வெள்ளி, 15 டிசம்பர், 2023

கார்த்திகை தீபமும் சொக்கப்பனையும்




மார்கழி பிறக்க போகிறது அதனால் வலையேற்றி வைத்த கார்த்திகை தீபத்திருநாள்   படங்களை பதிவாக்கி விட்டேன். இந்த பதிவில் கார்த்திகை தீப திருநாள், எங்கள் வீட்டில் நடந்தது, மகன் வீட்டில் நடந்தது,  மற்றும் கோவிலில் நடந்த சொக்கப்பனை படங்கள்  இடம்பெறுகிறது.



அண்ணாமலையார்  மகா தீபகார்த்திகை 


குறைவான விளக்குகள் தான் வைத்தேன், நிறைய வைத்த காலங்களை நினைத்து பார்த்து கொண்டேன்.



தாமரை விளக்கு மருமகள் வாங்கி அனுப்பினாள் தீபாவளிக்கு


அவல் பொரி, நெல்பொரி

உருண்டை பிடிக்கவில்லை, வெல்லபாகு போட்டு கிளறி வைத்து விட்டேன். அப்பம், அடை, உப்பில்லா கொழுக்கட்டை, மாவிளக்கு, மாவில் 27 நட்சத்திரங்களுக்கும் விளக்கு, மற்றும்
 பாகு காய்ச்சி ஊற்றி, பாசிப்பருப்பு, தேங்காய் தூண்டுகள், வறுத்துப்போட்டு ஏலக்காய் சுக்கு சேர்த்து செய்யும் பிடி கொழுக்கட்டை  செய்வோம் எப்போதும். .இந்த முறை  எதுவும் செய்யவில்லை. இதே பக்குவத்தில் பனையோலையில், திறளி இலையிலும் செய்வார்கள்.


 மாயவரத்தில் கோவில்பட்டி ஊரை சேர்ந்தவர்கள் கார்த்திகை தீப திருநாளுக்கு இந்த பனையோலை கொழுக்கட்டை செய்து கொடுத்து இருக்கிறார்கள். சக்தி விகடனில் வந்த காணொளி.

நேரமும் விருப்பமும் இருந்தால் பார்க்கலாம். பனையோலை கொழுக்கட்டை செய்முறை

திருவனந்தபுரம், நாகர் கோவில் பக்கம் இந்த பண்டிகைக்கு திரளி இலையில் கொழுகட்டை செய்வார்கள் அந்த இல்லை நல்ல வாசமாக இருக்கும்.





தொலைக்காட்சியில் திருவண்ணாமலை தீபம்  நேரலையில் பார்த்து விட்டு  அருகில் இருக்கும் ஐயனார் கோவிலில் சொக்கபனை ஏற்றுவதை பார்க்க போனேன். காலை முதல் பண்டிகை வேலைகள்  பார்த்தது கால் வலி   இருந்தது, இருந்தாலும் எப்போதும்  போய் வருவது போல போய்  தரிசனம் செய்து  வந்து விட்டேன்.

 அய்யனார், பிள்ளையார், முருகன்

நிலவும், சொக்கபனையும் இந்த முறை சின்னதாக வைத்து இருந்தார்கள். பெரிய பனை மரம் உயரம் வைப்பார்கள் . 
பனை மரம் உயரம் வைப்பது பற்றிய  "உவரி" கோவிலில் இப்போதும் நடப்பதை சக்தி விகடனில் படித்தேன். அதன் தொகுப்பு கீழே:-


சகல ஆலயங்களிலும் சொக்கப்பனை வைபவம் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படும். ‘குறிப்பாக உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் வைக்கப்படும் சொக்கப்பனை தமிழகத்திலேயே பிரமாண்டமானது’ என்கிறார், சிவபக்தரும் உவரி திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணிக் கமிட்டியின் தலைவருமான ஜி.டி.முருகேசன். அவரே தொடர்ந்து சொக்கப்பனை வைபவத்தின் சிறப்புகளையும், தாத்பரியத்தையும் விவரித்தார். ‘‘பெரிய புராணத்தில் அற்புதமான பாடல் உண்டு.

//காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணாய

நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்

நாணாது மேடிய மால் நான்முகனும் காண நடுச்சேணாலும்

தழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தார்...

இதுதான் அந்தப் பாடல்.

திருமாலும் பிரம்மனுமே அடிமுடி தேடிக் கண்டடைய முடியாத வண்ணம், நெருப்புத் தழலாகக் காட்சியளித்த பரமேஸ்வரனை அக்னிமயலிங்கமாக வழிபடுவதே சொக்கப்பனையின் தாத்பரியமாகும்.


திருக்கார்த்திகை தினத்தில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக்கூம்பின் முன் ஸ்வாமி எழுந்தருள்வார். சில கோயில்களில் அம்பாளும் ஸ்வாமியும் எழுந்தருள்வார்கள். சில கோயில்களில் பஞ்சமூர்த்திகள் (விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்) எழுந்தருள்வார்கள். அவர்களுக்கு தீபாராதனை முடிந்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும்.

கொழுந்துவிட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள். சுமார் முப்பது, முப்பத்தைந்து அடி உயரத்துக்கு (முழுப் பனையையே சொக்கப்பனைக்குப் பயன்படுத்துவார்களாம்) அமைக்கப்படும் சொக்கப்பனை எங்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலின் தனிச்சிறப்பு’’ என்றார் அவர்.


சில ஊர்களில், சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக, காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயற்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை//

நன்றி ஆனந்த விகடன்.

எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இருந்தாலும் சொக்கபனை பதிவு என்பதால் சேர்த்து இருக்கிறேன். பெரிய புராண பாடலும் விளக்கமும்.

அய்யனார் கோவிலில் உள்ள லிங்கோத்பவர்.


அண்ணாமலைக்கு அரோகரா என்று குழந்தைகள் ஆரவாரம் செய்தார்கள்



கார்த்திகை திருநாள் அன்று அய்யனார் கோயிலில் நடந்த சொக்கபனை  சிறிய காணொளிதான் பாருங்க.

இனி மகன் ஊர் கார்த்திகை  தீபத்திருநாள் படங்கள்:- பேரன் அனுப்பி வைத்தான். நேரலையிலும் காட்டினான்.


முன் வாசல் மருமகளின் அக்கா வந்து இருந்தார்கள் இருவரும் சேர்ந்து விளக்கு ஏற்றுகிறார்கள்.




பின் வாசலில் மகன் தயார் செய்த  மீனாட்சி 


பேரன் விளக்கு ஏற்றுகிறான்.






நானும், மருமகளின் அம்மாவும் நேரலையில் பார்க்கிறோம்




முன்பு போய் இருந்த போது தாத்தவும், பேரனும், நானும் விளக்கு ஏற்றிய பழைய படம்




கார்த்திகை தீபத் திருநாள் அன்று பேரன் வைத்த புஷ்வாணம்
அழகாய் மேல் எழுப்பி பின் சட சட எனும் சத்தம் போட்டது.
காணொளி ஏற மறுக்கிறது.

நேற்று தஞ்சையம்பதி வலைத்தளம் வைத்து இருக்கும் சகோதரர் துரைசெல்வராஜூ அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருகை தந்தார்கள். உடல் நிலை  சரியில்லா சமயத்திலும், உறவினர் இல்லத்தின் திருமணத்தில் கலந்து கொண்டு  அப்படியே  இங்கு வந்து பல  நல்ல விஷயங்களை பேசி சென்றார்கள். நட்பை போற்றும் உள்ளம் வாழ்க!


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------------------------------------

41 கருத்துகள்:

  1. அழகிய படங்களுடன் விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.

    காணொளி வெகு சிறப்பாக உள்ளது.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //அழகிய படங்களுடன் விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.//

      நன்றி.

      //காணொளி வெகு சிறப்பாக உள்ளது.
      பகிர்வுக்கு மிக்க நன்றி.//

      படங்களை, காணொளியை ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி. உடன் பதில் தரமுடியவில்லை, தம்பி, தங்கைகள் வீட்டுக்கு சென்று விட்டேன் நேற்று.

      நீக்கு
  2. தீப தரிசனம்..

    சிறப்பான பதிவு..
    பாரம்பரியம் தொடர்வதே பெருமை..

    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //தீப தரிசனம்..

      சிறப்பான பதிவு..
      பாரம்பரியம் தொடர்வதே பெருமை..

      மகிழ்ச்சி..//

      நன்றி

      நீக்கு
  3. தங்கள் இல்லத்திற்கு வந்ததனாலேயே பல விஷயங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது..

    அன்பும் அருளும் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தங்கள் இல்லத்திற்கு வந்ததனாலேயே பல விஷயங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது..//

      தங்களுக்கு தெரியாததா!

      அன்பும் அருளும் வாழ்க..//

      நன்றி.

      நீக்கு
  4. தமிழகத்தின் மிகப் பெரிய சொக்கப்பனை எங்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலினுடையது..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தமிழகத்தின் மிகப் பெரிய சொக்கப்பனை எங்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலினுடையது..

      மகிழ்ச்சி.. நன்றி..//

      கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் பார்த்தது இல்லை உவரி கோவில்.
      தூத்துக்குடி, மற்றும் பல கோவில்களில் பெரிய பனைமரம் நடபட்டு தான் சொக்கபனை வைப்பார்கள்.

      நீக்கு
  5. நேற்று இரவில் இருந்து தஞ்சையில் மழை பெய்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நேற்று இரவில் இருந்து தஞ்சையில் மழை பெய்கின்றது..//

      இங்கும் மழை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. துரை ஜி அவர்களிடம் பேசினால் நிறைய விடயங்கள் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //துரை ஜி அவர்களிடம் பேசினால் நிறைய விடயங்கள் கிடைக்கும்.//

      நிறைய விடயங்களை பற்றிய கலந்துரையாடலாக இருந்தது.
      உங்கள் மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. கோமதிக்கா நீங்க சொல்லியிருப்பது போல் நாங்கள் எங்கள் ஊரில் திரளி இலையில்தான் செய்வதுண்டு. நல்ல மணமாக இருக்கும். அங்கு ஆற்றுக்கால் பகவதி கோயில் விழாவின் போதும் கொழுக்கட்டை செய்வோமே அதுவும் திரளி இலைதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா நீங்க சொல்லியிருப்பது போல் நாங்கள் எங்கள் ஊரில் திரளி இலையில்தான் செய்வதுண்டு. நல்ல மணமாக இருக்கும். அங்கு ஆற்றுக்கால் பகவதி கோயில் விழாவின் போதும் கொழுக்கட்டை செய்வோமே அதுவும் திரளி இலைதான்.//

      ஆமாம், கீதா. மாமா ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கலுக்கு அழைத்து கொண்டே இருந்தார்கள் போகவே இல்லை.
      மாமா வீடு வ்ரை பொங்கல் வைப்பார்கள்.
      மாமா இருந்தவரை மாமா பென் ஊருக்கு போய் விட்டு வரும் போது திரளி இலை வாங்கி வருவாள்.

      நீக்கு
  8. மருமகள் வாங்கிக் கொடுத்த தாமரை விளக்கு மிக அழகு. அக்கா சின்னதாக வைத்தால் என்ன, இறைவன் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வார். மனதில் தீபம் ஏற்றுவதுதானே அவர் காட்டும் வழி!

    நானுமே சிறிதாகத்தான் வைக்கிறேன் கோமதிக்கா. நீங்கள் வைத்திருக்கும் அளவுதான் அதுவும் அகல்கள்தான்.

    நீங்கள் வைத்திருப்பதும் மகன் வீட்டு கார்த்திகை தீப ஒளி விளக்கு அலங்காரம் எல்லாம் மிக மிக அழகு அதுவும் மகன் செய்திருக்கும் மீனாட்சி வெகு அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருமகள் வாங்கிக் கொடுத்த தாமரை விளக்கு மிக அழகு. அக்கா சின்னதாக வைத்தால் என்ன, இறைவன் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வார். மனதில் தீபம் ஏற்றுவதுதானே அவர் காட்டும் வழி!//

      ஆமாம் கீதா. மன இருளை போக்கி அகத்தில் ஒளி ஏற்றினால் போதும் தான். அந்த காலத்தில் கார்த்திகை மாதம் சீக்கிரம் இருட்டி விடும் அதனால் மாலை வாசலில் விளக்கு வைத்தார்கள். மார்கழி மாதம் காலை மக்கள் கோவிலுக்கு போவார்கள், பஜனை பாடி கொண்டு அதிகாலை கோலம் போடும் போட்டு விளக்கு வைத்தார்கள்.
      இப்போது மின்சார விளக்கு வந்த பின்னும் நாம் விளக்கு வைக்கும் மரபை கடைப்பிடிக்கிறோம். தை பொங்கல் வரை விளக்கு வைப்போம் அதன் பின் வைக்க மாட்டோம். கேரளா போன்ற ஊர்களில் , கிரமாங்களில் இன்னும் தினம் மாடவிளக்கு ஏற்றும் வழக்கம் உண்டு.

      நீக்கு
    2. //நானுமே சிறிதாகத்தான் வைக்கிறேன் கோமதிக்கா. நீங்கள் வைத்திருக்கும் அளவுதான் அதுவும் அகல்கள்தான்.//

      அவ்வளவுதான் குனிந்து ஏற்ற முடியும் கீதா இப்போது என்னால்.


      //நீங்கள் வைத்திருப்பதும் மகன் வீட்டு கார்த்திகை தீப ஒளி விளக்கு அலங்காரம் எல்லாம் மிக மிக அழகு அதுவும் மகன் செய்திருக்கும் மீனாட்சி வெகு அழகு!//

      நன்றி கீதா.

      நீக்கு
  9. பேரனும் நீங்களும் மாவாவும் ஏற்றுவதும், இப்போது பேரன் ஏற்றியிருக்கும் விளக்குகளுடன் ஆன படமும் உங்களுக்கு பழைய நினைவுகளுடன் இப்போது சேர்ந்துகொள்ளும் புதிய நினைவு பின்பு நினைத்துக் கொள்ள. சந்தோஷமான விஷயங்கள் கோமதிக்கா.

    நீங்கள் செய்திருக்கும் வெல்லம் கலந்து பொரி இரு வகையும் சூப்பர்.

    எங்கள் ஊர் சொக்கப்பனை நினைவுக்கு வந்தது.

    பேரன் புஸ்வானம் வைக்கும் படம் எல்லாமே ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா. அனைத்துப் படங்களும் அருமை.

    இந்த வருடம் இப்படி இனிதாகத் தீபத்திருநாள் நல்லபடியாகக் கடந்து சென்றது. இப்படியே தொடர எல்லாம் வல்ல அந்த மாபெரும் சக்தியை வணங்குவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரனும் நீங்களும் மாவாவும் ஏற்றுவதும், இப்போது பேரன் ஏற்றியிருக்கும் விளக்குகளுடன் ஆன படமும் உங்களுக்கு பழைய நினைவுகளுடன் இப்போது சேர்ந்துகொள்ளும் புதிய நினைவு பின்பு நினைத்துக் கொள்ள. சந்தோஷமான விஷயங்கள் கோமதிக்கா.//

      நல்ல நினைவுகளை நினைத்துப்பார்த்து மகிழ்ந்து கொள்கிறேன் கீதா.

      //நீங்கள் செய்திருக்கும் வெல்லம் கலந்து பொரி இரு வகையும் சூப்பர்.//

      உருண்டையாக உருட்டாமல் செய்து வைத்து விட்டேன்.

      //எங்கள் ஊர் சொக்கப்பனை நினைவுக்கு வந்தது.//

      நினைவுகள் வந்தது மகிழ்ச்சி.

      //பேரன் புஸ்வானம் வைக்கும் படம் எல்லாமே ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா. அனைத்துப் படங்களும் அருமை.//

      ரசித்துப்பார்த்தற்கு நன்றி கீதா.

      //இந்த வருடம் இப்படி இனிதாகத் தீபத்திருநாள் நல்லபடியாகக் கடந்து சென்றது. இப்படியே தொடர எல்லாம் வல்ல அந்த மாபெரும் சக்தியை வணங்குவோம்.//
      ஆமாம், நல்லபடியாக கடந்து சென்றது.

      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி கீதா.


      நீக்கு
  10. நாங்கள் அரசுக் குடியிருப்பில் இருந்தோம்.  அப்போது வரிசையாக இருக்கும் வீடுகளில் எல்லோரும் நிறைய விளக்குகள் வைத்து மின் விளக்குகளை அணைத்து தீப ஒளி வரிசையை அழகு பார்த்திருக்கிறோம்.  பார்க்கவே அழகாக, கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //நாங்கள் அரசுக் குடியிருப்பில் இருந்தோம். அப்போது வரிசையாக இருக்கும் வீடுகளில் எல்லோரும் நிறைய விளக்குகள் வைத்து மின் விளக்குகளை அணைத்து தீப ஒளி வரிசையை அழகு பார்த்திருக்கிறோம். பார்க்கவே அழகாக, கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.//

      ஆமாம், தீப ஒளி வரிசையை மின்சார விளக்கை அணைத்து விட்டு பார்க்கும் போது அழகாய் தான் இருக்கும். நாங்கள் சிறு வயதில் வீடு வீடாக விளக்கு அலங்காரம் பார்க்க போவோம்.

      கோலங்கள் அழகாய் போட்டு கோலத்தில் விளக்குகள் நிறைய வைப்போம். விளக்குகள் காற்றில் அணையும் மீண்டும் அதை ஏற்றி வைப்போம்.

      சில நேரம் மழை பெய்யும் , அப்போது இப்படி விளக்கை எரிய விட மாட்டேன் என்கிறதே! என்று மழை மேல் கோபம் வரும்.

      அடுத்து காற்று, விளக்கு வைக்கும் அன்று அப்படி ஒரு காற்று அடிக்கும், விள்ககு அணையாமல் இருக்க பாட்டில்களில் விளக்கை வைத்து வைப்போம். இப்போது கண்ணாடி கூடு வந்து விட்டது வித விதமாக .





      நீக்கு
  11. தாமரை விளக்கு அழகாக இருக்கிறது. திரளி இலை என்றால் என்ன? பனையோலையில் செய்வதால் அதற்கொரு தனி வாசனை இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://www.youtube.com/watch?v=26jVxxK7mls இந்த சுட்டியில் பூவரசு இலையில், பனையோலையில், திரளி இலையில் . கொழுக்கட்டை செய்யும் முறை இருக்கிறது பாருங்கள்.


      https://www.youtube.com/watch?app=desktop&v=MEq7w-4RMFA
      இதில் திரளி மரம் இருக்கும். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

      திரளி இலை கொஞ்சம் மாவிலை மாந்தளிர் மாதிரி இருக்கும் கொழுந்தாக இருக்கும் போது, முற்றிய இலை பச்சை கலரில் இலையில் கோடுகளுடன் இருக்கும். முதலில் மரத்தில் இலை துளிர் விடும் போது ரோஸ் கலரில் இருக்கும்.

      மிக வாசனையாக இருக்கும். கார்த்திகை மாதம் அந்த இலையில் கொழுக்க்கட்டை செய்து சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது என்பார்கள் வாசமும் நன்றாக இருக்கும்.

      பனையோலையும் மிகவும் முற்றாத ஒலையில் செய்வார்கள். நாங்கள் அதில் செய்வது இல்லை, பக்கத்து வீட்டில் செய்து கொடுத்து சாப்பிட்டு இருக்கிறோம் நன்றாக இருக்கும் வாசனையும் இருக்கும்.


      திரளி இலை, வாழை இலையில் செய்து இருக்கிறோம்.

      நீக்கு
  12. கார்த்திகையை இவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடுவது சிறப்பு.  தாத்தாவும் பேரனும் விளக்கொளியில் படம் அழகு.  அந்த நாளில் வாணமோ, வெடிகளோ அதிகம் வைத்ததில்லை.  படங்கள் யாவுமே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கார்த்திகையை இவ்வளவு கோலாகலமாகக் கொண்டாடுவது சிறப்பு. தாத்தாவும் பேரனும் விளக்கொளியில் படம் அழகு. அந்த நாளில் வாணமோ, வெடிகளோ அதிகம் வைத்ததில்லை. படங்கள் யாவுமே அழகு.//

      பண்டிகைகளுக்கு , அப்போது செய்ய படும் உணவுகளுக்கும் உடல் ஆரோக்கியம் சம்பந்தபட்டது ஸ்ரீராம். குளிர் காலத்தில் உடலில் அரிப்புகள் ஏற்படும் அதை தடுக்க நெல்பொரி, அவல் பொரி நல்லது என்பார்கள், அதில் சேர்க்கப்படும் கொப்பரை தேங்காய், எள் பொட்டுகடலை உடலுக்கு நல்லது.

      அடை குளிருக்கு காரசாரமாக பருப்புகள் சேர்த்து செய்வதால் உடலுக்கு சத்தும் சுவையும் தரவல்லது.இனிப்பு கொழுக்கட்டையில்
      சேர்க்க படும் வெல்லம் இரும்பு சத்து, உப்பில்லா கொழுக்கட்டையும் உடலுக்கு நல்லது.

      தீபாவளிக்கு வாங்கும் வெடியில் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்வோம் அம்மா சொல்லி கொடுத்த பாடம்.

      பண்டிகை சொந்தங்களுடன் கொண்டாடும் போது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. என் தளம் எங்கள் பிளாக் சைட் பாரில் வரவில்லையே ஏன்?

      அதுதான் உங்களுக்கு தெரியவில்லை நான் பதிவு போட்டது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. எங்கள் தளத்தின் சைட் பாரில் வந்திருக்கிறது.  அங்கிருந்துதான் வந்தேன்!  அடுத்தடுத்த பதிவுகள் அவற்றைப் பின்னுக்குத் தள்ளி விட்டன.  ஐந்து தலங்களுக்கு மேல் காட்டாது.  அதற்கு மேலே (அல்லது கீழே) உள்ளவற்றை பார்க்க 'மேலும் காண்பி' என்பதை க்ளிக் செய்ய வேண்டும்!

      நீக்கு
    3. //ஐந்து தலங்களுக்கு மேல் காட்டாது. அதற்கு மேலே (அல்லது கீழே) உள்ளவற்றை பார்க்க 'மேலும் காண்பி' என்பதை க்ளிக் செய்ய வேண்டும்!//

      ஓ! சரி ஸ்ரீராம். உங்கள் தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  13. முதல் படம் மிக அழகு.

    தீபத் திருநாள் படங்கள் மிகவும் கவர்ந்தன.

    அரசு சாரும் பேரனும் இருக்கும் படம், பேரன் கார்த்திகைத் தீபங்களைத் தட்டு நிறையக் கொண்டுவந்து ஏற்றுவது அவ்வளவு அழகாக இருக்கிறது. தன் தந்தை போல, திருநாவுக்கரசு சாரும் நூற்றாண்டை எட்டியிருக்கலாமே என்ற எண்ணமும் வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்க நெல்லைத் தமிழன் வாழ்க வளமுடன்

      முதல் படம் மிக அழகு.//

      மகன் ஒரு தீபாவளிக்கு அனுப்பிய மண் அலங்கார விளக்கு

      தீபத் திருநாள் படங்கள் மிகவும் கவர்ந்தன.//

      நன்றி.

      //அரசு சாரும் பேரனும் இருக்கும் படம், பேரன் கார்த்திகைத் தீபங்களைத் தட்டு நிறையக் கொண்டுவந்து ஏற்றுவது அவ்வளவு அழகாக இருக்கிறது.//

      சார்தான் அப்படி எப்போதும் கார்த்திகை தீபங்களை அப்படி தட்டுகளில் வைத்து ஏற்றி தருவார்கள். பின் தட்டுடன் சுவாமி படங்களுக்கு பூஜை செய்வார்கள். பின் தட்டுடன் வாசலுக்கு கொண்டு போய் எல்லா இடங்களிலும் வைப்போம்.
      மாமா போல அவர்கள் 100 ஆண்டு எங்களுடன் இருக்க நாங்கள் கொடுத்து வைக்கவில்லை. இறைவன் கொடுத்த காலங்களை நினைத்துப்பார்த்து மகிழ்ந்து கொள்கிறேன்.

      தன் தந்தை போல, திருநாவுக்கரசு சாரும் நூற்றாண்டை எட்டியிருக்கலாமே என்ற எண்ணமும் வந்தது//






      நீக்கு
    2. இரண்டு விஷயம் எனக்கு உறுத்தும் கோமதி அரசு மேடம். வல்லி சிம்ஹன்+அவர் கணவரைச் சந்திக்க முடியாதது. உங்களை+அரசு சாரை சந்திக்கமுடியாதது (இருவரையும் சேர்த்து தம்பதிகளாக). அரசு சாரிடம் நான் பேசித் தெரிந்துகொள்ள நிறைய விஷயம் இருக்கும். நிச்சயம் என்னுடன் நிறைய நேரம் செலவழித்து நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் விளக்கமாகச் சொல்லியிருப்பார். பதிவுகளின் மூலம் நீங்கள் எல்லோரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள்.

      நீக்கு
    3. //இரண்டு விஷயம் எனக்கு உறுத்தும் கோமதி அரசு மேடம். வல்லி சிம்ஹன்+அவர் கணவரைச் சந்திக்க முடியாதது. உங்களை+அரசு சாரை சந்திக்கமுடியாதது (இருவரையும் சேர்த்து தம்பதிகளாக). //

      உங்கள் வார்த்தைகள் நெகிழ்வு. நானும் வல்லி அக்காவை சாரை சந்திக்க முடியவில்லையே என்று நினைத்து கொள்வேன்.
      சில விஷயங்கள் நம் கையில் இல்லை.


      //அரசு சாரிடம் நான் பேசித் தெரிந்துகொள்ள நிறைய விஷயம் இருக்கும். நிச்சயம் என்னுடன் நிறைய நேரம் செலவழித்து நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் விளக்கமாகச் சொல்லியிருப்பார். //

      ஆமாம், நிறைய தெரிந்து கொள்ளலாம். ஆன்மீகம் பற்றி, அரசியல் பற்றி, கோவில்கள் போகும் வழி, கோவிலின் தலவரலாறு எல்லாம் சொல்வார்கள். நான் நிறைய அவர்களிடம் தெரிந்து கொண்டு இருக்கலாம், வாய்ப்புகளை தவற விட்டவள். தினம் அதைப்பற்றி நினைக்காத நேரம் இல்லை.

      //நிச்சயம் என்னுடன் நிறைய நேரம் செலவழித்து நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் விளக்கமாகச் சொல்லியிருப்பார்.

      ஆமாம், மகனும் சாரும் அப்படித்தான் பல விஷயங்களை உரையாடுவார்கள் மணி கணக்காய். பேத்தி தாத்தா இருந்தால் நிறைய தெரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறாள்.

      //பதிவுகளின் மூலம் நீங்கள் எல்லோரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள்.//

      உங்கள் அன்புக்கு நன்றி.

      நீக்கு
  14. சிறிய வயதில் சொக்கப்பனை கொளுத்துவதை பூலாங்குறிச்சி என்ற ஊரில் பார்த்திருக்கிறேன். எல்லாம் எரிந்ததும், குச்சிகளை எடுக்கப் போட்டிபோடுவார்கள், வயல்களில் வைக்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிறிய வயதில் சொக்கப்பனை கொளுத்துவதை பூலாங்குறிச்சி என்ற ஊரில் பார்த்திருக்கிறேன்.//

      ஓ! பெரிதாக வைப்பார்களா?

      //எல்லாம் எரிந்ததும், குச்சிகளை எடுக்கப் போட்டிபோடுவார்கள், வயல்களில் வைக்க.//

      நாங்களும் எடுத்து வந்து எங்கள் தோட்டத்தில் வைத்து இருக்கிறோம்.
      அதன் கொழுந்து பறந்து வரும் போது பிடித்து நெற்றியில் பூசிக் கொள்வோம். குருக்கள் அதை பிடித்து நெய்யில் குழைத்து இறைவனுக்கு வைப்பார். கண் திருஷ்டி போகும் என்பார்கள்.
      மாயவரத்தில் ஒவ்வொரு கார்த்திகைக்கும் சிவன் கோவில், பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவிலும் மூன்றிலும் பார்த்து விடுவோம்.

      இங்கு வந்தபின் அய்யனார் கோவிலில் வருடம் தோறும் பார்த்து விடுவோம். அந்த நினைவுகளில் இந்த வருடமும் போய் வந்து விட்டேன்.

      நீக்கு
  15. பிடி கொழுக்கட்டை செய்முறை சுட்டி இருக்கிறதா? இல்லையெனில் சுருக்கமான செய்முறை தாருங்கள்.

    துரை செல்வராஜு சார் உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. பிடி கொழுக்கட்டை செய்முறை சுட்டி இருக்கிறதா? இல்லையெனில் சுருக்கமான செய்முறை தாருங்கள்.//

    https://www.youtube.com/watch?v=Zob5Yh64wmE இதில் பிடி கொழுக்கட்டை செய்யும் முறை இருக்கிறது. இதில் பச்சரிசி மாவை ஊறவைத்து , திரித்து(பொடி) செய்து வெல்லபாகு வைக்காமல் செய்கிறார்கள்.
    இது உடனே சாப்பிட நன்றாக இருக்கும், வைத்து சாப்பிட முடியாது.

    எங்கள் அம்மா சொல்லி கொடுத்தது ஊறவைத்த பச்சரிசியை பொடி செய்து கொண்டு சலித்த மாவை வறுத்து வைத்து கொள்வோம், அதன் பின் பாசிபருப்பு, கறுப்பு எள் , மற்றும் தேங்காயை பல் பல் ஆக கீறி போட்டு நெய்யில் வறு த்து போட்டு வெல்லத்தை பாகு காய்ச்சி ஊற்றி (பாகு லேசாக கையில் ஒட்டும் பதம் வந்தால் போதும். முறுகி விடாமல் பதமாக இருக்க வேண்டும்) ஒரு கிலோ பச்சரிசி மாவுக்கு முக்கால் கிலோ வெல்லம் போட வேண்டும் இனிப்பு தேவையான அளவு இருந்தால்தான் நன்றாக இருக்கும்.

    பின் பிடி கொழுகட்டையாக பிடித்து வேக வைத்து எடுக்க வேண்டும் 10 நாட்களுக்கு மேல் இருக்கும். .

    //துரை செல்வராஜு சார் உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி.//

    ஆமாம், நட்புகளை சந்திப்பது மகிழ்ச்சிதான்.

    உங்கள் கருத்துகளுக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.... விரைவில் செய்துபார்ப்பேன். எனக்கும் பிடி கொழுக்கட்டை (இனிப்பு) ரொம்பப் பிடிக்கும்.

      நீக்கு
    2. //மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.... விரைவில் செய்துபார்ப்பேன். எனக்கும் பிடி கொழுக்கட்டை (இனிப்பு) ரொம்பப் பிடிக்கும்.//

      செய்து பாருங்கள் நெல்லை. மீண்டும் வந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  17. தங்கள் வீட்டுக் கார்த்திகை தீபங்களும், மகன் வீட்டில் ஏற்றிய தீபங்களும் அருமை. மருமகளின் பரிசான தாமரை விளக்கு அழகு. கால் வலியைப் பொருட்படுத்தாமல் கோயில் சென்று தரிசனம் செய்து வந்தது மனதுக்கு நிறைவாகவே இருந்திருக்கும். நிலவோடு ஒளிருகிறது சொக்கப்பனை. ஊரில் இருந்த காலத்தில் பார்த்தவை. அப்போது எங்கள் வீட்டு வாசலிலும் சொக்கப்பனை வைப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //தங்கள் வீட்டுக் கார்த்திகை தீபங்களும், மகன் வீட்டில் ஏற்றிய தீபங்களும் அருமை. மருமகளின் பரிசான தாமரை விளக்கு அழகு.//

      நன்றி ராமலக்ஷ்மி.

      //கால் வலியைப் பொருட்படுத்தாமல் கோயில் சென்று தரிசனம் செய்து வந்தது மனதுக்கு நிறைவாகவே இருந்திருக்கும்.//

      ஆமாம் ராமலக்ஷ்மி.

      மார்கழி மாதம் ஆரம்பித்து விட்டது சின்ன வயது முதல் காலை கோவிலுக்கு போய் வரும் பழக்கம் இப்போது குடியிருப்பு வளாகத்தில் உள்ள பிள்ளையாரை தரிசனம் செய்து திருப்த்தி பட்டு கொள்கிறேன்.

      //நிலவோடு ஒளிருகிறது சொக்கப்பனை. ஊரில் இருந்த காலத்தில் பார்த்தவை. அப்போது எங்கள் வீட்டு வாசலிலும் சொக்கப்பனை வைப்போம்.//

      ஆமாம் முன்பு பெளர்ணமிக்கு கோவில் போய் நிலவை எடுத்து பதிவு செய்வேன். எங்கள் வீட்டிலிருந்து அதிகாலை நிலவை தான் பார்க்க முடியும் .

      உங்கள் பழைய சிறு வயது நினைவுகள் வந்தது மகிழ்ச்சி.



      நீக்கு
  18. /பாசிபருப்பு, கறுப்பு எள் , மற்றும் தேங்காயை பல் பல் ஆக கீறி போட்டு/ இந்த பிடிக்கொழுக்கட்டை நானும் ஒவ்வொரு கார்த்திகைக்கு செய்வேன். இந்த முறைதான் செய்ய இயலவில்லை.

    சிறுவயதில், காரடையான் நோன்புக்கும் இந்த கொழுக்கட்டை செய்வார்கள் என நினைவு. அப்போது அதை ஒளவையார் கொழுக்கட்டை எனச் சொல்லி பெண் குழந்தைகளுக்கு மட்டும் சாப்பிடக் கொடுப்பார்கள். அண்ணன்மார்கள் தங்களுக்கு ஏன் தரவில்லை என சண்டைக்கு வருவார்கள்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாசிபருப்பு, கறுப்பு எள் , மற்றும் தேங்காயை பல் பல் ஆக கீறி போட்டு/ இந்த பிடிக்கொழுக்கட்டை நானும் ஒவ்வொரு கார்த்திகைக்கு செய்வேன். இந்த முறைதான் செய்ய இயலவில்லை.//

      நம் ஊரில் பிள்ளையார் சதுர்த்தி, கார்த்திகை தீபத்து அன்றும் செய்வோம். ஒளவையார் கொழுக்கட்டை உப்பில்லாமல் செய்வோம். அது பெண்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டும். கார்த்திகை அன்று செய்யும் உப்பில்லா கொழுக்கட்டை எல்லோரும் சாப்பிடலாம். காரடையான் நோன்புக்கு செய்வார்கள் அதில் பிடிகொழுக்கட்டையாக செய்ய மாட்டார்கள், தட்டி அடை போல செய்து வேக வைப்பார்கள்.
      ஊரில் மழை, வெள்ளம் உறவினர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா?

      உங்கள் கருத்துக்களூக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு