Wednesday, July 19, 2017

படம் சொல்லும் செய்திகள்

இன்று ஆடிக் கிருத்திகை என்று பழமுதிர்சோலைக்குப் 
போன போது கண்ட காட்சி.

மூடி இருக்கும் பாட்டிலில் உள்ள தண்ணீரைக்    குடிக்க முயலும் குரங்கு வெகு நேரம் போராடி  முடியாமல் கீழே போட்டு விட்டது. நான் போய் மூடியை திறந்து வைத்துவிட்டு  நகர்ந்தவுடன் வேகமாய் மரத்திலிருந்து இறங்கி மட மட என்று குடித்து விட்டது, பாவம் அதில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது அதனால் எங்களுக்கு  வைத்து இருந்த தண்ணீரைக் கொடுத்தவுடன்  வேக வேகமாய் ஓரே மூச்சாய் குடித்து விட்டது. தண்ணீர் தாகம்   தீர்க்க தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கலாம் மலையில். ஒரே ஒரு இடத்தில் மட்டும் பிளாஸ்டிக் தொட்டி சின்னதாய் இரும்பு சங்கிலியில் மரத்தோடு இணைத்து கட்டி வைத்து இருந்தார்கள். அதில் தண்ணீர் இல்லை.


இன்னொரு குரங்கு காரில் உட்கார்ந்து கொண்டு இருந்தது
காருக்குள்ளே என்ன இருக்கு என்று பார்வை

போன மாதம் போன போது எடுத்த படம்  தாயும், சேயும்

குரங்கின் குட்டியானது தன்னுடைய  முயற்சியால் தாயின் வயிற்றைப் பற்றிக் கொள்கிறது, அதுபோல பக்தன் தன்னுடைய முயற்சியால் இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைச் சொல்வது 'மர்க்கட நியாயம்'   என்பார்கள். 

பிரதோஷத்தன்று கோவிலுக்குப்
போனபோது அங்கு ஒரு வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தைச் சுற்றி ஆசனங்கள் அமைத்து இருந்தார்கள் அதில் ஒரு பெண் குழந்தை செப்பு சாமான் வைத்து சமைத்து விளையாடுகிராள்.


இன்னொரு பக்கம் திண்ணை அமைத்து இருந்தார்கள். மாலை நேரம் வேப்பமரக் காற்று வாங்கிக் கொண்டு  திண்ணையில் இளைப்பாறலாம்.
என் அம்மாவின் கல்சட்டி ,  கல்சட்டியை  மூடி  வைக்கும் மரத்தட்டு
இப்போது தம்பி வீட்டில் கோலப்பொடி போடும் பாத்திரமாய்

கடைசியாக ஆசைப்பட்டு வாங்கிய வெள்ளைக் கல்லில் செய்த மருதமலை ஆட்டுக்கல், அம்மி  கோவையில் இருக்கும் போது வாங்கியது இப்போது மூலையில்- கிரைண்டர் வந்து விட்டதால்.
திருவெண்காடு கோவிலில் துவாரபாலகருக்கு அருகில் மின் விசிறியைப்
பார்த்தவுடன்
 எடுக்கத் தூண்டியது. (முருகன் சன்னதி)

கள்ளன் ஒளிந்திருக்கும் வாழைப்பூ - கிச்சன் கார்னர்


காணாமல் போன கனவுகள் என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ராஜியின் செய்முறைப்படி செய்தேன்.  வாழைப்பூப் புட்டு. நான் துவரம்பருப்பும், கடலைப்பருப்பும் சேர்த்து  அரைத்தேன். தேங்காய்ப் பூ போட்டேன். இது தான் கொஞ்சம் மாறுதல்.

வேக வைக்கும் முன்
வெந்தபின்

புட்டு ரெடி.

பஞ்சு மிட்டாய்  பஞ்சு மிட்டாய்!
பால்கனியிலிருந்து  எடுத்த படம்

அன்பாய் தலைகோதி

'சாதம் வைத்து விட்டாயா , அம்மா'  என்று கேட்கும் காகம். (எங்கள் வீட்டு பால்கனி).

வாழ்க வளமுடன்.

Friday, July 14, 2017

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் - திடியன்

வழியில் இருக்கும் விநாயகரை வணங்காமல் வந்ததற்கு அவர் விளையாடிய விளையாட்டையும், நாங்கள் முதலில் வணங்க வந்த  அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதரைத் தரிசனம்  செய்தோமா என்பது எல்லாம் அடுத்த பதிவில். என்றேன்  முந்திய பதிவு திடியன் மலைக் கோவில்  நிறைவுப் பகுதியில்.

மலைக் கோவிலை விட்டு இறங்கிய பின் மலையடிவாரத்தில் உள்ள கோபாலசாமி கோவிலைப் பார்த்துவிட்டுச்   சரிவில் இறங்கி வந்தால் விநாயகர் மேடையோ, மரமோ இல்லாமல் தரையில் ஒரு வீட்டின் பக்கம் காட்சி தருகிறார்.

விநாயகரை பார்த்து போட்டோ எடுத்து விட்டு இவரை வணங்கி விட்டுத் தான் மேலே ஏற வேண்டும் போல,  நாம் இப்போது பார்க்கிறோம் என்று சொன்னேன். என் கணவர் சீக்கிரம் ஏறு கைலாசநாதர் கோவில் போக வேண்டும் என்றார்கள் . ஒரு நிமிடம் இருங்கள் என்று சொல்லி விட்டு   வேப்பமரத்தடியில் இருக்கும்  பசு மாடுகளைப் பார்த்து  ஒரு கும்பிடு போட்டு போட்டோ எடுத்துக் கொண்டேன், அப்புறம் கிராம வறுமை ஓழிப்பு சங்க அலுவலகத்தையும்   போட்டோ எடுத்துவிட்டு   கைலாசநாதர் கோவில் போனோம். 

போய்ப் பார்த்தால் நடை சார்த்தி இருந்தது.   ஆலமரத்தடியில் காவி வேஷ்டி காவித் துண்டு போட்டுக்கொண்டு ஒருவர் உட்கார்ந்து இருந்தார் அவரிடம் "கோவில் இனி எப்போது திறக்கும்?" என்று கேட்டோம். அதற்கு அவர்," இனி நாலு மணிக்குத் தான் திறப்பார்கள். நானும் சிவனடியார் தான் கிரிவலம் வந்தேன், விபூதி தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார். அவரிடம் விபூதியை   வாங்கிப்  பூசிக் கொண்டு "சரி போகலாம், இன்னொரு முறை வரலாம்" என்று கிளம்பினோம்.

அன்று ஞாயிறு ஆனதால் காலை உணவு இரண்டு பேருக்கும் கிடையாது விரதம், அதனால் , காப்பி, பால், பிளாஸ்கில் எடுத்து வந்ததைக்  குடித்து விட்டு கிளம்பலாம் என்று நினைத்தோம் , அதன் படி  குடித்து விட்டுக் கிளம்பும் போது நான்கு ஆலமரங்கள் இருப்பதைப் போட்டோ எடுக்கலாம்   என்ற எண்ணம் வந்து அலைபேசியை  எடுக்க கைப்பையைப் பார்த்தால் அதில் இல்லை காரிலிருந்து  கீழே இறங்கிப் பார்த்தாலும் இல்லை. 

 கடைசியாகப்  பிள்ளையாரையும்,  பசுமாடுகளையும் எடுத்தோமே ! அங்கு விழுந்து இருக்கலாம் அங்கு போய்ப் பார்ப்போம் என்று போய்ப் பார்த்தோம், அங்கு தேடுவதைப் பார்த்துவிட்டு இரண்டு மூன்று பெண்கள், ஆண்கள் எல்லாம் "என்ன தேடுகிறீர்கள்?" என்றார்கள். "செல்போன்" என்றேன். ஒருவர் ,"நீங்கள்   கோபாலசாமி கோவிலை போட்டோ எடுத்ததைப் பார்த்தேனே"  என்றார், ஒரு அம்மா பசுமாட்டை கும்பிட்டுவிட்டுப் போட்டோ எடுத்தார்கள் பார்த்தேன் என்றார்கள்,   ஒரு பெண் உங்கள் போனுக்கு அழைத்துப் பாருங்கள் என்றார்கள். என் கணவரின் செல்லில் இருந்து அழைத்தால் ,   "சுவிட்ச் ஆப்   செய்யப்பட்டுள்ளது "என்று வருகிறது. 

அங்கிருந்த  ஒரு அம்மா "காருக்குள் நன்கு தேடுங்கள்  நீங்கள் பக்தியாக இப்படி கும்பிட்டு வந்து இருக்கும்போது கிடைக்காமல் போகாது" என்று சொன்னார்கள். (அந்த அம்மா இஸ்லாமிய பெண்மணி) . மீண்டும் விநாயகரை வணங்கிவிட்டுக் காரில்  தேடினோம். காரில்  சீட்டுக்கு அடியில் கிடந்தது. 

எத்தனை முறை தேடினோம் கண்ணுக்கு தெரியவில்லை,  விநாயகருக்கு வேண்டுதல் தெரிவித்துத் தேடியவுடன் கிடைத்தது. மறைத்துக் காட்டி விளையாடிய விநாயகருக்கு நன்றி சொன்னேன்.  அங்கு எங்களுக்கு ஆறுதலாகப் பேசியவர்களுக்கு  நன்றிகள் சொல்லிக் கிளம்பும் போது ,  "எந்த ஊரிலிருந்து  வருகிறீர்கள்? " என்று கேட்டார்கள். "நாங்கள் மதுரையிலிருந்து வருகிறோம், கைலாசநாதர் கோவிலுக்கு வந்தோம்- பூட்டி இருந்தது அதற்குள் மலைக்கோவில் போய் வரலாம் என்று போனோம். வர நேரமாகி விட்டதால் நடை சாற்றி விட்டார்கள். பார்க்க முடியவில்லை" என்று சொன்னோம்.

எங்கிருந்து  வருகிறீர்கள் ? என்று கேட்ட பெண், "என் வீட்டுக்காரர் தான் குருக்கள்" என்று சொன்னார்கள் "போன் நம்பர் தருகிறேன், போன் செய்தால் வருவார்கள், பூட்டி உள்ளதே திறந்து காட்ட மாட்டார்கள் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் , எப்போது வந்தாலும் போன் செய்யுங்கள் " என்று போன் நம்பர் கொடுத்தார்.

போன் செய்தோம் குருக்களுக்கு.  அவர் வருவதாய்ச் சொன்னார். குருக்களின் மனைவி," கோவில் வாசலில் போய் இருங்கள் வருவார், இங்கு வந்தால் நான் அங்கு அனுப்பி வைக்கிறேன்" என்றார்.  

வெங்கட்ராமன் குருக்கள் போன் நம்பர் - 9791994805 .

விநாயகரைக் கும்பிடாமல் மலைக்கோவில் ஏறியதற்குச் செல்போனை மறைத்துக்  கொஞ்சம் மன சஞ்சலத்தைக் கொடுத்துப்  பின் அவரே அதை சரி செய்தார்.   (மனசஞ்சலத்திற்குக் காரணம் அந்த போன் மகன் வாங்கித்தந்தது. பேரன் படங்கள், எல்லோரது( நட்பு, சுற்றம்) போன் நம்பர்கள் அதில்தான்.மலைக்கோயிலில் எடுத்த படங்கள் எல்லாம் போச்சே என்று) 


கைலாசநாதரை பார்க்காமல் போகக் கூடாது என்று எங்களை மீண்டும் அவர் அருகே வரவழைத்து   குருக்கள் மனைவியைப் பார்க்க வைத்து  எப்படி விளையாடி இருக்கிறார்  !

கோவில் வாசலில் விபூதி கொடுத்த சிவனடியாரும் வந்துவிட்டார். "செல் போன் கிடைத்ததா? "என்று கேட்டுக் கொண்டு.  அவரிடம் விபூதி வாங்கி அணிந்து கொண்டதும் நல்லதே செய்தது.

குருக்கள் வந்தார்  கோவிலைத் திறந்து  கோவில் வரலாறு சொல்லி சிறப்பாகப் பூஜை செய்து வைத்தார். கோவிலுக்குப் பக்கத்தில் சமுதாயக்கூடத்தில் விழாவிற்கு வந்தவர்களும் எங்களுடன் வந்து வணங்கினார்கள்.அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை (உசிலம்பட்டி) – மதுரை மாவட்டம்.

சுவாமி  பெயர்:      கைலாசநாதர் , 
அம்மன் பெயர்:   பெரிய நாயகி,
தலவிருட்சம்:        நெய்கொட்டாமரம்.
தீர்த்தம்:                  பொற்றாமரைக்குளம்.

மதுரையிலிருந்து தேனி சாலையில் 31 கி.மீ தொலைவில் உள்ளது.

1000, 2000 வருடத்திற்கு முன்பே உள்ள பழைமையான கோவில் இது என்கிறார்கள் இந்தக் கோவில் 'தென்திருவண்ணாமலை' என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை போய் கிரிவலம் வர முடியாதவர்கள், இங்கு  கிரிவலம் வந்தால் திருவண்ணாமலையில் செய்த புண்ணியம் கிடைக்குமாம். 

அகஸ்தியர் பூஜை செய்த தலம்.

ராமர், அசுவமேத யாகம் செய்யும்போது குதிரை எங்கெல்லாம் ஓய்வு எடுக்கிறதோ அங்கெல்லாம்  காசிலிங்கம் வைத்து வழிபடுவாராம்.
இங்குள்ள பொற்றாமரைக் குளத்தின் அருகே ஓய்வு எடுத்ததால்  அங்கு காசிலிங்கம் வைத்து வழிபட்டாராம்.  வெகுகாலத்திற்குப் பின் இங்கு ஆண்ட மன்னர்  ஒருவர் இங்கு கோவில் கட்டினார் என்று சொன்னார்,குருக்கள்.

தட்சிணாமூர்த்தி இங்கு 14 சித்தர்களுடன் நந்தியின் மேல் அமர்ந்து காட்சி தருவது மிகவும் விஷேசம் என்றார்.  மற்றொரு சிறப்பு காசியிலிருந்து கொண்டு வரப்பட்டது. தட்சிணாமூர்த்தியை 16 முறை வலம் வந்து வணங்கி பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் கைகூடுமாம் .


தலவிருட்சம்

மலைக்கோவில் மேலிருந்து எடுத்த படம் கைலாச நாதர் கோவிலும், பொற்றாமரைக் குளமும்
நந்தி மண்டபத்தின் தூண்களில்  அடியார்களின் சிலைகள் வடிக்கப் பட்டுள்ளது.
கோவிலைக் கட்டிய மன்னர் பக்கத்தில் தன் தேவியுடன்
சுவாமி சன்னதி வாசல் மேல் இருந்த வாசகம்  

 இரண்டு புறமும் நாகங்களுடன் நடுவில் முக்குறுணி விநாயகர்  இவருக்குப் பின்னால் கடைசியில் ஈசான பிள்ளையார் இருக்கிறார்.
. பொட்டு வைத்துக் காட்டி உள்ளார்கள் 14 சித்தர்களை.
.
சுவாமி சன்னதி  விமானம்
 
தலவிருட்சத்தின் பக்கத்தில் முருகன் - வள்ளி தெய்வானையுடன்.


அஷ்டபுஜதுர்க்கை
அம்மன் சன்னதி விமானம்

சுவாமி விமானம், அம்மன் விமானம்
கோவிலிருந்து திடியன் மலை தெரிகிறது.
                                              
                                                                  நவக்கிரக சன்னதி

அதன் அருகில் பைரவர்

என்ன விழா என்று தெரியவில்லை   

கைலாசநாதரைப் பார்க்க வந்த போது கோவில் நடை சாத்தி இருந்தது, இங்கு இருந்த பெரியவர்தான் மேலே மலைக்கு போய் வாருங்கள், அதற்குள் குருக்கள் வந்து விடுவார் என்று சொன்னார். அவரிடம் விடைபெற்று வரப் போனபோது இன்னும் கொஞ்ச நேரத்தில் விழா முடிந்து விடும் சாப்பிட்டு   விட்டுப் போகலாம்  என்று உபசரித்தார்.  அன்பாய் சொன்னவரிடம் விடைபெற்று கிளம்பியபோது  ஐஸ் வண்டி வந்தது. விழா வீட்டுக் குழந்தைகள் வாங்கினார்கள். அதைப் பார்த்து  நாங்களும் குழந்தைகளாகி ஐஸ் வாங்கிச்  சுவைத்தோம். வெயிலுக்கு இதமாய் இருந்தது. ஐஸ் சாப்பிட்டுப் பல வருடங்களாகிவிட்டன.

நாங்கள் கைலாசநாதரை வணங்கிய மகிழ்ச்சியுடன்  அன்று பெளர்ணமி என்பதால் காரிலேயே கிரிவலம் வந்தோம்.  கிரிவலத்தில் நிறைய கோவில்கள் இருக்கிறது.  அங்கு பார்த்த அருள்மிகு நல்லூத்து கருப்பண்ணசாமி கோவில் அடுத்த பதிவில். மிக அழகிய கோவில்.

கைலாசநாதர் கோவிலுக்கு இன்னொரு முறை வரவேண்டும். விநாயகருக்கு வேண்டுதல் இருக்கே! நம்மை மீண்டும் அவரைப் பார்க்க வைத்ததும் அவர் விளையாட்டு தானே!
வாழ்க  வளமுடன்.

Wednesday, July 12, 2017

திடியன் மலை நிறைவுப் பகுதி

கூகுள் படம் - திடியன் மலை (நன்றி)

 திடியன் மலை  உயரம் 320 மீட்டர்-  கூகுள் - உதவி  (நன்றி)

//வா வா சாமி தெரிகிறது  என்று கணவர்  அழைத்ததைக்   கேட்டு   எல்லையற்ற மகிழ்ச்சி . ராமர் மலை என்றார்கள். உள்ளே இருந்தது   என்ன சாமி? ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இருக்கிறமாதிரி இருக்கிறதே ! என்று  கேட்டுக்  கொண்டே  கணவரின் பக்கம் போய் பூட்டிய கதவு வழியாகப் பார்த்தேன்.

உள்ளே யார் இருந்தார்?  என்பதை அடுத்த பதிவில்.//

போன பதிவில்  உள்ளே யார் இருந்தார் என்று  அடுத்த பதிவில்  சொல்கிறேன்  என்றேன், உள்ளே பெருமாள் நான்கு கரங்களுடன் இருந்தார். வெண்பட்டில் அழகாய்  இருந்தார். கண்குளிரப் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் அமர்ந்து  அவரை நினைத்து ஜபம் செய்து விட்டு மழைக்காக "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி" திருப்பாவை பாடினேன். மலையைச் சுற்றி ஒருகாலத்தில் செழுமையாக இருந்திருக்கிறது.. இப்போது புற்கள் காய்ந்து கிடக்கிறது.

பெருமாளுக்கு முன்புறம் இருந்த கருடாழ்வாருக்குக் கொண்டு போன பூவைச் சார்த்தி வழி பட்டோம்.  அவர் பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம், பெயர் தெரியவில்லை.தெரிந்துகொள்ள பட்டரும் அங்கு இல்லை. பேர் தெரியவில்லை என்றால் என்ன? 

வெண்கலமணிகள் நிறைய கட்டி இருக்கிறது.வேண்டுதல் நிறைவேறித்தானே இவற்றைப்
பெருமாளுக்குக் கொடுத்து இருக்கிறார்கள்,கேட்டதைக் கொடுப்பவர் தான். வரங்களைக் கொடுப்பவரை வரதராஜபெருமாள்  என்று அழைத்துக் கொண்டேன்.

உள்ளே பெருமாள் நான்கு கரத்துடன் 
 இருந்தார்.அழகான துவாரபாலகர்
தரை  நவீனப்படுத்தியிருக்கிறார்கள்
அலைபேசியில் இவ்வளவு தூரம் தான் ஜூம் செய்ய முடியும்.
கோவில் சுவர்களில் எல்லாம் வந்தவர்கள்  
தங்கள் பெயர்களை  எழுதி வைத்து இருக்கிறார்கள்.
 நானும் இவ்வளவு தூரம் ஏறிப்பார்த்து இருக்கிறேன் என்பதை நினைத்துக் கொள்ள ஒரு படம்.


கருவறை விமானம்
மழை மேகம்

கருடாழ்வாருக்கு நாங்கள்  வாங்கிப் போன பூக்களைச் 
சார்த்தி  வழிபட்டோம்.
நட்சத்திரக் கல்வெட்டு வலது பக்கச் சுவரில்இருக்கிறது நடுவில் ஓம் என்று இருக்கிறது

கோவிலைச் சுற்றி வந்து இயற்கைக் காட்சிகளை ரசித்தோம்.
(கணவர் வரைந்த படம்)

 போலீஸ் தகவல் தொடர்பு (சிக்னல்) டவர் இருக்கிறது . 

நாங்கள் கீழே இறங்கி வரலாம் என்று நினைக்கும்போது ஒருவர்  வந்தார், வேர்க்க விறுவிறுக்க, சட்டையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டு, தண்ணீர் பாட்டில், உணவு எல்லாம் கொண்டு வந்தார் கையில். அவரிடம் பேசினோம். அவர் தன்னைத் தொலைத்தொடர்புக் காவலர் என்றார்.

 இன்னும்  இரண்டு பேர் இருக்கிறார்கள்,  வருவார்கள்  என்றார். ஒரு நாள் ஏறி வருவதே எங்களுக்குக் கஷ்டமாய் இருக்கிறதே! உங்களுக்குக்  கஷ்டமாய்  இருக்குமே என்றதும் என்ன செய்வது வேலை இங்கு தானே என்றார்.  

அவரிடம் கூட்டம் வருமா? என்று கேட்டோம் பெளர்ணமிக்கு நல்ல கூட்டம் வரும் என்றார். கார்த்திகை தீபத்திற்கு தீபம் ஏற்ற வருவார்கள் என்றார். பெளர்ணமிக்குக் கிரிவலம் வருவார்கள் என்றும் கூறினார்.

அவரிடம் விடைபெற்று கீழே இறங்க ஆரம்பித்தோம். கீழே இறங்கும்போது கவனம் மிகத் தேவை. படி கீழே வழுக்கி விடும். சில இடங்களில் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து இறங்கினேன்.

  
 கீழே இறங்க ஆரம்பித்தோம்.
இன்னொரு காவலரும் வந்தார். வெயில் ஆரம்பித்து விட்டதால் சட்டையை 
தலைக்குப் போட்டுக்கொண்டு, மதிய உணவை வாங்கிக் கொண்டு ஏறுகிறார். என்னைப்பார்த்து கவனமாய் இறங்குங்கள் அம்மா என்றார். 


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் ஏறிக்கொண்டு இருந்தார்கள்  ஒரு பையன் மட்டும் மேலே வேகமாய் வந்து விட்டார்.

ஒருவர் மலையில் காய்ந்த  மஞ்சள் புற்களை அரிந்து மூட்டையாகக் கட்டி மலைப் பகுதியில் கொஞ்ச தூரம் படிகள் இல்லாத பக்கம் வருகிறார். பிறகு சிமெண்ட் படியில் இறங்கிப் போகிறார்,  அங்கு ஒரு பெண் வாங்கிக் கொண்டு இறங்குகிறார். மீண்டும் மலைப் பாதையில்  ஏறுகிறார், அங்கு ஒரு அம்மா புற்களை அரிந்து தருகிறார்.  மலைப் பக்கம் இருக்கும் ஆண், பெண் இருவரின்  உடல் வலிமையும், உழைப்பும்  வியக்க வைக்கிறது.    தினம் மலை ஏற வேண்டும் என்றால்   மன உறுதியும்  வேண்டும்.
எவ்வளவு தூரம் இன்னும் ஏற வேண்டும்!  அதற்குள் அமர்ந்து விட்டார்கள்.

கைக் குழந்தை, புதிதாக திருமணமான ஜோடி ஒன்று, ஒரு வயதான அம்மா, இரண்டு சிறு பெண்கள் என்று அந்த குழுவில் 
இருந்தார்கள் , மேலே என்ன சாமி இருக்கு? திறந்து இருக்கா? தண்ணீர் இருக்கா? என்ற கேள்விகளைக் கேட்டார்கள். தண்ணீர் இல்லை இன்னும் 700 படி ஏற வேண்டும், குழந்தையை வைத்து இருக்கிறீர்கள் தண்ணீர் இருக்கா? என்று கேட்டேன் கொஞ்சம் இருக்கிறது என்றார்கள். நீங்கள்  வெள்ளனவே ஏறிப் போனீர்களே பார்த்தோம் என்றார்கள், கைலாசநாதர் கோவிலிருந்து உங்களை பார்த்துவிட்டுத் தான் நாங்களும் வந்தோம் என்றார்கள். இதற்கு முன்பு வந்தது இல்லையாம்.
வரிசையாக ஏற ஆரம்பித்தார்கள், மேலே முன்பே போன பையன் போன் செய்து படி சரியில்லை கவனமாய் வாங்க  என்று எச்சரிக்கை செய்தார்.
மலையிலிருந்து கைலாச நாதர் கோவிலும், தாமரைக்குளமும்.சுற்றிவர ஆலமரங்களும்.
  தாமரைக் குளமாய்க் காட்சி அளித்து இப்போது ஒரு சொட்டு நீர் இல்லாத இடமாக ஆகிவிட்டதுஇன்னும் இரண்டு  பக்தர்கள் ஏறி வந்தார்கள் , அவர்களிடம் முதல் தடவையா? என்று. இல்லை இரண்டாவது தடவை என்றார்  அவர்களுக்கு நல்ல மன உறுதி என்று நினைத்துக் கொண்டேன், அவர்களும் திறந்து இருக்கா? கோவில்  என்று  கேட்டார்கள் 
கீழே இறக்கி விட்டு விட்டார் மலையப்பன் ஏற்றி விட்டது போலவே பத்திரமாய்.

அதன் பிறகு அருள்மிகு கோபாலசுவாமி திருக்கோவில் போனோம் அந்த கோவில்தான் முதல் பதிவில் வந்தது. முதலில் இவரைப் பார்த்து விட்டுத்தான்
மேலே ஏறுவார்கள் என்று நினைக்கிறேன் அதுதான் முதல் பதிவில் அவரைப்பற்றி  பதிவிட்டேன்.

                       திடியன் மலைக் கோவில் நிறைவு பெற்றது.

வழியில் இருக்கும் விநாயகரை வணங்காமல் வந்ததற்கு அவர் விளையாடிய விளையாட்டையும், நாங்கள் முதலில் வணங்க வந்த  அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதரைத் தரிசனம்  செய்தோமா என்பது எல்லாம் அடுத்த பதிவில்.


                                                                வாழ்க வளமுடன்.