திங்கள், 11 டிசம்பர், 2023

பறவைகளின் தேடல்


திணைக்குருவிகள் கூடு தேடி  வந்தன.  எங்கள் வீட்டுக் கொடி கம்பியில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தது. 10 நாள் முன் வீட்டுக்கு வந்தது.  இந்த பதிவில்  பறவைகளின் தேடல் இடம் பெறுகிறது. 

நிறைய குருவிகள் கூடு அமைக்க  வீடு வீடாய் பறந்து பறந்து போய் பார்த்து களைத்து அமர்ந்தன எங்கள் வீட்டு கொடி கம்பியில்.

எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த படம்.   பறவைகளுக்கு  முட்டையிட கூடு  வேண்டும். அதை கட்ட அவை படும் கஷ்டம், பாதுகாப்பான இடத்தில் கட்டிவிட்டால் முட்டையிட்டு குஞ்சு பொரித்து போகும் போது பட்ட துன்பம் எல்லாம் தூசிதான்.

முக நூலில் இந்த பறவைகள் படம் போட்ட போது சகோதரி ஸாதிகா வந்து இப்படி சொன்னார்.:-

//நாங்கள் இதை புல் குருவி என்று சொல்வோம்.இதன் உணவு கம்பம்புல். அதனால் புல் குருவி . பார்க்க குட்டியா அழகாக இருக்கும். இதனை கண்டு வெகு காலங்கள் ஆகிறது. இந்த குருவி சீசனில் குருவிகள் வாங்கி கம்பியில் ஆன சிறு கூண்டும்வாங்கி உள்ளே சிறு கிண்ணங்களில் புல்லும், நீரும் வைத்து வளர்த்த ஞாபகமெல்லாம் வருகிறது.//

இப்படி உங்களுக்கு ஏதாவது இந்த குருவியை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள். இங்கே புற்கள் கிடைத்ததால் இங்கு வந்தது. இனி வருமா என தெரியவில்லை. இவைகளுக்கு புற்கள் கொடுத்த தோட்டம் இல்லையே!

இந்த குருவி இப்படி தான் பசுந்தளையை வாயில் கவ்வி கொண்டு பறந்து வரும் பார்க்கவே அழகாய் இருக்கும். முன்பு எடுத்து இருந்தேன். தேடி பார்க்க வேண்டும்.


காடு போல முன்பு இருந்த இடம், பல பறவைகளுக்கு வீடாக  உணவு தரும் இடமாக இந்த பறவைகளுக்கு கூடு கட்ட பசும் தளைகளை தரும் இடமாக இருந்தது. 

இளம் ரோஸ் கலர் பூ மரத்து அந்த பக்கம் தான் காடு மாதிரி இருந்த இடம். பறவைகளுக்கு உணவு அளித்த தோட்டம்.

இப்போது இப்படி இருக்கிறது. முன்பு மரங்களை  வெட்டும் போது அதை படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன்.

 இந்த புல்லை கொண்டு வந்து எங்கள் வீட்டுக்கு மேலே உள்ள வீட்டில் கூடு கட்டுகிறது. அப்படி வாயில் கொண்டு வரும் போது தவறி  எங்கள் வீட்டு பால்கனியில் விழுந்த புல்.  

கூடு கட்ட இடம் தேடும் குருவிகள் இந்த குருவிகளும், புள்ளிசில்லை குருவிகளும்  கூடு கட்ட இடம் தேடும் பதிவு.


இந்த குருவி போலவே புள்ளிசில்லை முனியா குருவியும் இப்படி பசுந்தளையை வைத்துதான் கட்டும். எங்கள் வீட்டில் கட்டிய போது புற்கள் கீழே விழுந்ததை படம் எடுத்து போட்டு இருப்பேன். 

என் கணவர் குஞ்சுகள் கீழே விழுந்து விடாமல் இருக்க  சில ஏற்பாடுகள் செய்தது எல்லாம் இந்த பதிவில் இருக்கும்..

சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு சிறகு  முளைத்தது  இந்த பதிவில்

புள்ளி சில்லை முட்டையிட்டு  குஞ்சு பொரித்து   பறந்து போனது தாய், தந்தை பறவைகள் அவைகளுக்கு பறக்க கற்று கொடுத்த காணொளி இருக்கும்.  இந்த பதிவில் சகோ துரை செல்வராஜூ அவர்கள் பின்னூட்டத்தில் அருமையான கவிதை அனுப்பி இருந்தார்கள்.

கரிச்சான் குருவி (இரட்டை வால் குருவி)

தினம் தினம் தனக்கு உணவாக வெட்டுக்கிளி, குளவி, எறும்பு, ஈசல் போனற பறக்கும் சிறு பூச்சிகள், புழுக்கள் தந்த தோட்டத்தை அழித்து வீடு கட்டப்போகிறார்களே! என்று கவலையுடன் தினம்  இந்த இடத்தில் வந்து அமர்ந்து தோட்டம் இருந்த இடத்தைப்பார்த்து கொண்டு இருக்கும். கரிசான் குருவி மட்டும் அல்ல, நிறைய பறவைகள் வந்து வந்து பார்த்து போகிறது.

அது போல மைனாவும்

எப்படி இருந்த இடம் இப்படி ஆகி விட்டதே!

இனி வெகுதூரம் போக வேண்டும் இரை தேடி

மீன் கொத்தி மழை  காலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது  இதற்கு உணவு கிடைக்கும்.




மணிப்புறா

இந்த மரம் எங்கள் வளாகத்தில் இருக்கிறது.

ஆண்குயில் அமர்ந்து இருக்கிறது.

எப்போதும் பறவைகள்  பறந்து பறந்து சத்தம் கொடுத்து கொண்டே இருக்கும். காலை முதல் மாலை வரை பலவித பறவைகளின் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும் .மகிழ்ச்சியாக  இருக்கும் அதை கேட்க.

இப்போது   முன்பு போல் கேட்கவில்லை என்றாலும் ஓரளவு கேட்கிறது. இந்த மரத்தின் புண்ணியத்தால்.  ரோஸ் கலர் மரத்தில் பறவைகளுக்கு உணவாக பூச்சிகள் மற்றும் நிழலில் அமர்ந்தும் விளையாடியும் களிக்கும் பறவைகள்.  சிறிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சியும்  பூக்களை சுற்றி சுற்றி வரும்.தூரத்தில் இருப்பதால் இன்னும் வண்ணத்துப்பூச்சிகளை ஜூம் செய்து எடுத்தாலும் சரியாக வரவில்லை. மிக சிறிய வண்ணத்துப்பூச்சி.

நம் தேசீய கவிக்கு வணக்கம் சொல்லி பாடலை பாடுவோம்.

பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வணங்குவோம்.

பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

சரணங்கள்

௧)

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)

௩)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)

- களஞ்சியத்தில் இருந்து எடுத்தேன், நன்றி.


இன்று நம் தேசிய கவி  மகாகவி பாரதியார் பிறந்த நாள். 142 வது பிறந்தநாள். அதனால் அவர்  அவர் பாடிய கவிதை சிட்டுக்குருவியைப் போலே! கவிதையை பகிர்ந்து மகிழ்கிறேன்.

 என்னிடம் பாரதியார் கவிதைகள் புத்தகம் இருக்கிறது. இருந்தாலும் பதிவை விரைவில் தர இணையத்திலிருந்து எடுத்து போட்டு விட்டேன். 


ஜயபேரிகை:-

காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்

கடலும், மலையும் எங்கள் கூட்டம்;

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக்களியாட்டம்.

இந்த பாடல்  மனபாடம் அதனால் தட்டச்சு செய்து விட்டேன். 



வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


---------------------------------------------------------------------

33 கருத்துகள்:

  1. கரிச்சான் குருவி, மரம்கொத்திலாம் இங்கே கண்டதில்லை.

    ஒரு மாத்த்திற்கு முன் கும்பகோணம் அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தபோது பல மரங்கொத்திகளைப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //கரிச்சான் குருவி, மரம்கொத்திலாம் இங்கே கண்டதில்லை.//ஏரிக்கரையோரம் போனால் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

      //ஒரு மாத்த்திற்கு முன் கும்பகோணம் அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தபோது பல மரங்கொத்திகளைப் பார்த்தேன்.//

      அங்கு நிறைய பார்க்கலாம். கோவில் திருக்குளம் பக்கம் நிறைய மீன் கொத்தி, கரிச்சான் குருவிகளை பார்க்கலாம். நான் கோவில் பதிவுகள் போடும் போது மீன் கொத்தி, கரிச்சான் குருவிகளையும் சேர்த்து போட்டு இருக்கிறேன். திருக்குளத்தின் பக்கம் அமர்ந்து இருக்கும் மீன் கொத்தி, கோபுரத்தின் மேல் இருக்கும் கரிச்சான் குருவிகளை படம் எடுத்து பதிவுகளில் போட்டு இருக்கிறேன்.

      நீக்கு
  2. இங்கு பலவித குருவிகள், புறா , கழுகு போன்றவை உண்டு. காக்கைகளுக்கும் குறைவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு செம்போத்துகள் ரெகுலராக்க் கண்டிருக்கிறேன். மயிலும் அவ்வப்போது வளாகத்துக்கு வரும். கட்டிடங்கள் எழ ஆரம்பித்தபிறகு இவற்றைக் காணோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கு பலவித குருவிகள், புறா , கழுகு போன்றவை உண்டு. காக்கைகளுக்கும் குறைவில்லை.//

      என்றும் குறைவில்லாமல் இருக்கட்டும்.

      //மூன்று வருடங்களுக்கு முன்பு செம்போத்துகள் ரெகுலராக்க் கண்டிருக்கிறேன். மயிலும் அவ்வப்போது வளாகத்துக்கு வரும். கட்டிடங்கள் எழ ஆரம்பித்தபிறகு இவற்றைக் காணோம்.//

      அந்த தோட்டத்தில் மயில்களுக்கும், செம்போத்துக்கும் உண்வு கிடைத்ததால் அவைகளும் வரும் பெண் மயில் அடிக்கடி வரும். இவை இரண்டும் விஷபூச்சிகளை உணவாக உண்ணும் அதனால் அடர்ந்த காடு போன்ற தோட்டம் மிகவும் பிடிக்கும் அவற்றுக்கு. காலையில் மயில் அகவும், செம்போந்தும் சத்தம் கொடுக்கும்.

      நீக்கு
  3. சமீபத்தில் டிஸ்கவரியில் பறவைக் கூட்டில் பாம்பு நுழைந்து இளம் பறவையைக் கொத்திக்கொண்டு போவதைக் காண்பித்தார்கள். எந்த உயிரினத்தின் வாழ்க்கையும் கஷ்டம்தான் போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமீபத்தில் டிஸ்கவரியில் பறவைக் கூட்டில் பாம்பு நுழைந்து இளம் பறவையைக் கொத்திக்கொண்டு போவதைக் காண்பித்தார்கள். எந்த உயிரினத்தின் வாழ்க்கையும் கஷ்டம்தான் போலிருக்கு//

      எல்லா உயிரினங்களுக்கு வேற்று உயிரினங்களால் கேட்டு இருக்கிறது. அத்தையும் மீறி வாழ்வது கடினம் தான்.

      இறைவன் ஒன்றை ஒன்று உணவாக படித்து இருக்கிறான். என்ன செய்வது! இத்தனை இடையூறுகளுக்கும் மத்தியில் அவை வாழ்ந்து நம்மையும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. சகோ துரை செல்வராஜூ பதிவில் என்னை நினைத்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  4. படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.

    இன்று பாரதியார் பிறந்தநாள் பதிவு தங்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்தேன்.

    இங்கு அபுதாபியில் சற்று முன் சாலையில் புறாக்கள் உணவருந்துவதை கண்டேன்.

    உங்கள் நினைவு வந்தது படம் எடுத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.//

      நன்றி.

      //இன்று பாரதியார் பிறந்தநாள் பதிவு தங்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்தேன்.//

      முன்பு அடிக்கடி பாரதி பாடல்கள், பாரதி நினைவு நாள், பிறந்த நாள் பதிவுகள் போட்டு கொண்டு இருந்தேன், இடையில் அது குறைந்து போய் இருந்தது. நீங்கள் நினைவுகள் வைத்து சொன்னதற்கு நன்றி.

      கீதா சாம்பசிவம் அவர்களும் பாரதி பதிவு போடுவார்கள். நலமாகி வீட்டுக்கு வந்து விட்டார் சார் இனி பதிவுகள் போடுவார்கள்.

      //இங்கு அபுதாபியில் சற்று முன் சாலையில் புறாக்கள் உணவருந்துவதை கண்டேன்.

      உங்கள் நினைவு வந்தது படம் எடுத்தேன்.//

      ஆஹா! ஒரு பதிவு போட்டு விடுங்கள். அந்த பறவைகள் உணவு அருந்துவது, உங்கள் அலுவலகத்தில் நீங்கள் வைக்கும் தண்ணீர் குடிப்பது எல்லாம் போடுங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரி

    நலமா? எப்படி இருக்கிறீர்கள்? தங்களின் சென்ற பறவை பதிவை (புறாக்கள் கூடு கட்டாமல் போன பதிவை) படித்ததும் மனதிற்கு கஸ்டமாக இருந்தது. என்ன செய்வது? ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இங்கும் அப்படி ஒரு நிகழ்வை யதேச்சையாக அடுத்த வீட்டில் கண்டேன். இறைவன் அவைகளுக்கும் எப்படியாவது படியளந்து விடுவான். அந்தப் பொறுப்பிலிருந்து அவன் என்றும் பின் வாங்க மாட்டன்.

    இந்தப் பதிவையும் இனிதான் படிக்க வேண்டும். கண்டிப்பாக . படிக்கிறேன். ஏதோ நேரங்கள் பதிவுலகிற்கு வர விடாமல் தடுக்கிறது. இன்று எபியில் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கைவண்ணத்தை கண்டு ஆவலுடன் படிக்க வந்தேன்.அதில் தங்களின் முகமன் மகிழ்ச்சியை தந்தது.

    அதுபோல், சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் கார்த்திகை பதிவை படித்ததில் மனத்துக்கு சங்கடமாக இருந்தது. அவர் கணவர் நல்லபடியாக நலமடைந்து விட்டதாக தாங்கள் இந்தப் பதிவில் கூறியிருப்பது கண்டு மிகவும் சந்தோஷமடைகிறேன். இறைவன் அனைவருக்கும் கண்டிப்பாக எப்போதும் துணையாக இருப்பான். கடவுளுக்கு மிக்க நன்றி. தாங்கள் எனக்கு தந்த ஆறுதலான மெஜேஸ் பதில்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரி. .இப்படி நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். சென்ற பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இங்கும் அப்படி ஒரு நிகழ்வை யதேச்சையாக அடுத்த வீட்டில் கண்டேன். இறைவன் அவைகளுக்கும் எப்படியாவது படியளந்து விடுவான். அந்தப் பொறுப்பிலிருந்து அவன் என்றும் பின் வாங்க மாட்டன்.//

      ஆமாம், எப்படியாவது படியளப்பான் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.

      //இந்தப் பதிவையும் இனிதான் படிக்க வேண்டும். கண்டிப்பாக . படிக்கிறேன். ஏதோ நேரங்கள் பதிவுலகிற்கு வர விடாமல் தடுக்கிறது//

      வாங்க மெதுவாக. வேலைகளை முடித்துவிட்டு.

      //இன்று எபியில் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கைவண்ணத்தை கண்டு ஆவலுடன் படிக்க வந்தேன்.அதில் தங்களின் முகமன் மகிழ்ச்சியை தந்தது.//
      ஆமாம், ஸ்ரீராம் சொன்னது போல ஸ்ரீராமின் பாஸ் கைவண்ணத்தில் வடையும் அதை ஸ்ரீராம் சொன்னவிதமும் உங்களை அழைத்து வந்து விட்டது. மகிழ்ச்சி.

      //சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் கார்த்திகை பதிவை படித்ததில் மனத்துக்கு சங்கடமாக இருந்தது. அவர் கணவர் நல்லபடியாக நலமடைந்து விட்டதாக தாங்கள் இந்தப் பதிவில் கூறியிருப்பது கண்டு மிகவும் சந்தோஷமடைகிறேன். //
      ஆமாம், திரு. சாம்பசிவம் சார் நலமடைந்து வீட்டு வந்து விட்டது மகிழ்ச்சிதான். இறைவன் துணைதான் வேண்டும் எல்லோருக்கும்.நாளும் நன்றி சொல்வோம் இறைவனுக்கு.

      //தாங்கள் எனக்கு தந்த ஆறுதலான மெஜேஸ் பதில்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரி. .இப்படி நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன் சகோதரி.//

      ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருப்போம் .
      உங்கள் கருத்துக்கு நன்றி.











      நீக்கு
  6. படத்தில் பார்த்த சில பறவைகளை சிலமுறை அல்லது ஓரிருமுறை எங்காவது கண்டதுண்டு.  சில பறவைகளை கண்டதே இல்லை.  மைனாவைப் பார்த்ததும் மனதில் SPB 'ஓ மைனா..  ஓ மைனா..' என்று பாடத் தொடங்கினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //படத்தில் பார்த்த சில பறவைகளை சிலமுறை அல்லது ஓரிருமுறை எங்காவது கண்டதுண்டு. சில பறவைகளை கண்டதே இல்லை.
      மைனாவைப் பார்த்ததும் மனதில் ஓ மைனா.. ஓ மைனா..' என்று பாடத் தொடங்கினார்.//

      மைனா பாட்டு காதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டதா?
      SPB 'ரசிகர் அல்லவா நீங்கள்.

      நீக்கு
  7. சமீபத்து உறவின் திருமணம் ஒன்றில் மாமா பெண் ஒருவர் பறவைகள் மேல் மிகுந்த ஆசை, பாசம் உடையவர் - பாண்டிச்சேரியில் இயற்கை எழில் சூழ வீடு கட்டி நிறைய பறவைகளுக்கு வசதி செய்துள்ளார் - அவர் நிறைய செய்திகள் சொன்னார். தேன்சிட்டு பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்து உறவின் திருமணம் ஒன்றில் மாமா பெண் ஒருவர் பறவைகள் மேல் மிகுந்த ஆசை, பாசம் உடையவர் - பாண்டிச்சேரியில் இயற்கை எழில் சூழ வீடு கட்டி நிறைய பறவைகளுக்கு வசதி செய்துள்ளார் //
      கேடகவே நன்றாக இருக்கிறது. பல்வேறு பறவைகள் வரும்

      - //அவர் நிறைய செய்திகள் சொன்னார். தேன்சிட்டு பற்றி பேசிக்கொண்டிருந்தார்.//

      தேன்சிட்டு பறந்து கொண்டே தேன் குடிப்பது தண்னீர் அருந்துவது மிக அருமையாக இருக்கும் அதன் அலகு அவ்வளவு கூர்மை.
      தேன் சிட்டு பல வித நிறத்தில் இருக்கிறது.

      நீக்கு
  8. முன்பு இருந்த வீட்டிலாவது வேறுபட்ட சில பறவைகள் வருகை தரும்.  இந்த புதிய வீட்டின் அருகேயும் மரங்கள் இருந்தும் மாறுபட்ட பறவை எதையும் நான் கண்டதில்லை.  புறாக்களும், காக்கையும்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு இருந்த வீட்டிலாவது வேறுபட்ட சில பறவைகள் வருகை தரும். இந்த புதிய வீட்டின் அருகேயும் மரங்கள் இருந்தும் மாறுபட்ட பறவை எதையும் நான் கண்டதில்லை.//
      அந்த அந்த பறவைகளுக்கு வேண்டிய உணவும் கூடு கட்ட வசதியும் இருக்கும் இடத்தில் தான் அதன் வரவு இருக்கும்.
      புறாவும், காக்கையும் இருக்கிறது அல்லவா அவை எங்கும் இருக்கும் பொதுவான பறவையாகி விட்டது.

      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி.

      புறாக்களும், காக்கையும்தான்!

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. குருவிகளில்தான் எத்தனை வகைகள் உள்ளன... இந்த மாதிரி இளந்தளிரை வாயில் கவ்வியபடி விருட் விருட்டென்று பறந்து வரும் குருவிகள் அழகாக இருக்கும். ஒருதடவை நானும் அது எங்கள் வீட்டு ஜன்னலில் வந்து அமர்ந்த போது அதை படம் பிடித்து ஒரு முறை பதிவாக எழுதியிருக்கிறேன்.

    தாங்கள் எப்போதுமே தீவிரமான ஒரு பறவை நேசர். உங்களுக்காகவே பறவைகள் ஆங்காங்கே வந்தமர்ந்து அனேகவிதமான கோணங்களில் படங்கள் எடுக்க உதவுகின்றன. நீங்கள் எடுத்த அத்தனை படங்களும் நன்றாக உள்ளது.தங்கள் பதிவுகளில் பல பறவைகளைப் பற்றிய படங்களையும், விபரங்களையும், பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.

    அந்த ரோஸ் வண்ண பூக்கள் நிரம்பிய மரங்களின் படங்கள் அழகாக உள்ளது. இதையாவது நமக்கு விட்டு வைத்துள்ளார்களே என அந்தப் பறவைகள் நினைத்துக் கொள்ளும். இப்போது பசுமையான மரங்களின்றி பறவைகளும், தங்கள் கூடுகள் அமைக்க வேறிடம் தேடிச் செல்கின்றன. அந்த அளவிற்கு மக்களின் வீடுகள் பெருகி விட்டன.ஆனால், மக்களின் வீடுகளிலும், தங்களுக்கு பிடித்தமான இடங்களில் கூட்டை அமைக்க இயலாமல் தவிக்கின்றன.

    நீங்கள் கூறியபடி இப்போது புறாகளை அண்ட விடாமல் ஒவ்வொரு வீடுகளிலும் விரட்டுகின்றனர். எதிர் வீடு ஒன்றில் அவைகள் வந்து அவர்களின் திறந்த வெளி பால்கனிகளை அசுத்தப்படுத்துவதால் அவைகள் அதிகம் வராமலிருக்க முள் போன்ற அமைப்புடைய நீளமாக பட்டையாக கம்பு போல் ஒன்றை ஆங்காங்கே படுக்க வைத்துள்ளார்கள். அவைகள் அதையும் மீறி அவர்களின் பால்கனியில் காலையில் வந்து அமர்கிறது. எங்கும் கூடு அமைக்க இயலவில்லையே என ஒவ்வொரு இடமாக வந்து பார்த்து அந்த முற்கள் இல்லாத இடத்தில் ஜாக்கிரதையுடன் அமர்ந்து பறக்கிறது. அதுவும் தினமும் நம் நிலைமை இப்படியாகி விட்டதே என பேசி அலுத்துக் கொள்ளும் என நினைக்கிறேன்.

    மகாகவி பாரதியின் நினைவாக பல பாடல்களை பகிர்ந்து அவரது நினைவை போற்ற வைத்து விட்டீர்கள். அவரை என்றும் மறவாமல் இருப்போம். அருமையான தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹறிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. //

      நன்றி.

      //குருவிகளில்தான் எத்தனை வகைகள் உள்ளன... இந்த மாதிரி இளந்தளிரை வாயில் கவ்வியபடி விருட் விருட்டென்று பறந்து வரும் குருவிகள் அழகாக இருக்கும். ஒருதடவை நானும் அது எங்கள் வீட்டு ஜன்னலில் வந்து அமர்ந்த போது அதை படம் பிடித்து ஒரு முறை பதிவாக எழுதியிருக்கிறேன்.//

      நினைவு இருக்கிறது.

      //தாங்கள் எப்போதுமே தீவிரமான ஒரு பறவை நேசர். உங்களுக்காகவே பறவைகள் ஆங்காங்கே வந்தமர்ந்து அனேகவிதமான கோணங்களில் படங்கள் எடுக்க உதவுகின்றன. நீங்கள் எடுத்த அத்தனை படங்களும் நன்றாக உள்ளது.தங்கள் பதிவுகளில் பல பறவைகளைப் பற்றிய படங்களையும், விபரங்களையும், பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.//

      நன்றி கமலா.

      //அந்த ரோஸ் வண்ண பூக்கள் நிரம்பிய மரங்களின் படங்கள் அழகாக உள்ளது. இதையாவது நமக்கு விட்டு வைத்துள்ளார்களே//

      அந்த மரம் எங்கள் குடியிருப்பை கட்டிக் கொடுத்தவர் வீடு, பின் புற தோட்டத்தை அவர் தான் வாங்கி இருக்கிறார், வீடுகள் கட்டி விற்க போகிறார்.

      //. இப்போது பசுமையான மரங்களின்றி பறவைகளும், தங்கள் கூடுகள் அமைக்க வேறிடம் தேடிச் செல்கின்றன. அந்த அளவிற்கு மக்களின் வீடுகள் பெருகி விட்டன.ஆனால், மக்களின் வீடுகளிலும், தங்களுக்கு பிடித்தமான இடங்களில் கூட்டை அமைக்க இயலாமல் தவிக்கின்றன.//

      ஆமாம், உண்மைதான்.

      நீங்கள் கூறியபடி இப்போது புறாகளை அண்ட விடாமல் ஒவ்வொரு வீடுகளிலும் விரட்டுகின்றனர். எதிர் வீடு ஒன்றில் அவைகள் வந்து அவர்களின் திறந்த வெளி பால்கனிகளை அசுத்தப்படுத்துவதால் அவைகள் அதிகம் வராமலிருக்க முள் போன்ற அமைப்புடைய நீளமாக பட்டையாக கம்பு போல் ஒன்றை ஆங்காங்கே படுக்க வைத்துள்ளார்கள்.//

      கேட்கவே கஷ்டமாக இருக்கிறது.

      //அவைகள் அதையும் மீறி அவர்களின் பால்கனியில் காலையில் வந்து அமர்கிறது. எங்கும் கூடு அமைக்க இயலவில்லையே என ஒவ்வொரு இடமாக வந்து பார்த்து அந்த முற்கள் இல்லாத இடத்தில் ஜாக்கிரதையுடன் அமர்ந்து பறக்கிறது. அதுவும் தினமும் நம் நிலைமை இப்படியாகி விட்டதே என பேசி அலுத்துக் கொள்ளும் என நினைக்கிறேன்.//

      வீடு அமைப்பு மாறி விட்டது பறவைகளுக்கு கூடு கட்ட வசதி இல்லை.
      பறவைகளும் இப்போது கொஞ்சம் மனிதனிடம் பழகி சோம்பல் வந்து விட்டது. இருக்கும் இடத்திலேயே கூடை கட்ட நினைக்கிறது.

      //மகாகவி பாரதியின் நினைவாக பல பாடல்களை பகிர்ந்து அவரது நினைவை போற்ற வைத்து விட்டீர்கள். அவரை என்றும் மறவாமல் இருப்போம். அருமையான தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      மகாகவி அவர்கள் கவிதையை, பதிவை, படங்களை ரசித்து படித்து , பார்த்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.




      நீக்கு
  10. மனம் துள்ளிக்குதித்து மகிழ்ச்சி அடைகிறேன்...

    படங்கள் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்

      //மனம் துள்ளிக்குதித்து மகிழ்ச்சி அடைகிறேன்...

      படங்கள் அழகு...//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. பறவைகளுக்கான உணவையும்
    நீரையும் கூடி வாழ்வதற்கான வாய்ப்பு வசதிகளையும் இறைவன் அமைத்துக் கொடுத்தான்
    அத்தனையையும் கெடுத்ததே.
    மனிதனின் சாதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //பறவைகளுக்கான உணவையும்
      நீரையும் கூடி வாழ்வதற்கான வாய்ப்பு வசதிகளையும் இறைவன் அமைத்துக் கொடுத்தான்
      அத்தனையையும் கெடுத்ததே.
      மனிதனின் சாதனை.//

      ஆமாம், மனிதனின் வாழ்க்கை முறை மாறி விட்டது, வீடுகள் அமைப்பு மாறி விட்டது. மனிதனும் மாறி விட்டான்.

      நீக்கு
  12. சிறப்பான பதிவு.. இருந்தாலும் பறவைகளின் பரிதவிப்பு கண்டு மனம் நோகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிறப்பான பதிவு.. இருந்தாலும் பறவைகளின் பரிதவிப்பு கண்டு மனம் நோகின்றது.//

      ஆமாம், என்ன செய்ய முடியும் ? பறவைகளின் பரிதவிப்பு கண்டு மனம் நோக மட்டுமே முடியும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  13. அக்கா நீங்க முன்னாடி இந்த மரம் வெட்டின பகுதி உங்க வீட்டுல இருந்து அப்படி பார்த்தால் தெரியும் அது நீங்க போட்டு இருந்தீங்க படத்தோட போட்டு இருந்தீங்க அந்த மரங்கள் எல்லாம் வெட்றதுக்கு வண்டி வந்தது பத்தி... மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டால் அப்ப எப்படி பறவைகளுக்கு இடம் இருக்கும் இல்லையா மனம் நிஜமாகவே ரொம்ப வருத்தமான ஒரு விஷயம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      அக்கா நீங்க முன்னாடி இந்த மரம் வெட்டின பகுதி உங்க வீட்டுல இருந்து அப்படி பார்த்தால் தெரியும் அது நீங்க போட்டு இருந்தீங்க படத்தோட போட்டு இருந்தீங்க அந்த மரங்கள் எல்லாம் வெட்றதுக்கு வண்டி வந்தது பத்தி... மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டால் அப்ப எப்படி பறவைகளுக்கு இடம் இருக்கும் இல்லையா மனம் நிஜமாகவே ரொம்ப வருத்தமான ஒரு விஷயம்//

      ஆமாம், மரங்கள் வெட்டப்பட்டதும் பறவைகள் குறைந்து விட்டது.
      அப்புறம் புற்கள் இருந்தன. இப்போது அதுவும் பிடுங்க பட்டு மண் அடிக்கிறார்கள். அதனால் பறவைகளுக்கு உணவு கிடைக்கவில்லை கீதா. அதுதான் வருத்தமான் விஷயம் . இனி வெகு தூரம் போய் கூடு கட்ட மற்றும் உணவு தேட போக வேண்டும்.

      நீக்கு
  14. முன்ன நீங்க பக்கத்தில் இருக்கும் நிலத்தில் இருந்த மரங்கள் வெட்டப் போறாங்கன்னு சொல்லி பதிவு போட்டிருந்தது நினைவு இருக்கு கோமதிக்கா.

    இப்படி மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டால் பறவைகள் இப்படித் தவிக்கத்தான் செய்யும். மனம் ரொம்பக் கஷ்டப்படுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. தினைக்குருவி அழகு.

    மாமா முன்பு பறவைகள் வந்து கூடு கட்டும் போது உங்களோடு அவங்களும் அதுக்குப் பாதுகாப்பு அமைப்பாங்க அந்தப் பதிவுகள் எல்லாம் நினைவு இருக்கு. அது போல அவங்களும் உள்ள ஓடிப் போய் கேமரா எடுத்துக் கொண்டு வருவது ....என்று...நீங்க பதிவில் சொன்னவை எல்லாம் நினைவு இருக்கு,

    கூடு கட்ட பறவைகLள் வாயிl குச்கி புல் என்று கொண்டு வருவதைப் பார்க்க அவ்வளவு அழகா இருக்கும். இங்கு புறாக்கள் செய்வதைப் பார்க்கிறேன் படம் எடுக்க வேண்டும் அடுத்த முறை பார்க்கறப்ப.

    நீர்ப்பறவைகள் கூட அப்படிச் செய்யும்...நான் எடுத்திருக்கிறேன் இன்னும் பகிரவில்லை...நிறைய நிறைய இருக்கு கோமதிக்கா ஏரிகளில் எடுத்தவை. நேரம் தான் கிடைக்கவில்லை ...பகிர. ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டும்..வீடியோக்கள் தொகுக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினைக்குருவி அழகு.//

      ஆமாம், திணைக்குருவி அழகு.


      //மாமா முன்பு பறவைகள் வந்து கூடு கட்டும் போது உங்களோடு அவங்களும் அதுக்குப் பாதுகாப்பு அமைப்பாங்க அந்தப் பதிவுகள் எல்லாம் நினைவு இருக்கு. அது போல அவங்களும் உள்ள ஓடிப் போய் கேமரா எடுத்துக் கொண்டு வருவது ....என்று...நீங்க பதிவில் சொன்னவை எல்லாம் நினைவு இருக்கு,//

      ஆமாம், நினைவுகள் உங்களுக்கும் இருப்பது மகிழ்ச்சி.

      //கூடு கட்ட பறவைகLள் வாயிl குச்கி புல் என்று கொண்டு வருவதைப் பார்க்க அவ்வளவு அழகா இருக்கும். இங்கு புறாக்கள் செய்வதைப் பார்க்கிறேன் படம் எடுக்க வேண்டும் அடுத்த முறை பார்க்கறப்ப.//

      படம் எடுங்க கீதா.

      //நீர்ப்பறவைகள் கூட அப்படிச் செய்யும்...நான் எடுத்திருக்கிறேன் இன்னும் பகிரவில்லை...நிறைய நிறைய இருக்கு கோமதிக்கா ஏரிகளில் எடுத்தவை. நேரம் தான் கிடைக்கவில்லை ...பகிர. ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டும்..வீடியோக்கள் தொகுக்க வேண்டும்.//

      நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்ளுங்கள்.
      நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றி பின் பதிவாக்கலாம்.

      நீக்கு
  16. இந்த வகை மீன் கொத்தி, இப்பறவைகள் எல்லாம் இங்கு ஏரிகள் ஓரங்களில் பார்க்கலாம். இப்ப புள்ளிமூக்கு வாத்துகளைப் பார்க்க முடிகிறது அருகில் உள்ள ஏரியில். இந்த வாத்துகள் போனமுறை இந்த ஏரியில் இல்லை. இப்ப வந்திருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த வகை மீன் கொத்தி, இப்பறவைகள் எல்லாம் இங்கு ஏரிகள் ஓரங்களில் பார்க்கலாம்//

      படம் எடுங்க.


      . //இப்ப புள்ளிமூக்கு வாத்துகளைப் பார்க்க முடிகிறது அருகில் உள்ள ஏரியில். இந்த வாத்துகள் போனமுறை இந்த ஏரியில் இல்லை. இப்ப வந்திருக்கு.//
      ஏரிகரைக்கு நடைபயிற்சி போகும் போது எடுத்து வாங்க பதிவு போடுங்க.

      நீக்கு
  17. படங்கள் எல்லாம் அழகா இருக்கு கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாம் அழகா இருக்கு கோமதிக்கா//

      அனைத்தையும் ரசித்து கருத்துக்கள் அள்ளி வழங்கிய கீதா நன்றிகள் உங்களுக்கு.

      நீக்கு