ஞாயிறு, 26 மார்ச், 2023

விரதங்களும் உடல் நலமும்


நம் முன்னோர்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள்.உடல் நலமாக 
இருந்தால் தான் நாம் இந்த பூமியில் மகிழ்ச்சியாய் வாழமுடியும் என்பதை 
உணர்ந்து அதற்கேற்றவாறு வாழ்க்கை முறைகளை அமைத்துக் 
கொண்டார்கள்.

உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க ஆகாரம். ரத்தஓட்டத்தையும்,ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க மிதமான 
உழைப்பு.


ஒரு பெண் கருவுற்ற நாள் முதல் நல்ல சத்தான ஆகாரம் உண்டு,மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள வேண்டும்.அப்போது தான் 
ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.நாளைய சமுதாயம் மன வளம்,
உடல் நலம் மிக்கதாய்  இருக்கும்.


“நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை
 நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னை சீரணிக்கும்”
--வேதாத்திரி மகரிஷி

எனவே சுத்தமானதும்,எளிமையானதும்,சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம்  நம்  உடலுக்கு தேவை.  காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை  
இவற்றையும்  மிதமாக  உட்கொள்ள வேண்டும்.


சமசீரான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஊட்டசத்துக்கள் 
அளவிலும், தரத்திலும், சமவிகிதத்தில் இருக்குமாறு  உண்பதே சரிவிகித 
உணவு. 

சரிவிகித  உணவு  சாப்பிட்டால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

திருவள்ளுவரும் இதை அழகாய் சொல்கிறார்.

”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”

உணவு அளவுக்கு மேல் கூடினாலும் குறைந்தாலும் மருத்துவ நூலோர்
 வகுத்த வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்று நோயை வரசெய்யும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி யுணின்.”

முன்பு உண்ட உணவு செரித்த்தை அறிந்து பின்பு உண்டால் உடலுக்கு
 மருந்து என்று வேறு ஒன்றும் வேண்டியது இல்லை.

“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.”

உடலுக்கு தேவையான உணவை அளவோடு உண்டால்,உடம்பை நீண்ட 
காலம் வாழ வைக்க முடியும்.


இதற்கு தான் உபவாசம்,விரதம்,நோன்பு,போன்ற பழக்கங்கள் ஏற்பட்டன.
அதிலும்கூட தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தகுந்தாற் போல் விரதம் கடைப்பிடித்தார்கள்.

விரதம்,நோன்பு ஆகியவற்றை எல்லா மதத்தினரும் கடைபிடித்து 
வருகின்றனர்.

நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம்,ஆகியவை நமது உடல்நலத்தைப்
 பெரிய அளவில் தீர்மானிக்கின்றன. தட்பவெப்பத்திற்கேற்ப உணவுப்
 பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற அந்தந்த உணவு வகையை எடுத்துக் கொள்வது
நல்லது. நமது பாரம்பரிய உணவு வகைகளை உண்ணவேண்டும். 
நார்ச்சத்துக்கு 
பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளை உண்ணலாம். இரும்புச் சத்துக்கு
 வெல்லம் நல்லது.நொறுக்கு தீனிக்கு மாறாகப்பழங்கள் ! குழந்தைகளுக்கு
 நாமே தயாரித்த சத்துமா கஞ்சி கொடுக்கலாம். பூச்சி கொல்லிகள் 
தெளிக்காத பச்சைக் காய்கறிகள் நல்லவை. கீரைகள்,கேழ்வரகு இதில் 
எல்லாம் சுண்ணாம்புச்சத்து உள்ளது.
 
சிறு வயது முதல் இளநீர்,மோர் பருகப் பழகுவது நல்லது.அவரவர்களுக்கு
 என்ன ஒவ்வாதிருக்கிறதோ, அதை விட்டு விட்டு, எது உடம்புக்கு ஒத்துக் 
கொள்கிறதோ அதை உண்டால் உடல் நலமாக இருக்கும்.

காலையில் இஞ்சி,நடுப்பகல் சுக்கு,மாலையில் கடுக்காய் இப்படி எப்போது
 எதைச் சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் வகுத்துத் தந்த முறையில்
 உணவை உண்டால் நாளும் நலமாக இருக்கலாம்.

உடல் உழைப்பாளிக்கும்,மூளை உழைப்பாளிக்கும், உண்ண வேண்டிய
 உணவு மாறுபடும்.உடல் உழைப்பு இல்லாதவர்கள் அதிக உணவு உண்டால்
 ஆற்றல் இழப்பு தான் ஏற்படும்.உண்ணும் உணவு எளிதில் ஜீரணித்து
 கழிவுகள் நன்கு வெளியேறினால்தான் உடல் பலம் பெறும்.சத்து 
குறைந்தாலும் நோய்; சத்து மிகுந்தாலும் நோய்.பசிக்கும் மட்டும் 
உணவல்ல, உடலின் செயல் பாட்டுக்கும் உணவு அவ்சியம்.அவசர உணவு,
அதிக உணவு,அகால உணவு, நல்லதல்ல.

விரத நாட்களில் உணவைத் தவிர்ப்பதும்,பண்டிகை நாட்களில் விருந்தை 
ஏற்பதும் வழக்கம்.

நாள்தோறும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கும் வயிறாகிய
 இயந்திரத்திற்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு கொடுக்கலாம்.

“விரதமகாத்மியம்” என்னும் நூல் 159 விரதங்கள் இருப்பதாய்ச் சொல்கிறது. 
நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் கொஞ்சம் தான்.

உபவாசம் என்பது ஒர் நோய் தடுப்பு முறையே:

சிலர் விரத காலங்களில் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு இருப்பார்கள்,இது மலக் குடலை சுத்தம் செய்யுமாம்.
சிலர் இளநீர், ஆரஞ்சுஜீஸ், எலுமிச்சை ஜீஸ், பழச்சாறுகள், குடிப்பார்கள்.

சிலர் நீர்மோர்,பானகம், மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.
சிலர் பழம்,பால் எடுத்துக் கொள்வார்கள்.பழ ஆகாரம் என்பது தான்
 பலகாரம் ஆனது என்று சொல்கிறார்கள். விரத  காலங்களில் பலகாரத்திற்கு பதில் பழ ஆகாரம் நல்லது.

உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்:

கழிவுகள் சீராக வெளியேறும்;  எடை குறையும்:  உடல் சமநிலை பெறும்; 
ஜீரண உறுப்புகள்ஓய்வு பெறும்;  நற்சுவாசம் பெறலாம்; ரத்தம் சுத்தமாகும்;
 நரம்புகள் ஓய்வு பெறும்; நோய் தரும் திசுக்கள் அழியும்;கழிவுகள் நன்கு 
நீங்கும்; மனம் சமநிலை அடையும்; நற்சிந்தனை உண்டாகும்.

சில விரதங்களும் பலனும்:

1.திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் பரிபூரண
 அன்பைப் பெறலாம்.
2.செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு
 நீங்கி வாழலாம்.
3.வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
4.வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் 
பெறலாம்.
6.ஞாயிற்றுக் கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயிலிருந்து 
விடுதலை பெறலாம்,நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக் கிழமையன்று 
மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

மார்கழி ஏகாதசி விரதம் :-

கிருஷ்ணபக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிப்பது இந்நாள் தேவர்களுக்கு 
இடுக்கண் புரிந்த முராசுரனை விஷ்ணு கொன்று தேவரை களிபித்த நாள். 
இதில் உதயம் ஏகாதசி , மத்யம்  த்வாதசி , அந்தியம் திரயோதசி
உத்தமம்.  இந்நாளில் ஒரு நாள் விரதமிருக்கின்   ஆயிரம்  ஏகாதசி பலம் 
உண்டு  என்று சொல்லப்படுகிறது.


என் அம்மாவும் விரதங்களும்:

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமை (சோமவாரவிரதம்)
வீட்டில் என் அப்பாவைத் தவிர எல்லோரையும் கடைபிடிக்க வைத்தார்கள்.
காலையும், மதியமும், உணவு அருந்தாமல், மாலை மாவிளக்கு 
செய்து பூஜை முடிந்தபின் தான் உணவு.

பள்ளி சென்று வந்தபின் குளித்து பூஜையில் உட்கார்ந்தால் இரண்டு 
மணி நேரம் பஜனை.அம்மா எப்போது பாடல் முடிப்பார்கள் உணவு 
தருவார்கள் என்று இருக்கும்.பூஜை முடிந்தபின் அக்கம் பக்கத்தில்
 உள்ளவர்களுக்கு மாவிளக்குப் பிரசாதம் கொடுத்து வந்தபின் 
தான் எங்களுக்கு உணவு. 

அப்பாதான் ’காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் சீக்கீரம் சாப்பிடுங்கள்’ என்பார்கள். 


இந்த விரதத்தை சிறு  வயதில் கடை பிடிக்க கஷ்டமாய் உணர்ந்தாலும், 
இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.

பிறகு வெள்ளிக் கிழமை பூஜை. சர்க்கரைப் பொங்கல் செய்து தருவார்கள்
 அதை விளக்கு முன் வைத்து விட்டு அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் சொல்லி,
’விளக்கு போற்றி’ சொல்லி விட்டு பூஜை முடிந்தபின் தான் காலை உணவு. 
அந்தப் பழக்கம்தான் மனவைராக்கியம்,எல்லாம் இறைவன் அருளால் நல்லபடியாக நடக்கும் என்ற மனப் பக்குவத்தை இப்போது கொடுத்து இருக்கிறது.இன்றும் சோமவார விரதம் கடைப்பிடித்து வருகிறேன்.

சஷ்டி விரதம் மாதத்தில் இரண்டு வரும். அந்த இரண்டு நாளும் நானும்
என் கணவரும் விரதம் இருக்கிறோம் தீபாவளியை ஒட்டி வரும் சஷ்டி
 விரதநாட்களில் ஒரு வேளை மட்டும் உணவு.6 ஆம் நாள் சூரசம்ஹாரம் 
முடிந்தபின் உணவு.நானும் கணவரும் சேர்ந்து கடைப்பிடிப்பதால் கஷ்டம் இல்லை.இந்த விரதம் என் கணவர் வீட்டில் அப்பா,அம்மா,அண்ணன்கள் 
எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் திருசெந்தூரில் போய் ஆறு நாளும் இருந்து
 விரதம் கடைப் பிடிப்பார்கள்.இப்போது வயது ஆகிவிட்டதால் அத்தை,மாமா கடைப்பிடிப்பது இல்லை.

என் கணவருக்கும்,என் மகனுக்கும் காய்ச்சல் அடிக்கடி வந்து கொண்டு
 இருந்தது அப்போது அம்மாவிடம் கேட்ட போது ’ஞாயிறு விரதம் இரு , 
நோய் நொடி இல்லாமல் இருக்கும்’ என்றார்கள் 19 வருடமாய் நானும் 
என் கணவரும் இருந்து வருகிறோம்,குழந்தைகளும்’ நாங்களும் 
இருக்கிறோம்’ என்று இருந்தார்கள் மகள் கல்யாணம் ஆகும் வரை,
மகன் வேலை கிடைக்கும் வரை இருந்தார்கள்.

மகனுக்கு விதிமுறைகள் விரதத்தில் தளர்த்தப்படும்.பொரி விற்கும் பாட்டி பொரிஉருண்டை,தேன் மிட்டாய் கொண்டு வருவார்கள், அது மட்டும் 
வாங்கிச் சாப்பிடுகிறேன் என்பான் சரி என்று ஒத்துக் கொள்வேன்.
காலை மட்டும் டிபன் கிடையாது. மதியம் உணவு உண்டு.இரவு உணவு சப்பாத்தி.காலை உணவை தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் 
சொல்வதால் சத்துமாவு கஞ்சி கொடுத்து விடுவேன் குழந்தைகளுக்கு.

விரதங்களைக் கடைப் பிடிக்க முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம்.

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி,தான தர்மங்கள் செய்து,மனதாலும் வாக்கினாலும் செயலாலும் ஒழுக்கமான காரியங்களைச் செய்து,பிறர்
 துன்பங்களைத் தன்னுடையது போல் நினைத்து உதவிகள் செய்பவன் தான் ’சத்புருஷ்விரதம்’ செய்த பலனை அடைவதாய் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஒழுக்கசீலனாக,தர்மசாஸ்திரப்படி சத்புருஷவிரதம் அனுஷ்டித்து
 இறைஉணர்வோடு வாழ்பவர்கள், நோயினால் அவதிப்படுவதில்லை 
அப்படியே நோய் வந்தாலும் அதைத் தாங்கும் சக்தியையும் எதிர்த்துப்
 போராடும் உள்ளத்தையும் இறைவன் அவர்களுக்கு அளிக்கிறார்.என்பது ஆயுர்வேதத்தின் ஆசான் சரகரின் வாக்கு.

வேதங்கள் நமக்கு உணர்த்துவது எல்லா உயிர்களும் துன்பமில்லாமல்
 இருக்க வேண்டும் என்பதே .இதைத்தான் தாயுமானவர்’ எல்லோரும் 
இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றியேன் பாராபரமே ’
என்கிறார்.

எல்லோருடைய இன்பத்துக்கும் ஆசைப்பட்டால் நாமும் இன்பமாக
 இருப்போம். இதைத்தான் ஆயுர்வேதமும் கூறுகிறது.

சமஸ்கிருத்தில் “சர்வ ஜன சுகினோ பவந்து” என்பார்கள்.

வாழ்க நலமுடன்!
வாழ்க வளமுடன்!

பின் குறிப்பு:-

சகோதரர் துரை செல்வராஜூ அவர்கள் ஆரோக்கியம்  பதிவை படித்தவுடன் 
நான்முன்பு போட்ட பதிவு நினைவுக்கு வந்து மீள் பதிவு
போட்டு விட்டேன். இப்போது உள்ள நண்பர்கள் படிக்காத பதிவு.

மார்ச் 26 ம் தேதி, 2010 ல்  இந்த பதிவு முன்பு போட்டு இருக்கிறேன்.
அதே மாதம் அதே தேதியில் இன்று போட்டு இருக்கிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

43 கருத்துகள்:

  1. மிக மிக உபயோகமான பதிவு கோமதியம்மா. குறிப்பில் வைத்துக்கொண்டேன். அளவாக உணவு உண்பதின் பலன்களை குறிப்பிட்டுள்ளது மிக அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //உடல் உழைப்பாளிக்கும்,மூளை உழைப்பாளிக்கும், உண்ண வேண்டிய உணவு மாறுபடும்.உடல் உழைப்பு இல்லாதவர்கள் அதிக உணவு உண்டால் ஆற்றல் இழப்பு தான் ஏற்படும்.உண்ணும் உணவு எளிதில் ஜீரணித்து கழிவுகள் நன்கு வெளியேறினால்தான் உடல் பலம் பெறும்.//

    good post.

    பதிலளிநீக்கு
  3. மாதவன்,நான் மார்கழி ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பேன்.அதை நினைவு படுத்தியதற்கு நன்றி.

    மார்கழி ஏகாதசி விரதம்:

    கிருஷணபக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிப்பது.
    இந்நாள் தேவர்களுக்கு இடுக்கண் புரிந்த முராசுரனை விஷ்ணு கொன்று தேவரை களிப்பித்த நாள்.இதில் உதயம் ஏகாதசி,மத்யம் த்வாதசி,அந்தியம் திரயோதசி உத்தமம்.இந்நாளில் ஒரு நாள் விரதமிருக்கின் ஆயிரம் ஏகாதசி பலம் உண்டு.

    நான் அதனால் தான் மார்கழி ஏகாதசி விரததை கடைப் பிடிக்கிறேன்.

    மாதவன் ஏகாதசி விரத பெருமை சொல்லி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. கோமதிம்மா, நல்ல இடுகை. அளவாக சாப்பிட வேண்டும். ஆனால், அடுத்த எஸ்ட்ரீம் ஆக, இப்போ இருக்கிற டீன் ஏஜ் பெண்கள் பலர், டயட் இருக்கிறேன் பேர்வழி என்று சுத்தமாக சாப்பிடாமல் இருக்கிறார்கள். என்னத்த சொல்ல?

    பதிலளிநீக்கு
  5. முன்பு உண்ட உணவு செரித்த்தை அறிந்து பின்பு உண்டால் உடலுக்கு மருந்து என்று வேறு ஒன்றும் வேண்டியது இல்லை.


    ..... Useful advice. :-)

    பதிலளிநீக்கு
  6. அருமையாய் விரத விவரங்கள் சொல்லியிருக்கிறீர்கள், கோமதி!நிறைய விஷயங்கள் குறித்துக் கொண்டேன். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  7. //மனவைராக்கியம்,எல்லாம் இறைவன் அருளால் நல்லபடியாக நடக்கும் என்ற மனப் பக்குவத்தை//


    எனக்குள்ளும் எப்படியோ உருவான எண்ணம் நீங்காமல் தொடர்கிறது !
    - நம்பிக்கை - அப்படியே தொடரட்டுமே! :)

    பதிலளிநீக்கு
  8. மிக நல்ல பகிர்வு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். விரதங்களின் நோக்கம், பயன்கள் இவற்றைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள், உங்கள் வாழ்க்கை அனுபவத்துடன். மனதில் கொள்கிறோம். மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  9. முகுந்த் அம்மா,
    ஒரு புத்தகத்தில் படித்தேன்:

    கி.மு.,கி.பி, என்று பிரிப்பது மாதிரி,எடை விஷயத்தில்,ஐ.மு.,ஐ.பி., என்று கால வரையறை இருக்கிறது.ஐஸ்வர்யா ராய் வருவதற்கு முன்,பின் என்று!

    இப்போ இருக்கிற பெண்களுக்கு
    50 கிலோ தாஜ்மகால் ஆக ஆசை தான் காரணம்.

    உணவை தவிர்த்து எடையை குறைத்தால் உடல் நலம் தான் கெடும். அவர்கள் உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. ஆயில்யன்,உங்கள் நம்பிக்கை தொடரட்டும்.

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  11. ஆம், ராமலக்ஷ்மி நீங்கள் சொன்னமதிரி அள்வுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்.

    எல்லாம் அளவோடு இருந்தால் நலம்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  12. நலமான உணவு முறைகள், விரதங்கள் பற்றிய மிக விரிவான கட்டுரை.

    கந்த சஷ்டி விரதம் ஆறுநாட்கள் நானும் கடைப்பிடித்துவருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி மாதேவி.

    கந்த சஷ்டி விரதம் ஆறு நாளும் நீங்களும் கடைப் பிடிப்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. பல நல்ல விசயங்களை பகிர்ந்திருக்கீங்க கோமதிம்மா..

    \\மகனுக்கு விதிமுறைகள் விரதத்தில் தளர்த்தப்படும்.பொரி விற்கும் பாட்டி பொரிஉருண்டை,தேன் மிட்டாய் கொண்டு வருவார்கள், அது மட்டும் வாங்கிச் சாப்பிடுகிறேன் என்பான் சரி என்று ஒத்துக் கொள்வேன்.//

    :)))

    உணவு சாப்பிடாம இருக்கிற விரதத்தோட இந்த மௌன விரதத்தையும் சொல்லி இருப்பீங்களோன்னு பாத்தேன்.. அது தனி போஸ்ட் போடற அளவு கதைகள் இருக்குமே.. :)

    பதிலளிநீக்கு
  15. நன்றி முத்துலெட்சுமி.

    மெளன விரதத்தையும் சொல்ல வேண்டும். தனி கதை இருக்கு.

    நினைவூட்டியதற்கு நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  16. நல்லதொரு பகிர்வு. விரதம் பற்றிய பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. கார்/மெஷின்களுக்கு அவ்வப்போது சர்வீஸ் செய்வதுபோல, உடல் உறுப்புகளுக்கு நோன்பும் அவசியமே!! சும்மாச் சொன்னா செய்வதில் அலட்சியமா இருப்போம்னு, இதை இறைவனோடு இணைத்துச் சொல்லிருக்காங்க பெரியவங்க.

    நல்லாச் சொல்லிருக்கீங்க கோமதிக்கா.

    பதிலளிநீக்கு
  18. தீபாவளி வருகிறது. அதில் பண்டங்கள் அதிகபடியாக உண்டு உடம்பு சரியில்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. அதை சரிசெய்ய கார்த்திகை விரதம் வருகிறது.அடுத்து மார்கழி நெய் உண்ணோம் பால் உண்ணோம் என்றாள் ஆண்டாள். ஏன் என்றால் குளிரில் நெய் உறையும் தன்மை உள்ளது அது உடலுக்கு கெடுதல்செய்யுமஎன்பதற்காக.
    காயக்றிகள்,பழங்கள், தானியங்களை பண்டிகைகளூடன் இணைத்து அந்த அந்த பண்டிகைளுக்கு அதை இறைவனுக்கு படைத்து உண்பதை பழக்கப் படுத்தி உள்ளார்கள்.

    நீங்கள் சொல்வது போல் உடல் நலத்திற்கு நோன்பு அவசியம் என்பதை இறைவனுடன் இணைத்து சொல்லியிருக்கிறர்கள்,முன்னோர்கள்.

    பதிலளிநீக்கு
  19. விரதம்ன்னு சொல் கேட்டாலே எனக்கு அசுரப்பசி வந்துரும்.

    ஆனா பலநாட்களில் சாப்பிட மறந்து போய், சில நாட்களில் சோம்பல் காரணமாய், பல சமயங்களில் கோபித்துக்கொண்டு, சில சமயங்களில் மகிழ்ச்சி கூடுதலாக ஆனதும் வயிறும் மனமும் நிறைந்த திருப்தியில், இந்தியா வந்தபிறகு சாப்பிடும் நேரத்தில் மின்சாரம் போய்விட்ட காரணம் இப்படி சாப்பிடாமல் இருந்திருக்கிறேன்.

    இதுக்கெல்லாம் ஏதாவது பலன் இருக்குமான்னு சொல்லுங்க:-)))

    பதிலளிநீக்கு
  20. துளசி,நீங்கள் சொன்ன காரணங்களால் நானும் விரதம் இருந்து இருக்கிறேன்.

    கடவுளை நினைத்து விரதம் இருந்தால் ஆன்மீக பயன் கிடைக்கும்.உடல் நல பயனும் கிடைக்கும்.

    நீங்கள் சொன்ன காரணங்களால் விரதம் இருந்தாலும் உடல் நல பயன் கிடைக்கும்.
    இரண்டுமே மருத்துவ பயனை தரும்.

    அதனால் தான் நீங்கள் இன்றும் சுறு சுறுப்பாய் இருக்கிறீர்கள்.அது தான் பலன்.

    பதிலளிநீக்கு
  21. துளசிகோபால் சொன்ன மாதிரி தான் இங்கேயும்.

    விருது என்ற இலக்கை அடைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

    http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

    பதிலளிநீக்கு
  23. முதன் முதலில் நல்ல செய்தியைச் சொன்ன செந்தழல் ரவிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. நல்ல கட்டுரை.

    தமிழ்மணம் விருது பெற்ற பதிவுக்கு வாழ்த்துகள். மேலும் பல குவியட்டும்.

    வெற்றி பெற வைத்த வாசகர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  25. வாங்க கபீரன்பன், ”விரதங்களும் உடல் நலமும்” என்ற என் பதிவு முதல், சுற்றிலும், இரண்டாவது சுற்றிலும் தான் தேர்வானது. தமிழ்மண விருது பெறவில்லை, உங்கள் பாராட்டு கிடைத்ததே விருது கிடைத்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

    நன்றி கபீரன்பன்.

    பதிலளிநீக்கு
  26. கார்த்திகை சோமவாரம் ஐந்து வாரங்களும் மாவிளக்கு ஏற்ற வேண்டுமா?நான் கார்த்திகை என்றில்லாமல் ஒவ்வொரு திங்களும் விரதம் இருக்கிறேன் ஆனால் மாவிளக்கு ஆடிவெள்ளி மற்றும் புரட்டாசியில் பெருமாளுக்கு தளிகையின்போதும் தான்.குறிப்பில் வைத்துக்கொண்டேன் நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  27. வாங்க இந்திரா, வாழ்கவளமுடன்.
    ஒவ்வொரு திங்கள்கிழமையும் விரதம் இருப்பது நல்லது.
    கார்த்திகை மாதம் திங்கள்கிழமை மட்டும் மாவிளக்கு பார்ப்பார்கள், எங்கள் பக்கம். எல்லா திங்கள் கிழமையும் முடியவில்லை என்றால் பெரியகார்த்திகை மட்டும் மாவிளக்கு பார்க்கலாம்.
    பழைய பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி. நன்றி.
    புது பதிவு போட்டு இருக்கிறேன்.
    தரங்கம்பாடி பற்றி.

    பதிலளிநீக்கு
  28. திரு அப்பாதுரை பதிவில் இருந்து இந்த லிங்க் பார்த்து வந்தேன்.
    விரதங் களைப் பற்றி மிகத் தெளிவாக வழிமுறை சாப்பிடும் விதம் என்று எழுதியிருக்கிறீர்கள்.
    நானும் உங்கள் ஆலோசனைகளைக் கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  29. வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
    ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?
    உங்களுக்கு தெரியாத விஷயங்களை சொல்லவில்லை.
    உங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்கும், நன்றி.

    பதிலளிநீக்கு

34 கருத்துகள்:

  1. விரதம் இருப்பது நல்லது என்று தெரிகிறது.  பின்பற்றத்தான் முடியவில்லை.  சிறுவயதில் சனிக்கிழமைகளில் விரதம் இருந்திருக்கிறேன்.  சில வாரங்கள்தான்.  எப்படியோ தொடர முடியாமல் போனது.  சும்மா விரதம் என்றிருந்தால் அப்படி விட்டு விட்டுவார்கள் என்றுதான் அதை பக்தியுடன் இணைத்தார்கள் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      //விரதம் இருப்பது நல்லது என்று தெரிகிறது. பின்பற்றத்தான் முடியவில்லை. சிறுவயதில் சனிக்கிழமைகளில் விரதம் இருந்திருக்கிறேன். //

      ஆமாம் , விரதம் இருப்பது நல்லதுதான். சனிக்கிழமை விரதம் இருந்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி என்ன காரணத்திற்கு அம்மா இருக்க சொன்னார்கள் என்று சொல்லவில்லையே!

      //சும்மா விரதம் என்றிருந்தால் அப்படி விட்டு விட்டுவார்கள் என்றுதான் அதை பக்தியுடன் இணைத்தார்கள் போலும்.//

      ஆமாம், இத்தனை நாள், இத்தனை வாரம், வாழ்நாள் முழுவதும் என்று நினைத்து இருப்பது உண்டு. எல்லா மதங்களிலும் இந்த விரத காலங்கள் உண்டு. சிலர் எச்சில் கூட முழுங்க மாட்டார்கள் கடுமையான விரதம் இருப்பார்கள்.

      நீக்கு
  2. என் அப்பா வாரத்தில் ஒருநாள் மௌனவிரதம் இருந்தார்.  அதுவும் கொஞ்ச காலம்தான்.  தொடரவில்லை.  அதைப் பார்த்து நானும் அதேபோல கொஞ்ச காலம் வாரத்தில் ஒரு நாள் மௌன விரதம் இருந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. //என் அப்பா வாரத்தில் ஒருநாள் மௌனவிரதம் இருந்தார். அதுவும் கொஞ்ச காலம்தான். தொடரவில்லை. அதைப் பார்த்து நானும் அதேபோல கொஞ்ச காலம் வாரத்தில் ஒரு நாள் மௌன விரதம் இருந்திருக்கிறேன்.//


      ஒவ்வொரு சனிக்கிழமையும் மெளனவிரதம் 15 வருடம் விடாமல் இருந்தேன், வாழ்நாள் முழுவதும் இருப்பதாக வேறு நினைத்து இருந்தேன். இடையில் விடும்படி ஆகி விட்டது. மெளனவிரத பதிவும் இரண்டு போட்டு இருக்கிறேன்.

      நீக்கு
    2. இது நல்லதாக மனதைக்குப் படுகிறது. மௌனவிரதம் பற்றி யோசிக்கிறேன்.

      நீக்கு
    3. இருந்து பாருங்கள் நன்றாக இருக்கும் நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. மீள் பதிவு அதே மாதம் அதே நாள் மட்டுமில்லை.  இன்று சஷ்டியும் கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மீள் பதிவு அதே மாதம் அதே நாள் மட்டுமில்லை. இன்று சஷ்டியும் கூட!//

      ஆமாம், சஷ்டியும் இருப்பதை இப்போதுதான் பார்த்தேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  4. எல்லா நல்ல வழக்கங்களையும் சிறுவயதிலிருந்தே பழக்கிக் கொண்டு வந்தால்தான் உண்டு.  உடலும் மனமும் படியும்.  அப்படி வளர்க்கப் பட்டவர்கள் பாக்கியவான்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லா நல்ல வழக்கங்களையும் சிறுவயதிலிருந்தே பழக்கிக் கொண்டு வந்தால்தான் உண்டு. உடலும் மனமும் படியும். அப்படி வளர்க்கப் பட்டவர்கள் பாக்கியவான்கள்.//

      ஆமாம், சிறு வயது முதலே நாங்கள் வீட்டில் எல்லோரும் இருந்ததால் கஷ்டமாக முதலில் இருந்தாலும் பழக்கமாகி விட்டது. இப்போது விரதங்களை விட்டு விடுங்கள் இனிமேல் என்ன விரதம் என்று எல்லோரும் சொல்வதால் விட்டு விட்டேன், அதுதான் கஷ்டமாக இருக்கிறது, மீண்டும் ஞாயிறு விரதம் இருப்பதை ஊருக்கு போன பின் ஆரம்பிக்க வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.

    விரதம் இருப்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்தது நமது நன்மைக்காகத்தான்.

    ஆனால் இன்றைய வாழ்வு முறையில் இது எல்லோருக்கும் சாத்தியமில்லையே...

    பழைய பதிவு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.//

      உண்மை.

      //விரதம் இருப்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்தது நமது நன்மைக்காகத்தான்.//

      எல்லா விரதங்களும் கடைபிடிக்க முடியாது ஏதாவது ஒன்றை கடைபிடிக்கலாம்.

      //ஆனால் இன்றைய வாழ்வு முறையில் இது எல்லோருக்கும் சாத்தியமில்லையே...//

      உண்மை. வேலை மாற்றங்கள், மற்றும் உடல் நிலை எல்லாம் கவனிக்க வேண்டும்.

      காலை உணவை தவிர்க்க கூடாது என்று வேறு இப்போது உள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள். உடல் நிலை சரியில்லை என்றால் உண்ணாநோன்பு அவசியம் என்று சொல்வார்கள்.

      லங்கனம் பரம ஒளஷதம்'//

      என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

      //பழைய பதிவு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோ.//

      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.


      நீக்கு
  6. இது மீள் பதிவு என்பது படிக்கும்போதே புரிந்தது. அதே நாளில்... ஆச்சர்யம்தான்.

    நான் விரதங்கள் இருந்ததில்லை. அன்று பார்த்து உணவின்மீதே கவனம் இருக்கும்.

    ஆனால் சாப்பிடக்கூடாத நாட்களில் (ச்ராத்தம் அன்று மாலை 4 மணி ஆகிவிடும் சாப்பிட) உணவில் கவனம் இருக்காது. பால், டீ, காபி எப்போதுமே சாப்பிடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      //இது மீள் பதிவு என்பது படிக்கும்போதே புரிந்தது. அதே நாளில்... ஆச்சர்யம்தான்.//

      எனக்கும் அதேநாளில் பதிவு செய்ததை படித்த போது ஆச்சர்யம்மாக இருந்தது.

      //ஆனால் சாப்பிடக்கூடாத நாட்களில் (ச்ராத்தம் அன்று மாலை 4 மணி ஆகிவிடும் சாப்பிட) உணவில் கவனம் இருக்காது. பால், டீ, காபி எப்போதுமே சாப்பிடுவதில்லை.//

      விரதமும் அப்படித்தான் மனதில் இன்று விரதம் என்று நினைத்து விட்டால் உணவின் மீதே கவனம் இருக்காது. இறைவனுக்கு என்று இருக்கும் போது வைராக்கியமாக வேறு இருப்போம் உணவின் மீது நாட்டம் வராது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை
    நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னை சீரணிக்கும்”

    -- வேதாத்திரி மகரிஷி..

    மகரிஷி அவர்களது வாக்கு அமிர்தம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்


      //மகரிஷி அவர்களது வாக்கு அமிர்தம்...//
      மகரிஷி அவர்கள் எளிமையாக இப்படி நிறைய சொல்லி இருக்கிறார்
      பயன் உள்ளதாக.

      நீக்கு

  8. உபவாசம் என்பதே உண்மையிடம் சத்தியத்திடம் நெருங்கி வாழ்வது..


    உபவாசங்களே உள்ளங்களின் உயர்வுக்கு அடிப்படை..

    சிறப்பான பதிவு..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உபவாசம் என்பதே உண்மையிடம் சத்தியத்திடம் நெருங்கி வாழ்வது..


      உபவாசங்களே உள்ளங்களின் உயர்வுக்கு அடிப்படை..//

      உண்மை. விரதம் இருக்கும் போது மன உறுதி , வைராக்கியம் , சத்தியம் செய்து ஏற்று கொள்வது போல அதை மீறும் போது மனம் சங்கடப்படும்.

      நீக்கு

  9. மௌன விரதம் மிகப் பெரிய விஷயம்..

    மௌன விரதம் இருப்பதற்கு ஆவலுண்டு..

    நேரம் கூடிவர வில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மௌன விரதம் மிகப் பெரிய விஷயம்..

      மௌன விரதம் இருப்பதற்கு ஆவலுண்டு..

      நேரம் கூடிவர வில்லை...//

      இப்போது பெரும்பாலும் நான் மெளனமாக தான் இருக்கிறேன்.முன்பு சனிக்கிழமை காலை 4.30 ஆரம்பித்தால் , ஞாயிறு 4.30க்குதான் விடுவேன் விரதத்தை.

      நேரம் கூடி வந்து உங்களுக்கும் ஆசி இருந்தால் மாதம் ஒரு நாள் கூட இருக்கலாம்.

      நீக்கு

  10. மௌன விரதம் மிகப் பெரிய சக்தி..

    மௌன விரதத்திற்கு நேரம் கூடி வர வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மௌன விரதம் மிகப் பெரிய சக்தி..

      மௌன விரதத்திற்கு நேரம் கூடி வர வேண்டும்..//

      ஆமாம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  11. பயனுள்ள தகவல்கள் அம்மா...

    இப்போது எழுதாத பல பதிவர்களையும் அறிய முடிந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //பயனுள்ள தகவல்கள் அம்மா...//
      நன்றி.


      //இப்போது எழுதாத பல பதிவர்களையும் அறிய முடிந்தது...//
      அதுதான் பின்னூட்டங்களுடன் பகிர்ந்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  12. அருமையான பதிவு கோமதிக்கா. மீள் பதிவு என்பது தெரிந்தது. அதனால் என்னா படிக்காதவங்க நாங்க படிச்சுக்கலாம்.

    வேதாத்ரி மகரிஷி அவர்களின் வரிகள் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அருமையான பதிவு கோமதிக்கா.//
      நன்றி கீதா.

      //மீள் பதிவு என்பது தெரிந்தது. அதனால் என்னா படிக்காதவங்க நாங்க படிச்சுக்கலாம்.//

      ஆமாம், அதுதான் பகிர்ந்தேன்.

      //வேதாத்ரி மகரிஷி அவர்களின் வரிகள் அருமை.//
      இப்படி நிறைய இருக்கிறது சின்னசின்னதாக மேற்கோள் காட்ட
      முன்பு பாரதியார், மகரிஷி கருத்துகளை மேற்கோள் காட்டி பதிவு போடுவேன்.

      நீக்கு
  13. சின்ன வயசுல இருந்து இதெல்லாம் பழக்கமானால்தான் இப்போதும் தொடர முடியும். எனக்கு விரதமிருந்து பழக்கமே இல்லை கோமதிக்கா. எனவே இப்போதும் இல்லை.

    ஆனால் மருத்துவர்கள் சில சமயம் உதாரணமாக கொரோனா வந்தப்ப இது வேண்டாம் அது வேண்டாம், இது சாப்பிடுங்க அதுன்னு சொன்னப்ப மிளகு ஜீரகம் கஞ்சி, என்று வித வித கஞ்சிகளில் இருந்ததோடு சரி...இப்போதும் இது உண்டு.

    அதுவும் சர்க்கரை குறைபாடு என்றதிலிருந்து இல்லை. ஆனால் பசித்தால்தான் சாப்பிடுவேன் அதுவும் அளவோடுன்னு மட்டும் ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சின்ன வயசுல இருந்து இதெல்லாம் பழக்கமானால்தான் இப்போதும் தொடர முடியும்.//

      ஆமாம், கீதா.

      //எனக்கு விரதமிருந்து பழக்கமே இல்லை கோமதிக்கா. எனவே இப்போதும் இல்லை.//
      இப்போது நீங்கள் விரதம் இருக்கவும் கூடாது.
      உணவை 6வேளையாக பிரித்து சாப்பிட சொல்கிறார்கள்.

      //மருத்துவர்கள் சில சமயம் உதாரணமாக கொரோனா வந்தப்ப இது வேண்டாம் அது வேண்டாம், இது சாப்பிடுங்க அதுன்னு சொன்னப்ப மிளகு ஜீரகம் கஞ்சி, என்று வித வித கஞ்சிகளில் இருந்ததோடு சரி...இப்போதும் இது உண்டு.//

      ஆமாம், சர்க்கரை குறைபாடுக்கு கஞ்சியும் குடிக்க கூடாது என்கிறார்கள்
      அளவோடு நம் உடம்புக்கு எது ஒத்துக் கொள்கிற்தோ அதை சாப்பிடுவது நலம்.

      நீக்கு
  14. மற்றபடி, காய்கள், பழங்கள் உணவுன்னு சமைக்காத உணவு நாள் இப்படி போவதுண்டு....கோமதிக்கா.

    நீங்க இப்பவும் கடைப்பிடித்து வருவது மிக நல்ல விஷயம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மற்றபடி, காய்கள், பழங்கள் உணவுன்னு சமைக்காத உணவு நாள் இப்படி போவதுண்டு....கோமதிக்கா.//

      நல்லது கீதா.

      //நீங்க இப்பவும் கடைப்பிடித்து வருவது மிக நல்ல விஷயம்..//

      இல்லை இப்போது கடைபிடிக்கவில்லை கீதா.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  15. அருமையாக எடுத்துச் சொல்லி உள்ளீர்கள். மீண்டும் வாசித்து மனதில் நிறுத்திக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //அருமையாக எடுத்துச் சொல்லி உள்ளீர்கள். மீண்டும் வாசித்து மனதில் நிறுத்திக் கொண்டேன்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  16. மீள்பதிவு பயனுள்ளது. அளவுடன்உண்டு நலமே வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //மீள்பதிவு பயனுள்ளது. அளவுடன்உண்டு நலமே வாழ்வோம்.//
      ஆமாம், அளவுடன் உண்டு நலமாக வாழ்வோம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு