை,  மைசூர்பாக், பாதாம் ஸ்வீட் , நெய் உருண்டை என்று எல்லாம்  செய்வார்கள்..

அம்மாவைப் போல நானும் தீபாவளி சமயம்  பலகாரங்கள் நிறைய செய்தகாலம் உண்டு. இப்போது  ஏதோ கொஞ்சம் செய்கிறேன்.  புதிது புதிதாக
செய்த  ஆர்வம் இப்போது இல்லை.  முன்பெல்லாம் தீபாவளி அன்று புதுவகையான இனிப்புதான் ஒவ்வொரு வருடமும். இறைவன் அருளால் அது நன்றாக அமைத்து விடும்.

ஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு  என்ற பதிவில் எங்கள் வீட்டுத் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பற்றி ஆதவன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருப்பேன்.  எங்கள் வீட்டுத் தீபாவளி எப்படி இருக்கும் என்பதை படிக்க விரும்பினால் படிக்கலாம்.

புத்தகத்தில் படித்த  தீபாவளி கருத்துக்கள்  :-

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. துலாமாத மகாத்மியத்தில் தீபாவளியைப் பற்றி குறிப்பிடும் போது “தையலே லட்சுமி! ஜல கங்கா” என்றுவருகிறது.அன்று எந்த இடத்தில்   குளித்தாலும்  கங்கையில் குளித்த பலன் என்று சொல்லப்படுகிறது. ஆதிகாலத்தில் தீபாவளியை ”எண்ணெய்த் திருவிழா ”என்றே குறிப்பிட்டார்களாம்.

தீப ஒளி வழிபாடு நம் பண்பாடு, இறைவன் இசையால் மகிழ்பவன். இசையின் மூலம் ஒலி  இசையாக மாற்றாமல் ஒலியையே இறைவனுக்கு சமர்ப்பிப்பது வெடி வழிபாடு. ஒளி வழிபாட்டோடு  ஒலி வழிபாடும் இறைவனுக்கு உகந்ததே! கோவில் திருவிழாக்களில் வெடி வெடித்தும் பல்வண்ண வாணவேடிக்கைகளும் இடம்பெறும்.

தீபாவளி என்பது இறைவனுக்கு நாம் செய்யும் ஒளி, ஒலி வழிபாடு. எண்ணெய்க் குளியல், புத்தாடை, பலவித பக்ஷணங்கள், பெரியவர்களிடம்
 ஆசி பெறுதல், வெடி வெடித்தல், மத்தாப்பு கொளுத்துதல், ஆலயம், செல்லுதல், அனைத்தும் தீபாவளி கொண்டாட்டங்களில் இருப்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் பண்டிகை..

பெரியவர்களிடம் ஆசி பெறுதல் எனும்போது என் மாமனார் அவர்களின்  நினைவு வந்து விட்டது.  முன்பு எல்லாம் அவர்கள் கடிதம் எழுதும் போது ”தீபாவளிக்கு முன்னதாக  வந்து சேருங்கள் ”என்று எழுதுவார்கள். போன தீபாவளிக்கு மகனுடன் அவனது ஊரில் கொண்டாடியதால்  கோவையில்  இருக்கும் மாமாவிடம் ஸ்கைப் மூலம்  ஆசி பெற்றோம். இந்த வருடம் தெய்வமாக இருந்து அனைவருக்கும் ஆசி வழங்குவார்கள். அவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் மாமா கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.


மகன், மருமகள் பேரனுடன் கொண்டாடடிய போன தீபாவளியை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம் இப்போது.   குழந்தைகள் வரும் நாளே தீபாவளிப் பண்டிகை  போல் மகிழ்ச்சி தரும் நாள்.

காலையில் இறைவனை வழிபட்டு,  தீபாவளி மருந்து சாப்பிட்டு விட்டு,  பின் பலகாரங்கள் சாப்பிட்டு,  வாணங்களைக் கவனமாய்  வெடித்து, மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

                                                         வாழ்க வளமுடன்!

                                                                    -----------------

Saturday, October 22, 2016

கூடல் அழகர் கோவில்

கூடல் அழகர் பெருமாள் கோவில் கோபுரம்

இன்று காலை(22.10.16) சனிக்கிழமை என்பதால் பெருமாள்  கோவில் போவது  என்று முடிவு செய்தோம்.   பலவருடங்களுக்கு முன் பார்த்த  கூடல் அழகரைப் பார்த்து வந்தோம். இப்போது கோவில் பழமையும், புதுமையும் நிறைந்ததாய் இருக்கிறது. 

மூலவர் விமானம் கோபுரத்தின் பின்புறம் தெரிகிறது

மேல்தளத்திலிருந்து - ஐந்து கலசத்துடன் ராஜகோபுரம்
 தாயார் சன்னதி விமானம் (மேல் தளத்திலிருந்து எடுத்தது)
ஆண்டாள் சன்னதி விமானம்
மேல் தளக் காட்சி


அஷ்டாங்க விமானம் 
சூரியநாராயணர் நின்ற கோலத்தில் ( அருள்வழங்கும் திருக்கோலத்தில்)
அஷ்டாங்க விமானத்தில் உள்ள நம்மாழ்வார். 
மேல் தளத்தில் பள்ளி கொண்ட பெருமாளாய் (அழகிய கண்களால் நம்மைப் பார்க்கிறார்.)
சக்கரத்தாழ்வார் விமானம்
மணவாள மாமுனிகள் சன்னதி  விமானம்

தூரத்தில் தெரியும் மீனாட்சி அம்மன் கோபுரம்  - மேல் தள வாசலிருந்து எடுத்த படம்
கால் சூடு தெரியாமல் இருக்க வெள்ளை சிமெண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

ஆண்டாள் சன்னதி செல்லும் வழி


 மதுரை பெரியார்  பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கூடல்  அழகர் கோவில்  மிக அழகான கோவில் கலை சிற்பங்கள் நிறைந்த கோவில்.  நின்றும், இருந்தும், கிடந்த கோலத்தில் பெருமாள் காட்சி தருவார். 108 திவ்ய தேசதலத்தில் ஒன்று.  பெரியாழ்வார் மங்களாசாஸனம் செய்து இருக்கிறார். (பல்லாண்டு பல்லாண்டு என்று தொடங்கும் பாடல்  பாடி இருக்கிறார்.)

மூலவரை யாரும் மறைக்க முடியாது.  பரமபத படத்தில் உள்ளது போல்  ஆதிசேஷன்  ஆசனத்தில் ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்கவிட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலம். உள்ளே   போய் பக்கத்தில் பார்க்க 10 ரூபாய் கட்டணம். நன்றாக தரிசனம் செய்தோம்.  கருவறையை வலம் வந்து மீண்டும் வணங்கி பிரசாதம் பெற்று வெளியே வந்து ராமர்   , கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகளைத் தரிசனம் செய்தோம். எல்லோரும் கம்பித் தடுப்புக்குள்  இருக்கிறார்கள் அழகாய் அலங்காரத்துடன்.

மூலவர் எதிரில்  உற்சவர்  சுந்தர்ராஜப் பெருமாள் கொலுவீற்றுஇருக்கிறார், அவருக்குத்தான் அர்ச்சனைகள் எல்லாம். 

பின் அஷ்டங்கவிமானத்திற்கு போக பத்து ரூபாய் அனுமதி சீட்டு வாங்கி சில படிகள் ஏறி மேல் தளத்திற்கு போய் நின்ற கோலத்தில் உள்ள   சூரிய நாராயணரையும் , அதற்கு மேல் சில படிகள் ஏறி பள்ளி கொண்ட பெருமாளையும் பார்த்தோம். அழகான மூலிகை வர்ணம் பூசிய திருமூர்த்தங்கள். கண்ணை கவரும் வகையில் இருக்கிறது.  கம்பி கேட் போட்டு பூட்டி வைத்து இருக்கிறார்கள்,  உள்ளே போக அனுமதித்தால் சூடன், விளக்கு எல்லாம் வைத்து புகை படிய செய்து விடுவார்கள் மூர்த்தங்களை வர்ணங்கள் நிறம் மாறி விடும்.  மேல்தளத்திலும் கால் சுடாமல் இருக்க வெள்ளை சிமெண்ட பூசி வைத்து இருக்கிறார்கள். அஷ்டங்க விமானத்தில் உள்ள சிலைகள் அழகு. வைண்வ கோவில் விமானத்தில் திருகடையூர் காலசம்ஹார மூர்த்தி, பிச்சாடனார்,  சுப்பிரமணியர் சிலைகள் உள்ளன.


அடுத்து சக்கரத்தாழவார்   சன்னதி சென்றோம் சன்னதியில் மஞ்சள்   கொடுத்தார்கள் பெற்றுக் கொண்டு அவரை வலம் வந்து பின்னால் உள்ள  யோக நரசிம்மரைச்  சேவித்து வந்தோம்.

தாயார் சன்னதி செல்லும் வழியில் உள்ள தூணில் தசாவதார காட்சி சிலைகள் அழகாய் காணப்படுகிறது. ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,  விச்வக்சேனர்,   ஆகியோர்   சிலைகள்  சன்னதி போகும் வழியில்  உள்ளது.

தாயார் சன்னதி முன் உள்ள தூண்களில் அஷ்டலட்சுமி சிலைகள் காணப்படுகிறது. முதல் தரிசனம்  அலங்காரத்துடன் உள்ள  உற்சவ அன்னை . மூலவர் மரகதவல்லி தாயார் பெரிய தேவியாக அழகாய் வீற்றிருக்கிறார். பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு.

தாயார் சன்னதி அழகிய  வண்ண துணியால் செய்த தோரணங்களால் அழகு செய்யப்பட்டுள்ளது.  தூண்களில் அழகிய சிலைகள் காணப்படுகிறது. மர மூடி போட்ட கண்ணாடி பிரகாரத்தின் மூலையில் வைக்கப்பட்டுள்ளது.
                                          

ஆண்டாள்,  சன்னதி போவதற்கு முன் நீண்ட பிரகாரத்தின் சுவற்றில் திவ்ய தேச படங்கள் அழகாய் வரைய பட்டு இருக்கிறது  அதை ரசித்துக் கொண்டே வந்த போது  ஒரு அம்மா காவேரி அம்மன் கும்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்..

நான் வணங்கினேன் காவிரி அம்மனையும், அந்த அம்மாவையும் அவர்கள்  எனக்கு  மஞ்சள், குங்குமம் வைத்துவிட்டு    இரண்டு வாழைப்பழங்கள் பிரசாதமாய்  தந்தார்கள்.

ஐப்பசி மாதம் முழுவதும் நாள் தோறும் இப்படி கும்பிடுவார்கள் சிலர் வீடுகளிலும் கும்பிடுவார்கள். என் அண்ணி வீட்டில் கும்பிடுவார்கள்.

பக்கத்தில் ஒருவர் ஜோதிடம் பார்த்துக் கொண்டு இருந்தார். பின் 


  ஆண்டாள்  சன்னதி சென்றோம். உற்சவ ஆண்டாளை  முன்புறம் வெகு அழகாய்  அலங்காரம் செய்து வைத்து இருக்கிறார்கள், உள்ளே மூலவரும் நல்ல அலங்காரத்துடன்.  ஆண்டாள் சன்னதியில் திருப்பாவைப் பாடல்கள் காட்சிகள் ஓவியமாய் வரையப் பட்டுள்ளது.   ஆண்டாள் சன்னதி பின் நந்தவனம் உள்ளது. நந்தவனத்தில் கண்ணன் சிலை உள்ளது வர்ணத்தில்.

  ஆண்டாள் சன்னதியை வலம் வந்தோம். ஆண்டாள் சன்னதியில் துளசி மாடம் கண்ணாடியுடன் அழகாய் உள்ளது. ராமனூஜரின் மறு அவதாரம் மணவாளமாமுனிகள் என்று  எழுதப்பட்ட சன்னதி அழகாய் காட்சி அளித்தது.

 அடுத்து வெளியே வந்தால் நவக்கிரக சன்னதி.  நவக்கிரகத்தை வலம் வந்த பின் பிரசாத கடையில் பிரசாதம் வாங்கினோம் அரிசியும், உளுந்தும் மிளகும் கலந்து செய்த அடை  போல் ஒரு பலகாரம்-நடுவில் கனமாய் ஓரத்தில் மொறு மொறுப்பாய்  இருந்தது. இனிப்புக்கு அப்பம் வாங்கினோம்.

  மீனாட்சி அம்மன்  கோவிலில் விசிறி சேவையில் உள்ள பெரியவர் இங்கும்  வந்து  விசிறி வீச அந்த காற்றை அனுபவித்து அவருக்கு நன்றியும், வணக்கமும் சொல்லிச்  சிறிது நேரம் அமர்ந்து இறைவனை மனக்கண்முன் கொண்டு வந்து வணங்கி விடைபெற்றோம்.


வெளியே  பசு மாட்டை வைத்துக்கொண்டு அகத்திகீரை வாங்கி போடுங்கள்,  நன்கு சாப்பிடும் இந்த பசு என்று  ஒரு அம்மா அழைத்துக் கொண்டு இருந்தார்கள் , பசு மாட்டின் கயிறைத் தன் காலடியில் பிடித்து வைத்துக் கொண்டு அதைத் தடவி கொடுத்துக் கொண்டு எல்லோரையும் அழைத்துக்கொண்டு இருந்தார். நாங்களும் வாங்கிக் கொடுத்தோம்.                                                     வாழ்க வளமுடன்.
                                                          ------------------------------

Saturday, October 15, 2016

பொன் பெருமாள் மலை

இந்த  சனிக்கிழமைக்கு  பொன் பெருமாள் மலை   போய் சீனிவாசப் பெருமாளை தரிசனம் செய்து வந்தோம். முதல் சனிக்கிழமை  ஸ்ரீ பிரசன்ன  வெங்கடேச பெருமாள் . இரண்டாவது சனிக்கிழமை  திருமோகூர் காளமேக பெருமாள் தரிசனம்.

மூன்றாவது நான்காவது சனிக்கிழமைகளில்  பெருமாள் தரிசனம் செய்ய முடியவில்லை. ( நவராத்திரி சமயம் வீட்டில் கொலு வைத்து இருந்ததால் போகவில்லை) இன்று  கடைசி சனிக்கிழமை. பெருமாளை வணங்க வேண்டும் கோவில் போய் என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். தினமலரில் பொன்பெருமாள் மலை பற்றி கட்டுரை வந்து இருந்தது. பெருமாள் அழைத்து விட்டார். சென்று தரிசனம் செய்து வந்தோம். அழகான இயற்கை  சூழலில்  கோவில் இருக்கிறது. கோவில் வாசல் முன்பு அழகான விழுதுகள் தொங்கும் ஆலமரம் நிழல் தந்து கொண்டு இருக்கிறது.தினமலர்  ஆன்மீக மலரில் வந்த படம்.

சீனிவாசபெருமாளை தரிசனம் செய்ய இந்த படிகட்டுகளில் ஏறி போக வேண்டும்


சீனிவாச பெருமாள் இருக்கும் கோவில் விமானம்மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் இந்த பொன் பெருமாள் மலை அமைந்து இருக்கிறது.

குலசேகரன் கோட்டை என்றும் சொல்கிறார்கள் இந்த ஊரை. அதற்குக் காரணம் :-மதுரையை ஆண்ட குலசேகர பெருமாள் நாட்டின் மேற்கு எல்லையை நிர்ணயம் செய்து கோட்டை அமைக்க விரும்பினான்.  மன்னரது கனவில் தோன்றிய பெருமாள் இந்த மலையை எல்லையாகச் சுட்டிக் காட்டினார். அதனால் இந்த இடம் குலசேகரன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

மதுரை திண்டுக்கல் சாலையில் 30 கி.மீ தூரத்தில் வாடிப்பட்டி.
இங்கிருந்து குலசேகரன் கோட்டை செல்லும் வழியில் 1. கி.மீ தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

தலவரலாறு :-

இராமருக்கும் இராவணன் மகன் இந்திரஜித்துக்கும் இலங்கையில் போர் நடந்த போது  இந்திரஜித் விஷம் மிக்க நாகபாசத்தை வானரப்படை மேல் ஏவியதால் அனைவரும் மூர்ச்சை அடைந்தனர்.
கரடிகளின் தலைவன் ஜாம்பவான் அறிவுரைப்படி  அனைவரின் உயிரைக் காப்பாற்ற   அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்தார்.
அதன் ஒரு பகுதி பூமியில் விழுந்தது. அதுவே பொன் பெருமாள் மலையாக விளங்குகிறது.

அனுமன் சுமந்து வந்த மலை என்பதால் அனுமனுக்கு மலைமேல் கோவில்  அமைக்கப்பட்டுள்ளது.

மலை மேல் போக 562 படிகள் உள்ளன.  சமீபத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. சிறிய மலைதான். படிக்கட்டுகளின் எண்ணிக்கை மிரட்டியது . மேலே போய் அனுமனை தரிசிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது.

மலையடிவாரத்தில் சீனிவாசப்பெருமாள்  இருக்கிறார் அவர் எதிரில் கைகூப்பிய நிலையில் கருடாழ்வார் இருக்கிறார். அனுமன் தனி சன்னதியில் இருக்கிறார்.

 திருப்பதி  பெருமாள் போல் தோற்றத்தில் காணப்படுகிறார். பெருமாள் நந்தகம் என்னும் வாளை அணிந்து இருக்கிறார்.

உற்சவர் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகான அலங்காரத்தில் மூலவர் அருகில் இருக்கிறார். மாலை திருப்பதி பெருமாள் போலவே அலங்காரம் செய்வார்களாம். பவுர்ணமி அன்று மக்கள் கிரிவலம் வருவார்களாம்.
                                               பெருமாளை தரிசனம் செய்த பின் மலைப் படி பக்கம் போய் பார்த்தோம் ஏறி விடலாமா என்று.  எங்களை விட வயதானவர்கள் ஏறிக் கொண்டு இருந்தார்கள். படியும் சின்னச் சின்னப் படியாக இருந்தது. சூரியனும் சுட்டெரிக்கவில்லை,  மழை வருவது போல் தட்டான்களும் கிட்டப் பறந்தன.
கீழே  இருக்கும் விநாயகரை வணங்கி விட்டுப் படி ஏற ஆரம்பித்தோம்.   மெல்லிய காற்று வீசியது. ஏற ஏற கொஞ்சம் மூச்சு வாங்கியது எனக்கு, வேர்த்து ஊற்றியது, காற்று குறைச்சலாக வீச ஆரம்பித்து விட்டது,  ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஏற ஆரம்பித்தபின் அங்கிருந்து கீழே பார்த்தால் இயற்கை அழகு நம்மை இன்னும் படி ஏறவேண்டுமே என்ற மலைப்பைப் புறம் தள்ளுகிறது.
பட்டாம் பூச்சிகள் அழகு அழகாய் சுற்றிப்பறந்து கொண்டு இருந்தது, தட்டான்கள் சுற்றிப் பறந்தன. முன்பு (சிறுவயதில் )

காற்றாடி செய்ய முள் எடுக்கும் மரம் பெரிய பெரிய முட்களுடன் இருந்தது,


ஆவரம் பூக்கள் பூத்து இருந்தது. வழி எல்லாம்   பாறைகளில் பெருமாள் நாமம் வரைந்து இருந்தார்கள்.
சாமி கிட்ட வந்து விட்டோம் வா அம்மா சீக்கிரம் என்று படியில் உட்கார்ந்து அம்மாவை கூப்பிடும்  குட்டி தேவதை. அவள் தங்கை ஓடிக் கொண்டே இருந்தாள்,  நிற்கவில்லை திரும்பியும் பார்க்கவில்லை.
தற்சமயம் தகர கொட்டகைதான்  கோவில் கட்ட நன்கொடை வசூல் செய்து கொண்டு இருக்கிறார்கள். 


அனுமன் அருளால் அவரைப் பார்க்க மலை ஏறி வந்து விட்டோம். தகரக் கொட்டகையில்   வலது கையில் சஞ்சீவி  மலையைத் தூக்கிக்கொண்டு  கம்பீரமாய்க் காட்சி அளித்தார்.  இடது கையில் கதாயுதம் உள்ளது.

 நான் மெளன விரதம் என்பதால் அனுமன் வரலாறு கேட்கச் சொன்னேன் என் கணவரை,  பட்டரிடம்.

பட்டர் சொன்னது :-நானூறு வருடங்களுக்கு முன் பின்னாடி இருக்கும் கல் விளக்குத் தூணில் இருக்கும் அனுமனை வணங்கி வந்து இருக்கிறார்கள், நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இந்த அனுமன் சிலை வைத்தார்கள் என்று சொன்னார். படிகளும் இப்போது தான் கட்டப்பட்டு இருக்கிறது, சிமெண்ட் படிக்கட்டுகள் தான்.விவேகானந்த கல்லூரி மாணவர்களும் அங்கு இருக்கும் சாமியாரும் கட்டிக் கொடுத்ததாய்ச் சொன்னார்.
  பின்புறம் உள்ள வில்வமரம் தலவிருட்சமாய்  சிவஅம்சமாய் வணங்கப் படுகிறது .   இந்த விளக்குத்தூண் பக்கம் ராமர் பாதம் உள்ளது.குலசேகர பாண்டிய மன்னர் மலை மீது உள்ள ஆஞ்சநேயருக்கு வழிபாடு செய்யவும், கல் தூணில் நெய் விளக்கேற்றவும் ஏற்பாடு செய்து இருக்கிறார்.


                                                                ராமர் பாதம்


முன் காலத்தில் இந்த கல்லை அனுமனாய் நினைத்து வழி பட்டு இருப்பார்கள் போலும்


அனுமனை  சுற்றி வந்து வணங்கி எல்லோரையும் நலமாய் வைத்து இருக்க வேண்டி வந்தோம். தேகபலம், மனபலம் வேண்டுமே !எதையும் தாங்க! .

இறங்கும் போது எளிதாக இருந்தது சிரமம் இல்லை. நிதானமாய் இயற்கையை ரசித்துக் கொண்டு இறங்கினோம். நிறைய ஆடுகள் மலைமேல் மேய்ந்து கொண்டு இருந்தது.

மலை மேல் ஏறி வந்த ஒரு அம்மா எங்களுக்கு நெல்லிகனி கொடுத்தார்கள். பிஞ்சு நெல்லிகனி கொஞ்சம் துவர்ப்பும் கொஞ்சம் புளிப்புமாய் நன்றாக இருந்தது. போகும் போது சாப்பிட்டுக் கொண்டு போனால் நல்லது என்று நினைக்கிறேன், மூச்சு வாங்கி வாய் உலர்ந்து போகாமல் இருக்கும்.  அடுத்தமுறை செல்லும் போது நெல்லிக்காய் எடுத்து செல்ல வேண்டும் ( ஆசைதான்)   இனி மேல் போக போகிறவர்களிடம் சொல்ல  வேண்டும்.

மலை மேல் இருக்கும் ஆஞ்சநேயரை  காலை 7 மணி முதல்  9 மணி வரை, மாலை 4.30  முதல் இரவு 7 மணி வரை.

 கீழே இருக்கும் பெருமாள்   காலை 7 மணி முதல்  9 மணி வரை.
புரட்டாசி சனிக்கிழமை மட்டும் மதியம் 1 மணி வரை உண்டு என்றார் பட்டர். அடுத்த தடவை வரும் போது மாலை நேரம் வாருங்கள் திருப்பதி பெருமாள் அலங்காரம் பார்க்கலாம் என்றார்.
படி ஏறி செல்லும் வழியில் மூன்று நான்கு பேர் பொங்கல் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

சீனீவாச பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரும் போது வெல்லம் கலந்த அவல்,   துளசி கொடுத்தார்கள்.

பெருமாளுக்கு பொங்கல் வைத்துக் கொண்டு இருந்தார்கள். பால் பொங்கி வரும் போது குலவை இட்டார்கள் அருமையாக இருந்தது.

மதியம் அன்னதானத்திற்கு தயார் செய்து  செய்து கொண்டு இருந்தார்கள்.


காமிரா எடுத்து செல்லவில்லை கைபேசியில் எடித்த படங்கள் தான்.

 மலை  அடுக்கு மலையாக நீண்ட தூரம் போய் கொண்டே இருந்தது.


மலையின் பின்புறம் இயற்கை அழகு. 

மலை ராமர் பாலம் கட்ட வானரங்கள் எடுத்துப் போட்ட கற்கள் போலவே உருண்டு உருண்டு இருந்தது.
வயலும் மலையும் பார்க்கவே அழகு

ஏசுநாதர் கோவில் தங்க கொடிமரத்துடன் அழகாய் மூன்று கோபுரங்களுடன். இருக்கிறது. (மலை மேலிருந்து எடுத்தபடம்)


மேலே ஏறும் போது கண்ட காட்சிகள்:-

குழந்தையை தூக்கி கொண்டு வந்த அம்மா போன தடவை அழாமல் நடந்து வந்த நீ தூக்க சொல்லி அடம் செய்கிறாயே ! என்று புலம்பி கொண்டு தூக்கி வந்தார்கள் ஐந்து வயது குழந்தையை. (வேறு ஒருவர் இரக்கப்பட்டு சிறிது தூரம் தூக்கி வந்து உதவினார்.)

சில சிறு வயது பெண்கள் ஏனப்பா ? இப்படி மலைமேல் போய் இருக்கிறாய்? கீழே இருந்து இருக்கலாம் என்று சொல்லிக் கொண்டே ஏறினார்கள்.

ஒரு  சிறு பையன்  லிப்ட் வைக்க கூடாதோ! ரோப் கார் வைக்ககூடாதோ!  என்று அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தான்.

ஐயப்ப பக்தர்கள் சொல்வது போல் தூக்கிவிடப்பா, ஏத்தி விடப்பா என்று அனுமனை வேண்டிக் கொண்டு மலை ஏறவேண்டும். தேகபலம் தா, பாதபலம் தா, மனபலம் தா  ஜெயவீர மாருதி .

வாழ்க வளமுடன்.Saturday, September 24, 2016

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்


காளமேகப் பெருமாள் கோவில் கோபுரம்

இன்று புரட்டாசி  இரண்டாவது சனிக்கிழமை  திருமோகூர் காளமேகப் பெருமாளைத் தரிசனம் செய்து வந்தோம். இது
103 வது திவ்ய தேசம்.  திருமங்கையாழ்வார் , நம்மாழ்வார் மங்களாசஸனம் செய்து இருக்கிறார்கள்.நம்மாழ்வாருக்கு மோட்சம் தந்த தலம்.மோகினி அவதாரம் எடுத்த தலம் அதனால் திருமோனவூர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் திருமோகூர் ஆயிற்று.


காலை எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி விட்டோம். காலையில் சிக்கீரம் போனால் கூட்டம் இருக்காது என்று  சொல்வார்கள். 


வாசலில் மாடு நின்று கொண்டு வருவோர் போவோர் என்ன கொடுப்பார்கள் என்று ஏங்கிப் பார்த்துக் கொண்டு இருந்தது.

ஓம் நமோ நாராயண என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தோம். கொடிமரம் வணங்கி உள்ளே சென்றால் உற்சவர் அழகாய் கொலுவிருந்தார். அவருக்குத்தான் அர்ச்சனை எல்லாம். மூலவரை பார்த்து விட்டு வந்து  விட வேண்டும்.. இரண்டு ரூபாய் கட்டணம் உள்ளே போக. முன்பு பலவருடங்களுக்கு முன் பார்த்த பெருமாள்  இவ்வளவு உயரமா? நினைவில் இல்லை. (இப்போது வளர்ந்து விட்டாரா என்ன எப்போதும் இதே உயரம் தான்)  

ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்துடன் அற்புதமாய் காட்சி அளித்தார். நன்கு கண்ணாரக் கண்டு மனதாரத் தொழுது வாங்கிச் சென்ற துளசி மாலையைக் கொடுத்து வணங்கி வந்தோம்.

சுவாமி சன்னதி வாசல் தூணில் மன்மதன் சிலை நல்ல பெரிதாக உடல் முழுவதும் சந்தனம் பூசி இருக்கிறது அழகாய், அதற்கு எதிர் தூணில் ரதி சிலை அழகாய் சந்தனம் பூசி இருக்கிறது.
                               
                           காளமேகப் பெருமாள் இருக்கும் சன்னதி விமானம்
தாயார் மோகனவல்லி  சன்னதி  விமானம்

பெயருக்கு ஏற்றார் போல் தாயார் மோகனமாய் இருக்கிறார். அவர் சன்னதி மண்டபத்தில் உற்சவர் சக்கரத்தாழ்வார், பின் புறம் நரசிம்மர் உள்ள உற்சவருக்கு அர்ச்சனை நடக்கிறது .

 தாயார் மோகனவல்லி. தாயார் சன்னதியில்   ஒரு பட்டர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து குங்குமம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்  

                                                   
                               சக்கரத்தாழ்வார் சன்னதி தங்கக்கோபுரம் 

நரசிம்ம சுதர்னம் என்று அழைக்கிறார்கள். சுதர்சனரும், நரசிம்மரும் தங்க கவசத்தில் ஜொலிக்கிறார்கள். இவரைப் பார்க்கவும் இரண்டு ரூபாய் கட்டணம்.  சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன்16 ஆயுதங்களுடன் அழகாய்க் காட்சி அளிக்கிறார். மந்திர எழுத்துக்களுடன் மிகவும் சகதி வாய்நதவராம். இவரை வேண்டிக் கொண்டால்  எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை.
                                                         
                    சிறு விமானம் தெரியும் சன்னதி- ஆண்டாள் சன்னதி                                          
சிறு முன் மண்டபத்தை கடந்து உள்ளே போனால் மலர்  உடை தரித்து வெகு அழகாய் காட்சி தருகிறார் ஆண்டாள். உற்சவ ஆண்டாளும் அழகிய அலங்காரத்தில் காட்சி தருகிறார். ஆரத்தி தட்டைக் காட்டி  நாமே ஆரத்தியைத் தொட்டு வணங்கிக் கொண்டு மஞ்சளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் பட்டர். 

அழகிய பிரகாரம் கால் சுடாமல் இருக்க வெள்ளை  வர்ணம் பூசி இருக்கிறார்கள் .அதில் நடந்தால் சுடவில்லை.

கோடியில் இருக்கும் பெரிய கிணறு  இரும்பு கம்பி போட்டு மூடி இருக்கிறார்கள். பாலீதீன், பூ, குப்பைகளைக் கிணற்றில் போடாதீர்கள் என்ற அறிவிப்பு வைத்து இருக்கிறார்கள். எட்டிப் பார்த்தேன் காசுகள் போட்டு இருக்கிறார்கள். மக்கள்.


சிலபடிகள் ஏறிச் சென்றால் நவநீதகிருஷ்ணர் சன்னதி. வெள்ளிஅங்கியில் அழகாய் இருக்கிறார். அவரைச் சுற்றி வணங்கி வர வசதி உள்ளது. 

உள் சன்னதியை வலம் வந்து வெளியில் வந்தால்  வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி வெள்ளி கவசம் தாங்கி துளசி மாலை அணித்து சிறிய மூர்த்தியாய் காட்சி தந்தார்.


 அவருக்கு அருகே மதியம் அன்னதானத்திற்கு சமைக்கும் இடம். ஒரு அம்மா ஐந்து ஆறு வெண்டைக்காயை ஒன்றாய் அடுக்கி வைத்துக் கொண்டு வெட்டிக் கொண்டு இருந்தார்கள். அடுத்து மடைப்பள்ளி அங்கு புளியோதரை, பொங்கல், மற்றும் பலகாரங்கள் தயார் ஆகி கொண்டு இருந்தது. அதை தயார் செய்ய அடுப்பிற்கு விறகுகள் மரத்தடியில் அடுக்கி வைத்து இருந்தார்கள். பாதாம், தென்னை, மாமரம் இருந்தன.


தென்னை மரங்களுக்கு இடையே சக்கரத்தாழ்வாரின் தங்க விமானம்

                      மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள்.

அதனை ஒட்டி ஒரு பெரிய பாழடைந்த  கிணறு
குப்பை கூளங்களுடன் தென்னை மர நிழலும் விழுந்து இருக்கிறது, மொட்டைத் தென்னைமரம்,  கீற்றுடன் தென்னைமரம்
                       
 அடுத்து சதுரக் கல்லில்  சுற்றிவர சின்ன சின்ன  உருவங்கள் நடுவில்  சக்கரத்தாழ்வார். விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.தரையிலும்  மேலேயும் பல கிளைகளை பரப்பிக் கொண்டு மரம் பச்சையாய்
அந்த மரத்தில் தங்கள் இதயங்களையும், பெயரையும்   வரைந்து வைத்து இருக்கிறார்கள்.

பிரகாரத்தின் முடிவில் சுவாமி இளைப்பாறும் மண்டபம்.


பிரகாரம் சுற்றி  கொடிமரம் தாண்டி வந்தால் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி இருக்கிறது. யாரும் மறைக்காமல்  பாம்பு படுக்கையில் ஸ்ரீதேவி, பூதேவி கால் அருகில் இருக்க வலது கையை படித்து மலர் கண்களை நன்கு மலர்த்தி நம்மை பார்க்கிறார். நல்ல வெளிச்சம் அவர் மேல் படுவதால் நன்கு கண்குளிரப் பார்க்க முடிகிறது.


சன்னதியை விட்டு வெளியில் வந்தால் அன்னதானத்திற்கு மேஜைகள் போட்டு இருக்கிறது ஒரு பக்கம், நடுவில் இருக்கும் மண்டபத்தில் மின்விசிறிகள் சுழல்வதால் மக்கள் பிரசாதங்களை வாங்கி வந்து அமர்ந்து சாப்பிட்டு இளைப்பாறிச் செல்கிறார்கள்.

அவர் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் கைகூப்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல்  உருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதைப் பார்த்தவுடன்  சீர்காழி கோவிந்தராஜன் பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.( பாடல் -குலசேகராழ்வார் )

 /செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!//
குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி.

அடியவர்களின்  பாதம் அந்த உருவங்களின் மேல்

உள்ளே தரிசனம் செய்து வெளியில் வந்தால் எதிரில் கருடன் மேல் திருமால் அமர்ந்து இருக்கும் மண்டபம் தெரிகிறது.

 நாம் முதலில் திருக்குளத்தில் கால்களை கழுவி, தலையில் தெளித்துக் கொண்டு  திருக்குளத்து அருகே இருக்கும் ஆலமரத்த்டியில் இருக்கும் தும்பிக்கை ஆழவாரைப் பணிந்து  பின்  உள்ளே காளமேகப் பெருமாளை வணங்கச் சென்று இருக்க வேண்டும். கூட்டம் வரும் முன்னே சேவிக்க வேண்டும் என்று முதலில் உள்ளே போய் விட்டு பின் ஆற அமர திருக்குள தரிசனம்.

இங்கு உள்ள திருக்குளம் திருப்பாற்கடல் என்று அழைக்கப்படுகிறது . அழகிய நீராழி மண்டபத்துடன்   திருக்குளம். நன்கு சுத்தமாய் இருக்கிறது.

சிறுவர்கள் நீச்சலடித்து குளித்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆலமரத்தின் நிழலும் திருக்குளத்தில் அலையடிப்பதும் பார்க்க அழகு.

ஆலமரத்தடியில் அகத்திக்கீரையும், அருகம்புல்லும் விற்கும் தாய்
  
அங்கு நிறைய பசுமாடுகள் இருக்கிறது அதற்கு அகத்தி கீரை விற்கிறார்கள், தும்பிக்கை ஆழவாருக்கு அருகம்புல் விற்கிறார்கள் அந்த அம்மா தன்  குழந்தையை கொஞ்சுவதைப் பாருங்கள்.
ஆலமரத்தில் தொட்டில் கட்டி தன் செல்லத்தை அதில் இட்டுக் கொஞ்சிப் பேசித் தாலாட்டும் தாய்.
ஆலமரக் காற்றும், திருக்குளக் காற்றும் உடலை வருட, தாயின் அன்பு குரல் மனதை வருட சுகமான தூக்கம் வராதோ குழந்தைக்கு!

இப்போது இடுப்பில் இருக்கும் குழந்தை சற்று முன் தொட்டில் ஊஞ்சலில் ஆடிய குழந்தை.


                                           ஆலமரத்தடியில் நாகர்கள்.
இந்த மண்டபத்தில் சூரியன் வரப்போகிறார் என்று நினைக்கிறேன். மேலே குதிரைகள் இருக்கே!
இப்போது ஆலமரத்தடியில் தகரக் கொட்டகையில் இருக்கும்  தும்பிக்கை ஆழவார் இங்கு வரப்போகிறார்.

குளத்து அருகே தாமரைக்குளம். தண்ணீர் இல்லை .சேறும் சகதியுமாய்,
 புற்களும் புதர்களுக்கு இடையே தாமரையும்  அழகாய் தலைதூக்கி சிரிக்கிறது. தூரத்தில் இருந்து எடுத்தேன். நிறைய மாடுகள் கூர்மையான கொம்புடன் அங்கு நின்றன.

கருப்பண்ணசாமி சன்னதியும் வெளியில் இருக்கிறது.

வாழ்க வளமுடன்.

----------