ஞாயிறு, 3 டிசம்பர், 2023

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்





                       இம்மையிலும் நன்மை தருவார் கோயில் 

மதுரை நகரின் நடுப்பகுதியில் தெற்குமாசி வீதி- மேலமாசி சந்திப்பில் அமைந்துள்ள   கோயில். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான கோயில். மதுரை மீனாட்சி கோயில், மற்றும் கூடலழகரை தரிசனம் செய்து விட்டு  அந்த கோயில்களுக்கு பக்கம் இருக்கும் இந்த பழமையான கோயிலுக்கும் மக்கள் வருவார்கள் அதிகமாக. பேரூந்து நிலையம் அருகில் இருக்கிறது.



இந்த கோயிலுக்கு 23.11. 23 அன்று போய் இருந்தேன்.

பூலோக கைலாயம் என்பார்கள் இந்த கோயிலை.

தாயாய், தந்தையாய், குருவாய், அன்பராக , நண்பராக எல்லாமாகி  இருந்த  என் அன்பு கணவர் இப்போது  தெய்வமாகி எங்களை வழி நடத்தி செல்கிறார் 


 இறைவனடி சேர்ந்து மூன்றாவது ஆண்டு   திதிக்கு இந்த கோயில்  போய் இருந்தேன்.


அன்று மகன் அவன் ஊரில் திதி கொடுப்பதால் நான் இங்கு கோயிலுக்கு போய் வந்தேன்.  கோயில் வாசலில் இருக்கும் ஒரு 10 பேருக்கு காலை ஆகாரம் வாங்கி போய் இருந்தேன். அதை அவர்களுக்கு கொடுத்து விட்டு கோயிலுக்கு போய் இறைவனை தரிசனம் செய்து வந்தேன்.

மாமா, அத்தை அவர்களுக்கு  திதி இந்த கோயிலில் தான்  கொடுப்போம்.


என் கணவருடன்  ஒருமுறை ஆடி அமாவாசைக்கு போன போது எடுத்த படம்


ஆடி அமாவாசை சமயம் ஒரு முறை  போய் இருந்தோம். கோசாலையிலிருந்து  பசுக்களை தெப்பக்குளம் அருகில் கட்டி வைத்து இருந்தார்கள். அன்பர்கள் கொடுத்த அகத்திகீரைகள்
ஒரு நாளில் அவை எப்படி எவ்வளவு சாப்பிடும்?
அமாவாசை அன்று பசுக்களுக்கு அகத்திகீரை கொடுக்கலாம் என்றாலும் பசித்து இருக்கும் மாடுகளுக்கு கொடுக்கலாம். மலை போல குப்பைவண்டியில் அள்ளி வைத்து இருந்தார்கள்.
மாடுகள் அந்த பக்கமே திரும்பி கொண்டன முகத்தை. ஆளை விடுங்க  சாமி! என்று.



 

சிவனும் பார்வதியும் லிங்கத்திற்கு பூஜை செய்த கோயில். 
சிவபெருமான் மதுரையில் அரசராக  பொறுப்பேற்கும் முன் இங்கு லிங்க பூஜை செய்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


கருவறையில் இப்படித்தான் இருப்பார்கள் 

அங்கு பாலாலயம்    நடப்பதால்  யாகசாலை பூஜைகள் நடந்து கொண்டு இருந்தது. உள்ளே சுவாமி சன்னதியில்   கூட்டம் இல்லை இருந்தாலும் , சிறப்பு  கட்டணம் 10 ரூபாய் கொடுத்து  பக்கத்தில் போய் நன்றாக மூலவரை தரிசனம் செய்தேன்.  குருக்கள் நான் கொடுத்த வில்வமாலையை  வில்வம், பூக்களை  சாற்றி ஆரத்தி காட்டினார்.  யாரும் போக சொல்லவில்லை. சிறிது நேரம் நின்று நிம்மதியாக இறைவனை வணங்கினேன்.  நான் மட்டுமே சன்னதிக்குள் இருந்தேன், சிவன், பார்வதியை நன்கு தரிசனம் செய்த மகிழ்ச்சியுடன்  வெளியே வந்தேன் .

சுவாமி சன்னதிக்கு வெளியே ஒரு பக்கம் தண்டபாணி, ஒரு பக்கம் பிள்ளையார் இருக்கிறார்கள்.

சுவாமி சன்னதி உள் சுற்றில் வெள்ளை நிற காசி விஸ்வநாதர் , விசாலாட்சி, சரஸ்வதி இருக்கிறார்கள். வல்லப சித்தர் இருக்கிறார். அவருக்கும் பூபந்தல் அமைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.

 ஜூரதேவர் தன் மனைவி ஜூரசக்தியிடன்  இங்கு மட்டும் தான் பார்த்து இருக்கிறேன்.  சண்டிகேஸ்வரர் மிகவும் சிறப்பு. இறைவனுக்கு சாற்றிய மாலையை கொண்டு வந்து   அவர் மேல்  சாற்றி வேண்டிக் கொள்கிறார்கள். அவர் சிவபெருமானிடம் நம் வேண்டுதலை நிறைவேற்ற சொல்வாராம்.

சுவாமி பேர் சொக்கநாதர். அம்மன் பேர்  மத்தியபுரி நாயகி.
அம்மன் சன்னதியிலும் கூட்டம் இல்லை. சிறப்பான தரிசனம்.
அம்மன் சன்னதியில்  கல்லால் ஆன் ஸ்ரீசக்கரம்  அங்கு இருப்பத்தால் அம்மனை தரிசனம் செய்து கொண்டு நன்கு வேண்டி கொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையுமாம்.  அம்மனை "மாங்கல்ய வரபிரசாதினி" என்று  சொல்கிறார்கள். 


நல்ல மழை பெய்து கோயில் முழுவதும்  தண்ணீர் அங்கங்கே தேங்கி இருந்தது அடிபிரதட்சணம் செய்வது போல மெதுவாக அடிமேல் அடிவைத்து  நடந்து போனேன்.


பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடந்து கொண்டு இருந்தது இரண்டாவது நாள்

யாகசாலை பூஜைகள் நடக்கவிருந்தது. நான் காலை 8.30க்கு போய் விட்டேன்  9 மணிக்கு ஆரம்பித்து மதியம் கடம் சுற்றி வந்து அபிசேகம் ஆக 1 மணி ஆகும் என்றார்கள். நான் சுவாமி தரிசனம் முடிந்தவுடன் வந்து விட்டேன் வீட்டுக்கு.


தேவார இன்னிசை கச்சேரி நடந்து கொண்டு இருந்தது. பூஜை சமயம் நாதஸ்வர வாசிக்க ஒரு அம்மா  இருந்தார்கள்

அலைபேசி கோவிலுக்குள் அனுமதி இல்லை படம் எடுக்க அனுமதி இல்லை என்று போட்டு இருந்தார்கள், ஆனால் யாகசாலை கிட்டே படம் எடுத்து கொண்டு இருந்தார்கள், அதனால் நானும் சில படங்கள் பயந்து கொண்டே எடுத்தேன்.

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
உன்னடி  என் மனத்தே
வழுவாதிருக்க வரந்தர
வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க்கு  இரங்கி யிருந்தருள்
செய்பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற் கங்கை செஞ்சடை
மேல் வைத்த  தீவண்ணனே

தேவாரம் பாடியவர்களுக்கு முன்பு இருந்து எடுக்காமல் யாகசாலைக்கு பின் புறம் இருக்கும் முருகன் சன்னதி வாசலிலிருந்து பாடலை பதிவு செய்தேன்.  

ஓதுவார் பாடிய "புழுவாய் பிறக்கினும்" பாடலை அன்று கேட்டதும் எனக்கு மெய் சிலிர்த்து விட்டது. நானும் அதை தானே கேட்க வந்தேன் இறைவனிடம். (கணவர் இறைவனிடம் சென்று மூன்று வருடம் ஆகி விட்டதே!  என்னையும் அழைத்து கொள் என்று கேட்க தான் போய் இருந்தேன்.

திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டது  போல எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எந்த பிறப்பு எடுத்தாலும்  இறைவனை மறவா மனம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். (மீண்டும் பிறவி வேண்டாம் என்று மனது வேண்டி கொள்கிறது.) எல்லா கடமைகளும் முடிந்து விட்டது அழைத்து கொள் இறைவா! என்றும் வாய் சொன்னது.
அவருக்கு தெரியும் நம்மை எப்போது அழைப்பது என்று இருந்தாலும் அவரிடம்  ஒரு கோரிக்கை.



கோயிலுகுள் நுழைந்தவுடன் வலபக்கம் பிள்ளையார் சன்னதி, இடபக்கம் முருகன் சன்னதி இருக்கிறது. பிள்ளையார் சன்னதி சுற்று பிரகாரத்தில் இந்த சிலை இருக்கிறது. முதலில் பிரம்மா, காரைக்கால் அம்மையார் தான் விரும்பி கேட்ட"பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா ! உன்னையென்றும் மறவாமை வேன்டும் , இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி , அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க" என்ற காட்சியை விளக்கும் சிற்பம்.

காரைக்கால் அம்மையார் வேண்டுதலை நிறைவேற்றியவர் என் வேண்டுகோளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன்,  சில தேவார பாடல்கள், மற்றும் திருப்புகழ் பாடல் கேட்டு விட்டு கோயிலை விட்டு கிளம்ப மனது இல்லாமல்  வந்தேன்.

குருக்கள் பாலஸ்தாபனம் என்றால் என்ன என்று பேசி கொண்டு இருந்தார் நான் கோவிலை விட்டு வெளி வரும் போது. 

 
விழா காலங்களில்  தெய்வ திருமணங்கள், கச்சேரிகள் நடக்கும் அரங்கத்தின் மேல் பகுதியில் உள்ள மீனாட்சி திருமண காட்சி சிற்பங்கள்
முருகன் சன்னதி


ஓரத்தில் தெரியும் மரம் வில்வ மரம் தல விருட்சம் , மிகவும் விஷேமான வில்வ மரம் அதை முன்பு படம் எடுத்து இருந்தேன், தேடினேன் கிடைக்கவில்லை, கிடைத்தால் சேர்க்கிறேன். 
வெளிப்பிரகாரத்தில்  உள்ள அரசமரம்


நாகர்கள், பிள்ளையார், லிங்கோத்பவர், சிறிய சிவலிங்கம் சிறிய நந்தி இருக்கிறார்கள்.

பக்கத்தில் கோசாலை, கோயில் திருக்குளம், மற்றும் அன்னதான கூடம்  இருக்கிறது.
திருக்குளம் அருகில் நவக்கிரக சன்னதி  பெரிதாக நன்றாக இருக்கும். விபூதி பிள்ளையார் இருக்கிறார். எல்லோரும் விபூதிகள் வாங்கி வந்து அவர் மேல் அபிஷேகம் செய்து வேண்டி கொள்வார்கள். மீனாட்சி அம்மன்  கோயிலில் இருப்பார் பார்த்து இருப்பீர்கள்.

பைரவர் தனி சன்னதியில் இருக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்தவர். தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நன்றாக நடக்கும்.

வளையல் வாங்கலையோ வளையல் என்று சிவபெருமான் வளையல் விற்ற திருவிளையாடல் காட்சியாக நடத்திக்காட்டபடும்  விழாவை நாங்கள் பார்த்தோம்.  பார்த்து வந்து  போட்ட பதிவு 2016 ல்.

படங்கள் எடுக்க முடியவில்லை. மேலும் தலவரலாறு, விழா சிறப்புகள்   விவரங்கள் படங்கள் பார்க்க வேண்டுமென்றால் புது யுகத்தில் "ஆலய வலம்" பகுதியில் வந்த அருமையான  காணொளி . நேரம் இருக்கும் போது பாருங்கள். மூலவர் தரிசனம் செய்யலாம். திருக்குளம் மற்றும் அனைத்து சுவாமிகளையும் பார்க்கலாம். கோவில் முழுவதையும் சுற்றி காட்டுகிறார்கள்.https://www.youtube.com/watch?v=BTNirf1bsQ4


வேண்டுவோர்க்கு வேண்டுவதை அருளும் நம்பிக்கை நாயகர் இவர் என்று அழகாய் சொல்கிறார் கோவிலை பற்றி சொல்பவர் அவசியம் கேளுங்கள், பாருங்கள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

35 கருத்துகள்:

  1. அம்மா, தங்களின் பதிவில் மனதை உருக வைக்கும் வரிகள் பல... வாழ்வின் புரிதல் நனறாக புரிந்து வைத்துக் கொண்டீர்கள் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

      //அம்மா, தங்களின் பதிவில் மனதை உருக வைக்கும் வரிகள் பல... வாழ்வின் புரிதல் நனறாக புரிந்து வைத்துக் கொண்டீர்கள் அம்மா...//

      வாழ்வின் புரிதல் இருந்தாலும் சில நேரங்களில் ஏதாவது புலம்புகிறது மனம்.

      நீங்கள் புரிந்து கொண்டு கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. வணக்கம் சகோ
    பதிவு மனதை கனக்க வைத்தது.

    தங்களது பழைய நினைவுகளை மீட்டி இருக்கிறது.

    படங்கள் வழக்கம் போல அழகு. சிறப்பான காணொளி.

    வாழ்க வளத்துடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //பதிவு மனதை கனக்க வைத்தது.

      தங்களது பழைய நினைவுகளை மீட்டி இருக்கிறது.//

      ஆமாம், பழைய நினைவுகள் அந்த கோவிலுக்கு போனதும் வந்தது.மாயவரத்தில் இருக்கும் போதும் விடுமுறைக்கு மதுரை வந்தால் இந்த கோவில் போவோம். அங்கு புளியோதரை பிரசாதம் வாங்கி சாப்பிடுவார்கள் சார். எனக்கு அப்பம் வாங்கி தருவார்கள்.

      //படங்கள் வழக்கம் போல அழகு. சிறப்பான காணொளி.

      வாழ்க வளத்துடன்...//

      படங்களை, காணொளியை பற்றி கருத்து சொன்னதற்கும் வாழ்த்துக்கும் நன்றி.



      நீக்கு
  3. மதுரையில் இருந்தபோது இந்த கோவிலுக்கு சென்று வந்திருக்கிறேன்.  கோவில் அமைப்பு சரியாக நினைவில் இல்லை.  அதை நீங்கள் பகிர்ந்துள்ள படங்கள் நினைவூட்டின.  ஸாரின் மாலையிட்ட படம் பார்த்ததும் மனம் கனத்துப் போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //மதுரையில் இருந்தபோது இந்த கோவிலுக்கு சென்று வந்திருக்கிறேன். கோவில் அமைப்பு சரியாக நினைவில் இல்லை. அதை நீங்கள் பகிர்ந்துள்ள படங்கள் நினைவூட்டின.//

      நினைவுக்கு வந்து விட்டதா? காணொளி பாருங்கள் கோவில் முழுவதையும் சுற்றி காட்டுகிறார்கள். மூலவர்களையும் தரிசிக்கலாம்.
      உள்ளே எடுக்க அனுமதி இல்லை.
      கோவிலுக்கு வெளியே படம் சரியாக எடுக்க முடியாமல் கொட்டகை போட்டு இருப்பதால் எடுக்க முடிவது இல்லை. இரண்டு வாசல் இருக்கிறது கோவிலுக்கு. அந்த பக்க வாசலை அடுத்த தடவை போனால் படம் எடுக்க வேண்டும்.

      //ஸாரின் மாலையிட்ட படம் பார்த்ததும் மனம் கனத்துப் போனது.//

      வருத்தபட வைத்து விட்டேனா ? வேறு படம் போடுகிறேன்.

      நீக்கு
  4. வீட்டிலிருந்து கோவிலுக்கு எப்படி சென்று வந்தீர்கள்?  ஆட்டோவா?  உடன் யாராவது வந்தார்களா?  இறைவனை நின்று தரிசனம் செய்ய முடிந்தது பேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வீட்டிலிருந்து கோவிலுக்கு எப்படி சென்று வந்தீர்கள்? ஆட்டோவா? உடன் யாராவது வந்தார்களா//

      சார் காரில் தான் கோவிலுக்கு போனேன். தெரிந்த டிரைவர் உடன் வந்தார். வியாழக்கிழமை நினைவு தினம் அதனால் தம்பி, தங்கையை காலை நேரம் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நான் மட்டும் போய் வந்து விட்டேன். அலுவலகம், பேரன்களை பள்ளி கூடம் அனுப்புவது என்று பிஸியாக இருப்பார்கள். மதியம் தங்கை, தம்பி மனைவி வந்தார்கள். இன்னொரு தங்கை அத்தானுக்கு பிடித்த ஸ்வீட் என்று இன்னொரு தங்கையிடம் வாங்கி கொடுத்து விட்டு இருந்தாள்.
      நினைவுகளை பகிர்ந்து பேசி கொண்டு இருந்து விட்டு மாலை போனார்கள்.

      //இறைவனை நின்று தரிசனம் செய்ய முடிந்தது பேறு.//

      இப்போதைய காலகட்டத்தில் சின்ன கோவிலில் கூட கூட்டம். எல்லோரும் தரிசனம் செய்ய வேண்டுமென்பாதால் நம்மை போக சொல்வார்கள். அன்று காலை நேரம் கூட்டம் இல்லை. அதனால் இந்த பேறு கிடைத்தது. கடவுளுக்கு நன்றி சொல்லி திரும்பினேன்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.



      நீக்கு
  5. உங்கள் கணவரின் ஆண்டு நினைவு நாளில் நீங்கள் ,வணங்கச் சென்ற கோவில் நாங்களும் கண்டு வணங்கினோம்.

    மனதை நெகிழவைத்த பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //உங்கள் கணவரின் ஆண்டு நினைவு நாளில் நீங்கள் ,வணங்கச் சென்ற கோவில் நாங்களும் கண்டு வணங்கினோம்.

      மனதை நெகிழவைத்த பகிர்வு.//

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  6. மாமாவின் படம் பார்த்து நெகிழ்ச்சி. உங்க மகனுக்கு மாமாவின் ஜாடையும் இருப்பது போன்று தோன்றும்.

    பூலோகக் கைலாயம்- இக்கோயில் போனதில்லை மதுரை மீனாட்சியம்மன் கோயில் போயிருந்தாலும்.

    ஆமாம் அக்கா, ஒரே நாளில் இத்தனை கீரைக்கட்டுகளையும் எப்படிச் சாப்பிடும்? ஹாஹாஹா அதானே ஆளை விடுங்க சாமின்னு இதை வாசித்ததும் சிரித்துவிட்டேன் கோமதிக்கா. அதுங்களுக்குப் போரடிச்சிருக்கும்.!!! பாவம். இப்படி ஒவ்வொன்றுக்கும் கொடுத்தா நலல்துன்னு சொல்லி சொல்லி...பசிக்காத மாடுக்கும் கொடுப்பது எல்லாம்...கீரையும் வீணாகிறது. மாடுகளுக்கும் நல்லதில்லை அதிகமானால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //மாமாவின் படம் பார்த்து நெகிழ்ச்சி. உங்க மகனுக்கு மாமாவின் ஜாடையும் இருப்பது போன்று தோன்றும்.//

      இருவர் ஜாடையும் இருக்கும் மகனிடம்.
      அடுத்த முறை மதுரை வந்தால் போகலாம் கீதா. பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவில்.

      மாடுகளுக்கும் நல்லதில்லை அதிகமானால்.//

      ஆமாம், அதற்கு உணவாக எத்தனை இருக்கு அதை வாங்கி கொடுத்தால் இன்னொரு நாள் அதை அவர்கள் கொடுப்பார்கள். தங்கள் கையால் அன்று கொடுக்க வேண்டும் என்பதற்காக மக்கள் அதை துன்ப படுத்துகிறார்கள். பசிக்காத போது அது எப்படி சாப்பிடும்.

      நீக்கு
  7. ஜூரதேவர் தன் மனைவி ஜூரசக்தியிடன் //

    இவங்க யார் கோமதிக்கா?

    மாங்கல்ய வரப்பிரசாதினி கல்யாணம் செய்ய பார்த்துக் கொண்டிருக்கும் நம் நட்புகளின் குழந்தைகளுக்கு நல்லது அருளிடட்டும்.

    பெண்கள் நாதஸ்வரம் வாசிப்பது பெரிய விஷயம். மூச்சுப்பிடித்து வாசிக்க வேண்டுமே! கோயிலில் வாசிக்கவைப்பது நல்ல விஷயம் கோமதிக்கா.

    ஹையோ அக்கா நானும் தான் கோயிலில் படங்கள் எடுக்கக் கூடாதுன்னு போட்டிருப்பாங்க ஆனா நிறையப்பேர் எடுக்கறாங்க நாமும் எடுப்போமேன்னு மொபைலை எடுத்தாலும் கூடவே பயம் வேறு வந்துவிடும். கூடவே அங்கு போட்டிருப்பதை நான் மதிக்க வேண்டும் இல்லையான்னு தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜூரதேவர் தன் மனைவி ஜூரசக்தியிடன் //

      இவங்க யார் கோமதிக்கா?//

      சிவன் கோவிலில்களில் பார்த்து இருப்பீர்கள்.
      சிவனின் நெற்றிகண் வியர்வையிலிருந்து உருவானவர் என்பார்கள்.அவர் கோபத்தை தணிக்க மிள்கை பூசி கோபத்தை தணித்தனர்.

      அதனல் காய்ச்சல் வந்தால் இந்த இறைவனுக்கு மிளகு ரசம் சுட்ட அப்பளம் வைத்து வணங்கி அதை காய்ச்சல் வந்தவர்களுக்கு கொடுப்பார்கள் காய்ச்சல் சரியாகும் என்ற நம்பிக்கை. என் மகனுக்கு முன்பு அடிக்கடி காய்ச்சல் வந்த போது ஜூர தேவருக்கு மாயவரத்தில் புனூகீஸ்வரார் கோவிலில் உள்ள ஜூர தேவருக்கு படைத்து கொடுத்து இருக்கிறோம். பெருமாலும் ஜூரதேவர் மட்டுமே இருப்பார் இங்கு அவர் மனைவியும் இருப்பது மேலும் சிறப்பு.
      ஜூரதேவருக்கு மூன்று கால்கள் இருக்கும். நம் உடல் தளர்ந்து போனால் நம்மால் நடக்க முடியாது காய்ச்சல் வந்தால் உடல் தளர்ந்து போகும் இவரின் மூன்றாவது காலை நினைத்து வணங்கி கொண்டால் நலமாகும் உடல் என்ற நம்பிக்கை உள்ளது மக்களிடம்.

      //மாங்கல்ய வரப்பிரசாதினி கல்யாணம் செய்ய பார்த்துக் கொண்டிருக்கும் நம் நட்புகளின் குழந்தைகளுக்கு நல்லது அருளிடட்டும்.//

      நானும் அப்படித்தான் வேண்டிக் கொண்டேன் கீதா.

      //பெண்கள் நாதஸ்வரம் வாசிப்பது பெரிய விஷயம். மூச்சுப்பிடித்து வாசிக்க வேண்டுமே! கோயிலில் வாசிக்கவைப்பது நல்ல விஷயம் கோமதிக்கா.//

      மதுரையில் நிறைய பெண்கள் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள் கீதா சாமி ஊர்வலத்தின் முன்னே வாசித்து கொண்டு நடந்து போகிறார்கள்.

      //ஹையோ அக்கா நானும் தான் கோயிலில் படங்கள் எடுக்கக் கூடாதுன்னு போட்டிருப்பாங்க ஆனா நிறையப்பேர் எடுக்கறாங்க நாமும் எடுப்போமேன்னு மொபைலை எடுத்தாலும் கூடவே பயம் வேறு வந்துவிடும். கூடவே அங்கு போட்டிருப்பதை நான் மதிக்க வேண்டும் இல்லையான்னு தோன்றும்.//

      ஆமாம், ஆனால் நான் எடுக்கும் போது தடுத்தால் எடுக்க வேண்டாம் என்று தடுத்தால் எடுக்க வேண்டாம் என்று நினைத்து எடுத்தேன்.
      யாரும் தடுக்கவில்லை. கோவிலுக்கு உள்ளே எடுக்கவில்லை நான்.

      நீக்கு
  8. ஆனா படங்கள் எடுக்க முடிஞ்சா எடுத்துவிடுவேன் பயந்துகொண்டே...

    தேவாரப்பாடலை ரசித்து வாசித்தேன் கோமதிக்கா.

    என்னையும் அழைத்து கொள் என்று கேட்க தான் போய் இருந்தேன்.//

    அக்கா உங்கள் மனம் புரிகிறது. ஆனால் இப்படிக் கேட்காதீங்க அக்கா. நீங்கள் அப்படி விரும்பலாம். ஆனால் அந்த சக்திக்குத் தெரியும் நாம் எவ்வளவு நாள் இங்கிருக்க வேண்டும் என்பது. இல்லையா. எல்லாத்துக்கும் ஒரு கணக்கு உண்டே. உங்கள் பேரன் மகன், மகளுக்கு அவங்க குழந்தைகளுக்கு கோமதிப்பாட்டி வேண்டும். அவங்க எல்லார் மனசும் பார்க்கணும் இல்லையா?

    பாடல் மிக அருமை சோகமான, கசிந்துருக்கும் ராகம்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மாமாவின் தினம், உங்களின் பழைய நினைவுகளைக் கொண்டுவந்திருக்கும். புரிகிறது கோமதிக்கா.

    கோயிலும் அதன் படங்களும் விவரங்களும் சூப்பர் கோமதிக்கா.

    தேவாரப்பாடல் ரொம்பப் பிடித்தது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமாவின் தினம், உங்களின் பழைய நினைவுகளைக் கொண்டுவந்திருக்கும். புரிகிறது கோமதிக்கா.//

      ஆமாம்.

      //கோயிலும் அதன் படங்களும் விவரங்களும் சூப்பர் கோமதிக்கா.//

      கோயில் காணொளி பாருங்கள் அடுத்ததடவை மதுரை வந்தால் பார்க்க தோன்றும்.

      //தேவாரப்பாடல் ரொம்பப் பிடித்தது//

      எல்லோருக்கும் பிடிக்கும் இந்த பாடல் கீதா. உங்களுக்கும் பிடித்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  10. திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டது போல எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எந்த பிறப்பு எடுத்தாலும் இறைவனை மறவா மனம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.//

    ஆமா அக்கா...நல்ல பிரார்த்தனை ...நீங்க ப்ராக்கெட்டுக்குள்ள போட்டிருக்கற மாதிரி ஒரு பாடல் பாபநாசம் சிவன் எழுதிய பாடல் ஒன்று உண்டு அருமையான பாடல்

    பிறவா வரம் தாரும் பெம்மானே பிறவா வரம் தாரும்.

    //அவருக்கு தெரியும் நம்மை எப்போது அழைப்பது என்று இருந்தாலும் அவரிடம் ஒரு கோரிக்கை.//

    இதைத்தான் மேலே சொல்லிருக்கிறேன் கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா அக்கா...நல்ல பிரார்த்தனை ...நீங்க ப்ராக்கெட்டுக்குள்ள போட்டிருக்கற மாதிரி ஒரு பாடல் பாபநாசம் சிவன் எழுதிய பாடல் ஒன்று உண்டு அருமையான பாடல்

      பிறவா வரம் தாரும் பெம்மானே பிறவா வரம் தாரும்.//

      அருமையான பாடல். நந்தனார் படத்தில் நந்தனார் பாடுவது போன்ற பாடல். தண்டபாணி தேசிகர் குரல் மிக அருமையாக இருக்கும்.
      அது போல "நான் ஒரு விளையாட்டு பொம்மையா" என்ற பாபநாச சிவன் எழுதிய பாடல் மகாராஜபுர சந்தானம் அவர்கள் பாடியதும் பிடிக்கும். கஷ்டம் வரும் போது அந்த பாடல் நினைவுக்கு வரும்.
      படைத்தவனுக்கு எப்போது அழைப்பது என்றும் தெரியும்.




      நீக்கு
  11. பிறவா வரம் தாரும் பிறந்தாலும் உனை மறவா வரம் தாரும்னுதான் அந்தப் பாடலும் வரும் நந்தனார் படமோ? பாபநாசம் சிவன் அவர்கள் நடித்து அவரே எழுதிய தண்டபாணி தேசிகர் பாடிய பாடலோ? நெட்டில் பார்க்க வேண்டும். சரியாக நினைவில்லை

    பல்லவி

    பிறவா வரம் தாரும் பெம்மானே (பிறவா)

    அனுபல்லவி

    பிறவா வரம் தாரும் பிறந்தாலுன் திருவடி
    மறவா வரம் தாரும் மானில மேலினிப் (பிறவா)

    சரணம்

    பார்வதி நேயா பக்த ஸஹாயா
    பந்தம் அறாதா வந்தருள் தாதா
    முந்தை வினை கோர சிந்தாகுலம் தீர
    எந்தாயுன் பாதார விந்தம் துணை சேரப் (பிறவா)

    எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறவா வரம் தாரும் பிறந்தாலும் உனை மறவா வரம் தாரும்னுதான் அந்தப் பாடலும் வரும் நந்தனார் படமோ? பாபநாசம் சிவன் அவர்கள் நடித்து அவரே எழுதிய தண்டபாணி தேசிகர் பாடிய பாடலோ? நெட்டில் பார்க்க வேண்டும். சரியாக நினைவில்லை//

      மேலே உள்ள கருத்துக்கு பதில் கொடுத்து இருக்கிறேன் பாருங்கள் கீதா.

      பாடல் வரிகளும், அவர் பாடிய விதமும் மிக ருமையாக இருக்கும்.

      எனக்கும் பிடித்த பாடல்.

      நீக்கு
    2. எம். எம். தண்டபாணி தேசிகர், நந்தனாராக நடித்தார்,பாடினார் அதில் நிறைய பாடல்கள் உண்டு. 1942 ல் வந்த படம். மிகவும் பழைய படம் ஆனால் நெட்டில் இருக்கிறது பார்க்கலாம்.

      நீக்கு
  12. //தேவாரப்பாடலை ரசித்து வாசித்தேன் கோமதிக்கா.//

    என் மகன் இந்த பாடலை உருகி பாடுவான்.


    //என்னையும் அழைத்து கொள் என்று கேட்க தான் போய் இருந்தேன்.//

    ஆமாம், யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் எடுத்து கொள்ள வேண்டும் இறைவன் அதுதான் வயதானவர்கள் விரும்பும் வரம்.

    //அக்கா உங்கள் மனம் புரிகிறது. ஆனால் இப்படிக் கேட்காதீங்க அக்கா. நீங்கள் அப்படி விரும்பலாம். ஆனால் அந்த சக்திக்குத் தெரியும் நாம் எவ்வளவு நாள் இங்கிருக்க வேண்டும் என்பது. இல்லையா. எல்லாத்துக்கும் ஒரு கணக்கு உண்டே.//

    ஆமாம், அதையும் நான் சொல்லி இருக்கிறேன் கீதா.

    அவருக்கு தெரியும் நம்மை எப்போது அழைப்பது என்று இருந்தாலும் அவரிடம் ஒரு கோரிக்கை.


    //உங்கள் பேரன் மகன், மகளுக்கு அவங்க குழந்தைகளுக்கு கோமதிப்பாட்டி வேண்டும். அவங்க எல்லார் மனசும் பார்க்கணும் இல்லையா?//

    அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள் எங்களுக்கு நீங்கள் வேண்டுமென்று. சில நேரம் மனம் இப்படி புலம்பும் கீதா.

    //பாடல் மிக அருமை சோகமான, கசிந்துருக்கும் ராகம்//

    ஆமாம். நிறைய தேவாரபாடல் மனம் உருகி போய் விடும் கேட்டால்.

    கோவில் காணொளி பாருங்கள் அருமையாக இருக்கும்.

    உங்கள் கருத்துக்களூக்கு நன்றி கீதா.


    பதிலளிநீக்கு
  13. சாருக்கு எனது நினைவஞ்சலிகள்.

    உண்மைதான். பசித்திருக்கும் பசுக்களைத் தேடிக் கொடுக்கலாம்.

    கோயில் பற்றிய விவரங்களும் படங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      சாருக்கு எனது நினைவஞ்சலிகள்.//

      நன்றி.


      உண்மைதான். பசித்திருக்கும் பசுக்களைத் தேடிக் கொடுக்கலாம்.

      கோயில் பற்றிய விவரங்களும் படங்களும் நன்று.//

      உங்கள் கருத்துக்க்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. ஸாருடைய நினைவுநாளில் வணங்கச் சென்ற கோயிலுக்கு நான் சென்றிருப்பேன் என்று நினைக்கிறேன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றுவிட்டு போயிருந்திருப்பேன். ஆனால் பல வருடங்கள் ஆகியதால் நினைவில்லை

    கோயில் படங்களும் விவரங்களும் மிக நன்று. ஸாரின் படம் பார்த்து மனம் நெகிழ்ச்சி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணகம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றுவிட்டு போயிருந்திருப்பேன். ஆனால் பல வருடங்கள் ஆகியதால் நினைவில்லை//

      காணொளி பார்த்தீர்கள் என்றால் நினைவுக்கு வந்து விடும்.

      //கோயில் படங்களும் விவரங்களும் மிக நன்று.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. மிக அருமையான பதிவு.

    தலைப்பை இம்மை என்று மாற்றிவிடுவங்கள். இன்மை அல்ல.

    பதிவு நெகிழ வைக்கிறது. இந்தக் கோவிலுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //தலைப்பை இம்மை என்று மாற்றிவிடுவங்கள். இன்மை அல்ல.//

      தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி நன்றி தமிழன்.
      நான் எத்தனை தடவை பார்த்தேன், என் கண்ணில் படவில்லையே!
      நீங்கள் சொன்னது மகிழ்ச்சி, நன்றி.

      //பதிவு நெகிழ வைக்கிறது. இந்தக் கோவிலுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும்.//

      கூடலழகர் கோவில் அருகில் தான். வாய்ப்பு கிடைக்கும் போது தரிசனம் செய்யலாம்.

      நீக்கு
  16. அகத்திக் கீரை, பசு மாடு.... உண்மைதான். எல்லா நாட்களிலும் பக்தர்கள் காசு கொடுத்து பழமோ இல்லை கீரைகளோ இல்லை வேறு உணவோ வாங்கிக் கொடுக்கும்படியாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அகத்திக் கீரை, பசு மாடு.... உண்மைதான். எல்லா நாட்களிலும் பக்தர்கள் காசு கொடுத்து பழமோ இல்லை கீரைகளோ இல்லை வேறு உணவோ வாங்கிக் கொடுக்கும்படியாக இருக்கலாம்.//

      ஆமாம், எல்லா நாளும் முடிந்த போது ஏதாவது ஒன்று வாங்கி கொடுக்கலாம்.

      நீக்கு
  17. புழுவாய்ப் பிறக்கினும்... சுன்ன வயதில் படித்த கற்றுக்கொண்ட பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புழுவாய்ப் பிறக்கினும்... சுன்ன வயதில் படித்த கற்றுக்கொண்ட பாடல்.//

      ஆமாம் மனபாடப் பகுதியில் தமிழ் பாடத்தில் முன்பு தேவாரம், திருவாசகம், திருவருட்பா, கம்பராமாயணம், நாலயிரதிவ்யபிரபந்த பாடல்கள் இடம்பெற்றன.

      பழைய பதிவையும் படித்து கருத்துகள் சொன்னதற்கு நன்றி தமிழன்.

      நீக்கு
  18. மனதை உருக வைக்கின்ற பதிவு.. நானும் இக்கோயிலைக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.. இன்னும் சென்றதில்லை..

    இறை சிந்தனையுடன் இருங்கள்.. எல்லாம் நன்மையாகவே நடக்கும்...

    இந்தப் பதிவை எப்படித் தவற விட்டேன் என்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //மனதை உருக வைக்கின்ற பதிவு.. நானும் இக்கோயிலைக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.. இன்னும் சென்றதில்லை..//

      வாய்ப்பு கிடைக்கும் போது தரிசனம் செய்யுங்கள். பலவித சிறப்புகள் கொண்ட கோவில்.

      //இறை சிந்தனையுடன் இருங்கள்.. எல்லாம் நன்மையாகவே நடக்கும்...//

      இறை சிந்தனை இல்லாத நாள் ஏது? உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

      //இந்தப் பதிவை எப்படித் தவற விட்டேன் என்று தெரியவில்லை..//

      பரவாயில்லை. இப்போது படித்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.


      நீக்கு