சனி, 5 ஜூலை, 2014

திருப்பூவண உலா




வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழையோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

                                                                  ----அப்பர் தேவாரம்


திருவுடை யார்திருமால் அயனாலும்
உருவுடை யார் உமையாளை ஓர் பாகம்
பரிவுடை   யார் அடைவார்வினை தீர்க்கும்
புரிவிடை  யார் உறை பூவணம் ஈதோ

                                                                 ---- சுந்தரர்.

மாடவீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம்
பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணி  பொன்கொழித்து
ஓடநீரால் வைகை சூழும் உயர்திருப் பூவணமே.

                                                               ---திருஞானசம்பந்தர்.

தென்பாண்டி நாட்டுத் தேவாரத் தலங்களில் திருப்பூவணம் 11 வது தலம்.
மதுரையிலிருந்து கிழக்கே 19 கி,மீ தொலைவில் உள்ளது. இதைப் புஷ்பவனம் என்றும் கூறுவார்கள்..

மூலவர் சுயம்பு லிங்கமாய் இருக்கிறார்.
இறைவன் பெயர் -  புஷ்பவனநாதர் , பூவணநாதர், பாஸ்கரபுரீசர், பிதிர்மோக்ஷபுரீசர், பிரம்மபுரீசர் ,ஏகஸ்யசிதம்பரேசர், திருப்பூவணேசர்

அம்மன்-    செளந்தர நாயகி, வடிதம்மை, சுவர்ணவல்லி, அன்னபூரணி,அழகியநாயகி, அழகிய மின்னம்மை, மின்னாள் என்பன.
தனி சன்னதியில்  இருக்கிறார்.

தல விருட்சம் -  பலா.
தீர்த்தம் = மணிகர்ணிகை. வகைநதி., வசிட்ட இந்திர தீர்த்தங்கள்.

இத்தலத்திற்கு மறுபெயர்கள் -புஷ்பவனம், புஷ்பவனகாசி, புஷ்பபுரம், பாஸ்கரக்ஷேத்திரம். பிதிர்மோக்ஷபுரி, பிரம்மபுரி, ஏகசிய சிதம்பரம், பூவணம்,
பூவணக்காசி, பூவை என்பனவாம்.

தீர்த்தத்திற்கு மறு பெயர்கள்:-
வையை, மணிகர்ணிகை, அல்லது மணிகுண்டம், தேவிகுண்டம், பாபநாசம், பிரம்மதீர்த்தம், லக்ஷ்மிதீர்த்தம், மார்க்கண்டேயர் தீர்த்தம், நளதீர்த்தம், விஷ்ணுதீர்த்தம், ஆகியன .

 இத்தலத்தில் உமையம்மை வைத்து வளர்த்த மரம், கிருதயுகம் முதலிய நான்கு யுகங்களில் முறையே பாரிசாதம், வில்வம், வன்னி, பலா மரமாக இருக்கிறது. இப்போது பலாமரமாக இருக்கிறது.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர், “பூவணமதனில் பொலிந்தினிதருளித்,தூவணமேனி காட்டிய தொன்மையும்”
எனக் குறிப்பிடுகின்றார்.

கரூர்த்தேவர் பாடிய திருவிசைப்பாப் பதிகமும் உள்ளது, இக்கோவில் இறைவனுக்கு.

திருவிளையாடல் புராணத்தில்இரசவாதம் செய்த படலத்தில்  இத்தலம் குறிக்கப்படுகிறது.

அப்பர், சம்பந்தர். சுந்தரர், பாடிய தேவாரமும், கந்தசாமிப் புலவர் இயற்றிய திருப்பூவணநாதர் உலாவும்  பெற்ற சிறப்புத் தலம்.

இத்தலத்தில் எலும்பானது மலர் அல்லது சிலையாகும்(கல்லாகும்) என்பது ஐதீகமாம்.

அந்தக் காலத்திலும் வைகையில் தண்ணீர் இல்லை போலும்! அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரூம்  இறைவனை தரிசிக்க வரும் போது வைகை நதியிலுள்ள் மணல்கள் எல்லாம் சிவலிங்கமாய் தோன்றியதாம், அதனால் அதை மிதிக்க அஞ்சி இறைவனை தொழ இறைவன் அவர்களுக்காக நந்தியை சற்றே சாய்ந்து இருக்கும்படி சொன்னாராம் ,அதன்படி நந்தியும் சாய்ந்து வழிவிட , மூவரும் மறுகரையிலிருந்தே இறைவனை தரிசனம் செய்து தேவாரம் பாடினார்களாம்.

“ செப்பு மூவர் சொற்றமிழ்த்துதிக்க  விருப்போடு வந்து வையை மணற் சிவலிங்கமென மனத்தெண்ணி முன்பு வட கரைக் கவர் நின்று தமிழ் பாடும்பொழுதே இடப மாமுதுகு சாயும் வகையே செய்துமுன் மூவர் தரிசிக்க மகிழ்நேசர்’ எனக் கூறுகிறது தலவரலாறு.

திருவிளையாடற் புராணத்தில் உள்ள செய்திகள்:-

பொன்னனையாள் என்ற நாட்டியப் பெண் பொன்னால் இறைவர் உருவம் செய்ய விரும்பி, தன்னிடமிருந்த பொன் நகைகளை உருக்கி உருவம் செய்விக்கத் தொடங்கியபோது உருவம் செய்யப் போதுமான பொன் இல்லாத காரணத்தால் பாதியில் சிலை செய்வது நின்று போய்விட்டது. பொன்னனையாள், சிலை செய்யமுடியவில்லையே ! என்று வருந்திய போது சிவபெருமான் சித்தர் வேடத்தில் வந்து, பெண்ணே! உன் வீட்டில் இருக்கும் ஈயம், பித்தளை , இரும்பு முதலிய உலோகப்பொருட்களை கொண்டுவா தங்கமாக்கித் தருகிறேன்,  என்று சொல்லி அவற்றைப் பொன்னாக்கிக் கொடுக்க, தடைப்பட்ட இறைவன் திரு உரு முழுமை பெற்றது.அது மிகவும் அற்புதமாய் அமைந்து விட்டது.பொன்னனையாள் சிலையின் கன்னத்தைக் கிள்ளி அணைத்து முத்தமிட்டாள். இன்றும் அந்த முத்த,நகக்குறி உள்ளது என்று புராணம் கூறுகிறது.

கந்தசாமிப் புலவர் எழுதிய திருப்பூவணநாதர் உலாவில் உள்ள தலப் பெருமைகள் :-

சூரியன், நான்முகன், நாரதர், திருமால், திருமகள், நளமகராஜன், முடியுடைமூவேந்தர்கள், வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.

துர்வாசமுனிவரால்  ஒளியிழந்த சூரியன்  இங்குள்ள மணியோடையில் மூழ்கி, தன் ஒளியைப் பெற்றார்.

நான்முகன் கயிலையில் இறைவனை  வழிபடும் போது ஊர்வசி மேல் மையல் கொண்டதால் இறைவன்  அளித்த சாபம் இத்தல இறைவனை வணங்கியவுடன் நீங்கப்பெற்றார்.

திருமகள்   வாலகில்லிய முனிவரை அவமதித்த குற்றத்தால் திருமாலை பிரிய நேர்ந்தது. அக்குற்றம் நீங்கத் திருமகள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு திருமாலுடன் சேர்ந்தார்.

காளிகச்சோதிகள் நாரதர் சொற்படி இங்கு வந்து மணியோடையில் மூழ்கிப் பிதிர்க்கருமங்கள் செய்து அவர்களுக்கு வீடுபேறு பெற்றுத் தந்தார்.

கல்வெட்டு:-
கோனரின்மை கொண்டான் தனது எட்டாம் ஆட்சியாண்டில் திருப்பூவணநாதருக்கு கோயிலுக்கு நிலம் வழங்கியதும், குலசேகர தேவன் தனது 25 ஆம் ஆட்சியாண்டில் தினந்தோறும் 1008 வேதபாராயணஞ் செய்தவர்களுக்கு உணவிற்காக நிலம் அளித்த விபரமும் சொல்லப்படுகிறது.
ஒரு செப்பேடு ராஜகெம்பீர சதுர்வேதி மங்கல சபைக்கு 25 காசுகள் வழங்கியதை அறிவிக்கிறது.

திருவுலா நாயகருக்கு அருள்மிகு செளந்தர நாயகர் , அழகிய நாயகர் என்ற பெயர்கள் உள்ளன். அழகிய தோற்றத்தை கண்டு கன்னத்தை கிள்ளிக் கொஞ்சியதால் பொன்னையாளின் நகத்தழும்பை பெற்ற மூர்த்தி இவர்.

 பொன்னையாள் திருவுருவம் கோபுர வாயிலில்  உள்ளது. நல்ல பெரிய உருவமாய் உள்ளது.   எதிர்ப் பக்கத்தில் சிவகங்கை மன்னன் திருவுருவமும் உள்ளது.

(கோயிலுக்கு உள் போகும் போது இறைவனுக்கு பூஜையைப் பார்க்க வேகமாய் போனதால் போட்டோ எடுக்கவில்லை. வரும் போது அடுத்த கோவில் மாணிக்கவாசகர் பிறந்த ஊருக்கு செல்லும் அவசரத்தில் படம் எடுக்கவில்லை.)

  பொன்னனையாள் மடம் . பொன்னனையாள் மண்டபம் என்றும் இரண்டு கட்டிடங்கள் உள்ளன. இவை அம்மையார் சிவனடியார்களுக்கு உணவு அளித்த இடமும்,மதுரை சோமசுந்தர கடவுள் பொன்னையாள் பொருட்டு சித்தராக வந்து காட்சிக்  கொடுத்து ரசவாதம் செய்த இடமும் ஆகும்.. கோரக்க சித்தர் ஆலயம் இத்தலத்திலுள்ளது.



கோவில் ஸ்வாமி சன்னதியில் அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் செளந்தரநாயகி அம்மன் திருக்கல்யாண திருக்காட்சி படம் இருந்தது.
(சிவபெருமானது வார்த்தையை கேளாது தக்கன் யாகத்திற்கு சென்ற குற்றத்திற்காக உமையம்மை இறைவனை பிரிந்து திருப்பூவணம் அடைந்து தவம் செய்து சிவபெருமானை  மணக்கிறார்).

உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சூரியன், சயனப்பெருமாள்,  நால்வர்,, 63 நாயன்மார்கள், சப்தமாதாக்கள், மகாலக்ஷ்மி, தட்சிணாமூர்த்தி,  நடராஜர், சந்திரன், நவக்கிரகம், முதலிய சன்னதிகள் உள்ளன. நடராஜர்
சன்னதி வாசலில் பதஞ்சலிமுனிவர், வியாக்ரபாதர்முனிவர் சிலைகள் உள்ளன.தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு மேல் விதானத்தில் நன்கு காற்று, வெளிச்சம்  வரும்படி சாளரங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
  


உள்பிரகாரம் பழுது பார்த்துக்கொண்டிருப்பதால் தட்சிணாமூர்த்தி சந்நிதியுடன் திரும்பவேண்டியுள்ளது.  உள்  பிரகாரம் தற்போது முழுவதுமாகச் சுற்றி வர முடியாது என்று போர்டு வைத்து இருக்கிறார்கள்.
                  
                        நடராஜர் சன்னதி வாசலில் ஒரு பக்கம்  பதஞ்சலி.

                                              மற்றொரு பக்கம் வியாக்ரபாதர்.

தூண்களில் அழகிய சிற்பங்கள்

இரவு சுவாமி பள்ளியறை போகும் பல்லாக்கு
அழகிய காமதேனு வாகனம் 
கைலாய வாகனம்
நந்தி வாகனம்

அம்மன் சன்னதியில் உள்ள தூணில் அழகிய ஏக பாதர் சிலை



அழகிய வானரம்
இரணியவதம்
கருடவாகனத்தில் விஷ்ணு
சுவாமி சன்னதி ,அம்மன் சன்னதி மதில் சுவர்களில் இப்படி அழகிய வாக்கியங்கள் எழுதப்பட்டு இருக்கிறது.
அம்மன் சன்னதியில் சிறு மண்டபத்தில் அழகிய வேலைப்பாடு.அழகிய இரு தூண்களின் வழியாக  என் கணவரின் விரல்கள்.

சுவாமி சன்னதிக்கு வெளியே இருக்கும் தூணில் இருக்கும் பைரவருக்கும் வழிபாடு நடக்கிறது.


                                                                 ஆலயமணி


                                         சுவாமி சன்னதி அருகில்   மணி மண்டபம்


கருவூர்த்தேவர் பாடிஅருளிய திருவிசைப்பாவில், இறைவன் பெருமையைக் காட்டிலும் பெரியதில்லை, அன்புடையோர் உள்ளத்தில் அவர் எளிமையாக வந்து தங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இறையில்புகளைப்பற்றியும் பூவணத்தின் வளத்தைப்பற்றியும் அவர் சொல்கிறார்.

சம்பந்தர் இத்தலத்தில் மூவேந்தர் வழிபட்ட சிறப்பு, ஊரின் இயற்கை வளம்,மாடமாளிகை,தேரோடும் வீதி பற்றியும் கூறியுள்ளார்.இத்தலத்து இறைவனை வணங்க நன்மைகள் பெருகும்,இன்பம் உண்டாகும் என்கிறார்.

சுந்தரர் தம் தேவாரத்தில் இறைவனின் பெருமைகளை பலவாறு எடுத்துக்கூறி, பூவணம் ஈதோ உள்ளது சென்று வழிபட்டு நலம் பெறுக என்று கூறுகிறார்.

நாவுக்கரசர் இததலத்து இறைவனை  பாடியருளிய   திருத்தாண்டகம் மிக சிறப்பு வாய்ந்தது.  சிவபெருமானின் தனி அடையாளங்கள் இந்தப் பாட்டில் கூறப்படுகிறது. பாடல்கள் தோறும் அப்பெருமானை நினைக்க அவரது திருவுருவம்  நெஞ்சில் தோன்றுமென்று கூறுகிறார்.

                                                                   வாழ்க வளமுடன்!
                                                                 --------------------------------

49 கருத்துகள்:

  1. அன்பு கோமதி ,சாரின் கைவண்ணத்தில் பூவணநாதரின் எழில் மிளிர்கிறது உங்களுக்கும் அவருக்கும் நன்றி. இத்தனை விவரங்களையும் எப்படி எழுதினீர்களோ என்று மலைப்பாகவும் உள்ளது. மறுபுறம் சிவகாமியின் நடனம்,அவள் நாவுக்கரசரைக் கண்டு ஆடிய பாடல் சிவகாமியின் சபதம் எல்லாம் நினைவுக்கு வந்தன. மிக அழகான கோவில் இத்தனை தெய்வங்களே வந்து தவம் இருந்த ஊர் என்றால் எத்தனை பெருமை.படங்கள் அனைத்தும் பதிவுக்குப் பெருமை சேர்க்கின்றன. மிக நன்றி மா கோமதி.

    பதிலளிநீக்கு
  2. முதலில் அப்பா வரைந்த ஓவியம் பேரழகு. அப்புறம் திருப்பூவணம்
    திருக்கோயிலைப் பற்றி இத்தனை விரிவான பதிவு. மேலும் பொன்னனையாள் நடராஜர் சிலை செய்த கதையை தாங்கள் விவரித்த விதம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது கோமதி அம்மா. படங்கள்
    அனைத்தும் மிக அருமை. மொத்தத்தில் விரிவான சிறப்பான பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் கோமதி அம்மா.

    பதிலளிநீக்கு
  3. சார் வரைந்துள்ள முதல் படம் அழகாக தத்ரூபமாக சிவனைப்போலவே உள்ளது.

    எதுவும் வரையாமல் சிவனேன்னு இருக்க மாட்டார் போலிருக்கிறது.

    அவருக்கு என் முதல் பாராட்டுக்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  4. அழகான பல்வேறு படங்களுடன் அற்புதமான பதிவாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    ஒவ்வொன்றையும் மிகவும் ரஸித்துப்பார்த்தேன்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  5. இறை பக்தி ஊட்டும் இனிய பகிர்வு

    பதிலளிநீக்கு
  6. அன்பு வல்லி அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல் பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. சாரின் ஓவியம் இருக்கும் என்று வந்தேன் என்று போன பதிவில் நீங்கள் சொன்னதை சாரிடம் சொன்ன போது இந்த பதிவுக்கு வரைந்து தந்தார்கள்.

    ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.
    விவரங்கள் எல்லாம் கோவில் தலவரலாறு புத்தகங்களில் படித்து அதை எழுதி இருக்கிறேன்.
    ’பார்த்திபன் கனவு’ படத்தில் சிவகாமியாய் வரும் குமாரி கமலா இந்த பாட்டுக்கு ஆடுவார், கல்கியின் சிவகாமியின் சபதத்தையும் மறக்க முடியுமா?கடைசியில் “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
    மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்”
    என்னும் திருநாவுக்கரசரின் திருப்பதிகத்தைப்பாடி ஆடும் போது மாமல்ல சக்கரவர்த்தி வந்ததையும் கவனிக்கவில்லை இப்போது ( முன்பு இதே பாடல் பாடும் போது சிவகாமி மாமல்லரை நினைத்தே அபிநயம் செய்தாள்) அவள் கண்களையும் கருத்தையும் கவர்ந்தவர் ஏகாம்பரநாதரே அவர் ஒருவர் மட்டும் தான் வேறு யாருக்கும் அவள் உள்ளத்தில் இடம் இல்லை என்று முடிக்கும் போதும்
    கதை முடிவில் “தலைப்பட்டாள் நங்கை தலைவன் தானே” என்று நாவுக்கரசரின் பாடலின் கடைசி வரி சிவகாமியின் உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது. கதை முடியும் போது
    நம் கண்களில் இருந்தும் கண்ணீர்.
    மறுபடியும் படிக்க வேண்டும்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  7. சிவன் ஓவியம் அருமை
    திருப்வூவணம் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  8. அன்பு புவனா வணக்கம், வாழ்க வளமுடன்.அப்பாவின் ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.
    பொன்னனையாள் கதை படிக்க நன்றாக இருக்கும் திருவிளையாடல் புராணத்தில் உள்ளதை சுருக்கி தந்தேன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி புவனா.

    பதிலளிநீக்கு
  9. முதல் ஓவியம் மனதைக் கவர்ந்தது....

    படங்கள் மூலம் நாங்களும் தரிசித்தோம்......

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    சிவனே என்று எப்படி இருக்கிறது ! படம் எல்லோரும் விரும்பி கேட்கிறார்கள் என்று நான் வரைந்து தர கேட்டபின்.

    உங்கள் கருத்துக்கும்,பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. சாருக்கு பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி வை.கோ சார்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஜீவலிங்கம் காசிராஜலிங்கம். வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பதிவின் முதல் வரியைப்படித்ததும் மனம் சிவகாமியின் சபதம் நாவலுக்குச் சென்றுவிட்டது..

    அற்புதமான படங்கள்..
    அருமையான விளக்கங்கள் ..
    மீண்டும் கோவிலை வலம் வந்த உணர்வைத் த்ந்தன..
    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் வெங்கட்,வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழக வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மைதான். பாடலை படிக்கும் போது எல்லாம் சிவகாமி சபதம் நாவல் நினைவுக்கும் வரும் கண்டிப்பாய். நாவலை படித்தவர்களுக்கு.
    உங்கள் கருத்துக்கும், பாரட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்
    அம்மா

    பதிவின் வழி நல்ல கருத்துக்களை அறியமுடிந்தது படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  18. ஆகா...! ஆகா...!

    அனைத்தும் அருமை...

    நன்றி அம்மா...

    பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  19. நான் நினைத்தையெல்லாம் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் கோமதி. நானும் அதை நினைத்தே எழுதினேன். முதலில் அரங்கேற்றத்தில் மயங்கி விழுவாள் சிவகாமி. அப்போது மாமல்லர் துடிக்கும் துடிப்பு இருந்தயத்தைத் தொடும். அதே போலக் கடைசி காட்சியில் ராதா நடனம். ரங்கராவ் வருவது எல்லாமெ சி சபதத்தையே கண் முன்னால் நிறுவியது போல் இருக்கும். கண்ணீர் விடாமல் இருக்க முடியாது அவர்களுக்காக.நன்றிமா. சார் இன்னும் நிறைய வரையட்டும். வாழ்க வளமுடன். இருவருக்காகவும்

    பதிலளிநீக்கு
  20. இங்கே - ரமழான் நோன்பு தொடங்கி இருப்பதால் - இரவு 2 மணி முதல் பகல் 11 மணி வரை வேலை . வெயில் வேறு அதிகம். வேலை முடித்து வந்தால் கடும் அசதி..

    திருப்பூவணத்தில் தாம் அருளிய திருப்பதிகத்தில் அப்படியே - இறைவனை நம் கண் முன்னே நிறுத்துவார் - அப்பர் பெருமான்.

    இந்தப்பாடலில் மனம் வைத்து விட்டால் - வேறு சாட்சியே வேண்டாம்.

    நல்ல விஷயங்களுடன் அழகிய பதிவு. மனம் மகிழ்கின்றது.

    பதிலளிநீக்கு
  21. நல்ல பதிவு. தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் எல்லாவற்றுக்கும் போக வேண்டுமென்ற எண்ணத்தில் நானும் ஒவ்வொருமுறையும் தமிழ்நாட்டில் இருக்கும் போது தவறாமல் கோயில்களுக்குப் போகிறேன். ஆனால் அது இலகுவான காரியமல்ல போல் தெரிகிறது ஏனென்றால், இன்னும் எவ்வளவோ கோயில்கள் இருக்கின்றன.

    இலங்கையில் கைலாய வாகனத்தில் எப்பவுமே இராவணன் கைலையில் வீணை வாசிப்பது சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு அப்படித் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் மறு வருகைக்கு நன்றி.
    பார்த்திபன் கனவு சினிமாவில் கல்கியில் வந்த சிவாமியின் சபதம் கதைக்கு வரைந்த , மணியன் அவர்களின் ஓவியத்தைப்பார்த்து அலங்கரங்கள் செய்தாக செய்திகளில் படித்து இருக்கிறேன்.
    உங்களின் உறசாகமான பின்னூட்டங்களும் வாழ்த்துக்களும் தான் எங்களை எழுதவும் வரையவும் வைக்கிறது. நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் துரைசெல்வாராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கடுமையான வேலைகளுக்கு இடையில் வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி சார்.
    நீங்கள் சொல்வது போல் இறைவனை நம் கண் முன்னல் காணமுடிகிறது இந்த பாடலில்.
    வெயிலுக்கு ஏற்ற உணவு, ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. அணக்கம் வியாசன், வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல்வரவுக்கு முதற்கண் நன்றி.

    பாடல் பெற்ற தலங்களை தரிசிப்பது அறிந்து மகிழ்ச்சி.

    நீங்கள் வரும் போது எல்லாம் திட்டமிட்டு வந்தால் எளிதாக பார்த்து விடலாம். இப்போது வசதிகள் நிறைய உள்ளன. உங்களுக்கு இங்கு வர விடுமுறை , கையில் பணம், நம் உடலில் பலம் இருந்து இறைவன் துணையும் இருந்தால் பார்த்து விடலாம்.
    276 தலங்கள் தான் பாடல் பெற்றது பார்த்து விடலாம். வாழ்த்துக்கள்.

    இலங்கையில் கைலாய வாகனத்தில் எப்பவுமே இராவணன் கைலையில் வீணை வாசிப்பது சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு அப்படித் தெரியவில்லை.//

    உங்கும் அப்படித்தான். நான் அவசரத்தில் பின் பக்கமாய் வைத்து இருந்த பகுதியை எடுத்து வந்து இருக்கிறேன். படத்தை உற்றுப் பார்த்தால் தெரியும் சைடில் வீணையின் கைபிடி தெரியும்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. பார்க்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது. அடுத்தமுறை கட்டாயம் பார்க்க வேண்டும். ஸாரின் ஓவியமும் புகைப்படங்களும் அழகு. அன்பு வாழ வைக்கும்; ஆசை தாழ வைக்கும். ஆஹா!

    பதிலளிநீக்கு
  28. தேவாரத் திருத்தலமான திருப்பூவணம் பற்றி இன்றுதான் அறிந்தேன். திருத்தல பெருமையையும் கல்வெட்டு விவரங்களையும் அறிந்து வியந்தேன். சாரின் ஓவியமும் திருக்கோவில் படங்களும் கண்குளிரக் கண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  29. நாயன்மார்கள் தத் தம் பாடல்களில் எடுத்துரைத்த நற் செய்திகளையும்
    தல அமைப்புக்களையும் இறைவனின் லீலைகளையும் உணரும் போது
    பெற்ற இன்பம் மீண்டும் ஒரு முறை தங்களின் பகிர்வைக் கண்ட போதும்
    உணரப் பெற்றேன் .வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே வாழ்க வளமுடன் .

    பதிலளிநீக்கு
  30. நாயன்மார்கள் தத் தம் பாடல்களில் எடுத்துரைத்த நற் செய்திகளையும்
    தல அமைப்புக்களையும் இறைவனின் லீலைகளையும் உணரும் போது
    பெற்ற இன்பம் மீண்டும் ஒரு முறை தங்களின் பகிர்வைக் கண்ட போதும்
    உணரப் பெற்றேன் .வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே வாழ்க வளமுடன் .

    பதிலளிநீக்கு
  31. அழகிய படங்கள்! விரிவான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் ஸ்ரீராம் சார், வாழ்க வளமுடன்.

    அடுத்தமுறை மதுரை போகும் போது போய் வாருங்கள் ஸ்ரீராம்.
    சாரின் ஓவியம் , புகைபடங்கள் அழகாய் இருக்கிறது என்று சொன்னதற்கு மிகவும் நன்றி.

    அன்பு வாழ வைக்கும்; ஆசை தாழ வைக்கும். ஆஹா!
    இதை போல் நல்ல வாசகங்கள் சுவற்றில் எழுதப்படு இருந்தன. நேரம் இருந்தால் எல்லாவற்றையும் குறிப்பு எடுத்து வரலாம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் கீதமஞ்சரி. வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் தளிர் சுரேஷ்,வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  36. மதுரைக்குப் பலமுறை சென்றிருக்கிறோம் இந்த ஸ்தலம் பற்றி அறிந்திருக்கவில்லை. அக்டோபரில் பதிவர் விழா மதுரையில் என்கிறார்கள். வர முடிந்து வந்தால் இந்தக் கோவிலுக்கும் செல்ல வேண்டும். எல்லாத்தகவல்களும் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ள உங்களுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  37. அழகிய படங்களுடன் அருமையான பகிர்வு அம்மா...

    பதிலளிநீக்கு
  38. கைலாயத்தில் புஷ்பவனநாதர். மிக அருமையான ஓவியம்.

    சிற்பங்கள் எல்லாமும் அழகு. படங்களுக்கும் விரிவான பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    அக்டோபர் பதிவர் விழாவா? நல்லது.
    இதற்கு முன்பு மாணிக்கவாசகர் பிறந்த ஊர்ப் ப்ற்றி பகிர்ந்து கொண்டேன் அந்த கோவிலும் பக்கம் தான் , ஆனைமலை நரசிம்மர் கோவில், திருமோகூர் ஆகியவை பக்கம் தான். எல்லாம் முடிந்தால் பார்த்து வாருங்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  40. வாங்க, வணக்கம் சே.குமார், வாழக வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வாங்க வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.
    அவசரம் அவசரமாய் எடுத்த படங்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  42. சாரின் ஓவியம் வெகுவே அழகு. மனம் கவர்ந்தது சிவனின் ரூபம். என்னுடைய பாராட்டுகளையும் , நன்றியையும் தெரிவித்து விடுங்கள் அம்மா.

    இத்தனை சிறப்புகள் மிக்க கோவிலைப் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சிம்மா.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம் ஆதி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் போன பதிவில் சாரின் ஓவியத்தை எதிர்ப்பார்த்து வந்தேன் என்றீர்களா? அதனால் உங்கள் எதிர்ப்பார்ப்பை இந்த பதிவில் சாரை வரையச் சொல்லி பூர்த்தி செய்து விட்டேன். உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

    சொல்லி விட்டேன் சாரிடம் உங்கள் பாராட்டை உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டார் சார்.

    சிறப்புகள் நிறைந்த கோவில்தான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. புகைப் படங்களுடன் கோர்வையாக பாடல் பெற்ற திருப்பூவணம் பற்றி அழகாக நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்றால், உங்கள் சார் விரிசடைப் பெருமானை கண்முன் கொண்டு வந்து காட்டி விட்டார்.

    புஷ்பவனம் என்றும் இத்திருத்தலம் அழைக்கப்படுவதால், பூவணம் என்கிற சொல் மருகி புஷ்பவனம் ஆயிற்றோ என்று எண்ணம் தோன்றியது.

    இருந்தும் திருபூவணமா, திருப்பூவனமா என்று அறியாமையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

    மாணிக்கவாசக பெருமானே, “பூவணமதனில் பொலிந்தினிதருளித்,தூவணமேனி காட்டிய தொன்மையும்” என்று சொல்லிவிட்ட பிறகு அப்புறம் அப்பீலே ஏது?...

    வணம்+அதனில்= வணமதனில்.

    ஆக, திருப்பூவணம் தான் தலத்தின் திருப்பெயர் என்று உறுதியாயிற்று.

    அப்படியெனில், 'வணம்' என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்கிற கேள்வி எழுகிறது.

    திருஞானசம்பந்த பெருமான் தேவாரத்தில், திருவண்ணாமலை அண்ணாமலையாரைத் துதித்துப் பாடுகையில், "அளவா வணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்" என்கிறார். 'அளக்க இயலா வண்ணம் தீப்பிழம்பாய் தோன்றிய திருவண்ணாமலை அண்ணல்' என்று பொருள் கொண்டோமானால், 'வணம்' வண்ணம் என்கிற அர்த்தத்தில் வந்திருக்கிறது.

    'வணம்' என்றால் 'ஓசை' என்றும் ஒரு பொருள் உண்டு.

    எப்படிப் பார்த்தாலும் சரியாக வரவில்லை.

    யோசித்துப் பார்த்த பொழுது, சரியான பொருள் ஓரளவு விளங்கிற்று.

    மயங்கொலிச் சொற்கள் என்று தமிழில் உண்டு. ஒரே வடிவான எழுத்துரு கொண்டு வேறுபட்ட பொருளைத் தருமாறு நம்மை மயங்க வைக்கிற சொற்கள் இவை.

    'ன'-க்கு 'ண' வருவது அந்த மாதிரி மயங்கொலி சொல்லில் ஒன்று.

    ஆக, பூவனம் தான் பூவணம் என்று பாடப்பெற்றிருப்பதாக பொருள் கொள்ள வழிகோலுகிறது.

    பூவனம்- புஷ்பவனம் சரிதானே?

    திரு - அழகிய

    திருப்பூவணம்- அழகிய புஷ்பவனம்.

    இறையனாரின் பெயரும் பூவண நாதர் ஆயிற்றோ?..

    பதிலளிநீக்கு
  45. வணக்கம், ஜீவிசார், வாழ்க வளமுடன்.
    பதிவையும் சாரின் ஓவியத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. திருத்தலத்தின் பெயரை படித்தபோது எனக்கு எழுந்த ஐயத்தை ஜீவி தீர்த்து விட்டார். படங்களும் விளக்கமும் பாடல்களும் ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்திவிட்டன.நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்.
    உங்கள் ஐயத்தை ஜீவி சார் தீர்த்து வைத்து விட்டாரா? நன்றி ஜீவி சார் அவர்களுக்கு.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  48. திருப்பூவணம் விரிவான பதிவு.

    பதிலளிநீக்கு