புதன், 9 டிசம்பர், 2015

மழை! மழை! எங்கும் மழை!

மழை! மழை! எங்கும் மழை!. மழைக்கு ஏங்கித் தவித்து மழைக்காகப் பிரார்த்தனை செய்து மழையைக் கேட்டால், கொடுத்தார் வருணபகவான்.  பெருமழை- கனமழை. தாங்கிக் கொள்ள ஈசன் தான் வந்து இருக்க வேண்டும். கங்கையைத் தன் தலையில் தாங்கி பின் அதை மிதமாய் ஓடவிட்டது போல் இந்த கனமழையைத் தாங்கி மிதமழையாக நின்று நிதானமாய் பெய்யும் மழையாக கொடுத்து இருக்கலாம்.

இருக்கும் ஏரி, குளங்களை, சரிசெய்து கொள்ளுங்கள்,  தூர்வாரி மழை நீரை சேமித்துக் கொள்ளுங்கள்,என்று  சின்ன எச்சரிக்கை விட்டு வந்து  இருக்கலாம். இனியாவது  அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் என்று பாடம் புகட்டி சென்று விட்டது.

எத்தனை பொருள் இழப்பு, உயிர் இழப்பு !   இதிலிருந்து மீண்டு வர எத்தனைக் காலம் பிடிக்கும்?
உதவும் உள்ளங்கள், மனிதநேயம் மிக்கவர்கள் , எல்லாம் செய்யும் தொண்டுகள்  ஏராளம். சாதி  மதம்   கடந்த அன்புள்ளங்களின் சேவை போற்றுதலுக்கு குரியவை, அவர்கள் எல்லோரையும்  வாழ்த்தி வணங்கி மகிழ வேண்டும்.

மழை மீண்டும் வரும் என்கிறார்கள் . இனி வடமாவட்டங்களில்  மழை இல்லை, தென் மாவட்டங்களில் மழை என்கிறார்கள். மணி முத்தாறு நிறைந்து வருகிறது  என்கிறார்கள். மேலும் மக்களை சோதனை செய்யாமல்  இறைவன், இயற்கை காத்து அருள வேண்டும்.

நாங்கள் இரண்டு மாதங்களுக்கு முன் (அக்டோபர்)தம்பி மகள் திருமண நிச்சயதார்த்தத்திற்கு மாங்காடு போய் இருந்தோம்.   அன்று மாலை நல்ல மழை. அப்போது மெதுவாய் ஆரம்பித்தது மழை. நாங்கள் போன ஊரில் எல்லாம் மழை தான்.
தேவகோட்டை  தாமரைக்குளம்.
தேவகோட்டையில் திருமண வீடு

தேவகோட்டைக்கு  நண்பர் வீட்டுத் திருமணத்திற்குப் போய் இருந்தோம் , அங்கு திருமணத்தின் போது நல்ல மழை. திருமணம் நடத்தும் இருவீட்டாரும். திருமணத்திற்கு வந்தவர்களும் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.  திருமணம் அவர்கள் பூர்விக வீடுகளில்தான் நடக்கும் . வீட்டில் மழை நீர் வராதபடி கெட்டிப் பந்தல் அமைத்தாலும்,  குழாயில் வரும் மழை நீர் வேகமாய் வந்ததால் முற்றத்திலும் மழை நீர் வர ஆரம்பித்து விட்டது ,  எல்லோரும் திருமணம் முடியும் வரை மழையைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார்கள்.  தாலிகட்டும் வரை பொறுத்தமழை, மீண்டும் பெய்ய ஆரம்பித்து விட்டது.

வாசுதேவ நல்லூர் சேவும்மாள்






 தம்பி மகள் திருமணம்  சென்ற மாதம் 29 ம் தேதி  தென்காசியில்.  அதற்கு போகும் போது மதுரையிலிருந்து தென்காசி செல்லும் பாதை எல்லாம் மிக அழகிய பச்சை பசேல் என்று வயல்கள்.  கண்ணுக்கு இனிமையாக இருந்தது. வாசுதேவநல்லூர் என்ற இடத்தில் உள்ள வயலை படமெடுத்துக் கொண்டு இருந்த போது ஒரு அம்மா வந்து என்  வயல்தான் மழையால் என்ன பாதிப்பு என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.  ”என் பேர் சேவு அம்மாள், சாத்தூர் சேவு நினைவு வைத்துக் கொள்ளுங்கள் என் பேர் மறக்காது ”என்றார் உண்மையில் மறக்கவில்லை. அவர்கள் வயல் மழையால் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்.

தென்காசியில் தம்பிமகள் கல்யாணத்தன்று மாலை முதல் தொடர் மழை. தென்காசி அருகில் உள்ள இலஞ்சி கோவில் அருகே மழையால் ஒரு குளம் நிரம்பி  மறுகால் பாய்ந்தது.  அங்காங்கே மடை வழியாக நீர் சல சலத்துக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது.



தென்காசி ஏரியில் பறவைகள். (முக்குளிப்பான்கள்)    ஏரியும் நிறைந்து இருக்கிறது.

 தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் கோபுரமும், ஏரியும்.

வானவில் மனிதன் என்ற வலைதளம் வைத்து இருக்கும் திரு . மோகன் ஜி அவர்கள் தன் முகநூல் பக்கத்தில் ஜெயராஜ்  மணி அவர்கள் எழுதிய கவிதையை  வாழ்த்துக்களுடன் பகிர்ந்து இருந்தார்கள்.  நான் இருவரையும் வாழ்த்தி அதை இங்கு பகிர்கிறேன்,  படித்துப் பாருங்களேன், படித்து இருந்தாலும் மறுமுறை.

அழைத்ததால் தானே வந்தேன்?

(ஜெயராஜ் மணி எனும் அன்பர் எழுதியதாய் ஒரு கவிதை வந்தது. உள்ளம் தொட்டதால், அவருக்கு வாழ்த்துக்களுடன் பகிர்கின்றேன் )

நெஞ்சுருகி குமுறியதால் தானே வந்தேன்
பஞ்சம் என்று கதறியதால் தானே வந்தேன்
கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன்,
உனக்காக கீழ் இறங்கினேன்.
கொஞ்சமும் நினைவு இல்லையா?
வஞ்சனை செய்கிறாயே
என்னை அழைத்து விட்டு ..

வறண்ட என் நிலக் காதலி
நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்
சுரண்டி அவள் மேனியெல்லாம்
சிமெண்டாலே போர்த்தி வைத்தாய்
நனைத்து அணைப்பதாலே
உடல் குளிர சுகம் கொள்வாள்
அனைத்தும் நிராகரித்து
கடல் சேரவே வழி செய்தாய்
குளம் குட்டை ஏரியென
அங்கங்கே தங்கியிருந்தேன்
வளம் கொளித்த அத்தனைக்கும்
பங்கம் செய்யவே வாழ்ந்திருந்தாய்
உனக்கு வழி வேண்டி
சாலைகள் நீட்டினாய்,
தொழிற்சாலைகள் கட்டினாய்,
காண்கிரீட் கட்டடமாய்
நிலமெல்லாம் நிரப்பினாய்.
நான் செல்லும் வழியடைத்து
திட்டமிட்டு துரத்தினாய்.
பூமித்தாய் மூச்சி விட திணறுகிறாள்!
மண் பார்க்க முடியாமல்
அவள் முகமெல்லாம்
மறைத்து விட்டாய்.
எனக்கென்று இருந்த சின்னஞ் சிறு
உறவுகள் தானே குளமும் குட்டையும்.
கண்மூடித்தனமாக
மண் போட்டு மூடி விட்டாய்.
என்னையே நம்பியிருந்த
கடைசி உறவுகளையும்
கொள்ளளவு ஏற்றியே உடைப்பெடுத்து
கொல்ல வைத்தாய்.
பள்ளம், குழி, சிறு தாழ்வு இருந்தாலே
வெள்ளமாய் தங்கி வாழ்வு தருவேனே?
உள்ளம் என்று இருந்திருந்தால்
கள்வன் போல் வசப்படுத்தி
கல் மண் கொட்டி குப்பை நிரப்பி
 மட்டும் தங்கும் தப்பை நினைப்பாயா?
என்னை வந்த வேகத்திலே
விரட்டி விட்டு
மண்ணை துளையிட்டு
நானூறு அடியில் என்ன தேடுகிறாய்?
நாற்பது அடியில்
கிணற்றின் மடியில்
நாளும் சுரந்தேனே !
ஊற்று, கால் என்றெல்லாம் நீ
முகர்ந்து குடிக்க மகிழ்ந்தேனே!
நினைவில்லையா?
எனக்கான இடத்தை நீ
உனக்காக வளைத்த மடத்தை
செய்யாமல் இருந்திருந்தால்
உன் கால் சுற்றி
கட்டிய வீட்டை சுற்றி
தேங்கி கிடக்கும் மடமையை
நானா செய்திருப்பேன்?
அவமானம் வேறு
வெகுமானமாக தருகிறாய்.
நீர் வடியும் இடமெல்லாம்
நீயாக அடைத்து விட்டு
பேரிடர் என்கிறாய்,
வெள்ளப்பெருக்கு என்கிறாய்,
மக்கள் அவதி என்கிறாய்,
இயல்பு வாழ்க்கை பாதிப்பென்கிறாய்.
அலுவலகம் செல்வதற்கு,
தொழில் நிற்காமல் நடப்பதற்கு,
மழை நிற்க வேண்டுகிறாய்.
பிழையாக குழி
நீ உனக்கே தோண்டுகிறாய்
உன் வாழ்வாதாரம் வேண்டியே
உன்னைத் தேடி நான் வந்தேன்.
உனக்கே வேண்டாம் என்ற போது
நான் கடலுக்கே போகிறேன்.
இனியாவது நீ திருந்துவாயா
உனக்காக நான் வந்தால் ?


வான்மழை கேட்கும் கேள்வி சரிதானே!
ஏரி ,குளம் ,ஆறு எல்லாம் நிரம்பி வழிய ,
மாரி அளவாய்  பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க!
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.






வெள்ளி, 6 நவம்பர், 2015

குன்றத்தூர் முருகன் கோயில்

சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரில் சிறிய மலையின் மீது  இருக்கும்   முருகன் கோவிலுக்கு சென்றமாதம் சென்று இருந்தோம். (தம்பி மகள் திருமண நிச்சயதார்த்தத்திற்கு மாங்காடு சென்று இருந்தோம் ) அப்படியே முருகன் தரிசனம்.

பழைய சினிமா படங்களில் எல்லாம் இந்தக் கோவில் கண்டிப்பாய் இடம்பெறும். பலவருடங்களாய் பார்க்க நினைத்த கோவிலை என் மருமகள்  கல்யாணநிச்சயத்தால் பார்க்க முடிந்தது.

இவ்வூர் பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழார் சுவாமிகள் பிறந்த ஊர். இந்த ஊரில் அவருக்கு தனிக் கோவில் உண்டு.

மாங்காட்டிலிருந்து இவ்வூர் நாலு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
அழகிய வடக்கு நோக்கிய இராஜகோபுரம், படி ஏறுவதற்கு முன் அழகான மண்டபம். 

கோவில் வரலாறு சொல்லும் அறிவிப்புப்பலகை கூறும் கதை:-

திருப்போருரில் அசுரர்களை வென்று வந்த முருகன், இந்தக் குன்றத்தூர் குன்றில் தங்கிச்  சென்றதால்  இத்தலத்திற்கு தென் திருத்தணி என்ற பெயரும், , இங்குள்ள குன்றின் மீது முருகன் அமர்ந்ததால் குன்றத்தூர் என்ற பெயரும்   ஏற்பட்டது.

சோழ அரசர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. முருகன் தங்கி இருந்து பூஜை செய்த சிவனுக்குக்  கட்டிய கோவில் மலையடிவாரத்தில் இருக்கிறது.

கோவிலுக்குள் நுழைந்தவுடன் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக ச்செல்லும்படியாகத் தடுப்பு கட்டி இருக்கிறார்கள் . தடுப்புக்கு அப்பால் வள்ளி தெய்வானையுடன்  உற்சவ முருகன் மிக அழகாய்  காட்சி தருகிறார். உற்சவ மூர்த்திக்கு முதலில்  ஆரத்தி  செய்து  காட்டி விட்டு மூலஸ்தானத்திற்கு அழைத்து செல்கிறார் குருக்கள். முருகன் மிக அழகாய் விபூதி அலங்காரத்தில் அவர் மட்டுமே காட்சி தருவார் நேரே பார்த்தால். ஒரு புறம் இருந்து வள்ளியும் மற்றொருபுறம் இருந்து தெய்வானையையும் பார்க்க வேண்டும்.

முருகன் சன்னதியில் தட்சிணாமூர்த்தியும், விஷ்ணு துர்க்கையும் இருக்கிறார்கள், பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள், பைரவர் இருக்கிறார்கள்.




தூண்களில் அழகிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 
கிளி சோதிடம் பார்ப்பவர்,  யாசிப்பவர்கள் படிகளில்
படியேறி முருகனைத் தரிசனம் செய்யப் போகும் போது  ஒரு  குட்டி தேவதை தன் பெற்றோர்களுக்குப் போட்டோ எடுக்க போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

படியேறி வருகிறோம், எங்கள் மனக்குறைகளைப்  படிப்படியாகக் குறைத்துவிடப்பா!

கோவிலுக்குப் போகும் பாதை
கோவில் வரலாறு சொல்லும் அறிவிப்புப் பலகை

படியேறிச் சென்றவுடன் முதலில் வருவது வலம்சுழி விநாயகர் சன்னிதி

பிள்ளையாரின் பின் புறத்திலிருந்து பார்த்தால்  அழகான இயற்கைக் காட்சி தெரிகிறது.

குன்றத்தூர் முருகன் குறைகளை தீர்ப்பார் என்று  சொல்கிறது வரலாறு, மனக்குறைகளைப்  போக்கி மன ஆறுதலைத் தரவேண்டும் குன்றத்தூர் முருகன் அனைவருக்கும்.

அப்படியே எல்லோருக்கும் இனியதீபாவளி நல் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன். 
வாழ்க வளமுடன்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் அப்பன் திருப்பதி



மண்டபத்தில் அனந்தசயனத்திலும் அமர்ந்தும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் ஊர் மக்கள்.

கோவில் வாசலில் இருந்து அழகான நடைபாதை

தினமலர் படம் - மூலவர் சீனிவாசபெருமாளும், 
உற்சவர் சீனிவாசபெருமாளும்
                                                 அலர்மேலுவள்ளி தாயார்
ஆண்டாள்
பஞ்சமுக ஆஞ்சநேயர்
பெருமாள்
தும்பிக்கை ஆழ்வார்
துளசிமாடம்
பெருமாள் விமானம்

                                      
                                            கோவிலின் பின்புறம்

                                         
கோவில் பிரகாரம்


இரண்டு மாதங்களுக்கு முன் அழகர்கோவில் போய் இருந்தோம், சித்திரைத் திருவிழா முடிந்து, அழகர் திருவிழாவும் முடிந்து, அழகர் அழகர் கோவில் திரும்பியதும் நடக்கும் திருவிழாவைக் கண்டு வந்தோம். அன்று  காலையில் தங்கப்பல்லாக்கு, மாலையில் தங்கக்குதிரைவாகனத்தில் பவனி. 

அப்பன் திருப்பதியை சொல்லாமல் அழகர் கோவில் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா?  அழகர் கோவில் போகும்போது வழியில் இந்த அப்பன் திருப்பதி கோவில் வருகிறது. அழகர் கோவில் போன அன்று அந்தக் கோவிலைப் பார்த்தோம், அழகர்கோவில் போய்விட்டு வரும் போது அப்பன் திருப்பதியை தரிசனம் செய்தோம்.

அழகர் சித்திரை திருவிழாவுக்கு மதுரைக்கு வரும்போது, வரும் வழி எல்லாம் கல் மண்டபங்கள் இருக்கும். அதில் இளைப்பாறி இளைப்பாறி வருவார்.  அப்போது பூஜை செய்யும் மண்டகப்படிக்காரர்கள் இருப்பார்கள். அது போல் இந்த கோவில்  முன்பு உள்ள மண்டபத்தில் ஒரு இரவு தங்கிச் செல்வாராம்.

வாசல் முன்பு கருப்பண்ணசாமி இருக்கிறார்., உள்ளே அழகிய நடைபாதை இருமருங்கிலும் அழகிய தூண்கள். நடுவில்நான்கு கல்தூண்நடுவில் பலிபீடம் இருக்கிறது. 

சுவாமி சன்னதியில்  தூணில் அழகிய சிற்பங்கள் உள்ளன. சுவாமி மூலவர்  ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகாய் காட்சி அளிக்கிறார். சின்னமூர்த்தமாய்.
உற்சவ சுவாமிகளுக்கும் மிக அழகாய் அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள்.

சக்கரத்தாழ்வார், விஷ்வக் சேனர், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள், ராமர் ஆகியோரின் சிலைகள் உள்ளன.திருமலை நாயக்கர் தன் மனைவியுடன்  இருக்கும் சிலை இருக்கிறது.

பட்டரிடம் அப்பன் திருப்பதி என்று ஏன் பெயர் வந்தது என்றால் திருப்பதி பெருமாள் மாதிரி அழகு அதனால் என்று சொல்லிவிட்டார். அவர் வழக்கமாய்ப் பணி செய்யும் பட்டருக்கு உதவிசெய்பவராக இருப்பார் என்று நினைக்கிறேன்  தலவரலாறு தெரிந்து வைத்துக்கொள்ளவில்லை.

தினமலர் கோவில்கள் தலவரலாறு மூலம்படித்து தெரிந்து கொண்டதை இங்கு பகிர்கிறேன். முன்பு ஒரு காலத்தில் ஒரு  அழகிய வாலிபன்  வழி எங்கிலும் காணப்பட்ட இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்துக் கொண்டே குதிரையில் மதுரையம்பதிக்கு சென்று கொண்டு இருந்தார். ஊர் மக்கள் எல்லோரும் இவர் யார்?இயற்கையை ரசித்துக் கொண்டு போவதைப்பார்த்தால் கவிஞர், போலவும், கதை எழுதுபவர் போலும் இருக்கிறாரே என்று பேசிக் கொண்டார்கள்.     அந்த வழியில் இருந்த பெருமாள் கோவிலின் பட்டர்,ஆற்றில் பெருமாளின் திருமஞ்சனத்திற்கு நீர் எடுத்து வரும் போது, அவரைப் பார்த்து சிரித்தார் அந்த வாலிபர். அப்போது பட்டர்,” யாரப்பா நீங்கள்?”என்று கேட்டபோதும் பதில் சொல்லாமல் புன்சிரிப்பை பதிலாக தருகிறார்,  பட்டர் அதையே பதிலாக எடுத்துக் கொண்டு  தன் வேலையைப்பார்க்க ஆரம்பிக்கிறார், வாலிபர்   அவர்பின்னேயே போய் அவர் இறைவனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம்செய்வதை லயித்துப் பார்க்கிறார். பின் பூஜை ஆனதும் பிரசாதம் பெற்றுக் கொள்கிறார், 
மனநிறைவுடன்.  அப்போது நினைவுக்கு வருகிறது பட்டருக்கு நாம்

கேட்டகேள்விக்கு இந்த வாலிபன் பதில் சொல்லவில்லையே என்று திரும்பிப்பார்த்தால் மாயமாய் மறைந்து விட்டார். அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது வந்து மாயமாய் மறைந்தவர் மாயவனே !என்று.

அப்பனே என்று தேடியதால், பெருமாள் அப்பன்  திருப்பதி சீனிவாசபெருமாள் ஆனார். 


மாயவன் இயற்கையைக் கண்டு ரசித்தது போல் நானும் கோவில் பக்கத்தில் இருந்த மரத்தில் பார்த்த பறவைகூட்டைப்பார்த்து  ரசித்தேன், 


இயற்கை அழகும் சீதோஷ்ண நிலையும் நன்கு இருப்பதால் இங்கு வந்து இருக்கும் அயல் நாட்டுப் பறவை.
           இன்னொரு கூட்டில் தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் பறவையின் இறக்கை மட்டும் தெரிகிறது.


புரட்டாசி மாதத்தில் எல்லோரும் பெருமாள் கோவில்களை தரிசித்து வருவதால் நானும் பெருமாள் கோவில்ப் பற்றி பகிர்ந்து கொண்டேன். அழகர் கோவில் போகும் போது போகும் வழியில் உள்ள அப்பன் திருப்பதியை கண்டு அவனருள் பெறலாம்

                                                                     வாழ்க வளமுடன்.


சனி, 8 ஆகஸ்ட், 2015

மூவர் கோவில், கொடும்பாளூர்

கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில்  என்று அழைக்கப்படும் கோவிலுக்கு  சனிக்கிழமை  சென்று வந்தோம்.  சோழர் காலத்து கோவில்.  என் கணவர் அவர்கள் பி.ஏ இந்தியப்பண்பாடு படிக்கும்போது இந்த கோவிலைப்பற்றிப் பாடம் வந்ததாம். வெகு காலமாய் போகவேண்டும் என்று நினைத்த இடம் . போன வாரம்  1ம் தேதி சனிக்கிழமை போய் வந்தோம்.

இந்த ஊருக்கு திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலிமலை கடந்து சென்று இடதுபுறம் திரும்பி செல்ல வேண்டும்.   ஒரு கடையில் நின்றவரிடம் கொடும்பாளூர் எப்படிப் போக வேண்டும் என்று கேட்டவுடன் கடையில் நின்ற வயதானவர் மூவர் கோவிலா? என்று கேட்டார்.  அப்புறம் வழி சொன்னார். அப்புறம் ஒரு இளைஞர் ஐவர் கோவிலா என்று கேட்டார் அப்படி பேர் இருக்கு போல!  அந்த வழியாகத்தான் போகிறேன் வாருங்கள் என்று எங்கள் காருக்கு முன் டூவீலரில் போய் வழி காட்டினார். மெயின் ரோட்டிலிருந்து  கோவில்  போகும்  சாலை பிரியும் போது விடைபெற்று சென்றார். 


கோவிலுக்கு செல்லும் சாலை ஒற்றையடி பாதை போல் இருக்கிறது குண்டும், குழியுமாய் இரண்டு பக்கமும் வயலும், திடலுமாய் இருக்கிறது. ஓ! என்று ஆளரவம் இல்லாமல்.
                  

கோவில் தொல்லியல்துறை பொறுப்பில் உள்ளது. பார்த்துகொள்பவர் ஒருவர் இருக்கிறார்.  அங்குள்ள வேப்பமரத்திலிருந்து விழும் கொட்டைகளை வயதான அம்மா குனிந்து சேகரித்துக் கொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களும் போய்விட்டார்கள். நாங்கள் இருவர் மட்டும் தான் அந்த கோவிலை சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்தோம்.  நிறைய பேராக போனால் நன்றாக இருக்கும் இந்த கோவிலுக்கு.

மூன்று கோவில்களில் சிவலிங்கங்கள் இருந்து இருக்கின்றன. இப்போது இரண்டு கோவில்கள் இருக்கின்றன, அதில் ஒரு கோவிலுக்குள் மட்டும் சிவலிங்கம் நல்ல உயரமாய் இருக்கிறது. இன்னொன்றில்  வேண்டாதபொருட்களைப் போட்டுப் பூட்டி வைத்து இருக்கிறார்கள்.

                    

இந்த மூவர் கோயில் வரலாறு பின் வருகிறது.  அந்த  பலகையில் உள்ளது போல் சிறப்புடன் முன்பு இருந்து இருக்கிறது. இப்போது எல்லாம் சிதிலமடைந்து காலத்தின் சாட்சியாக நிற்கிறது. கலையம்சம் நிறைந்த  சிற்பங்கள் உடைந்து அங்கு பல இடங்களில் சிதறி கிடக்கிறது.







கிணறு அழகாய் இருக்கிறது, படிகள் நிறைய போய் முடியும் இடத்தில் ட வடிவில்  பிரிந்து போகிறது. வட்டமாய் ஒரு கிணறு இருக்கிறது. அதை போட்டோ எடுக்க செருப்பை கழற்றிவிட்டு மேலே ஏறினேன் அவ்வளவுதான் ஒட்டுமுட்கள் பாதம் முழுவதும் குத்தி அடுத்த அடி எடுத்து வைக்கமுடியாமல் போய் விட்டது. என் கணவர் செருப்பை தூக்கி போட்டார்கள் அதன் பின் முட்களை அகற்றி விட்டு செருப்பை போட்டுக் கொண்டு கிணற்றை படம் எடுத்தேன். மறக்க முடியாத நல்ல அனுபவம். 



















                                                    யாளியின் வாய்க்குள் மனித உருவம்
யாளிக்கு வெளியேயும், யாளியின் வாய்க்குள்ளேயும்  மனிதன் சண்டை போடுகிறான்.



             யானையும் யாளியும், யாளியின் நகங்கள் எவ்வளவு கூர்மை?


                                                                          கல்வெட்டு.

விடுமுறை இருக்கும் போது இது போன்ற கலைச்சிற்பங்கள்  உள்ள இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சென்று வரலாம்.
                                                                  வாழ்க வளமுடன்.