திங்கள், 8 பிப்ரவரி, 2010

அம்மாவின் பொக்கிஷங்கள்


என் அம்மா பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்து இருந்த நிறைய பாடல்கள்,கடவுள் பாடல்,தேசபக்தி பாடல்கள் எல்லாம் அவர்கள் கைப்பட எழுதிய நோட்டு மூலம் கிடைத்தது.
கிழிந்து போய் இருக்கிறது. தீபா கோவிந்த் ஒரு முறை என்னிடம் //அம்மா நீங்கள் ஸ்கூல்லே படிச்ச காலத்திலே நோட்டுப் புத்தகத்திலே கிறுக்கினதை,இனிமேல் வலைப் பதிவுகள் மூலமாக பதியுங்கள் இது கிழியாது,செதிலரிக்காது எப்பவுமே பர்மனெணட்//
என்றார்கள். நான் என் அம்மா எழுதி வைத்து இருந்ததை பதிவு செய்கிறேன். யார் எழுதிய பாடல்கள் என்று தெரியவில்லை நன்றாக இருந்தது,அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


தாயே
-------
என்னைப் பெற்ற என் தாயே
இனிய பண்டம் தருவாயே
சொன்ன தெல்லாம் கேட்பேனே
சோம்பலின்றிக் கற்பேனே
கற்றதெல்லாம் சொல்வேனே
கடவுள் பாதம் பணிவேனே
குற்றம் ஒன்றும் செய்யேனே
கொஞ்சி முத்தம் தருவாயே

தாயைப்பற்றி குழந்தை பாடும் பாடலை கற்பனை செய்து பாருங்களேன்,அம்மாவை கொஞ்சி
அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் கேட்கும் உங்கள் குழந்தையின் முகம் தெரியவில்லை!!

சைக்கிள் பாட்டு
---------------
தங்கையே பார் தங்கையே பார்
சைக்கிள் வண்டி இதுவே பார்
சிங்காரமான வண்டி
சீமையிலே செய்தவண்டி
இரும்பாலே செய்த வண்டி
எங்கெங்கும் ஓடும் வண்டி
மாடில்லை குதிரையில்லை
மாய மதாய்ப் பறந்திடும் பார்
தீயுமில்லை புகையுமில்லை
தீவிரமாய்ச் சென்றிடும் பார்
காலாலே மிதிப்பதால்
கடும் விசையில் போயிடும்பார்
ஒன்றன் பின் ஒன்றாக
உருளும் பைதாக்களை பார்
அக்காளும் தங்கையும் போல்
அவை போகும் அழகை பார்.

முதல் முதலில் சைக்கிள் புதிதாக வாங்கி அதை ஆசை தீரப் பார்த்து, தன் தங்கையிடம் அதைப் பற்றி சொல்லி, நம் இருவரைப் போல் ஒற்றுமையாய் போகும் அழகைப் பார் என்று
சொல்லும் அக்காள் தெரிகிறாள்,இந்த பாடலில்.

முதற் சிகிட்சை
-----------------
வா வா முருகா! ஓடிவா-நம்
வகுப்பாசிரியரை அழைத்துவா
அப்துல் மயங்கி விழுந்திட்டான் -அவன்
அண்ணன் தம்பி நாம் தாண்டா
தண்ணீர் மொண்டு வா தாசு!
தம்பி மோசை!நீ வீசு
சுற்றும் வளைத்து நில்லாதீர்-இங்கே
தூய காற்றைத் தடையாதீர்
முகத்தில் நீரை தெளித் தங்கம்!-குடிக்க
முடியுமானால் கொடு கொஞ்சம்
ஆகா!அப்துல் பிழைத்திட்டான்
அதோ பார் கண்ணை விழித்திட்டான்
ஆசிரியர் பதறி வருகின்றார்-அவர்
அச்சம் அகற்றி மகிழ்வோம் நாம்.

பள்ளிக் கூடத்தில் முதல் உதவி செய்யும் முறை,முருகா,அப்துல்,மோசை,தாசு,என்று எல்லாமத குழ்ந்தை பெயர்களை கூப்பிட்டு ,அண்ணன் தம்பி நாம் தாண்டா என்று மத ஒற்றுமை பற்றியும்,விளக்கப் படுகிறது.பொறுப்புடன் செயல் படுவது பெண் தான் என்பதை விளக்க தங்கம் என்ற பெண்ணை அழைத்து முகத்தில் நீரை தெளி,குடிக்க கொடு என்று சொல்வது பேணுவது பெண் தான் என்பதையும்,அச்சத்துடன் வரும் ஆசிரியரை நாங்களே முதல் உதவி செய்து விட்டோம் என்று மகிழ்விக்கும் மகிழ்ச்சி பொரு ந்திய மாணவர்கள் முகத்தையும் இந்தபாடல் நம் கண் முன்னே கொண்டு வருகிறது.

கப்பல்
------
கப்பல் துறையில் வந்தது
கடலில் நாளை சென்றிடும்
அப்பா கூட ஏறவே
ஆசை கொண்டு நிற்கிறேன்
அறைகள் அதிலே உண்டுமாம்
அழகுப் பண்டம் கிடைக்குமாம்
நிறையக் கூட்டம் இருக்குமாம்
நினைத்த இடங்கள் செல்லவே
பட்டணம் போல இருக்குமாம்
பல இனத்து மக்களும்
இட்டமாயிதில் சென்று தான்
ஏனை நாட்டின் சரக்கினை
அந்த நாட்டின் பொருளெல்லாம்
அதிகம் இங்கே இறக்குமாம்
ஊர்கள் யாவும் பார்க்கலாம்
பாரில் இந்தக் கப்பல்கள்
பயனைப் பெருக்க வந்ததாம்.

கப்பலைப் பற்றி அப்பா சொன்னதை நமக்கு சொல்லி,கப்பலில் வாணிபம் செய்வதை விளக்கி
கப்பல் ஓட்டிய வ.உ. சிதம்பரனாரை நம்மை நினைக்க வைக்கிறது இந்த பாடல்.//அடி மேலைக் கடல் முழுதுங் கப்பல்விடுவோம்.// என்ற பாரதியார் பாடல் நினைவுக்கு வரும்.
எனக்கு என் அப்பாவுடன் தூத்துக்குடியில் ’சார்லஸ்’ என்ற பெரிய கப்பலைப் பார்த்த நினைவு வருகிறது.பின் என் மனத்திரையில் அண்ணனுடன் ராமேஸ்வரத்தில் கப்பலை என் குழந்தைகளுடன் பார்த்தது ,மலரும் நினைவுகளாய் மலருகிறது.

அலை
--------
கடலுடுத்த நிலமகளின்
காற் சிலம்பாம் அலையே!
படமெடுத்து வருவதற்கு
படபடப்பதேனோ?
முத்தெறிந்து விளையாடி
முட்டியோடும் அலையே
பித்தனை போல் பின்னும் பின்னும்
பிதற்றி நிற்ப தேனோ?
ஞாயிறு கடலில்- நின்று
நன்றாய் எழுவது பார்
தாமரை கங்கை உளம்-மகிழ்ந்து
தண்ணெனும் தேன் சுமந்து
காமரப் பாடகரின் -இன்னிசை
கண்டு விருந்திடல் பார்
முற்றம் தெளித்திடலாம் -அதை
கற்ற பல கோலம்- வரைந்து
கண்டு களித்திடலாம்
காலைக் கடன் முடித்தே-இறைவன்
காலைப் பணிந்திடலாம்
வேலைகளிற் புகலாம் உறக்கம்
விட்டே எழுந்திரம்மா!

அலையின் அழகையும்,கடலில் தோன்றும் கதிரவனின் அழகையும்,காலையில் இறைவனை
பணிந்து கடமையை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இப் பாடல் அழகாய் விளக்குகிறது.

அம்மா எழுதிய பாடல்கள் இப்போதும் படிக்க படிக்க இனிக்கிறது.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

வாழ்க்கைத் துணைநலம்

//வாழ்க்கைத் துணை-இறைவன் கொடுத்த வரமே:

தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதியர் யாருக்கும் குறையிருக்கத் தேவையில்லை.”பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்கள்,பிடாரியைக் கட்டி வைத்து விட்டாகள்”
என்பனவெல்லாம் அறியாமையே. அவரவர்களுடைய அடிமனமே வாழ்க்கைத துணைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அவரவர்கள் மனத்தின் தரத்தைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன இன்பம்,துன்பம் வர வேண்டுமோ அதற்குச் சரிபங்கேற்க ஒரே ஒருவரால் தான் முடியும்.அந்த ஒருவரை அவரவர் அடிமனமே தேர்ந்தெடுக்க அது பல் பேர் மனதில் பிரதிபலிக்க,மற்றவர்கள் வெறும் கருவிகளாகத் திருமணத்தை நடத்திவைப்பார்கள்.இதையே”
’மனம்போல் மாங்கல்யம்’ என்றும் ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்ப்டுகிறது’என்றும்
கூறுவர்.சொர்க்கம் என்பது சுவர்+அகம்.’சுவரென்றால் உயிர்;’அகம்’என்றால் உள்ளம்,அடிமனம்.இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு வாழ்க்கைத் துணைவருக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும். தமிழர்கள் உயர்ந்த பண்பாட்டிலே வாழக் கூடியவர்களாக இருப்பதால்தான் துணைவியைத் ‘தேவி’என்று அழைக்கும் வழக்கம் இங்கே,தமிழ்நாட்டிலே ஏற்பட்டது.’தெய்வி’என்ற வார்த்தையே மருவி’தேவி’என ஆயிற்று. தெய்வமே என்று அழைப்பதற்குப் பதிலாக தெய்வி;அதே போல் வாழ்க்கைத்துணைவரை
‘தெய்வா’என்பது ‘தேவா’என்று ஆயிற்று. இதை தமிழ் நூல்களில் பார்க்கிறோம்.

இருவர் இணைய சமுதாய ஒப்புதல்:

மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஒத்துக்கொள்ளவேண்டும். அதாவது பொருத்தம் இருக்க வேண்டும்.அதன் பிறகு மணமக்களின் பெற்றோர்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.ஏன்?இது வரைக்கும் அவர்களை வளர்த்து ஆளாக்கி வேண்டியவற்றை யெல்லாம் செய்து வந்ததால் அவர்களுடைய நன்மையைக் கருதக் கூடியவர்கள் பெற்றோர்கள் அல்லவா? ஆகையால் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள் வேண்டும்.அடுத்துச் சமுதாயம் சாட்சியாக அமைய வேண்டும்.இந்த மூன்றும் திருமணச்சடங்குகளில் உள்ள முக்கியமான் அம்சமாகும்.இன்றைய சமுதாய அமைப்பினிலே பல்வேறு விதமான திருமண முறைகள் இருப்பினும் மணமக்கள் திருமண மேடையில் சுற்றி வரும்போது சமுதாயத்திலே இன்னார் பெண்,இன்னார் பிள்ளை,இவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக பார்த்துக் கொள்கிறார்கள்.அதற்குப்பின் பெற்றோருக்கு பாதபூஜை செய்யும் சடங்கு மூலமாகப் பெற்றோர்கள் அனுமதி அளித்தார்கள் என்று அர்த்தம். பிறகு இரண்டு பேரும் ஒருவரை யொருவர் ஒத்துக்கொண்டார்கள் என்று அர்த்தம்.ரிஜிஸ்தர் ஆபீஸில் கூடப் பதிவுத் திருமணம் எனற முறையில் படிக்கப்ப்டுகிறது. அதாவது இன்னார் பிள்ளையை நான் கணவனாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பெண் படிக்கவும், அதேபோல் மாப்பிள்ளையானவன் இன்னார் மகளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று படித்துவிட்டுப் பின் இருவரும் கையெழுத்துப் போடுகிறார்கள்.இதற்கு எல்லாம் ஈடாகச் சடங்குளிலேயே வைத்துள்ளார்கள.//

இவ்வாறு அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி திருமணத்தைப் பற்றி சொல்கிறார்.


வாழ்க்கைத் துணை இறைவன் கொடுத்த வரமாகவும் ,சமுதாய ஒப்புதலுடனும், எனக்கு பிப்ரவரி 7ம் தேதி திருமணம் நடந்தது.