திங்கள், 30 அக்டோபர், 2017

ஆலோவீன் திகில்




ஆலோவின் தினக்கொண்டாட்டம்.

நாங்கள்ஆலோவீன் கொண்டாட்டத்தை இந்த முறை மகனுடைய ஊரில் பார்க்கப் போகிறோம்.அக்டோபர் மாதம் கடைசிநாளன்று இது கொண்டாடப்படுகிறது. கிறித்தவ மதப்பெரியார்கள் ,தியாகிகள் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை வணங்கும் தினமாகச் சிலர் கருதுகிறார்கள். இந்நாளை ஆல் செயிண்ட்ஸ் டேயுடன் தொடர்பு படுத்திக்  கூறுகிறார்கள். (உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆல் செயின்ஸ்டேயும் மறுநாள் ஆல் சோல்ஸ்டேயும் கொண்டாடுகிறார்கள்)

 ஊரே ஆலோவீன் கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. ஆலோவீன் காஸ்டீயூம் கடைகள்,  புதிதாக விளைந்த பறங்கிக்காய்கள், காய்ந்த சோளத்தட்டைகள், வைக்கோல்கள் விற்பனை என்று எங்கும் கடைகள். இலை தெரியாமல் அழகாய் சிவந்தி மலர்கள் தொட்டிகள்  எல்லாம் ஆலோவீனை வரவேற்கக் காத்து இருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் மலர்த் தொட்டிகள் பறங்கி காய்களை வித விதமாய் அழகாய் அடுக்கி வைத்து இருக்கிறார்கள்.

ஆலோவீன் என்றால் என்ன என்று பார்த்தேன் விக்கிப்பீடியாவில். உங்களுக்கு தெரிந்திருக்கும் . அதுபற்றி  கொஞ்சம் கீழே கொடுத்து இருக்கிறேன்.


//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். 

இப்போது  இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//


நன்றி : விக்கிப்பீடியா.


ஆலோவின்  தின கொண்டாட்டம் 2013ல் எழுதிய  பதிவு. நியூஜெர்சியில் நடந்த கொண்டாட்ட படங்களை பார்க்கலாம்.

கீழே வரும் படங்கள் அரிசோனாவில் எடுத்த படங்கள்.


மகன் செய்த ஆலோவீன் டிராகன் வாயிலிருந்து கலர் புகை வரும்  காணொளி  பிறகு
Image may contain: 1 person, smiling, hat and closeup
கடையில் பேரன் 
No automatic alt text available.


பக்கத்து வீடுகளில் 




Image may contain: outdoor


Image may contain: one or more people, people standing, tree and outdoor


Image may contain: one or more people, people standing and outdoor
திகில் ஊட்டும் காட்சி






கடையில்


கடையில் சூனீயக்காரி, டைனோசர் எலும்பு கூடு

கார் கண்காட்சியில் பெரியவர்கள்  பிச்சைக்காரர் வேடமிட்டு



கார் கண்காட்சி நடந்த இடத்தில் ஆலோவீன் அலங் காரங்களுடன் மக்கள்


முன்னோர்களை  வணங்கும் நாளாகவும் இருக்கிறது.

மேற்கு நாடுகளில் கொண்டாடப்படும் (பேய்) இருள் விலக்கும் பண்டிகை.


மன உறுதி ,பயமின்மை போன்றவற்றை வளர்க்கவும் ஆலோவீன் திருவிழா பயன்படுமே..!

குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் வேடமிட்டுக் கொண்டு மகிழ்ச்சியுடன் செல்வது முன்னோர்களின் ஆசிதான்.
                                                            வாழ்க வளமுடன்.

சனி, 28 அக்டோபர், 2017

பறக்கும் வண்ண பலூன்..


கள்ளிச்செடி வரைந்த பலூன்

வண்ண பலூன்களைக் கண்டால் குழந்தையைப் போலக் குதூகலிக்கிறது மனம்.
சிறு குழந்தைகளுக்கு வானத்தில் பறக்கும் விமானம், பட்டம், பலூன் எல்லாம் பிடிக்கும் தானே! வயதாகி விட்டால் குழந்தையாகிவிடுவார்கள் என்பார்கள் நானும் குழந்தையாகி  விடுகிறேன்.

சின்ன பாப்பாவிடம் சிலுக்குச் சட்டை சீனா பொம்மை, பலூன் வேண்டுமா என்ற பாடல் இருக்கே!

"சின்ன பாப்பா எங்கள் செல்ல பாப்பா"  படம் - வண்ணக்கிளி

திங்கள், 16 அக்டோபர், 2017

தீபாவளி நல் வாழ்த்துக்கள்


என் கைகளுக்கு மருமகள் வைத்த மருதாணி
மருமகள் கைகளுக்கு மகன் வைத்த மருதாணி
தீபாவளி துணிமணிகள்
தீபாவளி பலகாரங்கள். 

இவை நான்கு  வருடங்களுக்கு முன் நியூஜெர்ஸியில்   கொண்டாடிய போது   எடுத்த படங்கள்.

எல்லாப் பண்டிகைகளுக்கும் கையில் மருதாணி வைத்து விடுவேன். அது தெரிந்த மருமகள் வட இந்தியக் கடையில் மருதாணிக் கோன் வாங்கி என் கைகளுக்கு வரைந்து விட்டாள். எனக்கு மருதாணி இலையை அரைத்து அதை வைத்து தான் பழக்கம். என் குழந்தைகள், பேத்தி எல்லாம் வேறு டிசைன் வரைய சொன்னால் முதலில் கையில் பேனாவால் வரைந்து விட்டு அதன் மேல் மருதாணியை வைத்து விடுவேன்.

மகன் மருமகளுக்கு புஷ்வாணம், தரைச்சக்கரம், கம்பி மத்தாப்பு போல் வைத்து விட்டான்.


போன வருடம் எங்கள் வீட்டில்  (மதுரையில்) எளிமையாக தீபாவளி அன்று காலை பஜ்ஜி, வடை, சுசியம் செய்து கும்பிட்டாச்சு.

தீபாவளி நினைவலைகள்  பதிவை எப்போது மீள் பதிவாக போட்டாலும் விரும்பிப் படிக்கிறார்கள். படிக்க எண்ணம் இருந்தால் மீண்டும் படிக்கலாம்.
எல்லோருக்கும் அந்த   சிறு வயது நினைவு இருக்கிறது . அந்த நாள் மீண்டும் வராதா என்ற ஆசையும் இருக்கிறது. 

பண்டிகைகள் எதிர்பார்ப்பையும் குதூகலத்தையும் கொடுத்தது அன்று. அந்த அளவு இப்போது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இங்கே இருக்கும் நிறையபேருக்கு தங்கள் உறவுகளுடன் பண்டிகை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. சிலருக்கு ஊரிலிருந்து பெற்றோர் வந்து இருக்கிறார்கள். பெற்றோர்களுக்கு குழந்தைகள் வரும் நாள் தீபாவளியாக இருந்தது.  கூடவே  இருந்தால் மேலும் மகிழ்ச்சிதான்.

மாலை மலரில் படித்த செய்தி :-

//தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாடவேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக்கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது. 

இலங்கையை ஆண்ட ராவணன் சீதையைக் கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டுக்கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன், சக்தியைத் தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.//

எப்படி இருந்தாலும்  பண்டிகைகள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கே!



இறைவன் எல்லோருக்கும் மன சந்தோஷத்தை கொடுக்க வேண்டும்.


இந்த வருடம் மகன் வீட்டில் தீபாவளிப் பண்டிகை எங்களுக்கு.  அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


                                                                  வாழ்க வளமுடன்.!

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

முதியோர் நாள்

இன்று காலண்டர் கிழிக்கும் போது ’இன்று முதியோர் நாள்’ என்று போட்டு இருந்தது.


முதுமைக்கு அப்படி ஒரு மரியாதையா!என்ற வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.சரி அது என்ன விபரம் என்று தேடிய போது thats tamil பத்திரிக்கையில் //அக்டோபர் முதலாம் தேதிசர்வதேச முதியோர் தினமாகும்.மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும் கெளரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம்தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்ப்டுத்தியுள்ளது.//

//1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி முதன் முதலாக 1991ம் ஆண்டு சர்வதேச முதியோர்தினம் உலகெங்கும் கொண்டாப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகினறது.உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.//

நம் நாட்டில் பெரியவர்களுக்கு முதியோர் நாள் என்று தனியாக கொண்டாட வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லா நாளும் முதியோர்களை பணியும் நாளாகவே உள்ளது.
எங்காவது வெளியூர் போனால்,பரீட்சை என்றால்,புதிதாக உடை அணிந்தால்எல்லாம் ’தாத்தா பாட்டியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்’என்று நாம் சொல்வதை குழந்தைகள் கேட்கிறார்கள்.கேட்டு நடந்தார்கள்.முன் ஏர் செல்லும் பாதையில் பின் ஏர் செல்லும் என்பார்கள்.நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தால் நம் குழந்தைகளும் கொடுப்பார்கள்.இது தானாய் இயல்பாய் திணிக்கப் படாமல் நடக்கும்.

இந்த காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமாய் இருக்க முடியவில்லை.ஆனால் பண்டிகை,விழாக்காலங்களில் வீட்டுப் பெரியவர்களிடம் அவர்கள் ஆலோசனை கேட்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்கிறோம்.

எனக்கு வயதாகும் போதுதான் என் பெற்றோர்களின் தவிப்பும் ஏக்கமும் புரிகிறது.அம்மா,
’நாலு நாளுக்கு ஒரு முறை கடிதம் எழுது’ என்பார்கள்.(தொலைபேசி,அலைபேசி எல்லாம் வரும் முன்)பிறகு போன் வந்தபின் அவர்களுக்கு வயதாகி காது கொஞ்சம் கேடகாமல் போனபோது போனில் அவர்கள் பேசுவார்கள்,என் நலம் விசாரித்து.’ மற்றதை உன் தம்பியிடம் சொல் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்பார்கள். கம்யூட்டர் அப்போது இல்லை இருந்திருந்தால் எங்களைப் பார்த்து மகிழ்ந்து இருப்பார்கள்.அம்மாவுக்குத் தனியாகக் கடிதம் எழுதியிருக்கலாம் என்றும் தம்பியிடம் போனிலும் அம்மாவிடம் கடிதத்திலும் உரையாடி இருக்கலாம் என்றும் இப்போது நினைக்கிறேன். விஜய் டீ.வீயில்’ காப்பி வித் அனுவில்’ நிகழ்ச்சி முடிவில் ’யாரிடம் மன்னிப்புக் கேட்க நினைக்கிறீர்கள்?’என்பார்கள். நான் என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன்-கடிதம் எழுதாமல் இருந்த்தற்கு.’யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்றால்-என் மாமியாருக்கு.முதுமையை அழகாய் ரசித்து வாழ்வதற்குக் கற்றுக் கொடுத்ததற்கு. 

வார வாரம் என் வயதான மாமியாரிடம் தொலைபேசியில் பேசும் போது ,அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ளும்.மாமனார் பேசமாட்டார்கள் .அத்தையிடம் விசாரித்துக் கொள்வார்கள்.

நம் குழந்தைகளிடம் என்ன கேட்கிறோம்?அடிக்கடி பேசுங்கள் என்றுதான் . அது தான் எங்களைப் போன்ற முதியோரகளுக்கு ஊட்ட சத்து மாத்திரைகள்.மகனிடம் பேசும் போது பேரன் உடனே ஓடி வந்து மழலையில் ’தாத்தா’ என்று கூப்பிட்டு அவனது விளையாட்டு சாமான் மற்றும் அவன் பொருட்களை நம்மிடம் காட்டி என்னவோ பேசுகிறான்.கம்யூட்டரில் நுழைந்து நம்மைத் தொட முட்டி மோதும் போது நமக்கு நம்மை தேடுகிறானே என்ற மகிழ்ச்சியும்,அவனுடன் இருக்க முடியாத சூழ் நிலையை நினைத்து வருத்தமும் ஏற்படுகிறது.
மகள் வயிற்று பேரன் 18 நாள் விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போகலாமா என்று மகளிடம் கேட்டதை கேட்கும் போது சந்தோஷமும் ஏற்படுகிறது.

இந்த காலகட்டத்தில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் எதிர்பார்த்து வீணாய்க் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் நோய்க்கு இடம் கொடுத்து விடுவோம்.

குழந்தைகள் எங்கு இருந்தாலும் நலமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையைப் பெற்றோர்களும், பெற்றோர்கள் அங்கு நலமாய் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையைக் குழந்தைகளும் செய்வது தான் இந்த உலகத்தை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

முதியோர்கள் தங்களுக்கு என்று பயனுள்ள பொழுது போக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டிலே முடங்கிக் கிடக்காமல், கோவில்,நண்பர்கள்,உறவினர்,என்று பார்ப்பதை வைத்துக் கொண்டு எப்போதும் தங்களைச் சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டால் தேவை இல்லாத கவலைகள் அண்டாது.என் கணவர் ஒய்வு பெற்ற பின்னும் ஒரு கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்.அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நாளை காந்தியடிகளின் பிறந்தநாள். அவர் தன் வாழ்க்கையை நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்தார்.காந்தியடிகள் நம் முன்னே அற்புதமான சுத்தம்,சுகாதாரம் நிறைந்த,மன நிறைவுள்ள வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து நமக்கு உதாரணமாக விட்டுச் சென்றார்.இயற்கையோடு இயைந்த எளிமையும்,அழகும் பொதிந்த வாழ்க்கை அவருடையது.இன்றைய உலகிற்கு கலங்கரை விளக்கம் காந்தியடிகளின் வாழ்க்கை.


முதியோர் தினத்தில் நமக்கு முன்னே வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும்,வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும் நாம் பாடமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

முதுமைக் காலத்தை நடத்திச்செல்ல உடல் நலம் நன்றாக இருந்தால் தான் முடியும். அதற்கு,உடற்பயிற்சி,தியானம்,உணவுக் கட்டுப்பாடு,நல்ல உறக்கம், நல்ல பழக்க வழக்கம் நல்ல ஒய்வு அவசியம்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.-குறள்

தம்மினும் அறிவில் மேம்பட்ட பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு அவர் வழியில் நடத்தல் ஒருவர்க்குரிய வலிமைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த வலிமையாகும்.

முதியோர்கள் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!