ஞாயிறு, 24 டிசம்பர், 2023

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!





மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் புனிதர் வடிவம் பெறுகிறார்

ஏழைத் தொழுவில் வந்த இறைமகனே

       தாலேலோ!

- கண்ணதாசன்.


மார்கழி மாதம்   சிறப்பான மாதம். பக்தியுடன் இறைவனை மட்டுமே நினைந்து  போற்றி துதிக்கும் மாதம். 
இறைவனை பாமாலை, பூமாலையுடன் மாதம் முழுவதும் துதிக்கும் மாதம்.  இறைவன் நினைவாக இருப்பதே இந்த மாதத்தின் சிறப்பு. 


 பெத்லகேமில்   இயேசுவின் பிறப்பும் மார்கழி மாதம் தான். கிறித்துவ அன்பர்கள் டிசம்பர் 25ம் தேதி அன்று இயேசுவின் பிறப்பை மகிழ்வுடன் கொண்டாடும் மாதம்.

இந்த பதிவில் கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துகளும் , அரிசோனாவில் மகன் வீட்டுக்கு வந்து இருந்த   கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள்" பாடிய அன்பர்கள் படங்களும் இடம்பெறுகிறது.

படம்- கூகூள்,  கூகுளுக்கு நன்றி.

நாம் மார்கழி மாதம் அதிகாலை நேரம் தெருக்களில் இறைவனை நினைந்து பாடி இறைவனை போற்றி பஜனை செய்வது போல கிறித்துவர்களும் மார்கழி மாதம்   இரவு முதல் காலை வரை    வீதிகளிலும் , அன்பர்கள் வீடுகளிலும் ஏசு பாடல்களை பாடுவார்கள். கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள் மிகவும் இனிமையாக இருக்கும் கேட்க.

 ஏசு பிறப்பை சொல்லும் காட்சிகள் அமைத்த வண்டிகளில் பாடி கொண்டு வருவார்கள் . வண்டி விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருக்கும், வண்டியில் வரும் கிறித்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர் குழந்தைகளுக்கு மிட்டாய்களை , பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்வார்.

பஜனை பாடி வருபவர்கள் வீட்டு முன் அழகான கோலம் போட்டு  விளக்கு வைத்து  இருப்பவர்கள் வீட்டு முன் சிறிது நேரம் நின்று பாடி  போவார்கள். அது போல  இவர்களும் 

வாசலில்  ஸ்டார் தொங்க விட்டு வண்ண விளக்குகள் அமைத்து இருக்கும் வீட்டின் முன் சிறிது நேரம் பாடி போவார்கள்.  ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்மஸ் வாழ்த்து, புத்தாண்டு வாழ்த்தை பரிமாறி கொள்வார்கள்.

 
மார்கழி சிறப்புகள் என்ற பதிவில் மார்கழி மாதத்தின் சிறப்புகள் அந்த மாதம் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் பதிவு செய்து இருக்கிறேன்.


பாட வருபவர்களை வரவேற்க வீட்டு முன்  பேரன் எழுதி, வரைந்து  வைத்து இருக்கும் பலகை.


வாசலில் பனி மனிதன் மற்றும் அலங்கார  விளக்குகள்.




 மகன் வீட்டுக்கு வந்து இருந்த கிறித்துவ நண்பர்கள்  "கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள்" பாடும் அன்பர்கள்.

 இறைவன் புகழ் பாடும் குழுவை  அமைத்து பாடும் அன்பர் நம் குடும்ப நண்பர். தமிழ்ச்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர், தமிழ் பள்ளியில் ஆசிரியராக தன்னார்வ தொண்டு செய்பவர்.  தான் சார்ந்து இருக்கும் கத்தோலிக்க திருச்சபையில் தொண்டு செய்பவர்.  தமிழ்ச்சங்கம், தமிழ்பள்ளியில் நடக்கும் விழாக்களிலும்  அவரின் தொண்டு சிறப்பாக இருக்கும்.  

 நவராத்திரிக்கு  மனைவியுடன்    வந்து  பாடல்கள் பாடி நம்மை வாழ்த்தி செல்வார் வருடா வருடம்.


நேரமும் விருப்பமும் இருந்தால் கேட்டுப்பாருங்கள் இனிமையாக கிறிஸ்மஸ் மற்றும்  புது வருட  வாழ்த்து சொல்லி பாடுகிறார்கள்

அருமையான இரண்டு  பாடல்களை  பாடினார்கள்,.


சாண்டா கிளாஸ் பரிசுகள் கொடுத்து  போனார். 

நானும், மருமகளின் அம்மாவும் நேரலையில் பார்த்தோம். வந்து இருந்தவர்கள் எங்களுடன் மகிழ்ச்சியாக உரையாடி வாழ்த்துக்களை சொன்னார்கள். நாங்களும் அவர்களுக்கு கிறிஸ்மஸ் , புத்தாண்டு வாழ்த்து சொன்னோம். 
மகன் படித்த பள்ளியில் சப்போஸ் கிறிஸ்மஸ் விழா வருடா வருடம் நடக்கும், அதில்  மகன் கிறித்துவின் பிறப்பை சொல்லும் பைபிள் வசனத்தை சொல்லுபவனாக நடித்தான்.
அதை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

//நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்
அவர் நாமம் அதிசயமானவர்
ஆலோசனைக் கர்த்தா
வல்லமையுள்ள தேவன்
நித்திய பிதா
சமாதான்ப்பிரபு என்னப்படும்.//



எங்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்கள் அனைவரும். நாங்கள் பின்னால் டிவி திரையில் தெரிகிறோம்.
அன்று நல்ல பொழுதாக போனது. இறைவனுக்கு நன்றி.

படத்தில் உள்ளது போல குடும்பத்தினர் அனைவரும் பண்டிகையில் வேலைகளை கலந்து செய்யும் போது  தான்  மகிழ்ச்சி ஏற்படும். பண்டிகை வேலைகளை ஒருவரே செய்யும் போது அலுப்பும், சலிப்பும் ஏற்படும்.  அரிசோனாவில் நாங்கள் இரண்டு முறை கிறிஸ்மஸ் சமயம் இருந்தோம்.  மகன் குடும்பம்,  ஊரிலிருந்து வந்து இருந்த மருமகளின் தோழி குடும்பத்துடன்  கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரித்தோம். முன்பு பதிவு செய்து இருக்கிறேன்.

இந்த முறை விடுமுறைக்கு வந்து இருந்த  மருமகளின் அக்கா குடும்பத்தினரும் மகன் மருமகள், பேரன் எல்லோரும் சேர்ந்து அமைத்த கிறிஸ்மஸ் அலங்கராங்கள். பேரன் கிறிஸ்மஸ் மரத்துக்கு கீழே  அவனுக்கு பரிசாக வந்த அழகிய ரயிலை சுற்றவிட்டு இருந்தான்.



மகன் 10 வது படிக்கும் போது வரைந்த "நல்ல மேய்பர்" படம். 
பள்ளியில் பரிசாக பெற்ற " பைபிள் கதைகள் 100"  என்ற புத்தக முன் அட்டையில் உள்ளதைப்பார்த்து வரைந்தது.

"நானே நல்ல மேய்ப்பன்" என்று இயேசுகிறிஸ்து கூறி உள்ளதை குறிக்கும் படம்.

எங்கள் விட்டு கொலுவில் முன்பு  இடம் பெற்ற படம். பத்திரமாக வைத்து இருந்து  மகனிடம் கொடுத்து விட்டேன்.

மகன் எல்.கே.ஜி முதல் 5 வரை கிறிஸ்தவ பள்ளியில் படித்தான். நானும் சிறு வயதில் கிறிஸ்தவபள்ளியில் படித்தேன். மகளும் கிறிஸ்தவ பள்ளியில் படித்து இருக்கிறாள்.


மருமகள், மகன் , பேரன்  எல்லோரும் கிறிஸ்மஸ் மரம்  , மற்றும் ஏசு பிறப்பை சொல்லும் குடில் அமைத்து வீட்டை வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து இருந்தார்கள். 


வந்த பெரியவர்கள், குழந்தைகளுக்கு சாண்டாகிளாஸ் கொடுப்பது போல சிறிய பரிசுப்பொருட்கள்.

மருமகள் செய்த கிறிஸ்மஸ் குக்கிஸ்




மருமகள் செய்த பிளம் கேக்

                                                   
பிளம் கேக் துண்டுகளாக செய்து வைத்து இருக்கிறார்கள்.




                                                    

வந்தவர்களுக்கு கொடுக்க மருமகள்    கேக், மற்றும் குக்கிஸ் செய்து இருந்தார். பேரனும் மகனும் உதவினார்கள்.

கிறிஸ்துமஸ் என்றதும் நமக்கு கிறிஸ்மஸ் தாத்தா நினைவுக்கு வந்து விடுவார். கிறிஸ்மஸ் அன்று கிறிஸ்மஸ் தாத்தா பரிசு பொருளுடன் வரும் வண்ணக் கோலம் போட்டுவிடுவேன்  வாசலில்.

 



இந்த ஆண்டு பேரன் இரண்டு கிறிஸ்மஸ் தாத்தாவைப்பார்த்து வந்து இருக்கிறான். 

பேரன் அனுப்பிய படம்.



எனக்கு பிடித்த பாடல் வாணி ஜெயராம் அவர்கள் பாடியது. கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்.


இந்த பாடலை யூடியூப்பில் கொடுத்தவருக்கு நன்றி.

உங்கள் எல்லோருக்கும் பிடித்த பாடல்தான் கேட்டுப்பாருங்கள்.
 
நம்  வலைத்தள நட்பு  ஏஞ்சலை நினைத்து கொள்கிறேன்.ஏஞ்சலுக்கு கிறிஸ்மஸ்  வாழ்த்துகள்.


அதிரா, பிரியசகி எல்லோரும் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவார்கள் அவர்களுக்கும் வாழ்த்துகள். 

அனைத்து அன்பர்களுக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

33 கருத்துகள்:

  1. ரொம்ப அருமையான பதிவு.

    மகனின் வீட்டுக்கு கிறிஸ்த்மஸ் கரோல் பாடவந்தவர்கள் பற்றிய விளக்கத்தை ரசித்தேன்.

    காணொளி கேட்டேன். தமிழில் பேசி, பாடுகிறார்கள். இனிமையாக இருந்தது.

    நீங்களும் உங்கள் சம்பந்தியும், இணையம் மூலம் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //ரொம்ப அருமையான பதிவு.

      மகனின் வீட்டுக்கு கிறிஸ்த்மஸ் கரோல் பாடவந்தவர்கள் பற்றிய விளக்கத்தை ரசித்தேன்.//

      நன்றி நெல்லை.

      //காணொளி கேட்டேன். தமிழில் பேசி, பாடுகிறார்கள். இனிமையாக இருந்தது.//
      ஆமாம், இனிமையாக பாடினார்கள். அவர்கள் தனி தனியாக பாடியும் கேட்டு இருக்கிறேன். நன்றாக பாடுவார்கள்.

      //நீங்களும் உங்கள் சம்பந்தியும், இணையம் மூலம் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அருமை//

      அவர்கள் எல்லோரும் இரு அம்மாக்களுடன் எடுத்து கொள்ள வேண்டும் என்று விரும்பி எடுத்த கொண்ட அன்பு மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது.

      நீக்கு
  2. டோனட் போலச் செய்திருக்கும் ப்ளம் கேக் சூப்பர். அதைக் கட் பண்ணினால் உள் பகுதி எப்படி இருக்கும் என்று பார்த்திருக்கலாம்

    மருமகள் செய்திருக்கும் கிறிஸ்த்மஸ் குக்கிகளும் பார்க்க மிக அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோனட் போலச் செய்திருக்கும் ப்ளம் கேக் சூப்பர். அதைக் கட் பண்ணினால் உள் பகுதி எப்படி இருக்கும் என்று பார்த்திருக்கலாம்//

      மேலே உள்ள படத்தில் கட் செய்து தட்டில் வைத்து இருக்கிற படம் இருக்கே நெல்லை. பாருங்க.

      //மருமகள் செய்திருக்கும் கிறிஸ்த்மஸ் குக்கிகளும் பார்க்க மிக அழகு//
      நன்றி .
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. கேக் படத்தையும் வெட்டிய துண்டுகள் படத்தையும் அரு அருகே போட்டு விட்டேன்.

      நீக்கு
  3. படங்களும், விவரங்களும் அருமை, சுவாரஸ்யம்.  மாகாண வரைந்த ஓவியம் சூப்பர் என்றால் அது இன்னமும் பத்திரமாக பாதுகாக்கப்படுவது சிறப்பு. பலம் கேக் குக்கீஸ் நாவைக் கவர்கின்றன!!  நம்மூர் போல வெறுப்பு அரசியல் இல்லாமல் அங்கு இணைந்து கொண்டாடி மகிழ்வது மகிழ்ச்சியைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாகாண வரைந்த ஓவியம் சூப்பர் என்றால் அது இன்னமும் பத்திரமாக பாதுகாக்கப்படுவது சிறப்பு. பலம் கேக் குக்கீஸ் நாவைக் கவர்கின்றன!!  நம்மூர் போல வெறுப்பு அரசியல் இல்லாமல் அங்கு இணைந்து கொண்டாடி மகிழ்வது மகிழ்ச்சியைத் தருகிறது.//

      மகன் வரைந்த ஓவியம் என்று இருக்க வேண்டும்!  மன்னிக்கவும்.  அவசரம்!  மற்றும் ப்ளம் கேக், பலம் கேக் அல்ல!!!

      நீக்கு
    2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //படங்களும், விவரங்களும் அருமை, சுவாரஸ்யம். மாகாண வரைந்த ஓவியம் சூப்பர் என்றால் அது இன்னமும் பத்திரமாக பாதுகாக்கப்படுவது சிறப்பு. //

      நன்றி.

      //பலம் கேக் குக்கீஸ் நாவைக் கவர்கின்றன!! நம்மூர் போல வெறுப்பு அரசியல் இல்லாமல் அங்கு இணைந்து கொண்டாடி மகிழ்வது மகிழ்ச்சியைத் தருகிறது.//

      முன்பு கிறிஸ்துமஸ் , புதுவருட வாழ்த்து அட்டை தேர்வு செய்து அவர்களுக்கு அனுப்பி மகிழ்வோம். அக்கம் பக்கத்து வீட்டு கிறிஸ்மஸ் அன்பர்கள் முட்டை கலக்காத கேக் உங்களுக்கு என்று என் அம்மாவுக்கு கொடுப்பது , பலகாரங்கள் சேர்ந்து அம்மாவும் அவர்களுடன் செய்வார்கள். அருமையான காலங்கள்.
      மாயவரத்தில் கிறிஸ்துவ அன்பர்கள் பக்கத்தில் உண்டு. பலவித உதவிகள் ஒருவருக்கு ஒருவர் செய்து மகிழ்வோடு இருந்தோம்.


      நீக்கு
    3. காலை அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது ஏற்படுவது தான்.

      நீக்கு
  4. எனக்கும் வாணி ஜெயராமின் இந்தப் பாடல் மிக மிகப் பிடிக்கும்.  புனித அந்தோனியார் படத்தில் இடம்பெற்ற பாடல்.  மனதை உருக்கும், வருடும் பாடல்.  இன்னும் சில பாடல்களும் என் விருப்ப லிஸ்ட்டில் உண்டு.  மாசிலா கன்னியே மாதாவே உன்மேல், வங்கக்கடலில் ஒரு முத்துதெடுத்தேன், வானாதி வானங்களில், கண்ணே வா கண்மணியே வா, அன்னையே ஆரோக்ய அன்னையே, எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் ஏசுவே, உமையன்றி எமைக்காக்க போன்ற பல பாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கும் வாணி ஜெயராமின் இந்தப் பாடல் மிக மிகப் பிடிக்கும். புனித அந்தோனியார் படத்தில் இடம்பெற்ற பாடல். மனதை உருக்கும், வருடும் பாடல்.//
      எல்லோருக்கும் பிடித்த பாடல் என்று எழுதும் போதே உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைத்து கொண்டேன்.


      //இன்னும் சில பாடல்களும் என் விருப்ப லிஸ்ட்டில் உண்டு//

      எனக்கு பழைய ஜிக்கி , லீலா , கிருஷ்ணன் , எல். ஆர் ஈஸ்வரி பாடல்கள் லிஸ்ட் நிறைய இருக்கிறது.

      //மாசிலா கன்னியே மாதாவே உன்மேல், வங்கக்கடலில் ஒரு முத்துதெடுத்தேன், வானாதி வானங்களில், கண்ணே வா கண்மணியே வா, அன்னையே ஆரோக்ய அன்னையே, எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் ஏசுவே, உமையன்றி எமைக்காக்க போன்ற பல பாடல்கள்.//

      அருமையான பாடல்கள். இப்போதும் கிறிஸ்துமஸ் பாடல்கள் ரேடியோவில் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

      மகன் வீட்டில் வந்து பாடும் நண்பர் வீட்டுக்கு ஒரு முறை போய் இருந்தோம் சாருடன் நானும் சாரும் எங்களுக்கு பிடித்த பாடல்களை நண்பரையும், அவர் மனைவியை பாட வைத்து கேட்டோம்.

      நீக்கு
  5. நானும் கிறிஸ்தவப் பள்ளியில் பயின்றவன்.  தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.  என் தலைமை ஆசிரியர்   நாங்கள் அங்கு படித்தபோதே தூத்துக்குடி பிஷப் ஆனார்.  எஸ் டி அமலநாதர் என்று பெயர்.  பேச்சில் அன்பும், அக்கறையும், கனிவும், கண்டிப்பும் கலந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கிறிஸ்தவப் பள்ளியில் பயின்றவன். தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர். என் தலைமை ஆசிரியர் நாங்கள் அங்கு படித்தபோதே தூத்துக்குடி பிஷப் ஆனார்.
      எஸ் டி அமலநாதர் என்று பெயர். பேச்சில் அன்பும், அக்கறையும், கனிவும், கண்டிப்பும் கலந்து இருக்கும்.//

      அன்பும், அக்கறையும், கனிவும் உள்ளவர்கள் தான் பிஷப் ஆவதற்கு தகுதி படைத்தவர்கள் இல்லையா?
      அருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள்.

      கிருஷ்ணன் கேளுங்கள் கொடுக்கப்படும் த்ட்டுங்கள் திறக்கப்படும் பாடல் ஒலிக்கிறது. இப்போதுதான் உங்களிடம் அவர் பாட்டு பிடிக்கும் என்றேன்.

      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. கோம்திக்கா நானும் கிறித்தவப் பள்ளி, கிறித்தவக் கல்லூரியில்தான் படித்தேன் என்பதால் எனக்கும் இப்படியானவற்றை ரசித்ததுண்டு. கலந்து கொண்டதும் உண்டு.

    பள்ளியும் கல்லூரியும் அத்தனை அன்புடன் வழி நடத்தியவர்கள்.

    உங்கள் படங்கள் எல்லாமே சிறப்பு. முன்பே சொல்லியிருக்கீங்களோ வாசித்த நினைவு உங்கள் குடும்ப நண்பர் பற்றி
    //இறைவன் புகழ் பாடும் குழுவை அமைத்து பாடும் அன்பர் நம் குடும்ப நண்பர். தமிழ்ச்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர், தமிழ் பள்ளியில் ஆசிரியராக தன்னார்வ தொண்டு செய்பவர். தான் சார்ந்து இருக்கும் கத்தோலிக்க திருச்சபையில் தொண்டு செய்பவர். தமிழ்ச்சங்கம், தமிழ்பள்ளியில் நடக்கும் விழாக்களிலும் அவரின் தொண்டு சிறப்பாக இருக்கும். //

    இவரைப் பற்றி.

    பேரன் இம்முறை இரு கிறிஸ்துமஸ் தாத்தாக்களைக் கண்டு ஆசிர்வாதம் பெற்றதும் சிறப்பு. முந்தைய பதிவில் நீங்கள் அங்கிருந்த போது சொன்னவை படங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோம்திக்கா நானும் கிறித்தவப் பள்ளி, கிறித்தவக் கல்லூரியில்தான் படித்தேன் என்பதால் எனக்கும் இப்படியானவற்றை ரசித்ததுண்டு. கலந்து கொண்டதும் உண்டு.//

      நல்லது. மகன் அங்கு படிக்கு போது வருடா வருடம் கலந்து கொள்வான். நாடகம், நாட்டியம் எல்லா வற்றிலும்.

      //பள்ளியும் கல்லூரியும் அத்தனை அன்புடன் வழி நடத்தியவர்கள்.//

      அன்பானவர்கள் தான்.

      //உங்கள் படங்கள் எல்லாமே சிறப்பு. முன்பே சொல்லியிருக்கீங்களோ வாசித்த நினைவு உங்கள் குடும்ப நண்பர் பற்றி//

      ஆமாம், சொல்லி இருக்கிறேன்.

      //பேரன் இம்முறை இரு கிறிஸ்துமஸ் தாத்தாக்களைக் கண்டு ஆசிர்வாதம் பெற்றதும் சிறப்பு. முந்தைய பதிவில் நீங்கள் அங்கிருந்த போது சொன்னவை படங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.//

      நாங்களும் இரண்டு மூன்று முறை கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்து வந்து இருக்கிறோம்.
      அந்த பதிவுகளை நினைவு வைத்து இருப்பது மகிழ்ச்சி கீதா.




      நீக்கு
  7. கிறிஸ்துமஸ் கரோல் ஆமாம் எனக்கும் அவர்கள் பாடுவது மிகவும் பிடிக்கும். ஆமாம் ஏசு பிறப்பை அமைத்த வண்டிகளில் பாடிக் கொண்டு வருவாங்க. அவர்கள் அமைக்கும் அந்தக் குடில், நட்சத்திரம் வழி நடத்துவது போன்ற காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. சமீபத்தில் பார்க்கவே இல்லை. இங்கு ஏதேனும் கடைகளில் அமைச்சிருப்பாங்க கொலு போன்று அழகாக வைச்சிருப்பாங்க பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிறிஸ்துமஸ் கரோல் ஆமாம் எனக்கும் அவர்கள் பாடுவது மிகவும் பிடிக்கும். ஆமாம் ஏசு பிறப்பை அமைத்த வண்டிகளில் பாடிக் கொண்டு வருவாங்க. அவர்கள் அமைக்கும் அந்தக் குடில், நட்சத்திரம் வழி நடத்துவது போன்ற காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. சமீபத்தில் பார்க்கவே இல்லை. இங்கு ஏதேனும் கடைகளில் அமைச்சிருப்பாங்க கொலு போன்று அழகாக வைச்சிருப்பாங்க பார்க்க வேண்டும்.//

      நாங்கள் சிறு வயதில் குடில் வைத்து இருக்கும் வீடுகளுக்கு போய் பார்ப்போம். கிறிஸ்துமஸ் மரம் வைப்பார்கள். அதை சுற்றி விளக்கு வாசலில் ஸ்டார் எல்லாம் அவர்களே செய்வார்கள் மூங்கில் குச்சிகளை வைத்து வர்ணகாகிதங்கள் ஒட்டி உள்ளே விளக்கு தொங்கவிடுவார்கள் என் அண்ணன் அவர்களிடம் கற்றுக்கொண்டு புதுவருடத்திற்கு வீட்டில் தொங்க விடுவார்கள்.

      கடைகளில் அலங்கரித்து வைத்து இருப்பதை தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். கிறிஸ்மஸ் கரோல் பாடல்கள் வைக்கிறார்கள்.
      மகன் , மகள் ஊரில் அலங்காரம் பார்க்க கடைகளுக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.

      நீக்கு
  8. மகன் வீட்டுப் படங்கள் எல்லாம் சூப்பர்.

    ஆமாம் அக்கா வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் பங்கு பெறும் போது நிகழ்வே களைகட்டி மகிழ்வுடன் இருக்கும். எல்லோரும் இணைந்து செய்யும் போது உற்சாகம் நிறைய வரும். நமக்கும். இப்போது பழைய நினைவுகள்தான்.

    மகன் வீட்டில் கிறித்தவ நண்பர்கள் வந்து பாடல்கள் பாடியது வீட்டிற்கே பாசிட்டிவ் எனர்ஜி! இறைவனின் அருள் நிறைந்திருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகன் வீட்டுப் படங்கள் எல்லாம் சூப்பர்.

      //ஆமாம் அக்கா வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் பங்கு பெறும் போது நிகழ்வே களைகட்டி மகிழ்வுடன் இருக்கும். எல்லோரும் இணைந்து செய்யும் போது உற்சாகம் நிறைய வரும். நமக்கும். இப்போது பழைய நினைவுகள்தான்.//

      ஆமாம், இப்போது பழைய நினைவுகளை மனம் அசைப்போடுகிறது.

      //மகன் வீட்டில் கிறித்தவ நண்பர்கள் வந்து பாடல்கள் பாடியது வீட்டிற்கே பாசிட்டிவ் எனர்ஜி! இறைவனின் அருள் நிறைந்திருக்கும்!//

      ஆமாம், நல்ல அலைகளை பரப்பி சென்று இருக்கிறார்கள்.

      அனைவருக்கும் இறைவனின் அருள் நிறைந்து இருக்கட்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.


      நீக்கு
  9. பாடல்களில் இறைவனிடம் இறைஞ்சுவதும் நன்றி சொல்வதுமாகவே இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும். காணொளி கண்டேன் கோமதிக்கா. அருமை. தமிழில் பேசி தமிழில் பாடியிருப்பது ரொம்ப நல்லாருக்கு.

    மகன் வரைந்த படத்தைப் பாதுகாத்துக் கொடுத்திருப்பது நெகிழ்வான விஷயம் கோமதிக்கா.

    மருமகள் செய்திருக்கும் கிறிஸ்துமஸ் ப்ளம் கேக், குக்கீஸ் மனதைக் கவர்கின்றன. பண்டிட் கேக் பானில் செய்திருக்காங்க இல்லையா.......கட் செய்து வைத்திருக்கும் துண்டுகளும் அழகாக இருக்கின்றன அடுக்கி வைத்திருப்பதும்.

    ப்ளம் கேக் வீட்டில் செய்து சாப்பிட்டு இரு வருடங்கள் ஆகின்றன.

    வாணியின் இப்பாடல் மிகவும் பிடிக்கும். ரசித்துக் கேட்பதுண்டு. இப்போதும் ...கேட்டேன்

    அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாடல்களில் இறைவனிடம் இறைஞ்சுவதும் நன்றி சொல்வதுமாகவே இருக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும். காணொளி கண்டேன் கோமதிக்கா. அருமை. தமிழில் பேசி தமிழில் பாடியிருப்பது ரொம்ப நல்லாருக்கு.//

      நம் பக்க தமிழ் பேசும் மக்கள் தானே அவர்கள் அதனால் தமிழில் பாடினார்கள், அங்கேயே பிறந்து வளர்ந்த குழந்தைகள் தமிழில் பாடியதுதான் சிறப்பு.

      //மகன் வரைந்த படத்தைப் பாதுகாத்துக் கொடுத்திருப்பது நெகிழ்வான விஷயம் கோமதிக்கா.//

      கொலு படியின் ஓரத்தில் மகன் வரைந்த ஓவியங்கள் இடம்பெறும். இப்போது வந்த போது அவன் வரைந்த ஓவியங்களை எல்லாம் அவனிடம் ஒப்படைத்து விட்டேன்.

      //மருமகள் செய்திருக்கும் கிறிஸ்துமஸ் ப்ளம் கேக், குக்கீஸ் மனதைக் கவர்கின்றன. பண்டிட் கேக் பானில் செய்திருக்காங்க இல்லையா.//

      ஆமாம் கீதா, பண்டிட் கேக் பானில் தான் செய்து இருக்கிறாள்.

      ...//.கட் செய்து வைத்திருக்கும் துண்டுகளும் அழகாக இருக்கின்றன அடுக்கி வைத்திருப்பதும்.//

      நன்றி.

      //ப்ளம் கேக் வீட்டில் செய்து சாப்பிட்டு இரு வருடங்கள் ஆகின்றன.//

      புது வருடத்திற்கு செய்து பதிவு மூலம் எல்லோருக்கும் கொடுங்க.

      //வாணியின் இப்பாடல் மிகவும் பிடிக்கும். ரசித்துக் கேட்பதுண்டு. இப்போதும் ...கேட்டேன்

      அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா//

      பாடலை கேட்டு அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.






      நீக்கு
  10. அதிரா கிறிஸ்துமள் காணொளி ஊர் அலங்காரங்கள் போட்டிருந்தாங்க. ஷார்ட்ஸ்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதிரா கிறிஸ்துமள் காணொளி ஊர் அலங்காரங்கள் போட்டிருந்தாங்க. ஷார்ட்ஸ்//

      பார்த்தேன் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  11. அழகிய படங்களுடன் காணொளி பாடல் சிறப்பு.

    வாணி ஜெயராமின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //அழகிய படங்களுடன் காணொளி பாடல் சிறப்பு.

      வாணி ஜெயராமின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று//

      பதிவை, காணொளியை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  12. இறைவனை பூமாலை, பாமாலையுடன் முழுவதும் துதிக்கும் மாதம்..  இறைவன் நினைவாக இருப்பதே இந்த மாதத்தின் சிறப்பு..

    படங்கள் அனைத்தும் அழகு..
    சிறப்பான பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துறைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. கவியரசர், மெல்லிசை மன்னர், வாணி ஜெயராம் - சிறந்த பாடல்களில் ஒன்று பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கவியரசர், மெல்லிசை மன்னர், வாணி ஜெயராம் - சிறந்த பாடல்களில் ஒன்று பகிர்வு.//

      ஆமாம், சிறந்த பாடல்.

      நீக்கு
  14. கோமதி அக்கா, முதல்ல மன்னிச்சுக்கோங்கோ.. அடிக்கடி மன்னிப்புக் கேட்க வேண்டி இருக்கு ஹா ஹா ஹா.. மெயிலில் ஒரு பிரச்சனை அதனால எதுவும் பண்ண முடியவில்லை, சரிப்படுத்தியதும் விபரம் சொல்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா வாழ்க வளமுடன்

      //கோமதி அக்கா, முதல்ல மன்னிச்சுக்கோங்கோ.. அடிக்கடி மன்னிப்புக் கேட்க வேண்டி இருக்கு ஹா ஹா ஹா.. மெயிலில் ஒரு பிரச்சனை அதனால எதுவும் பண்ண முடியவில்லை, சரிப்படுத்தியதும் விபரம் சொல்கிறேன்...//

      மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம் அதிரா. தவிர்க்க முடியாத காரணத்தால்தான் பதில் தரவில்லை என்பதி புரிந்து கொண்டேன்.
      சரி செய்த பின் விவரம் சொல்லுங்கள். நீங்கள் பதிவுக்கு வந்ததே மகிழ்ச்சி.

      நீக்கு
  15. நலம்தானே கோமதி அக்கா?... முளுக் கிரிஸ்மஸ் ஐயும் ஒரு போஸ்ட்டில் அடக்கி விட்டீங்கள், மிக அருமையாக இருக்கு, அதுவும் நீங்கள் நேரலையில் பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கு... தாமதமான வாழ்த்துக்கள்.

    புது வருடம் பிறக்க முன்னர், ஓடி வந்திடோணும் என வந்தேனாக்கும்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நலம்தானே கோமதி அக்கா?...//
      சிறு , சிறு உடல் தொந்திரவுகள் நான் இருக்கிறேன் என்னை கவினி எங்கிறது கவனித்து கொண்டு இருக்கிறேன். மற்றபடி நலம்.


      //முளுக் கிரிஸ்மஸ் ஐயும் ஒரு போஸ்ட்டில் அடக்கி விட்டீங்கள், மிக அருமையாக இருக்கு, அதுவும் நீங்கள் நேரலையில் பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கு..//
      முழு கிறிஸ்மஸ் பார்த்து விட்டீர்களா மகிழ்ச்சி. அவர்களுக்கு நாங்கள் கூட இருப்பது போல நினைத்து மகிழ வேண்டும் என்பதால் நேரலையில் அவர்கள் வீட்டில் நடக்கும் அனைத்து விழாக்களுக்கும் அழைத்து விடுகிறார்கள். நாங்களும் போய் அவர்களுடன் கலந்து பண்டிகைகளை கொண்டாடுகிறோம் மகிழ்ச்சியாக.

      //தாமதமான வாழ்த்துக்கள்.//

      நன்றி.

      //புது வருடம் பிறக்க முன்னர், ஓடி வந்திடோணும் என வந்தேனாக்கும்:)...//

      ல்ண்டனிலிருந்து ஓடி வருவது எவ்வளவு கடினம் ! நீங்கள் வந்தது மகிழ்ச்சி. புதுவருட வாழ்த்துகள் உங்களுக்கும். புதுவருட போஸ்ட் போடுங்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா. உங்கள் யூடியூப் பதிவுகள் பார்த்து லைக் செய்கிறேன். உங்கள் குரலை கேட்டு மகிழ்ந்து கொள்கிறேன்.

      நீக்கு