அரிசோனாவில் மகன் வீட்டில் பொங்கல்
போன வருடம் மதுரையில் எங்கள் வீட்டில் மகன் குடும்பத்துடன் கொண்டாடினோம். இந்த முறை மகன் வீட்டில் நானும், மருமகளின் அம்மாவும் கலந்து கொண்டோம். தை பொங்கல் இறைவன் அருளால் சிறப்பாக நடந்தது. பேரனின் சிறு வீட்டுப் பொங்கலும் சிறப்பாக நடந்தது. அந்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
பொங்கல் ஏற்பாடுகள் நடக்கிறது.
புது செங்கல்கள் வாங்கி வந்து அடுப்பு கூட்டி அதற்கு வெள்ளை பட்டை அடித்து தயார் செய்கிறான் மகன். முன்பு ஒரு பொங்கலுக்கு மண் அடுப்பும் அவனே செய்து இருந்தான்.மணி, சூரியன், பிள்ளையார் எல்லாம் களிமண்ணில் செய்து இருந்தான். முன்பு போட்ட பதிவில் போட்டு இருப்பேன்.
மருமகள் பொங்கல் பானைகளுக்கு திருநீறு பட்டை போட்டு குங்குமம் வைக்கிறாள்.
பொங்கலுக்கு முதல் இரவு ஆரம்பித்த மழை காலை 10 மணிக்கு தான் விட்டது. மழை விட்டவுடன் பொங்கல் ஆரம்பித்தோம். நல்ல குளிர். காற்றும் இருந்தது. இறைவன் அருளால் மழை இல்லை. சூரியனும் மேகம் மறைத்தாலும் மெலிதாக பால் பொங்கும் போது எட்டிப்பார்த்தார்.
முதல்நாள் பண்ணைக்கு போய் கரும்புகள் வாங்கி வந்தான். ஆலை கரும்புதான் கிடைக்கும். பண்ணை வைத்து இருப்பவரை பற்றி தனி பதிவு போட வேண்டும்.
ஊரில் பொங்கலுக்கு 10 நாட்கள் முன்பே வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடிப்பது, வீடு முழுவதும் கோலம் போடுவது, மற்றும் பொங்கல் வைக்க கட்டி அடுப்பு தயார் செய்வது என்று இருக்கும். படியில் செம்மண் மற்றும் வெள்ளைபட்டை அடித்தல் என்று நிறைய வேலைகள் இருக்கும்.
களிமண் விற்பவர்கள் வந்து வீட்டுக்கு வீடு போட்டு காசு வாங்கி செல்வார்கள். அதை அம்மா ஒரு குத்து போனி சட்டியில் மண்ணை குழைத்து அடைத்து தட்டுவார்கள். ஒரு அடுப்புக்கு மூன்று கட்டி தேவை படும். இப்படி 6, 9 என்று தேவையானதை செய்து காய வைத்து செம்மண் அடித்து அது காய்ந்தவுடன் வெள்ளை சுண்ணாம்பு பட்டை அடித்து அல்லது கோலம் போல போட்டு எடுத்து வைப்பார்கள். மாமியாரும் கட்டி அடுப்பு செய்வார்கள்.
மாமியார் வீட்டு பொங்கல் படம் தேட வேண்டும், இந்த படம் கூகுள் உதவி .
இப்படித்தான் கட்டி அடுப்பு இருக்கும். பனை ஓலையில் பொங்கல் வைப்போம் இப்படித்தான். ஆனால் வெண்கல பானையில் பொங்கல் வைப்போம். மண் பானையில் வைத்தது இல்லை. மகன் அவனே மண்பானை செய்வதை கற்றுக் கொண்டு மண் பானை செய்து இருக்கிறான். முன்பு ஒரு பதிவில் போட்டு இருந்தேன்.
சர்க்கரை பொங்கல் அதில் தான் செய்ய வேண்டும் என்றதால் மண்பானையில் சர்க்கரை பொங்கல், வெண்கல பானையில் வெண்பொங்கல் வைத்தோம்.
நன்றி- தினகரன்
இப்போது பொங்கல் சமயம் கட்டி அடுப்பு சிமெண்டில் தூத்துகுடி, திருநெல்வேலி பக்கம் தயார் செய்து விற்கிறார்கள். வீட்டில் முன்பு செய்த மாதிரி கஷ்டப்பட்டு செய்ய வேண்டாம். செம்மண், வெள்ளை பட்டை அடித்தால் போதும்.
பொங்கலுக்கு பனை ஓலை கொண்டு வந்து போட்டு காசு வாங்கி செல்வார்கள் ஊரில். இங்கு குளிருக்கு நெருப்பு போட விற்க படும் விறகு கட்டைகள் வாங்கி வந்தான். எளிதில் பற்றி கொள்ள சிறு சுள்ளிகள் விற்கிறார்கள் அதை முதலில் வைத்து சூடனை வைத்து பற்ற வைத்தாள் மருமகள்.
பால் கிழக்கு பார்த்து பொங்கியது
மாயவரம் சென்று வந்த போது மயூர நாதர் கோயில் போனோம் அங்கு மகன் மயூரநாதர், அபயாம்பிகை படம் வாங்கி வந்தான் பூஜையில் அந்த படமும் இடம்பெறுகிறது. சாணிப்பிள்ளையார் பிடித்து வைப்பதற்கு பதில் மகன் செய்த பிள்ளையார் இடம்பெறுகிறார். தோட்டத்தில் அருகம்புல் கிடைத்தது பிள்ளையாருக்கு.
அடுத்து வருவது கவின் வைத்த சிறுவீட்டுப்பொங்கல்
போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, அடுத்து மாட்டு பொங்கல், அதற்கு அடுத்து காணும் பொங்கல் அன்று சிறுவீட்டு பொங்கல் செய்வோம்.
இப்போது எல்லாம் ஒரே நாளில் செய்து விடுகிறோம். பெண் குழந்தை இருக்கும் வீட்டில் மார்கழி மாதம் கோலத்தில் சாணி பிள்ளையார் பிடித்து வைத்து பறங்கி பூ வைப்பார்கள் ஒற்றை படையில். அதை காலை 11 மணிக்கு தட்டி காய வைத்து விடுவார்கள்.
சிறு வீடு வரைந்து வைப்பார்கள், அல்லது களிமண்னால் கட்டி வைப்பார்கள். என் அம்மா களி மண்ணால் சிறு வீடு கட்டி, களிமண் பாத்திரங்கள் செய்து தருவார்கள் வீட்டில் வைக்க. பொங்கல் முடிந்ததும் அதை வைத்து விளையாடி இருக்கிறோம்.
கடைசி நாள் வைக்கும் சாணி பிள்ளையார்களையும் அதற்கு படைக்கபடும் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், வாழைப்பழம், தேங்காய், வெல்லம் இவற்றை ஆற்றுக்கு கொண்டு போய் பூஜை செய்து ஆற்று நீரில் கரைப்பார்கள் குழந்தைகள்.
முன்பு தட்டி காய வைத்த பிள்ளையார்களையும் ஆற்றில் கரைப்பார்கள்.
பேரனுக்கு சிறு வயதில் வீடு வைத்து செப்பு சாமான் வைத்து விளையாட பிடிக்கும் . அதனால் பொங்கல் சமயம் சிறு வீட்டு பொங்கல் வைக்க ஆரம்பித்தோம். வீடு அழகாய் வரைந்து தருவாள் மருமகள் , அதில் அவன் விளையாட்டு பொருட்களை வைத்து நான் கொடுத்த சிறு வெங்கல பானையில் பால் காய்ச்சுவான். ஒவ்வொரு ஆண்டும்.
சிறு வீட்டில் காய்கறி, பாத்திரங்களை வைக்கிறான், குளிர் அதிகம் வெறுங்காலை கீழே வைக்க முடியாது அதனால் செருப்பு அணிந்து இருக்கிறான்.
பால் பொங்குது !
பாலை வைத்து அவன் வீட்டில் பூஜை செய்கிறான்
பூஜை சமயம் செருப்பு இல்லாமல் செய்கிறான்.
முன் வாசலில் இங்கு பொங்கல் வைக்க முடியாது அதனால் தோட்டத்தில் பொங்கல் வைத்து விட்டோம்.
நான் திருவெண்காட்டில் இருக்கும் போதுமட்டும் தான் இப்படி அடுப்பில் பாரம்பரிய பொங்கல் வைத்தேன். அப்புறம் எல்லாம் மாடி வீடு, அதனால் வீட்டில் கேஸ் அடுப்பில்தான்.
மகன் வீட்டில் எப்போதும் பழைய முறைப்படித்தான் பொங்கல்.
மருமகள் செய்த அவியல், காய்கள் எல்லாம் போட்டு சாம்பார், தேங்காய் துவையல் , தயிர்பச்சடி, அப்பளத்துடன் இலை போட்டு சாப்பிட்டு மகிழ்ந்தோம். (நுனி இலை கிடைக்காது. ஏடுதான் கிடைக்கும்.)
எல்லா நலன்களையும் சூரிய பகவான் அருள வேண்டும்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !
------------------------------------------------------------------------------------------------
அழகான படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.
பதிலளிநீக்குவிவரணம் நன்று.
கவின் செருப்பு அணிந்து இருப்பதை கேட்க வேண்டும் என்று நினைத்தேன், அடுத்து நீங்களே விளக்கம் சொல்லி விட்டீர்கள்.
அடுத்த படத்தில் சூடம் காட்டும்போது செருப்பு இல்லை. (இதுதான் முக்கியம்)
நீங்கள் குளிருக்காக ஸாக்ஸ் அணிந்து இருப்பதை கண்டேன்.
பொங்கல் நிக(மகி)ழ்வுகள் பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துகள்.
வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்கு//அழகான படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.
விவரணம் நன்று.//
நன்றி.
//கவின் செருப்பு அணிந்து இருப்பதை கேட்க வேண்டும் என்று நினைத்தேன், அடுத்து நீங்களே விளக்கம் சொல்லி விட்டீர்கள்.
அடுத்த படத்தில் சூடம் காட்டும்போது செருப்பு இல்லை. (இதுதான் முக்கியம்)
ஸாக்ஸ் அணிந்து கொள்ள சொன்னபோது "பூஜை செய்யும் போது செருப்பை கழற்றி விடுவேன் ஆச்சி" என்று சொன்னான்.
//நீங்கள் குளிருக்காக ஸாக்ஸ் அணிந்து இருப்பதை கண்டேன்.//
ஆமாம் ,காலில் ஸாகஸ் மற்றும் ஸ்வெட்டர் அணிந்து இருக்கிறேன்.
//பொங்கல் நிக(மகி)ழ்வுகள் பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துகள்.//
உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் நன்றி ஜி.
இந்த நாள் இனிய நாள்..
பதிலளிநீக்குஎல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..
நலம் வாழ்க..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்கு//இந்த நாள் இனிய நாள்..
எல்லாருக்கும் இறைவன் அருளட்டும்..
நலம் வாழ்க..//
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
சிறு வீட்டுப் பொங்கல் பற்றி அருமையான செய்திகளுடன் சிறப்பான பதிவு..
பதிலளிநீக்குஅழகான படங்கள்..
கவின் வளர்ந்திருக்கின்றார்..
பாரம்பரியங்கள் தொட்டுத் தொடரட்டும்..
நலம் வாழ்க...
//சிறு வீட்டுப் பொங்கல் பற்றி அருமையான செய்திகளுடன் சிறப்பான பதிவு..
நீக்குஅழகான படங்கள்..//
நன்றி.
//கவின் வளர்ந்திருக்கின்றார்..
ஆமாம்.
//பாரம்பரியங்கள் தொட்டுத் தொடரட்டும்//
உங்கள் வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் நன்றி.
உங்கள் இல்லத்தில் பொங்கல் மிக அழகாய் அமைந்திருக்கிறது. படங்கள் அனைத்தும் அருமை! மிகவும் தெளிவாகவும் அழகாகவும் நீங்கள் எழுதியிருப்பதைப்படித்த போது மாமியாருடன் எங்கள் கிராமத்தில் அனைவருடனும் பொங்கல் கொண்டாடிய ஞாபகங்கள் வந்து விட்டன.
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
நீக்கு//உங்கள் இல்லத்தில் பொங்கல் மிக அழகாய் அமைந்திருக்கிறது. படங்கள் அனைத்தும் அருமை!//
நன்றி.
//மாமியாருடன் எங்கள் கிராமத்தில் அனைவருடனும் பொங்கல் கொண்டாடிய ஞாபகங்கள் வந்து விட்டன.//
உறவுகளுடன் ஊரில் கொண்டாடிய ஞாபகங்கள் வந்தது மகிழ்ச்சி.
எனக்கும் பழைய நினைவுகள் ஒவ்வொரு பொங்கலுக்கும் வரும்.
சிறு வயது நினைவுகள், மாமியார் வீட்டில் கொண்டாடிய நினைவுகள், என்று வந்துவிடும்.
கரும்பு தோட்டத்தில் போய் கரும்பு வாங்கி வந்த கதை போடவில்லை மறந்து விட்டேன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பண்ணையில் கரும்பு வாங்கி வந்த விவரம் கரும்பு படம் போட்டு விட்டேன்.
நீக்குஇதுவல்லவோ பொங்கல்...! ஆகா...! சிறப்பு...
பதிலளிநீக்குவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்கு//இதுவல்லவோ பொங்கல்...! ஆகா...! சிறப்பு...//
மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பொங்கல் கொண்டாட்டம் கட்டுரையும் படங்களும் சிறப்பாக வந்திருக்கின்றன. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஎல்லாக் காய்களும் அமெரிக்காவிலும் கிடைக்கிறது!.
Jayakumar
வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பொங்கல் கொண்டாட்டம் கட்டுரையும் படங்களும் சிறப்பாக வந்திருக்கின்றன. பாராட்டுக்கள். //
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
//எல்லாக் காய்களும் அமெரிக்காவிலும் கிடைக்கிறது!. //
சிறுகிழங்கும், பனங்கிழங்கும் மட்டும் கிடைக்கவில்லை, மற்ற எல்லா காய்களும் கிடைக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அக்கா சிறு வயது நினைவுகள் பல வந்து அலை மோதுகின்றன.
பதிலளிநீக்குஉங்கள் வீட்டில் அமெரிக்காவிலும் இதைக் கொண்டாடியது ரொம்பச் சிறப்பு. அழகான அலங்காரம். படையல்கள்...படங்கள் அருமை
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//அக்கா சிறு வயது நினைவுகள் பல வந்து அலை மோதுகின்றன.//
பொங்கல் சமயம் உள்ள நினைவுகள் எல்லாம் இனிமையாக இருக்குமே!
//உங்கள் வீட்டில் அமெரிக்காவிலும் இதைக் கொண்டாடியது ரொம்பச் சிறப்பு. அழகான அலங்காரம். படையல்கள்...படங்கள் அருமை//
மகனும், மருமகளும், கவினும் இதில் ஆர்வமாக இருப்பதால் சிறப்பாக கொண்டாட முடிகிறது. மூவருக்கும் தமிழ்பள்ளி வேலைகள், மற்றும் அலுவலகம் வேலை, நட்புகள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய து இருந்தாலும் நேரம் ஒதுக்கி செய்து விட்டார்கள்.
இங்கு பொங்கலுக்கு விடுமுறை கிடையாதே!
அதுவும் அடுப்பு மூட்டி !! ஆஹா!
பதிலளிநீக்குஉங்கள் மகனும் பேரனும் எல்லாவற்றிலும் பங்கெடுத்துச் செய்வது மிகவும் சிறப்பு!! மகிழ்வான விஷயம்.
ஆமாம் ஊரில் இருந்தவரை வீட்டுக்கு வெள்ளை அடிப்பது வாசலில் திண்ணையில் சுவர்றி செம்மண் அடித்து வெள்ளை அடிப்பது எல்லாம் செய்வதுண்டு அதன் பின் எல்லாம் விட்டுப் போச்சு நகரம் வந்த பின்.
மகன் களிமண்ணில் சூரியன், அடுப்பு, எல்லாம் செய்வது பானை செய்யக் கற்றுக் கொண்டு செய்வது!! வாவ்! அக்கா உங்க மகனுக்கு என்னதான் தெரியாது சொல்லுங்க!!! இறைவன் ஆசிர்வதிக்கட்டும்! அடுத்து 32 அடிக்கும் மேலே பாய பேரன் தயாராகி வருகிறார்..இறைவனின் ஆசிகள்!
கீதா
//அதுவும் அடுப்பு மூட்டி !! ஆஹா!//
நீக்குமகனுக்கு அடுப்பில் செய்வதுதான் பிடிக்கும்.
மதுரையில் அவன் வீட்டில் மொட்டைமாடியில் பொங்கல் வைத்தோம்.
//உங்கள் மகனும் பேரனும் எல்லாவற்றிலும் பங்கெடுத்துச் செய்வது மிகவும் சிறப்பு!! மகிழ்வான விஷயம்.//
பேரனுக்கும் பிடிக்கும். மகனை போல பண்டிகைகளை எதிர்ப்பார்ப்பான். வீட்டுக்கு விருந்தினர் வருகையை அதிகமாக எதிர்பார்ப்பான்.
//ஆமாம் ஊரில் இருந்தவரை வீட்டுக்கு வெள்ளை அடிப்பது வாசலில் திண்ணையில் சுவர்றி செம்மண் அடித்து வெள்ளை அடிப்பது எல்லாம் செய்வதுண்டு அதன் பின் எல்லாம் விட்டுப் போச்சு நகரம் வந்த பின்.//
மாயவரம் இருந்தவரை நாங்களும் வெள்ளை பார்டர் அடிப்பது, செம்மண் அடிப்பது என்று இருந்தோம். மகன் , அப்பாவுடன் சேர்ந்து எல்லாம் செய்வான். அடுக்குமாடி குடியிருப்பு வந்தபின் வீட்டுக்குள் பொங்கல் செம்மண் கோலத்தோடு சரி.
//அக்கா உங்க மகனுக்கு என்னதான் தெரியாது சொல்லுங்க!!! இறைவன் ஆசிர்வதிக்கட்டும்! அடுத்து 32 அடிக்கும் மேலே பாய பேரன் தயாராகி வருகிறார்..இறைவனின் ஆசிகள்!//
கீதா, உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி. இறைவனின் ஆசிகள் கண்டிப்பாய் வேண்டும். நீங்களும் வாழ்த்தலாம்.
கவினும் அழகாகப் பொங்கல் வைத்து பூஜை செய்துகொண்டாடியிருக்கிறார். பெற்றோர் எப்படியோ அப்படிக் குழந்தைகளும் வளர்வது என்பதற்கு நல்ல உதாரணம் கோமதிக்கா.
பதிலளிநீக்குகாய்கள் பழங்கள் எல்லாம் வைத்து அருமையா இருக்கு. அவியல் சாம்பார், தேங்காய்த் துவையல் ஆஹா.... என்று அசத்தல் போங்க!!! அதுவும் இப்படி வீட்டில் வெளிப்புறத்தில் வைத்துக் கொண்டாடுவது என்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்போது நகர வாழ்க்கை, குடியிருப்பு என்பதால் அப்படிச் செய்ய முடிவதில்லை.
அங்கு நல்ல குளிர் என்று தெரிகிறது.
படங்களும் விவரங்களும் ஆகச் சிறப்பு. ரசித்து வாசித்தேன் கோமதிக்கா.
கீதா
//கவினும் அழகாகப் பொங்கல் வைத்து பூஜை செய்துகொண்டாடியிருக்கிறார். பெற்றோர் எப்படியோ அப்படிக் குழந்தைகளும் வளர்வது என்பதற்கு நல்ல உதாரணம் கோமதிக்கா.//
நீக்குஆமாம், அப்பா, அம்மா போலவே அனைத்தையும் செய்ய ஆசைபடுவான்.
//காய்கள் பழங்கள் எல்லாம் வைத்து அருமையா இருக்கு. அவியல் சாம்பார், தேங்காய்த் துவையல் ஆஹா.... என்று அசத்தல் போங்க!!! //
சாப்பிடும் முன் படம் எடுத்தேன், பகிர மறந்து விட்டது.
//அதுவும் இப்படி வீட்டில் வெளிப்புறத்தில் வைத்துக் கொண்டாடுவது என்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்போது நகர வாழ்க்கை, குடியிருப்பு என்பதால் அப்படிச் செய்ய முடிவதில்லை//
ஆமாம், ஊரில் எல்லோரும் வாசலில் வைப்போம். ஒன்று போல அடுப்பில் ஏற்றுவார்கள் பொங்கபானையை, பொங்கல் பொங்கி வரும் போது குலவை இடுவார்கள். நான் சின்ன வயதில் கண்டதை சொல்கிறேன். அப்புறம் அம்மா ஊர் ஊராக மாற்றி போகும் போது சில வீட்டில் மொட்டை மாடியில், சில வீட்டில் கிணற்றடியில் என்று வைத்து இருக்கிறார்கள். நானும் அப்படித்தான்.
மகன் வீட்டில் பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வந்த பொங்கல். மகிழ்ச்சியாக இருந்தது.
ஆமாம் நல்ல குளிர். இன்னும் 10 நாள் அதிக குளிராம்.
//படங்களும் விவரங்களும் ஆகச் சிறப்பு. ரசித்து வாசித்தேன் கோமதிக்கா.//
ரசித்து வாசித்து விரிவான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி கீதா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்கள் மகன் வீட்டில் கொண்டாடிய பொங்கல், பூஜைகள் படங்கள் அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது. தங்கள் மகனும், மருமகளும் பாரம்பரியங்களை விடாது எல்லாம் செய்து முறைப்படி விழாவை கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
தங்கள் பேரனும், சிறு வீட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளார். எத்தனை ஆர்வத்துடன் அவர் மகிழ்ச்சியாக பொங்கல் விழாவை கொண்டாடியிருக்கிறார் என்பதற்கு சிறப்பாக தாங்கள் எடுத்து பகிர்ந்த படங்களே சாட்சி. அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பொங்கல், காய்கறிகள் என அத்தனை படங்களும் மிகவும் அழகாக உள்ளன. பதிவையும் விபரமாக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ரசித்து படித்தேன். பாராட்டுக்கள்.
அம்மா வீட்டில் வருடந்தோறும் புது மண் அடுப்பு செய்து அதில் வெங்கல பானையில் பொங்கல் செய்து இது போல் கடவுளுக்கு படைத்த அந்த கால நினைவுகள் மனதுக்குள் வந்தன. இப்போதெல்லாம் நான் காஸ் அடுப்பில், வெங்கல பானையில் பொங்கல் செய்கிறேன். காலத்திற்கு வாழும் இடத்திற்கு தகுந்த மாற்றங்கள். உங்கள் மகன் வீட்டு பொங்கல் விழா பார்க்கவே மனதுக்கு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்கள் மகன் வீட்டில் கொண்டாடிய பொங்கல், பூஜைகள் படங்கள் அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது.//
நன்றி.
//தங்கள் மகனும், மருமகளும் பாரம்பரியங்களை விடாது எல்லாம் செய்து முறைப்படி விழாவை கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//
உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.
//தங்கள் பேரனும், சிறு வீட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளார். எத்தனை ஆர்வத்துடன் அவர் மகிழ்ச்சியாக பொங்கல் விழாவை கொண்டாடியிருக்கிறார் என்பதற்கு சிறப்பாக தாங்கள் எடுத்து பகிர்ந்த படங்களே சாட்சி//
ஆமாம், அவனும் மகிழ்ச்சியாக செய்தான். இரண்டு ஆச்சிகளும் வேறு அவன் செய்வதை பார்ப்பதால் மேலும் மகிழ்ச்சி அவனுக்கு.
குளிர் அதிகம் , ஸ்வெட்டர் , ஸாகஸ் போட்டுக் கொள்ளாமல் அவன் எல்லாம் செய்தது இரண்டு நாள் ஜலதோஷம் பிடித்து கொண்டு சிரமபட்டான்.
//அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பொங்கல், காய்கறிகள் என அத்தனை படங்களும் மிகவும் அழகாக உள்ளன. பதிவையும் விபரமாக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ரசித்து படித்தேன். பாராட்டுக்கள்.//
உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
//அம்மா வீட்டில் வருடந்தோறும் புது மண் அடுப்பு செய்து அதில் வெங்கல பானையில் பொங்கல் செய்து இது போல் கடவுளுக்கு படைத்த அந்த கால நினைவுகள் மனதுக்குள் வந்தன.//
உங்களுக்கும் திருநெல்வேலிதானே! உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
//இப்போதெல்லாம் நான் காஸ் அடுப்பில், வெங்கல பானையில் பொங்கல் செய்கிறேன். காலத்திற்கு வாழும் இடத்திற்கு தகுந்த மாற்றங்கள்.//
ஆமாம் என்ன செய்வது ! இடத்திற்கு தகுந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
//உங்கள் மகன் வீட்டு பொங்கல் விழா பார்க்கவே மனதுக்கு நன்றாக உள்ளது.//
நன்றி.
உங்கள் வரவுக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி.
அருமையான பதிவு. சிறு வீட்டுப் பொங்கல் படங்களை முகநூலிலும் பார்த்த நினைவு. இங்கேயும் பார்த்துக் கொண்டேன். உங்கள் மருமகளையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. சிறப்பான பொங்கல் கொண்டாட்டம். பகிர்வுக்கும் அனைத்துப் படங்களுக்கும் மிக்க நன்றி..
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்கு//சிறு வீட்டுப் பொங்கல் படங்களை முகநூலிலும் பார்த்த நினைவு. இங்கேயும் பார்த்துக் கொண்டேன்.//
ஆமாம், முகநூலில் போட்டேன். மருமகளை பார்த்தீர்களா மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அழகு. பொங்கல் விழா நிகழ்வுகளும் பகிர்ந்த விதமும் அருமை
பதிலளிநீக்குவணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
மகன் மருமகள் பேரன் என்று எல்லோருமே மிகவும் பற்றுடனும் சுவாரஸ்யத்துடனும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியது பாராட்டத்தக்கது. யார் இவ்வளவு முறையாக இப்போதெல்லாம் செய்கிறார்கள்? கடமைக்கு குக்கரில் ஒரு பொங்கலை வைத்து விட்டு TV முன் அமர்ந்து விடுபவர்களே பெரும்பான்மை!
பதிலளிநீக்குகவினும் சிறந்த முறையில் தயாராவது மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//மகன் மருமகள் பேரன் என்று எல்லோருமே மிகவும் பற்றுடனும் சுவாரஸ்யத்துடனும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியது பாராட்டத்தக்கது. //
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
//கவினும் சிறந்த முறையில் தயாராவது மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது.//
ஆமாம். அவனும் மிக ஆசையாக செய்வான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
பாரம்பரிய முறையில் பொங்கல் விழா சிறப்பு. அழகிய படங்களுடன் கண்டு மகிழ்வுற்றோம் .
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//பாரம்பரிய முறையில் பொங்கல் விழா சிறப்பு. அழகிய படங்களுடன் கண்டு மகிழ்வுற்றோம் .//
உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி
இனிய பொங்கல் பண்டிகை படங்கள் மிகவும் சிறப்பு மா ...மனதிற்கு நிறைவை தரும் பண்டிகைகள்
பதிலளிநீக்குவணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
நீக்கு//இனிய பொங்கல் பண்டிகை படங்கள் மிகவும் சிறப்பு மா ...மனதிற்கு நிறைவை தரும் பண்டிகைகள்//
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.