செவ்வாய், 29 மார்ச், 2011

என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்

பெயர்க் காரணம் சொல்லும் தொடர் பதிவுக்கு (சுயதம்பட்டம்) வல்லி அக்கா அழைத்து இருந்தார்கள். சரி என்று நானும் எழுதி விட்டேன். படியுங்கள் தொடர்ந்து.


இப்போது போல் நட்சத்திரப்படி ,எண் கணிதப்படி எல்லாம் அப்போது பெயர் வைப்பது இல்லை. முன்னோர்கள் பெயர், கடவுள் பெயர், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள்பெயர், என்று அப்போது வைப்பார்கள். இப்போது தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் பெயர், நடிகர், நடிகை பெயர்கள் எல்லாம் வைக்கிறார்கள். தமிழ்ப் பெயர் வேண்டுமா? சமஸ்கிருத பெயர் வேண்டுமா ? எல்லாவற்றிற்கும் இப்போது வசதி உள்ளது. எத்தனை எத்தனை பெயர்கள் அழகான, அறிவு பூர்வமான பெயர்கள் என்று தேடித் தேடி தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள்.

முன்னோர்கள் சிலர் இறைவன் பெயரையே குழந்தைகளுக்கு வைப்பார்கள், எப்போதும் இறைவனை நினைத்துக் கொள்ள. நடராஜன் என்று வைத்து விட்டு ,நட்டு என்றும், கிருஷ்ணசாமி என்று வைத்துவிட்டு, கிட்டு என்றும் பட்டாபிராமனை, பட்டா என்றும், சுப்பிரமணியனை, சுப்பா என்றும், நாராயணாவை ,நாணா ஜானகியை ஜான் என்றும், பத்மாவை பத்து என்றும், மீனாட்சியை மீனுகுட்டி என்றும் காமாட்சி காமு என்றும் பார்வதி பாரு என்றும் - லட்சுமியை லட்சா என்றும் எதற்கு பேர் வைக்கப்பட்டதோ
அந்த நோக்கம் அறியாமல் இப்படிக் கூப்பிடுவதால் பயனில்லாமல் போய் விடுகிறது என்று சொல்பவர்கள் உண்டு. சிலர் பெரியோர்கள் வைத்த பெயரை மாற்றுங்கள் அந்த பெயரினால் கஷ்டபடுகிறீர்கள் என்று பெயர் மாற்றம் செய்து தருகிறேன் அந்தப்புது பெயரை தினம் இத்தனை தடவை எழுதுங்கள் உங்கள் தலைஎழுத்தே மாறிவிடும் என்று சொல்லி பொருள் சம்பாதிக்கிறார்கள். பெயருக்கு அப்படி ஒரு மவுசு.