செவ்வாய், 31 ஜனவரி, 2023

தஞ்சை பெரிய கோவில்

டிசம்பர் மாதம் 11ம் தேதி தஞ்சை போய் இருந்தோம். அப்போது எடுத்த  படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது. மாயவரம் போகும் போது அப்படியே   மதியம் 3.30க்கு தஞ்சை கோவிலுக்கு சென்றோம். 





கூட்டம் இருக்காது என்று நினைத்து போனால் நல்ல கூட்டம் ஐயப்ப பக்தர்கள் நிறைய இருந்தார்கள்
இப்போது புதிதாக வாசலில் வைத்து இருக்கும்  தஞ்சையும் சோழர்களும்  பற்றிய  வரலாற்று பலகை    தமிழ் மற்றும் இந்தியில் இருக்கிறது . முன்பு பல தடவை போய் இருக்கிறேன் அப்போது பார்த்த நினைவு இல்லை. (அப்போது இல்லை என்றே நினைக்கிறேன்)



சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால்  நிறைய கூட்டம்

பிரசாத கடையில்  பிரசாதம் விற்கப்படவில்லை 


மழை மேகமாய் இருந்தது, மாலைச்சூரியன்  எட்டிப்பார்த்தார்

ஆடாமல் அசையமால் நெடுநேரம் அமர்ந்து இருந்த புறாக்கள்.நாங்கள் கோவிலுக்குள் போய் திரும்பி வரும் வரை அங்கேயே அமர்ந்து இருந்தது.


கண்ணனின் காலடியில் இரண்டு கிளிகள் . கிளிகளும் அப்படித்தான்.



மூலவர் இருக்கும் கதவு  திறக்கும் முன் காத்து இருக்கும் கூட்டம் அதிகம். நாங்கள் பெருவுடையாரை பார்க்கவில்லை.  மாயவரம் போக வேண்டிய வேலை அதனால் காத்து இருந்து பார்க்க நேரமில்லை. நாலுமணிக்கு திறந்த போது கூட்டம் நிறைய இருந்தது வரிசையில் நிற்கும் மக்களை பார்த்து பயந்து பின் வாங்கி விட்டோம்.
அம்மன் சன்னதி விமானம்

பள்ளி, கல்லூரி, குழந்தைகள்    பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து வந்து இருக்கிறார்கள். படத்தை பற்றி பேசி கொண்டே வந்தார்கள்.




படியில் குழுவாக வந்தவர்கள் அனைவரும் அமர்ந்து படம் எடுத்து கொள்கிறார்கள்








முருகன் சன்னதியில் கொடுக்கும் முடிகயிறுகள்  வன்னி மரத்தில் கட்டி விடப்பட்டு இருக்கிறது.



அலைபேசியில் தான் படங்கள் எடுத்தேன்.

பூத வாகனம் மட்டும் பளிச் என்று இருந்தது.
முட்டி உடைத்து  இருக்கிறது




மயில் வாகனம் நல்ல கலைநயத்தோடு செய்து இருக்கிறார்கள்.  


தஞ்சை கோவில் பற்றி   இந்த சுட்டியில்  நிறைய வரலாற்றுத் தகவல்கள் படிக்க கிடைக்கிறது.    படித்த போது  இராஜராஜனின் புகழை சொல்லும் இந்த கவிதை படித்தேன். இன்று  . நீங்களும் படித்து இருப்பீர்கள்.   இன்னொரு முறை படித்து பாருங்கள்.  மூலவரை தரிசனம் செய்யலாம். படங்கள், செய்திகள் என்று நிறைய தகவல்கள் இருக்கிறது.



தொல்லியல் புலவன் டாக்டர் இரா. நாகசாமியின் தொல்சீர் பார்வையில் மாமன்னன் இராச ராசன்

//சீர்மிகு சுந்தரச் சோழரின் செல்வ!

செந்திரு மடந்தை வானவன் தேவி

எழில்மான் பயந்த புலியின் ஏறே!

கரிகால் வளவன் பின்வரு காவல!

ஐப்பசித் திங்கள் சதய நாள் பிறந்தோய்!

அக்கன் குந்தவை அன்பினில் வளர்ந்தோய்!

அருமொழி என்னும் இயற்பெயர் கொண்டோய்!

இராசர் தம்ராசன் எனும்பெயர் ஏற்றோய்!

காந்தளூர் சாலை கலமறுத் துகந்தோய்!

வேங்கை நாடும் கங்க பாடியும்

தடிகை பாடியும் நுளம்ப பாடியும்

குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்

எண்டிசை புகழ்தர ஈழமண் டலமும்

இரட்டபாடி ஏழரை இலக்கமும்

முந்நீர் பழந்தீவு பன்னி ராயிரமும்

திந்திறல் வென்றி தண்டார் கொண்ட

ராஜகே சரிக் கோவே உந்தன்

வாளொளி படரா நாடும் உளதோ?

வேட்புலம் முதலாய் வென்றியாற் கொண்ட

காடும் நாடும் கல்லும் தெற்றியும்

திணைத் திளியளவே ஆயினும் தவிரா

தூர்தொறும் ஊர்தொறும் ஊன்றியே அளந்து

விளைநிலமிது; விளையா நிலமிது@

இறைதரு நிலமிது; இறைஇலி இதுவென

வளமையின் வகையால் தரம்தரம் பிரித்து

வளநா டுடனே பல்புரம் அமைத்து
பழம்பெயர் தவிர்த்து தன்பெயர் நிறீஇ

மண்டலம் கூற்றம் வளநா டூரென

மண்ணுவ கறியா ஆண்புடன் வகுத்து

வரியி லிடுவோர், வகைபல செய்வோர்

கணக்கர், ஓலை, கண்காண் புரிவோர்

பண்டா ரத்தின் பொத்தக முடையோர்,

பட்டோ வையிடு பூட்சிப் பாட்டம்,

திணைக்க ளத்துடனே, திருவாய்க் கேழ்வி,

நடுவு இருக்கை, நல்லறம் பகர்வோர்,

பெருத்தரம், சிறுகரம், வேளைக் காரர்,

அதிகார கரெனப் பாங்குட நமர்த்தி

ஊர்தொறும் குடவோ லைமுறை நிறுவிய
உலகளந்த சோழ! உன்சீர் இந்த

உலகெலாம் பரவி புலவர்தம் நாவில்

இன்றும் உளதெனில் பிறிதும் உண்டோ

புகழ்தனைப் பெறவே!


தென்னா டுடைய தேவினை நாளும்

தேந்தமிழ் இசையால் பாடிய மூவர்

தேவரங்கள் காணா தொழிய

திருநா ரையூர் நம்பியின் துணையால்

தில்லைப் பதியில் பொல்லாப் பிள்ளை

திருக்கர நீட்ட அறைதனை தெரிந்து

மன்றுள் ஆடும் தௌ¤ தேனுக்கும்

மன்னி அருளும் மலர்க் கொடிதனக்கும்

பதிகம் பாடிய மூவர் தமக்கும்

அன்புடன் திருவிழா அமைவுற எடுத்து

திருந்திய கதவம் திறனுடன் திறந்து

மறைந்த பாக்களை புற்றினில் கண்டு

மறையோர் புகழ இமையோர் வியக்க

இவ்வுல கெங்கும் இசைப்பா தந்த

திருமுறை கண்ட பெரும் புகழ்ச் சோழ!

நின்பெயர்

தமிழ் உளவரியும் திகழ்ந்திடும் அன்றோ!

தஞ்சைமா நகர்தனிலே தரணியெலாம் போற்றவே

தக்கின மாமேருவெனப் பெருங்கோயில் படைத்தனையே

பெருங்கோயில் அதுதனையும் கருங்கல்லால் எடுத்தனயே

கல்எல்லாம் அரும்பணியால் கலைப் பொருளாய் மாற்றினையே!

கலைமிளிர கண்வியக்கும் சிலைவடிவாய் நிறுத்தினையே

சிலைகளையே செகம்புகழ செம்பாலும் வடித்தனையே

கண்கவரும் ஓவியமும் வெண்சுதையில் விளைத்தனையே

எண்ணிலா அணிகலன்கள் எண்ணியே அளித்தனையே

பண்செய்த பயிர்நிலங்கள் நெல்அளக்க விடுத்தனையே

நொந்தாமல் விளக்கெரிய நற்பசுக்கள் கொடுத்தனையே

பதிகங்கள் பாடிடவும் பரதங்கள் ஆடிடவும்

பரிகலன்கள் எடுத்திடவும் பல்கணக்கு எழுதிடவும்

மெய்காத்து நின்றிடவும் பல்லோரை அமர்த்தினையே

உயிர்அனைய தமக்கையுடன் உயர்காதல் தேவியரும்

உந்தானைத் தலைவருடன் உவந்தளித்தோர் கொடைகளையே

கல்லிலே வெட்டிவைத்துப் புதுச்சரிதம் படைத்தோய்நீ!

பரதவள நாடுமே பார்த்திப் புரவலன்நீ!
சொற்கோயில் எடுப்போரும் புனைந்தறியா புகழ்கோயில்

கற்கோயில் என்போமோ! கலைக்கோயில் என்போமோ!

புதியரில் புதியன் நீ! பழையரில் பழையன் நீ!

பண்பன் நீ! அன்பன் நீ! பக்தன் நீ! சித்தன் நீ!

சிவனடி மறவாச் செம்மால்! சிவபாதசேகர!

முத்தமிழ் பெருமை மூவுலகேற்றிய மும்முடிச்சோழ!

இத்தரை எங்கும் நின்புகழ் நிலைக்கும்

ஆயிரம் ஆயிரம் அயீரம் ஆண்டே!

தஞ்சை தந்த இராஜ ராஜ!

தரணியில் நிலைப்பாய்!

ஆயிரம் ஆயிரம் ஆயிர மாண்டே!//

புலவர் சொல்வது போல ஆயிரம் ஆயிரம் காலத்தை கடந்தும் 
கோவிலும், இராஜ ராஜனின் புகழும்  நிலைத்து இருக்கட்டும்.

மேலும் நான் எடுத்த தஞ்சை கோவில்  படங்கள் அடுத்த பதிவில் இடம்பெறும்.



வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

  1. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன பெரிய கோவிலினுள் நுழைந்து பார்த்து....பிரமாண்ட கோவில்.  2014 ல் சென்றபோது கூட இறைவனை தரிசிக்க முடியவில்லை.  சுற்றிப்பார்த்துவிட்டு வந்து விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன பெரிய கோவிலினுள் நுழைந்து பார்த்து....பிரமாண்ட கோவில். 2014 ல் சென்றபோது கூட இறைவனை தரிசிக்க முடியவில்லை. சுற்றிப்பார்த்துவிட்டு வந்து விட்டோம்.//

      மாயவரத்தில் இருந்த போது அடிக்கடி போகும் கோவில்.
      காரை சர்வீஸ் கொடுத்து விட்டு கோவிலை தரிசனம் செய்து விட்டு மாலை காரை வாங்கி கொண்டு மாயவரம் வருவோம்.
      இப்போது தான் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று நினைத்தேன், 2014 ம் வருடமும் கூட்டமா ? இறைவனை தரிசிக்கமுடியாமல்?

      நீக்கு
  2. புறாக்களும் கிளிகளும் சனிக்கிழமை என்பதால் ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டன போலும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புறாக்களும் கிளிகளும் சனிக்கிழமை என்பதால் ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டன போலும்!!//

      அதுதான் போல!

      நீக்கு
  3. சிறப்பான படங்கள்.  முட்டி உடைந்த பூத வாகன பாவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிறப்பான படங்கள். முட்டி உடைந்த பூத வாகன பாவம்!//
      படங்களை ரசித்து கருத்துக்கள் சொன்னதற்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. வாழ்க வளமுடன்..

    பெரிய கோயிலுக்குச் சென்று ஒரு வருடத்துக்கு மேல் ஆகின்றது.. பார்த்துக் கொண்டே இருக்கச் சொக்லும் கலைக்கோயில்..

    படங்கள் அத்தனையும் அழகு.. கம்பீரம்..

    பதிவில் காணப்படும் கவிதையை இப்போது தான் படிக்கின்றேன்.. இனிமை..

    அடுத்த பதிவுக்கான காத்திருப்புடன்.,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      பெரிய கோயிலுக்குச் சென்று ஒரு வருடத்துக்கு மேல் ஆகின்றது..//

      உங்கள் வீட்டுக்கும் கோவிலுக்கும் வெகு தூரமா?

      பார்த்துக் கொண்டே இருக்கச் சொக்லும் கலைக்கோயில்..//

      ஆமாம், கலைபொக்கிஷம்.

      //படங்கள் அத்தனையும் அழகு.. கம்பீரம்..//

      நன்றி.


      //பதிவில் காணப்படும் கவிதையை இப்போது தான் படிக்கின்றேன்.. இனிமை..//

      கவிதை உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி. இராஜ ராஜனின் பெருமைகள் அனைத்தும் இருப்பதால் எனக்கு பிடித்து இருந்தது.

      //அடுத்த பதிவுக்கான காத்திருப்புடன்.,//

      நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. படங்களும் பகிர்வும் நன்று. கோபுரத்தை அருமையான கோணங்களில் படம் எடுத்து இருக்கிறீர்கள். மழை மூட்டமான வேளையில் மாலை சூரியனின் கதிரில் குளிர் காய்கின்றனவோ புறாக்களும் கிளிகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      //படங்களும் பகிர்வும் நன்று. கோபுரத்தை அருமையான கோணங்களில் படம் எடுத்து இருக்கிறீர்கள்.//

      நன்றி ராமலக்ஷ்மி.
      //மழை மூட்டமான வேளையில் மாலை சூரியனின் கதிரில் குளிர் காய்கின்றனவோ புறாக்களும் கிளிகளும்!//

      ஆமாம், அப்படித்தான் போல் இருக்கு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  6. அலைபேசியில் எடுத்திருந்தாலும் படங்கள் தரமானவையாக இருக்கின்றன. படங்களின் துல்லியம் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //அலைபேசியில் எடுத்திருந்தாலும் படங்கள் தரமானவையாக இருக்கின்றன. படங்களின் துல்லியம் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.//
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

      நீக்கு
  7. நான் இதுவரை தஞ்சாவூர் சென்றதில்லை ரயிலில் இரவில் ரயில் நிலையத்தை கடந்து இருக்கிறேன்.

    படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது.

    வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதை நம்பாத இளைய சமூகம் திரைப்படங்கள் சொல்வதை நம்புவது வேதனையான விடயம்.

    நானும் ஓர்நாள் தஞ்சாவூர் செல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //நான் இதுவரை தஞ்சாவூர் சென்றதில்லை ரயிலில் இரவில் ரயில் நிலையத்தை கடந்து இருக்கிறேன்.//

      உண்மையா ஜி?

      //படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது.//
      நன்றி.

      //வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதை நம்பாத இளைய சமூகம் திரைப்படங்கள் சொல்வதை நம்புவது வேதனையான விடயம்.//

      ஆமாம், வேதனையான விடயம் தான்.

      வரலாற்று பாடத்தை விட சினிமாவில் கற்பனைகள் கலந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். என்பதை தெரிந்து தான் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
      திரைபடங்கள் உண்மை இல்லை என்பதை உணரும் காலம் வரும்.

      //நானும் ஓர்நாள் தஞ்சாவூர் செல்வேன்.//
      கண்டிப்பாய் போய் வாங்க, அழகிய புகைப்படங்கள் எடுப்பீர்கள் அதை பதிவு போடுங்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  8. கோமதிக்கா படங்கள் அத்தனையும் அழகு! அதுவும் கோபுரம் படங்கள் தூரத்தில் எடுத்தவை கிட்டத்தில் எடுத்தவை எல்லாமே அழகோ அழகு. ஈர்க்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா படங்கள் அத்தனையும் அழகு! அதுவும் கோபுரம் படங்கள் தூரத்தில் எடுத்தவை கிட்டத்தில் எடுத்தவை எல்லாமே அழகோ அழகு. ஈர்க்கின்றன//

      நன்றி கீதா.

      நீக்கு
  9. நான் பல வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன் அப்போது நீங்கள் சொல்லியிருப்பது போல் வரலாறு தகவல்கள் இப்படிக் கண்டதில்லை.

    கிளிகளும் புறாக்களும் அமர்ந்திருக்கும் சிற்பங்கள் வாவ்..., கீழே தனியாக சிற்பங்கள் மட்டும் இருக்கும் படங்கள் எல்லாமெ செம அழகு.

    பார்த்து ரசித்தென்.

    பூதவாகனம் ரொம்ப உழைத்திருக்கு போல முட்டி உடைந்துபோயிருக்கே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் பல வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன் அப்போது நீங்கள் சொல்லியிருப்பது போல் வரலாறு தகவல்கள் இப்படிக் கண்டதில்லை.//
      பள்ளி பாடத்தில் படித்து இருக்கிறோம் கீதா.

      //கிளிகளும் புறாக்களும் அமர்ந்திருக்கும் சிற்பங்கள் வாவ்..., கீழே தனியாக சிற்பங்கள் மட்டும் இருக்கும் படங்கள் எல்லாமெ செம அழகு.

      பார்த்து ரசித்தென்.//
      ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா. நிறைய எடுக்கலாம் கீதா நாள் முழுவதும் கொஞ்சம் தான் எடுத்து இருக்கிறேன்.
      //பூதவாகனம் ரொம்ப உழைத்திருக்கு போல முட்டி உடைந்துபோயிருக்கே//

      எங்காவது இடித்து கொண்டு இருக்கும். திருவிழா காலங்களில் உழைப்பும் அதிகமாக இருந்து இருக்கும்.


      நீக்கு
  10. கூட்டம் இருப்பது தெரிகிறது. நாங்கள் பல வருடங்களுக்கு முன்ன போன போது மாலையில் சென்றதாக நினைவு. வேறொரு முறை பகலில்...கூட்டம் ரொம்ப இல்லை அப்போது புகைப்படக் கருவி எதுவும் கிடையாதே படங்களும் இல்லை

    உங்கள் படங்கள் அனைத்தையும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கூட்டம் இருப்பது தெரிகிறது. நாங்கள் பல வருடங்களுக்கு முன்ன போன போது மாலையில் சென்றதாக நினைவு. வேறொரு முறை பகலில்...கூட்டம் ரொம்ப இல்லை அப்போது புகைப்படக் கருவி எதுவும் கிடையாதே படங்களும் இல்லை//

      கூட்டம் எல்லாம் பெரிய கோவில் என்பதால் அவ்வளவாக தெரியவில்லை. மூலவரை தரிசிக்க வெளி மண்டபம் முழுவதும் நிறைந்து இருந்தார்கள்.
      எனக்கும் அப்போது காமிரா, செல்போன் கிடையாது. நிறைய தடவை சென்று இருக்கிறேன். காமிரா வாங்கிய போது படம் எடுத்தவை கெட்டு போய் விட்டது. இப்போது மீண்டும் எடுக்க வாய்ப்பு.

      //உங்கள் படங்கள் அனைத்தையும் ரசித்தேன் கோமதிக்கா//
      நன்றி கீதா.

      நீக்கு
  11. அலைபேசியிலும் மிக அழகாக வந்திருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அலைபேசியிலும் மிக அழகாக வந்திருக்கின்றன.//

      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  12. படங்களை பார்க்கும் போது, நாங்கள் நேரில் பார்த்த போது கிடைத்த அனுபவம் வந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //படங்களை பார்க்கும் போது, நாங்கள் நேரில் பார்த்த போது கிடைத்த அனுபவம் வந்தது...//

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. வெள்ளி வாகனங்கள் அர்த்த மண்டபத்தினுள் இருக்கின்றன..

    பூத வாகனம் சித்திரை வசந்த விழாவின் பத்தாம் நாளில்..

    மயில் வாகனம் சிதிலமடைந்து விட்டது..

    மராட்டியர் காலத்து கண்ணாடி ரதங்கள் கணபதி கோயிலின் அருகில் தகர கொட்டகையின் கீழ் இருந்தன.. ஆயிரமாவது விழாவின் போது அவை அகற்றப்பட்டு இப்போது எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      //வெள்ளி வாகனங்கள் அர்த்த மண்டபத்தினுள் இருக்கின்றன..//
      ஆமாம், அங்கு இருக்கும் நான் அர்த்த மண்டபம் போகவில்லை.

      //பூத வாகனம் சித்திரை வசந்த விழாவின் பத்தாம் நாளில்..//

      திருவிழாவில் பத்தாம் நாள் இடபெறுமா நல்லது.

      //மயில் வாகனம் சிதிலமடைந்து விட்டது..//

      மயில் வாகனம் இப்போது வேறு செய்து இருப்பார்கள், அல்லது வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வருவார் என்று நினைக்கிறேன்.

      //மராட்டியர் காலத்து கண்ணாடி ரதங்கள் கணபதி கோயிலின் அருகில் தகர கொட்டகையின் கீழ் இருந்தன.. ஆயிரமாவது விழாவின் போது அவை அகற்றப்பட்டு இப்போது எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை..//

      முன்பு சாரின் அண்ணாவுடன் மராட்டியமன்னருடன் மாலை நேரம் தேநீர் அருத்தி விட்டு பின் அரண்மனை கோயில் உள் தளம், மேல் தளம் எல்லாம் சுற்றிப்பார்த்து இருக்கிறோம். அப்போது கண்ணாடி ரதங்கள் பார்த்தோம். கோயிலின் உட்புறம் மராட்டிய ஓவியங்கள் , நாயக்கர் கால ஓவியம் எல்லாம் பார்த்த நினைவு. அப்புறம் யாரையும் பார்க்க அனுமதிப்பது இல்லை.







      நீக்கு
  14. இப்போது நாங்கள் இருப்பது தஞ்சைக்கு வெளியே.. திருவையாறு சாலையில்..

    உடல் உபாதைகள் கட்டிப் போட்டிருக்கின்றன..

    மகர சங்கராந்தி நாட்களில் ஒரு லட்சம் பேர் திரண்டிருந்ததாக செய்தி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது நாங்கள் இருப்பது தஞ்சைக்கு வெளியே.. திருவையாறு சாலையில்.//

      ஓ அப்படியா.

      //உடல் உபாதைகள் கட்டிப் போட்டிருக்கின்றன.//

      நாங்களும் மதுரையில் கூட்டம் அதிகம் என்று இப்போது போகாமல் இருக்கிறோம் மணி கணக்கில் நிற்க முடிவது இல்லை என்று.

      //மகர சங்கராந்தி நாட்களில் ஒரு லட்சம் பேர் திரண்டிருந்ததாக செய்தி..//

      தொலைக்காட்சியில் காட்டினார்கள்.மாட்டுபொங்கல் அன்று இன்னும் கூட்டம். நந்திக்கு வழிபாடு சிறப்பாக நடந்தது.

      மீண்டும் வந்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  15. படங்கள் மிக அழகு. ரசித்து ரசித்து எடுத்திருக்கிறீர்கள்.

    கல்வெட்டுகளும் அழகு

    கூட்டம் அதிகமாகத் தெரிகிறது. காலையில் போயிருந்தீர்களென்றால் நிம்மதியாக நிறைய படங்கள் எடுத்திருக்கலாம். கருவூரார் சன்னிதிக்குச் சென்றீர்களோ? அதுபோல அறுமுகனின் சன்னிதிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      //படங்கள் மிக அழகு. ரசித்து ரசித்து எடுத்திருக்கிறீர்கள்.//

      நன்றி.

      //கல்வெட்டுகளும் அழகு//
      கல்வெட்டு படித்தீர்களா?

      //கூட்டம் அதிகமாகத் தெரிகிறது. காலையில் போயிருந்தீர்களென்றால் நிம்மதியாக நிறைய படங்கள் எடுத்திருக்கலாம்.//
      காலையில் கிளம்பி துவரங்குறிச்சி அருகில் மூன்று கோவில்கள் பார்த்து பின் இங்கு வந்தோம், அந்த கோவில்கள் பதிவு செய்து இருக்கிறேன் . நிறைய எடுத்தேன், அடுத்த பதிவில் போட கொஞ்சம் வைத்து இருக்கிறேன்.
      //கருவூரார் சன்னிதிக்குச் சென்றீர்களோ? அதுபோல அறுமுகனின் சன்னிதிக்கும்//

      சென்றோம். முருகன் சன்னதி படிகட்டு சிற்பங்கள் அடுத்த பதிவில் இடபெறும். கருவூரார் சன்னதியில் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.






      நீக்கு
  16. கடைசியா 2015 ஆம் ஆண்டில் போனோமோ? நினைவில் இல்லை. இந்தக் கல்வெட்டுக்களை எல்லாம் ஓரளவுக்குப் படித்துக் கொண்டிருந்தேன். இப்போ முடியுமா தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //கடைசியா 2015 ஆம் ஆண்டில் போனோமோ? நினைவில் இல்லை. இந்தக் கல்வெட்டுக்களை எல்லாம் ஓரளவுக்குப் படித்துக் கொண்டிருந்தேன். இப்போ முடியுமா தெரியலை.//

      கல்வெட்டு படித்தீர்களா இப்போது படித்து பாருங்கள் , படத்தில் படிக்க முடிகிறதா?
      உங்கள் கண் அறுவை சிகிட்சை எப்போது? விரைவில் செய்து கொள்ளுங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. அழகான காட்சிகள் ...எத்தனை முறை சென்றாலும் வியக்க வைக்கும் கோவில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

      //அழகான காட்சிகள் ...எத்தனை முறை சென்றாலும் வியக்க வைக்கும் கோவில்//

      ஆமாம், அனு. எவ்வளவு கலை நயம், எவ்வளவு நேர்த்தி காலத்தை கடந்தும் இன்னும் மன்னரின் புகழ் பாடி கொண்டு இருக்கிறது.
      அவ்வளவு பேரின் 7 வருட கால உழைப்பு, அதில் நெர்மை இருந்ததால் காலத்தை கடந்தும் இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. தஞ்சை பெரிய கோவிலை மீண்டும் உங்கள் பதிவு வழியாகப்பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக அழகாக படங்களை, அதுவும் சில வித்தியாசமான கோணங்களில் எடுத்திருக்கிறீர்கள்! அதுவும் வெள்ளப்புறாக்களின் பின்னணியில் சிற்பங்கள் உள்ள புகைப்படம் மிகவும் அழகு!
    தஞ்சையில் தான் வீடு என்பதால் எப்போது நினைத்தாலும் பெரிய கோவிலுக்குப்போவேன். எந்த சினேகிதி வந்தாலும் அவர்களை அழைத்துச் செல்வேன். மாலை நேரத்தில் நாதஸ்வர இசையின் இனிமையான பின்னணியில் சினேகிதிகளுடன் கருவூரார் சன்னதியில் அமர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //தஞ்சை பெரிய கோவிலை மீண்டும் உங்கள் பதிவு வழியாகப்பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.//

      உங்கள் ஊர் இல்லையா! வெளி நாட்டில் இருக்கும் போது நம் ஊரை பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படும் தான்.

      //மிக அழகாக படங்களை, அதுவும் சில வித்தியாசமான கோணங்களில் எடுத்திருக்கிறீர்கள்! அதுவும் வெள்ளப்புறாக்களின் பின்னணியில் சிற்பங்கள் உள்ள புகைப்படம் மிகவும் அழகு!//

      கோவிலுக்குள் நுழையும் வாசலில் உள்ள கோபுரம் , செருப்பு போட போகும் இடத்திற்கு பக்கத்தில் இருப்பது. அந்த சிற்பங்களை உற்றுப்பார்த்தால் எவ்வளவு கவனமாய் செய்து இருப்பது வியப்பை தரும்.

      //தஞ்சையில் தான் வீடு என்பதால் எப்போது நினைத்தாலும் பெரிய கோவிலுக்குப்போவேன். எந்த சினேகிதி வந்தாலும் அவர்களை அழைத்துச் செல்வேன். மாலை நேரத்தில் நாதஸ்வர இசையின் இனிமையான பின்னணியில் சினேகிதிகளுடன் கருவூரார் சன்னதியில் அமர்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம்!//

      நீங்கள் சொல்வது போல தான் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், உறவுகளை அழைத்து கொண்டு கோவில்களை காட்ட போவோம்.

      கருவூரார் சன்னதியில் அமர்ந்து தியானம் செய்து அங்கு அமர்ந்து வரும் போது கிடைக்கும் நிம்மதி மகிழ்ச்சியைப்பற்ரி அடுத்த பதிவுக்கு எழுதி வைத்து இருக்கிறேன்.

      என் மகன் ஐபோனில் மேலும் படங்கள் நான் எடுத்ததை விட வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்து இருக்கிறான்.
      அதை ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். தஞ்சை கோவில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய கோவில்.

      உங்கள் வரவுக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி.





      நீக்கு
  19. தஞ்சை பெரிய கோவில் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சென்றிருக்கிறேன். அற்புதமான கலைநயங்கள், வண்ண ஓவியங்கள் கண்டு வியந்திருக்கிறோம்

    சிறப்பான பல படங்களையும் நல்ல கோணங்களில் எடுத்துத் தந்துள்ளீர்கள் . கண்டு மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //தஞ்சை பெரிய கோவில் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சென்றிருக்கிறேன். அற்புதமான கலைநயங்கள், வண்ண ஓவியங்கள் கண்டு வியந்திருக்கிறோம்//

      நீங்கள் பார்த்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி. பார்க்க வேண்டிய கோவில்.

      //சிறப்பான பல படங்களையும் நல்ல கோணங்களில் எடுத்துத் தந்துள்ளீர்கள் . கண்டு மகிழ்ந்தோம்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி, அடுத்த தஞ்சை கோவில் பதிவும் போட்டு விட்டேன்.

      நீக்கு