வெள்ளி, 28 ஜனவரி, 2011

பனிப்புயல் காத்த விநாயகர்


பனி விநாயகர் உருவாகி கொண்டு இருக்கிறார்


பனி விநாயகர் உருவாகி விட்டார்





பனி விநாயகருக்கு அலங்காரம்





பனி விநாயகருக்கு சுண்டல் நைவேத்தியம்




பனி விநாயகருக்கு ஆரத்தி


என் மகன் அமெரிக்காவிலிருந்து படங்கள் அனுப்பி இருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கஷ்டமான பனி பொழிவையே தங்கள் ரசனையால் சிற்பங்கள் செய்து மகிழ்கிறார்கள் மகனும் மருமகளும். போனமுறை பனிமனிதன் செய்து மகிழ்ந்தார்கள் இந்தமுறை விநாயகர். மரங்கள் சாய்கின்றன, போக்குவரத்து பாதிக்கப் படுகிறது. பள்ளி கல்லுரிகள் விடுமுறை அளிக்கிறார்கள். இவர்கள் வீட்டு அருகில் இருந்த மரம் போன பனி புயலில் விழுந்து விட்டது. நல்லவேளை யாருக்கும் எந்த துன்பம் தராமல். இந்த முறை கார் நிறுத்தும் இடத்தின் அருகில் உள்ள மரம் சாய்ந்து நிற்கிறதாம்.கேட்கும் போது பயமாய் இருக்கிறது. கவனமாய் இருங்கள் என்று சொல்கிறோம். அதனால் மருமகள் யாருக்கும் எந்த சேதமும் இல்லாமல் இனி வரும் நாட்கள் இனிதாக இருக்க பிராத்தனை செய்கிறாள். நாமும் பிராத்தனை செய்வோம்.

என் மகன் டெல்லியில் வேலை பார்க்கும் போது தன் அக்காவோடு நைனித்தாலுக்கு பனி மலையைப் பார்க்கப் போய் வந்தான். செங்குத்தான மலை ஏறி மேலே மேலே போனாத்தான் மணல் மாதிரி பனி பொழிவைப் பார்க்க முடியுமாம். ஹிமாலய மலையழகை ரசித்து ஒருவர் மேல் ஒருவர் பனியைப் போட்டு விளையாடி மகிழந்தார்களாம். நிறைய பனி பொழிவைப் பார்க்க வேண்டும் என்றால் இந்தியாவின் சுவிட்சர்லாந்து மணாலி போய் பார்க்க வேண்டும் என்று பார்த்து களித்து வந்தார்கள் எப்போதாவது இப்படி ரசிக்கலாம், ஆனால் தினம் பனி பொழிவில் வாழ்வது சற்று சிரமம் தான். ஒவ்வொரு வீட்டு முன்னாலும் இப்படி விழுந்து கிடக்கும் பனியில் சிறபங்கள் செய்து மனதை லேசாக்கி கொள்கிறார்கள். வீடு உள்ளோருக்கு குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஹீட்டர் ,ஆடைகள் எல்லாம் இருக்கு. ஆனால் வீடு இல்லாதவர்களுக்கு இந்த சமயத்தில் இருப்பிடம், கம்பிளிகள் குளிர் ஆடைகள் எல்லாம் கொடுத்து உதவுமாம் அரசு. சூழ் நிலைகளுக்கு ஏற்ற மாதிரி வாழ்ந்து இயற்கையை ரசித்து இன்புற்று வாழவேண்டும்.

திங்கள், 17 ஜனவரி, 2011

குருவாலப்பர் கோயில்









ஆங்கிலப் புத்தாண்டுக்கு நாங்கள் ஒவ்வொரு முறையும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் , குருவாலப்பர் கோவிலும் போய் வருவோம். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் எல்லோருக்கும் தெரியும். இராஜ இராஜ சோழரின் மகன் இராஜேந்திர சோழர் கட்டியது. தன் தந்தை கட்டிய, காலத்தால் அழியாத புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் போலக் கட்ட வேண்டும் என்று ஆசைப் பட்டு ஏறக்குறைய அதேமாதிரி கட்டியது.முதன் முதலில் நாங்கள் போகும் போது கோபுரத்தின் மேல் அடுக்கு எல்லாம் பார்த்து இருக்கிறோம் இப்போது அங்கெல்லாம் மக்களை ஏறவிடுவது இல்லை. இந்த முறை அங்கு சுற்றுலாத் துறையினரும் சிறப்பான விழா ஒன்றை நடத்தினர்.இந்தக்கோயிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் நிறைய வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று முதலில் வழக்கம் போல் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் போய் சேர்ந்த போது பாதையில் ஒரு பஸ் எங்கள் காரை வழிமறித்து நின்றது. நீங்கள் பின்னால் போங்கள் என்று சொன்னார். பஸ்ஸுக்காக வழி விட்டு ஒதுங்கியதில் ,அங்கு முள் இருந்து இருக்கும் போல. டயர் பஞ்சர் ஆகிவிட்டது. என்ன இது இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தாலும் கோவில் வாசலில் தானே நின்றது, சாமி தரிசனம் முடிந்து வந்து பார்த்துக்கொள்ளலாம் என கோவிலுக்குப் போய் விட்டோம். நன்கு தரிசனம் செய்து குடும்ப நலன், நாட்டு நலனுக்காக வேண்டி வந்தோம்.

வெளியில் வந்தவுடன் ஸ்டெப்னி மாற்ற வேண்டுமே என்ற கவலைபிடித்துக் கொண்டது. என் கணவருக்கு டயர் மாற்றத்தெரிந்தாலும் பக்கத்தில் கார் மெக்கானிக் கடை இருக்கிறதா என கோவில் அருகிலிருந்த ஒட்டலில் கேட்டால் ,அவர் கூட்டு ரோட்டுக்குப் போக வேண்டும் என்று சொல்லி விட்டார். குருவாலப்பர் கோயில் பெருமாளை சேவிக்க வேண்டுமே நேரம் ஆகி விட்டால் நடை சார்ர்த்தி விடுவார்களே! என்ற கவலையில் பெருமாளை வேண்டிக்கொண்டு எதற்கும் அருகில் இருந்த வேன் டிரைவரைக் கேளுங்கள் அவர் முடியாது என்றால் நீங்களே டயர் மாற்றுங்கள் என்று சொன்னேன். என் கணவரும் சரி என்று போய் கேட்க அவர் உடனே சம்மதித்து நொடியில் மாற்றிக் கொடுத்தார். பணம் கொடுத்தால் வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். இன்று நான் உங்களுக்கு உதவி செய்தால் எனக்கு யாராவது வந்து உதவி செய்வார்கள் என்றார். எங்கள் திருப்திக்கு பிஸ்கட் பாக்கெட்டாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டபின் எடுத்துக் கொண்டார். பின் தன் விசிட்டிங் கார்டு கொடுத்தார். பார்த்தால் பாலாஜி டிராவல்ஸ்” என்று போட்டு இருந்தது. குருவாலப்பர் பெருமாளே வந்து உதவி செயதது போல் இருந்தது. அவர் பேர் சுந்தர். கதிராமங்கலமாம் ஊர் .வண்டி தேவைப் பட்டால் சொல்லுங்கள் என்றார். உதவிக்கு கூப்பிட்ட போது, அதைவிட என்ன சார் வருகிறேன் என்று வந்தாரே அந்த உதவி செய்யும் பெரிய மனதைப் பாராட்ட வேண்டும்.

அவருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு குருவாலப்பர் கோவில் சென்றோம். கோவிலுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் பெருமாளைச் சேவித்தபடி இருக்கிறார். அந்த கோவிலில் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கும். அழகாய் அதில் நிறைய தேன் கூடுகள் இருக்கும். கோவில் திருப்பணி ஆரம்பித்தவுடன் மரம் பாதியாய்க் குறைக்கப் பட்டுவிட்டது மனதுக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது.ஆலமரத்திற்கு எதிரில் அல்லி மலர்கள் பூத்த புஷ்கரணி உள்ளது. இத்தலப் பெருமாள், தாயாரிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அதை நிறைவேற்றித் தருவார் என்றார் பட்டர்.

நாங்கள் அங்கு 5,6 வருடமாய் சென்று தரிசித்து வருகிறோம்.அந்த கோவிலுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்த கோவிலின் விபரம் கொடுத்துள்ளேன். முடிந்த போது தரிசனம் செய்து வாருங்கள்.கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் வந்தாலே நல்லாஇருக்கும் என்றார் பட்டர். வெளியூர் பக்தர் ஒருவர் தீபத்திற்கு எண்ணெய், நெய் எல்லாம் நிறைய பட்டரிடம் கொடுத்தார். உள்ளூர் பக்தர் ஒருவர் குடும்பத்துடன் வந்து இருந்தார். கோவிலை விட்டு வரும் போது வேனில் சென்னையிலிருந்து ஒரு வைணவ குடும்பம் வந்தார்கள் பெருமாளைச் சேவிக்க.

குருவாலப்பர் கோயில்:


குருகை காவலரப்பர் திருக்கோயில் என்பது மருவி, குருவாலப்பர் கோயில் என்று தற்போது வழங்கப்படுகிறது குருகை காவலப்பர், வைணவ ஆச்சாரியரான நாதமுனிகளின் சீடர்களில் ஒருவராவார். இவர் நாதமுனிகளிடம் இருந்து யோகசாஸ்திரத்தைக் கற்றுக்கொண்டவர். நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் அமைந்துள்ள பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதியில் குருகைக்காவலப்பர் அருளிய தனியன் உள்ளது.
அப்பாடல்:

//சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு-ஓராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே
உரைக்கண்டாய் நெஞ்சே உகந்து.//

இராஜேந்திரசோழன் வடநாட்டிலிருந்த நாதமுனிகளைத் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து கங்கைகொண்டசோழபுரம் என்னும் தலைநகரை நிருமாணித்தான்.அவரைத் தனது ராஜ ஆலோசகராகக் கொண்டான். இராஜேந்திரசோழ்னின் மனைவியின் முயற்சியால் இத்திருக்கோயில் உருவாயிற்று என்பார்கள். குருவாலப்பர்கோயில் என்னும் ஊர் தனது ஆட்சிக்குள் 85 சிற்றூர் மற்றும் ஜமீன்களைக் கொண்டு விளங்கியிருக்கிறது. கங்கைகொண்டசோழபுரம் என்ற ஊரும் இதனுள் அடக்கம்.

திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள

இறைவன் பெயர் : அருள்மிகு வீரநாராயணப் பெருமாள்;
இறைவியின் பெயர்: அருள்மிகு மரகதவல்லித்தாயார்
மகாலட்சுமி அவதாரம் பண்ணிப் பெருமாளைத் தவம் செய்து
விவாகம் பண்ணிய தலம்.

நின்ற திருக்கோலம்
கிழக்கே திருமுகமண்டலம்
பார்க்கவ சேத்திரம்
மரகதவல்லித்தாயார்,இராமர்,ஆண்டாள்,ஆழ்வார்கள்,விஷ்வக்சேனர்
ஆகியோருக்குச் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.
உற்சவமூர்த்தி-துவாரகாநாதர்
நாதமுனிகளுக்குக் கிருஷ்ணனாக சேவைசாதித்த தலம்
இங்கு வந்து வணங்கியவர்களின் கொடிய பாவங்களும் தீரும் என்கிறார்கள்

வைகாசி விசாகத்தன்று தேர்த்திருவிழா நடைபெற்று வந்திருக்கிறது. நீண்டகாலமாக கவனிப்பாரின்றி இருந்த இத்திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.நீண்டகாலம் இங்கு முன்பு பணியாற்றிய முதுபெரும்பட்டாச்சாரியாருக்குப் பிறகு தற்போது திருவரங்கத்தில் இருந்து வந்துள்ள திருமிகு.கண்ணன் பட்டாச்சாரியார் பொறுப்பேற்று கோயில் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறார்.நாங்கள் முதன்முதலில் இங்கு சென்றபோது முன்பிருந்த பட்டாச்சாரியார் அடிக்கடி இத்தலத்துக்கு வாருங்கள் என்று அன்புடன் கூறினார், அதில் இருந்து ஒவ்வோராண்டும் போய் வருகிறோம்.

இப்போதுள்ள தொடர்புகொள்ள:

கண்ணன் பட்டாச்சார்யார்-செல்:9965342123
----------


இருப்பிடம்:

இத்தலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கே 2 கி.மீ தூரத்தில் உள்ளது.
இத் தலம் திருச்சியிலிருந்து-91 கி.மீ தூரத்திலும்
கும்பகோணத்திலிருந்து 46கி.மீ தூரத்திலும்
அரியலூரிலிருந்து38கி.மீ தூரத்திலும் உள்ளது

முகவரி:

அருள்மிகு குருவாலப்பர் திருக்கோயில்,
ஜெயம்கொண்டம் தாலுக்கா
அரியலூர் மாவட்டம்.
பின்கோடு-612901

புதன், 12 ஜனவரி, 2011

பொங்கல் வாழ்த்து








செய்யும் விளைந்தது;
தையும் பிறந்தது
செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்!-புதுச்
செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்!
பொய்கை புதர்செடி
பூக்கள் நிறைந்தன;
பொன்னொளி எங்கணுங் கண்டோம்!-புதுப்
பொன்னொளி எங்கணுங் கண்டோம்!

மாவும் சுளைப்பலா
வாழையும் செந்நெலும்
வந்து குவிந்தது வீட்டில்! - தை
வந்தது வந்தது நாட்டில்!
கூவும் குயிலினம்
கூவாக் குயிலினம்
தாவிப் பறந்தது மேல்வான்!- ஒளி
தாவிப் பறந்தது கீழ்வான்!

சிட்டுச் சிறுவரின்
செங்கைக் கரும்புகள்
தொட்டுப் பிசைந்தன பொங்கல்! -அதை
இட்டு மகிழ்ந்தனர் பெண்கள்!
வெட்ட வெளியெலாம்
மெல்லியர் பண்ணிசை
மேவும்; சிலம்பொலி கேட்கும்; - தமிழ்
வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்!

------கவிஞர் வாணிதாசன்.

பாட்டாளி மக்களெல்லாம் பல்லாண்டு வாழ்கவே!
வீட்டுக்கு வீடு செல்வம் விரைந்துயர்ந்து பொங்குகவே!
நாட்டிலும் வீட்டிலும் நல்லோர் சொல் செயல்படுக!
ஏட்டறிவோடியற்கையறி வெங்கும் பொங்கித் திகழ்க!

------- வேதாத்திரி மகரிஷி

வலை உலக அன்பர்களுக்கு உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்.

திங்கள், 10 ஜனவரி, 2011

டைரி - புத்தாண்டுத் தொடர்பதிவு

2010,2011 -ஆம் வருட நினைவுகளை தொடர்பதிவெழுத புவனேஸ்வரி ராமநாதன் அழைத்தார்கள்.

எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. மனம் எனும் டைரியில் எத்தனை எத்தனையோ நினைவுகள் குறித்து வைக்கப் பட்டுள்ளன. அதில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன், புவனேஸ்வரியின் அன்பு அழைப்புக்காக.

1996 ல் மனவளக் கலை யோகா பயிற்சியில் ஆசிரியர் பட்டம் வாங்கி மன்றத்தில் சர்வீஸ் செய்யும் போது, தீட்சை கொடுத்தவிபரம்,அன்று ’சிந்தனை விருந்து’ எந்த தலைப்பில் கொடுத்தேன் என்பது பற்றிய விவரம் எழுதி வைத்து இருப்பேன், குறிப்பு நோட்டில். அது தான் என் முதல் டைரிக் குறிப்பு என்று நினைக்கிறேன்.

என் வாழ்வில் கடந்த 2010ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. மகிழ்ச்சியை, இன்பத்தை அள்ளித் தந்த ஆண்டு. ஏப்ரல் 11 ஆம் தேதி என் குழந்தையின் குழந்தையைக் கைகளில் ஏந்தி உச்சி மோந்த நாள். வெளி நாட்டில் (நியூஜெர்சி) ஜூன் மாதம் பிறந்த பேரனை எப்போது பார்ப்போம், எப்போது அள்ளி அணைப்போம் என்று ஒவ்வொரு கணமும் நினைத்து, அந்த அற்புத தருணம் கைகூடிய வருடம்.

நியூஜெர்சியிலிருந்து “சிறு சிறு அரும்புக்குக் குறும்புகள் வளருது ஓ மைனா மைனா!”என்ற தலைப்பில் என் பேரனின் குறும்புகளை எழுதியதை,
// பாட்டியாவது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம் தெரியுமா? கோமதி அரசு எழுதிய ’சிறு சிறு அரும்புக்கு குறும்புகள் வளருது , ஓ மைனா மைனா’ படித்துப்பார்! பேரக்குழந்தையின் குறும்பு, பாட்டிக்கு எவ்வளவு மகிழ்ச்சி தரும் என்று புரியும்//
என்று சேட்டைக்காரன் அவர்கள் வலைச்சர ஆசிரியராய் இருந்த போது என் வலைத்தளத்தைக் குறிப்பிட்டு அறிமுகப் படுத்தினார். அது ஒரு மகிழ்ச்சி எனக்கு.

அடுத்து நியூஜெர்சியிலிருந்து அன்னையர் தினத்திற்கு எழுதிய ’அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்’ என்று எழுதிய பதிவை தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் வலைச்சர ஆசிரியராய் இருக்கும்போது,

// அன்னையர் தினத்தில் “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்” அப்பிடீங்கிறாங்க கோமதிஅரசு//
என்று குறிப்பிட்டு என்னை அறிமுகப்படுத்தினார்கள். அது இன்னொரு மகிழ்ச்சி எனக்கு.

பிறகு ’தேவதை’ பத்திரிகையில்(ஆகஸ்டு 16 2010) ’வலையோடு விளையாடு’ என்ற பகுதியில் ‘குருந்தமலை குமரன்’ என்ற பயணக்கட்டுரையும், ’தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்’ என்ற சிறு பகுதியும், ‘எண்ணம் முழுதும் கண்ணன் தானே’என்ற பதிவிலிருந்து சிறு பகுதியும் வெளியிட்டார்கள். தொகுத்து வழங்கிய நவநீதன் அவர்களுக்கு நன்றி.

2011ஜனவரி ’லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிக்கையில்-புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பிதழ்- ’மார்கழி கோலங்கள்’ என்ற எனது பதிவு, ‘மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. தேனம்மை அந்தப் பத்திரிக்கைக்காக கதை, கட்டுரை, கவிதை கேட்டு இருந்தார்கள். பெண்களைப் பற்றி கட்டுரை எழுதி அனுப்பி இருந்தேன். மார்கழி மாதசிறப்பு கோலங்கள் பொங்கல் சிறப்பிதழ் என்பதால் ’மார்கழி கோலங்கள்’ என்ற பதிவைப் போட்டிருந்தார்கள். தேனம்மைக்கும், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜாராகவன் அவர்களுக்கும் நன்றி.

தமிழ் மணவிருதுக்கு மூன்று படைப்புகளை அனுப்பி வைத்தேன். முதல் சுற்றில் தேர்வாகி இருப்பதை முதன் முதல் செந்தழல் ரவி அவர்கள் வந்து சொல்லி அதை பார்ப்பதற்கு லிங்கும் கொடுத்தார்கள். பார்த்தால் என் மூன்று பதிவுகளும் தேர்வாகி இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. இரண்டாம் சுற்றிலும் வெற்றி பெறச்செய்த வலை உலக அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். தமிழ்மணத்திற்கு நன்றி! நன்றி!

அடுத்த இரண்டாவது சுற்றில் ‘ விரதங்களும் உடல் நலமும்’ தேர்வாகி இருப்பதை ராமலக்ஷ்மி அவர்கள் சொன்னார்கள்.திகழ், ஜோதிஜி, துளசி மேடம் எல்லாம் வந்து வாழ்த்து சொல்லும் போது விருது கிடைத்த மகிழ்ச்சியைக் கொடுத்து விட்டது.

நான் பதிவெழுத வந்தது முதல் பின்னூட்டங்கள் மூலம் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த எல்லோருக்கும் நன்றிகள்.

பதிவு எழுத வந்த புதிதில் வல்லிசிம்ஹன் அக்கா அழைத்த தொடர் அழைப்புக்கு (வாழ்க்கை வாழ்வதற்கே) சந்தனமுல்லை அவர்கள் 'scrumptious blog award' விருது கொடுத்தார்கள். நான் ஆதவன், தீபாவளி தொடர் பதிவுக்கு அழைத்து அவர்களும் அதே விருதைக் கொடுத்தார்கள். முத்துலெட்சுமி தனது பதிவு உலகப் பிரவேசத்தின் 5 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பதிவுலக அன்பர்களுக்கு நேர்மறை எண்ணங்களை பரப்ப வாழ்த்தி ’வியல் விருது’ என்ற விருதினை எனக்குக் கொடுத்தார்கள். முத்துலெட்சுமி சொன்னது போல் ’வாழ்க பதிவுலகம்! வளர்கநட்பு!!’

எல்லோரும் நன்றாக எழுதுகிறார்கள். நேரமின்மையால் எல்லோருடைய பதிவுகளுக்கும் போய் படிக்க முடிவதில்லை. இருந்தாலும் அவர்கள் வந்து எனக்கு வாழ்த்துச் சொல்லும் போது அந்த அன்பு உள்ளங்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

புத்தாண்டுக் கொள்கையாய் நான் கடைப்பிடிக்க நினைப்பது- பிறரிடம் குறையைப் பார்க்காமல் நிறைவைப் பார்ப்பது. என் கணவர் அடிக்கடி சொல்லும் அறிவுரை ’குறை சொல்லாதே’ என்பது தான். கதவில் நாம் போய் இடித்துக் கொண்டாலும் கதவு இடித்து விட்டதாய்ச் சொல்வது தானே நம் வழக்கம்!

குறை காண வேண்டாம்!
----------------------
//
குறை காண்போர் அறிவில் நற்
குணங்கள் பயனற்றிருக்கும்.//---------வேதாத்திரி மகரிஷி.

இதைக் கடைபிடித்தாலே குடும்பத்தில் அமைதி இன்பம் பெருகும். குறை கூறும் போது மன வருத்தம் ஏற்படுகிறது. கருத்து வேற்றுமை ஏற்படுகிறது. நிறை காணும் போது துன்பம் விலகி இன்பம் பெருகிடும்.

நிறை காண்போம்
----------------

//குற்றமே காணும் குறையுடையோர் வாழ்வினிலே
பெற்ற பயன்சினம் வஞ்சம் பொறாமை வருத்தம் இவற்றால்
முற்றுமிழந்தார் வாழ்வின் இன்பமும் பிறவிப்பயன்
நற்றவத்தோர் வழி நின்று நல்லனவெலாம் ரசிப்போம்.//----- வேதாத்திரி மகரிஷி.

புத்தாண்டில் வாழ்வில் வளம் அத்தனையும் பெற்று அமைதியோடு வாழ்வோம்.
இறைவன் எல்லோருக்கும் எல்லா வளங்களும் அருளப் பாரதியார் பாடுகிறார்:

//மண்மீதுள்ள மக்கள் பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையாலிடும்பை தீர்ந்தே
இன்பமுற்றன்புடனிணங்கி வாழ்த்திடவே
செய்தல் வேண்டும், தேவதேவா!
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
பூ மண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமுமிடி மையுநோவுஞ்
சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க! என்பேன், ஐயனே!
இந்நாள், இப்பொழுதெனக்கிவ் வரத்தினை
அருள்வாய்.//


//எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே யெண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முனிங்கு
நசித்திடல் வேண்டு மன்னாய்.//

பாரதியார் சொன்னது போல் நல்லதே எண்ணுவோம்.

தொடர் அழைப்புக்கு அழைத்த புவனேஸ்வரி அவர்களுக்கு நன்றி.