வெள்ளி, 20 ஏப்ரல், 2012

இலங்கைத் திருக்கோயில்கள்

இலங்கைத் திருக்கோயில்கள்

கதிர்காமம், முன்னேஸ்வரம், கேதீச்சரம், பொன்னம்பலவாணர்
திருக்கோயில் என நான்கு பதிவுகளில் எனது இலங்கைப்
பயணம் குறித்து எழுதியுள்ளேன். அதன் நிறைவுப் பகுதியாக
இக்கட்டுரை அமைகிறது.


1. திருக்கோணமலை. 12.03.2011
Thirukoneswaram

நாங்கள் திருக்கேதீச்சரத்திலிருந்து புறப்பட்டு தம்புலா என்ற
இடத்திற்குச்சென்று தங்கினோம். ”ஙிமங்கலா”(Gimengala
hotel)என்ற விடுதியில் தங்கினோம்.

’ஙி’ என்ற தமிழ் எழுத்து பயன்பாட்டில் உள்ளதை இங்கு தான்
பார்த்தோம்.

மறுநாள் திருக்கோணமலை சென்றோம்.

இத்திருக்கோயிலைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

திருக்கோணமலைக் கோயில் ஒரு சிறிய மலைமீது
உள்ளது.
வடக்கு,கிழக்கில் நீலக்கடல் சூழ்ந்துள்ளது.


கோயிலுக்கு முன்னே பெரிய பாறை ஒன்று உள்ளது
பாறையின் ஒருபுறம் திருஞானசம்பந்தரின் திருவுருவச்சிலை
சுதைச்சிற்பமாக வடிக்கப்பட்டு வருகிறது. அவரது கைகளில்
தாளம் உள்ளது. பாறையின் மேலே கல்விளக்குத்தூண்
அமைந்துள்ளது. பாறையின் ஒரு புறம் படிகள் கீழிறங்கி
இன்னொரு புறம் மேலேறி வரும்படியாகக் கட்டப்பட்டு
வருகிறது. அங்கு இராவணன், தன் வீணையைக் கீழே
வைத்துவிட்டு சிவபெருமானை வணங்குவது போல் சிலை
அமைந்துள்ளது.
திருக்கோயில் அமைப்பு:

கிழக்கு நோக்கிய ராசகோபுரம்.

உள்ளே நுழைந்ததும்
கொடிமரம், பலிபீடம் அமைந்துள்ளன.
வலது புறம் அலுவலகம் அமைந்துள்ளது.

மஹாமண்டபம் அஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கூடியது,
அதைத் தாண்டியதும் அர்த்தமண்டபம் உள்ளது. கருவறையில்
கோணேஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்

விமானம் 3 அடுக்காக அமைந்துள்ளது. அம்மன் திருவுருவம்
தெற்கு நோக்கி உள்ளது. அம்மனின் இடதுபுறம் நடராசர்
திருமேனி அமைந்துள்ளது. தெற்குப்பிரகாரத்தில்
திருமுறைகள், நால்வர், சேக்கிழார் ஆகியோருக்குச் சந்நிதிகள்
உள்ளன. மணிமண்டபம், தெற்குவாசல் ஆகியனவும் உள்ளன.அம்மன் சந்நிதியில் தனியாகக் கொடி மரம், பலிபீடம்
உள்ளன. மேற்கு பிரகாரத்தில் பிள்ளையார், லிங்கம், முருகன்
திருவுருவங்கள் உள்ளன. இங்குள்ள முருகனை
அருணகிரியார் பாடியுள்ளார் .

“நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தொரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்-வருவோனே
நிகழ்த்தும் ஏழ்பவ கடற்சூறை யாகவெ
எடுத்த வேல்கொடு பொடித்தூள தாயெறி
நினைத்த காரியம் அநுக்கூல மேபுரி-பெருமாளே.”

என்று அவர் பாடியுள்ளார்.

வடக்குப் பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.
வடமேற்கில் உற்சவர், பைரவர் சந்நிதி, யாகசாலை உள்ளன.
கிழக்குப்பிரகாரத்தில் வாயிலில் வடபுறம்-நாகலிங்கம்,
சூரியன் சந்நிதிகள் உள்ளன. கிழக்குப் பிரகாரத்தில் வாயிலில்
தென்புறம்-சந்திரன் சந்நிதி உள்ளது.

பூசை நேரம்: காலை 6.30, 11.30, 4.30
நடை சாத்தல்: 11.00, 1.00, 7.00

கோவிலுக்கு வடக்கில் தேர் நிலையுள்ளது.

குடமுழுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.கோயிலுக்கு
வெளியே பாறைப்பகுதிகளில் பெரிய பிளவு அமைந்துள்ளது.
இதனை இராவணன் வெட்டு என்கிறார்கள். இராவணன்
வாளால் வெட்டியதால் இது ஏற்பட்டது என்கிறார்கள்.


கோவில் தரிசனம் முடிந்தவுடன் மதியம் உணவு நேரம் வந்து
விட்டது. திருக்கோணமலை ஊருக்குள்ளே உணவகங்கள்
உள்ளன. சைவ உணவகத்தைத் தேடித் தேடிக் கண்டு
பிடித்தோம். மண் சட்டியில் தயிர் வாங்கி கொண்டு வந்து
இருந்தோம். அந்த உணவகத்தில் காய் குழம்பு எல்லாம் ஒரு
தட்டில் போட்டு கொடுத்துவிடுகிறார்கள். தயிர் கிடையாது.
நாங்கள் வாங்கிப் போன தயிரை வைத்து மனதுக்கு
திருப்தியாக உண்டோம். உணவகத்தில் கொடுத்த மோர்
மிளகாய் நன்றாக இருந்தது.

சைவ உணவகம் இருப்பிடம்:
அன்னபூரணி சைவ உணவகம்,
415 dockyard road,trincomalee
Ph.026 5678888, 02656799999

திருக்கோணமலையிலிருந்து கண்டியை நோக்கிப்
புறப்பட்டோம். கண்டி செல்லும் பாதையில் 5.கி.மீ சென்று
மேற்கில் கிளைச்சாலையில் 4 கி.மீ சென்றால் கன்னியா
நீரூற்று அமைந்துள்ளது.

இவ்விடத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் பல உள்ளன.நீர்ப்பரப்பில்
நீர்க்குமிழிகள் உள்ளிருந்து வந்தவண்ணம் இருந்தது.தரை
பாசிபிடித்துவழுக்குகிறது. எச்சரிக்கையாகச் செல்லவேண்டும்.நீர் சூடாகவே உள்ளது.நீராடலாம். மலைப்பகுதிகளில் நடந்து
வந்த எங்களின் கால்களுக்கு அந்த வெந்நீர் இதமாக இருந்தது.


தம்பூலா என்ற இடத்தில் புத்தர் கோயில் உள்ளது.

இக் கோயிலை வெளியிலிருந்து தரிசனம் செய்தோம்.


கண்டியில் குயின்ஸ் விடுதியில் (Queens Hotel)தங்கினோம்.

>
கொண்டிருந்தது.பெருந்திரளான மக்கள் பார்வையாளராக இருந்தனர்.
பெரும்பாலான மக்கள் குடையைப் பிடித்துக்கொண்டிருந்தனர்.
மழை பெய்யாத அந்த இரவு நேரத்தில் ஏன் குடை பிடித்திருக்
கிறார்கள் என்று பார்த்தபோது அவர்கள் நின்றுகொண்டிருந்த
மரங்களின் எல்லாக்கிளைகளிலும் கொக்குப்போன்ற வெள்ளை
நிறப்பறவைகள் நிறைந்திருந்தன.அவற்றின்எச்சம் மழை
போலப் பொழிந்து கொண்டிருந்தது. அருகில் ஒரு கோயில்
திருக்குளம் போல நீர்நிலை உள்ளது. அதன் நீளமான பக்கச்
சுவர்களில் நிறைய விளக்கு மாடங்கள் இருந்தன.விசேஷ
காலங்களில் அதில் விளக்குகள் வைப்பர்களாம்.கண்டி நகரில் புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ள கோயிலுக்குச்
சென்றோம். முக்கிய இடமான சந்நிதி எப்போதும் திரையிடப்
பட்டே இருக்கிறது. புத்தரின் வரலாறு,புத்தரின் பல்
அவ்விடத்திற்கு வந்த வரலாறு முதலியவற்றை விளக்கும்
பெரிய ஓவியங்கள் உள்ளன.புத்தரின் திருவுருவம் உள்ள
மண்டபம் உள்ளது.கோயில் அழகிய அகழியால்
சூழப்பட்டுள்ளது.

***

2.கண்டி சிவன் கோயில் 13.03.11
கண்டிகண்டியில் ஸ்ரீ செல்வவிநாயகர் திருக்கோயில் முக்கியமாகக்
கருதப்படுகிறது. ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ சந்திரசேகர
மூர்த்தி பெருமான் கோயில் என்றும் இதைக்கூறுவர்

திருக்கோயில் அமைப்பு:

கோயிலினுள் நுழைந்ததும் பலி பீடம் கொடிமரம் முதலியவை
காணப்படுகின்றன. அடுத்ததாக நந்தியின் திருவுருவம் உள்ளது.
கல்லில் அமைந்த இந்த நந்தி திருவுருவத்தின் வாயில் ஒரு
பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கிறது.
சோமசுந்தரர் சந்நிதி கிழக்கு நோக்கியும், மீனாட்சியம்மன்
சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. சோமசுந்தரர்
சந்நிதிக்குத் தெற்கில், செல்வ விநாயகர் சந்நிதியும் இடப்புறம்
தண்டபாணி சந்நிதியும் உள்ளன. மீனாட்சியம்மன் சந்நிதியின்
அருகில் தெற்கு நோக்கி பஞ்சமுக விநாயகர் சந்நிதி, பள்ளி
யறை, நவக்கிரக சந்நிதி ஆகியவை உள்ளன.

வடமேற்கு திசையில் பஞ்சமூர்த்திகள் உள்ளனர். சூரியன்,
சந்திரன் ஆகியோரின் சந்நிதிகள் வாயிலின் இருபுறமும்
உட்புறம் அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில்
கிழக்கிலிருந்து மேற்காக துர்க்கை,நால்வர்,பெருமாள்
சந்நிதிகள் உள்ளன. தெற்கு திசையில் திருவாயில் ஒன்று
உள்ளது. அந்த வாயிலின் அருகில் மணிமண்டபம் உள்ளது.
கன்னி மூலையில் பிள்ளையார் சந்நிதி உள்ளது. மேற்கு
பிரகாரத்தில் சோமாஸ்கந்தர், காசிவிஸ்வநாதர்,விசாலாட்சி,
பஞ்சலிங்கம் ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. சிறிய
அழகிய மரத்தேர் ஒன்றும் இங்கே உள்ளது.ஆறுமுகர், ஐந்து
முகங்களைக் கொண்ட பஞ்சலிங்கம், நவக்கிரகம், பைரவர்
ஆகியோருக்கு வடக்குப் பிரகாரத்தில் சந்நிதிகள் உள்ளன.

மாசி மாதம் பெருந்திருவிழா நடைபெறுகிறது. பஞ்சரதபவனி,
பால்குடவிழாக்கள் நடைபெறுகின்றன.

செட்டியார்களால் திருப்பணி செய்யப்பட்டு சிறப்பாக நிர்வாகம்
நடைபெறுகிறது. அரு.லே.சேவு.நா. டிரஸ்ட்டின்
நிர்வாக
அறங்காவலர் கோயிலை நிர்வகித்து வருகிறார்.

***
3.பக்த அனுமான் திருக்கோயில்

நுவரேலியாவிலிருந்து கண்டி செல்லும் வழியில் இராம்போத
ஸ்ரீ பக்த ஹனுமன் ஆலயம் இருக்கிறது.

மேகம் சூழ்ந்த நுவரேலியா

மேகம் சூழ்ந்த இடம் தேயிலைச் செடிகள். இங்குள்ள தேயிலை
நன்றாக இருக்குமாம்.

பக்த அனுமான் திருக்கோயில்

திருக்கோயிலை
அடைய, சாலையில் இருந்து சற்றுதூரம்
மலை மேலே சில படிகள் ஏறிச் செல்லவேண்டும்.
திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்து உள்ளது.

இங்கு ஹனுமானின் பேருருவம் வழிபடப்படுகிறது. சீதா,
ராமர், லக்ஷ்மணர் ஆகியோருக்கு விக்ரகங்கள் உள்ளன.
தியானேஸ்வர லிங்கம் ஒரு சந்நிதியில் அமைந்துள்ளது.
சிறப்புப்பூசைகள், அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன

சின்மயா மிஷன் இத்திருக்கோயிலை நிர்மாணித்து
நிர்வகித்து வருகிறது. இங்கு பள்ளி ஒன்றையும்
இந்நிறுவனம் நடத்திவருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில்
சுற்றுவட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பிள்ளைகள் வந்து
பயின்று வருகின்றனர். கோலம்போடுதல் போன்ற தமிழ்க்
கலாசாரங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தையல், கர்நாடக
சங்கீதம், ஆங்கிலம், பகவத் கீதை வகுப்புகள் சனி, ஞாயிறு
நாட்களில் நடைபெறுகின்றன. பவுர்ணமி நாட்களில்
அடியார்கள் பலவிடங்களில் இருந்தும் இங்கு வருகின்றனர்.
நாங்கள் போனபோது குழந்தைகளுக்கு கோலம் சொல்லிக்
கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். குழந்தைகள் அழகாய்
கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்கள் கோலம் நன்றாக
இருக்கிறது என்று பாராட்டியவுடன் வெட்கம் கலந்த சிரிப்பால்
அதை ஏற்றுக் கொண்டனர். கோயிலின் கீழ்த்தளத்தில்
தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

இக்கோயிலுக்கு சுவாமி தேஜோமயானந்தர் முன்னிலையில்
08.04.2001ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. வருசாபிசேக
விழாக்கள் நடந்து வருகின்றன

சாலைப் பிரிவின் அருகில் அருள்மிகு வரதராஜ
விநாயகர் கோயில் என்னும் சிறு கோயில் உள்ளது.

***

4. சீதா எலியா (அசோகவனம்)
13.03.11

நுவரேலியாவிலிருந்து கண்டி செல்லும் வழியில் 5 கி.மீ
தொலைவில் ’சீதாஎலியா’ என்னும் இடம் இருக்கிறது.
சீதாதேவி இராவணனால் எடுத்துச்செல்லப்பட்டு
இலங்கையில் சிறைவைக்கப்பட்டாள் என்று இராமாயணம்
கூறுகிறது.

அசோகவனம் என்று சொல்லப்படும் இடம் இதுதான் என்று
கூறுகின்றனர். இலங்கைச் சுற்றுலாக்கழகம் இதன் வளர்ச்சிக்கு
முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இக்கோயிலில் சீதை, இராமன், இலக்‌ஷ்மணன்
ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு
முன் சீதை முதலியோரின் பஞ்சலோகச் சிலைகள்
கண்டெடுக்கப்பட்டு அவை இங்கு வைக்கப்பட்டுள்ளன.
அவை கருத்த நிறத்தைக் கொண்டிருக்கின்றன.இங்கு
குரங்குகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அசோக மரங்கள்
அதிகமாக இருக்கின்றன .

ஒரு அசோகமரம் தனியாக உள்ளது. சீதாதேவி
அமர்ந்திருந்த இடம் அதுதான் என்று கூறுகிறார்கள்.

அருகில்
ஒரு நீரோடை இருக்கிறது. அனுமானின் பாதங்கள்
ஒரு பாறையில் காணப்படுகின்றன. அனுமன் மரத்திலிருந்து
குதித்த கால் தடங்கள் என்றார்கள்.

அருகில் உள்ள பாறை ஒன்றில்
சீதை தியானம் செய்ததாகக்
கூறப்படுகிறது.

கல்கத்தா மனோஜ் மோடி ஃபவுண்டேஷன், இத்திருக்கோயில்
அமைய உதவியிருக்கிறது. மாமல்லபுரம் ரவிஷங்கர் ஸ்தபதி
உருவாக்கிய சிற்பங்கள் இங்கு அமைந்துள்ளன.
தூண்களில் உள்ள சிற்பங்களில் ராமாயணக்காட்சிகள் உள்ளன.


நடை திறக்க நேரம் ஆகும் போல் இருந்தது அதனால்
கிளம்பலாம் என்று கிளம்பினால் எங்களை காரில் ஏறவிடாமல்
குரங்குகள் தடுத்தன. பயந்து போய் சந்நிதிக்குள் திரும்பிவந்த
போது பார்த்தால் அர்ச்சகர் கோவிலைத் திறந்து
கொண்டிருந்தார். மெய் சிலிர்த்து விட்டது. இவ்வளவு
தூரம் வந்து சீதாதேவியைப் பார்க்காமல் போவதா என்ற
எண்ணத்தைப் பூர்த்தி செய்யத்தான், சீதைக்கு உதவி செய்த
அனுமன் எனக்கும் உதவி செய்து இருக்கிறார்.


5.மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில்
Matale muthu mariyamman thirukkoyil

மாத்தளையில் அமைந்துள்ள இத்திருக்கோயில் சிறப்பு
வாய்ந்தது. கோவிலின் அருகில் மாவலிகங்கை ஓடுகிறது.

108 அடி உயரமான கோபுரம் உள்ளது. மாசிமகத்தில் திருவிழா
நடைபெறுகிறது. அப்போது ஐந்து தேர்களில் பவனி
நடைபெறுமாம்.

6.கொழும்பு ,சம்மங்கோடு பம்பலப்பிட்டிய, மாணிக்கவிநாயகர்
திருக்கோயில்.
Sammangodu bampalappittiya sri maanikkavinaayakar
thirukkoyil,Lawrence road ,Colomboதண்டாயுதபாணி, பஞ்சமுக விநாயகர், ஆறுமுகர், துர்க்கை,
இடும்பன் சந்நிதிகள் இங்கு உள்ளன.சிறிய மரத்தேர் உள்ளது.

இங்கு எங்கள் வழிபாட்டை முடித்ததும் இலங்கையில்
கோயில்வழிபாடுகள் நிறைவடைந்தன.


***

பம்பலப்பிட்டியில் சிறந்த சைவ உணவுக்குரிய இடம்:
அமிர்தா ஹோட்டல்.

கொழும்புவில் வாணி விலாஸ் என்னும் உணவு விடுதியும்
நன்றாக இருக்கும் என்றார்கள்.


இலங்கையில் ஹிக்குடுவா கடற்கரை,பெண்டொட்டா
கடற்கரை ஆகிய இடங்களுக்குச் சென்றோம்.ஹிக்குடுவா கடற்கரைபெண்டொட்டா கடற்கரையிலிருந்து கார்,ரயில்,படகு இவற்றின்
தோற்றம்.
பெண்டொட்டாஇலங்கையில் பார்த்த சில இடங்கள்:
அநுராதபுரம்,புத்தஸ்தூபி

இது எங்கள் பயணத்தில் இல்லாவிட்டாலும், பயணித்த வழியில்
இருந்ததால் இதையும் பார்த்தோம்.
இலங்கை மன்னார் அருகில் ஓரிடத்தில் பெருக்கமரம்
என்று குறிக்கப்படும் மரம் பார்த்தோம்.உலகில் உள்ள
பெரியமரங்களில் இதுவும் ஒன்றாம். சுற்றளவு
பெரிதாக உள்ளது.மறுநாள் 15.03.2011காலை விமானம் மூலம் புறப்பட்டோம்.

இலங்கைப் பயணம் இறையருளால் இனிதே நிறைவேறி
இந்தியா திரும்பினோம். இலங்கை பயணக்கட்டுரை
இத்துடன் முற்றுப் பெற்றது.

************

புதன், 18 ஏப்ரல், 2012

உறவோடு உறவாடி-பாகம்-2உறவோடு உறவாடி (இரண்டாம் பாகம்.)

ஒரு கூட்டில் வாழ்ந்தவர்கள் என்றாலும் எல்லோரும் கூடிக் கொள்வது விழாக்களில் தான் என்று ஆகிவிட்டது. அவரவர் குடும்பம், குழந்தைகள் படிப்பு என்று முன்பு மாதிரி 10 நாட்கள் யார் வீட்டிலும் சேர்ந்தாற் போல் தங்க முடிவது இல்லை. விழாக்களில் கலந்து கொண்டு ஓடவேண்டியதாக உள்ளது.

திருமணம் நான்கு நாட்கள் நடக்கும். சேர்ந்தாற் போல் உறவுகளுடன் நான்கு நாட்கள் இருந்து கதைகள் பேசி மகிழ்ச்சியாக இருப்போம். மற்ற விழாக்களில் உடனே கலைந்து விடுகிறார்கள். சிலர் ஒருநாளிலேயே திருமணத்தை முடித்து விடுகிறார்கள். எல்லாச் சடங்குகளும் அந்த ஒரு நாளிலே முடித்து விடுகிறார்கள். கேட்டால் விடுமுறை இல்லை, குழந்தைகள் படிப்பு என்று காரணம் சொல்கிறார்கள்.

இந்த முறை பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த என் சின்னத் தங்கை இரண்டு நாள் அதிகமாய் எங்களுடனே இருந்தாள். அவளை அழைத்துக் கொண்டு திருமலை நாயக்கர் மகால் பார்த்து வருஷங்கள் பல கடந்து விட்டன என்று போய்ப் பார்த்து வந்தோம்


திருமலைநாயக்கர் மகால் கி.பி 1636 ஆம் ஆண்டு திருமலைநாயக்கரால் கட்டப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. நேரே ஆட்டோவில் போய் விட்டோம். நுழைவுக் கட்டணம் 10 ரூபாய்.

முன்பு எல்லாம் பாதி இடத்தை அரசு அலுவலகங்கள் பிடித்து இருந்தன. இப்போது முழுக்க முழுக்க பொது மக்கள் பார்வைக்கு உள்ளது.

‘திருமலைநாயக்கர் சொர்க்க விலாசம் ‘ என்னும் இந்த மகாலில் நடுவில் ஒரு கல் பீடம் . அதில் யானைத் தந்தத்தால் ஆன மண்டபம் இருந்தது .இதில் இரத்தினத்தால் ஆன அரியணை இருந்தது.

இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் செலுத்துவராம். இது ஆஸ்தான மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
இதன் அழகையும், விஸ்தாரத்தையும், கலைவேலைப்பாட்டையும் , வேறு எங்கும் காணமுடியாது என்றும் ,தொட்டிக் கட்டு அமைப்பில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.


விதானம்மேல் விதானத்தில் உள்ள வேலைப்பாடுகள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
மரக்கதவு போல் உள்ள வேலைப்பாடு அருமை.

அருங்காட்சியகமாய்ச் செயல்படும் அரண்மணையின் உள் தோற்றம் அழகு. வளைவுகள் அற்புதமாக உள்ளன.

உட்புறத் தோற்றம்:
</div
ஓலைச்சுவடிகள், தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பற்றிய கல்வெட்டுக்கள், கல்வெட்டுக்கள் உள்ள கற்கள், பழங்காலப் பாத்திரங்கள் , முது மக்கள் தாழி போன்ற அமைப்பு உள்ள மண்பாண்டம் எல்லாம் கண்ணாடிப் பெட்டிக்குள் உள்ளன.

மகாலின் பின் பக்கம் , கலைவேலைப்பாடுள்ள உடைந்த கல்சாளரங்கள்,(ஜன்னல்), நந்தி, துர்க்கை, உடுக்கை அடிக்கும் கோடங்கி ஆகிய உருவங்கள் உள்ளன. கோடங்கியின் காது குண்டலம்(குழை) எல்லாம் அழகு.

மகால் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, பெயிண்ட் செய்து கொண்டு இருந்தார்கள். குடும்பத்துடன் வந்தவர்கள் கொஞ்ச பேர்தான். நண்பர்கள், தோழிகளுடன் வந்தவர்கள் தான் நிறைய. படிக்கும் மாணவ மாணவிகள் , கல்விச் சுற்றுலா வந்தவர்கள் என்று மகால் நல்ல கலகலப்பாய் இருந்த்தது. நான் சிறுமியாக இருக்கும் போது கல்வி சுற்றுலாவில் மகால் வந்த போது ஆசிரியர் தூணை ஒருத்தராய் கட்டிபிடிக்க முடியாது என்று செய்து காட்டினார்.காதலர்கள் ஜோடியாக வந்து அமர்ந்து உலகத்தை மறந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்- கையில் புத்தகம் வைத்து இருக்கும் மாணவர்கள். அன்று விடுமுறை இல்லை. தூண்களின் அழகை ரசிக்காமல் அதன் மேல் தங்கள் காதலை உறுதிப்படுத்த தங்கள் பெயர்களை இணைத்து ’இதயம் அம்பு’ வரைந்து வைத்திருக்கிறார்கள். சுவரில், தூணில் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் மதிப்பது இல்லை. ஒரு ஜோடியினர் எழுதிக் கொண்டு இருந்தார்கள். தங்கள் காதலை மகால் தூண் போல் உறுதியாக, காலத்தை வென்றும் இருக்கிற மாதிரி உறுதியாக வைத்துக் கொண்டால் அதுவே போதும்.

ஒலி, ஒளி காட்சிக்கு சேர்கள் எல்லாம் போட்டு இருந்தன. தினம் மாலை நடக்கும் போல. 6.30 என நினைக்கிறேன்.நானும் என் தங்கைகளும் அடுத்தமுறை குழந்தைகளை அழைத்து வந்து காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்தோம். விடுமுறைக்கு என் மகள் பேத்தி, பேரன் எல்லாம் வருவதாய் சொல்லி இருக்கிறார்கள்

நாங்கள் சிவகாசியில் இருக்கும் போது அடிக்கடி ஸ்ரீவில்லிப்புத்தூர் போய் வருவோம். அங்கும் ஒரு திருமலைநாயக்கர் மகால் இருக்கிறதாம். அப்போது பார்க்க முடியவில்லை. நீதி மன்றமாய் இயங்கிக் கொண்டு இருந்தது.
2011லிருந்து பொது மக்கள் பார்வைக்கு விடப்படுகிறது என்று கேள்விப்பட்டேன். அதை அடுத்தமுறை மதுரை போகும் போது பார்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டு வெளியே வந்தோம்

வெளியில் திருமலைநாயக்கர் கழுத்தில் மாலை அணிந்து வாளுடன் நின்றுக் கொண்டு இருந்தார். மகாலின் உள்ளே நுழையும்போது அவரைப் பார்த்து ’வணக்கம் வைக்காமல் போனது தப்புதான் இப்போது வணக்கம் சொல்லிக்கிறேன் ’என்று வணக்கம் வைத்து விட்டு வந்தேன்.மகாலுக்கு வெளியில் ஒருவர், அரிசிமாவில் செய்த பிடிகொழுக்கட்டையும், கேழ்வரகு மாவில் செய்த இனிப்பு பிடி கொழுக்கட்டையும், பச்சைப்பயறு சுண்டலும் விற்றார். நல்ல சுகாதாரமாய் மூடி விற்றார். வாங்கிச் சாப்பிட்டு அவரைப் பாராட்டினேன். அவருக்கு மகிழ்ச்சி. உடம்பைக் கெடுக்காத நல்ல சிற்றுண்டி இல்லையா!

மறுநாள் தங்கைகள், அண்ணன் குடும்பத்தார்களுடன் பிள்ளையார் பட்டி, குன்றக்குடி, பிரான்மலை எல்லாம் சென்று வந்தோம். அவை அடுத்த பதிவில்.
-----------